புதன், டிசம்பர் 28, 2011

கவிதை

என் முதல் கவிதைகள்
ஒரு குயர் ரூல்டு நோட்டில்
எழுதித் தீர்க்கப்பட்டபின்
முதல் காதலிக்கு சமர்ப்பணம்
செய்து அவளிடமே நீட்டிவிட்டேன்

என் இரண்டாம்கட்ட கவிதைகள்
ஒரு குயர் அன்ரூல்டு நோட்டில்
எழுதித் தீர்க்கப்பட்டபின்
இரண்டாம் காதலிக்கு சமர்ப்பணம்
செய்து அவளிடமே நீட்டி விட்டேன்,

பிறகு நான்
கவிதை எழுதுவதையும்
விட்டொழிந்து விட்டேன்.

மனைவி வந்த பிறகு
தக்கோளி 1 கிலோ,புளி,
உளுந்தம்பருப்பு,துவரை அரைகிலோ
அஸ்கா ஒரு பாக்கெட் என‌
வெற்றுத்தாள்களில் எனக்கு
கவிதையாய் எழுதி நீட்டுகிறாள்.
வாழ்க்கை கவிதையாய் நகருகிறது.

"உங்கள் காதலிகள் மீது ஏதேனும்
வருத்தங்களுண்டா? என்று
அன்றொரு நாள் கேட்டாள்.
வருத்தம் அவர்கள் மீதல்ல எனக்கு
அந்த ஒரு குயர்
நோட்டுகளின் மீதுதான் என்றேன்.

எனக்கு எப்போது எழுதுவீர்கள்? என்றாள்.
வயிறு உனக்கு புடைக்கிறதே
தெரியவில்லையா? அதுதான்
உனக்கான என் கவிதை,என்றேன்.


***************

.

Post Comment

வெள்ளி, டிசம்பர் 16, 2011

வெளியீடுகள்வாமுகோமுவின் இரண்டு நாவல்கள் சென்னை அண்ணாசாலையில் உள்ள,மாவட்ட மைய நூலகம், எல் எல் எ கட்டிடத்தில் ஜனவரி முதல் தேதி,உயிர்மை பதிப்பகத்தினரால் வெளியிடப்படுகிறது..

1.எடறா வண்டியை

2.மங்கலத்து தேவதைகள்...


தோழர் சில குறிப்புகள் விரைவில்.......


..********

Post Comment

செவ்வாய், அக்டோபர் 11, 2011

வாமு கோமு: ஆனந்தவிகடன் தீபாவளி மலர்- 2011

வாமு கோமு: ஆனந்தவிகடன் தீபாவளி மலர்- 2011: இந்த வருட ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வாமுகோமுவின் "இது உங்கள் காதல் கதை" வந்துள்ளது. தீபாவளி மலரின் விலை ரூ 120/

........................

Post Comment

ஆனந்தவிகடன் தீபாவளி மலர்- 2011

இந்த வருட ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வாமுகோமுவின் "இது உங்கள் காதல் கதை" வந்துள்ளது.

தீபாவளி மலரின் விலை ரூ 120/

........................................................................................................................................................................

Post Comment

புதன், செப்டம்பர் 28, 2011

குட்டிப்பிசாசு

வா.மு. கோமு

கீதா விஜயமங்கலம் பஸ் நிறுத்தத் தில் நின்றிருந்தாள். சுந்தர் திருப்பூரி லிருந்து கே.கே.சி பஸ்ஸில் தான் வருவதாகக் கூறியிருந்தான். ஆனால் இப்போதுதான் இவள் கைப்பேசிக்கு அழைத்து பஸ் ஸ்டாண்டில் கே.கே.சி நிற்கிறது என்றும் இன்னமும் வண்டியை எடுக்கவில்லை என்றும் கூறியிருந் தான். இருவரும் பெருந்துறை தேவி சித்ரா திரையரங்கில் வடிவேலின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் பார்ப்பதாகத் திட்டம் போட்டிருந் தார்கள்.
கீதா நேற்று முன் தினம்தான் ரவியுடன் அந்தப் படத்தை மதியக் காட்சி பார்த்திருந்தாள். அந்தப் படம் கீதாவிற்குச் சுத்த போர் தான். ரவிதான் இவள் விரல்களை இறுக்கமாய்த் தன் விரல்களுக்குள் பிடித்துக்கொண்டு ரசித்துப் பார்த் துக்கொண்டிருந்தான் திரை யையே! இது ஒரு பின் நவீனத்து வப்படம் என்று வேறு இவளிடம் கதையளந்தான். வடிவேல் கண் ணீர் சிந்த, அது ஓடம் போல் ஓடி தேங்கிய குட்டையில் எல்லோ ரும் நீச்சலடிப்பதை நவீனம் நவீ னம் என்றான். இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு முத்தம்கூடத் தராதவனுடன் சினிமா பார்ப்பது படுபோர். அதைவிடப் படமும் படுபோர். ரவியுடன் சினிமா பார்ப்பது இதுவே கடைசி என்று மனதில் முடிவெடுத்தாள்.
சுந்தருக்கோ சொன்னால் புரிய மாட்டேன் என்கிறது. அதே படத் தைத்தான் பார்த்தே ஆக வேண் டும் என்று பிடிவாதம் பிடிக் கிறான். என்னை விட்டுட்டு யாரோட போயி படம் பார்த்தே? என்று கடுப்படிக்கிறான். என் னோட ப்ரண்டு வசுமதிகூடப் போனேன் என்று சுந்தருக்குச் சொல்ல வேண்டி இருந்தது. சுந்தரும் ரவியைப் போலத்தான். என்ன கைவிரல்களைப் பிடிக்கா மல் உரிமையோடு தோளில் கை போட்டுக்கொண்டு படம் பார்ப் பான். பார்த்த படத்தையே யார் பார்ப்பது? பேசாமல் அவன் தோளில் சாய்ந்து தூங்க முயற்சிக்க லாம். ஆயிரம் ப்ளீஸ் போட்டா லும் வேறு படம் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். கீதாக் குட்டி மேடம் சொன்னால் சரி என்று இந்த சுந்தர் சொல்லியே ஆக வேண்டும். வேண்டும் என்றே இவனை இரண்டு முறை இவன் கூப்பிடுகையில் தட்டிக்கழித்தால் தான் இவன் சரிப்பட்டு வருவான். அதே சமயம் கீதாவின் கைப்பேசி அலறவும் எடுத்து ஹலோ என்றாள்.
“யாரு கீதுவா? நான் சுரேஸ் பேசுறேன். . . நல்லா இருக்கியா?”
“அண்ணா சொல்லுங் கண்ணா. . . இப்பத்தான் உங்களை நெனைச்சேன். . .”
“மாலுவப் பாத்தியாம்மா? கம் பெனிக்கு ஒழுக்கமா வேலைக்கு வர்றளா? அவ நெம்பருக்குக் கூப் பிட்டேன். . . சுவிட்ச் ஆப் அப்ப டின்னே சொல்லுது. . .என் மேல கோபமோ. . .?”
“அண்ணா அவ பாவம்னா. . . பேசாம இங்கேயே நீங்க கட்டிங் மாஸ்டராவே வேலை செஞ்சிட்டு இருந்திருக்கலாம். மேனேஜர் பேசு னதுக்குக் கோவிச்சுக்கிட்டு நின் னுட்டீங்க. . . இப்ப எந்த கம்பெ னில நீங்க வேலை செய்யறீங்க?”
“வேலையா? நான் தஞ்சாவூர்ல இருக்கேன்டி. . . அப்பா அம்மாவ பார்த்துட்டு போலாம்னு வந்தேன். இங்க தோட்டத்துலதான் பத்து நாளா வேலை. . . அப்பாக்கு ஒடம்பு செரியில்லை. . .”
“அண்ணா என்னண்ணா திடீர்னு குண்டு போடறீங்க. . . ஊருக்குப் போயிட்டீங்களா? மாலினிக்குத் தெரியுமா. என்கிட்ட சொல்லவே இல்ல. எப்பிடி அழறா தெரியுமாண்ணா அவ. . . ம் ஆம் பளைங்களை நம்பி புள்ளைங்க நாங்கதான் என்னேரமும் ஏங்கி அழணும் சரி. . . எப்பண்ணா வர்றீங்க?”
“இன்னம் பத்து நாள் ஆகும் கீது. . . வந்த ஓடனே உங்க வீட் டுக்கு வர்றேன். உன் அப்பா, அம்மா, தங்கச்சி நல்லா இருக் காங்ளா?”
“நீங்க கேட்டதா சொல்லிட றேன். . . போதுமா. . .”
“அப்படியே ஊட்டி போயி என் நண்பனைப் பார்க்கறோம்.”
“ஐயோ நான் வர்ல சாமி.”
“ஏண்டி. வரமாட்டீங்றே? அன் னிக்கு மாதிரி இல்ல. . . நிதானமா பண்ணிக்கலாம்.”
“ஐயோ நான் வர்லண்ணா. சேர்ந்தே ஒட்டுக்கா ஷவர்ல குளிப் போம்னுவீங்க. . . வேணா ஒண்ணு பண்றேன். மாலினிகிட்ட சொல் றேன். கல்யாணம் பண்ணிக்கப் போறவீங்க நீங்க ரெண்டுபேர் மட்டும் போங்க. . .”
“சரி உங்கொப்பா சொன்ன மாதிரி உனக்கு மாப்பிள்ளை பார்த்து இங்க ரெண்டு ஜாதகம் வாங்கி வெச்சிருக்கேன்.”
“ஐயோ இப்ப எனக்குக் கல் யாணமே வேண்டாம். . . நீங்க ஜாதகம் கொண்டாந்தாலும் வேஸ்ட்.”
“ஏண்டி, வயசு உனக்கு இரு பத்தி மூணு ஆச்சில்ல. . . இன்னம் ரெண்டு வருசம் போனா அரைக் கிழவி ஆயிடுவே பான்பராக் மென்னு மென்னு உன் பல் எல்லாம் காரை.”
“அதைச் சரிப்பண்ணி பளீர்னு வெள்ளையா இருக்கறதுக்குத்தான் எங்க ஊர் ப்ரெண்டைக் கூப்புடு றேன், கூப்புடுறேன் போனை எடுக்கமாட்டீங்றாப்ல. என்ன கோபம் என் மேலயின்னு தெரியல தடிமாடு. . . இப்பக்கூட அடிச்சேன். என் நெம்பரை பார்த்தாவே எடுக்க மாட்டீங்றான் தடிமாடு.”
“ஒரு ரூபாய் காய்ன் போட்டு கூப்பிடவேன்டீதுதான.”
“ம். . . அந்தத் தடிமாடு 04294 அப்படின்னு பார்த்தாலும் எடுக் காது. அதா பாத்து எடுத்துச் சுன்னாதான் . . . அண்ணா . . . அந்த சிவா இருக்கான்ல. அவனோட பெருந்துறையில நின்னுட்டு இருந் ததை எங்க ஊரு வாத்தியான் கருமன் ஒருத்தன் இருக்கான்னா. . . அவன் பார்த்துட்டு போயி அது கிட்ட சொல்லிட்டான்.”
“அது அதுங்றியே. ஒரு நாள் எக்ஸ்ஸெல் சூப்பர்ல போனாரே அவரா?”
“ஆமா. . . அதுமோட பேரு பழனிச்சாமி. . . நானு கொரங் குன்னு சொல்வேன். என்னோட பேரை அதுமோட செல்லுல 1/2 கிறுக்குன்னு போட்டு வெச்சி ருக்குது. . . லொள்ளு.”
“ஏண்டி உசுரே எம்மேலதான் வச்சிருக்காப்லைன்னு சொன்னே. . கோபம் வந்தா கொரங்கு அப்பிடின்னுவியா?”
“நான் அப்புடித்தான் சொல் வேன். சரீண்ணா நீங்க வாங்க பத்து நாள்ல. . . இன்னொரு போன் வருது. யார்னு தெரியல. எங்கம் மாவா இருந்தா. சாப்புடாம ஏண்டி போனேன்னு கேக்கும். அண்ணா ஈவினிங் ஏழு மணிக்கு கூப்புடுங்ணா. ஓகே. பை”
கீதா கட் செய்துவிட்டு மிஸ்ட்டு கால் பார்த்தாள். குன்னத்தூர் ராம். சரி மறுபடியும் கூப்பிடட்டும் என்று பான்பராக் பாக்கெட்டை கிழித்து வாயில் கொட்டிக்கொண் டாள். கே.கே.சி. வருவதற்கு முக் கால் மணி நேரம் இருக்கிறது. பேசாமல் வீட்டில் சாப்பிட்டு விட்டே வந்திருக்கலாம் என்று தோன்றியது! பஸ் நிறுத்த நிழல் குடையில் இருந்த பென்ச்சில் அமர்ந்தாள். பழனிச்சாமியைக் கூப்பிடுவோம் என்று எண்ணி செல்லில் இதயம் படம் வைத் திருந்த நெம்பருக்கு ஓடீனாள். இந்த நெம்பரை இனி செல்லில் எடுத்துவிடவேண்டும். பழனிச்சாமி நெம்பர்தான் இதயத்திலேயே இருக்கிறதே. ரிங் போகிறது. ரிங் போகிறது. எட்றா. . . எடுடா. . . எடுத்துத் தொலைடா. நாயி. த்தோ கட்டே ஆயிடிச்சு. ரெண்டு மூணு நாளாவே எடுக்கவே மாட்டீங் றான் திருட்டு நாயி. என்று கீதா நினைத்தபோது ரிங் வந்தது. ஆசை யாய்ப் பழனிச்சாமிதான் திருப்பிக் கூப்பிடுகிறானோ என்று பார்த் தாள். இல்லை. குன்னத்தூர் ராம்.
“ஹலோ நான் ராம் பேசுறண்டி. ஏன் என் கல்யாணத்துக்கு வரலை. லட்சுமி கிட்டயும் சொன்னேன். ரெண்டு பேரும் வரலை.”
“வரப்பிடிக்கலை வரலை.”
“ஏண்டி கோபமா பேசுறே? என்ன ஆச்சு? அந்த மூன்று நாட் களா? அந்த சமயத்துல தான கோபமா. . . எரிச்சல் படுவீங்க.”
“ஆமா அப்படித்தான். எங்க ஊர்க்காரர்ட்ட என்ன சொன் னீங்க?”
“உங்க ஊர்க்காரர்னா யாரு. . . அந்த பழனிச்சாமின்னு சொன் னாரே அவர்கிட்டயா? ஆமா உண்மையச் சொன்னேன்.”
“என்ன உண்மை உங்களுக்குத் தெரியும்? நாலு தடவ தாலி கட்டி னவ அவன்னு சொல்லியிருக் கீங்க. . . நீங்கதான் என்னோட நாலு கல்யாணத்திலயும் தாலி எடுத்துக் குடுத்தீங்ளா? எனக்கு லட்சுமிய உங்க ஊருக்குக் கட்டிக் குடுத்ததாலதான் தெரியும். லட்சுமி எங்க ஊருக்கு வந்து ஏழு வருசம் ஆச்சு. லட்சுமிய உங்க ஊர்ல நீங்க என்ன பண்ணுனீங்க. அப்படி எதாச்சிம் நான் கேட்டனா? உங்க ஊர் பசங்களுக்கு எதுக்கு என் நெம்பரைக் குடுத்தீங்க? அவுனுக எப்பப்பாரு என்னைக் கூப்பிட்டு டார்ச்சர் பண்றானுக. . .”
“சாரி. உன் நெம்பரை நான் யாருக்கும் குடுக்கலை. உன் ஊர் பழனிச்சாமி உன் மேல கோபமா பேசினங்காட்டி, நானும் உன் மேல கோபமா இருந்தங்காட்டி சொன் னேன்.”
“அவரு கோபமா பேசினா. . . அதுக்காக கண்டதீங்கடிதீம் சொல் லணுமா? ஈவ்னிங் ஆறு மணிக்கு மேல விஜயமங்கலம் வாங்க. பேசிட்டு இருப்போம்னு கூப்பிட் டேன். அதை எல்லாம் அவர் கிட்ட, ஆறு மணிக்கு மேல அவ எதுக்குக் கூப்பிடறான்னு எனக்குத் தெரியாதான்னு சொல்லியிருக் கீங்க. . . நான் வெச்சுடறேன். இனிமே என்னை போன்ல கூப்பு டாதீங்க. யாருக்கும் என் நெம்பரை தயவு செஞ்சு குடுக்காதீங்க.”
கீதாவுக்கு மார்பு படபடத்தது! மனசு கெட்டு குட்டிச்சுவர் ஆகி விட்டது போல இருந்தது. இந்த நாய் எதுக்கு இப்போ மத்தியா னத்துல போன் பண்ணினான்? இன்னொரு பான்பராக்கைக் கிழித்து வாயில் கொட்டிக்கொண் டாள். பழனிச்சாமிக்கு மீண்டும் அடித்து அழைக்க முயற்சித்தாள். நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றது. நாயி. ஆப்பே பண்ணிப் போட்டுட் டியா? அந்தத் தொளசாப்புள்ளை ஊட்டுக்கு போயிருக்குமோ? சேச்சே. அங்கதான் போகமாட் டேன்னு சொல்லியிருக்குதே! அவ ஒரு அழகின்னு அவகிட்ட எல் லாம் எப்பிடி போச்சோ? கருமம் என்று பழனிச்சாமியைக் கரித்துக் கொட்டிக்கொண்டிருந்த போது கைப்பேசி மீண்டும் அலறியது! சென்னிமலை மூர்த்தி! ச்சை. இவன் தொல்லை வேறு. ஒருத்தன் அழகா இருக்கானேன்னு பாக்கு றது தப்பா? பார்த்தா ஒடனே காதல் வந்துடுமா?
“ஹலோ. நான் மூர்த்தி பேசு றேன்.”
“சொல்லுங்க. ஏன் இப்படிக் கத்துறீங்க? காதே அடைச்சுப் போச்சு உங்க நர்ஸ் அக்கா வீட்ல இல்ல. நான் பார்க்கவும் இல்லை!”
“நான் எங்க அக்காவைக் கேக் கவே இல்லை. நீங்க சொல்றீங்க. எங்கக்காவைப் பாக்குறதுக்கு வந்தப்பதான் உங்களைப் பார்த் தேன். நீங்க என்னைப் பார்த்தீங்க. உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கலாம்னா மாட்டேன் மாட்டேன்னே சொல் றீங்க. என்னை உங்களுக்குப் பிடிக் கலையா? இப்ப சொல்லுங்க. பிடிக்குது பிடிக்கலை ரெண்டுல ஒண்ணு. சொல்லுங்க. ப்ளீஸ். இல் லின்னா ஆறு மணிக்கு நான் கூப்பு டுறேன் அப்ப சொல்லுங்க.”
“உசுரோட இருந்தா சொல் றேன்.”
“ஐய்யோ. என்ன இப்படிச் சொல்றீங்க. ஏங்க எங்கீங்க இருக் கீங்க?”
“விஜயமங்கலத்துலதான் இருக்கேன். இப்பத்தான் டிடிட் டைக் கரைச்சுக் குடிச்சேன். கண் ணெல்லாம் இருட்டு கட்டீட்டு வருது. தறி ஓட்டறதை நிப்பாட் டிட்டு ஆறு மணிக்கு வந்து என் பொணத்தைப் பார்த்துட்டுப் போங்க. வெச்சுடறேன்.” கட் செய் ததும் இன்னொரு ரிங் வந்தது!
“ஹலோ. . . கார்த்தி இப்பத்தான் உங்களைக் கூப்பிடலாம்னு உங் களை நெனச்சிட்டு கே வரிசைக்கு போனேன். உடனே கூப்புடறீங்க. . . அதெப்படி ரெண்டு பேருமே ஒரே நேரத்துல நெனச்சிட்டோம்? அதான் சாமி இருக்குதுன்னு நம்ப ணும். நீங்க நம்பவே மாட்டீங்றீங்க. வீட்ல பிரச்சினை ஆயிடிச்சிங்க கார்த்தி. எங்க அம்மாவும், தங் கச்சியும் உங்களைச் சந்தேகப்பட றாங்க. என்னையும் சந்தேகமாவே திட்டறாங்க. கார்த்தி அண்ணான் னுதானே நீ பேசுறேன்னு கேக்க றீங்க. ஒரு அண்ணன்கூட தின மும் நைட்ல பத்து மணியில இருந்து மணிக்கணக்காவா பேசு வாங்க. அப்படிங்குது எங்கம்மா. கொஞ்சம் நாளைக்கு நைட்ல என்னைக் கூப்புடாதீங்க. ப்ளீஸ் சாரிப்பா. . .”
“பின்ன நீ எப்ப என்னைக் கூப்பிடுவே? கம்பெனிக்கு உள் ளார செல்போனை கொண்டுட் டும் போவக் கூடாது. சொல்லு.”
“நானே கூப்பிடுறேன்.”
“போடி. நீ கூப்பிடவே வேண் டாம்.”
“சாரிப்பா. சாரி சாரி சாரி.”
“சரி உன் வீட்டுக்குப் பக்கத்துல ஒரு வீடு காலியா இருக்குது வாட கைக்கு வீட்டுக்காரம்மா கிட்ட கேட்டுப் பாக்குறேன்னு சொன் னீல்ல. வீடு பார்த்தியா? இங்க ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு எனக்கு வயிறு சரியில்ல. . . டீவி வாங்கிடலாம், சாமான், செட்டுக வாங்கிடலாம். நீ என்கூட வந்து இருந்துக்க. . . நீ வேலைக்கிப் போக வேண்டாம். . .”
“அந்த வீட்டை வாடகைக்குத் தரமாட்டீங்றாங்க. இப்பத்தான் வீட்ல பிரச்சினை ஆயிடிச்சே. அந்த வீடு வேண்டாம். அதும் இல்லாம எங்க ஊர்ல நீங்க வந்து இருக்க வேண்டாம்!”
“சரி அப்ப நான் நைட்ல இனி உன்னைக் கூப்பிடக்கூடாது. அதானே அதான் ரெண்டு மூணு நாளா ஆப்லயே நைட்டு இருந் திச்சா?”
“கொஞ்சம் நாளைக்குத்தான் கார்த்தி அண்ணா. . . ப்ளீஸ்.”
“ஏய் இப்ப தனியாத்தான இருக்கே. அண்ணா சொல்றே?”
“சாரி சாரி. அப்புடியே கூப் பிட்டு கூப்பிட்டு பழக்கமே ஆயி டிச்சு. இந்த வாரம் ஞாயித்துக் கிழமை என்னை சினிமாக்குக் கூட் டிட்டு போறீங்ளா? ம். நான் இன் னம் வேல் பாக்கலை, பழனி பாக் கலை, விஜய் படம்கூட இன்னம் பாக்கலை.”
“ஏன் உங்க ஊர் தோஸ்த்து பழனிச்சாமி கூட்டிட்டு போக லியா?” அவுரு என் கிட்ட பேசு னாரு. அடுத்த முறை ஊருக்கு வந்தா வீட்டுக்கு வாங்கன்னு சொன்னாப்ல. . .”
“உங்க நெம்பர் எப்படி அவருக் குத் தெரியும்?”
“ம். கேப்பேடி. என் செல்லை வாங்கி ஒருக்கா கூப்பிட்டு நீதான பேசினே. சரி மாலினி எப்பிடி இருக்கா?”
“மாலினி பாவம் கார்த்தி. சுரேஸ் அவகிட்ட கூட சொல் லாம தஞ்சாவூர் ஓடீட்டான். அவு ளுக்கு ஒரு போன் பண்ணியாச்சிம் சொல்லி இருக்கலாம்ல. இவ ரூம்ல அழுதுட்டே இருக்கா. சரியா சாப் புடறதுகூட இல்ல கார்த்தி. . . நீயாச்சிம் ஒரு போன் பண்ணி அவளைச் சாப்பிடச் சொல்லு. இந்த லட்சணத்துல எனக்கு தஞ் சாவூர்ல மாப்பிள்ளை பாத்துருக் கானாம். நீங்க அவன்கூடப் பேசாதீங்க!”
“மாலினி நெம்பர் என்கிட்ட இல்லையே. நீதான் என் செல்லுல பொண்ணுக நெம்பரே இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டியே. எடுத்துட்டேன்.”
“சரி. நீங்க சொல்ல வேண்டாம். நானே சொல்லிக்கறேன். ப்ளீஸ்பா. சினிமாக்கு. போலாம். சினிமாக்கு போலாம்!”
“சரி சரி சரி. திருப்பூர்ல பாக்க லாம். ஞாயிற்றுக்கிழமை காலைல நான் போன் பண்ணுறேன். ஓகே வா. செல்லம் எனக்கும் உன்னைப் பார்க்கணும்னுதான் இருக்கு. பழனிச்சாமிக்கு நான் ஒரு போன் போட்டா?”
“நீங்க ஒண்ணும் அவுருக்கு போன் போட வேண்டாம். உங் களுக்கெல்லாம் அவர்கிட்ட பேசவே தெரியாது. துருவித் துருவி கேட்டு கண்டுபுடிச்சிக்கும். அப்பு றம் எங்கிட்ட சண்டை கட் டிட்டே இருக்கும். இப்ப ஒரு வாரமா சண்டை. எங்க ஊர்க் காரன் ஒருத்தன் அதுகிட்ட, திருப் பூர்ல இருந்து ஒருத்தன் ஒரு ரூவா காசப்போட்டு போனுபோட்டு கூப்பிட்டான். இவ பஸ் ஏறிப் போனா. திருப்பூர்லயே நான் பாத் தேன்னு சொல்லிட்டானாம். அதுக்கு என்னை பண்டம்னு சத் தம் போடுது! என்னால சாவும் முட்டும் மறக்கவே முடியாது. என்னை பண்டம்னு சொல்லிப் போடுச்சு. நீங்க தயவுசெஞ்சு போனெல்லாம் அதுக்கு போட்டு கூப்புட்டு சவுக்கியமான்னு கேட் டுட்டு இருக்காதீங்க. சிவா கிட்ட இது போனு போட்டு காரியத்த முடிச்சிட்டீங்ளான்னு கேட்டிருக் குது. அவன் ஏதோ சிரிச்சு பேசி மலுப்பி உட்டுட்டான்.”
“அடிச்செல்லாம் வெச்சுடு வாப்லைன்னு சொன்னில்ல.”
“ஆமா. அடிச்சுப்போடும். உனக்கு என்ன உரிமை இருக்கு துன்னு கேட்டா மறுபடியும் எச்சா அடிக்கும். வேற யாரு அடிச்சாலும் கைய முறிச்சுப்போடுவேன். அது அடிச்சா மட்டும் அப்புடி.”
“அதான் காதலு.”
“க்கும். மண்ணாங்கட்டி. அது என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்டு. . . என்ன வேணாலும் கேப்பேன். மாட்டேன்னு சொல்லாது. இப்பத் தான் போனவாரம் சின்ன மேடம் சின்ன மேடம்னு புதுசா கூப்புட் டுச்சு. குட்டிப் பிசாசுன்னு சொல் லுச்சு. முன்ன. . . அதைத்தான் சிம்பு காளைல கதாநாயகிய கூப் புட்டான் அப்புடின்னு இனிமே உன்னைக் குட்டிப்பிசாசுன்னு கூப்புடமாட்டேனுட்டுது. சிம்புக்கு எப்படிக் குட்டிப்பிசாசு தெரிஞ்சு துன்னு டென்சன்ல இருந்திச்சு.”
“பாரு பழனிச்சாமி பேச்சை எடுத்தா நிறுத்தாம ஓய்வே இல் லாம பேசுறே பாத்தியா.”
“ஆமா அதும் விஜயமங்கலம், நானும் விஜயமங்கலம். நான் வயசுக்கு வந்தப்ப இருந்து என்னை லவ் பண்ணுது, ஆனா ஒரு வாட்டி தான் என்னோட இருவது வயசுல இருபத்தி எட்டாம் தேதி. ஜனவரி மாசம் ஐ லவ் யூன்னு சொல்லிச்சு. அதோட செல்லுல 1/2கிறுக்கு வி.ஜே.எம்.னு போட்டிருக்குது. நான் பண்ற கூத்துக்கு அப்புடித் தான் போடுமாம். குட்டிப்பிசாசே நல்லா இருந்துச்சு. சரி செல்ல காசு என்ன ஆகுறது உங்குளுக்கு? ஈவ்னிங் ஆறு மணிக்குக் கூப்பி டுங்க. வெச்சுடறேன். ஞாயித்துக் கிழமை கண்டிப்பா கூப்பிடுங்க.” கீதா செல்லில் மணி பார்த்தாள். ஒன்று முப்பதுதான் ஆகியிருந்தது. ஒன்று நாற்பத்தி ஐந்திற்குத்தான் கே.கே.சி. விஜயமங்கலம் வந்து சேரும்! வாயில் இருந்த பான் பராக் துகள்களைத் துப்பிவிட்டு, இன்னொன்று புதிதாய்க் கிழித்துக் கொட்டிக்கொண்டாள். செல் போன் மீண்டும் அலறியது! 04294 என்றிருக்க. யார் ஒரு ரூபாய் போட்டுப் பண்ணுவது என்று எடுத்தாள்.
“வணக்கமம்மா. நல்லா இருக்கியாம்மா? வீட்ல அம்மா, அப்பா நல்லா இருக்காங்களாம்மா? சாப்புட் டியாம்மா? ஏன் பேசவே மாட்டீங்றே? யாராச்சிம் வீட்ல திட்டினாங்ளா?”
“சாப்புட்டேன். . . சொல்லுங்க. . . டூட்டி முடிஞ் சுட்டுதா?”
“டூட்டிலதான்மா இருக்கேன். ஈரோடு கோர்ட்டுக்கு வந்தேன். சாப்பாட்டு நேரம். சாப்பிடப்போலாம்னு கடைவீதில நின்னேன்.”
“என்ன பண்ணுவீங்களோ தெரியாது. நாளைக்குப் பெருந்துறை பஸ்ஸ்டாண்டுல காலைல பத்து மணிக்கு நிப்பேன். எனக்குப் பணம் ரெண்டாயிரம் வேணும்.”
“சம்பள டேட்டுக்கு இன்னம் பத்துநாள் இருக் கேம்மா. திடீர்னு பணத்துக்கு நான் எங்க போவேன்மா.”
“அதெல்லாம் முடியாது. எனக்கு பணம் வேணும். நான் நிப்பேன். நீங்க வந்து குடுத்துட்டு டூட்டிக்குப் போங்க. நான் வெச்சுடறேன்.” வைக்காதேம்மா என்ற அவரது குரல் கடைசியாய் காதினுள் விழ விழவே துண்டித்தாள் கீதா. அதே சமயம் விஜய மங்கலம் சந்தைக் கடை வழியாகப் பழனிச்சாமி எக்ஸெல் சூப்பரில் வருவதைப் பார்த்தவள் நிழல் குடையை விட்டு வெளியேறி அவன் பார்வை படு மாறு நின்றாள். பழனிச்சாமியும் இவளைக் கண்டதும் இவளை ஒட்டினாற்போல வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தினான். “உக்காரு கொடுவேரி போறோம் இப்போ.” என்றான். கீதா எதுவும் சொல்லாமல் அவனை ஒட்டி பின்னால் அமர்ந்துகொண்டாள்.
பழனிச்சாமி சந்தைக் கடை வழியாக மேக்கூர் தாண்டியதும் எக்ஸலை முறுக்கினான். திங்களுர் நோக்கி வண்டி விரைந்தது!
- கூப்புட்டா செல்லை எடுத்து என்ன ஏதுன்னு கேட்கவே மாட்டீங்ளா? அப்புடி என்ன கோபம்? எத்தனை தடவை மூணு நாளா கூப்பிட்டுட்டே இருக்கேன் தெரியுமா? சரி நீங்களாச்சிம் கூப்பிட்டு எதுக்கு கூப்பிட்டேன்னு கேக்கலாம்ல? அதுக்கும் மொடையா? என்று பழனிச்சாமியிடம் கேட்டுக் கொண்டிருந்தபோது கீதாவின் செல் அலறியது. கொஞ்சம் மெதுவாப் போங்க. எங்க சுந்தர் அண் ணன் கூப்பிடுது. . .
“அண்ணா சுந்தரண்ணா. சாரின்னா திடீர்னு வயித்து வலி போட்டு கொல்லுதுங்க. என் ப்ரெண்டு வந்தாப்ல ஆமா. வண்டிலதான் போயிட்டிருக்கேன். சாரிண்ணா இன்னொரு நாளைக்குக் கண்டிப்பா வர்றேண்ணா. அதான் சாரி சொல்லிட்டன்ல. என்ன கூடவா. இப்பத்தான சொன்னேன். ப்ரண்டு அப் படின்னு பாத்திங்ளா. சந்தேகமா பேசறீங்க. என்ன? அண்ணா பஸ்சுல ஒரே இறைச்சலா இருக்கு சுந் தரண்ணா. சரியா கேக்க மாட்டிங்குது. . . ம். என்ன ட்ரெஸ்ஸா? ப்ளூ கலர் சுடிதார் போட்டு இருக்கேன்” கீதா பேசிக்கொண்டு இருக்கையிலேயே வண்டியை வேப்பை மர நிழலில் நிப்பாட்டி இறங்கினான் பழனிச்சாமி.
- ஏன் வண்டிய நிறுத்திட்டீங்க? நான் பேசிட்டே வர்றேன். ஓட்டுங்க. ம். சொல்லுங்க சுந்தரண்ணா. என்றபோது பழனிச்சாமி கீதாவின் கன்னம் மீது ஒரு அப்பு அப்பினான். கீதா செல்லை கட் செய்து விட்டு “இப்ப எதுக்கு அடிக்கறீங்க? அண்ணன்னு தான் சொன்னேன்” என்றான்.
- அவன் என்னடி கேட்டான்? என்ன ட்ரஸ்சுங் றான். நீ புளூ கலர் சுடிங்றே? ஏன் வித்தவுட்ல உக்காந்துட்டு போயிட்டிருக்கேன்னு சொல்ல வேண்டீதுதான.
- இதப்பாருங்க. செல்லை ஆப் பண்ணீட்டேன். இனிமே உங்களோட வர்றப்ப, பாக்குறப்ப செல்லை ஆப் பண்ணிடறேன் போதுமா.
- கையில எதாச்சிம் சிக்கி இருந்தா மண்டைப் போடாப் போட்டுக் கொன்னிருப்பே சிரிக்காதடி ஏறு வண்டீல. . . என்றவன் ஸ்டார்ட் செய்து அமர பின்னால் அமர்ந்தவள் இதெதுக்கு உங்களுக்கு இத்தனை கோபம் வருது? என்றாள்.

