அவிநாசி பேருந்து நிறுத்தம் மாலை வேளையில் பரபரப்புடன் இருந்தது. சாலையோரத்தில் தள்ளுவண்டி கடைகளில் பொறிக்கப்படும் மீனின் வாசனை பேருந்து நிலையம் முழுதும் நிரம்பி இருந்தது.
வாசனை பிடிக்காதவர்கள் தங்கள் மூக்கை கர்ச்சீப்பால் பொத்திக்கொண்டு தங்கள் பேருந்து சீக்கிரம் வந்தால் தேவலையே என்று சாலையை எட்டிப் பார்த்தார்கள். மல்லிகைப்பூவை கூடையில் தூக்கி வந்த பெண்மணி கணவர்களின் அருகில் நிற்கும் பெண்களிடம் “முழம் பத்து ரூபாய் தான்மா, வாங்கிக்கோங்க” என்று கூடையை கீழே இறக்கி வைத்து வியாபாரம் செய்து தொகை வாங்கிக் கொண்டு அடுத்த கணவரையும் அவர் மனைவியையும் தேடிச் சென்றாள்.
பேருந்து நிறுத்தத்தினுள் இருந்த டீக்கடையில், விழியே கதை எழுது..கண்ணீரில் எழுதாதே..மஞ்சள் வானம்.. என்று பாடல் பெருத்த சப்தமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. டீ மாஸ்டர் அவனே பாடகன் போல் பாடலுடன் கூடவே பாடிக்கொண்டே டீ ஆற்றிக் கொண்டிருந்தான்.
திருப்பூரிலிருந்து கோவை செல்லும் பேருந்துகள் நிரம்பிப்போய் வந்து ஓய்ந்து நின்றன. ஜன்னல்புறமாய் அமர்ந்திருந்த பயணிகளை நோக்கி கூடையில் முறுக்கு, சோன்பப்படி வைத்திருந்தவர்கள், பாக்கெட் பத்து ரூவா, பாக்கெட் பத்து ரூவா.. என்று விற்பனை செய்ய பறந்து ஓடி கூவினார்கள்.
ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த குழந்தை ஒன்று எனக்கு வேணும், எனக்கு வேணும் சோனுபப்புடி என்று அழுகையை ஆரம்பித்த போது அந்தப் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிவிட்டது. அந்தக்குழந்தை எவ்வளவு நேரம் சோன்பப்படி கேட்டு அழுமோ தெரியவில்லை.
பேருந்துகளில் மக்கள் வந்து இறங்குவதும்,
ஏறிச் செல்வதுமாக இருக்க சரியாய் ஆறு மணி என்கிறபோது திருப்பூரிலிருந்து வந்து நின்ற
குமரன் பேருந்தில் வாடிப் போன பதுமையாய் இளநீல வர்ண சேலை அணிந்த அந்தப்பெண் தன் கைப்பையை
பத்திரமாய் அழுத்திப் பிடித்தபடி இறங்கினாள்.
குமரன் பேருந்தின் நடத்துனர் இவள் பின்னேயே இறங்கியவன்
தினமும் பேருந்தில் வரும் ஒரே தேவதையான இவளைப் பார்த்து அசட்டுப் புன்னகை ஒன்றை வீசினான்.பதிலுக்கு
புன்னகைக்க முடியாதபடி இன்று இவள் கம்பெனியில் கம்ப்யூட்டரில் கணக்கு வழக்கு என்று
ஐந்து மணி வரை நிமிரக்கூட முடியாமல் வேலையின் களைப்பு அவளை சோர்வடையச் செய்திருந்தது.
எப்போதும் இப்படி வேலை கம்பெனியில் இருக்காது தான்.
வெளி மாநிலங்களுக்கு ஆர்டர் முடிந்த பார்சல் பெட்டிகளை அனுப்பும் நாட்களில் மட்டும்
இப்படித்தான் இருக்கும். நாளை கம்ப்யூட்டர் முன் பொழுதை கழிப்பதாகத்தான் இருக்கும்.
முகநூலில் உட்கார்ந்து வெளிஊர் தோழிகளிடம் வெட்டியாய் சாட்டிங் செய்து கொண்டு இருக்கலாம்.
வீட்டில் இன்று வேலைக்கு செல்வதை அம்மாவும், அப்பாவும்
காலையிலேயே வேண்டாம் என்றுதான் பேசிக் கொண்டிருந்தார்கள். சேலத்திலிருந்து பெண் பார்க்க
வருகிறார்கள், என்று இவள் அப்பாவை அதட்டிக் கேட்ட போது தான் சொன்னார்.
யாரோ குடுமி சும்மா ஆடாதாம் என்பது போல அதைக் கேட்டதும்
உணர்ந்தவள், “ஏன் இப்படி என் கல்யாணத்திற்கு அவசரப்படறீங்க? நான் உங்களோட இருக்கிறது
பிடிக்கலையா? துறத்தியடிக்கப் பார்க்கறீங்களா?” என்று கேட்டு விட்டாள்.
“அப்படி இல்லம்மா இந்து, உன் வயசு தான் பக்கத்து
வீட்டு பிரேமாவுக்கு.. அவள் கல்யாணம் பண்ணிப் போய் இப்ப ரெண்டு குழந்தைகள். அவினாசி
தேருக்கு வந்தவளை நீயும் தான பார்த்து பேசினே! எங்களுக்கும் எங்க பேரப்பிள்ளைகளை கையில
தூக்கி கொஞ்சணும்னு ஆசை இருக்காதா?” என்றாள் அம்மா பர்வதம்.
