என் பெயர் ராஜா


 



           குழந்தைகள் கதைகள் என்றாலே விலங்குகளும், பறவைகளும், மரங்களும் இன்றி பூர்த்தியாகாது. ஏன் குழந்தைகள் கதைகள் அனைத்திலும் விலங்குகளும் பறவைகளும் வருகின்றன என்று ஒரு முறை யோசித்து கொண்டிருந்தேன். அப்போது பிரபஞ்சன் அவர்களின் மயில் இறகு குட்டி போட்டது என்ற  ஒரு கட்டுரைத் தொகுப்பு  வாசித்துக் கொண்டிருந்த போது அதில் என் கேள்விக்கான விடை கிடைத்தது. இந்தப் பிரபஞ்சம் என்பது மனிதனுக்கு அது மட்டுமல்ல விலங்குகள், பறவைகள் ,மரங்கள் இவை எல்லாவற்றுக்கும் ஆனது என்பதை குழந்தைப் பருவத்திலிருந்தே அவர்களுக்கு உணர்த்துவதற்காக தான் நம்முடைய ஒவ்வொரு கதைகளிலும் இவை அனைத்தும் கட்டாயம் இடம் பெறுகின்றன. 

           இந்த நூலும் சிறார்களுக்கான ஒரு நூல்தான். வாழ்க்கையில் பல மனிதர்களின் சுய சரிதை படித்திருப்போம். இந்த நூல் ராஜா என்ற நாய் தன்னுடைய சுயசரிதையை சொல்வது போன்று இருக்கும். இதே போல் பூனாச்சி என்ற ஆட்டுக்குட்டி என்ற நூல் ஒரு ஆட்டுக் குட்டி தன் சுய சரிதை சொல்லுவது போல இருக்கும். இந்த இரு நூல்களும் வாசிக்க சிறப்பான நூல்கள். 

              ராஜா என்கிற கோம்பை நாய் ராஜபாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் ராணி என்ற நாயின் குழந்தை. ராணி என்கிற நாய் ஒரே பிரசவத்தில் 5 குட்டிகளை ஈன்று எடுத்து இருந்தது. அதில் தலைப்பிள்ளை தான் ராஜா. ஒரு பெரிய வீட்டில் முகப்பு கதவு சாத்தியே இருக்கும். 5 குட்டிகளும் சுவர் தாண்டி வெளியே செல்ல முடியாமல் அந்த வீட்டுக்குள் இருக்கும் தோட்டத்தில் சுற்றி சுற்றி விளையாடும்.  மூணு மாதம் கழித்து கடைசி மூணு குட்டிகளை காரில் எடுத்துச் சென்று அந்த வீட்டு பெண்மணி விற்பனை செய்து விட, ராஜாவுக்கு சிறிது கலக்கம் வருகிறது. ஆஹா .. நம்மையும் அம்மாகிட்ட இருந்து பிரிச்சி விடுவாங்களோ....என்று பயந்து கொண்டே இருந்தது. ராஜா பயந்தது போலவே ஒரு நாள் நடந்துவிட்டது. தன் தாயிடமிருந்து பிரித்து அந்த பெண்மணி தன் தந்தையின் வீட்டிற்கு காவல் காப்பதற்காக எடுத்துச் சென்றுவிட்டார். ஒரு ஆறுதல் வேறு எங்கும் கொண்டு விடாமல் தன்னுடைய இரத்த பந்தத்தில் விடுகிறார்களே என்று ராஜா ஆறுதல் கொண்டது. 

                புது வீட்டிற்கு போனதும் அதற்கு மகிழ்ச்சி பெரிய பங்களா போன்ற வீடு தோட்டம் என்று சுற்றி சுற்றி ஓடி வந்தது. அங்கு போன பிறகுதான் அதற்கு ராஜா என்று அந்த வீட்டுக்காரர் பெயர் வைக்கிறார். அந்த வீட்டுக்காரர் கழுத்தில் ஒரு பெல்ட்  போட்டு ராஜாவை கட்டி வைத்து விடுகிறார். வெளியே எங்கே போனாலும் ராஜாவை கூட்டி செல்வது அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. வேட்டைக்கு செல்லும் பொழுது கூட ராஜாவை உடனழைத்துச் செல்வார். 