...நன்றி, உயிர்மை மாத இதழ்,

Post Comment

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

சரோஜா

சரோஜா தூக்கம் வராமல் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். கால்களுக்குப் போடப்பட்டிருந்த தலையணையைக் காலாலேயே மேலுக்கு இழுத்துத் தூக்கி தன் நெஞ்சில் புதைத்து இறுக்கிக் கட்டிக் கொண்டாள். தலையணையை சாமிநாதன் என்றெண்ணி உயரத் தூக்கி முத்தம் கொடுத்து சிரித்துக் கொண்டாள். 'உடுங்க என்னெ சின்னக் கவுணுச்சி உடுங்க' என்று இவளின் காதுக்குள் சாமிநாதன் கூறுவது போலவே இருந்தது. 'உன்னை உடவே மாட்டேன்டா... ஒரு விசுக்காத்தான்டா இந்த சரோஜா ஏமாந்து போவா. எப்பத்திக்கிம் ஏமாந்துட்டே இருப்பாளாடா! உன்னையெ உடவே மாட்டேன்டா இந்த வாட்டி' என்று முனகிய சரோஜா தலையணையைக் கட்டிக் கொண்டே படுக்கையில் உருண்டாள்.

சரோஜா மூங்கில்பாளையத்தில் வடக்குத் தோட்டத்து ராமசாமிக் கவுண்டரின் பெண். பத்தாவது வரை விசயமங்கலம் அரசாங்கப் பள்ளியில் படித்தவள். பரீட்சை எழுதிய கையோடு விடுமுறையில் அம்மாயி வீட்டுக்கு திங்களூர் வந்தவளுக்கு உள்ளூருக்குள் சலூன் கடை வைத்திருந்த கோபாலன் மீது காதல் வந்தது. சலூன் கடை கோபாலன் நீளமான முடி வைத்திருந்தான். டிவியெஸ் ஸ்டார் சிட்டி பைக் வைத்திருந்தான். கார்கோஸ் பாண்ட் அணிந்திருந்தான். அஜித் மாதிரி சிவப்பாய் இருந்தான். இவளைக் கண்டதும் கண்ணைச் சிமிட்டினான். இவளுக்குள் அந்த செடி வேர் விட்டது. இவள் அம்மாயியையும், அப்பிச்சியையும் இராக் காலங்களில் அத்தாப் பெரிய வீட்டில் ஏமாற்றுவது எளிதாய் இருந்தது.

கோபாலன் சரோஜா மீது பித்தாய்த்திரிந்தான். அவனைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு எல்லாப் பெண்களைப் போலவே பேசிக் கொண்டிருந்தாள்.

“இதெதுக்கு கோபாலு தாவாங் கட்டைக்கிக் கீழாறதுக்கிளியூண்டு மசுரு வளத்துறே? அதையெ நீயி நாளைக்கு செரைச்சு எடுத்துடு கோபாலு. அசிங்கமா இருக்கு. இருக்கட்டும் அதான் ஸ்டைலுன்னு சொன்னீன்னா உன்னைக் கடிச்சு வச்சுடுவேன்.”

“நீ கடிச்சு வைப்பேன்னு சொன்னப்புறம் நான் எதுக்கு அதை எடுக்கப் போறேன். நீ கடிச்சா எனக்கு வலிக்கவே வலிக்காது.”
“வலிக்காது... வலிக்காது... சரி, அதை நீ எடுப்பியா எடுக்கமாட்டியா?”

“எடுத்துடறேன் சரோ... உனக்குப் பிடிக்காதது என்கிட்ட எதுக்கு?” என்றவன் அப்படியே சரோஜாவை நிலத்தில் சாய்த்தான்.

“என்னைக் கட்டிக்குவீல்ல? என்னை ஏமாத்தமாட்டீல்ல? காலம் பூராவும் என்னெ உன் கண்ணுக்குள்ள வெச்சுக் காப்பாத்துவியா? உன்னோட சலூன் கடை அம்மாவாசைக்கு லீவுதானே? நாளைக்கு கோபி கூட்டிட்டுப் போறியா? பச்சை மலைக்குப் போகலாம். சாமி கும்பிடலாம். அப் படியே புதுப்படம் ஒன்னு பார்க்கலாம். என்ன பேச்சையே காணோம்? கூட்டிட்டுப் போகமாட்டியா?” என்றாள்.

“நீ எங்கே கூப்பிட்டாலும் வருவேன் சரோ... கொஞ்சம் நேரம் உன் லொட லொட வாயை லொட லொடக்காம இரேன் சரோ...” என்றவன் சரோஜாவின் இதழ்களைக் கவ்வினான். சரோஜா அப்புறம் எதுவும் பேசவில்லை. கண்கள் இருட்டு வானம் பார்த்து செருகிக் கொண்டன. சரோஜா அவன் முதுகைத் தன் கைகளால் தடவிக் கொடுக்கத் துவங்கினாள்.

அடுத்த நாள் இருவரும் பேசி வைத்தது மாதிரி பச்சைமலைக்குச் சென்றார்கள். கோபாலன் மஞ்சள் கயிற்றைக் கட்டினான். சரோஜா மிரண்டாள். இப்ப என்ன அவசரம் என்றாள். என் தங்கம் என் கூடவே எப்பவும் இருக்கோணும் என்றான். இல்லை என்றால் சாவதைத் தவிர வேறு மார்க்கமே இல்லை என்று அழுதான். அழுபவனை எப்படித் தேற்றுவது என்று சரோஜாவிற்குத் தெரியாமல் அவனுக்கே பச்சை மலை உச்சியில் கழுத்தை நீட்டினாள். பச்சைமலையில் வீற்றிருந்த முருகன் தெற்குப் பார்த்தபடி முகத்தைத் திருப்பி ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டான். அது மூங்கில்பாளையத்தைப் பார்த்துத்தானாய் இருக்க வேண்டும்.

அப்பிச்சிக்கும், அம்மாயிக்கும் சாகவேண்டிய காலத்தில் பேத்தி பிரச்சினையைக் கொண்டு வந்து விட்டாள். நீயெல்லாம் சாதிக்காரியாடி? என்று அம்மாயி கத்திக் கொண்டே பெரிய வீட்டைச் சுற்றியது. ராமசாமி கவுண்டரை அப்பிச்சி போனில் கூப்பிட்டது! ராமசாமிக் கவுண்டருக்கு சேதியைக் கேட்டதிலிருந்து காலும் கையும் ஓடவில்லை. கெழக்குத் தோட்டத் தான் முத்துச்சாமி கவுண்டருக்குப் பதைபதைத்து போன் அடித்தார். முத்துச்சாமி கவுண்டரும் ராமசாமி கவுண்டரும் சொந்த அண்ணன் தம்பிகள்தான். இருவருமே ஆறேழு வருடங்களுக்கு முன்பாக உள்ளூர் தேர்தலின் போது சண்டை போட்டுக்கொண்டு கட்டுமாரு கட்டிக்கொண்டு மூங்கில்பாளைய வீதியில் உருண்டவர்கள்தான். எதிர்முனையில் யாரு? என்ற தம்பி குரல் கேட்டதும் இவர் முசுக்கென அழ ஆரம்பித்துவிட்டார். அழுகை சப்தம் வைத்தே அண்ணன்தான் என்பதை உணர்ந்த முத்துச்சாமி கவுண்டர் அழட்டும் என சித்த நேரம் விட்டார்.

“என்றா பார்த்துட்டே இருக்கேன்... பொட்டப்புள்ள கணக்கா... கூகூன்னு அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தமுன்னு வேண்டாம். என்னாச்சுன்னு சொன்னாத்தான தெரியும் எழவு? சரி இல்லீன்னா போனை வெய்யி நீயி... உம்பொட ஊட்டுக்கே வாரேன். ஆளுதான் தடிமாடு கணக்கா இருக்கியேயொழிய ஒரு எழவும் தெரியாதுடா உனக்கு! போனை வெய்யிடா... நானே வர்றேன்” என்று முத்துச்சாமி கவுண்டர் கூறவும் துண்டால் கண்ணீரைத் துடைத்துவிட்டு போனை வைத்தார்.

