செவ்வாய், ஆகஸ்ட் 18, 2020

பிடிகிட்டாப்புள்ளி

 பிடிகிட்டாப்புள்ளி

(கதையாகவும் வாசிக்கலாம்)

வா.மு.கோமு

 

பாழுங்கிணற்றினுள் தானாகவே முளைத்து வளர்ந்திருந்த கிலுவை மரத்தின் கிளை வாதுகளில் துக்கணாங்குருவிக் கூடுகள் மெலிதான காற்றுக்கு இங்குமங்கும் அசைந்தாடிக் கொண்டிருந்தன. முனியப்பதாசன் மூங்கில் கூடையை சுமந்து கொண்டு எழுமலைகளைக் கடந்து எட்டாவதுமலைவனத்துக்குள் தன் முரட்டுப்பாதங்களை வைத்திருந்தான். ரயில்கள் வராத தண்டவாளத்தை நிதானமாகக் கடந்ததொரு கரடிக் குட்டி.

 

மாலைச்சூரியன் மேற்கு வானில் நழுவிக் கொண்டிருந்த சமயத்தில் உள்ளூருக்குள் பத்துக் குழந்தைகள் ஒருசேரப் பிறந்தன. ரீங்காரித்துக் கொண்டு பறந்த இரவுப் பூச்சிகள் தெருவிளக்கினருகில் கூடி பீத்தோவனை கண்டமானிக்கி இசைக்கத் துவங்கின. பட்டிக்குள் அடைபட்டுக்கிடந்த ஆடுகளில் ஒன்று தும்மிக் கொண்டும், இன்னொன்று இருமிக் கொண்டும் கிடந்தன.

 

முனியப்ப தாசனின் மூங்கில் கூடைக்குள் இப்போது ஒரு குரங்குக் குட்டி படுத்திருந்தது. அது அவ்வப்போது எட்டிப் பார்த்து வட்ட நிலாவைக் காணோமென்றது.

 

பெண்பறவைகளெல்லாம் ஒரு பக்கமாகவும், ஆண்பறவைகள் எல்லாம் ஒரு பக்கமாகவும் அமர்ந்து  அடுத்த அம்மாவாசை பூஜைக்கு கருப்பராயன் கோவிலில் உண்டகட்டி கொத்துவதுபற்றி தீவிரமாய் கீச்சிட்டன. விறகு பொறுக்க மலங்கரட்டினுள் தனித்து வந்த யுவதியின் பின்னால் தூக்கிட்டு மரித்துப்போன மாரிச்சாமி கால்களால் நடவாமல் பறந்தபடி தொடர்ந்தான்.

 

ஊத்துக்குளி சந்தையில் சொத்தைக்கத்திரிக்காய் கிலோ நாற்பது ரூவாய். மலையுச்சிக்கு சென்றுவிட்ட முனியப்பதாசன்ஹப்பாடாவென அமர்ந்து கூடைக்குள் கிடந்த குரங்குக் குட்டியைத் தூக்கி மலையடிவாரம் நோக்கி வீசியெறிந்தான். சும்மா கிடந்த ரயில்வே தண்டவாளங்கள் இப்போது வளைந்து நெளிந்து கரடிக் குட்டியின் பின் நகரத்துவங்கிற்று.

 

உண்பதற்காக காட்டெருமைகளைத் துறத்தியோடிய சிங்கக்கூட்டம் காடெங்கிலும் புழுதியை எழுப்பிவிட்டது. செம்பூத்து ஒன்று பூனையின் குறுக்கே பறந்து போயிற்று. வாசித்துக் கொண்டிருக்கும் நாவலில் வாசித்த பக்கங்களை கிழித்து காற்றில் பறக்கவிட்டபடி படித்துக் கொண்டிருந்தவனுக்கு அழுகையழுகையாய் வந்ததால் சிரிக்கவும் முயற்சித்து கொட்டாவி விட்டபடியிருந்தான்.புழுதியடங்கியபின் கேமரா வழி பார்க்கையில் நான்கு சிங்கங்கள் ஒரு எருமையை உணவாக்கிக் கொண்டிருந்தன. சற்றுத்தள்ளி நான்கு எருமைகள் ஒரு சிங்கத்தை உணவாக்கிக் கொண்டிருந்தன. ஹய்னாக்கள் சில சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்தன.

