சனி, மே 29, 2010

இம்சை.

சிந்துநதி எப்போதும் என்னை
கதைத்தே இம்சிக்கிறாள்.
என்னை இம்சிப்பது தவிர‌
அவளுக்கு வேறு வேலை எதுவும்
இருப்பதாய் தெரியவில்லை.
தொங்கட்டானும் , கால் கொலுசும்
மாட்டிக்கொண்டு வந்து நின்று
நன்றாக உள்ளதா ?
அழகாய் இருக்கேனா ?என்கிறாள்
இன்று என் கூட்டில் பிரயாணி
செய்தேன்.. சூப்பர்!
இஞ்சேறுங்கோ..
மின்சார தடைபாட்டால்
ஏசி வேறு த்ரீடேய்ஸ் வொர்க்
செய்வதில்லை.. நானேதும் சிறிது
கறுத்துவிட்டேனா ? என்
வடிவான முகம் பார்த்து
சொல்லுங்களேன், என்கிறாள்
இந்த இதழோடு சந்தா முடிந்தே
போய்விட்டதாகவும் , புதிப்பித்துக்
கொள்ளும்படியும் உயிர் எழுத்து
காகிதம் ஒட்டி வந்துள்ளது என்கிறேன்.
உனக்கு என் மீது பாசம் இல்லை
என்று மூன்று நாட்கள் மலம்
கழிக்காமல் கோபித்துக்கொண்டாய்
பாசம் உள்ளதாக சொன்னால்தான்
மலம் கழிப்பேனென்றும் இம்சித்தாள்.
காதலே இருப்பதாக சொன்னதும்
பொதுக்கழிப்பிடம் சென்று
இரண்டு ரூபாய் கொடுத்து மலம்
கழித்து புத்தொளியுடன் பிரகாசமாய்
வந்தவள் , இஞ்சேறுங்கோ என்றாள்.
என்னைக் காதலிப்பது பெரிதா?
சந்தா கட்டுவது பெரிதா?
சிந்துநதி மறுபடியும்
இம்சையைத் துவக்கிவிட்டாள்.

(மச்சான் நீ கேளேன்
மாப்ளே நீ கேளேன்..)

**********************

Post Comment

வியாழன், மே 27, 2010

""பாலுறவை உணர்வுப் பூர்வமாக எழுதினால் அது இலக்கியம்!''


- வா.மு. கோமு நேர்காணல்

(நன்றி : நக்கீரன் , இனிய உதயம் .
அவர்களுடைய‌ வலைத்தொடர்புக்கு மேலே தலைப்பைக் அமுத்தவும்
)
வா.மு. கோமு என்கிற பெயரில் எழுதிவரும் வா.மு. கோமகன், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்திற்கு அருகிலிருக்கும் வாய்ப்பாடி என்னும் சின்னஞ்சிறு கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பல்வேறு சிற்றிதழ்களில் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர், மண்ணின் மக்கள் பேசும் மொழியுடன் நவீன மொழியைக் கலந்து, தனக்கேயுரிய பகடி மூலம் படைப்பின் உன்னதத்தைக் கண்டடைகிறார். கோமு நவீனக் கவிதைகளிலும் ஈடுபாடு கொண்டு எழுதினாலும், சிக்கனமான வடிவத்தில் எழுதும் சிறுகதைகளில் இவர் பேசும் விளிம்புநிலை மக்களின் அந்தரங்க யதார்த்தம் ஜி. நாகராஜனை நினைவூட்டக் கூடியது. எனினும் தனக்கேயுரிய இலக்கியச் செயல்பாட் டில் பிடிவாதமாக இருக்கும் இந்த இளம் படைப்பாளி, தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் "நடுகல்' என்ற சிற்றிதழை யும், பின்னர் "இறக்கை' என்ற சிற்றிதழையும் நடத்தியவர். "அழுவாச்சி வருதுங் சாமி', "மண்பூதம்', "அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம்', "தவளைகள் குதிக்கும் வயிறு' ஆகிய நான்கு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து கவனத்தைப் பெற்றிருக்கின்றன. தற்போது "உயிர்மை' வெளியீடாக வெளிவந்திருக்கும் இவரது முதல் நாவலான "கள்ளி' பரவலான கவனத்தையும் சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறது. தற்போது "கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம்' என்ற நாவலை எழுதி வரும் அவரை "இனிய உதயம்' இதழுக்காகச் சந்தித்ததிலிருந்து...

உங்கள் கதைகளை வாசிக்கிறபோது இசங்களின் பால் ஈர்ப்பு கொண்டு பல கதைகளை எழுதியிருக் கிறீர்கள் என்பதை அறிய முடிகிறது. ஆனால் கூடிய விரைவிலேயே இசங்களை முற்றாக நிராகரித்து விட்டு நீங்கள் எழுதியிருக்கும் கதைகள், உத்திகளால் சிதைந்து விடாத படைப்புகளாக வெளிப்பட்டிருக்கின்றன. உண்மையில் இசங்களும் உத்திகளும் படைப்பிலக் கியத்திற்கு வலு சேர்க்கக் கூடியதா? அல்லது படைப்பை பலவீனப்படுத்தக் கூடியதா? உங்கள் எழுத்தனுபவம் வழியாக இதற்கான பதிலைச் சொல்லுங்கள்.

""தொண்ணூறுகளில்தான் இசங்கள் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் அதுபற்றியான தெளிவு என்னிடம் இல்லை. ஆரம்பம் கொண்டே கட்டுரைகளை நான் வாசிப்பதில்லை. கட்டுரைகள் படிப்பது என்பது எனக்கு ஒவ்வாமையாகி விடுகிறது. எனது தந்தையாரின் சேகரிப்பில் இருந்த "சர்ரியலிசம் ஒரு அறிமுகம்', "எக்ஸிஸ்டென்சியலிசம் ஒரு அறிமுகம்' ஆகிய கனமான தொகுதிகள் இன்னும் என்னிடம் உள்ளன. இன்றுவரை பத்து பக்கங்களுக்கு மேல் படித்ததில்லை. தமிழில் மொழிபெயர்ப்பில் வந்த போர்ஹே, மார்குவஸ் சிறுகதைகளைச் சற்று ஆழமாக வாசித்த அனுபவத்தில், நாமும் எழுதிப் பார்க்கலாமே என்ற ஆர்வத்தில் சோதனை முயற்சியாக எழுதி வெற்றியடைந்த படைப்பு களாக அவை மாறிவிட்டன. அதற்குக் காரணம் நமது மண்ணில் எனக்குத் தெரிந்த மனிதர்களையும் நிலத்தையும் வைத்து மாஜிக்கல் ரியலிசத்தைக் கரைத்துக் குடித்துவிட்டவன்போல எழுதிக்காட்டி... குறிப்பிட்ட வாசகர்களிடம் பாராட்டுகளையும் பெற்றுவிட்டேன். மிகச் சிரமப்பட்டு எழுதும் கதைகள் பரவலான கவனத்தைப் பெறுவதில்லை என்பதை மிகத் தாமதமாக உணர்ந்தேன். இருந்தும் இன்றும் அந்த ஆசை விடுவதில்லை. பத்து கதைகளுக்கு ஒரு கதையை எனக்கே புரியாமல் எழுதிக் கொண்டிருக்கிறேன். தீவிர வாசகர்கள் எதையோ ஒன்றைக் கண்டுபிடித்து அதைத்தானே சொல்றீங்க என்று விளக்கினால் ஆமாம் என்று கூறிவிடுவேன்.

இசங்கள், உத்திகள் ஆகியவற்றைப் பெருமைக்கு வேண்டுமானால் சிறுகதைகளில் பயன்படுத்தலாம். பெருமைக்கு காக்கா இசி சாப்பிடப் போய், றெக்கையெல்லாம் இசி அப்பிக் கொண்டு வந்ததுபோல் ஆகிவிடாமல் சாமர்த்தியம் செய்வதன் அவசியம் இருக்கிறது! நவீன முயற்சியில் வெற்றி- தோல்வி பற்றிப் பிரச்சினை இல்லை. எப்படியாகினும் தமிழுக்கு லாபம்தான். புரியாத மொழியில் எழுதி மக்களிடமிருந்து ரொம்ப தூரம் விலகி வந்துவிட்டேனோ என்று போர்ஹே கவலைப்பட்டாராம். எனக்கு அந்தக் கவலை இல்லை.''

தமிழ் இலக்கியப் பரப்பில் வட்டார இலக்கியம் என்பதாகப் பிரித்து வகைப்படுத்துவதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா? கொங்கு வட்டார வாழ்வியலை இலக்கிய வழியில் பதிவு செய்த படைப்பாளிகளின் வரிசையில் உங்களுக்கான இடம் எதுவென்று நினைக்கிறீர்கள்?

""வட்டார இலக்கியம் என்று வகைப்படுத்துவதில் எனக்கு உடன் பாடு இல்லை. வட்டார இலக்கியம் என்று நகரத்தில் அமர்ந்துகொண்டு வட்டார மொழியைத் தங்களது படைப்புகளில் சிலர் உருவாக்குகிறார்கள். பேச்சு மொழியையும் உருவாக்கு கிறார்கள். இன்றுவரை நான் கிராமத்தில்தான் இருக்கிறேன். கிராம மக்களோடுதான் உறவாடுகிறேன். அது என் சில கதைகளில் இயல்பாகவே வந்துவிடும். இது எனது வட்டார பழக்க- வழக்கங்களை எனது கதைகள் வழியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பாகத் தெரிந்து கொள்கிறார்கள். நான் இங்குள்ள கோவில் விஷேசங்கள், இழவு காரியங்கள், திருமணச் சடங்குகள் என்று எழுதுகையில், கொங்கு வட்டார நிகழ்வுகளைத்தான் பதிவு செய்கிறேன் என்கிற எண்ணத்திலெல்லாம் எழுதுவதேயில்லை.

எனக்கு முன்பாக ஆர். சண்முகசுந்தரம் தனது நாவல்களில் இவற்றைப் பதிவு செய்தார். சாதிப் படிநிலையில் உயர்ந்த சாதிகளான கவுண்டர், முதலியார் இனமக்கள் கொங்கு மண்ணில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மட்டுமே நாவல்களில் பதிவாக்கினார். நான் தினமும் உறவாடுவது விளிம்புநிலை மக்களிடம் மட்டுமே. என் எழுத்துகள் விளிம்புநிலை மக்களை மட்டுமே பேசுவது இயல்பான விஷயமாகி விட்டது. இந்த மக்களைப் பற்றி என்னைத் தவிர யாரும் இங்கு பேசவில்லை.

கொங்கு மண் விரிந்து படர்ந்திருக்கிறது. கோவையில் ஒரு மாதிரியாகவும் ஈரோட்டில் ஒரு மாதிரியாகவும் நாமக்கல்லில் ஒரு மாதிரியாகவும் பேசுவார்கள். ஏரியாவிற்கு ஏரியா பேச்சு வழக்கு மாறுபடுகிறது. சேலம் மாவட்டத்தில் ஏர்வாடி என்கிற கிராமத்தைச் சேர்ந்த மு. ஹரிகிருஷ்ணன் கிராம மக்களின் பேச்சுமொழியை அப்படியே சுவீகரித்து எழுத்தில் வார்த்துவிடுவார். கொங்கு மண்ணைப் பதிவு செய்பவர்களில் என். ஸ்ரீராமும், க.சீ. சிவகுமாரும் முக்கியமான வர்கள். இவர்கள் நாவல் எழுத வருகையில் இதுவரை பதிவாகாத விஷயங்கள் வெளிப்படலாம். எனது "கள்ளி' நாவல் வட்டார நாவல் என்கிற வட்டத்துக்குள் சிக்கிவிட்டது. வட்டாரம் என்கிற கிணற்றினுள் இனியும் நீந்த எனக்கு விருப்பமில்லை.''