முத்துச்சாமி கவுண்டரும் அண்ணனுக்கு என்ன பிரச்சினையோ என்று உடனேயே அம்பாஸிடரை எடுத்துக்கொண்டு அண்ணன் வீடு வந்துவிட்டார். அண்ணி வாசல் படியில் தலையில் கைவைத்து அழுது கொண்டு இருந்தது. தென்னை மரத்தில் சங்கிலியில் கட்டப்பட்டிருந்த நாய் இவரையும் இவரது காரையும் அடையாளம் கண்டு கொண்டு எழுந்து வாலை ஆட்டிக் கொண்டே ‘கூ’ என முனகியது. அண்ணன் வீட்டினுள் சோபாவில் அமர்ந்திருந்ததைக் கண்டதும், 'என்னடா ஆச்சு?' என்று கேட்டுக் கொண்டே அருகில் கிடந்த நாற்காலியில் சென்று அமர்ந்தார். ராமசாமிக் கவுண்டர் விஷயத்தை நிதானமாய்க் கூறினார்.

“இப்ப அவிங்க ரெண்டுபேரும் எங்க இருக்காங்களாமா?”

“திங்களூர்ல ஊட்டுலதான்.”

“இங்க உட்கார்ந்துட்டு என்ன வேலை... அங்க போயி பார்த்துக்கலாம். போயி தாலிய அத்து வீசி எறிஞ்சுட்டு நம்ம புள்ளையக் கூட்டிட்டு வந்தரலாம். ஆமா அந்தப்பயல் என்ன நம்ம சாதியா? நம்ம சாதியின்னா ஆரு எவரன்ன விசாரிச்சுத்தான் எதையும் பண்டோனும்.”

“என்ன சாதியோ என்ன கருமமோ.. பரிச்செ லீவுல இங்கயே ஏன் அவளும் ஊட்டச் சுத்தீட்டே கெடக்காட்டீன்னுதான் போறேன் போறேன்னு ஒத்தக் கால்ல நின்னவளைத் தாட்டி உட்டேன். இப்போ ஒரே மாசத்துக்குள்ள தலையில கல்லைப் போடாத கொறையா பண்டி வெச்சுட்டா அவளை அங்கயே கொன்னு பெதச்சுப் போட்டு நாம வந்துடலாம்டா!”

“சரி சுந்தரன் எங்கெ? காலேஜ் போயிட்டானா? இருந்தா அவனையும் கார்ல ஏத்தீட்டுப் போயிடலாம்... கொல்றது புடிக்கிறது எல்லாம் போயி அங்க பார்த்துக்கலாம்.”

“காலேஜுக்கு எங்க போனான்... அதான் காலேஜும் லீவாப் போச்சே... ஊர் சுத்த காத்தால போனவன் இன்னங் காணம். சரி, உம்பட சட்டைல பட்டனைச் செரியாப் போடு. மேல ஒன்னு கீழ ஒன்னு போட்டுட்டு வந்துருக்கே. உம்பட அண்ணிக்காரிய கூட்டிட்டுப் போலாமா. ஒப்பாரி வெச்சாள்னா திங்களூர் முழுசுக்குமே கேட்டுத் தொலைக்குமே!”

“வேண்டாம். அது இங்கயே இருக்கட்டும். காதும் காதும் வெச்சமானிக்கே விசயத்தை அங்கயே முடிச்சுப் போட்டு நாம வந்துரோணும் பாத்துக்க. மூங்கில் பாளையத்துக்குள்ளார பரவீடுச்சுன்னா உலவத்துக்கே தெரிஞ்சு போனமாதிரி ஆவிப் போயிரும். நாளைக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டே இருக்கும். பொட்டப்புள்ள சமாச்சாரம். நாளைக்கி ஒரு கல்யாணங்காச்சி பண்ட முடியாமப் போயிரும். நட போலாம்” என்று பட்டனைச் சரியாய்ப் போட்டுக் கொண்ட முத்துச் சாமி கவுண்டர் வெளி வாசலுக்கு வந்து அண்ணி அருகே நின்றார்.

“சும்மா எழவு உழுந்தட்ட மாதிரி வாசப்படியில உக்காந்துட்டு அழுதுட்டே இருக்கப்புடாது ஆமா பாத்துக்க. கூலிக்கார மாதாரிக பார்த்துட்டாங்கன்னா காதும் காதும் வெச்சு திருகிப் பேசிப் போடுவானுக. போய் உள்ளார உட்கார்ந்துட்டு அழு போ. நாங்க போய் கூட்டிட்டு சுருக்கா வந்து சேர்ந்துடறோம்.” முத்துசாமி கவுண்டர் காரைப் பார்த்தபடிதான் அண்ணியிடம் பேசிக் கொண்டிருந்தார். நேருக்கு எப்போதுமே முகம் பார்த்து அண்ணியிடம் பேசமாட்டார். சொன்னதுதாங்கோடு என்று எழுந்தவள், 'புக்கிட்டியூண்டு இருந்துட்டு அந்த சண்டாளி எந்த எடுபட்ட காசியோட தாலிய வாங்கீட்டு நிக்கறாள்னே தெரியிலியே. அவளெ அவத்திக்கே கொன்னு பொதச்சுப் போட்டு ரெண்டு பேரும் ஊடு வந்து சேருங்க. எமசாந்து வாங்குனது பேரு கொண்டாருது பாரு ஊட்டுக்கும் அப்பன் ஆத்தாளுக்கும்' என்று முனகிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தது.

“தங்கம், செல்லம், கன்னுக்குட்டின்னு கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தினா தங்கக் குட்டி இந்த வேலைதான் செஞ்சுட்டு நிக்கும். கோழி ஒன்னெ புடிச்சு அடிச்சு சாறு காச்சி வெய்யிடி.. எட்றா வண்டியெ” என்று ராமசாமி கவுண்டரும் கார் கதவை நீக்கி உட்கார்ந்து கொள்ள முத்துச்சாமி கவுண்டர் கோபமாகவே ஆக்ஸிலேட்டரை மிதித்து இழுத்தார்.

கார் விசயமங்கலம் மேக்கூரைத் தாண்டியதும் வடக்கே வேகம் பிடித்தது. திங்களூர் பனிரெண்டு கிலோ மீட்டர்தான். முத்துச்சாமிக் கவுண்டர் தன் அண்ணியினுடைய தாய் வீட்டில் காரைக் கொண்டு வந்து நிறுத்தும்வரை அண்ணனிடமும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ராமசாமி கவுண்டருக்குள்ளும் தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற எண்ணம்தான் ஓடிக் கொண்டிருந்தது. அண்ணனுக்கு ஒன்று என்கிறபோது முத்துச்சாமி கவுண்டருக்குத் தன் பெண்ணே தப்புக்காரியம் செய்துவிட்ட துடிப்புதான் இருந்தது. இத்தனை வருடப் பகையை இந்தக் குட்டிக் கழுதை தீர்த்து வைத்துவிட்டது.

பெரிய வீடு அமைதியாக இருந்தது! காரை நிறுத்தி இறங்கியவர் திடுதிடுவென வீட்டுக்குள் ஓடினார். நடு ஹாலில் புதுமணத் தம்பதிகள் டி.வி. பார்த்தபடி சோபாவில் அமர்ந்திருந்தார்கள். விரைந்து வீட்டினுள் வருபவரைக் கண்ட சரோஜா, “சித்தப்பா” என்று எழுந்தாள். போன சுடிக்கு அவள் கன்னத்தில் ஒரு அப்பட்டம் போட்டார் முத்துச்சாமி கவுண்டர். “ஐயோ” என்று திருகி சரோஜா விழுந்ததும் பொடணி மயிரோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு கோபாலனை நாலு மிதி வைத்து “யார்ரா நாயி நீயி?” என்றார். அதற்குள் ராமசாமிக் கவுண்டர் ஓடி வந்ததும் கீழே கிடந்த மகளைத் தூக்கி நிறுத்தி சாத்துச் சாத்தென சாத்தினார். “அடக் கொன்னு கின்னு போடாதீங்டா” என்று பெருசு ஓடிவந்து இருவரையும் தள்ளிவிட்டது. முத்துச்சாமி கவுண்டர் ஒதுங்கி நின்று கோபாலனின் நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி வைத்தார். அவன் அருகில் இருந்த தூணில் மோதி சரிந்து சாய்ந்து கையெடுத்துக் கும்பிட்டான். பின்னர் சோபாவில் கைகளை விரித்து சாய்ந்துகொண்டார்.

“இவன் யாராமா? கேட்டீங்ளா?” என்று பெரியவரைப் பார்த்துக் கேட்டார்.

“அவனாருன்னா? மூஞ்சீலயே எழுதி ஒட்டியிருக்குது தெரியிலியா? உள்ளூர் அப்புக்குட்டி நாசுவனோட பேரன். பெரிய புள்ளைய காஞ்சிக் கோயிலுக்குக் கட்டிக் குடுத்தான். அவளோட பையன்தான்.”

“ஏன்டா நீ நாசுவனாடா? எப்பட்றா இப்புடியெல்லாம் தைரியமா பண்றீங்க? எந்திரி மொதல்ல நீ.. போடா... அடிச்சுக் கொன்னே போடுவேன். போயி வாசல்ல நில்லு போ... எந்தர்றா மேல. கொன்னு கொண்டி வாய்க்கால்ல எறிஞ்சுட்டுப் போயிடுவேன்” என்று இவர் சப்தம் போடவும் தடுமாறி எழுந்த கோபாலன் வீட்டை விட்டு வெளியே சென்று வாசல்படி இறங்கி வாசலில் நின்றான்.

“கையைக் கட்டீட்டு நில்றா. அக்கட்ட இக்கட்ட நவுந்தீன்னா வந்து ஒரே ஒதைதான். இடுப்பு எலும்பு கத்திரிச்சுப் போவும் பார்த்துக்க. ஏம் பெருசு, உனக்கு அறிவு இருக்குதா இல்லையா? அப்புக்குட்டி பேரன்னு உனக்குத் தெரிஞ்சிருக்குது. நடு ஊட்டுல கொண்டாந்து உக்காத்தி வெச்சுட்டு இருந்திருக்கே. உனக்கொரு சாவு வரமாட்டீங்குது பாரு” என்று கோபத்தைப் பெருசிடம் திருப்பினார்.

“யாரு என்னன்னு கேட்டதுக்கு இன்னாருங்கன்னு சொன்னான். அதுக்குள்ளார கெழவி முந்தீட்டு வெளியே போடான்னுதான் சொன்னா. அதுக்குக் கெழவிய சரோசாப்புள்ள, 'போடி பெரிய இவ வந்துட்டா. எம்பட ஊட்டுக்காரனை வெளியே போவச் சொல்றா பாரு'ன்னு கத்தங்காட்டி அவ இந்தக் கருமம் எக்கேடோ கெட்டு ஒழியட்டும்னு ஒதுங்கீட்டா. அம்மாயியையே தூக்கி எறிஞ்சு பேசுறவகிட்ட என்னத்த பேசுறதுன்னுதான் அப்பனுக்கு போனைப் போட்டேன்” என்றவர் லொக்கு லொக்கென இருமிக் கொண்டே எதிர்த்த சோபாலில் உட்கார்ந்தார்.

“என்ன ஒரு ஏத்தமிருந்தா அவன் நடு ஊட்டுல உட்கார்ந்து டி.வி. பார்த்துட்டு இருப்பான்? ஏன்டி சரோஜா.. ஏன்டி காரியத்தைச் செஞ்சு போட்டு திருட்டு முழி முழிச்சுட்டு இருக்கே? சொல்லுடி”

“சித்தப்பா...”

“சித்தப்பன்தா நானு சொல்லுடி... என்ன பண்ணப் போறே?”

“நானு அவருகூட அவுங்க ஊட்டுக்கே போறேன் சித்தப்பா.”

“அவுங்க ஊட்டுக்கே போறியா? போயி?”

“போயி பொழைச்சுக்கறேன்.”

“டேய் ராமசாமி... அப்புடியே அவ கழுத்தைப் புடிச்சு நசுக்கி திருகிக் கொல்றா. நாயமயிரு பேசுதுபாரு புள்ளை.”

“சித்தப்பன் சொல்றதைக் கேட்டுத் தொலைடி சனியனே. எனக்குன்னு வந்து வாய்ச்சே பாரு. திடும் திடும்னு ஊட்டுக்குள்ளார நி நடக்குறப்பவே தெரியும்டி. இப்புடி எல்லாம் பண்டுவீன்னு. நான் உன்னியக் கொல்லமாட்டேன். ஆனா சித்தப்பன் சொல் பேச்சு கேக்கலீன்னா கழுத்தை திருவிக் கொன்னு போடுவான்” என்றார் ராமசாமி கவுண்டர். கூகூவென சரோஜா அழ ஆரம்பித்தாள். முத்துச்சாமி கவுண்டர் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரனை போனில் கூப்பிட்டார். விஷயத்தைச் சொல்லி வரச்சொன்னார்.

“சரோஜா... இப்போ இங்கெ திங்களூர் போலீஸ் வந்துடுவாங்க. அவனைக் கொண்டி கோயமுத்தூர் ஜெயில்ல போட்டுருவாங்க. உனக்கு வயசு பதினெட்டுகூட ஆவலை. அதனால உன்னைய எந்த ஊர் ஜெயில்ல போடுவாங்கன்னு தெரியல” என்றவரை அழுதபடியே பார்த்தவள் பயத்தில் மிரண்டாள். இப்படி எல்லாம் கூடவா செய்வார்கள்? போலீஸ், ஜெயில் என்கிறார்களே! அம்மா இவர்களோடு ஏன் வரலை? அம்மா வந்திருந்தால் அழுதாவது கோபாலனை மூங்கில் பாளையம் கூட்டிப் போயிருக்கலாம். அப்பனும் கூட ஆனது ஆயிப் போச்சு என்று விட்டுவிடும். இந்த சித்தப்பன் மலை முழுங்கி மகாதேவனாச்சே! சண்டை கட்டிக் கொண்டவர்கள் எப்போது ஒட்டுக்காகச் சேர்ந்தார்கள்!

“ஐயோ சித்தப்பா... போலீசு, ஜெயிலு எல்லாம் வேண்டாம் சித்தப்பா.”

“வேண்டாம்னாலும் உனக்கு வயசு பதினெட்டு ஆகலியே.”

“பதினெட்டு ஆவாட்டிப் போயிச்சாட்டாது. நானு கோபாலு ஊட்டுக்கே போயிடற«ன் சித்தப்பா. எனக்கு அவனைத்தான் புடிச்சிருக்குது.”

“நாயிப் பொச்சுல தேன் ராட்டு தொங்குதுன்னு போய் வழிச்சு எடுத்து நக்கிக்க முடியுமா? போயி ஜெயில்ல உட்கார்ந்துட்டு களி தின்னுட்டு எத்தனை வருசம் உள்ளார போடறானோ கெடந்துட்டு வா.”

“ஏன்டா முத்துச்சாமி, போலீசை வரச்சொல்லிட்டியா?” என்றார் ராமசாமிக் கவுண்டர்.

“நீ மொதல்ல அவ கழுத்துல கெடக்குற கவுத்தை அத்து வீசு.”

“ஐயோ, கவுத்தை அத்து வீசிடா தீங்கப்பா” என்றாள் சரோஜா. அவள் இரண்டு கைகளையும் கழுத்தில் வைத்துக் கொண்டாள், எங்கே சித்தப்பன் பேச்சைக் கேட்டு அப்பன் அத்து வீசிவிடுமோ என்று.

“சரி, உடு அண்ணா. போலீஸ்காரங்க தொட்டதுக்கெல்லாம் ஜெயில்ல போட்டு மிதிப்பாங்கள்ல அப்ப தானா தெரிஞ்சுக்குவா” என்றவர் வெளியே வாசலைப் பார்த்தார். கோபாலன் வாசலில் குத்த வைத்து தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். அதே நேரம் வாசலுக்கு இரண்டு மூன்று பைக்குகள் வந்து ஓய்ந்தன. வண்டியை நிறுத்திவிட்டு வந்த பஞ்சாயத்துத் தலைவரை வரவேற்க வெளிவாசலுக்குக் கும்பிடு போட்டபடி முத்துச்சாமி கவுண்டர் வந்தார்.

“வாங்க மாப்ளே.” பதிலுக்கு அவரும் கும்பிடு போட்டுவிட்டு வாசலில் குத்த வைத்திருந்தவனைப் பார்த்து 'இவனா?' என்றார்.
பின்னாலேயே வந்த அப்புக்குட்டி கோபத்தில் சென்று கோபாலன் முதுகில் நான்கு குத்துக்கள் வைத்தான்.

“சாமி வந்திருக்காப்ல. எருமெ கணக்கா உட்கார்ந்துட்டு இருக்கியாடா. சோத்தத் திங்கறியா? பிய்யத் திங்கறியாடா? எந்தர்றா மேல” என்று அப்புக்குட்டி கத்தியதும்தான் கோபாலன் எழுந்து தலைவருக்கு வணக்கம் போட்டான். தலைவர் அவனைக் கண்டுகொள்ளாமல் கூடவே வந்திருந்தவர்களை கிட்டே அழைத்தார். அவர்களும் 'என்னுங் தலைவரே!' என்று வந்தார்கள்.

“உள்ளார போயி நாலு சேர்க இருந்தா எடுத்துட்டு வாங்க. இப்புடி தென்னை மரத்துக்கிட்டயே உட்கார்ந்துக்குவோம்” என்றதும் அவர்கள் உள்ளே சென்றார்கள்.

“மாப்ளெ, போலீசோடதான் வருவீங்கன்னு பார்த்தேன்” என்றார் முத்துச்சாமி கவுண்டர்.

“இதுக்கெதுக்கு போலீசு? சொல்லிப் பார்ப்போம். பையன் இனி என்ன சுடியில இருக்கான்னு பார்ப்போம். முடியலீன்னா பார்ப்போம்.” ராமசாமிக் கவுண்டரும் சரோஜாவோடு வெளியே வந்தார். 'வணக்கம் மாப்ளே!' என்றொரு கும்பிடு வைத்தார்.

“புள்ளை எந்த ஊர் பள்ளிக் கோடத்துல படிச்சுட்டு இருந்தது மாமா?”

“விசயமங்கலத்துலதான் மாப்ள, பத்தாவது பரிட்சை எழுதிட்டு லீவுல வந்தா இங்கெ.”

“இந்த வயசிலேயே இதுகளுக்கெல்லாம் என்ன தெரியும்னு தாலியக் கட்டிக்குதுகன்னே தெரியல. போன வாரம் இதே ஊர்ல ஒரு ஜோடி ஓடிப் போயிடுச்சு. இன்னமும் எங்கே இருக்காங்கன்னே தெரியல. காலம் எங்கே போவுதுன்னே தெரியில. வெசாலக்கிழமை சந்தையன்னிக்குப் பார்த்தா துக்கிளியூன்டு துக்கிளியூண்டு புள்ளைக இடுப்புல கொழந்தைய வச்சுக்கிட்டு ஜாமான் வாங்கிட்டுப் போவுதுக. சுத்திலும் பனியன் கம்பெனிக வந்துட்டுது. இந்த ஊர்க்காரங்க யாரு... வெளியூர்ல இருந்து வந்தவுங்க யாருன்னு ஒன்னும் எனக்கே தெரிய மாட்டீங்குது. அட, இப்பிடியே சேர்களைப் போடுங்கப்பா... அதான் வெயிலும் இல்லையே!” என்றவர் சேரில் அமர்ந்து கொள்ள, ராமசாமி கவுண்டரும், முத்துச்சாமி கவுண்டரும் சேர்களில் உட்கார்ந்தனர்.

“சரி மாமா. என்ன பண்ணலாம்ங்கறீங்க? உங்களுக்குத் தெரியாததையா இனி நான் பண்ணப்போறேன். புள்ளை என்ன சொல்லுது? அப்புக்குட்டி டேய்... இவுனுக்கு காது வேற கேக்காது. கத்திக் கத்தி சைகை வேற செய்யோணும். இங்க இழுத்தாந்து நிறுத்துடா உன் பேரனை” என்றதும் “சாமீ” என்றவன் கோபாலனைத் தள்ளிக் கொண்டு வந்து தலைவர் முன் நிப்பாட்டினான்.

“சாமி பொடணீல இவன் முடி வளர்த்தீட்டு புட்டுர்பைக்குல சுத்தீட்டு இருக்கப்பவே இப்புடி எதாச்சிம் பெருசா வில்லங்கத்தைக் கொண்டாந்துடுவான்னு நெனச்சுட்டே இருந்தனுங்க சாமி. இப்படி ஒரு காரியத்தை செஞ்சு போட்டானுங்ளே. நீங்க இவனை என்ன பண்டுனாலும் நானு ஒன்னுஞ் சொல்லலீங்க. இப்புடி ஒரு தப்பை எனக்கு முன்னாடி இருந்து எம்பட காலம் வரைக்கிம் செஞ்சதே இல்லீங்ஸெகா. பேசுறானான்னு பாருங்க சாமி ஒரு வார்த்தை.”

“அவனெல்லாம் பேசமாட்டான் அப்புக்குட்டி. ஜெயிலுக்குள்ளார போயி போலீஸ்காரங்ககிட்ட மிதி தின்னாத்தான் தெரியும்.”

“சாமி என்ன சொல்றீங்க? ஜெயிலுக்கா?”

“பின்ன, பத்தாவது படிக்கிற புள்ளைக்குத் தாலிய கட்டி கெடுத்து வச்சிருக்கான். இது அவுனுக்கே தெரியுமே! ஏண்டா எத்தனாவது வரைக்கும்டா நீ படிச்சிருக்கே? சொல்றா?”

“நானு டுவல்த் வரைக்கும் படிச்சிருக்கேனுங்க.”