          அடுத்த வருடம் மீண்டும் ஒரு குட்டி அந்த வீட்டிற்கு வருகிறது. அது தான் இரண்டாவது பிரசவத்தில் தன் தாய்  ஈன்ற குழந்தை. தன்  தம்பி தான் என்று ராஜா மகிழ்ச்சி கொண்டு, நம் தம்பி நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சந்தோஷத்தில் இருக்கிறது. அதற்கு டாமி என்று பெயர் வைக்கிறார்கள். 

      இந்த கதை படிக்கும் போது எங்க வீட்டில் இருந்த ராபி என்ற எங்கள் செல்ல நாய் நினைவு எனக்கு வந்தது. எங்க அண்ணன் சிறுபிள்ளையாக இருக்கும்போது இந்த நாயும் எங்க வீட்டிற்கு வந்தது.  பாசமும், அறிவும் கொண்டது அது. நான் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, என் அழுகுரல் கேட்டால் போதும் எங்கே இருந்தாலும் எங்க அம்மாவை அழைத்துக்கொண்டு வரும். பள்ளிக்குப் போகும்போது கூடவே வரும் பள்ளி முடிந்து வரும் பொழுது கேட்டின் அருகே காத்திருக்கும். விளையாடும் போது யாராவது என்னை அடித்து விட்டால் அவர்களை பதம் பார்த்து விடும். உடம்பு சரியாமல் ராபி இறந்த பிறகு அதை புதைத்த இடத்தில் தினமும் பூ வைத்து விட்டு வருவோம். இப்போதும்கூட சொந்த ஊருக்குப் போகும்போது ராபியை  புதைத்த இடத்தை பார்க்கும் போதெல்லாம் இள வயது நினைவுகள் கிளர்ந்தெழுந்து விடும். ராபிக்கு பிறகு வேறு எந்த ஒரு நாயையும் என்னால்   வளர்க்கவே முடியவில்லை. 

            ராஜாவும் ராணியும் அந்த வீட்டில் எப்படி வளர்கிறார்கள்? வேட்டைக்கு நாய்களை அழைத்து சென்ற இடத்தில் எதிர்பாராத ஒரு திடுக்கிடும் சம்பவம் நிகழ்கிறது. அந்த சம்பவம் என்ன ராஜாவுக்கும் டாமிக்கும் என்னவாயிற்று என்பது தான் கதை..

நல்ல வாசிப்பு அனுபவம் தரும் சிறார் நூல்.

        காலையில் வீட்டில் இருந்து கிளம்பி  மாலை வீடு திரும்பும் வரையிலும் , நம்மைச் சுற்றி நிகழும் அனைத்தையுமே கதைகளாக்க நம்மால் முடியும்.மனிதர்கள் அல்லாத பிறவற்றுடன் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்புகளை விட்டுவிட்டு அனேகமாய் நாம் ஒதுங்கி  கொள்கிறோம்.வகுப்பறைகளும் கதை சொல்லும், கதை கேட்கும் பொறுப்புகளை எப்போதோ இழந்துவிட்டு மதிப்பெண் என்னும் மாயச்சுமைக்குள்  சிக்கித்தவிக்கிறது.ஏராளமான  கதைகள் நம்மிடம் இருந்தும் ஏனோ குழந்தைகள் கதைகள் இன்றி பசியோடு தான் ஒவ்வொரு நாளும் தூங்க போகின்றனர். 

    இது போன்ற சிறார் நூல்கள் வாசித்து குழந்தைகளுக்கு மகிழ்வும், அவர்களின் கற்பனை வளமும்,  படைப்பாற்றல்  திறனும் பெருகும். 

-Poonkodi Balamurugan
நூல் : என் பெயர் ராஜா, பக்கங்கள் : 48, விலை : ₹40.00, பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

நெருஞ்சி பற்றி சத்தியப்பெருமாள் பாலுச்சாமி


 

வறட்சியில், அறியாமல் தன்மீது பதியும் பாதங்களைப் பதம்பார்த்து அழவைக்கும் அதே கூர்முட்கள் தான் மழைக்காலத்தில் முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு பரவசமாகச் சிரிக்கின்றன நெருஞ்சிப் பூக்களாய். மனிதர்களும் கூட அப்படித்தானே? மனிதவாழ்வும் கூட அப்படித்தானே? 