வட்டார பேச்சுமொழியின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கட்டமைப்பிற்குள் சிக்காத எளிய சொல் அடுக்குகளால் பின்னப்படும் உங்களது நவீன மொழி என்பது, விளிம்புநிலை வாழ்வியலைப் பேசுவதற்கென்றே உருக்கொண்டதுபோல் தோற்றம் கொள்கிறது. இந்த மதிப்பீடு சரிதானா?

""கடந்த மூன்று வருடங்களாக நான் எழுதியவை அனைத்துமே விளிம்புநிலை வாழ்வியல் கதைகளே! வட்டார மொழி என்பது ஒரு உபகரணம் மட்டுமே. அது நம்பகத் தன்மையைக் கதைக்குள் உயர்த்துகிறது.

வட்டாரப் பேச்சுமொழி என்பது குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் பேசுகின்ற மொழியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. இதை மட்டுமே வைத்து தீர்மானிக்க முடியாது. இலக்கியம் தீர்மானிப்பது பேச்சுமொழி, உரையாடல் மட்டுமே அல்ல.

இன்னமும் சொல்வதற்கு எனக்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. இதைத்தான் மதுரை நண்பர் கூறுவார்- சாதாரண கதைகளை சாதாரண மனிதர்களைப் பற்றி மட்டுமே எழுதி, அதெப்படி அற்புதமாய் வார்த்தெடுக்க முடிகிறது என்று. அதுதான் சாமர்த்தியம். எத்தனையோ பண்ணிட்டோம். இதைப் பண்ண மாட்டோமா?

வட்டாரப் பேச்சுமொழியை என் கதைகளில் வலிந்து நான் திணிப்பதில்லை. அதுவாக வரும்போது மட்டும் பயன்படுத்துகிறேன். "உயிர் எழுத்து' வெளியீடாக வந்த "தவளைகள் குதிக்கும் வயிறு' சிறுகதைத் தொகுதியில், ஒரு ஐந்தாறு சிறுகதைகள் நீங்கள் குறிப்பிட்டது போல் அழகான வடிவத்தில் கச்சிதமாகப் பொருந்தி என்னையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. "போதை ஏறிப்போச்சு', "அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க தும்பம்', "இந்த தடத்தில் உள்ள அனைத்து இணைப்பு களும் உபயோகத்தில் உள்ளன' போன்றவை அவை.''

கிராமிய வாழ்வைக் களமாகக் கொண்ட உங்கள் கதைகளை மொத்தமாகப் படிக்கிறபோது, ஒரு நாவலைப் படித்த அனுபவம் ஏற்படுகிறது. எனினும் உங்களது "கள்ளி' நாவல் என்று வருகிறபோது கிராமிய அந்தரங்க வாழ்வின் முகத்தை அதிர்ச்சிகரமாக முன் வைக்கிறது. நவீன தமிழ் நாவல் என்பதில் புனைவு முக்கிய செயல் முறையாக மையம் கொள்ளும் காலகட்டத்தில், புனைவை உதறிவிட்டு அந்தரங்க யதார்த்தம் பேசும் எழுத்து என்பது எந்த வகையில் அடங்குகிறது?

""பாலுறவு தொடர்பான உறுப்புகள் பற்றியெல்லாம் சாதாரண மாகப் பேசுவதையே பாவமாகவும் ஒழுங்கீனமாகவும் கட்டமைத்துள்ள நீதி நியதிகள் நிலவுகின்ற சமூகத்தில், நான் வைக்கின்ற பாத்திரங்களின் உறவுகள் அதிர்ச்சிகரமானதாகத்தான் இருக்கும்.

அந்தரங்க யதார்த்தம் பேசும் எழுத்து புனைவோடு சம்பந்தப் பட்டதுதான். நான் காட்டிய மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். புனைவை உதறிவிட்டு அந்தரங்கம் பேசும் எழுத்து இல்லை. "கள்ளி' நாவலின் முதன்மையான நோக்கமே ஒழுங்கமைக்கப் பட்டுள்ள நீதி, நியதிகளை உடைத்து நொறுக்குவதுதான்.

ஒவ்வொரு எழுத்தாளனின் முதல் நாவலும் அவனது சொந்த விஷயங்களையே பேசும் என்று குறிப்பிடுகிறார்கள். ஏற்கெனவே எனது சொந்த விஷயங்கள் பல சிறுகதைகளாக எழுதப்பட்டுவிட்டன. நாவல் என்கிற களம் எனக்கு அறிமுகமில்லாதது. எனது தஞ்சை நண்பன் நட்சத்ரன்தான், "எது வருகிறதோ அதை மட்டும் செய்' என்றான். "சிறுகதை உனக்குப் பிடிபட்ட பிற்பாடு ஏன் அப்படி ஒரு முயற்சி? இருந்தும் கவனமய்யா கவனம்' என்று எச்சரிக்கை பெல் அடித்தான். தலித்தியம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அதையும் பேசியாக வேண்டும் என்ற திட்டம் மனதில் இருந்தது.

எனக்கும் முந்தைய படைப்புகளை ஒரு படியேனும் தாண்டிய எழுத்தைத்தான் தமிழுக்குத் தரவேண்டும். பத்து வருடத்திற்கும் முன்பாக இம்மாதிரியான விஷயங்களை அச்சேற்றுவது என்பது சிரமமான காரியம். பாலியலில் எனக்கு நேர்ந்த அனுபவங்களையும் நண்பர்களின் அனுபவங்களையும் சொல்ல வேண்டிய அவசியம் வந்தது. பாலியலைப் பேச வேண்டுமென்ற காலகட்டத்தில்தான் நாம் இருக்கிறோம்.

பெயர் கெட்டுவிடும் என்ற எண்ணத்தில் எழுத்தாளர்கள் எழுதத் துணிவதில்லை. அவர்களுக்குப் பாலியலில் சொல்ல வேண்டிய விஷயங்கள் பல இருக்கலாம். தனக்கென்று உள்ள பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாதவர்கள் அதைத் தொடரலாம். இதற்கும் பாலியல் பயிற்சி வேண்டும். அவன் எழுதுறான்; பார், நானும் எழுதுறேன் என்று பயிற்சியின்றி எழுதினால் போர்னோ வாகிவிடும். அதாவது நாய்மேல் ஏறி இசி மேல் விழுந்ததுபோல! நாய் மேல் ஏறுவானேன்; இசிமேல் விழுவானேன்?

எனது எழுத்தில் பகடி, கிண்டல் அதிகம் என்று படிப்போர் அனைவருமே கூறுகிறார்கள். அதுவும் திட்டமிட்டு அமைவதல்ல; என் இயல்பே அப்படி என்கிறபோது அதுவே எழுத்திலும் பதிவாகி விடுகிறது! வாசகர்கள் எனது நாவலோ, சிறுகதையோ பாலியலைப் பேசுகிறது என்று குறிப்பிட்டாலும், உள்ளூரத் தென்படும் வேதனை களையும் குறிப்பிடுகிறார்கள். பகடிகளுக்கும் கிண்டல்களுக்கும் பின்னால் வேதனைகளை மறைத்து வைத்தே எழுதுகிறேன். உதாரண மாக, இரண்டு வருடங்களுக்கு முன்பாக எனது ஊரின் தொலை விலுள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியர், தனது மாணவியிடம் பாலியல் நடத்தையில் இறங்கி இப்போது கடுங்காவலில் இருக்கிறார். அப்போது அது வெறும் பேப்பர் செய்தி. அது மறைந்து விட்டது. அப்படி ஒரு சம்பவம் நடந்ததை யாரும் நினைவில் வைத்திருக்கவில்லை. அதை இப்போது சிறுகதையில் பதிவு செய்திருக்கிறேன். இப்படி எனக்குத் தென்படும் விஷயங்களை மட்டும் நான் எனது மொழியில் பேசுகிறேன்.''

மனித வாழ்வின் அந்தரங்கத்தைப் படைப்பிலக்கியம் ஆக்குவதில் இருக்கக்கூடிய ஆபத்துகள் என்ன? அந்தரங்க இலக்கியம் எப்போது போர்னோவாகி விடுகிறது?

""ஆபத்துகளே இல்லை. அந்தரங்கம் என்பது பொது புத்தியில் பாலுறவாக மட்டும் குறிப்பிடப்படுகிறது. அந்தரங்கம் என்பது பாலுறவு மட்டுமே அல்ல. இருந்தபோதிலும் இலக்கியத்தில் பாலுறவை சித்திரிப்ப தென்பது, உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு உறுப்புகளை மட்டுமே குறிப்பிடுகிறபோது அது போர்னோவாகிவிடுகிறது. பாலுறவை உணர்வுப்பூர்வமாக- இயல்பாகச் சித்திரிக்கும்போது இலக்கியமாகி விடுகிறது.''

உங்களுக்குப் படைப்பூக்கமாக அமைந்த எழுத்துகளில் ஜி. நாகராஜன், கு.ப.ரா., தஞ்சை ப்ரகாஷ், சாருநிவேதிதா ஆகியோரின் எழுத்துகளுக்கு எத்தகைய பங்கு உண்டு? இவர்களின் தொடர்ச்சியாக உங்களைச் சொல்லலாமா?

""நான் எழுதத் துவங்கி நான்கைந்து வருடங்கள் கழித்துதான் ஜி. நாகராஜனையும் சாருநிவேதிதாவையும் படித்தேன். நான் எழுதத் துவங்கிய சமயத்தில் மந்திரவாதி மாண்ட்ரெக், பாலகுமாரன், சுஜாதா, இந்துநேசன், சரோஜாதேவி என்று கலந்துகட்டிப் படித்துக் கொண்டி ருந்தேன். ஜி. நாகராஜனை உணர்ந்து படிக்க மேலும் இரண்டு வருடங் கள் ஆகிவிட்டன. பின்னர்தான் கு.ப.ரா. இவரது எழுத்துக்களைப் படித் திருக்கிறேன் என்றாலும், என்னுள் எந்த பாதிப்பையும் நிகழ்த்தவில்லை. தஞ்சை ப்ரகாஷ் தொண்ணூறுகளில் கடிதத் தொடர்பு கொண்டி ருந்தார். அந்தச் சமயத்தில் அவரது சிறுகதைகள் ஆங்காங்கு வாசித்த தோடு சரி. ப்ரகாஷிடம் எனது "நடுகல்' பிரதியைக் கொண்டு சென்றவர் சுகன். வாங்கி வாசித்தவர்... "அருவருப்பை சிறுகதையாக்கி இருக்கிறான். இதை வரவேற்க வேண்டும். அருவருப்பும் ஒரு சுவை என்பதை நம்ம எழுத்தாளனுக ஒத்துக்க மாட்டானுக. எத்தனுக மூக்கப் பொத்திக்கிட்டு அந்தப் பக்கமே போக மாட்டாதவனுகளாட்ட நடிப்பானுக' "என்று சுகனிடம் கூறியவர், பின்பு என் எழுத்தை உற்சாகப்படுத்திக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

ப்ரகாஷின் நாவல்கள் மூன்றையும் மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் படித்தேன். அவரது "மீனின் சிறகுகள்' தமிழில் சிறப்பான நாவல். எனது நண்பர்களுக்கு முதலில் பரிந்துரை செய்யும் நாவல் அதுதான். சாருநிவேதிதாவின் "பேன்ஸி பனியன்' நாவலின் முன்னுரை, இலக்கியம் எப்படி இருக்கணும்? அழகாக- அப்படின்னு இலக்கணமா சொல்லப்பட்டது! உள்ளார நாவல் முன்னுரைல சொன்ன மாதிரி எதுவுமில்ல... முயற்சிதான் தெரிஞ்சுது. மறுவாசிப்பு செஞ்சா பத்து பக்கத்துக்கும் மேல போக முடியல. இப்ப "பேன்ஸி பனியன்' போகி பண்டிகையைக் கொண்டாடப் பயன்படும்.
இவங்களுக்குப் பின்னால நான் எழுத வந்ததால தொடர்ச்சின்னு சொல்லலாம். ஆனா அவுங்களோட களமும் எழுத்தும் வேறு வேறு; என்னுடையது வேறு.