“தாலி கட்டச் சொன்னது அவளாடா? இல்ல நீயே அதப்பண்டலாம், இதப் பண்டலாம்னு சொல்லித் தாலி கட்டினியா?”

“நான்தானுங்க கட்டறேன்னேன். சரோஜா சரின்னுடுச்சு.”

“எங்கடா கூட்டிட்டுப் போனே?”

“பச்சைமலைக்குத்தானுங்க.”

“யாரு? என்ன ஜாதின்னு தெரிஞ்சுதான் கட்டுனியா?”

“அதெல்லாம் தெரியாதுங்க. புள்ளைதான் என்கிட்ட லவ்யூன்னு மொதல்ல சொல்லுச்சுங்க. நல்ல புள்ளைன்னு கட்டிக்கிட்டனுங்க.”

“சரி சரி... நல்ல புள்ளைன்னு கட்டிக்கிட்டே. கைவசம் தொழிலும் இருக்குது காப்பாத்திடுவேன்னு வெச்சுக்க. நேரா திங்களூர் வழுவுக்குள்ளார போயி எவளையாச்சிம் லவ்யூன்னு சொல்லித் தாலி கட்டி குடும்பம் பண்டலாம்ல? இந்த ஏரியாவுக்கு வர்ற போதே எந்த ஏரியா இதுன்னு தெரியாமயா வந்திருப்பே? ஒழுங்கு மரியாதையா இந்த ஊரை உட்டு ஓடியே போயிடறேன்னு சொல்லிட்டீன்னா நீ தப்பிச்சே. இல்ல தகராறு பண்றதுன்னா இதபாரு... இப்பவே எஸ்.ஐயைக் கூப்பிடறேன். சொல்லு, உன்கிட்டவெல்லாம் வளவளன்னு பேசிட்டு இருக்கறதுக்கு இப்ப நேரமில்லை எனக்கு.”

“நானே நாளைக்கிக் காத்தால இவனெ இவங்காயா ஊருக்கே காஞ்சிக் கோயிலுக்கே தாட்டி உட்டிடறேனுங் சாமி” என்றான் அப்புக்குட்டி.

“நீ தாட்டி உட்டுருவே, அவன் போகணுமில்லே.”

“சொல்றா டேய் கோவாலா. சாமி கிட்ட சொல்றா. இல்லின்னா உன்னையக் கொன்னே கொண்டு போயி வீசிட்டுப் போயிடுவாங்டா” என்றான் அப்புக்குட்டி.

“சேரிங் நானு காத்தாலைக்கி ஊருக்கே போயிர்றனுங்க.”

“போயிட்டீன்னா ஒரேமுட்டா போயிடு. மறுபடியும் இந்தப் புள்ளைகிட்டே பேசணும், புடிக்கோணும்னு நெனச்சுட்டு சுத்துற வேலை எல்லாம் வச்சுக்கிட்டா உன்னைய என்ன பண்ணலாம்?”

“சாமி அவன் அந்தப் புள்ளை இருக்கிற பக்கம் தலை வச்சுக்கூடப் படுக்க மாட்டானுங்க.”

“நீ குறுக்க குறுக்க விலா ஓட்டாதடா அப்புக்குட்டி. அதை அந்தப் பையனே சொல்லட்டும். என்றா சொல்லு?”

“ஆமாங்க.”

“என்னடா மொட்டையா லோமாங்கொங்றே?”

“எங்கப்பிச்சி சொன்னாப்ல தானுங்க. நானு எங்கீம் போயி அந்தப் புள்ளைக்கித் துன்பங் குடுக்கமாட்டனுங்க.”

“டேய், நீயெல்லாம் ஒரு ஆளாடா? உன்னிய நம்பி எம்பட கழுத்தை நீட்டினேம் பாரு நானு. எம்பட கல்யாணம் நாசுவன் குசுவாவே போவட்டும்” என்ற சரோஜா கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றை உருவி எடுத்து கோபாலன் முகத்தில் விட்டெறிந்தாள்.

“அப்போ நானு புறப்படறனுங்க மாமா. டேய் அப்புக்குட்டி, சொன்னது சொன்னாப்புல நடந்துக்கோணும். மறுபடி பிரச்சினை எதாச்சிம் வந்துச்சுன்னா என்னைய மனுசனாவே நீ பாக்கமாட்டே ஆமா..” என்று எழுந்த தலைவர் வணக்கம் போட்டுவிட்டுக் கிளம்பிப் போனார். அவர் சென்றதும் இவர்கள் முன் “சாமி” என்று கும்பிடு வைத்தான் அப்புக்குட்டி. சரோஜா கோபாலனிடம் சென்று காறி அவன் முகத்தில் துப்பிவிட்டுப் போய் காரில் உட்கார்ந்தாள். அப்புக்குட்டி கோபாலனை இழுத்துக்கொண்டு போனான். இந்த விஷயம் அப்படியே திங்களூரோடேயே முடிந்து போய்விட்டது. சரோஜாவும் இந்த விஷயத்தை திங்களூரோடே விட்டும்விட்டாள். பத்தாவதில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாள். முன்னூற்றி தொன்னூறு மார்க். மேற்கொண்டு பெருந்துறைக்குப் படிக்க அனுப்புவார்கள் என்றுதான் எதிர்பார்த்தாள். அப்படியான பேச்சே வீட்டில் கிளம்பவில்லை. அந்த விஷயத்துக்குப் பிறகு அதிகமாய் அம்மாவோடோ, அப்பாவோடோ இவள் பேசிக் கொள்வதுமில்லை. எந்த நேரமும் டி.வி.தான். சித்தப்பா வீட்டில் பாதி நேரமும் இவள் வீட்டில் பாதி நேரமுமாய்ப் பொழுதை ஓட்டினாள். அண்ணன் கந்தசாமியிடம் மட்டுமே பேசுவாள். மாத நாவல்களை ஈரோட்டிலிருந்து வாங்கி வரச் சொல்வாள். திங்களூர் விஷயம் நடந்து முடிந்துகூட ஏழெட்டு மாதமாகிவிட்டது. அப் போதுதான் இவளுக்குள் இரண்டாம் முறையாக காதல் இவள் வயிற்றினுள் மீண்டும் வேர்விட்டது.

சாமிநாதன்

உள்ளூர்க்காரன்தான். அடிக்கடி இவள் பள்ளிக்குப் போகையில் பார்வையில் தட்டுப்பட்டவன்தான். இவனது அப்பன் சுப்பன் இருபது வருடங்களாக இவர்கள் பண்ணையத்தில் இருப்பவன்தான். வீட்டின் பின்புறம் மாமரத்தின் அடியில்கால் மேல் கால் போட்டுப் படுத்துக் கொண்டிருந்த சாமிநாதனை, தொட்டியில் ஒரு குடம் தண்ணீர் எடுத்து வரப்போனவள் பார்த்து அதிசயித்து நின்றாள். இவ்ளோ சிவப்பாய் அழகாய் அதுவும் நம் தோட்டத்தில்? கேள்வியில் நின்றவள் குடத்தில் தண்ணீரை நிரப்பி விட்டு எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டவள் காலை உதறினாள். நிலத்தில் நங்கென ஊன்றினாள். சலசலவென கொலுசு சத்தம் கேட்கவே சாமிநாதன் கிணற்றுப்புறமாய் முகத்தைத் திருப்பினான். சின்னக் கவுணுச்சி! மளாரென எழுந்து நின்றவன்,

“தேனுங் கவுணுச்சி” என்றான்.

“நீ எங்கெ எங்க தோட்டத்துல இருக்கே?” என்றாள்.

“உங்க தோட்டத்துக்கு வரப்புடா துங்றீங்ளா சின்னக்கவுணுச்சி?”

“நான் எதுக்கு வரவேண்டாம்ங்றேன். உங்கொப்பனைப் பார்க்க வந்தியா?”

“உங்க டிரேக்டரை ஒரு மாசத்திக்கி ஓட்டறதுக்கு வந்திருக்கணுங்க. இன்னா வரைக்கிம் குப்பை எடுத்து டிரேக்டர்ல கொட்டிக் கொண்டி வடகோட்டுக் காட்டுல கொட்டிட்டு வந்தனுங்க. சரீன்னு ஊடு போயி ஒரு வாய் கரைச்சுக் குடிச்சுப் போட்டு வந்து சித்தெ படுத்திருந்தனுங்க.”

“நீயி எத்தனாப்பு வரைக்கிம் படிச்சே?”

“பத்தாவது வரைக்கிந்தானுங்க.”

“குப்பை அள்றதுக்கு வந்திருக்கே?”

“தறிக்குத் தானுங்க போயிட்டு இருந்தேன். எங்கப்பன்தான் முந்தா நேத்து பெரிய கவுண்டரு பாக் கோணும் உன்னையென்னு சொல்றார்டான்னு சொன்னாப்ல. சரீ என்னன்னு கேட்டுப் போட்டுப் போவலாம்னு வந்ததீம் டிரேக்டர் சாவிய எடுத்துக் கையில குடுத் துட்டாப்ல. குடோனு ஓனருக்கு போனைப் பண்டி பையன் ஒரு மாசத்திக்கி வரமாட்டான். தோட்டத்துல வேலை இருக்குதுன்னு சொல்லிட்டாப்ல.”

“உனக்கு டிராக்டர் ஓட்டத் தெரியுமா?”

“அதென்ன கம்ப சூத்திரமுங்ளா சின்னக்கவுணுச்சி. அப்புறம் மேல படிக்கப் போவலீங்ளா நீங்கெ?”

“படிச்சு அஞ்சாறு ஆச்சு” என்று சரோஜா சொல்லியபோது சாமிநாதன் போன் அலறியது. 'தோழியா? என் காதலியா? யாரடி என் கண்ணே?'

“அட எடுத்துப் பேசு. நான் நின்னா என்ன?” என்று சரோஜா சொல்லிய பிறகே எடுத்து ஆன் செய்து 'ஹலோ' என்றான்.

“தோண்டா? சொல்றா! சாயந்தரம் ஆறு மணிக்கு விசயமங்கலம் பஸ் ஸ்டாப்கிட்ட வர்றேன். இப்பவா? வேலைக்காட்டுல இருக்கன்டா. செரி வெய்யி” என்றவன் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

“செல் எல்லாம் வச்சிருக்கியா நீயி.. நெம்பரைச் சொல்லு” என்றாள். இவன் நெம்பர் சொன்னான். அவள் மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். பின்னதான் சாமிநாதனுக்கு ஏன்டா நெம்பரை சின்னக்கவுணுச்சிக்கு சொன்னோம் என்றாகிவிட்டது.

கட்டிக்கொண்டிருந்த தலையணையை அருகே வைத்துவிட்டு செல்போனைக் கையில் எடுத்தாள். மணி பார்த்தாள். பத்து முப்பது ஆகியிருந்தது. எஸ் வரிசையில் சென்று சாமி என்ற பெயரில் நின்று சாமிநாதனுக்கு ரிங் விட்டாள். 'தோழியா? என் காதலியா? யாரடி என் கண்ணே...' பாடல் பாடியது. எதிர்முனையில் சாமிநாதன் எடுத்ததுமே இச் இச் இச்சென முத்தம் வைத்தாள்.

“சாமி சாப்டுட்டியா?”

“சாமி சாப்டுட்டியா?”

'டேய் கொரங்கா! தின்னு தொலச்சுட்டியாடா? ஏன்டா பேச மாட்டீங்றே? என்னடா கோவம் என் மேல?'

"ஏனுங்... சின்னக்கவுணுச்ச இப்புடி?"

"கூப்பிடாதடா இனிமேல் என்னை அப்புடி. எத்தனவாட்டிடா நான் சொல்றது உனக்கு? சின்னக் கவுணுச்சியாம் சின்னக்கவுணுச்சி. எனக்கென்ன கொம்பாடா மொழைச்சிருக்குது! கூப்புடுடா சரோஜா குட்டின்னு!"

"ஐய்யோ சின்னக்கவுணுச்சி ஏனுங்கோ நீங்க இப்புடி? நானு எப்புடீங்கோ போயி உங்க பேரைச் சொல்லிக் கூப்பிடுவேன்?"

"பின்னெ நீ கூப்பிடாமெ ரோட்டுல போறவனா என்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுவான். இங்க பாரு சாமிநாதா, நான் உன்மேல ஆசைப்பட்டுட்டேன். நீ பண்ண வேண்டிதெல்லாம் என்னெய லவ் பண்றது ஒன்னுதான். உனக்குப் பலதடவை சொல்லிட்டேன்."

"ஐய்யோ கவுணுச்சி. உங்களுக்கு நான் சொல்றது ஏனுங்கொ புரியமாட்டீங்குது? நானும் எங்கப்பனும் உங்க காட்டுல வேலை செய்யுற கூலி ஆளுகங்க சின்னகவுணுச்சி.

“ஏன்டா நானு பொம்பளைப்புள்ளை மனசுல இருக்குறத உன்கிட்ட சொல்றேன். நீ ஏன்டா ஒதுங்கி ஓடப்பாக்குறே?"

"கட்டி வெச்சுத் தோலை உரிச்சுப் போடுவாங்க பெரிய கவுண்டரும் பெரிய கவுணுச்சியும். சீப்புடிச்சு செத்துப் போயிருவேன் நானு."

"அடிச்சு வச்சுருவாங்கன்னுதான் இத்தினி நாளா பயந்துட்டுப் பேசாமல் இருந்தியாடா நீயி. அப்ப உனக்கும் என்மேல ஆசை இருக்குதுல்ல?"

"ஆசை இருக்காமப் போயிருமுங்ளா கவுணுச்சி. ரோட்டுல எத்தனை புள்ளைங்க போறாங்க. அழகா இருக்குற புள்ளைய ஆசையாப்பாக்குறதுதான்."

"நான் அழகா இல்லையா? அதைச் சொல்றா!"

"நீங்க கொள்ளைத்த அழகுதானுங்க."

"சரி, அன்னைக்கி தட்டுப்போர்கிட்ட மாட்டுக்குத் தட்டு எடுத்துட்டுப் போயி போடறதுக்கு நீ வந்தீல்ல. ஒரு முத்தம் குடுடான்னு கேட்டேன்ல. ஏன் மாட்டேனுட்டு போனே? கட்டி வெச்சு தோலை உரிச்சுப் போடுவாங்கன்னு பயந்துட்டுதானே?"

"கவுணுச்சி தூக்கம் வரலீங்ளா உங்களுக்கு? மணி பதினொன்னு ஆயிப்போச்சுங்க. தூங்குங்க நீங்க."

"எங்கடா தூக்கம் வருது எனக்கு? எந்த நேரமும் உன் நினைப்புதான். இப்போக்கூட நீயின்னு நினைச்சுட்டு தலைகாணிக்கு முத்தம் குடுத்துட்டு படுத்துட்டு இருந்தேன். நீ என்னடா பண்ணிட்டு படுத்திட்டு இருந்தே?"

"நானு ஒன்னும் பண்டுலீங்க கவுணுச்சி. தூக்கம் கண்ணை சொழட்டீட்டு வந்துச்சு. கூப்புட்டுப் போட்டீங்க. சுட்சு ஆப் பண்ணிட்டு வெச்சாத்தான் சத்தம் போடறீங்ளே!"

"நாளைக்கு மத்தியானம் என்னைக் கட்டிப்புடிச்சு உதட்டு மேல முத்தம் குடுக்குறியா?"

"நானெல்லாம் மாட்டேனுங்க"

"ஏன்டா மாட்டேங்றே? என் மேல உனக்கு ஆசை இல்லியா? இல்ல பயமா இருக்குதா?"

"ஒன்னுமில்லீங்க. என்னெயெ ஆளை விடுங்க."

"உன்னையெ நான் உடவே மாட்டேன்டா. சரி, மாமா என்ன பண்டுது?"

"மாமாவா? ஆருங்க?"

"ம். உங்கொப்பன் சுப்பன் என்ன பண்றான்?"

"அது ஒடம்பு வலின்னு மாத்திரை போட்டுட்டு எட்டு மணிக்கே படுத்து தூங்கீட்டுது."

"இப்புடி நீ என்மேல பிரியமே இல்லாமப் பேசறீல்ல. இருடா பார்த்துக்கறேன்."

"ஏனுங்க கவுணுச்சி பிரியமில்ல அது இதுன்னு பேசறீங்க. நீங்க நல்லா இருக்கோணுமுன்னுதான நான் நினைக்கிறேன். நாங்க எல்லாம் ஊசைன்னு நானே உங்ககிட்ட எப்புடிச் சொல்வேன்?" என்று சாமிநாதன் பேசிய பிறகுதான் சரோஜாவுக்கு மெதுவாய் புரிபட்டது எல்லாமே. இதற்கும் வழி பண்ணலாம் என்றே யோசித்தவள் மறுபடியும் சாமிநாதனிடம் ஆரம்பித்தாள்.

"சரி, எங்க தோட்டத்துல உன்னையெ வேலைக்கு சேர்த்தி உட்டது யாரு?"

"பெரிய கவுண்டருதானுங்க... கூப்புட்டு சாவி குடுத்தாரு."

"சரி, உன்னைய திடீர்னு அவரு கூப்பிட்டு சாவி எப்படி குடுப்பாரு?"

"அதெல்லாம் தெரியலீங்க. எங்கப்பன் சொல்லுச்சு வந்தேன்."

"நான்தான் எங்கப்பாகிட்ட சாமிநாதனைத் தோட்ட வேலைக்குக் கூப்பிடச் சொன்னேன்."

"ஐயோ!"

"என்ன லொய்யோ? எங்கம்மா கிட்ட நான் நம்ம விசயத்தைச் சொல்லி ஒரு வாரமாச்சு தெரியுமா?"

"ஐயோ! பெரிய கவுணுச்சிக்கும் தெரியுமா? மரத்துல என்னைத் தலைகீழுதா கட்டி வெச்சு கொல்லப்போறங்க."

"அப்புடி எல்லாம் ஒன்னும் நடக்காது. என் கண்ணுக்கு முன்னாடி உன்னைய அப்புடி செஞ்சுடுவாங்ளா? செய்ய உட்டுடுவனா நானு? எங்கம்மாகிட்ட நான் சொல்லிட்டேன். சாமிநாதன்தான் என்னோட ஊட்டுக்காரன்னு. நீ என்னைக் கட்டிக்கறேன்னு எங்கம்மாகிட்ட கேட்டுட்டா போதும் தெரியுமா!Ó என்று சரோஜா சொன்னதும்தான் சாமி நாதனுக்கே குழப்பமாகிவிட்டது.

"என்னடா, இத்தனை சொல்லிட்டேன். இன்னும் உனக்கு என்மேல நம்பிக்கை வரலீல்ல? போடா. உன்னைப் போயி நான் ஆசைப்பட்டு விரும்பினேன் பாரு. போன்லயாச்சும் ஒரே ஒரு முத்தம் குடேன்டா"

"ஐயோ சின்னக்கவுணுச்சி, நீங்க அதைம் இதைம் பேசிப் பேசியே என்னைய கமுத்திப் போடுவீங்ளாட்ட இருக்குதுங்க."

"அதைம் இதைம் என்னத்தைடா நான் பேசிட்டேன். உன்மேல ஆசைப்பட்டுட்டேன்னுதான இத்தனை நாளா படிச்சுப் படிச்சு சொல்லிட்டே இருக்கேன்.
நான் சாவுறேன். நான் செத்த பொறகாவது ஐய்யோ ஐய்யோன்னு அடிச்சுக்குவீல்ல" என்றவள் போனை கட் செய்தாள்.

சாமிநாதனுக்கு திடீரென இதயம் படபடவென துடிக்க ஆரம்பித்து விட்டது. சாவுறேன்னு சின்னக் கவுணுச்சி சொல்லிடுச்சே! ஐயோ, எக்குத்தப்பா எதாச்சிம் பண்ணிக்கிடுச்சுன்னா? ஐய்யய்யோ! நினைக்கவே பயங்கரமா இருக்கே! சாமிநாதன் திருப்பி சரோஜாவைக் கூப்பிட்டான். ரிங் ஆனது. ஹப்பாடா! சரோஜா கவுணுச்சி போனை எடுத்ததும் பேசி தப்பான முடிவுக்கெல்லாம் போகவேண்டாம் என்று சொல்லிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் சரோஜா போனை எடுக்கவேயில்லை. மறுபடி மறுபடி அடித்தான். ஆனால் சரோஜா சிரித்தபடியே எடுக்காமலேயே இருந்தாள். எத்தனை முறைதான் அடிப்பான் பார்ப்போம் என்றே ஏழு எட்டுமுறை எடுக்காமலேயே விட்டு சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு நிம்மதியாய்ப் படுத்தாள்.

ராமசாமி கவுண்டரின் அப்பன் ராமு கவுண்டர் புகைப்படம் வீட்டின் பூஜை அறையில் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. ராமு கவுண்டர் இறந்து பத்து வருடங்களாகிவிட்டது. ராமசாமிகவுண்டரின் அம்மா டொக் டொக்கெனத் தடியை ஊன்றிக் கொண்டே குனிந்தவாக்கில் பொக்கை வாயைமென்றுகொண்டே 'அதை எடுத்தாடா... அதை எடுத்தாடா' என்றே சொல்லிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தது.

ராமு கவுண்டரின் புகைப்படத்திற்கு மாலையைப் போட்டவர் மூன்று படப்பு இலைகளையும் நோட்டம் விட்டார். வடை, ஆப்பிள், ஆரஞ்சு, முறுக்கு, திராட்சை, சாப்பாடு, குடல் வறுவல், கோழி வறுவல் என்று படப்பு இலை நிரம்பியிருந்தது.