கொங்குமண்ணின்  சமகாலச் சிக்கல்களைத் தனது படைப்புக்களில் தொடர்ந்து கவனப்படுத்திவரும் வா.மு. கோமு, இந்தமுறை 'நெருஞ்சி'யுடன் வந்திருக்கிறார். முதல் சில அத்தியாயங்களில் அன்னநடை போடும் புதினமானது திடீரென இறக்கை விரித்துக்கொண்டு பாய்ந்து பறக்கத் தொடங்கிவிடுகிறது. ஒரே மூச்சில் அயர்வின்றிப் படித்துமுடித்துவிட முடிகிறது.


காலத்தில் திருமணமாகாத கவலை, மிதமிஞ்சிய குடி, சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பொய்த்துப் போகும் விவசாயம் போன்ற நெருஞ்சி முட்களால் குத்துப்படும் பழனிச்சாமியின் வாழ்வில் ஒரு காதல் பூக்கிறது. வாழ்வை மாற்றுகிறது. ஆனால், அது கைகூடியதா? இல்லையா? என்பதை மிகவும் சமகாலத்தன்மை கூடிய மொழியில், எள்ளலும், துள்ளலுமான நடையில் அழகாகச் சொல்லிச் செல்கிறார் கோமு. அவரது சமகாலத்தன்மை கொண்ட மொழிதலுக்கு சாட்சியாகத் தான் டிச்க்கானையும், உய்க்கியையும் கூட பார்க்கிறேன். 


தான் சார்ந்த மண்ணின் மீதும், மக்களின் மீதும் மட்டுமல்ல, அங்கே அனைத்திற்கும் மௌன சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மரங்களின் மீதும், விலங்குகளின் மீதும் கூட கோமு வைத்திருக்கும் அன்பும், அக்கறையும் நம்மை எப்போதுமே நெகிழச்செய்வதாகத் தான் இருக்கின்றன. நாயொன்றின் உடலில் புகுந்து கொண்டு தான் பேசும் தருணங்களில் நம்மையும் மணியானாகவே மாற்றிவிடும் மாயவித்தை கைவரப்பெற்றவராக இருக்கிறார் அவர்.


காதலைக் கைவிடவே முடியாத ஒருவனின் கடைசித் தேர்வாக எப்போதும் தற்கொலையே இருக்கிறது. அப்படியொரு தருணத்தில் அவனது வாழ்வின் புதிர்களைச் சொல்லிச் செல்லும் கோமு, அப்படியே நம்மிடத்தில் சென்னிமலையைப் பற்றிய புதிர்களையும், மக்கள் வழக்காறுகளையும் சொல்லிச் செல்கிறார். அந்த அத்தியாயத்தின் முடிவானது, ஒருநூறு கருவிகள் இசைத்து முடித்தபின் சூழும் பேரமைதியைத் துயரத்தின் மெல்லிய விசும்பலொன்றைக் கொண்டு நிறைத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது. 


கோமுவின் பெண் கதாபாத்திரங்கள் மிகுந்த தனித்தன்மை வாய்ந்தவர்கள். வேறு எவருடைய எழுத்திலும் சட்டென்று காணக்கிடைக்காதவர்கள். ஆனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் எப்போதும் காணக்கிடைப்பவர்கள். உண்மையில், அவர்களே மனிதவாழ்வின் திருப்புமுனைகளுக்கெல்லாம் காரணமாக இருப்பவர்கள். அந்தப் பெண்களை எழுதும் பொழுதெல்லாம் கோமுவின் விரல்கள் ஒரு மந்திரவாதியினுடையதைப் போல மாறிவிடுகின்றன. பெண்களின் அக உலகத்தைப் போகிற போக்கில் அத்தனை மெய்மையுடனும், உயிருடனும் நமக்குத் தீட்டிக்காட்டிவிடுகிறார். பரியவா ஒருவர் ஆரஞ்சுத் தோலை உரித்துத் தனது பக்தர் ஒருவரின் காதுக்குள் வளர்ந்த தோலை அறுவை சிகிச்சையின்றிக் காப்பாற்றிய காணொளியொன்றைக் கண்டிருப்பீர்கள். நெருஞ்சியிலும் ஒருத்தி திராட்சைகளைப் பிதுக்கி வாழ்வையே புரட்டிப்போடுகிறாள். படித்துப் பாருங்கள். கோமு என்னும் குறும்புக்காரர் வெறும் குறும்புக்காரர் மட்டுமேயல்ல என்பது புரியும்.