 

உடலெங்கிலும் பச்சை குத்தின பெண்ணொருத்தி பச்சை குத்திக்கறீங்களாக்கா?’ என்று கேட்டபடி ஊர் வீதிகளில் சுற்றினாள். சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி கழன்று கீழ்விழுகையில் அறைக்குள் யாரும் இருந்திருக்கவில்லை. பூசாரியிடம் திருநீரு வாங்கிக் கொள்ள எல்லாக் குரங்குகளும் ஒருசேரக் கையை நீட்டிக் கொண்டு நின்றிருந்தன. பூசை மணியை இந்த நேரம் வரை கயிற்றைப்பிடித்துக் கொண்டு அடித்துக் கொண்டிருந்த குரங்கு, மதில் சுவற்றுக்குத் தாவி குதிரைமீது அமர்ந்திருந்தவரின் தோளில் சென்று அமர்ந்து கொண்டது.

 

தெருவில் வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கும் நாய்களெல்லாம் கிழக்கு வீதியில் பெட்டைநாயிடம் சென்று குழுமியிருந்தன. மேடையில் ஆக்ரோசமாய் பேசிக்கொண்டிருந்தவர் இடையில் பேச்சை நிறுத்தி தண்ணீர் கேனை எடுத்து அழகாய் மூடி திறந்து தண்ணீர் குடித்தார். பத்துவருடம் முன்பாக ஊரைவிட்டு சென்றிருந்த சின்னச்சாமியண்ணன் ஊருக்கு திரும்பி வருகையில் தலையில்லா முண்டமாய் வந்திருந்தார். அவரை யாருக்கும் அடையாளம் தெரிந்திருக்கவில்லை.

 

முனியப்பதாசன் மலையுச்சியிலிருந்து உருண்டே அடிவாரம் வருகையில் அவனது மூங்கில் கூடை சுக்குநூறாய் சிதறியிருந்தது. ஆரப்ப அப்பாருவுக்கு பச்சை குத்திக் கொண்டிருந்தாள் உடல் முழுதும் பச்சை குத்தியிருந்த பெண்மணி. அப்பாருவின் வலது கை விரல்கள், குத்தும் வலியை தாங்கிக் கொள்வதற்காக எங்கு வைத்திருந்தார் என்பதை எழுத்தாளன் சொல்லவே மாட்டேனென்கிறான்.

 

கரடிக்குட்டியை பின் தொடர்ந்து சென்ற தண்டவாளம் வழிதவறி விழித்து பின்பாக ஒரு சாரைப்பாம்பு சென்ற தடம் பிடித்து மயானவழியில் பயணித்தது. சிங்கத்தை உண்டு முடித்திருந்த காட்டெருமைகளுக்கு கொம்புகள் ஒரு மீட்டர் அளவு பெரிதாகிவிட்டன.

 

நல்ல ருசியான உணவு வேண்டுமென்று சித்ரன் சேலம் பைபாஸ் சாலையில் எடப்பாடி நோக்கி நடந்து கொண்டிருந்தான். சர்ச்சிலிருந்து பாத்ரூம் சென்ற பாதிரியார் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு தன் கீழுடையைக் கழற்றி தோளில் போட்டுக் கொண்டு அடுத்த வேலையைப் பார்த்தார். டைனோசர்கள் மட்டுமே வாழும் நகரில் டைனோசர்கள் மட்டுமே வாழ்ந்தன. தார்ச்சாலைகள் அனைத்தும் சிவப்பு நிறத்திலிருக்கும் நகரில் வாழ்ந்திருந்த மனித குலம் நீலவர்ணத்தில் இருந்ததாய் குறிப்பேடு ஒன்று சொல்லிற்று.

 

உலகைக்காக்கவும் நேசிக்கவும் ஒருவன் வந்தால் பாலவனத்தின் வழியாகத்தானே வரவேண்டுமென பலகாலமாய் காத்திருந்தது ஒரு ஒட்டகம். பல்லிகளின் கத்தல் கேட்டு குறி சொல்லும் கிழவியொருத்தியைத் தேடி பலகாலமாய் நடந்து வந்த குடும்பம் குறி கேட்க அமர்கையில்இன்று என்ன கிழமை?’ என்று அவர்களிடம் கிழவி கேட்டாள். பேருந்து நிலையத்தில் கிடந்த பிச்சைக்காரனுக்கு யாரோ டாஸ்மார்க் சரக்கை கொடுத்துப் போய்விட்டார்கள் போலிருக்கிறது! பேருந்து நிலையம் இரண்டு மணிநேரமாக அந்த நகரை விட்டு நீங்கியிருந்தது.