வருங்காலத் தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்லும் படைப்பாளியா நாம் இருக்கோணும். ஈழத்தமிழர்கள்தான், புலம் பெயர்ந்த படைப்பாளிகள்தான் அதைச் செய்வார்கள் என்றால், நாம் ஒன்றுக்கும் உதவாத படைப்பாளிகள் ஆகிவிடுவோம். ""உலக இலக்கியத்தின் வால் நுனியைக்கூடப் பிடிக்க முடியவில்லை- நம் எழுத்தாளர்களின் எழுத்துக்கள்'' என்று கூவிக் கொண்டு திரிவதைக் காட்டிலும், நம் எழுத்துக்களின் போதாமையை உணர்ந்து படைப்பைப் படைக்க வேண்டும்.''
சாரு நிவேதிதா தன் எழுத்து வாரிசாக உங்களைக் குறிப்பிட்டி ருப்பது பற்றி...!

""பேன்ஸி பனியன்', "ஜீரோ டிகிரி' என்று குப்பைகளை எழுதிப் பழகி "ராஸலீலா' என்கிற நல்ல நாவலைக் கொடுத்தவர், தனது வலைதளத்தில் என்னை வாரிசாக அறிவித்துள்ளதாக நண்பர்கள் பலர் அலைபேசியில் கூறினார்கள். எழுதுகிறவனுக்குக் கூச்சம் வராமல் போனாலும் அவன் எழுதும் பேனாவிற்குக் கூச்சம் வந்துவிடும் நிலையில் எழுதும் எழுத்தாளர்கள் மத்தியில், எதைப் பற்றிய சிந்தனையுமின்றி பேனாவில் சாக்கடை நீர் ஊற்றி எழுதும் என்னை அவர் வாரிசாக அறிவித்ததில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. சாருவின் "தினமலர்- வாரமலர்' கதைகளின் ரசிகன் நான். இனி 16 அடி பாய வேண்டியது மட்டும் என்னுடைய பணி. "உயிர் எழுத்து' வெளியீடாக வரவிருக்கும் "கூப்பிடுவது எமனாக இருக்கலாம்' என்கிற எனது இரண்டாவது நாவல் பத்தடி பாயும் வாய்ப்பு இருக்கிறது! எப்படிப் பார்த்தாலும் இன்றைக்கு நான் வாரிசுதான். நாளைக்கு யாரோ வந்துவிட்டுப் போகட்டும். அன்று நானும் இதேபோல் அறிவித்துக் கொண்டிருக்கலாம்.''
இன்றைய நவீன கவிதை, கதை குறித்தான சொல்லாடல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஆரோக்கியமான சூழலா? நீங்கள் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பும் எழுத்தாளர்கள் யார்?

""தமிழில் இதுவரை எழுதப்படாத வாழ்க்கையும் மொழியும் தற்போது எழுதப்பட்டு வருகிறது. ஆக தமிழ் இலக்கியம் செழிப்பாகவே இருக்கிறது. பழைய பேர்வழிகள் சிலர்தான் இளையவர்களுடன் போட்டியிட இயலாமல், தானும் இருக்க வேண்டுமே என்று இதழ் களின் பக்கங்களை சிறுகதை என்ற பெயரிலும் கட்டுரை என்ற பெயரிலும் நுழைந்து தடி ஊன்றித் தடுமாறி ஊர்கிறார்கள். கங்குலி மாதிரி ரிட்டயர்டு அறிவிக்கும் யோசனை அவர்களுக்கு வருவதில்லை. அவர்கள் பெயர்களுக்காக இதழாளர்கள் போடவேண்டிய நிர்பந்தம் வேறு. நல்ல கவிஞனைப் பற்றியோ, நல்ல படைப்பாளியைப் பற்றியோ எந்த இடத்திலும் பெயர் குறிப்பிடாமல், செத்துப் போன எழுத்தாளர் செய்யத் தவறிய பணியைச் சுட்டிக்காட்டி, தன்னையே மீண்டும் மீண்டும் முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மூத்த படைப்பாளிகளின் சமீபத்திய படைப்பு களை வாசிக்கையில் எனக்கு அவர்கள்மீது பரிதாபமே மிஞ்சுகிறது! "எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்' என்பது மாதிரி.

ஒரு இதழில் வெளிவந்திருக்கும் ஒட்டு மொத்தக் கவிதைகளையும் ஒரே மூச்சில் வாசித்தால், ஒரே எழுத்தாளர்தான் வேறு வேறு புனைப்பெயர்களில் எழுதியுள்ளாரோ என்கிற யோசனையைத் தோற்றுவிக்கும் விதமாக கவிதைகள் கூட்டம் கூட்டமாய் தென்படு கின்றன. இங்கு பெயர்களைத்தான் பிரித்தறிய வேண்டியிருக்கிறது! கவிஞர்களில் சிநேகிதன், சிறி. நான். மணிகண்டன், ஷாராஜ் போன்றோர் தீவிரமாக நவீன கவிதை எழுதி வருகிறார்கள். முந்தைய இருவருக்கும் தொகுப்புகள் ஏற்கெனவே வந்துவிட்டன. ஷாராஜின் "ஜீன்ஸ் ஆண்டாள்' தொகுதி "உயிர்மை' வெளியீடாக இந்த ஆண்டு வருகிறது. தொண்ணூறுகளிலிருந்து என்னோடு இணைந்து எழுதி வந்த ஷாராஜின் கவிதைகள் தொகுக்கப்பட்டு 2008-ல் வருவது என்பது... நான் தாமதமாகத் தொகுப்பு வாயிலாக வந்தது போலத்தான். சுகிர்தராணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் கவிதைகள் என்னை குதூகலப் படுத்துபவை.

படைப்பிலக்கியத்தில் இன்று தீவிரமாக இருப்பவன் கீரனூர் ஜாகீர் ராஜா ஒருவன் மட்டுமே. குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதுபவர் கள் என். ஸ்ரீராமும் மு. ஹரிகிருஷ்ணனும் லஷ்மி சரவணக்குமாரும் தான்.''
நீங்கள் எழுதத் துவங்கியது எப்போது? உங்கள் பின்னணி பற்றிக் கூறுங்கள்?

""85-லேயே நான் எழுதிப் பழக ஆரம்பித்துவிட்டேன். எழுதிய முதல் சிறுகதை இன்றும் ஞாபகம் இருக்கிறது. கடைவீதியில் கூரான கத்தியை பதம் பார்த்து வாங்கிச் செல்வான் ஒருவன். படிப்போருக்கு வீடு சென்றவுடன் மனைவியைக் கொன்று விடுவானோ என்று தோன்றும் விதமாக நகர்த்திச் சென்று, அவன் வீடு சென்று பொம்மை ஒன்றைக் குத்திக் கிழித்து வீசுவான்- குழந்தை ஆசையில் மனைவி பொம்மை வைத்துக்கொண்டு முத்தம் கொடுத்தபடி இருப்பது இவனுக்குப் பிடிக்காததால்! நண்பர்கள் அருமை என்றார்கள்.

அப்பா முத்துப்பொருநன் கவிஞர். ஏராளமான புத்தகங்கள் அவர் சேமிப்பில் இருந்தன. டேபிள்மீது கிடக்கும் "பிரக்ஞை', "கசடதபற', "ஃ' இதழ்களைப் புரட்ட ஆரம்பித்தேன்- 88-ல். ஒன்றும் புரியாது. கதைகள் தென்பட்டால் வாசித்து விடுவேன். கல்லூரி சென்ற சமயம் "ஆனந்த விகடன்' வாசகன். பட்டுக்கோட்டை பிரபாகரின் "தொட்டால் தொடரும்' தொடரைக் கிழித்து பைண்டு செய்தேன். எனது முதலும் கடைசியுமான பைண்டிங் அது.

தொல் படிப்பை உதறிவிட்டு கோவை சென்று விட்டேன். அங்கு "ஊன்றுகோல்' என்கிற கையெழுத்துப் பிரதி ஆரம்பித்து சைக்ளோ ஸ்டைலில் கொண்டு வந்து, பின் அச்சுக்குக் கொண்டு போனேன். அச்சகத்தில் தொழிலையும் கற்றுக் கொண்டேன். உள்ளூர் விளம்பரங் கள் அந்த இதழுக்குத் துணை நின்றன. "தாய்' வார இதழ் அந்த இதழை அறிமுகம் செய்திருந்தது. பரிமாற்றுப் பிரதியாக வந்த ஒரே இதழ் "முன்றில்' - முதல் இரண்டு இதழ்கள்.

அச்சமயத்தில்தான் அப்பா எனக்குத் தனது சேகரிப்பிலிருந்து புதுமைப்பித்தன், அஸ்வகோஷ், அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி என்று வாசிக்கக் கொடுத்தார். "அன்பு நண்பர் முத்துப் பொருநனுக்கு' என்று அசோகமித்திரன் கையெழுத்திட்டு அவரது "இன்னும் சில நாட்கள்' தொகுதியை அனுப்பியுள்ளார். அச்சமயத்தில் ஒரே இரவில் மூன்று கதைகள் எழுதுவேன்.

பின்னர் தமிழ்ச் செல்வனின் "வெயிலோடு போய்,' கோணங்கியின் "மதினிமார்கள் கதை', ஜீ, நாகராஜனின் "நாளை மற்றுமொரு நாளே' ஆகியவற்றைப் படித்த பிறகு, என் எழுத்துமுறை தன்னையே மாற்றிக் கொண்டது நிகழ்ந்தது. முன்பாக "மாலைமுரசு' கோவைப் பதிப்பில் 15 ரூபாய் பரிசுக்காக மாதம் ஒருமுறை காதலர்களை ஆள்மாற்றி ஆள் கொன்று, இடங்களையும் மாற்றிக் கொன்று குவித்துக் கொண்டிருந்தேன்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் திருப்பூர் வந்துவிட்டேன். நண்பர்கள் கூட்டாக இணைந்து "நடுகல்' என்கிற இதழை ஆரம்பித்தோம். இச்சமயத்தில்தான் "பேன்ஸி பனியன்' ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள், "கர்நாடக முரசும் அமைப்பியல் ஆய்வும்' போன்றவற்றை வாசித்தேன். "நடுகல் ஆறு' இதழ்கள் நண்பர்கள் உதவியோடு வந்து நின்று போனது. பின் தனித்து நானே அதை 21 இதழ்கள் கொண்டு வந்தேன். அச்சக வேலையில் இருந்ததால் கூலியை பிடித்துக் கொள்ளச் சொல்லிவிடுவேன். இதை உங்களுக்காக எழுதுவதில் பழைய நினைவுகள் என்னை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. நாமும் என்னமோ பண்ணிப் போட்டுத் தான் வந்திருக்கமாட்டம்ன்னு!