நெஞ்சார்ந்த வாழ்த்துகள் கோமு அண்ணா💐💐


-சத்தியப்பெருமாள் பாலுசாமி

சோளம் என்கிற பேத்தி -நாவல்


 

சோளம் என்கிற பேத்தி -நாவல். கி.கண்ணன். வெளியீடு: யாவரும், விலை : 250.

 

இந்த நாவலை ஆசிரியர் பத்துவருட காலமாக எழுதி முடித்ததாக தகவல் சொல்கிறது. நாவலானது இதற்கும் மேற்பட்ட காலங்கள் கூட கிடப்பில் கிடந்து வெகு காலம் கழிந்து வெளிவந்திருக்கின்றன. இந்த நாவல் நிச்சயமாக பத்துவருட காலத்திற்கும் பிந்தைய கால நாவல். நிச்சயமாக இங்கே தான் கதைக்களம் நடந்தேறுகிறது என்பதெல்லாம் தேவையில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது வாசித்து முடிக்கையில்.

 

கிராமம் என்றால் அதிலும் அலைபேசி இல்லா நேரம் என்று வைத்துக்கொண்டேமேயானால் மிக பழைய கிராமிய வாழ்க்கை. கிராமியம் என்றால் சாராயம் காய்ச்ச அல்லது வெளியில் காய்ச்சினாலும் திருட்டுத்தனமாக வாங்கி வந்தேனும் விற்று வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் காணத்துடிக்கும் பெண்கள் குறிப்பாக நாவலில் காட்டப்படுகிறார்கள்.

 

பேத்தியை வளர்த்தெடுத்த ஆயா இந்த புத்தகத்தில் முக்கியமான கதாபாத்திரம். நாவல் முழுக்க தன் ஆளுமையை ஒரு இடம் விடாமல் நிரூபணம் செய்து கொண்டே வருகிறாள். ஆப்பம் சுட்டு விற்கும் பிழைப்பு அவளுக்கு. அதற்கான முன்னேற்பாடுகள் நாவலில் விரிந்து கிடக்கின்றன. சாப்பிட வருபவர்களில் பெண்கள் தான் சிலர் காட்டப்படுகின்றனர். பெரிய சம்பாதிப்பு இல்லை என்றாலும் அதுவொரு பிழைப்பு அவளுக்கு.

 

அவளின் பேத்தி தான் நாயகியாக நாவலில் வருகிறாள். அவள் பெயர் சோளம். ஆசிரியர் இந்த நாவலில் கேரக்டர்களுக்கு வைத்திருக்கும் பெயர்கள் அனைத்துமே அவர்களுக்கான உண்மைப்பெயர்கள் அல்ல. எல்லாமே அவரவர் குணாதிசயங்களை வைத்து சூட்டப்பட்ட கிராமிய சொலவடைகளாக நாவலில் மாறி காட்சி தருகின்றன. சோளத்தின் பாட்டி பெயர் உதடிக்கிழவி. ஊரே அப்படித்தான் அழைத்து மகிழ்கிறது! திட்டுகிறது! அவளுக்கு மட்டுமே காரணப்பெயர் நாவலில் சொல்லப்படுகிறது நம் வசதிக்காக. உதடு பெருத்தவள்.