“போன சுடிக்கு வாடான்னு சாமிநாதனை டிவிஎஸ் குடுத்து தாட்டி உட்டேன். போயி கால்மணி நேரம் இருக்கும். இன்னம் காணமே!” என்று தன்னப்போல் பேசிக் கொண்டு வீட்டின் வெளிவாசலுக்கு வந்தார் ராமசாமி கவுண்டர். கிழவி தடியை ஊன்றிக்கொண்டே பின்னால் வந்தது!

“ஆரைடா பாத்துட்டு இருக்கே? தேங்காய ஒடச்சு ஊதுபத்தி காட்டினீன்னா போதும்ல! முத்துச்சாமி ஊட்டுக்கும் நான் போவோணும்டா! அவன் இந்த நேரத்துக்குக் கும்புட்டே முடிச்சிருப்பான். மணி ரெண்டுக்கும் மேல ஆயிப் போச்சாட்ட!” என்று பேசிக்கொண்டே வீட்டினுள் போய்விட்டது.
சாமிநாதன் டிவிஎஸ்ஸில் வீட்டின் முன் வந்து நின்றான்.

“ஏன்டா இவ்ளோ நேரம். எடுத்துக்குடு, நேரமாயிட்டு இருக்குது.”

“காத்து ரெண்டு வீல்லயும் ரொம்ப கம்மியா இருந்துதுங்ளா, சைக்கிள் கடைக்காரர்கிட்ட உட்டு ரெண்டு வீலுக்கும் காத்துப் புடிச் சுட்டு வந்தனுங்க” என்றவன் கவரில் இருந்த முழுப்பாட்டிலை உருவி எடுத்து நீட்டினான்.

“ஊரு வரைக்கும் போன ஒடனே வந்துடறனுங்க.”

“அட ஆச்சு எல்லாம். சாப்புட்டு போட்டே போயிர்லாம் இரு” என்றவர் வீட்டினுள் பாட்டிலோடு சென்றார். பூஜை அறைக்குள் நுழைந்தவர் பாட்டில் மூடியைத் திருகி நடுவில் இருந்த இலையின் சோற்றில் கொஞ்சம் ஊற்றிப் பிசைந்தார். ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு என பிய்த்து சோற்றில் பிசைந்து பெரிய தட்டத்தில் வைத்தார். தேங்காயை உடைத்து வைத்து சூடம் காட்டினார். 'எல்லாரும் கும்பிடுங்க' என்றவர் திருநீறு எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு தட்டை எடுத்துக்கொண்டு வீட்டின் மாடிப்படி ஏறினார். காகங்கள் தென்னை மரங்களில் இருந்து வீட்டின் மொட்டை மாடிக்குப் பறந்தன. தட்டுப்போர் மீது நின்று மாரன் எடுத்துத் தரும் தட்டுக்களை வரிசையாய் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த சுப்பன் ஒரு மணி நேரமாகவே பசி பசி என்று சொல்லிக்கொண்டிருந்தான். பறந்துபோகும் காகங்களைப் பார்த்தவன் “சாமி கும்புட்டுப் போட்டாங்ளாட்ட” என்றான்.

“இந்த வருசம் ரொம்ப லேட்டுப் பண்ணிப் போட்டாரு கவுண்டரு” என்றான் மாரன்.

“சிறுகொடலை பெருங்கொடலு தின்னுட்டு இருக்குது மாரா! இனி அவரு நம்பளை சாப்புடக் கூப்பிட வருவாரு. நானு இறங்கிடறேன்” என்ற சுப்பன் சாத்தியிருந்த ஏணியில் கீழே இறங்கினான். இருவரும் கிணற்றுத் தொட்டிக்குச் சென்று முகம், கை, கால் கழுவிக் கொண்டிருந்தபோதே கவுண்டரின் சப்தம் வீட்டின் பின்புறத்தில் இருந்து கேட்டது!

“டேய் சுப்பா! அவனையும் கூட்டிட்டு வாடா! மணி வேற மூனுக்கும் மேல ஆயிப்போச்சாட்ட”
இவர்கள் வீட்டின் பின்புறம் சென்றபோது திண்ணை மீது சுடு சாப்பாட்டுடன் இலை விரித்திருந்தது! இருவரும் படலில் செருகி வைத்திருந்த இவர்களது டம்ளர்களை எடுத்துக்கொண்டு போய் பாட்டிலோடு நின்றிருந்த கவுண்டர் முன் நீட்டினார்கள். சுப்பன் சாப்பிட்டு முடித்துவிட்டு வீடு வந்தபோது சாமிநாதன் திட்டிலில் கிடந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

“டேய், சாமி... சாமி எந்திரீடா” என்று சாமிநாதனைத் தட்டி எழுப்பினான் சுப்பன். 'என்னப்பா' என்றான் தூக்கக் கலக்கத்தில்.

“கவுண்டரு உன்னைய சாப்பாட்டுக்கு தாட்டி உடச் சொன்னாருடா. போயி ஒரு வாய் தின்னுபோட்டு வந்துரு. சரக்கு ஊத்துவாரு. வேண்டாம்னு சொல்லப்புடாது” என்றான்.

“சரீப்பா, இன்னம் சித்த நேரம் போகட்டும். பசி போட்டு என்னைக் கொன்னு எடுத்துச்சா. கொஞ்சம் ரசம் ஊத்தி இப்பத்தான் தின்னு போட்டு படுத்தேன். அஞ்சு மணிக்காட்டப் போய்க்கறேன்” என்று இவன் சொன்னதும் சுப்பன் ஒன்றும் சொல்லாமல் கட்டிலின் கீழ் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு விறவுதறிக்க வெளிவந்தான். அந்த நேரம் சாமிநாதனின் செல்போன் அலறியது. பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பார்த்தவன் சரோஜா நெம்பர் என்று தெரிந்ததும், தூக் கருமம் என்று எடுக்காமலேயே புரண்டு படுத்தான். ரிங் வந்து கொண்டேயிருந்தது, இவன் ஐந்து மணிக்கு எழுந்து கவுண்டர் வீடு புறப்படும் வரை!

“தேஞ் சாமிநாதா இத்தனெ நேரம்? சாலியா எங்காச்சிம் போயிருந்தியா? ஊட்டுல எல்லாரும் சாப்டாச்சு! கவுண்டர் கூட சாப்புட்டு போட்டு பெருந்துறை வரைக்கும் சோலின்னுட்டு போயிட்டாப்ல” என்று பேசிக்கொண்டே திண்ணையில் இலை விரித்து சாப்பாடு போட்டது பெரிய கவுண்டிச்சி. சரோஜா தாவணி பாவாடையோடு வீட்டின் பின் திண்ணைக்கு வருவதும் போவதுமாக இருந்தாள். அவள்தான் சரக்கு பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்து,
“குடிப்பீல்ல.. டம்ளரை நீட்டு” என்றாள். இவன் மறுப்பேதும் சொல்லாமல் டம்ளரை நீட்டினான். சரோஜா சரக்கு ஊற்றினாள். டம்ளர் நிரம்பியதும் நிறுத்தி,
"குடி. இன்னம் ஊத்துறேன். இன்னிக்கு எங்கம்மாகிட்ட நீ கேட்டுரு என்ன!" என்றாள். இவன் மடமடவென குடித்துவிட்டு மறுபடியும் நீட்டினான். சரோஜா மறுபடியும் இவன் டம்ளரை நிரப்பி விட்டு வீட்டுக்குள் போய்விட்டாள். சாமிநாதன் இலையின் முன் அமர்ந்து வறுவலை எடுத்து மோந்து பார்த்துவிட்டு டம்ளரைக் காலி செய்துவிட்டு வறுவல் மென்றான்.

“வேணுங்கறதைக் கேட்டு வாங்கித் தின்னு.” -பெரிய கவுண்டிச்சி இவன் அருகிலேயே நின்று கொண்டது.

“வறுவல் நல்லா இருக்குதா? உங் கொப்பனும் நல்லா இருக்குதுன்னு நாலு தடக்கா வாங்கித் தின்னான்” என்றது. சாமிநாதனுக்குக் கொஞ்சமாய் கிறுகிறுப்பு தட்டியது. சாப்பாடு கிடுகிடுவென வயிற்றுக்குள் இறங்கியது. சரோஜா கதவுக்கு அருகிலேயே நின்று இவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

“வேணுங்கறதை கேட்டு வாங்கித்தின்னு. வேணுங்கறதைக் கேளு.” பெரிய கவுண்டிச்சியின் சப்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது இவனுக்கு.

“ஊட்டுக்குள்ள தலைக்கறி வடைச்சட்டில இருக்கும். போயி எடுத்துட்டு வாடி சரோஜா. சாமிநாதன் திங்கட்டும்” என்றது.

சரோஜா வடைச்சட்டியோடு வந்தாள். இவன் கையை உயர்த்தி போதுங் சின்னக் கவுணுச்சி என்றான். Òபோதுங் பெரிய கவுணுச்சிÓ என்றான்.

“வேணுங்கறதைக் கேளு சாமிநாதா! வேணுங்றதைக் கேளு.”

பெரிய கவுண்டிச்சி குரல் கேட்க, இவன் சாப்பிடுவதை நிறுத்தி பெரிய கவுண்டிச்சி முகம் பார்த்தான்.

“சின்ன கவுணுச்சியெ எனக்குக் கட்டி வெச்சுட்டீங்கன்னா நானு மகராசனா பொழைச்சுக்குவேனுங்க” என்றான்.

“அடச் சக்கிலி நாயே! இவுனுக்கு வந்த ஏத்தத்தைப் பாரு” என்ற பெரிய கவுணுச்சி இலை முன் அமர்ந்திருந்தவனின் நெஞ்சில் எட்டி ஒரு மிதி வைத்தாள். சாமிநாதன் திண்ணையிலிருந்து அப்படியே வாசலில் தொப்பென விழுந்தான். பின் மண்டை ஏதோ வாசல் கல்லில் பொட்டென அடித்தது மாதிரி இருந்தது. சரோஜா கதவு வழியாக வீட்டினுள் ஓடுவது தெரிந்தது! வாசலில் கிடந்தவன் நிதானித்துக் கை ஊன்றி எழுந்து உட்கார்ந்தபோது கழுத்தில் ரத்தம் வடிவதைக் கண்ட பெரிய கவுண்டிச்சியும் போட்டது போட்டபடி எழுந்து வீட்டுக்குள் ஓடிப் போயிற்று. இவன் தடுமாறி எழுந்து அப்படியே வீடு நோக்கி நடந்தான்.

அடுத்த நாள் காலையில் பதினொரு மணிவாக்கில்தான் சாமிநாதன் கட்டிலில் இருந்து எழுந்தான். பின் மண்டை பயங்கரமாய் வலித்தது. செல்போன் அலறியது. சரோஜாதான். நேற்று அதன்பிறகு சரோஜாவிற்கு என்ன ஆச்சோ? செல்லை எடுத்தான்.

“சொல்லுங்கொ சின்ன கவுணுச்சி” என்றான்.

“சின்ன கவுணுச்சி இல்லடா. நான்தான்” என்றார் ராமசாமி கவுண்டர்.

“தேனுங் கவுண்டரே!”

“உங்கொப்பனைக் கேட்டேன். அவன் கட்டல்லயே கெடக்கறான்னு சொன்னான். நேத்து என்னதான் பண்டுனே நீயி? கவுண்டிச்சி சரோசாவைப் போட்டு சாத்தீட்டேகெடக்கறா. எட்டி ஒதச்சு தள்ளிட்டாளாமா கவுண்டிச்சி. இங்க நானு தோட்டத்துக்குப் போற கேட்டுக்கிட்டத்தான் நின்னுட்டு இருக்கேன். ஊட்டுக்குள்ள ஒரே ரச்சை. உன்னைய என்ன ஏதுன்னு கேட்டாத்தான் தெரியுமின்னு முத்துச்சாமி கவுண்டனும் சொன்னான். இங்க தான் நிக்கிறோம். சித்த வந்துட்டுப் போயிரு” என்றார்.

“இதென்னுங்... இப்பவே வாரேன்” என்றவன் எழுந்து செருப்பைத் தொட்டுக்கொண்டு கிளம்பினான். கிழக்கே இறங்கி வடக்கே நடந்தான். தூரத்தே கவுண்டர் தோட்ட கம்பி கேட் அருகே இரண்டு கவுண்டர்களும் நின்று கொண்டிருப்பது இவனுக்குத் தெரிந்தது. லுங்கியைக் கால்வரை இறக்கி விட்டுக்கொண்டு அவர்களிடம் வந்தான்.

“த்தென்றா.. மூஞ்சிகூட கழுவாம வந்துட்டியா?” முத்துச்சாமி கவுண்டர்தான் இவனைப் பார்த்ததும் ஆரம்பித்தார்.

“கூப்பிட்டீங்க. அப்பத்தான் எந்திரிச்சேன். சரின்னு போட்டு வந்துட்டனுங்க.”

“தென்றா அது, கழுத்துப் புறத்துல ரத்தமாட்ட காஞ்சு இருக்கு?”

“என்ன நடந்துச்சுன்னே தெரியலீங்க!”

“மப்பு அத்தனை ஏறிப்போச்சா நேத்து.”

“கவுணுச்சி டம்ளர்ல ஊத்தி உட்டாங்க... ரெண்டு டம்ளர்தான் குடிச்சனுங்க!”

“சின்ன கவுணுச்சிய பொண்ணு கேட்டியாமா நேத்து பெரிய கவுணுச்சிகிட்ட!” என்றார் முத்துச்சாமி கவுண்டர்.

“சின்னகவுணுச்சி தொந்தரவுதானுங்க எனக்கு இந்த இருவது இருவத்தஞ்சி நாளா! என்னெய லவ்வு பண்ணுதுங்ளாமா! சாமத்துல தூங்க உடாம போனுப்பண்டி போனுப்பண்டி.. தேங் கேக்கறீங்க!”

“என்கிட்ட சொல்லீருக்கோணு முல்லடா நீ மொதல்லயே!”

“நீங்கதான் என்னை சின்ன கவுணுச்சி சொல்லித்தான் வேலைக்கே தோட்டத்துக்கு சேத்துக்கிட்டீங்ளாமே!”

“அப்புடி வேற சொன்னாளா!”

“ஆமாங்க கவுண்டரே! பெரிய கவுணுச்சிக்கும் தெரியும். நீ ஏன்டா என்னை லவ்வு பண்ணமாட்டீங்றேன்னு ஒரே தொந்தரவுங்க. நேத்து கூட பெரிய கவுணுச்சிக்கிட்ட கேளு கேளுன்னு சொல்லுச்சுங்க.”

“தண்ணி மப்புல கேட்டே போட்டே! அப்புடித்தான?”

“நானு என்ன கேட்டேன் என்ன பேசுனன்னே தெரியலீங்க கவுண்டரே! சின்ன கவுணுச்சின்னு எத்தனையோ வாட்டி சொல்லீட்டணுங்க. கேக்கவே மாட்டீனுட்டுதுங்க.”

“டேய் ராமசாமி, இவன்மேல தப்பு ஒன்னுமில்ல. எல்லாம் அவகிட்டத்தான் வேலைத்தனம் பூராவும் இருக்குது. சரி சாமிநாதா, நீ வேணா நாளைல இருந்து தறிக்குடோனுக்கே போயிக்கோ. கணக்கு இருந்தா உங்கொப்பன் கையில குடுத்துடறோம். நீ போ” என்று முத்துச்சாமி கவுண்டர் இவனைப் போகச் சொல்ல, இவனும் திரும்பி வீட்டுக்கு நடந்தான்.

அன்று மாலையே ராமசாமி கவுண்டர் வீடு இழவு விழுந்த வீடானது! தகவல் தெரிந்த ஒரம்பறைசனம் காரிலும், பைக்கிலும் வீட்டிற்கு வந்த வண்ணம் இருந்தது! வழுவுச் சின்னான்தான் தன் அப்பனோடு தப்பட்டை காய்ச்சி அடித்துக் கொண்டிருந்தான். வீட்டின் உள்புறம் பெண்களின் அழுகை ஒலி கேட்டுக் கொண்டேயிருந்தது! மாதாரிகள் வேலி ஓரமாக கூட்டமாய் நின்றிருந்தார்கள். சரோஜாவின் பிணத்தை எரிப்பார்களா, புதைப்பார்களா? தெரியவில்லையே! என்று பேசிக் கொண்டிருந்தார்கள். “தீயி எரிய எரிய அப்புடியே ஓட்டம் புடிச்சுட்டு ஓடியாந்துச்சாமா. இது வழியா நேரா ஓடி வழுவுக்குள்ளார முட்டி ஓடி சாமிநாதன் ஊட்டு முன்னாடி போயி உழுந்து உருண்டு செத்துப் போச்சாமா சின்னகவுணுச்சி. பிதுறு கெட்டு என்ன பண்றம்னு தெரியாமத்தான ஓடியிருக்கும். அட ஓடின கவுணுச்சி நேரா தண்ணித் தொட்டிக்குள்ளார ஓடியாந்து உழுந்திருக்கலாமே!” மாதாரிச்சிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

ராமசாமி கவுண்டரும், முத்துச்சாமி கவுண்டரும் பங்காளிகளோடு வீட்டு வாயிலில் கைநீட்டிக் கொண்டிருந்தார்கள். சாமிநாதன் மாரனின் பின்னால் நின்று கொண்டே வரும்சனங்களைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். சின்ன கவுணுச்சி தானே சீமெண்ணெய் ஊற்றிப் பத்தவைத்துக் கொண்டதா. இல்லை கவுண்டரே சின்ன கவுணுச்சி மீது சீமெண்ணெய் ஊற்றிப் பற்றவைத்து சாவுடி என்று விட்டாரா? ஒன்றும் புரியாமல் அதே யோசனையில் நின்று கொண்டிருந்தான்....


நன்றி: உயிர்மை மாத இதழ்

...


Post Comment

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

பிலோமி டீச்சர்

வா.மு.கோமு


சிறுகதை

கலவியின்போது ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒரு முறையேனும் இயங்கினேனா? இல்லவே இல்லை போலத்தான் இருக்கிறது. ஒரு கட்டத்திற்கும் மேல் ஆணை நசுக்கவோ, தன்னுள் புதைத்துக் கொள்ளவோ முடியாமலே போகிறது. அதற்கும் மேலே போகலாம் என்றாலும் சூன்யம் தாக்குகிறது. மரணபயம் வந்து விடுகிறது. அந்த சமயத்தில் அந்த இடத்தில் எல்லையை வைத்தது யார்? எல்லோருக்குமே இப்படித்தானா? இல்லை, என்னை மட்டும்தான் அந்த உச்சநிலைக்கு மேல் மரணம் கவ்விக் கொள்ள முயற்சிக்கிறதா? இருட்டு சூழ்ந்து வரும் சமயம் கண்கள் சுழன்று களைத்துப்போய் விடுபட்டு மூச்சு வாங்கிக் கொள்வதுதான் தொடர்ந்து நடக்கிறது! பின் இதற்கா? இதற்குத்தானா? இந்த அசிங்கத்துக்குத்தானா? என்று கலவியின் மீது வெறுப்புப் போர்வை உடனே போர்த்திக் கொள்கிறது.

பத்து வருடங்களுக்கு முன்பாக அப்படியான களைப்பில் கணவன் தியோடரின் முகம் பார்த்து மிரண்டு போனாள் பிலோமி டீச்சர். வெறி மிகுந்த கோர மிருகத்தின் முகமாய் அது இருந்தது! கடைசியில் அவள் அவனிடம் அதை சொல்லப்போக, தியோடர் உண்மையாகவே கலவி சமயத்தில் மிருகமாய் மாறிப் போனான். சிகரெட் பற்றவைத்து இவளின் சிவந்த பருத்த தொடையில் சுட்டான். இவளைத் திருப்பிப் போட்டு பின்புற மேடுகளில் சுட்டான். இப்போது நினைக்கும்போது கூட அவனைத் தேடிப் போய் குரவளையைக் கடிக்கும் வெறி வந்தது! தியோடரோடு எண்ணி முன்னூற்றி ஐம்பத்தி ஒரு நாள்தான் இல்லற வாழ்க்கை வாழ்ந்தாள். கோர்ட்டில் நின்று முழுதாய்ப் பிரிந்து வந்து ஒன்பது வருடங்கள், இதோ போன வாரம்தான் முழுவிடுதலை கிடைத்தது போல ஓடிவிட்டது.

பிலோமி டீச்சர் தியோடரிடமிருந்து பெற்ற பூரண விடுதலைக்குப் பிறகு தன் சொந்த அப்பா அம்மாவிடமும் பாரமாய் போய்ச் சேராமல் சேலம் அம்மாபேட்டையில் தனித்தே மகள் எஸ்தருடன் அறையெடுத்துத் தங்கினாள். அப்பா அம்மாவும் அம்மாபேட்டையில் தான் என்றாலும் இரண்டு கிலோ மீட்டர் தள்ளி வந்து விட்டாள். அவர்களாக இவள் வீடேறி வந்து பேத்தியைக் கொஞ்சி எடுத்துப் போவதும் திருப்பிக் கொண்டு வந்து விடுவதுமாக இருந்தது. தியோடர் வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டு சென்னையில் இருப்பதாகக் காற்றில் வந்த சேதியை காற்றிலேயே அனுப்பி விட்டாள். எஸ்தர் இப்போது ஆறாவது வகுப்பில் இருக்கிறாள். கலவியின் நினைப்பு வந்த போதெல்லாம் தியோடர் என்கிற மிருகத்தின் ஞாபகங்கள் வந்து தொலைவது எரிச்சலாகவே இருந்தது பிலோமி டீச்சருக்கு.

தியோடருக்கு விடை கொடுத்து ஆறு வருடங்களுக்குப் பிற்பாடுதான் பிலோமி டீச்சரின் மனதிற்குள் முதல் காதல் பூத்தது! அது காதல்தானா என்பது கூட அவளுக்கு தெரியவில்லை. இவள் வீட்டுக்குப் பக்கத்து வீடு இந்தராணி வீடு. இந்தராணியின் கணவர் ஜீவாவில் டிரைவராகப் போய் வந்து கொண்டிருந்தார். இந்தராணியின் சொந்த ஊர் கோபி. அங்கேயே காலேஜில் படிப்பதை விட்டு விட்டு இந்தராணியின் தம்பி ஜான்சன் சேலம் வந்து பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி எடுத்து அக்கா வீட்டில் தங்கினான். வந்தவன் முழுதாகப் படிப்பையும் முடிக்காமல் இரண்டாவது வருடத்தில் டிஸ்கண்டினியூ செய்துவிட்டு கோபிக்கே ஓடிப்போனான்.

முதலில் சாதாரணமாகத்தான் எஸ்தரைக் தூக்கிக் கொண்டு செல்லம் கொஞ்சினான். எஸ்தரும் மாமா மாமா என்று எளிதாக ஒட்டிக் கொண்டாள். எப்போதாவது ஓரிரு வார்த்தைகள் பிலோமியிடம், ‘அப்படி இல்லைங்க டீச்சர், இப்படிங்க டீச்சர்’ என்றுதான் குறைவாய் பழகினான். அவனிடம் எந்த தப்பான எண்ணமும், பார்வையும் ஒரு முறை கூட இவள் பார்த்ததே இல்லை. இன்று வரை கூட! எஸ்தரை சர்ச்சுக்குக் கூட்டிப் போவது அவன்தான். பிலோமி தனக்கு நேர்ந்த துர்சம்பவங்களின் பாதிப்பால் சர்ச் போவதையே விட்டிருந்தாள். ஜான்சன் மாமா அது வாங்கிக் குடுத்தது, இது வாங்கிக் குடுத்தது என்று தின்பண்டங்களையும், பொம்மைகளையும் எஸ்தர் காட்டிய சமயம் அவளை இவள் திட்டவேயில்லை. ‘எதற்கு இப்படி?’ என்று ஒருமுறை பிலோமி வினவிய சமயம் ஜான்சன் பதில் ஏதும் பேசவில்லை. அவன் வாங்கித்தருவது அவன் சம்பாதித்த பணத்தில் கூட அல்ல என்பது பிலோமிக்குத் தெரியும். என்ன எதிர்பார்த்து இவன் இப்படி நடந்து கொள்கிறான். இவளுக்குள் ஆசிரியத்தனம் உள்நுழைந்து அவனை மேலும் ஏதாவது கேட்கலாம் என்று நினைத்துப் பார்க்கையில் அவன் முகம் கூம்பிப்போய் பெரிய தவறிழைத்தவன் போல தலைகுனிந்து இருப்பது கண்டு தொய்ந்து போனாள். பின் எப்போதும் அப்படி அவனிடம் தான் நடந்து கொள்ளக் கூடாது என்பதையும் உணர்ந்து கொண்டாள். பின் இரண்டு நாட்கள் ஜான்சன் இவள் வீட்டுப் பக்கம் வருவதைத் தவிர்த்தான். எஸ்தரோ ‘மாமாவைக் காணோமே!’ என்றாள். இந்தராணி வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். மாமா இல்லை என்று திரும்பி வந்தாள். மூன்றாம் நாள் காய்ச்சலில் விழுந்த எஸ்தரைக் காண வந்தவன் பதைபதைத்து ஆட்டோ ஏற்பாடு செய்து தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டோடினான். நகரில் இருந்த குழந்தைகளுக்கான மருத்துவ-மனையில் சேர்த்து இரண்டு நாள் தூங்காமல் அருகிலேயே இருந்தவனைக் கண்டபோது தான் அது பிலோமியின் மனதில் முதலாக வேர் விட்டிருக்க வேண்டும்.

எதுவுமே இங்கு திட்டம் போட்டு நடப்பதில்லைதான். யாருக்கும் யார்மீதும் பிரியம் தோன்றலாம். அதற்காகப் பெரிய சாதனைகள் நிகழ்த்த வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. ஜான்சனின் தூய ஆத்மாவை பிலோமி டீச்சர் ஒரு புள்ளியில் உணர்ந்து சிலிர்த்துப் போனாள். யாரும் தேடி வந்து அவளிடம் அன்பைத் திருப்பிச் செலுத்து என்று கூறவில்லை. அவன் அருகாமையில் இருப்பது திடீரென காதுகளை அடைத்தது! பெருமூச்சு வாங்கியது. இதயத் துடிப்பு அதிகமானது. ஒரே பதற்றமாக இருந்தது. டம்ளரில் சரியாகத் தண்ணீர் ஊற்ற முடியவில்லை. கீழே சிதறியது! ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் கொண்டு அவன் அருகாமையைத் தவிர்த்து வெளியே ஓடிவிட மனம் தூண்டிற்று! புயல்காற்று பயங்கரமாக வீசியது! காகிதக் குப்பைகள் பறந்தன! ஒரு சிறு தூசு படாமல் எப்போதும் போல் சாதாரணமாக நின்றாள் பிலோமி டீச்சர். திடீரென பூகம்பம் நிகழ்ந்தது! கட்டிடங்கள் சரிந்தன! இவள் மீது ஒரு சிறு துண்டு கூட விழவில்லை. பெண்மை என்றாலே சரணாகதி என்றுதான் பொருள். தூறா மேகமாய் பிலோமி டீச்சர். மகிழ்வோடு தனக்குள் வேர் விட்ட அன்பை ஏற்றுக் கொண்டாள். ஜான்சன் எஸ்தருக்கு டீயில் பன்னை நனைத்து அவள் வாயில் ஊட்டிக் கொண்டிருப்பதை பிலோமி டீச்சர் மகிழ்வோடு பார்த்தாள். காய்ச்சல் விட்டபிறகு எஸ்தர் முகத்தில் களைப்பு இருந்தது! இருந்தும் நிம்மதியாய் இருந்தது! மகிழ்ச்சியோ நிம்மதியோ இரண்டுமே எளிமையான நிகழ்வுகள்தான். அவற்றுக்கு எதுவுமே வேண்டியதில்லை. சும்மா இருந்தாலே போதும். அதை உணர்ந்திருந்தாள் பிலோமி டீச்சர்.

பின் வந்த நாட்களில் எல்லாமே, எப்போதும் போல் சகஜமாகவே நடக்கத் துவங்கின. இரவு வேளையில் சப்பாத்தியோ, பூரியோ போட்ட நாட்களில் எல்லாம் பிலோமி ஜான்சனையும் தன் வீட்டிலேயே சாப்பிட வைத்தாள். நான்கோடு கை அலம்ப முயற்சிப்பவனை மெலிதாய் அதட்டல் காட்டி மேலும் இரண்டை உண்ண வைத்தாள். எத்தனையோ நாட்களுக்குப் பிற்பாடு அவனுக்குப் பரிமாறுவதில் திருப்தியை உணர்ந்தாள். காதலில் இருளின் தன்மை இருப்பதைக் கண்டுணர்ந்தாள். பிலோமிக்குக் காதல் பயமாக இருந்தது! ஆனாலும் பயத்தை மீறி தவிப்பாய் இருந்தது! அவன் அருகாமை திகிலாய் இருந்தது! கூடவே கூச்சமாகவும் இருந்தது! ஜான்சன் தன் வீட்டினுள் எப்போது நுழைவான் என்ற தாகமும் தினசரி கூடிக்கொண்டது! தன்னை அவன் வரும் சமயமெல்லாம் அழகாய் வைத்திருக்க முயற்சித்தாள். கண்ணாடி முன் நின்று அலங்கரிப்பதில் தீவிரமானாள். உடல் மீது அதிக அக்கறை விழுந்தது! தனக்கிருந்த இலேசான தொந்தியைத் தடவித் துன்புற்றாள். ஜான்சனுக்கு சத்தியமாய் என்னைப் பிடிக்காது என்று தன் மீதே கோபப்பட்டாள். வயிற்றில் இருந்த தையல் அழுகையைத் தூண்டியது!

காதல் என்பதே பாதி வாழ்வு, பாதி சாவுதான். பிலோமி டீச்சர் வாழவும், சாகவும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள். ஒருசிலுவைப்பாடு, ஒரு புத்துயிர்ப்பு. இருளின் தன்மைதான் காதல். இருள்தான் ஆழ்ந்த அமைதி. சாவு கூட இருள்தான். மரணத்திற்கு என்றுமே கருப்பு நிறம்தான். காதலும்கருப்பு நிறம்தான். இரண்டிற்குமான ஒரே உறவு கருப்புதான்.

எப்போது ஜான்சன் வீட்டினுள் நுழைந்தாலும் தன்னை ஒரு பொருட்டாக மதிக்காமல் புத்தகங்களோடு போராடிக் கொண்டிருக்கும் எஸ்தரோடு போய் அமர்ந்து கொள்வது புதிராய் இருந்தது! அவனுடன் ஏதாவது பேச்சுக் குடுக்கலாம் என்றாலும் வார்த்தைகள் கோர்வையாய் வருவதில்லை. பதற்றம் கூடிக் கொள்கிறது. இத்தனை வயது கடந்த பிறகும் இப்படி வலைக்குள் வீழ்வது புதிராக இருந்தது. "பெண்தோழிகள் உண்டா ஜான்சன்? உன்னைப் போன்ற பையன்கள் பெண் தோழிகளோடு சினிமா தியேட்டர், டேம், பூங்கா என்று சுற்றுகிறார்களே!" சுவரைப் பார்த்து பிலோமி கேள்வியைக் கேட்டாள். "இல்லங்க டீச்சர், அதுக்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்." அவன்தான் சொன்னானா? இல்லை, நாம்தான் நிஜமாகவே அந்தக் கேள்வியைக் கேட்டோமா? என்று வேறு சந்தேகமாய் இருந்தது இவளுக்கு. ஜான்சனைத் திருப்பி வெடுக்கெனப் பார்த்தாள். மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் அமர்ந்திருந்தான். அவன் நாணத்தில் இருக்கிறானா என்பதை இவளால் கண்டறிய முடியவில்லை. "உன் படிப்பெல்லாம் எப்படிப் போகிறது?" என்றாள். "எதுவுமே புரிவதில்லை. இந்தப் படிப்பு பிடிக்கவுமில்லை, கெமிஸ்ட்ரி லேபில் பொம்மை மாதிரி சென்று சல்பியூரிக் ஏசிட்டுகளை வேடிக்கை மட்டும் பார்த்து வருகிறேன். கூடிய சீக்கிரம் இதை ஒதுக்கிவிட்டு கோபி சென்று விடுவேன்" என்றவனிடம் "கோபியில் உனக்குக் காதல் உண்டா?" என்றாள். "இந்த மூஞ்சியை எந்த பேக்கும் காதலிக்காது!" என்றான்.

காதல் என்றதும் பொறாமை, சினம், வெறுப்பு, ஆக்ரமிப்பு, பாசம் என்று எல்லாமும் தன்னுள் குடிகொண்டு தன்னை ஆட்டுவிக்கத் துவங்கிவிட்டதாய் சந்தோஷித்தாள் பிலோமி டீச்சர். இந்த முகத்தை எந்த பேக்கும் காதலிக்காதாமே! முட்டாள், உன் பக்கத்திலேயே ஒரு பேக்கு நிற்கிறது தெரியவில்லை. நொடியில் தனக்குள்ளிருந்து ஈரம் கசிவதையும் உணர்ந்தாள். பாம்பு சீறுவது போல மூச்சு வாங்குவதை நிறுத்த மனமில்லாமல் அனுபவித்தாள். சிறு பிள்ளையாய் ஓடிச்சென்று அவன் மடியில் தலை வைத்துப் படுக்கவேண்டும். அவன் மூக்கைத் திருக வேண்டும். அவன் முடிக்கற்றைகளைக் கோதி விட வேண்டும் என்றெல்லாம் பிலோமி நினைத்துக் கொண்டாள். ஜான்சனுக்கு எடுத்துக் கொள்ளச் சொல்லி தன்னையே தர வேண்டும் என பிடிவாதம் கொண்டாள்.

பிரியத்தின் முதல் அத்தியாயமே காதல் வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருக்காமல் கொடுப்பதுதான். அவனுக்கே அவனுக்கென்று எல்லாமும் தர தயாராயிருந்தாள். இவன் மீது காதல் என்ற உணர்வு தோன்றியதுமே இவ்வளவு மகிழ்ச்சியாய் உள்ளம் பூரிப்பதும், விரிந்து மணம் வீசும் மலராய் மாறுவதும் கூட ஒரு போதாமையை இவளுக்குள் நிரப்பியது. ஜான்சனுக்குள் காதல் என்ற செடி வளராத போதிலும் தான் அவனை நேசிக்கக் கிடைக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் நழுவ விடப் போவதில்லை என தீர்மானித்தாள் பிலோமி டீச்சர்.

ஒரு ஆறு மாதங்கள் பிலோமி டீச்சருக்குத் தவிப்பாய் ஓடியிருக்கும். ஜான்சன் இவளின் தவிப்பை தாகமாய் மாற்றிவிட்டு விடைபெற்றுப் போய் விட்டான். அருகில் இருக்கும் வரை தனக்கானதுதான் என்ற நம்பிக்கையில் தனக்குள்ளே மட்டும் வளர்ந்து வந்த செடி அவன் தள்ளிப் போனதும் தள்ளாட்டம் போட ஆரம்பித்து விட்டது! அடிக்கடி தலை வலி ஆரம்பமாயிற்று. உடல் மீது வைத்திருந்த நேசிப்பும் மறந்து போனது. வேறேதோ மீள முடியாத பள்ளத்தாக்கில் வீழ்ந்து போனதை உணர்ந்தாள். எஸ்தர், மாமா எந்த ஊருக்குப் போயிட்டார்? எப்போ வருவார்? என துளைத்தாள். எஸ்தர்தான் ஜான்சனை விரட்டி விட்டாள் என்று நினைத்து அவள் மீதும் கடிந்து கொண்டாள். நான்கு மாதம் போன பிறகு ஜான்சன் ஒரு முறை வந்தான். எஸ்தரை இழுத்துக் கொண்டு வெளியில் சென்றான். உள்ளே வந்தவனை "வா" என்று ஒற்றை வார்த்தை கூப்பிட்டதோடு சரி. அவன் மீது எதற்காகத் தனக்கு இத்தனை கோபம் வரவேண்டும்! அத்தனை கோபத்திலும் அவனுக்காய் ஹார்லிக்ஸ் போட சமையல்கட்டு நுழைந்தாள். அவனோ, ‘நாங்க கடைவீதி போய் வர்றோம் டீச்சர்’ என்று எஸ்தரோடு போய் விட்டான்.

அவன் திரும்பி வருவதற்குள் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆசை ஏதும் இன்றி சோபாவில் அமர்ந்தாள். தலைவலியும், குழப்பமும் ஒன்று சேர்ந்து கொண்டது. தனக்குள் அவன் மீது காமம் இருக்கிறதா என யோசித்தாள். ‘உறுதியாக’ என்றொரு குரல் தலைக்குள் எதிரொலித்தது. அவன் எப்படியும் எஸ்தரோடு வருவான். வந்தவனின் சட்டையைப் பிடித்து உலுக்கி, ‘ஏன்டா நாயி, திடீர்னு போனே?’ என்று சண்டையிடலாம். இல்லை, உள் நுழைந்ததும் அவனைக் கட்டிக் கொண்டு முத்தங்களிட்டு அழலாம் என்று பலவாறு யோசித்து தலையைப் பிய்த்துக் கொண்டாள். ஜான்சன் எஸ்தரோடு வீட்டினுள் நுழைய பின் ஒரு மணி நேரமாயிற்று. பிலோமி யோசித்திருந்தனவற்றையெல்லாம் அவனிடம் செய்யவில்லை. ‘இது மாமா வாங்கிக் கொடுத்துச்சு. இத பாரும்மா. ரிமோட்ல இந்த பொம்மை நடக்கும். பாரும்மா’ என்று இவள் முகம் தூக்கி எஸ்தர் குழந்தை பொம்மை காட்டினாள். திடீரென குழந்தையாக உருவெடுக்க முடியுமானால் எவ்வளவோ நல்லது என யோசித்தாள். ‘பிலோமி செல்லத்துக்கு என்ன வேணும்? ஏன் பிலோமி செல்லம் உம்முன்னு இருக்கு?’ என்றாவது ஜான்சன் தன்னைத் தூக்கிக் கொள்வான் என்று நினைத்தாள்.

"உடம்பு சரியில்லையா டீச்சர்? ஏன் என்னவோ போல இருக்கீங்க?" என்றான் ஜான்சன். அவன் குழந்தை பொம்மைக்கருகில் தரையில் அமர்ந்திருந்தான். "வொயிட் பேண்ட் போட்டுட்டு இப்படி தரையில உட்கார்ந்திருக்கே? அழுக்காயிடும். இப்படி சோபாவுல உட்காரு ஜான்சன்" என்றாள். குரல் பாதாளத்திலிருந்து ஒலிப்பது போல இவளுக்கே கேட்டது. "அதை விடுங்க டீச்சர். இன்னைக்கே ஈவினிங் நான் போறது தானே. ஆனா ஏனோ நீங்க ஒரு மாதிரியாத்தான் இருக்கீங்க!" என்றவனுக்கு "லேசா தலைவலி" என்றாள்.

‘ஏதாவது தலைவலி நிவாரண மாத்திரை போட்டுக் கொண்டீர்களா? இல்லை, நான் போய் வாங்கி வரவா?’ என்று சொல்வானோ, கேட்பானோ என எதிர்பார்த்திருக்க அவன் பொம்மை மீது கவனம் செலுத்தவே முகம் வாடினாள். "படிப்பை விட்டுட்டு கோபில போய் என்ன பண்ணுறே?" என்றாள் பிலோமி. எலக்ட்ரிகல் ஹார்டுவேர் கடையில் வேலைக்கு சேர்ந்து விட்ட விசயம் சொன்னான். அது கோபி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஈரோடு செல்லும் பாதையில் முன்னாலே இருக்கிறது என்றான். "கடை பேர் சொன்னா என்ன நாங்க வந்து உன்னைக் கடிச்சு தின்னுடுவமா?" என்றாள். குரலில் கோபம் இருந்ததை பின்னர் தான் உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள். அவனோ ‘கனி’ என்றான். "ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதுதான் அக்காவைப் பார்த்துவிட்டுப் போலாம்னு வந்தேன்" என்றான். ஏன் என்னையும், எஸ்தரையும் பார்க்க வரவில்லையா? என்று கேட்க நினைத்துக் கேட்காமல் விட்டாள். அது ஒரு ஆழமான பிச்சை எடுப்பாக அவளுக்குத் தோன்றிற்று. யாரையாவது காதலிக்கிறாயா? என்றும் கேட்கத் தோன்றிற்று! காதல் ஒரு பேராசையாகப் போய்விட்டதை பிலோமி உணர்ந்தாள். மறுகணம் தனக்கு மட்டுமே அவன் உடமையாக வேண்டும் என நினைத்தாள். எனக்கொரு பெண் தோழி இருக்கிறாள் என்றவன் கூறுகையில் தூக்குக் கயிறொன்றைத் தூக்கிக் கொண்டு சுற்றுவதாக நினைத்தாள். திடீரென கயிற்றை வீசிவிட்டு என்னை ஒரு செல்லப் பிராணியாகவாவது வைத்துக் கொள் என்று கேட்பது போல் நினைத்தாள். இது பிச்சையெடுப்பேதான்.

ஆணின் மனம் எந்த விதத்தில் யோசித்து செயல்படுகிறது என்பது பெண்ணிற்குத் தெரிவதில்லை. அதே போல்தான் ஆணிற்கும் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி விரும்பினாலும் ஒருவரை ஒருவர் வெறுக்கவே செய்கிறார்கள். ஒருவரை மற்றவர் தொல்லைபடுத்திக் கொண்டேதான் பயணம் செய்கிறார்கள். சண்டை பிடிப்பதுதான் பெண்ணின் இயல்பு. கை நீட்டுவது ஆணின் இயல்பு. ஒருவரை ஒருவர் அடக்கி ஆள்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள். யாராவது ஒருவர் சண்டையிட்டுக் கோபித்துக் கொண்டிருப்பது நல்லதுதான். குறைந்த அளவு கவனிப்பாவது அங்கு கிடைக்கும்.

யாரையாவது காதலிக்கத் துவங்கும்போதே இந்தக் காதல் நிச்சயம் ஜெயிக்காதோ என்று நினைக்கத் தூண்டும் அளவுக்குக் காதல் மிக மென்மையானது. ஆனால் தொடர்ந்து காதல் ஜெயித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆண்தான் தோற்றுப் பின்வாங்குகிறான். பெண் எப்போதும் தோற்பதே இல்லை. அப்படி அவள் தோற்றுப் போகிறாள் என்றால் கொஞ்சமேனும் அவளிடம் ஆண்மை இருக்க வேண்டும். ஒரு ஆண் காதலில் ஜெயிக்கிறான் என்றால் கொஞ்சமேனும் அவனுள் பெண்மை இருக்க வேண்டும். மென்மையானது எங்குமே ஜெயிக்கிறது. கடினமானது எங்கும் தோற்றுத்தான் போகிறது.

‘சொன்னா சொன்ன நேரத்துக்கு வர்றியாடி நீ? பார், வாங்கி வச்ச பூ கூட வாடிப்போச்சு!’ என்று ஒருவன் தன் காதலியை அடிக்கலாம். அங்கேயும் கூட அந்தக் காதலிதான் ஜெயிக்கிறாள். அவள் அவனைக் காதலிக்கிறாள் என்றால் நிச்சயம் அவள்தான் ஜெயிப்பாள். அவள் எப்போதும் சண்டை இடுவதில்லை. அவளும் சண்டையிட ஆரம்பித்தால் தோற்றுத்தான் போவாள். மென்மையை இழந்த பெண்மை தோற்றுத்தான் போகும். ஆனால் இப்படித்தான் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன. தப்பிச்சேன்டா சாமி, விட்டு விடுதலையானேன் என்று சொல்லும் பெண்ணிடம் எந்த மென்மையும் இல்லை. அவள் ஆண்களின் வழிகளைக் கையாள ஆரம்பித்து விட்டாள். அதனால் தோற்பதும் நிச்சயமாகிவிட்டது.

ஜான்சன் தன்னிடமும், எஸ்தரிடமும் விடைபெற்றுப் போனது கூட நினைவில் இல்லாமல் பிலோமி டீச்சர் சுவரையே வெறித்து அமர்ந்திருந்தாள். எஸ்தர் தட்டிய போதுதான் சுயநினைவுக்கு வந்தாள். ஏனோ அவளைத் தூக்கி மடியில் அமரவைத்துக் கட்டிக் கொண்டு முத்தமிட்டாள் பிலோமி. ஜான்சன் வந்து போனது கூட தனக்கு ஒரு விதத்தில் நிம்மதியைத் தருவதாகவும் திருப்திப்பட்டாள். அந்த திருப்தி மறுபடி மூன்று நான்கு மாதங்களுக்குத்தான். எஸ்தரை சாக்காட்டிக் கொண்டு கோபி சென்று பார்த்து வரும் எண்ணம் துளிர்விட்டது. அந்த எண்ணத்தைக் கூட செயல்படுத்த மேலும் மூன்று மாத காலமாகி விட்டது பிலோமிக்கு. தன்மானம் தடுத்து தடுத்துக் கேள்விகள் கேட்கத் துவங்கவே, பிலோமி பதில் சொல்லித் தீர்ப்பதற்கு அத்தனை மாதங்கள் எடுத்துக் கொண்டாள்.

கனி ஹார்டுவேர் கடைமுன்பாக இவளும், எஸ்தரும் நின்றது ஒரு சனிக்கிழமை காலை பத்தரை மணி. ஜான்சன் வெளியே டெலிவரி குடுக்கப் போயிருப்பதாகவும் வந்து விடுவானென்றும் அவன் எண்ணிற்கு வேண்டுமானால் பேசிப்பாருங்கள் என்று அவன் செல்போன் எண்ணைக் கொடுத்தார்கள். வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள். இவள் மகளைக் கூட்டிக்கொண்டு ஜூஸ் கடை சென்று இருவரும் ஜூஸ் சாப்பிட்டு விட்டு சாலைக்கு இறங்குகையில் எஸ்தர்தான் அவனைக் கண்டு மாமா என்று ஓடிப்போய் கட்டிக் கொண்டாள். ஜான்சன் அவளைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டான். பிலோமி தன் கன்னத்தைத் துடைத்துக் கொண்டாள். "வீட்டுக்கு வந்து நல்லா பழகிடறது! அவகிட்ட நல்லா செல்லம் கொஞ்சிப் பழகிடறது. படிப்பு வேணாம்னு ஓடிவந்து கடையில சேர்ந்துக்கறது. மாமா எங்கன்னு கேட்கிறவளுக்கு என்ன பதில் சொல்றது? அதான் கூட்டி வந்தேன்’’, என்றாள் பிலோமி. அவனோ இவள் பேசுவதைக் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. ‘எக்ஸாம் எழுதிட்டியா? பாஸ் ஆயிடுவியா?’ என்று எஸ்தருடனே பேசிக் கொண்டிருப்பது எரிச்சலாய் இருந்தது! என்கிட்டவும் சித்த பேசேன்டா!

மதியம் உணவு விடுதியில் சாப்பிடும் போது தான் இவளின் சிரமத்தை உணர்ந்தவனாக, "பாப்பா என்னைப் பார்க்கணுங்கறதுக்காக இவ்ளோ சிரமம் எடுத்துக் கூட்டி வந்தீங்களா டீச்சர். ஏனோ கஸ்டமா இருக்கு" என்றான். "எனக்கும்தான் உன்னைப் பார்க்கணும்னு இருந்துச்சு" என்று சொன்ன பிலோமி அவன் முகம் பார்த்தாள். அவன் முகத்தில் முதலாய்த் தெரிந்த மாற்றத்தைக் கண்டு உள்ளூர மகிழ்ந்தாள். குறிப்பால் விருப்பத்தை உணர்த்துவதில் சாமர்த்தியசாலி என்று தன்னையே மெச்சிக் கொண்டாள். பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதப் போகும் மாணவி போலவும் மிரண்டாள் திடீரென. பிலோமியின் கண்களில் தெரிந்த படபடப்பை ஜான்சனும் முதலாக உணர்ந்து, தான் என்ன சொல்லவேண்டும் இதற்கு? என்று பேசத் தெரியாமல் குழம்பினான். "இன்னும் செல்போன் வாங்கினதை என்கிட்ட சொல்லவே இல்ல பார்த்தியா!" என்றாள்.

ஜான்சன் குழம்பிப் போனான். இது சேலத்தில் வீட்டில் இருக்கும் டீச்சரே அல்ல என்பது டீச்சரின் குரலில் இருந்தே தெரிந்துபோனது. இத்தனை நாள் உற்றுப் பார்க்காத டீச்சரின் முகத்தை உற்றுப் பார்த்தான். உருண்டிருந்த அவள் கன்னங்களின் வளவளப்பைப் பார்த்தான். தன் பாக்கெட்டிலிருந்த நோக்கியா செட்டை எடுத்து டீச்சரிடம் நீட்டினான். அவள் வாங்கிப் பார்த்து "எவ்ளோ?" என்றாள். ஜான்சன் உணவை வாயில் திணித்துக் கொண்டு இடது கையின் ஐந்து விரல்களையும் விரித்துக் காட்டினான். "வாங்கி எவ்ளோ நாள் ஆச்சு ஜான்சன்?" என்றாள். "இரண்டு மாசம் டீச்சர்" என்றான். செல்போனைத் தன் ஜாக்கெட்டினுள் திணித்துக் கொண்டவள், "சாப்பிடு சாமி" என்று எஸ்தரிடம் சொன்னாள்.

சாப்பிட்டு வெளிவந்ததும், "அப்பா, அம்மா என் தங்கச்சியப் பார்க்கறீங்களா டீச்சர். ஒரு டவுன்பஸ் ஏறணும். அவ்ளோதான்’’ என்றவனிடம் மீண்டும், "உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்" என்று கோபமாய் சொன்னாள் பிலோமி. ஜான்சன் எஸ்தரைத் தன் தோளுக்கு தூக்கிக் கொண்டான். "ஆசையக் காத்துல தூது விட்டு" பிலோமியின் ஜாக்கெட்டினுள் செல்போன் பாடியது. ஜான்சன் பிலோமியைப் பார்த்தான். பிலோமி தன் ஜாக்கெட்டினுள் கைவிட்டு செல்போன் எடுத்து அவனிடம் நீட்டினாள். வாங்கியவன் ‘ஹலோ’ என்றான் அழுத்தி காதுக்குக் கொடுத்து! பின் முகம் மாறி கட் செய்து போனைத் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்வதா இல்லை, பிலோமியிடம் தருவதா என குழம்பி நின்றான். "உன் தோழியா? நான் இருக்கேன்னு தான் பேசலியா? நான் வேணா அதோ நிழற்குடையில போய் நின்னுக்கறேன். பேசிட்டு வா. கோபிச்சுக்கப் போறா!" என்றாள். "இல்லங்க டீச்சர். பாட்டு வச்சுக்கோ மாசம் முப்பது ரூபான்னு. கட் பண்ணிட்டேன்" என்றான்.

ஜான்சன் தன் பாக்கெட்டுக்கு செல்போனைக் கொண்டு சென்றபோது, போன் என்றாள் பிலோமி. இதென்ன விளையாட்டு எனப்புரியாமல் அவளிடம் நீட்டினான். வாங்கியவள் மறுபடியும் தன் ஜாக்கெட்டினுள் வைத்துக் கொண்டாள். "அப்ப உனக்குப் பெண் தோழி இருக்கா. இப்ப கூப்பிடலை. ஒருவேளை ஈவனிங் கூப்பிடுவா இல்லையா?’’ என்றாள். "அப்படியெல்லாம் எனக்கு யாரும் இல்லங்க டீச்சர்!" குரல் இழுத்துச் சொன்னான் வேண்டுமென்றே! அவள் விளையாட்டினுள் கலந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்குள்ளும் வந்துவிட்டது. ‘பொய்தானே சொல்றே!’ என்று பிலோமி டீச்சர் கேட்டால், ‘ஆமாம் இருக்கா’ என்று சொல்லி விளையாடும் ஆர்வமான சமயம் அவளோ, ‘நம்புறேன்’ என்றதும் பொசுக்கென்றாகிவிட்டது ஜான்சனுக்கு. "நான் உனக்குப் பெண்தோழியா இருக்கவா?" என்றாள். "சரிங்க டீச்சர்" என்றான். "ஸ்கூல்லதான் நான் டீச்சர். என்னை ஏன் டீச்சர் டீச்சர்னு கூப்பிட்டு மானத்தை வாங்குறே? இப்போத்தானே என்னை உன் தோழியா ஏத்துக்கிட்டே! உனக்குத் தோழியா இருக்கணும்னா சின்னப் பொண்ணுகளாத்தான் இருக்கணுமா?" என்றவளுக்குத் தன் பேச்சே ஆச்சரியமாயிருந்தது! கடைசிக்கு தன்னை தோழியாகவாவது ஏற்றுக் கொண்டானென்றால் மெதுவாய் காய் நகர்த்திக் கொள்ளலாமென்ற நம்பிக்கையும் வந்தது. அவனோ "சரிங்க பிலோமி" என்று சொல்லி இவளை அருவியில் நனைத்தான். அருவியின் குளிர்ச்சியில் சிலிர்த்தாள். இந்த நாளை இனிய நாளாய் அமைத்துக் கொடுத்த கர்த்தருக்கு நன்றி சொன்னாள். இந்த நொடியிலிருந்து தானும், எஸ்தரும், ஜான்சனும் மட்டுமே உள்ள உலகமாக இது மாறிவிட வேண்டுமென குழந்தையாய் பிரார்த்தித்தாள். எஸ்தரை இறக்கிவிடச் சொல்லிவிட்டு தன்னையும் ஒரு ஐந்து நிமிடம் அவனைத் தூக்கிக் கொள்ளச் சொல்ல ஆசையாய் இருந்தது! நான் உன் தோழிதானேடா! என்னையும் சித்த தூக்கிக் கட்டிக்கோடா.

"எனக்கு ஒரு செல்போன் வாங்கணும் இப்போ. நீ செலக்சன் பண்ணி வாங்கிக்குடு" என்றாள் பிலோமி. ஜான்சன் தன் நண்பனின் கடைக்கே கூட்டிப் போனான். நோக்கியாவின் தனக்கெடுத்த கிளாசிக் செட்டையே பிலோமிக்கும் எடுத்தான். பில்லுக்கு பிலோமி பணம் கொடுத்தாள். அங்கேயே சிம்கார்டு தன் பெயரில் எடுத்துக் கொடுத்தான். பிலோமியும் எஸ்தரும் ஜான்சனிடம் விடைபெறும்போது மதியம் ஒன்றரை ஆகிவிட்டிருந்தது. "எங்களைப் பார்க்கணும்னு செலவு பண்ணிட்டு சேலம் வந்துடாதே தோழா! நாங்களே வர்றோம்" என்றாள். எஸ்தருக்கு விடைகொடுக்கும் நிமித்தமாக அவள் கன்னத்தில் முத்தமிட்டான் ஜான்சன். "உன் புதுத்தோழிக்கு இல்லையாடா முத்தம்?" சிரித்தபடி சொல்லிவிட்டு பேருந்து ஏறினாள். பேருந்து புறப்பட்டதும் அவள் முகம் தெரியும் தூரம் வரை கையை அசைத்து விடைபெற்றாள்.

பின்னர்தான் இரு மாதத்திற்கு ஒரு முறை ஜான்சனை வந்து சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள் பிலோமி டீச்சர். கோபியில் இறங்கியதும் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துத் தங்கி விடிகாலையில் கிளம்பிப் போவதும் பழக்கமாயிற்று. ஜான்சனைப் பல முயற்சிகளுக்குப் பிறகு இந்த வருடத்தில்தான் நான்கைந்து முறை எடுத்துக் கொண்டாள். எப்போது வந்தாலும் திரும்பிப் போகையில் அவன் பாக்கெட்டில் செலவுக்கு என்று பணம் திணித்துவிட்டுப் போவதையும் வழக்கமாக்கிக் கொண்டாள். ஜான்சன் அதற்காய் பலமுறை தடுத்தும் இருக்கிறான். "ஜாலியா இருப்பா, நான் இருக்க முடியுமா? சுடிதார் போடணும்னு ஆசைப்படறேன். முடியுமா? நான் குண்டுடா. நானும், எஸ்தரும்தான். நாங்க என்னடா செலவு பண்றோம். நீதான்பா எனக்கு ஜாலி. நீ ஜாலியா இருந்தா தான் நான் சந்தோஷமா இருப்பேன். நான் தப்பான பொம்பளையா ஜான்சன்? நீ சொல்லு! நீ சொல்லு! என்னை என்ன பண்ணச் சொல்றே? எனக்கு முப்பத்தி நாலு வயசு. என்ன பண்ண, எனக்கு உன் மேல எதுக்குத்தான் இந்தப் பேய்த்தனமான காதல் வந்துச்சு! நான் லவ் பண்ணக்கூடாதாப்பா? எனக்கு ஆசை வரக்கூடாதாப்பா? உனக்கு என் மேல லவ் இல்லாட்டி போச்சாது. என்னைக் கட்டிக்கோப்பா. நான் உன் மேல விழுந்து அமுக்குறேனே, உனக்கு வெய்ட்டா சிரமம் குடுக்கறேனா? ஒண்ணுமே சொல்ல மாட்டிங்றேப்பா நீ! இந்த குண்டி கூட ஏன்டா பழகுனோம்னு தோணுதா? எங்கே என் கண்ணைப் பார்த்துச் சொல்லு. என்னைப் பிடிச்சிருக்கா! பிடிக்கலன்னாலும் எனக்காகப் பொய்யாச்சும் சொல்லுப்பா... ப்ளீஸ்!’’ என்று பிலோமி கீச்சுக் குரலில் கேட்கும்போது "ரொம்பப் பிடிச்சிருக்கு" என்று தழுவிக் கொள்வான். அவன் மார்பில் தலை சாய்த்துக் கொண்டு, ‘‘எனக்குப் போதும். நான் செத்துடறேன் இன்னிக்கு" என்பாள். அவனோ தலையில் குட்டுவான். திடீரென "ஸ்ஸ்" என தலை தூக்கி, "நான் நிஜமாலுமே செத்துட்டா என்னப்பா பண்ணுவே? அழுவியா?" என்பவளைப் பேச விடாமல் உதடு கடித்து சப்புவான். கலவிக்குப் பிறகு ஜான்சனின் முகம் சாந்தமாய் இருப்பது கண்டு பயமேதும் இல்லாமல் அவன் நெற்றியில் முத்தம் வைப்பாள் பிலோமி டீச்சர்.

காமத்தின் சக்திதான் அன்பாக மலருகிறது. ஆனால் காமத்திற்கு எதிராக எல்லோருமே விரோதம் பாராட்டுகிறார்கள். காமத்தால்தான் எல்லோருமே பிறந்திருக்கிறார்கள். காமம்தான் படைப்பின் ஆரம்ப நிலையாக கடவுளே ஏற்படுத்தியது. கடவுளே பாவமாகக் கருதாத ஒரு செயலைப் பாவச்செயல் என்று எல்லோருமே சொல்கிறார்கள். சீ, அசிங்கம் என்று ஒதுங்குபவர்களே கூட அதே சீ அசிங்கத்தில் தான் முக்குளிக்கிறார்கள்.

ஒரு பெண் உண்மையாக ஒருவனை விரும்பினால் அவளிடம் எந்த ரகசியமும் இருக்காது. எல்லாவற்றையும் அவனோடு பகிர்ந்திருப்பாள். அப்போது அவளது இதயம் சுத்தமாகத் திறந்திருக்கும். அவள் உடலும் அவனுக்காக எந்த நேரமும் தயாராக இருக்கும். அவன் எங்கு கூப்பிட்டாலும் உடன் செல்லத் தயாராய் இருப்பாள்.

பிலோமி அறைக்குள் கட்டிலில் கிடந்தாள். பேருந்து பயண அலுப்பு அவளைத் தூக்கத்திற்கு இழுத்து விடும் போல் இருந்தது. ஜான்சன் இவளை அழைத்துப் பேசி ஒரு மணிநேரத்திற்கும் மேலாகி இருந்தது. அவன் கூப்பிடுகையில் கொளப்பலூர் அருகே இவள் வந்த பேருந்து பின்வீல் காற்றுக் குறைந்து போனதால் நின்று போயிருந்தது. இவளும் வேறு பேருந்து ஏறிவிட்டதாகவும் பத்து நிமிடத்தில் வந்து விடுவதாகவும் காத்திருக்கும்படியும் சொன்னாள். இவள் வந்தபோது கோபி நிறுத்தத்தில் நுழைந்து நின்றபோது இறங்கி அவனைத் தேடியவள் வழக்கமான இடத்தில் அவன் இல்லாதது கண்டு வேதனையானாள். இருந்தும் அவனது எண்ணிற்கு அழைக்கையில் அது சுவிட்ச் ஆஃப் என்றது. ‘விளையாடுகிறானா? அப்படி ஆளும் இல்லையே அவன்.’ அதிகம் குழப்பிக் கொள்ளாமல் வழக்கமான லாட்ஜில் அறை எடுத்து ரூமிற்குள் வந்ததும் குளியல் ஒன்றைப் போட்டு, கொண்டு வந்திருந்த நைட்டியை அணிந்து கொண்டாள் மீண்டும் அவன் எண்ணிற்கு முயற்சித்து சோர்ந்து கட்டிலில் விழுந்தாள். இந்த ஞாயிறு தனக்கு சரியில்லாத ஞாயிறோ? வந்த பேருந்து பாதியில் நிற்கிறது. அழைத்தவன் செல் அணைந்து கிடக்கிறது. பிலோமி அரைத்தூக்கத்தில் இருந்தபோது அவளது செல்போன் அழைத்தது. "உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே" ஜான்சன்தான். "தடியா, சுவிட்ச் ஆப் பண்ணிட்டு விளையாடறியா? உன்னைக் கொன்னுடுவேன்" என்றாள். "பிலோமி, ரூம் நெம்பர் சொல்லு" என்றான். ஐந்து நிமிடத்தில் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டதும் அதிர்ந்தாள்.

"ஏண்டா? எப்படிடா ஆச்சு? ஐயோ யேசுவே" உதடு பிதுங்க எழுந்தோடிப் போய் அவன் வலது கையில் தென்பட்ட காயக் கட்டை நடுங்கும் விரல்களால் பிடித்து வீறிட்டாள். தலையில் இருந்த கட்டையும் பார்த்தவள், "எப்படிடா? ஏன்டா சுவிட்ச் ஆப் பண்ணே?" கட்டிக் கொண்டு அழுதாள். ஜான்சன் அவளின் அழுகையையும், அன்பையும் கண்டு பயந்தான். இடதுகையால் விலக்கிவிட முயன்று தோற்றான்.

"சின்ன ஏக்ஸிடெண்ட்தான். காயம் பெரிசில்ல பிலோமி. டாக்டர்தான் மருந்து வெச்சு வெள்ளைத் துணி சுத்தி பெரிய காயம் மாதிரி பண்ணிட்டாரு" என்றான். "அப்படி என்ன அவசரம் உனக்கு? எங்க போய் விழுந்தே?" பிடியை விட்டவள் பட்டு பட்டென இவன் கன்னத்தில் இரண்டு அறை கொடுத்து மீண்டும் கட்டிக் கொண்டாள். "நாய், பைக் ஏறிட்டா பேய் மாதிரி ஓட்டாதேடா ஓட்டாதேடான்னு சொன்னல்ல! பெருசா ஆயிருந்தா? நெனச்சுப் பார்டா! நீ என்னெ சாவடிக்கிறீடா!" அழுதாள்.

பிலோமியின் அழுகையில் இருந்த தூய காதலை தரிசித்தவன் வெட்கித்தான். தன் மீதே வெறுப்படைந்தான். தான் மனிதனே அல்ல என்றும் யோசித்தான். இளமை வேகத்துக்கு வந்து கிட்டிய தங்க முட்டையிடும் வாத்து என்றுதான் இதுவரை ஜான்சன் அவளோடு பழக்கமாயிருந்தான். இது வேறு என்று இந்த அழுகை அவனுக்கு உணர்த்திற்று. வண்டி ஒன்று எடுக்கணும் என்று சொன்னபோதே கையில் இருபதாயிரம் கொடுத்து டியூ கட்டிக்கலாம் என்று பிலோமி சொன்னபோது கூட அவளின் ஆழமான பிரியம் அவனுக்குத் தெரியவில்லை. ‘அப்படி என்ன அதிசயம் பிலோமி நான்? நான் ஒன்றுமேயில்லை. எல்லோரையும் போலத்தான் பசிக்கும்போது சாப்பிடுகிறேன், தூக்கம் வருகையில் தூங்குகிறேன். பிலோமி பிலோமி, ப்ளீஸ்! இத்தனை அன்பை என் மீது கொட்டவேண்டாம்.’

பிலோமி அமைதியான பிறகு இவனைக் கூட்டிப் போய் படுக்கையில் அமர வைத்தாள். இவனோடு ஒட்டி அமர்ந்து, "நீயும் அழுதியாப்பா. சாரி, உன்னை அடிச்சுட்டேன். உனக்கு எதாச்சும் ஒன்னுன்னா நான் என்ன ஆவேன்? பயந்துட்டேன். சாரி, என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு" என்றாள். இவன் ‘பிலோமி’ என்று முனகினான். "என்னப்பா முனகுறே? வலியா இருக்கா?" என்றாள். ‘இல்லை’ என தலையாட்டினான். "பின்ன என்னவாம் பிலோமிக்கு?" என்றாள். "இத்தனை பிரியம் என் மேல வேண்டாம் பிலோமி. என்னால தாங்க முடியல. அழுகை வருது" என்றான். "ச்சி லூசு. அதுக்கெல்லாம் என்ன அளவு வச்சுட்டா இருப்பாங்க!" என்றவள் உள்ளாடை அணியாத தன் மார்புகள் மீது அவன் முகத்தை இழுத்து வைத்து அழுத்திக் கொண்டாள். அவன் மெலிதாக விசும்பினான்.

காதல் என்பது பாசம் வைப்பதல்ல. அது உணர்ச்சிவசப்படுதலும் அல்ல. உங்கள் தோழி ஏதோ ஒரு விதத்தில் உங்களை முழுமையடையச் செய்தாள் என்ற ஆழமான புரிதலே காதல்! சற்று நேரத்திற்கெல்லாம் பிலோமி கூடலுக்கான வாசத்தை தன் உடலில் இருந்து பரப்ப ஆரம்பித்தாள். ஜான்சன் அந்த நறுமணத்தை நன்கு உணர்வான். அந்த வாசம் அவனைக் கிளர்ச்சியுறச் செய்யும். தன் கை பிலோமியின் உடலில் எந்த இடத்தில் பட்டாலும் முனகுவாள். அவள் முனகல் இவனை வா சீக்கிரம் வா! என்றே அழைக்கும். இருவரும் வெட்கங்களைத் துறப்பார்கள். உலகை மறந்து வேறொரு உலகினுள் பிரவேசிப்பார்கள். அப்படித்தான் புதிய உலகினுள் நுழைந்து பார்த்துவிட்டுத் திரும்பவும் களைப்பாய் கிடந்தார்கள். "சிரமமா இருந்துச்சா?" என்றாள். அவன் உதடு பிதுக்கினான். "வலி போயிடுச்சா? இருந்துச்சா?" என்றாள். பிரிந்து எழுந்தவள் அவன் செல்போனைக் கையில் எடுத்துக் கொண்டாள். "நல்ல நல்ல பாட்டு வச்சிருப்பியே. ப்ளூடூத் ஆன் பண்ணி இன்னைக்கு என் செட்டுல இருபது பாட்டாச்சும் ஏத்தி விடறே!’’ என்றவள் தன் ஹெட்போனை எடுத்து காதுக்கு வைத்து செட்டில் பின்னை குத்திக் கொண்டாள். மை மியூசிக் சென்று பாடல் ஆன் செய்தாள். தேவனின் கோவில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தேவனே. ‘‘சூப்பர் பாட்டுப்பா’’ என்றாள் பிலோமி. இவளின் கால்களுக்கருகில் அமர்ந்து கால் விரல்களில் நெட்டை உருவிக் கொண்டிருந்தவன் ‘என்ன பாட்டு?’ என்று சைகையால் கேட்டான். சப்தமாய் காது கேட்காதவனுக்குச் சொல்வது போல ‘‘தேவனின் கோவில் மூடிய நேரம்’’ என்னோட செட்லயும் இந்த பாட்டு வேணும், என்றாள். ஒரு சந்தனக்காட்டுக்குள்ளே முழுச்சந்திரன் சாயயிலே இதும் வேணும் என்றாள். அவனோ இவள் தொடையில் இருக்கும் கருப்பு வடுக்களைத் தொட்டுக் காட்டி ‘என்ன?’ என்று சைகையால் கேட்டான் "உன் தலை!’’ என்றவள் அருகில் கிடந்த நைட்டியை எடுத்து இடுப்பில் இருந்து தொடை வரை போர்த்திக் கொண்டாள். அவன் முகம் வாடிப் போவதைக் கண்டவள், ‘எடுத்துக்கோ’ என்று அவனைப் போலவே சைகை செய்தாள். ‘மகிழும் பூவே எந்தன் மணிமுத்தே’ பாடலுடன் கூடவே முனகிக் கொண்டே அவள் வந்தபோது ரிங் வந்தது. ‘தன்னந்தனி காட்டுக்குள்ளே. . . ஜோடி நாம வீட்டுக்குள்ளே’ பீட்டர் என்று பெயர் வந்தது! அவனிடம் கொடுக்கலாமா என்று நினைத்தவள் அவன் தன் வயிற்றின் மீது முகம் வைத்து சுகமாய் கட்டிப் படுத்திருப்பது கண்டு அழைப்பை எடுத்தாள்.

"டேய் வக்காலோலி ஜான்சா . . . . இன்னுமாடா அந்த குண்டியப் போட்டு குத்தீட்டு கெடக்கே? நானும் கனகராஜனும் பஸ் ஸ்டாண்ட் டாஸ்மாக்குல நின்னுட்டு இருக்கோம். சீக்கிரம் வந்து எங்களுக்கு ஒரு ஆஃப் நெப்போலியன் வாங்கிக் குடுத்துட்டு நீ மகராசனாப் போயி குத்தீட்டு கெட அந்தக் குண்டிய. . . அவ பணங் குடுத்தாள்னா நைட்டு நீ மட்டும் தனியா உட்கார்ந்து ஏத்தீட்டுப் போயிடாதே. . . என்னடா பேச்சவே காணம்" என்றபோது இவளாகத் துண்டித்தாள்.

தலை சுக்கு நூறாக வெடித்தது போல இருந்தது பிலோமிக்கு! இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது! நடுச்சாலையில் தன்னை அம்மணமாக்கி ஜான்சன் எல்லோரும் பார்க்க முடுக்குவது போல இருந்தது! ஓடிய நதி திடீரென உறைந்து போய் நின்றது. குணப்படுத்த முடியாத காயம் ஒன்று தனக்கு நொடியில் ஏற்பட்டுப் போனதை உணர்ந்து அவனைத் தள்ளி விட்டு எழுந்தாள். அவளுக்கு அங்கிருப்பது தீயின் மீது நின்று கொண்டிருப்பது போலிருந்தது! தன் பாவாடை, ஜாக்கெட்டை எடுத்து அணிந்துகொண்டாள். இந்த தீப்பிடித்த பகுதியில் இருந்து தப்பிப் போகும் அவசரத்தில் சேலை அணிந்து கொண்டாள். தன் பேக்கினுள் நைட்டியை சுருட்டித் திணித்தாள். ‘‘என்ன அவசரம் பிலோமி’’ என்றெழுந்தவன் தன் செல்போனை பெட்டில் இருந்து எடுத்து பாக்கெட்டில் செருகிக் கொண்டான். ‘‘ஏதோ பயந்துபோன மாதிரி இருக்கே பிலோமி நீ" என்றான். "ஒண்ணுமில்லேடா நான் போறேன்" என்றாள். "நான் கொண்டு வந்து விடறேன். என்னாச்சு உனக்கு? லூசு மாதிரி பண்றே பிலோமி நீ. . ." அவன் பேசப் பேச அறைக்கதவை நீக்கி வெளியேறினாள் பிலோமி டீச்சர்.

‘ப்ளூடூத் வழியாக நல்ல பாடல்களை ஏற்றி விடடா’ என்றவள் இப்படி பேய் அடித்துவிட்டது போல ஓடுவானேன். ‘கிறுக்குப் புடிச்ச குண்டி’ என்று நினைத்தவன் நிதானமாய் அறையை விட்டு வெளியேறிப் படிகளில் இறங்கினான். ஒரு வேளை தன் பைக் நிற்குமிடத்தில் வருவேன் என்று நின்றிருக்கிறாளோ என்று வராந்தா தாண்டி வெளிவந்து பார்த்தான். பிலோமி இல்லை. இவன் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினான். பஸ் ஸ்டாண்டினுள் நுழைந்தவன் பேக்கரி முன் வழக்கம் போல வண்டியை சைடு லாக் போட்டு நிறுத்தி விட்டு பிலோமியைத் தேடி ஜனக் கூட்டத்தில் நுழைந்தான். ஈரோடு செல்லும் ராணா பேருந்தின் படிகளில் பிலோமி ஏறுவது தெரிந்தது இவனுக்கு. ஜான்சன் அவசரமாய் ராணாவை நெருங்கினான். ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த பிலோமி முன்நெற்றியில் விழுந்த முடியைக் காதினோரம் விரல்களால் இழுத்து செருவிக் கொண்டு ஜன்னலோரம் நிற்கும் ஜான்சனைப் பார்த்தாள், "ப்ளீஸ் பிலோமி. அடுத்த பஸ்ல போய்க்கலாம் இறங்குடா... என்ன கோபம் உனக்கு" என்றான். "கோபமெல்லாம் இல்லடா. எனக்கு என் மேலதான் கோபம்" என்றாள்.

சமயம் பார்த்து ஜான்சனின் செல்போன் அலறியது. எடுத்து காதுக்குக் கொடுத்து ‘ஹலோ’ என்றான். "வந்துட்டியா இல்லியாடா? எவ்ளோ நேரம் டாஸ்மாக் கடை முன்னாடி நீ வருவே வருவேன்னு பார்த்திட்டு இருக்கிறது! அப்பலையா தான் வர்றேன், வரலைன்னு ஒரு வார்த்தை சொல்லாம கட் பண்ணிட்டே. இன்னுமாடா செஞ்சுட்டே இருக்கே அந்தக் குண்டிய?’’ என்றான் பீட்டர் போனில். "அப்பலையா ஒருக்கா பண்ணுனியா போன்?" என்றான் ஜான்சன். "ஆமாண்டா, பத்து நிமிசம் இருக்கும். . ." என்றான் பீட்டர். அதற்குள் பஸ் கிளம்புவது தெரிந்து போனை கட்செய்தான் ஜான்சன். பிலோமி இவனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. ராணா பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியேறியது. பிலோமி தன் செல்போனை எடுத்து ஆஃப் செய்து பின் மூடியைக் கழற்றினாள். சிம் கார்டை வெளியெடுத்து ஜன்னல் வழி வெளியே வீசி எறிந்தாள்.

ஓவியங்கள்: செல்வம்

நன்றி : உயிர்மை மாத இதழ்

தொடர்புக்கு :

http://www.uyirmmai.com/default.aspx

..

Post Comment

புதன், செப்டம்பர் 07, 2011

கள்ளி


பத்தாண்டு சென்னை வாழ்க்கையில் பெற்றதைவிடவும் இழந்தது அதிகம். அதில் குறிப்பிடத்தக்கது கொங்குதமிழ் பேச்சு. ஏனோ நாட்பட நாட்பட என் கொங்குதமிழும் நீர்த்துப்போய் இன்னாமச்சி கோட்டர்தமிழாக மாறிவிட்டது. பேச்சுவழக்கெல்லாம் மறந்துபோகுமா என்ன? என என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டிருந்தாலும்..மறந்துவிட்டது விட்டதுதான்.

மறந்துபோன கொங்குத்தமிழை அதன் சுவையை மீட்டெடுக்கிற சீரிய முயற்சியை அண்மைக்காலங்களில் மேற்கொண்டு வருகிறேன். அதைப்பற்றி எப்போதோ நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கையில் வாமுகோமுவின் கள்ளி குறித்து குறிப்பிட்டார். கொங்குத்தமிழை அட்டகாசமாக கையாளுகிற சமகால எழுத்தாளர்களில் வாமுகோமு முக்கியமானவர் என்பதை அவருடைய சில சிறுகதைகளின் வாயிலாக அறிந்திருந்தேன்.

உயிர்மையில் அவருடைய சில சிறுகதைகள் படித்திருந்தாலும் நாவல் என்கிற வகையில் சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும் குறித்த பல்வேறுபட்ட எதிர்மறை விமர்சனங்களின் அடிப்படையில் அதை படிக்கவேண்டும் என்கிற ஆவல் நிறையவேயிருந்தது. அதுவும் போக சரோஜா தேவி காலந்தொட்டே படிக்கும்போது கிடைக்கிற பாலியல் இன்பம் அண்மைக்காலங்களில் குறைந்துபோனதும், அது வாமுகோமுவின் எழுத்துகளில் ஏகத்திற்கும் கிடைப்பதாக நண்பர்கள் சொன்னதும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் அதிகமாக்கியது.

அஜால்குஜால் கதை படிக்க போகிறோம் என்கிற ஆர்வத்தோடு புத்தகத்தை விரித்து வைத்து படிக்க ஆரம்பித்தேன். எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்கிறது நாவல். புத்தகத்தின் எந்தப்பக்கத்தை திறந்தாலும் சாராய போதையும் புணர்ச்சியும் மலிந்து காணப்பட்டது. ஆனால் அதற்காக இந்த நாவலை வெறும் பாலியல் கதையென்கிற என்கிற ஒற்றை பரிமாணத்தின் அடிப்படையில் சுருக்கிவிட இயலாது. வட்டார வழக்கு, தலித் அரசியல், பாசங்கில்லாத அப்பட்டமான கிராமத்து மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறை.. கொஞ்சமாய் ஆங்காங்கே தொட்டுக்கொள்ள ஊறுகாயாட்டம் செக்ஸ்!

இதை கிட்டத்தட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு என்றும் கொள்ளலாம். ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு விதமான கிராமத்து சூழல்,மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பேசுகின்றன. அதையே தன் முன்னுரையில் நாவலாசிரியராகப்பட்டவரான வாமுகோமுவும் தெரிவிக்கிறார். வாய்ப்பாடி என்னும் ஊரைச்சேர்ந்த மல்லி என்னும் தலித் கூலியாளின் ஒரு மாலைப்பொழுதிலிருந்து கதை துவங்குகிறது. பின் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக உள்ளே நுழைய தலித்துகளுக்கும் ஆதிக்கசாதி இந்துகளுக்குமான ஒரு போட்டி தொடங்குகிறது.

போக்கிடமில்லாமல் பிழைப்புக்கு வழியில்லாமல் கவுண்டர் சாதி முதலாளிகளிடம் கைகட்டி வாய்பொத்தி அவர்களிம் ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு ஆண்டாண்டு காலம் வாழ்ந்த ஒரு சமூகம் , அருகாமை நகரத்தில் உருவாகும் தொழிற்புரட்சியால் கிடைத்த வாய்ப்பின் அடிப்படையில் முதல்முறையாக ஆதிக்கசாதிக்காரர்களிடம் எதிர்த்து நின்று கேள்வி கேட்கிறது. அது அந்த ஊரிலும் வாழ்க்கை முறைகளிலும் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணுகிறது.

வீடுவீடாக போய் சவரம் செய்துகொண்டிருந்த நாசுவன் தனியாக கடைபோடுகிறான். ஏன்டா உன்ரா எடத்துக்கு நாங்க வந்து முடிவெட்டிக்கோணுமா என கவுண்டர்கள் கொதிக்கிறார்கள். தலித் பையன் சின்ன கவுண்டச்சியை காதலித்து ஊரைவிட்டே ஓடுகிறான். பத்தாவது வரை படித்த தலித் பையன் வெள்ளையும் சொள்ளையுமாக சேரில் உட்கார்ந்து கணக்கெழுதுவதை கண்டு சகிக்க முடியாமல் வயிறெரிகிறது ஆதிக்கசாதிக்கு! இறுதியில் தன் வீட்டு வேலைக்கு தலித்திடம் கெஞ்சி கூத்தாடுவதாக கவுண்டனின் கதை முடிகிறது! ஆதிக்கசாதியின் அடுத்த தலைமுறை தலித்துகளை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு தன் அப்பன் பிணத்தை புதைக்க அதுவே குழிதோண்டுகிறது. கல்வியும் வேலைவாய்ப்பும் தலித்திய சமூகத்தில் பெரிய மாற்றங்களை உண்டுபண்ணுகிறது. அது அவர்களை எதிர்த்து கேள்விகேட்கவும் தூண்டுகிறது.முதல்முறையாக திருப்பூர் பனியன் பாக்டரிகள் வாய்பாடியில் தலித்துகளின் புரட்சிக்கு வித்திடுகிறது.

ஆதிக்க சாதியின் பாலியல் வாழ்க்கையும் தலித்துகளின் பாலியல் வாழ்க்கையும் ஒரு ஊரில் எப்படி இருவேறாக கூர்நோக்கப்படுகிறது என்கிற பார்வையும் இக்கதையினூடாக சொல்லப்பட்டிருக்கிறது. கதையில் முதலில் ஒரு விஷயம் மிகவும் நெருடலாக இருந்தது. கதையின் பாத்திரமான பழனிச்சாமியோடு உறவு வைத்துக்கொள்ள கதையில் வருகிற மற்ற எல்லா பெண்களும் துடிக்கின்றனர். அவனோடு எல்லா கிட்டத்தட்ட எல்லா பெண்களும் படுத்துக்கொள்கின்றனர். அவன் காடு மேடு கரடு வீடு என எங்கும் யாரையாவது புணர்ந்தபடியே அலைகிறான். (கதைக்குள் பழனிச்சாமி வரும்போதெல்லாம் படிக்கும் நமக்கு மனம் குதூகலிக்கிறது! ஷகிலா படங்களில் ஷகிலா வருவார் முன்னே பிட்டு வரும் பின்னே என்பதற்கிணங்க). ஆனால் ஒவ்வொரு பெண்ணும் பழனிச்சாமியோடு உறவுக்கு ஒப்புக்கொள்வதற்கு பின்னாலிருக்கிற உளவியல் பிரச்சனைகளையும் சமூக காரணங்களையும் போகிற போக்கில் வசனங்களினூடாகவும் நிகழ்வுகளினூடகவும் தந்துவிடுகிறார்.

அறுப்புக்கு வந்த ரெகார்ட் டேன்ஸ் பெண்ணை கவரும் முத்தா கவுண்டர். அவளை உறவுக்கு அழைத்து உறவின் உச்சநிலையில் கைமேல காசுவெச்சாதான் அடுத்து என சொல்வதிலாகட்டும், இருட்டுக்குள் மாதாரி பெண்ணை புணர்ந்தபடியிருக்கும்போது மாதாரிகளிடம் மாட்டிக்கொள்ளும் ஆதிக்கசாதி சுரேந்திரன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு தெனாவெட்டாக இருப்பதாகட்டும், அறுப்பு கூலியை ஏமாற்ற முனையும் கவுண்டனை மிரட்டி பணியவைக்கும் வெளியூர் கூலிகளால் தெம்பாகி தானும் முரண்டு பிடிக்கும் மல்லியின் பாத்திரமாகட்டும் முகத்தில் அறைகின்றன.

குழந்தைகள் இருவர் செக்ஸ் என்பது என்னவென்று தெரியாத காலத்தில் எடக்கு மடக்காக ஏதோ செய்து பார்க்கின்றனர். அதை பார்க்கிற பெண்குழந்தையின் தாய் பையனை அடிக்க.. பையனின் அம்மாவும் பெண்ணின் அம்மாவும் போட்டுக்கொள்கிற சண்டை பிரமாதமானது. அதுமாதிரி ஊர்பக்கம் நிறைய பார்த்திருக்கிறேன். அப்படியே அச்சு அசல் வார்த்தைகளின் கோர்வையாக அந்த அத்தியாயம் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு பாத்திரமும் வெவ்வேறு மனநிலையில் சித்தரிக்கப்பட்டிருப்பது சிறப்பு.
பழனிச்சாமியும்,மல்லியும்,சுரேந்திரனும்,முத்தா கவுண்டரும்,சுந்தரியும்,வெள்ளைசீலைக்காரியும் நாவலை மூடிவைக்கும்போது மனசெல்லாம் நிறைந்துவிடுகின்றனர்.

கொங்கு மண்ணின் அசல்மனிதர்களையும் வட்டார வழக்கின் சுவையையும் கடந்த ஆண்டுகளில் அங்கே நிகழ்ந்த சமூக மாற்றங்களையும் எந்த வித பாசாங்குமில்லாமல் அச்சு அசலாக பதிவு செய்திருக்கிறார் வாமுகோமு.

(உயிர்மை பதிப்பகம் வெளியீடு)
(புத்தகம் தந்து உதவிய ரோமியோவிற்கு நன்றி)
நன்றி

http://www.athishaonline.com/2011/08/blog-post_17.html

...

Post Comment