எழுதுவதற்கான விஷயங்கள் ஆரம்பத்தில் எல்லாமே கற்பனையில் உதித்தவைதான். தொண்ணூறுகளில்தான் நடைபெற்ற சம்பவங்களை எழுதத் துவங்கினேன். தஞ்சையிலிருந்து வந்து கொண்டிருக்கும் "சௌந்தரசுகன்' என்கிற சிற்றிதழ் எனது ஐம்பது சிறுகதைகளை வெளி யிட்டு மகிழ்ச்சி கொண்டிருக்கிறது. எனது முதல் தொகுதி "அழுவாச்சு வருதுங் சாமி' தொகுப்பையும் அந்த இதழே கொண்டு வந்தது.

எல்லாரும் எழுதுகிறார்கள், நாமும் எழுதுவோம் என்று எழுதுகையில், ஓரளவு படிப்பறிவு கொண்ட நண்பர்கள் ஊக்குவிப்பால் சரமாரியாக கொலைக்கதை, காதல் கதை, பேய்க்கதை என்று எழுதியவனின் இன்றைய எழுத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இந்த விஷயத்தையெல்லாமா எழுதுகிறாய் என்கிறார்கள்.

என் பெயரில்லாமல் ஒரு கதையோ கவிதையோ ஒரு இதழில் வெளிவந்திருந்தால், இவன்தான் எழுதியவன் என்று குறைந்தபட்சம் ஐம்பது பேராவது இலக்கியத்தில் என் எழுத்தைக் கண்டறிந்து சொல்லிவிடுவார்கள். அப்படியான ஒரு எழுத்திற்கு வரவே இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது.''
நவீன எழுத்தாளர்கள் பலரும் வெகுஜன இதழ்களுக்கு எழுத வந்துவிட்டார்கள். உங்களுக்கு எழுத வாய்ப்பு கிடைக்கவில்லையா அல்லது ஒதுக்கிவிட்டார்களா?

""வணிக இதழ்களில் எழுதுவதற்கு எந்தத் தடைகளும் என்னிடம் இல்லை. இப்போதுதான் "குங்கும'த்தில் எனது சிறுகதைகள் வெளி வந்துள்ளன. மற்ற பத்திரிகைகளிலும் இனி என் எழுத்தைத் தொடர்ந்து பார்க்கலாம். வணிக இதழோ சிற்றிதழோ எங்கு எழுதினாலும் அது என்னுடைய எழுத்தாகவே இருக்கும்.''
சிற்றிதழ்களில் அரசியல் நுழைந்துவிட்டதாக இன்று திடீரென்று பேசுகிறார்களே? சிற்றிதழ்களுக்கு குழு மனப்பான்மையும் அரசியலும் புதிதா என்ன?

""சிற்றிதழ் என்பதே நிலவுகிற அரசியல், பண்பாட்டுச் சூழல்களுக்கு எதிரானதுதான். அதில் அரசு, அரசு அதிகாரமும் அடக்கம். அரசியல் தவிர்த்த சிற்றிதழ் என்பதே இல்லை. தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு அரசியலை சிற்றிதழ் முன்னிலைப்படுத்துகிறது. பண்பாட்டுத் தளத்தில் காத்திரமாக இயங்குபவர்களே இப்படிப் பேசுகிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.''
தொண்ணூறுகளில் "நடுகல்' சிற்றிதழ் நடத்தினீர்கள்... 2000-ல் "இறக்கை'. எழுத்தாளன் சிற்றிதழ் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏன் ஏற்படுகிறது?

"" "நடுகல்' ஆரம்பித்தபோது புதுமையின் பிடியில் சிக்கியிருந்தேன். தமிழில் ஏதாவது புதுமையைச் செய்துவிட வேண்டுமென்ற விடலைத் தனமான ஆசை. ஆனால் அந்த இதழில் பங்குபெற்ற படைப்பாளிகள் இன்றும் அதில் படைப்புகள் எழுதியதைப் பெருமையாகக் கூறுகிறார்கள். எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. "இறக்கை' ஆரம்பிக்கப்பட்டபோது ஜெராக்ஸ் பிரதியாகத்தான் வந்தது. மற்ற எழுத்தாளர்களிடமும் வாசகர்களிடமும் தொடர்பில் இருப்பதற்காக மட்டுமே துவங்கப்பட்டது. அதன் 39 இதழ்கள் வரை ஜெராக்ஸ் பிரதி தான். என்னிடம் தேடிவந்து இணைந்த ஹரிகிருஷ்ணன் "இறக்கை'யில் துணை ஆசிரியனாகப் பங்கேற்று அச்சில் கொண்டு வந்தான்.

எழுத்தாளன் ஏன் சிற்றிதழ் நடத்துகிறான் என்றால் படைப்புகளை எழுத மட்டுமே. "இறக்கை' இதழில் வெளிவந்த எனது கதைகள் வேறு இதழ்களில் வெளிவந்திருக்க வாய்ப்பிருக்காது. எழுதி வீட்டில் வைத்துக்கொள்ள வேண்டியதுதான். அவற்றை வெளியிட மற்ற சிற்றிதழாளர்கள் தயக்கம் காட்டி, சால்ஜாப்பு சொல்வர். "இறக்கை' நின்று போனது பலபேருக்கு நட்டம்தான். ஆக்டோபஸ் கவிஞன் ஷாராஜ் தனது முந்தைய குறுங்கவிதைகளைக் கடாசிவிட்டு, வீரியத்தோடு நீள் கவிதைகளை "இறக்கை'யில் எழுதி சக படைப்பாளிகளை மிரள வைத்தான்.
இனி என் வாழ்நாளில் சிற்றிதழ் துவங்கி நடத்தும் ஆசை இல்லை. "இறக்கை' முழுத் தொகுதியாக "உயிர்மை' வெளியீடாக வரவிருக்கிறது.''

ராசமைந்தன் என்கிற புனைப்பெயரில்தான் "இறக்கை' என்கிற- எங்கு வேண்டுமானாலும் பறக்கும் இதழை நடத்தினீர்கள். வா.மு. கோமு என்ற பெயரிலேயே அந்த இதழை நடத்தியிருக்கலாம்தானே. அதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணங்கள் உள்ளதா? எப்போது அந்தப் பெயரைச் சூடிக் கொண்டீர்கள்?

""கோவையில் இருந்தபோது "ஊன்றுகோல்' இதழை நடத்தியதாகக் கூறியிருந்தேன். அந்தச் சிற்றிதழில் படைப்பாளர்களின் படைப்புகள் பற்றாக்குறை நிகழ்ந்தமையால் எனது நண்பர் ராஜேந்திரன், கோமகன் என்கிற எனது முழுப் பெயரை தமிழ்ப் பெயராக மாற்றினார். கோ என்றால் அரசன் என்றும், மகன் என்றால் மைந்தன் என்றும் பிரித்து விளக்கி வைத்து, "இன்று முதல் ராசமைந்தன் என்கிற பெயரில் கவிதை எழுதக் கடவாய்' என்றார். அன்றிலிருந்து இன்றுவரை ராசமைந்தன் என்கிற பெயரை கவிதைகள் எழுதப் பயன்படுத்துகிறேன்.

பின்பாக "இறக்கை' இதழை ராசமைந்தன் என்கிற பெயரில் கொண்டு வந்தேன். ஏற்கெனவே "நடுகல்' இதழை வா.மு. கோமு என்கிற பெயரில் நடத்தியிருப்பதால் இதுவும் எனது பெயர்தானே என்கிற எண்ணத்தில்தான் "இறக்கை' இதழுக்கு எனது புனைப்பெயரைப் பயன்படுத்தினேன்.

"சுகன்' இதழில் ராசமைந்தன் என்ற பெயரில் எழுதிய கவிதைகள் அனைத்தும் நிறைய வாசகர்களின் பாராட்டுகளையும் வசவுகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டன. இருவரும் ஒருவரே என்று புதிதாக அறிந்தவர்கள் தங்கள் ஆச்சரியத்தை "சுகன்' இதழிலேயே பகிர்ந்திருக்கிறார்கள். "வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதைப் பல எழுத்தாளர்களின் கதைகள் கற்றுத் தந்தன என்றால், வாழ்க்கையை எப்படி வாழக்கூடாது என்பதை ராசமைந்தன்- வா.மு. கோமு எழுத்துகள் கற்றுத் தருகின்றன. "சுகன்' இதழில் இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது' என்றுகூட விமர்சனங்கள் அந்த இதழின் கூர்ப்பகுதியில் வெளிவந்துள்ளன.''

உங்களது கவிதை அனுபவத்திற்கும் சிறுகதை அனுபவத்திற்குமான பொருத்தங்கள் என்ன? எதை எளிமையாக உணர்கிறீர்கள்?

""இரண்டுமே எனக்கு எளிமையான பணிகள்தான். கரு கிடைத்தானபின் நானாக முடிவு செய்வதுதான். எழுதுவதற்கு சிரமமாக இருந்தால் அன்று சிறுகவிதை வடிவிலேயே விஷயத்தை எழுதி முடித்துவிடுவேன். சொல்ல வரும் விஷயம் வாசகனுக்குக் கவிதை வடிவிலோ கதை வடிவிலோ சென்று சேர்ந்தால் சரி. எனது ஏராளமான கவிதைகள் சிறுகதைகளையே தாங்கி நிற்கின்றன. தொகுப்பாக வருகையில்- அவற்றை நீங்கள் வாசிக்கையில் இந்த உண்மை புலப்படும்.

இதேபோல் சிறுகதைகளிலும் தேவையற்ற வர்ணனைகளை இதுவரை நான் வலிந்து திணித்ததில்லை. போகிற போக்கில் காகம் ஒன்று பறந்து சென்று மரக்கிளையில் அமர்ந்து அவனைப் பார்த்தது என்று எழுதினால், வாசகன் காகத்தைக் கவனிக்க ஆரம்பித்து விடுவான். திடீரென பறந்து வந்து அவன் கண்களை ஏதோ ஒரு இடத்தில் கொத்திச் சென்று விடுமோ என்ற யோசனைக்குச் சென்றுவிடுவான். ஆகவே காகங்களோ மற்ற இடைச்செருகல் இடைஞ்சல்களோ அதிகம் என் கதைகளில் இதுவரை இருந்திராது. கதை சொல்கையில் கதைதான் முக்கியம்.''

தலித் இலக்கியம் என்பதை தலித் அல்லாதவர்களும் எழுத முடியும் என்பதற்கு உங்களது பல கதைகள் சாட்சியாக உள்ளன. தற்கால தலித் இலக்கியம் பற்றி உங்கள் பார்வை அல்லது வாசிப்பு அனுபவம் என்ன?

""இது எனக்கு எளிமையான பணி. முன்பே கூறியதுபோல நான் கிராமத்தில் கிடப்பவன். அருந்ததியர் வாழ்க்கை என் கண்முன் நடக்கிறது. எல்லாருமே என் நண்பர்கள். இல்லாதது பொல்லாதது எதையும் என் கதைகளில் எழுதிவிடவில்லை. நீங்கள் குறிப்பிட்ட சில கதைகளோடு தலித் எழுத்தை கைவிட்டு விட்டேன். அதை அவர்களே எழுதட்டும். நான் அதை மட்டுமே பிடித்துக்கொண்டு எழுத வந்தவனல்ல; வேறு பணிகளும் எனக்கு எழுத்தில் உள்ளன. நான் செத்துப்போய் பத்து வருடம் கழித்து ஒரு கூமுட்டையன் வா.மு. கோமுவின் எழுத்துகள் தலித் வாழ்க்கையைப் பிரதிபலிக்கவில்லை என்று எழுதிவிடக் கூடாது என்பதற்காக எழுதியது.

என்னுடைய படைப்புகளில் நான் அறிந்த- பழகிய- என்னோடு கலந்த தலித்துகளின் வாழ்க்கை வருகிறது. அது தலித் வாழ்க்கைதானா என்பதை தலித் விமர்சகர்கள்தான் சொல்ல வேண்டும். நான் சொல்ல முடியாதுதான்.

தலித் இதழில் வந்த நேர்காணல்கள் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவற்றை வாசித்தாலே அடிப்படையைப் புரிந்துகொள்ளலாம். தவிர தன் வரலாறுகள், சில நாவல்கள் வாசித்த அனுபவம்தான். தலித்தான் தலித் படைப்பை எழுத வேண்டும் என்று கருத்து இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தலித் படைப்பாளிகளிடமிருந்து படைப்புகள் ஏதும் வரவில்லை. பாமா, இமையம் நல்ல படைப்பாளிகள்.''

இன்று பலர் அமைப்பு சார்ந்து இயங்குகிறார்கள். அமைப்பு சார்ந்து இயங்குவது படைப்பின் வீரியத்தைக் குறைத்துவிடுமா?

""அமைப்பு சார்ந்து இயங்குபவர்களிடம் சில முன் முடிவுகள் இருக்கின்றன. அவற்றில் எழுத்து சமுதாய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும், மக்களிடம் விடுதலை உணர்வைத் தூண்டக்கூடியதாக அமைய வேண்டும், பாலியல் சீர்கேடுகள் பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்கிற தங்களது திட்டமிடலுக்கு ஏற்ப, அமைப்பில் ஈடுபட்டு டோக்கன் பெற்று சமுதாய சிந்தனைக் கதைகள் எழுதி, அமைப்பிடமிருந்து பாராட்டுகள் பெற்று உள்ளம் குளிர்கிறார்கள்.

மறவாமல் அதை எங்கு வேண்டுமானாலும் குறிப்பிடுவார்கள். அமைப்பு எனக்கு கோவில் மாதிரி... எனக்கு பிரசாதம் குடுத்தாங்க... சலாம் போட்டாங்கன்னு! அமைப்பு சார்ந்த எழுத்தாளர்களின் எழுத்தைத் தவிர ஏனைய எழுத்துக்களை அவர்கள் படிப்பதுமில்லை. அமைப்பிற்கு ஆள் பிடிக்கும் வேலையையும் இவர்களே செய்யத் துவங்குகிறார்கள். நாய் பிடிக்கும் வண்டி தெருவில் வருகிறதென்றால் தெருநாய்கள் எப்படித்தான் உணர்ந்து கொள்ளுமோ தெரியாது. எங்காவது ஓடிப் பதுங்கிவிடும். அதுபோல இளைய படைப்பாளிகள் ஓடிப் பதுங்கி விடுகிறார்கள்.

ராமுவும் சோமுவும் பள்ளி நண்பர்கள். இருவரும் ஒரு பம்பரத்திற்காக அடித்துக்கொண்டு வீதியில் உருளுகிறார்கள். இதைக் கண்டு ராமுவின் அம்மாவும் சோமுவின் அம்மாவும் உன் பையன்தான் கெட்டவன் என்று ஒருவருக்கொருவர் சண்டை போட்டு முடித்து, ராமுவின் அம்மா ராமுவுக்கு முதுகில் இரண்டு சாத்து சாத்தி தன் வீட்டுக்கு இழுத்துப் போக... சோமுவின் அம்மாவும் சோமுவிற்கு இரண்டு சாத்து சாத்தி தன் வீட்டுக்கு இழுத்துப் போக... பம்பரம் வீதியில் அநாதையாகக் கிடந்தது என்கிற மாதிரியான எரிச்சலூட்டும் படைப்புகளை எல்லாம் கடந்து வந்து, ஆற அமர இப்போதுதான் சிறுகதை என்ற ஒன்றைப் படிக்கிறோம் என்ற உணர்வுடன் எல்லா கதைகளையும் வாசிக்க முடிகிறது. அநாதையாகக் கிடந்த பம்பரத்தினால் என்ன சமுதாய மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது என்பது இன்னமும் தெரியவில்லை.

நான் எந்த அமைப்பிற்குள்ளும் சேராதவன். சேர்ந்துதான் பணியாற்ற வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியதேயில்லை. அதேசமயம் மனிதநேய மேம்பாட்டுக்காகச் செயல்படுகின்ற எந்த அமைப்புக்கும் நான் விரோதி அல்ல. எழுத்தைப் பல வழிகளில் எழுதிப் பார்ப்பவன் நான். அமைப்பானது படைப்பு வீரியத்தைக் குறைத்துவிடும் என்று நானாகவே நம்பிக் கொள்கிறேன். என்னை யாரும் அழைக்கவும் மாட்டார்கள். என் எழுத்து அப்படி.''

வாழ்க்கையைக் கொண்டாட்டமாகவே பார்க்கும் உங்களது "குட்டிப் பிசாசு' என்கிற பாத்திரம் உங்களது வன தேவதையா?

""நகுலனுக்கு சுசீலா, பாரதிக்கு கண்ணம்மா, கலாப்பிரியாவுக்கு சசி, ராசமைந்தனுக்கு சாந்தாமணி என்றிருக்கையில், எனக்குக் "குட்டிப்பிசாசு' இருந்துவிட்டுப் போகட்டும்.''
சமீபத்தில் படித்தவை...

""சைனா கெய்ரெற்சி-யின் "குழந்தைப் போராளி', கென்னத் ஆண்டர்சனின் "ஏலகிரியில் சிறுத்தை வேட்டை', பா. ராகவனின் "ரெண்டு', ஜிம் கார்பெட்டின் "எனது இந்தியா', ஓஷோவின் "மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை'. படியேண்டா என்று புத்தக அடுக்கில் காத்திருப்பவை- யாங்கோவின் "இளமையின் கீதம்', டால்ஸ்டாயின் "அன்னா கரீனினா', பரீஸ் பொலெவோயின் "உண்மை மனிதனின் கதை', சுஜாதாவின் "பதவிக்காக', தமிழ்ச்செல்வியின் "ஆறுகாட்டுத் துறை', முத்து காமிக்ஸின் "மஞ்சள் பூ மர்மம்', சிவசங்கரியின் "வேரில்லாத மரங்கள்'.''
தற்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

""வழக்கம்போல சிறுகதைகள்தான்.

இனி தோழர் பெரியசுவாமி நேரம்.

சிந்தியா சாலினி ரன்ஜித் பெல்லா தான் தங்கியிருந்த அறையிலிருந்து ஓட்டல் மேனேஜருக்கு ஃபோன் செய்தாள். ""நான் இங்கு நானூற்று முப்பதாவது அறையில் இருக்கிறேன். எனக்கு உலக மகா கோபமாய் இருக்கிறது. எதிர் அறையில் ஒருவன் நிர்வாணமாக நடந்தபடியே இருக்கிறான். அவனது இடுப்புக்கும் கீழே ஆபாசமாக இருக்கிறது'' என்று கத்தினாள். ""இதோ இப்போதே வந்து என்னவென்று கவனிக்கிறேன்'' என்று மேனேஜர் கூறிவிட்டு பெல்லாவின் அறைக்குள் வந்தார். ஜன்னல் வழியாக எதிர் அறையைப் பார்த்தார். ""நீங்கள் சொன்னது சரிதான் மேடம். அந்த மனிதன் நிர்வாணமாகத்தான் இருக்கிறான். ஆனால் அவனுடைய ஜன்னல் இடுப்பு வரையில் மறைத்திருக்கிறதே, அவன் அறையில் எப்படி இருந்தாலும் நமக்கென்ன மேடம்?'' என்றார். ""ஆமாம்'' என்று கத்தினாள் பெல்லா. ""இந்தப் படுக்கையில் ஏறி நின்று பார், படுக்கையின்மீது ஏறு.''

முடித்துக் கொள்ளலாமா மனுஷா?''

நேர்காணல்: ஆர்.சி. ஜெயந்தன்

***********************************************
*****************************************

Post Comment

வா.மு.கோமு வின் கள்ளி:சாருவின் வாத்தி

நன்றி : தனிமையின் இசை. அவரது வலைத்தொடர்புக்கு மேலே தலைப்பைக் அமுத்தவும்


ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வா.மு.கோமுவின் முதல் நாவல் இது.கொங்கு வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் தொடும் தளம் விடலைத் தனம்.எவ்வித திரிபுகளுமற்ற கொங்கு மொழியின் அசாத்தியம் இந்நாவலில் சாத்தியமாகி இருக்கின்றது.வட்டார வழக்கில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நாவல்களில் இதையும் இனிமேல் சேர்த்துக்கொள்ளலாம்.கொங்கு வாழ்வினை தளமாக கொண்ட இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதில் பெருமாள் முருகனுக்கு முக்கியப் பங்கு உண்டு.ஆனால் இவராலும் அம்மக்களின் வாழ்வை இலக்கியப் பாங்கோடுதான் படைக்கமுடிந்தது.வா.மு.கோமு செய்திருப்பது அசாத்திய மொழி உடைப்பு.இலக்கியம் நுழைய முடியாத அல்லது இலக்கிய வடிவினில் சேர்க்க விரும்பாத,சேர்க்கத் தயங்கிய பல கூறுகளை எவ்வித தயக்கமும் இல்லாது நேரடியாய் பேசுகிறது இவரின் மொழி.

எல்லாப் பக்கங்களிலும் மது பொங்கி வழிகிறது.காமம் கரைபுரண்டோடுகிறது.கற்பு,ஒழுக்கம் என எவ்வித பம்மாத்துகளுமில்லாது காமத்தினை ஒரு விளையாட்டாய் விளையாடித் தீர்க்கிறார்கள் இவரின் கதை மாந்தர்கள்.நள்ளிரவு,விடியல்,முன்னிரவு, என எல்லாப் பொழுதுகளிலும் வெட்ட வெளி,பாறை இடுக்கு, முட்காடு, எவருமற்ற அந்நியன் வீடென எங்கெங்கிலும் புணர்ந்து திரியும் இவரது கதை மாந்தர்களுக்கான அடிநாதம் தீராக்காமமாயும் பருவத் தெறிப்பாகவுமிருக்கிறது.

இது தவிர்த்து இந்நாவல் தொட்டுச் செல்லும் இன்னொரு தளம் மாதாரிகளின் கொண்டாட்டமும் அவலமுமான வாழ்வு.மேலதிகமாய் கவுண்டர்களின் ஆதிக்கத் திமிர்களையும் பண்ணைய முறைகளின் வன்முறைகளையும் கோடிட்டுச் சென்றிருக்கிறது.விடலைத் தனம் நிரம்பியிருப்பதால் மிக அழுத்தமாய் சொல்லப்பட்டிருக்க வேண்டிய பல விதயங்களை சற்றே தொட்டுவிட்டு மதுவில் கரைந்து போகிறது இந்நாவல்.முதல் அத்தியாயத்தில் தொடங்கிய வீச்சும், புதுத்தளமும், புதுமொழியும், அசாத்திய நகைச்சுவையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் வலுவிழந்து போகிறது.எனினும் கிண்டலும், கேலியும், காமமும் சேர்ந்து நாவலை ஒரே மூச்சில் படிக்க வைக்கும் மனநிலையைத் தந்துவிடுகிறது.நாவலைப் படிக்கும்போது சத்தம் போட்டு சிரித்தது கடைசியாய் எந்த நாவலுக்கென மறந்து போய்விட்டது.ஆனால் எத்தகைய உம்மணாமூஞ்சிகளையும் வெடித்துச் சிரிக்க வைக்கும் அசாத்திய மொழி இந்நாவலில் சாத்தியமாகி இருக்கிறது.

கடைசி அத்தியாயத்தில் தாங்கிப் பிடிக்கும் ஆதிக்க மனோபாவ கொடி முதல் அத்தியாயத்திலிருந்து சொல்லப்பட்ட விளிம்புசார் நிலையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.கடைசி அத்தியாயத்தை நம்ப எனக்கு சிறிது நேரம் பிடித்தது.லேசான எரிச்சலும் மண்டியது.எழுத்தாளனுக்கான கடமை இதுவென எதையும் வலியுறுத்துவதில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் தான் எழுதும் தளத்தின் வீச்சை, தேவையை உணர்ந்து கொள்ள வேண்டியது எழுத்தாளன் செய்ய வேண்டியது.
இவரின் எழுத்துக்கள் பெண்ணியவாதிகள் கண்ணில் பட்டதா எனத் தெரியவில்லை.பெண்மைத் தனங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கியிருக்கிறார்.காமம் மட்டுமே பிரதானமாய் கொண்ட பெண்களை மட்டுமே உலவவிட்டிருக்கிறார்.போதாக் குறைக்கு இந்நாவலை அவரின் காதலி/மனைவிக்கு சமர்பித்திருக்கிறார்.மிக அசாத்திய துணிச்சலராய் இருக்கவேண்டும்.

சாரு இவரைத் தன் முதல் வாரிசாக அறிவித்திருக்கிறாராம்.இந்த 'வாரிசு' களின் மீது ஏற்படும் பரிதாபமும் வாரிசுகளை உருவாக்கும் மகோன்னதர்களின் மீது ஏற்படும் எரிச்சல்களும் அத்தனை சீக்கிரம் அடங்குவதில்லை.புனைவிலக்கியத்தில் சாருவின் சாதனைகள் எல்லாம் மேல்தட்டு/நடுத்தர வர்க்கத்து போர்னோ மாதிரிகள் மட்டுமே.வா.மு.கோமு தன் முதல் நாவலிலேயே பல கட்டுக்களைத் தகர்த்திருப்பது சாருவின் சாதனை மாதிரிகளுக்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை.தன் சார்ந்த பிம்ப உருவாக்கங்களிலிருந்து எங்களின் இலக்கிய பிதாமகர்கள் வெளிவர எல்லாம் வல்ல ரோலான் பர்த்துக்கள் உதவி செய்வார்களாக.

கள்ளி முடித்த கையோடு சோ.தர்மனின் கூகையை ஆரம்பித்தேன் முதல் பத்து பக்கங்களுக்கு மேல் என்னால் படிக்கமுடியவில்லை.விளிம்பின் கதைசொல்லலுக்கு தேவையான அடிப்படை விதயமாக நான் நினைப்பது சரியான மொழி.மிகச் சரியான வட்டார வழக்கு.அம்மொழி சாத்தியமில்லையெனில் சும்மா இருந்துவிடலாம்.விளிம்பின் கதையெழுதுகிறேன் பேர்வழியென அடைப்புக்குறிகளுக்குள் சுந்தர ராமசாமித் தனங்களை பொருத்தி வைப்பது அபத்தமானது.மேலும் இவர் முதல் ஐந்து பக்கங்களில் சொல்லியிருக்கும் அபத்தங்கள் புத்தகத்தை தூக்கி எறிய வைத்தன.ஆண்டை ஒருவர் எல்லா பறக்குடி வீடுகளிலும் புகுந்து இஷ்டம் போல புணர்ந்து திரிவாராம்.எந்தப் பெண்ணை புணர்கிறாரோ அப்பெண்ணின் கணவன் அவருக்கு சாராயம் வாங்கி வந்து கொடுப்பாராம்.(தானும் கொஞ்சம் குடித்துக்கொள்வாராம்)ஆண்டை வீட்டில் மனைவியை புணர்ந்து கொண்டிருக்கையில் கணவன் வீட்டுத் திண்ணையில் தன் வயதுக்கு வந்த மகளோடு உட்கார்ந்து அழுவாராம்.ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வந்த கோபத்துக்கு அளவே இல்லை.இந்த மசிராண்டிகள் எந்த கருமத்தையும் எழுதாமல் இருப்பது எல்லாருக்கும் நல்லது.ஒரு புத்தகத்தை பத்து பக்கங்கள் மட்டுமே படித்து மிக மோசமாக விமர்சிப்பது வன்முறைதான் என்றாலும் முழுவதையும் படிக்கும் பொறுமை இல்லை எனக்கு. படித்து முடித்த புண்ணியவான்கள் விளக்கினால் என் சிற்றறிவு சமாதானமடையும்.

21 Comments:

பாண்டித்துரை said...

கள்ளி சமீபத்தில்தான் படித்தேன்.
கடைசி அத்தியாயம் துண்டுபட்ட ஒன்றாக தோன்றியது.
கடைசி அத்தாயத்தின் புரிதலுக்காக
கென்னிடம் தொடர்பு கொண்டபோது கள்ளி பற்றி பேசினேன்.

////பெண்மைத் தனங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கியிருக்கிறார்./////

கூகை இன்னும் நான் படிக்கவில்லை.

கள்ளியை ஓரே மூச்சில் படித்து முடித்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. அப்படி நான் ஓரே மூச்சில் படித்ததது எஸ்ரா வின் நெடுங்குருதி.

Anonymous said...

வா.மு. கோமு கொண்டாட படவேண்டியவர் தான்.
சாரு அவரை தனது வாரிசு என்று விளிப்பது கொடுமை..
வா.மு.கோமு.வின் கவிதை தொகுப்பு - "வெறும் குண்டி அம்மணம் போட்டுக்கடி சம்மணம்"- அற்புதமான "கவிதா"னுபவத்தை தரக்கூடியது..
- மயில்வண்ணன்.

உமாஷக்தி said...

வாமுவின் மண் பூதம் சிறுகதை தொகுதி வாசித்தீர்களா? இதெல்லாம் கூட பரவாயில்லை இந்த மாத உயிர்மையில் அவரின் கவிதை...yuck...தீராநதியில் ஜமாலன் அவர்களின் கட்டுரையும் வாமுவின் கவிதையையும் ஒரு சேர வாசிக்க வேண்டும்,ஜமாலனின் கட்டுரை மிகவும் அருமை. இவரின் கவிதையை வாசித்து ஏற்பட்ட கோபம் அவரின் கட்டுரையை வாசித்ததும் தான் ஓரளவிற்கு தணிந்தது...

லேகா said...

கள்ளி நாவல் அறிமுகத்திற்கு நன்றி அய்யனார்.வா.மு.கோ.மு குறித்து சாருவின் தளத்தில் படித்த நியாபகம்.

//இந்த 'வாரிசு' களின் மீது ஏற்படும் பரிதாபமும் வாரிசுகளை உருவாக்கும் மகோன்னதர்களின் மீது ஏற்படும் எரிச்சல்களும் அத்தனை சீக்கிரம் அடங்குவதில்லை//

:-))

//எந்தப் பெண்ணை புணர்கிறாரோ அப்பெண்ணின் கணவன் அவருக்கு சாராயம் வாங்கி வந்து கொடுப்பாராம்.(தானும் கொஞ்சம் குடித்துக்கொள்வாராம்)ஆண்டை வீட்டில் மனைவியை புணர்ந்து கொண்டிருக்கையில் கணவன் வீட்டுத் திண்ணையில் தன் வயதுக்கு வந்த மகளோடு உட்கார்ந்து அழுவாராம்.//

ஆரம்ப கால கே.எஸ்.ரவிக்குமார் திரைப்பட காட்சி போல உள்ளது!! :-)
படிக்க வேண்டிய புத்தகங்களை மட்டும் அல்லாது அவசியமற்ற புத்தகங்களை சொல்லி இருப்பதற்கும் நன்றி.

அனுஜன்யா said...

அய்ஸ்,

வா.மு.கோமுவின் ஒரு கதை உயிர்மையில் படித்தேன். 'சின்ன பாப்பா' என்று ஞாபகம். நடை இயல்பாக இருப்பினும், அதிலும் நுட்பமாக சாதியம் அமர்ந்திருந்தது என்றும் ஞாபகம். வாரிசுகள் பற்றி நீங்கள் எழுதியது முறுவல் தந்தது. கென் பலமுறை நெளிவதை உணர்ந்திருக்கிறேன்.

விளிம்பு மாந்தர்கள் காதை என்றால் அவசியம் கட்டுங்கடங்கா காமம் வந்தே தீர வேண்டுமா? ஒன்றும் புரியவில்லை.

அனுஜன்யா

கார்த்திக் said...

//ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வா.மு.கோமுவின் முதல் நாவல் இது.கொங்கு வட்டார வழக்கில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் தொடும் தளம் விடலைத் தனம்.எவ்வித திரிபுகளுமற்ற கொங்கு மொழியின் அசாத்தியம் இந்நாவலில் சாத்தியமாகி இருக்கின்றது.வட்டார வழக்கில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நாவல்களில் இதையும் இனிமேல் சேர்த்துக்கொள்ளலாம்.கொங்கு வாழ்வினை தளமாக கொண்ட இலக்கிய படைப்புகளை அறிமுகப்படுத்தியதில் பெருமாள் முருகனுக்கு முக்கியப் பங்கு உண்டு.//

இந்த ஒரு காரணத்துக்காவது இந்த நாவலை வாசிக்கனும்.

வடகரை வேலன் said...

இந்த இரு நாவல்களையும் ஒரே நேரத்தில் படித்து நானும் நொந்திருக்கிறேன்.

நீங்கள் சொல்லியபடி, பெருமாள் முருகன் வட்டார வழக்கில் எழுதினாலும் இவ்வளவு அப்பட்டமாக எழுதவில்லை. அவரது சமீபத்திய நாவல் ’கங்கணம்’ ஓரளவுக்குப் பரவாயில்லை.

வா மு கோமுவின் குட்டிப் பிசாசு கதையை படித்திருகிறீர்களா? இந்த நாவலின் சுருக்கம் போலத்தான் இருக்கும்.

ஆனால் நாவலில் அவர் எழுதிவாறேதானிருக்கிறது மாதாரிகளின் வாழ்வு. முகத்தில் அறையும் விதமாக எழுதியிருப்பது ஆரம்பத்தில் ஆச்சரியமாகவும் போகப் போக அயர்ச்சியாகவும் இருப்பது உண்மை.

ஆனால் இதனுடன் ஒப்பிடும் போது சோ.தர்மனின் தூர்வை சுமாருக்கும் ரெம்பக் கீழ். நம்ப முடியாத பாத்திரப் படைப்புகளும், சம்பவங்களும் ஒட்டவேயில்லை.

Saravana Kumar MSK said...

நெறைய புத்தங்களை படிகறீங்க.. கொஞ்சம் பொறாமையாய் தான் இருக்கு..
கள்ளி நாவல் அறிமுகத்திற்கு நன்றி.

அடுத்தவாரம்தான் நான் நகுலன் நாவல் தொகுப்பு வாங்கலாம் என்று இருக்கிறேன்.

அய்யனார் said...

பாண்டித்துரை கடைசி அத்தியாயத்தின் அபத்தத்தை தவிர்த்திருக்கலாம்தான்..நெடுங்குருதி வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

நன்றி மயில்வண்ணன்..

உமாசக்தி மண்பூதம் வாசிக்கவில்லை.பெண்களுக்கு இவர் எழுத்து பிடிக்காமல் போவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை :)

அய்யனார் said...

லேகா
கே.எஸ் படங்களோடு ஒப்பிடும் உங்கள் தமிழ்சினிமா பார்வை வியக்க வைக்கிறது :D

அனுஜன்யா
கட்டுக்கடங்கா காமம் என்பதை ஒரு இலக்கிய உடைப்பாய் அணுக முயற்சிப்பது வரவேற்கத் தகுந்தது.அதை வலிந்து திணிப்பதே எரிச்சலை வரவழைக்க கூடியது.க.கா இல்லாத பல படைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.யுகத்தினை புரட்டிபோடும் எழுத்தாளக் குஞ்சுகளாலேயே இத்தவறான அணுகுமுறை இவ்வாறாக ஆகிவிட்டது.

அய்யனார் said...

கார்த்திக் உங்கள் வட்டாரமொழி என்பதால் உங்களுக்கு இந்நாவல் மிக நெருக்கமாக இருக்கலாம்.

வேலன்
நம்பமுடியாத படைப்பாக்கங்களை விளிம்பு சார் மொழியாக பிரதானப்படுத்துகையில் ஏற்படும் அயர்ச்சியை தவிர்க்க முடியவில்லை.கூகை குறித்து தட்டையாய் விமர்சித்தோமோ என்கிற உறுத்தல் எழுந்தது.உங்களின் பார்வையும் ஒத்திருப்பதால் நன்றி

வெங்கடாசலம் said...

கூகை நாவல் பற்றிய உங்கள் புரிதல் தவறென்றே நினைக்கிறேன். ஆதிக்க சாதி இந்துக்கள் பிராமணர்களைக் காட்டிலும் பயங்கரமானவர்கள் என்பதை இதை விட சிறந்த மொழியில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

சுகுணாதிவாகர் said...

/புனைவிலக்கியத்தில் சாருவின் சாதனைகள் எல்லாம் மேல்தட்டு/நடுத்தர வர்க்கத்து போர்னோ மாதிரிகள் மட்டுமே/

இப்படியெல்லாம் பொத்தாம்பொதுவாக சாருவின் எழுத்துக்களை மதிப்பிட்டு விட முடியாது என்றே கருதுகிறேன். சாரு தமிழ்ச்சூழலில் ஒரு முக்கியமான எழுத்தாளர்.

அய்யனார் said...

வெங்கடாசலம்

தலித் எழுத்து என்கிற அடையாளத்தை முன் நிறுத்தும் எழுத்துக்களுக்கான அடிப்படை தேவை பிரம்மாண்டங்களிலிருந்து வெளிவருவதே..நேரடி மொழி அல்லது மிகச்சரியான வட்டார மொழியில் எழுதப்படுவதே என்னளவில் சிறந்த படைப்பாக இருக்க முடியும்..

கூகை பக்கம்:22 இதை வாசித்துப் பாருங்கள் அடைப்புகுறிகளுக்குள்ளாய் தத்துவ விசாரங்களை வேறு நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்..(விழுதுகள் சடையென்றால் தலையெது?மரமே தலையா?தலையே மரமா)இதைப் படிக்கும்போது பற்றிக்கொண்டு வந்தது எனக்கு ஆதிக்க சாதியினருக்கு எதிரான ஒரு இலக்கியத்திலும் ஏன் ஆதிக்க சாதி எழுத்து நடை?.. அடுத்த பத்தியை படித்துப் பாருங்கள் இதை விட கொடுமையாக இருக்கும்...

இயல்பு வாழ்வை பிரதிபலிக்க வேண்டிய படைப்புகள் மிகப்படுத்தபட்ட கற்பனைகள் கொண்டிருந்தாலும் அவற்றினோடு என்னால் ஒட்ட முடியவில்லை..

மற்றபடி இப்படைப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் மகிழ்வே...

அய்யனார் said...

சுகுணா..

சாருவை இங்கே விமர்சித்திருப்பது அவரின் வாரிசு அரசியலை முன் வைத்தே..அவரின் வாரிசாக அறிவிக்கப்பட்ட வா.மு.கோமு புனைவு சார் உடைப்புகளில் முதல் படைப்பில் தொட்டிருப்பதே மிகவும் காத்திரமான ஒரு தளம்.இன்றளவிளும் சாரு தொட்டிராத ஒரு தளமாகவும் இருக்கிறது.ராஸலீலாவும் ஜீரோ டிகிரியும் மேல்தட்டு மற்றும் நடுத்தரவர்க்கத்தோடு தன் எல்லைகளை குறுக்கிக் கொண்டு விடுகிறது.ஆனால் கோமுவின் தளம் விளிம்பிலிருந்தே தொடங்குகிறது.

புனைவு என்கிற புள்ளியில் சாருவின் பங்களிப்பை குறித்தே எனது விமர்சனமிருந்தது.

நிலாரசிகன் said...

வா.மு.கோமுவின் சிறுகதை தொகுப்பான "அழுவாச்சி வருதுங் சாமி"யும் மண்பூதமும் படித்திருக்கிறேன். படிக்க வேண்டிய லிஸ்டில் கள்ளி இருக்கிறது.

சமீபத்தில் உயிர்மையில் வெளியான "சின்னபாப்பா குட்டிசரிதை" க்கு பின்னாலிருக்கும் வலி அதை ஒரு மிகச்சிறந்த சிறுகதையாக எண்ணத்தோன்றியது.

அதற்கு சம்பந்தமே இல்லாததுபோல் அமைந்திருந்தது இம்மாத உயிர்மையில் வெளியான அவரது கவிதைகள்.

நல்லதொரு விமர்சனம் அய்ஸ்.

தமிழ்நதி said...

"பெண்ணியவாதிகள் கண்ணில் பட்டதா எனத் தெரியவில்லை.பெண்மைத் தனங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கியிருக்கிறார்."

எனக்கு இது புரியவேயில்லை அய்யனார். 'பெண்மைத்தனங்கள்'என்றால் என்ன? :)

அய்யனார் said...

நன்றி நிலா ரசிகன்

தமிழ் ஒரு ஆணாதிக்கவாதியிடம் கேட்கிற கேள்வியா இது :)

Karthikeyan G said...

Hi.. "INIYA UDHAYAM" november Magazine has Mr.Komu's detailed interview.. Very intresting..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/ராஸலீலாவும் ஜீரோ டிகிரியும் மேல்தட்டு மற்றும் நடுத்தரவர்க்கத்தோடு தன் எல்லைகளை குறுக்கிக் கொண்டு விடுகிறது/

அப்படியா? நல்ல கண்டுபிடிப்பு :))

Karthikeyan G said...

"INIYA UDHAYAM" november Magazine has Mr.Komu's detailed interview

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=௩௧௬

...


Post Comment

செவ்வாய், மே 04, 2010

யதார்த்த சினிமாக்களின் வருகை

Monday, April 26, 2010


ஒரு விஜய்யோ ஒரு அஜித்தோ அல்லங்கேல் ஒரு
சிம்புவோ ஒரு தனுஷ்ஷோ, இன்னும் சில தோக்களோ,
வோக்களோ சோக்களோ நடிக்கவே முடியாத நடித்தாலும் குப்பையாய் போய் விடக்கூடிய யதார்த்த படங்களின் வரவு தமிழ்சினிமாவை பிரம்மாண்டங்களில் இருந்து மீட்டு வளர்த்தெடுக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது தான். பருத்திவீரன், வெண்ணிலா கபடிக்குழு, சுப்பிரமணியபுரம், வைகை என்று மிக மெதுவாய் காலடி வைத்த இந்தப் போக்கு இன்னமும் மந்த நிலையில் தான் நுழைகின்றன என்று சொன்னாலும் அது மிகையாகாது.


யதார்த்தப் படங்களில் கிராபிக்ஸ் கலக்கல்கள் தேவையில்லை. செலவீனங்கள் குறைவு. நகரங்களில் முப்பது நாட்கள் ஓடினாலே வெற்றி. நான் கடவுள் தோற்றுப் போனதற்கு காரணம் அதன் நாயக பிம்பம் தான். அநீதிகள் அழிக்கப்பட வேண்டும் என்பது எம்ஜிஆர் பார்முலா. எப்பேர்பட்ட விஷப்பூச்சியாக இருந்தாலும், அது வெளிக்கிரக ஜந்துவாக இருந்தாலும் மனிதனால் வெற்றி கொள்ள முடியாத சமாச்சாரம் அல்ல என்பது அங்கிலத் திரைப்படங்களின் பார்முலா.

ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் பாடல்களின் ரசிகனாய் இருந்த எனக்கு இன்று கிம்கிடுக் என்கிற கொரிய மொழி இயக்குனரின் படங்கள்தான் பிடிக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவரின் படங்கள் கொரியாவில் மூன்று நாட்கள் தான் ஓடும் என்பது அதைவிட ஆச்சரியம். எனது வாலன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.மொழி புரியாத படங்களை பார்பதில் தான் அவனுக்கு ஆர்வம்.’தி வே ஹோம்’லிருந்து ‘இன்னோசண்ட் வாய்சஸ்’ வரை பார்க்கிறான்.இரவு பனிரெண்டு மணி என்றாலும் தூங்காமல் பார்ப்பவனுக்கு தமிழ்படம் புதுசு என்று பார்க்கச் சொன்னால் ‘போப்பா’ என்று தூங்கச் சென்றுவிடுகிறான்.அந்த திருநீறு பூசாத கிறுஸ்துவ பையன் விஜய் நடித்த படம் சன் டீவியில் டமீர் டுமீர் என்று விளம்பரம் ஓடுவதால் அந்தப் பையனின் படம் என்றால் அரை மணிநேரம் பார்ப்பான்...பார்த்துக் கொண்டிருக்கிறானா என்று எட்டிப் பார்த்தால் தூங்கியிருப்பான்.நல்ல விமர்சனம்.


அண்ணா நீ எழுதுற மாதிரிதான் அங்காடித் தெருவுல கதாநாயகி பேசினாள் என்றான் தம்பி. இதென்றா வம்பு?’உள்ளார கூட்டிப் போய் அண்ணாச்சி என் மாரைப் பிசைஞ்சான்’ அப்படின்னு நாயகனிடம் சொல்றா! ’ஏலே தம்பி என்னலே சொல்றே? அப்படியாகலே அந்தப் பொண்ணு சொல்லுச்சு? ஏ நடவே சட்டுனு போயி அந்தப் படத்தைப் பார்ப்போம்”, என்று முதலாக பெண்டிங் வைத்திருந்த ‘அவள் பெயர் தமிழரசி’ படம் பார்த்தேன்.

படம் ஓடத்துவங்கிய ஆரம்ப காட்சிகளிலேயே பழைய நினைவுகளை அது கிளறிவிட்டது! வாய்பபாடியில் நான் தோல் பொம்மையாட்டத்தை பார்த்த காலம் 1978. ராமாயணம் தான். ராமன், லெட்சுமணன் இருவரும் விடும் அம்புகள் எதிராளிகளின் நெஞ்சில் பாய்கின்றன. டக்கு டக்கு, டக்கு டக்கு டக். இரண்டு மரக்கட்டைகளை அடித்து ஒலி எழுப்புவது.அனுமன் இலங்கை நோக்கி வானில் பறக்கையில் பிண்ணனி நீலம், சிவப்பு,மஞ்சள் பல்புகள் மாறி மாறி ஒளிவிடுகின்றன. ஒளி நின்று வழக்கமான வெள்ளி நிற ஒளி வந்ததும் அனுமன் இலங்கையில் நிற்பான். அனுமனுக்காகவும் , ராமன், லட்சுமணன்,ராவணனுக்காகவும் டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் ஒரே ஆள்.


பள்ளிக்கூடம் சென்று வந்ததும் பொறுப்பாய் படிப்பு. ஏழு முப்பதிற்கு ரெக்கார்டு போட்டு விடுவார்கள். அப்பாவிடம் சில்லறை வாங்கி ஓட்டம் தான். அதிசயம் ஒருநாளும் கோபித்துக் கொள்ளாமல் ஐம்பது பைசா சொடுத்தார். நண்பர்கள் நாங்கள் மொன்னையன், சொட்டையன் தமாஸ் காட்சிகளுக்காகத்தான் காத்திருப்போம். என் பத்து பைசாவை கொடுடா மொன்னை வக்காலி! தோல் பொம்மலாட்டம் முடியும் வரை மொன்னையனிடம் சொட்டயன் கொடுத்த பத்து பைசாவை வாங்க முடியவில்லை. பத்து நாட்கள் தொடர்ந்து தூக்கம் கெட்டு பார்த்தால் எனக்கு ஆசன வாய் துவாரத்தில் மூன்று நாட்கள் பின்னர் வர்ணம் வர்ணமாக கழிவுகள் வெளியேறியது கூட நடந்தது.


படத்தில் சொன்னது போலவே அந்தக்கலை அழிந்துவிட்டதுதான். ஆனால் புதியனவற்றை வரவேற்கும் நாம் ஒரு கலை சாவதற்காக வருத்தமே படக்கூடாது.ஏலே! நாங்களும் ஈக்கு மாரு குச்சியால பொம்மை ஒட்டி ஆட்டியிருக்கம்பி! ஏலா சும்மா அதை ஆட்டிக்கிட்டே இருக்கமுடியாமாலே! ஒரு விசயம் உண்மைதான். தோல் கூத்து முடிந்த நாள் மழை வந்தது! மழை வரும் என்று சொன்னார்கள்! அண்ணன்மார் கதையை கூத்து கட்டி ஆடினார்கள்.உள்ளூர் ஆட்கள் கூட படுகள நிகழ்ச்சிக்காக விரதமிருந்து கலந்து கொண்டார்கள்.கூத்து முடிந்த நாள் மழை வந்தது!


கூத்து முடியும் வரை பெண் வேடமிட்ட ஆணுக்கு உள்ளூர் பென்கள் சேலை கட்டி விட்டார்கள்.அவனை நிசமாகவே காதலித்தார்கள்.அவன் கூடவே சிலர் படுத்தார்கள்.அவன் மீது காதலாய் திரிந்தார்கள்.அவனுடன் கூடவே ஊர் ஊராக போகவும் ஆசைப்பாட்டார்கள். கூடவே சென்று வேறு ஊர்பெண்கள் மீது அவன் மையல் கொண்டு விடாமல் இருக்க,தான் மட்டுமே அவனிடம் நொட்டிக் கொள்ள ஆசைப்பட்ட பிசாசுகள் இன்று ஒன்றுமே நடவாதது போல் ஊருக்குள் திரிகின்றன.


தமிழரசி சின்னப்பெண். தோல்பொம்மை கூத்துக்காரப்பெண்.அவள் மீது பிரியமாய்த் திரிகிறான் நாயகன். உள்ளூரிலேயே அவர்கள் தங்கிவிட ஏற்பாடு செய்கிறான். பசங்க படம் வந்தபிறகு தான் இப்படி சிறுவர்களை வைத்து ரீல் நகர்த்தும் வேலையை இயக்குனர்கள் தைரியமாய் செய்கிறார்கள்.கதாநாயகி பாஸாகி பாஸாகி படிக்கிறாள்.நாயகன் பெயில் ஆகிவிடுகிறான். கண்டிப்பாக இதுதான் யதார்த்தம்.ஆனால் இதுவரை நாம் பாஸாகி மெடல் குத்திக் கொள்ளும் நாயகர்களைத் தான் திரையில் பார்த்திருக்கிறோம்.ஸ்டேட் பர்ஸ்ட் என்று வேறு நம் காதில் வாழைப்பூவையே சொருகுவார்கள்.


நண்பர்கள் கருத்துப்படி எங்கே நாயகி நைசாக நழுவி விடுவாளோ என்று நாயகன் நாயகியை பலாத் பண்ணி விடுகிறான். அவளின் படிப்பு கெடுகிறது. அவள் அம்மா தூக்கில் தொங்குகிறாள் ... நாயகி மகாராஸ்டிரா போகிறாள்.நாயகன் தேடிப் போகிறான் ... ஐய்யோடா சாமி! போதும்டா என்றாகி விடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு முன்பே முடிந்து போன யதார்த்த திரைப்படம் வழக்கமான திரைப்பட காட்சிகளுக்கு தாவி ஓடுகிறது! வழக்கம் போல நம்மை நோகடித்து தியேட்டரை விட்டு அனுப்புகிறது!


அடுத்ததாக துணிக்கடை சேல்ஸ்மேன் தான் கதாநாயகன் என்று பலராலும் எழுதப்பட்ட,
பேசப்பட்ட படம் அங்காடித்தெரு.கிரிக்கெட் ஆடுவதற்காக சைக்கிள் டியூப்பை ரப்பர் பேண்ட் போல வெட்டி பந்து தயாரித்து ஆடுவது வழக்கமே! திரையில் முதலாக வருகிறது! அதில் அடிபட்டால் எப்படி வலிக்கும் என்பது அடியேனுக்கு தெரியும். வலி உயிர் போய் வரும்.எல்லாம் பந்து வாங்க காசில்லா கொடுமையால் வரும் வினைதான். வாத்தியாரிடமோ, அப்பாவிடமோ பெயில் ஆகி அடிதின்று படித்தால் தான் படிப்பு ஏறும். உள்ளூர் தெருவில் ஒரு கேரக்டர் அடிதின்று வெட்கப்படுகின்றது பெய்ல் ஆகி! நகரம் நோக்கி குடும்ப சூழல் காரணமாக விளையாட்டுத் தனங்களை விட்டு

திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு படையெடுத்து வரும் வெளியூர் ஆட்களின் கதிகள் இப்படித்தான். ஒரே குடோனில் அடைந்து கிடக்க வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் கம்பெனியிலேயே வெள்ளை நிற வில்லைகள் கொத்தாய் எடுத்து நீட்டும். ஆண்களுக்கு பிரச்சனை அவ்வளவு இல்லை! பெண்களுக்குத்தான்!நல்லவேளைடா கோமகா!இந்த ஜென்மத்தில் நீ ஆண்!உனக்கு மார் இல்லை பிசைய! அடுத்த ஜென்மத்தில் எனக்கு கரையானாக பிறப்பு இருக்கிறது! என் தந்தை காக்காய் இப்போது! என் தாத்தா உடும்பாகி விட்டார்.எனது அப்பிச்சி கடவுளாகி விட்டார்.


சூர்யா என்கிற நடிகரை ’அயன்’ என்கிற திரைப்படத்தில் கண்டு பிரமித்தேன். என்ன ஒரு குறுகிய வளர்ச்சி! அதை விட பிரமிப்பு தமன்னா! நெஞ்சே நெஞ்சே நீ எங்கே!நானும் அங்கே! பக்கத்திலிருந்த காதலியிடம் சொன்னேன். “ரொம்ப அட்டகாம்டி!” அவள் ஏற்கனவே ‘உன்னாலே உன்னாலே’ படம்பார்த்த போது சொன்னாள். இப்புடி ஒரு படம் பார்த்துட்டோம் நம்ம லைஃப்ல! இனி ரெண்டு பேரும் போய் மருந்து குடித்து செத்துடலாம் .... என்னா படம்! என்றாள். ஆனால் ஜீவா தான் செத்துப் போனார். இப்போது ஜீவா இல்லை. சாகலாம் என்று சொன்ன காதலியும் வேறு காதலனைத் தேடிக் கொண்டாள். அனாதையாயாகத் தான் அங்காடித்தெருவை பார்க்க கடவுள் என்னை நிர்பந்தப்படுத்தி விட்டார். ஆனால் அங்காடித்தெருவை காதலியின் துணையின்றி தனியாக பார்ப்பவன் நிச்சயம் பாவம் செய்தவன் தான்.


பேப்பர் செய்தி போல சாலையோரத்தில்
தூங்கும் மனிதர்கள் மீது டாட்டா சுமோ ஏறிப்போகிறது! நாயகிக்கு கால் போகிறது என்று மன நிம்மதியோடு வீடு செல்ல ஒருவரையும் இந்தப்படம் விட்டுவைப்பதில்லை! யதார்த்த படங்கள் வருவது நல்லது தான். ஆனால் இவைகள் எல்லாமே மிகை யதார்த்தப் படங்கள்! சினிமா சினிமாவாகவே இருக்க வேண்டும் என்பதால் வரும் பிரச்சனை!இவைதான் கேலிக்கூத்து! அங்காடித்தெருவில் முக்கியமான காமெடி இருக்கிறது!அது துணிக்கடை விளம்பர படத்திற்கு நடிக்க வரும் சிநேகாவும்! அவரது நடிப்பும்!அந்தப் பாடல் அதைவிட தமாஸ்! நினைத்துப் பாருங்கள் சூர்யா சேல்ஸ் மேனாக இதில் நடித்திருந்தால்? பயங்கரம்தான்!!

.. ..........

Post Comment