 

கிராமத்தில் பெண்கள் ஒரு புறமாகவும், ஆண்கள் ஒரு புறமாகவும் ஆய் போகச் செல்வார்கள். அதிலும் பெண்களில் சிலர் பகல் வேளையில் கிளம்பினால் அதைக்கண்ணுற கிளம்பும் கேரக்டர் ஒன்று நாவலில் வருகிறது. நாவலில் அவன் பார்வையில் இல்லையென்றாலும் சொல்லப்படும் பெண்ணால் காட்சி தத்ரூபமாக சித்தரிக்கப்படுகிறது. இவையெலாம் நாவல்கள் தமிழில் சொல்லாமல் விட்ட பகுதிகள் தான்.

 

பத்தாவது வரை வாசித்து முடித்து அரசாங்க வேலையை எதிர்பார்த்திருக்கும்.. (அவன் நாவல் முழுக்க அதைப்பற்றி நினைப்பதில்லை.. ஆசிரியர் ஒன்றிரண்டு கேரக்டர் மூலமாக நமக்குச் சொல்கிறார்) இதில் அதிசயம் என்னவென்றால் நாயகன் என்று காட்டப்படுகிற அவனுக்குப் பெயர் பூனை. பூனை சோட்டாளுடன் வேட்டைக்குச் செல்கிறான். சோட்டாளின் மனைவியை புணருகிறான். அவள் ஒதுக்குகையில் நாயகியை புணர ஆசை கொள்கிறான். நாயகி இசைகிறாள். என்னது நாயகியே இசைகிறாளா? என்று ஆச்சரியம் கொள்ளாதீர்கள் மக்ளே! நாயகி பாலியல் இச்சை கொண்டு அலைகிறாள் என்றே இதை கொள்ள வேண்டும். கிராமியங்களில் பாலியல் இச்சை என்பது ஊட்டப்படுவதல்ல. பதிலாக திணிக்கப்படுவது!

 

மிக ஆச்சரியப்பட்ட இடமென்றால் சரோஜா தன் மேஸ்திரிக்கு குண்டியை தூக்கிக்காட்டி சுவற்றில கைவைத்து குனிந்து நிற்க, மேஸ்திரி பின்னால் உடையின்றி சாத்துவது! தமிழ் இலக்கியத்தில் கிராமியக்கதைகள் உச்சமாக மதிக்கப்பட்டன முன்பான காலகட்டங்களில். அது மரியாதைக்குரியன என்பது போன்ற பில்டப்புகளும் அக்காலகட்டத்திலேயே அரங்கேறி நாசமாகின. நாவலை நான் வாசிக்கத்துவங்குகையில் ஒரு கிராமியப் படைப்பை வாசிக்கிறோமென்று தான் உள் சென்றேன். அப்படியே சென்றதும் மகிழ்ச்சி தான். நாயகன் நாயகிக்கான மதிப்பீடுகளை உடைத்தெறிந்த நாவல் இது. நாயகன் தன்னை டொக்கு போட்டு விட்டு வேறு திருமணம் செய்து கொண்டான் என்பதை உடனே உணரும் படைப்பு இது. அவளும் சாராய வியாபாரத்திற்குள் நுழைந்து பிழைக்க ஆரம்பிக்கிறாள்.

 

தமிழில் வந்த அழகான கிராமிய நாவல் வரிசையில் இதுவும் ஒன்று தான். சில பரிசுகள் பெற்றால் கவனத்திற்கு வரலாம். மிஞ்சிப்போனால் 300 பேர் வாசித்தால் கூட வெற்றி தான்.

 

வாழ்ந்து செத்த கதையெலாம் நமக்கு அவசியமில்லை! 200 பக்க அளவிற்குள் 600 பக்க அளவு கொண்ட நாவலை ஆசிரியரே எடிட் செய்து நறுக்கென கொடுத்திருக்கிறார். தொடர்ந்து இங்கே இயங்குவாரா? என்பதெல்லாம் சந்தேகமாக இருக்கிறது. ஆனாலும் தமிழில் மிக தாமதமாக வந்த பழைய சூடான இலக்கியப்பிரதி இது! அனுப்பிய தி.கண்ணன் அவர்களுக்கு என் நன்றிகள். நான் மகிழ்ந்து வாசித்தேன்! ஒரு புத்தகம் அதைச்செய்தாலே போதுமானது!

 

000