 

கவிதையெழுதிக் கொண்டிருந்த யுவதிக்கும் டூபாத்ரூம் இவ்ளோ அவசரமாய் வந்துவிடுமென பொங்கியப்பன் நினைத்தே பார்த்திருந்திருக்கவில்லை. மருத்துவமனை காண்டீனில் அமர்ந்திருந்த கையுறை அணிந்திருந்த மருத்துவர் பஜ்ஜி சாப்பிட்டபடியே உடலைச் சாய்த்து என்னவோ செய்தார். பக்கத்து இருக்கைகள் காலியானதுபற்றி கேண்டீன்காரன் மட்டுமே கவலையுற்றான். புத்தி பேதலித்திருந்த நிலையில் அவள் தன் வீட்டினுள் நுழைந்த புலியைக் கொன்று விட்டு விட்டத்தைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.

 

கருப்பராயன் கோவிலருகில் நின்றிருந்த ஊஞ்சை மரத்தின் ஒசக்கே உச்சியில் மலைத்தேனிக் கூடொன்று அழித்தால் ஊருக்கே தேன் கொடுக்கலாம் போல பெரிதாய் தொங்கியது. ஸ்கூல்வேன் வந்து விட்டதாய் புத்தக மூட்டையை முதுகில் சுமந்தோடும் பாப்பாவின் பின்னால் அவளின் செல்ல நாய்க்குட்டியும், பூனைக்குட்டியும் ஓடின படிக்க!

 

வத்திப்பெட்டி இருக்கா?’ கையில் பீடி ஒன்றை வைத்துக் கொண்டு கேட்டவனிடம், இல்லையென்று இவன் சொன்னதால் குத்துப்பட்டும், மிதிபட்டும் அதேயிடத்தில் செத்தானவன். இழவு விழுந்த வீட்டுப்பக்கமிருந்து ஆட்கள் பதறியடித்து ஊருக்குள் ஓடிக் கொண்டிருந்தார்கள். பிணம் பாடையிலிருந்து எழுந்தமர்ந்துஎன்னாச்சு?’ன்னு கேட்டுச்சாம். யாருமில்லாப் படகு ஒன்று நதியில் தன்பாட்டில் போய்க் கொண்டிருந்தது.

 

பொன்னாம்பூச்சி பிடித்துவர காட்டுப்பக்கம் சென்றிருந்த சிறார் கூட்டமொன்று சிறுத்தையைக் கொன்று தூக்கி வந்து கொண்டிருந்தது ஊருக்குள் வரும் பாதை வழியே! கவிதை எழுதிக் கொண்டிருந்த யுவதி திடீரென கதை எழுதத் துவங்கவும் கடவுள் மறுபக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டார். சிலகட்டிடங்கள் மட்டும் தென் அமெரிக்காவில் சரிந்து விழுந்ததாய் பிபிசி சொல்லிற்று. பல்லுப்போன பாட்டியொன்று முறுக்குக் கடையில் வேலைபார்த்து சம்பாதித்துக் கொண்டிருந்தது.

 

சமையல் பகுதியில் காய்கறி நறுக்கும் பகுதியில் பணியிலிருந்த ராமசாமியண்ணன் டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது தப்பி உள்ளூர் வந்த ஒற்றை மனிதர். இன்னமும் சொல்வார்.. ‘எனக்கு மட்டும் பறக்குற சக்தியில்லேன்னா பணால் தான்என்று. வீதிகளில் சுற்றும் நாய்களில் சில மட்டுமே திறந்திருக்கும் வீட்டினுள்ளும் நுழைந்து மோப்பம் பிடித்து விட்டுச்  செல்கின்றன.

 

குடித்து முடித்திருந்த ஒயின் டம்ளரை டணாலென வீசி உடைத்தெரிந்து விட்டு அவள் தள்ளாடி எழுந்தாள். ‘இந்த நிமிடத்திலிருந்து என் மூன்றாவது கணவனை விவாகரத்து செய்கிறேன்!’ என்றாள். கூட்டம் கைதட்டிற்று. பூவரசு இலையில் பீப்பி சுற்றி ஊதிப்பார்த்த சிறுவன் சப்தம் வராததால் அழத்துவங்கியிருந்தான். நாயைப் போலத்தான் பூனையும்.

 

பனைமரத்தில் ஏறிக் கொண்டிருந்த குட்டி உடும்பு ஒன்று தூரத்தே தெரியும் ஊரைப்பார்த்துஒரு நாள் வருவேன்என்று சொல்லிச் சொல்லி ஏறியது.’அந்த கருமத்தெ காசுக்குங்கேடா டாஸ்மார்க் போயி வாங்கிக் குடிக்கிறதுக்கு என் மல்லைக் குடியேண்டா!’ எவளோ ஒருத்தி சாமத்தில் ஊருக்குள் தன் பிருசங்காரனை பின்னிக் கொண்டிருந்தாள்.

 

000

 

18-8-2010

செவ்வாய்


Post Comment

கருத்துகள் இல்லை: