புதன், செப்டம்பர் 22, 2010

சொற்கப்பல் தக்கை கடைசிப் பதிவு

வீடியோ லிங்க் :http://www.youtube.com/watch?v=Z5YooZlxXAY

லைலா புயல் மையம்கொண்டிருந்த காலையில் மின்சாரம் தடைப்பட்டுவிடுமோ என்ற அச்சுறுத்தலுடன் இந்தக் கட்டுரையை மனதுக்குள் மழை நிரம்ப எழுதத் தலைப்படுகிறேன். சேலத்தில் கடைசிப்பொழுதில் தொக்கி நின்றபோது வாமுகோமுவின் காமக்கதை குறித்தும் தமிழ்மகனின் வெட்டுப்புலி குறித்தும் பேசும் முறை வந்தது. இவ்விசயங்களை பேசுபவர்களின் பட்டியலை நான் நடந்ததுமாதிரியாய்ப் பதிவுசெய்யவில்லை. அவர்கள் பேசியது அனைத்தையும் எழுதவுமில்லை. என்ன காதில் விழுந்ததோ அதை மட்டுமே எழுதியுள்ளேன். அதற்குக் காரணம் சிலர் எழுதிவந்து சுதியில்லாமல் கடகடவென்று எவ்வித உணர்ச்சி பெருக்குமற்று கடமையைச் வெகு சிறப்பாக செய்ததுதான் என்று சொல்லவேண்டும். ஒரு படைப்பைப் படித்து அது மோசமானது சிறப்பானதோ அதை உண்மையான உள் உணர்ச்சிகளிலிருந்து பேசியிருக்க வேண்டும். கவிஞர் நேசன் அவ்வாறு பேசினாரென்றால் அது மிகையாகாது.

மூளைப்பதிவுகள் அவ்வளவு நேர்த்தியானதாக அமையவில்லை என நினைக்கிறேன். பேசியவர்களின் வரிசைமுறையை கலைத்துப்போட்டிருக்கிறேன்.

வாமுகோமுவின் காமமும் காதலும் ஊற்றெடுத்த நீண்ட கதையைக் கடைசியாய் எழுதவேண்டுமென்று தோன்றியது. கோமு நல்ல சிறுகதைகளும் நல்லாயில்லாத சிறுகதைகளும் எழுதியிருக்கிறார் என்கிறார்கள். ....... மையில் வந்த சிறுகதையொன்றைத்தான் நீண்ட கதையாகத் திரித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அது சிறுகதையாக இருந்தபோது நன்றாக இருந்ததாகவும் நீண்ட கதையாக மாற்றப்பட்டபோது வெறும் காமச்சரக்காய் மட்டுமே மாறிவிட்டதாயும் ஒரு நண்பன் சொல்லக் கேள்விப்பட்டேன். அந்தப் பதிப்பகத்தாரும் எழுத்தாளரும் ஒன்று கூடி அமர்ந்து சின்னக்கதையைப் பேசிப் பேசி பெரிதாக ஊதினார்களென்றும் கூறுகிறார்கள். அமோக விற்பனையை மட்டுமே ஒரு சில பதிப்பாளர்கள் மனதில் ஆழப்பதித்துக்கொண்டு ஆபாசங்களை நூல்களின் வாயிலாய் அள்ளி இறைக்கின்றார்கள். ஆபாசம் மட்டுமே இலக்கியமாகிவிடாதென்று தெரிந்திருந்தும் இலக்கியமென்ற பெயரில் பொறுப்பற்ற நெறியற்ற செயல்களை செய்வதில் அவர்களுக்கு அளப்பரிய ஆனந்தம் கிடைக்கின்றதுபோலும். சந்தோச வானில் நீந்திக் களிக்கட்டும்.

தக்கையின் ஆசிரியர் சாகிப் கிரான் வாமுகோமுவின் நாவலைப் பற்றி சத்தமற்ற குரலில் படித்தார். அவர் பேசியதைவிட கவிஞர் தமிழ்நதியும் எழுத்தாளர் சந்திராவும் வாமுவின் பெண்களை விகாரப்படுத்தும் அந்த நாவலை நாவலே இல்லையெனவும் பெண்கள் மட்டுமே காமத்திற்காய் அலைவதாய்ச் சித்தரித்து பெண்களைக் கொச்சைப்படுத்திவிட்டாரெனவும் அதிக சூட்டில் கொத்திதெழுந்த நீராவியின் மூடியைப் போல ஆகி அமைதியடைந்தார்கள் குளிர்ந்த காற்று பட்டதும். வாமு முன்வரிசையில் பாக்கைப் போட்டபடி நிதானமாய் உள்ளுக்குள் புகைந்தவராய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படியெல்லாம் புகைந்தாரோ இல்லை புகைவில்லையோ தெரியாது. சின்ன கலக்கமிருந்திருக்கலாமில்லையா

தமிழ்நதி மேடையின் முன் நின்று நாவலின் ஊடாய் வரும் கதாபாத்திரங்களை விவரித்து அப்படி எப்படி ஒரு பெண்ணிருப்பாளென்று கேட்டார். இதெல்லாம் அதிகப்படியானதென்றார். சந்திராவும் இது வெற்று போர்னோ இலக்கியமென்று அடித்துக் கத்திக் கூறினார். இப்படியே வாமுகோமு சொற்களில் பந்தாடப்பட்டார். இந்தப் பேச்சுக்கு என்ன மறுமொழி பேசுவாரென்று ஆவல் எழுந்தது. இந்தச் சத்தங்கள் ஒருவழியாய் ஒழிந்தபின் வாமு மேடைக்கு வந்து நாவலை இப்படி எழுதிக்கொண்டுவருவோமென்று அவரும் பதிப்பாளரும் முடிவுசெய்து திட்டமிட்டுக் கொண்டுவந்ததாக உண்மையைச் சொன்னார். இந்த உண்மையைச் சொல்வதில் வாமு எந்தத் தடையையும் கொண்டிருக்கவில்லையென்பது புரிந்தது.

வாமுகோமு 15 நாட்களில் ஒரு நாவலை எழுதிவிடுவதாக ஒரு இலக்கிய நண்பர் சொல்லி பொறாமைப் பட்டுக்கொண்டார் அல்லது அவரால் எழுத முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் சொன்னாராவென்று தெரியவில்லை. ஏன் இவ்வளவு அடிதடியாய் வாமு எழுதவேண்டுமென்று தெரியவில்லை. அதற்கான சிறப்புக்காரணங்கள் எதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. வாமுவிடமிருந்து இன்னும் நல்ல நாவல்களையும் சிறுகதைகளையும் நிறுத்தி நிதானமாக எதிர்பார்க்கலாம்.

படைப்பாளியை இப்படி எழுது அப்படி எழுது என்று யாரும் சொல்வதற்கில்லை. எழுதுவது எதுவாகினும் அது கலையாய் மாறவேண்டுமென்பதுதான் முக்கியமேதவிர எழுத்தாளரை கட்டளையிடும் வேளை நம்முடையதல்ல என்றே எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. எழுதி வெளியிடுவது இலக்கியமாகவில்லையெனில் அதை விமர்சித்தோ விமர்சிக்காமலோ குப்பையில் எறிந்துவிடலாம்தான். அந்த உரிமை வாசகனுக்கு உள்ளதென்பதை ஆணித்தரமாய்ச் சொல்வேன். அதைப்பற்றி எழுத்தாளன் என்ன செய்யவியலும். இலக்கியம் வரவில்லையெனில் வேறு எதாவது பணி செய்து காலத்தை கடந்து மரணத்தை அடையலாம்.

வாமு நாவலின் பெயர் கனகாம்பரமும் இன்ன பிற காதல் கதைகளும் என்று நினைக்கிறேன். சரியாய்ச் சொல்கிறேனா என்று தெரியவில்லை. தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல் பற்றி சிவராமன் கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். அதை தக்கைபாபு வாசிக்க கூட்டம் அத்துடன் முடிந்ததென்று நினைக்கிறேன். நாட்கள் ஆகிவிட்டதால் நினைவிலிந்ததை இதுவரை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

சேலத்திலிருந்து கிளம்பும் நேரம் வாய்க்கப்பெற்று தக்கைபாபுவை நச்சரித்து இரண்டு பயண இருக்கைகளை கே.பி.என் பேருந்தில் முன்பதிவு செய்துவிட்டேன். சிவா வாடகை அறையில் அங்கங்கு இலக்கியவாதிகள் கூடி கூடி உரையாற்றிக்கொண்டிருந்தனர். நானும் பால்நிலவனும் நேசனும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானோம். பேருந்திற்குள் ஏறுவதற்கு முன் நன்றாக சாப்பிட்டோம் சாலையோர வண்டிக்கடையில். வண்டிக்கடைக்காரன் இலக்கியம் தெரியாதவன். இட்லிகளை தோசைகளைச் சுட்டு சுட்டு ஒழுங்காய் குடும்பதை ஓட்டிக்கொண்டிருக்கிறான்போலும். இலக்கியம் இந்த ஊரில் சின்ன சின்ன உதவிகள் செய்யுமே ஒழிய வாழ்வின் ஆதாரங்களை ஒரு போதும் தந்துவிடப் போவதில்லை என்பதை அறிந்தவனாகவும் இருக்கிறேன். ஆனால் அவற்றின் போதைக்குள் குதித்துவிட்ட நான் மீள்வதற்கெல்லாம் வழியொன்றமில்லையென்றே தோன்றிவிட்டது. வாழ்வோ சாவோ எழுத்தாளனாய் மரித்துவிடுவோமென்றாகிவிட்டது.


Wednesday, May 19, 2010

..

Post Comment

செவ்வாய், செப்டம்பர் 21, 2010

நாங்கள் சோம்பேறிகள்- கல்கி பேட்டி

கல்கியில் 15.03.2009 ல் வந்த பேட்டியின் தொகுப்பில் இருந்து,

எப்படி எழுத ஆரம்பித்தீர்கள் ?
குமுதம், விகடன்,கல்கி என்று படிக்க ஆரம்பித்தேன். இந்தக் காலகட்டத்தில் புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார்,அறிமுகமானார்கள்,ராஜேந்திர குமாரின் 'ஙே'வை இன்னும் மறக்க முடியவில்லை .அப்பாவின் மேஜையில் இருந்த கசடதபற , விழிகள்,தீபம்,மல்லிகை, போன்ற சிற்றிதழ்கள் என்னை எழுதிப்பார்க்கத் தூண்டின. எழுதி எழுதி எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு ' இதோ வந்துட்டேன் பார்' என 'நான் கடவுள்' ஆர்யா கைக்கு கட்டை கொடுத்து அமர்ந்திருப்பது மாதிரி வந்து அமர்ந்திருக்கிறேன்.

உங்கள் எழுத்து பாலியல் சார்ந்தே இருக்கின்றது , அதன் அவசியம் என்ன?
தாகம், பசி மாதிரி இயல்பான உணர்ச்சிதான் பாலியியலும். இயல்பான இந்த உணர்ச்சிகள் மீதுதான் சமூகத்தின் நீதி, நியதிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவை கேள்விக்கு உள்ளாக்கப்படவேண்டாமா?

பாலியல் உறவுகளை மட்டும் வைச்சுகிட்டு நீதி, நியதிகளை நிர்ணயம் செய்யக்கூடாது . வாழ்வியல் அறம் என்பதை பாலியல் உறவை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது. அதைத் தாண்டியும் பல விசயங்கள் உள்ளன. இந்த நிலை நீடிக்கற வரைக்கும் என் படைப்புகள் அப்படித்தான் இருக்கும். எதைப் புனிதம் , தூய்மை என்கிறீர்களோ அதை உடைப்பதுதான் என் வேலை,

பெண் பெயரில் பாலியல் கவிதைகள் எழுதிகிறீர்கள் . ஏன் பெண் அடையாளத்தை தேர்ந்தெடுத்தீர்கள் ...?
ஆண்கள் பாலியல் பற்றி எழுதினால் சமூகம் வரவேற்கிறது. ரசிக்கிறது. பெண் எழுதினால் ஒழுக்கம் கெட்டு விட்டதாய்ப் பேசுகிறார்கள். அதை உடைப்பதற்காகச் செய்த சிறு பணி அது. பெண் எழுத்தில் இன்னும் நிறைய போதாமைகள் இருக்கு. வெளீப்படையா " தூள் கிளப்பிட்டு வாங்களேன்" என்கிற அழைப்பாக, அந்தக் கவிதைகளை நீங்கள் பார்க்கலாம்.

சாரு நிவேதிதா தம் இலக்கிய வாரிசாக உங்களை அறிவித்தார். அவரை எப்படி திருப்திப்படுத்தினீர்கள்?
சாருதான் வாரிசென அறிவித்தார். ஆனாலும் நான் அவரோட வாரிசு அல்ல. பாலியல் சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளை உடைக்கிற பணியை அவருடைய எழுத்து செய்வதில்லை. பாலியல் வக்கிரம் மட்டும்தான் அவர் செய்வது. ஏறக்குறைய எழுத்தில் வன்புணர்ச்சி. என்னுடைய எழுத்துகள் விளிம்பு நிலை மக்களின் பாலியல் உறவுகள் சார்ந்தவை. இரண்டு பேருடைய பயணமும் வேறு வேறு பாதையில். அப்புறம் எப்படி நான் அவருடைய வாரிச்சுங்கிறது? எனக்கு இத்தனை நாள் கழிச்சும் புரியலை.

இதைவிடப் பெரிய கொடுமை சாரு நிவேதிதான்னா சூப்பர் பிகரா இருக்குமின்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தேன். என்னோட "மண் பூதம்" சிறுகதைத் தொகுதி வெளியீட்டுக்கு சென்னை வந்தப்ப " இதுதான் சாரு நிவேதிதா"ன்னு ஒரு பெரியவரைக் காட்டினாங்க. என் காதல், காமம் எல்லாம் மளார்ன்னு ஸ்பாட்டிலேயே செத்துடுச்சு. தவிர , கோமுன்னா ஏதோ மாமின்னு நெனைச்சேன்னு பெருசு என்கிட்டேசொல்ல , தானிக்கும் தீனிக்கும் சரியாப்போச்சு.

சிறு பத்திரிக்கையில் எழுதும்போதுகுறைவான நபர்களையே சென்றடைகிறது. அதிகமான வாசகப் பரப்பை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
நாங்கள் யாரும் பெரும் வாசகப் பரப்பை புறக்கணீக்கவில்லை. இயல்பாகவே நாங்கள் சோம்பேறிகள். சற்று தாமதமாக வருகிறோம். அதுவரை அந்தப் பெருவாசகப் பரப்பு காத்திருக்கட்டும்.

சிறு பத்திரிக்கையிலிருந்து திரைப்படத்துக்கு நகர்வதுதான் ஆகச் சிறந்ததென இலக்கியவாதிகள் கருதுகிறீர்களா??
இனி ஒரு கட்டட வேலைக்குப்போயி கல்லு, மண்ணு சுமந்து என் வீட்டு அங்கத்தினர்களுக்கு புவ்வா போட முடியாது. படைப்பு எழுதியும் புவ்வாக்கு வழி பண்ண முடியலை. மண்டையில் கொஞ்சூண்டு விசயம் இருந்தாப்போதும். யார் வேணாலும் திரைப்படத்துறைக்கு போயி புவ்வாக்கு வழி பண்ணிட‌முடியும். அதனால திரைப்படம் நோக்கி நகர்வதுதான் ஆகச்சிறந்த, எளிய வழி.

பேட்டி ஜானகிராமன்
நன்றி -கல்கி 15.03.2009.

..

Post Comment