“அந்த ஆசைக்காக நான் கல்யாணம் பண்ணிக்கனுமா? என்னம்மா
பேசுறே நீ? இப்பத் தான் நான் வேலையில சேர்ந்து ஒன்பது மாசம் ஆகுது. டிகிரி முடிச்சு
சும்மா இருக்கேன்னு கம்ப்யூட்டர் கிளாஸ் போனேன். கத்துக்கிட்டு வேலையில சேர்ந்ததும்
மாப்பிள்ளை சேலத்துல இருந்து வர்றாருங்கறீங்க. எனக்கு இருபத்திரெண்டு வயசு தான்மா..இன்னம்
ரெண்டு வருசம் போகட்டும்மா” என்றாள் இந்து.
“அவிங்க மதியம் வருவாங்கடி.. நம்ம சொந்தம் தான்.
மாப்பிள்ளை எதோ மோட்டார் கம்பெனில மேனேஜரா இருக்காப்லையாம். நல்ல சம்பளம். ராசாத்தி
மாதிரி கட்டிட்டு போறதை உட்டுட்டு இப்படி பிகு பண்ணிக்கிறியேடி!” என்றாள் பர்வதம்.
“என்னது பிகு பண்ணிக்கிறேனா? ரெண்டு வருசம் போகட்டும்னு
தான் சொல்றேன். கல்யாணம் வேண்டாம்னு எல்லாம் சொல்லலைம்மா. போக இன்னிக்கி நான் கம்பெனிக்கி
போகலைன்னா எப்பயும் வரவேண்டாம்னு சொல்லிடுவாங்க.” என்றாள்.
“எதுக்கு வர வேண்டாம்னு சொல்றாங்க? போனு போட்டுக்குடு
நான் பேசுறேன். இந்த மாதிரி என் பொண்ணை பார்க்க மாப்பிள்ளை வீட்டுல இருந்து இன்னிக்கி
வர்றாங்க, இன்னிக்கி மட்டும் இந்து வரமாட்டாள்னு நான் சொல்றேன்“
“அம்மா உனக்கு சொன்னா புரியாதும்மா விடேன்”
“நாங்க வரச் சொல்லிட்டமேடி. வந்தவங்களுக்கு என்ன
பதில் சொல்ல?”
“சுவத்துல மாட்டியிருக்கில்ல என் போட்டோ..அதான் பொண்ணுன்னு
காட்டுங்க”
“விளையாட்டு பேசாதேடி”
“என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லாமல் வரச்சொன்னீங்கள்ல,
நீங்களே ஜமாளிங்க!”
“நம்பி சொல்லிட்டோம்டி. சங்கடமா நினைச்சுட்டாங்கன்னா
தப்பாயிடும்டி”
“அப்பாவை போன்ல பேசச் சொல்லிடும்மா.. நாளைக்கி வரட்டும்
அவங்க. ஆனா மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கணும். பிடிச்சாலும் ரெண்டு வருசம் கழிச்சித்தான்
திருமணம்னு சொல்லுவேன். அவசரம்னா அவங்க சேலத்துலயே பொண்ணு தேடி கட்டிக்கட்டும். ஓ.கேவா!”
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான் ஓவர் பந்தா காட்டுவாங்க,
இங்க என்னடான்னா பொண்ணு பிள்ளை ஓவர் சீன் போடுது” இப்போது தான் அப்பா ஏகாம்பரம் பேசினார்.
ஏகாம்பரம் அவிநாசி யூனியன் பாங்க்கில் காசாலராக இருக்கிறார்.
ஆயிற்று அவர் ஓய்வு பெற. குடி ஒன்று தான் அவரிடம் உள்ள மிகப் பெரிய குறை. மற்றபடி தங்கமானவர்.
யாரையும் கடிந்து ஒரு சொல்கூட சொல்லாதவர். இந்து இப்போது அவரிடம் திரும்பி நின்று கொண்டாள்.
“சீன் நீங்க தான் போட்டிருக்கீங்க அப்பா. சரி எனக்கு
செய்ய எவ்ளோ வச்சிருக்கீங்க? மாப்பிள்ளை இருபத்தஞ்சு பவுன் கேட்டா என்ன செய்வீங்க?”
என்றாள்.
“கடனோ உடனோ வாங்கி செய்வோம்மா. அதைப்பத்தி உனக்கென்ன?”
“என்னை எதுக்குப்பா படிக்க வச்சீங்க? அதைப்பத்தி
உனக்கென்னன்னு கேட்கறீங்க? நீங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டணும்னா நான் கையெழுத்து
போடத் தெரிஞ்சதும் படிப்பை நிறுத்தியிருக்கலாமேப்பா”
“அதுக்கு சொல்லலைம்மா.. குழப்பிக்காதே. காரியம்னு
வந்துட்டா, அதும் நல்ல காரியத்துக்கு யோசிக்காம செய்யணும்ங்கறேன்.
”
“அம்மா கழுத்துல இருக்கிற பத்து பவுனை நம்பி பேசிட்டு
இருக்கீங்கன்னு நான் நினைக்கிறேன். நான் இந்த வீட்டை விட்டு என் வீட்டுக்காரரோட அவங்க
வீடு போறப்ப அம்மா கழுத்துல நகை அப்படியே இருக்கணும். ஓ.கேன்னா சொல்லுங்கப்பா. நான்
இப்பவே வேலையை விட்டுடறேன். இதா போன் போடறேன்.” என்றாள் இந்து.
அப்பாவிடம் பேச்சு எதுவும் இல்லை. அவர் பர்வதத்தின்
முகம் பார்த்தார். பர்வதம் பதில் பேச முடியாமல் கை பிசைந்து கொண்டு நிற்கவும் இந்து
தன் கைப்பையை தூக்கிக் கொண்டு கிளப்பினாள். அவர்கள் அப்புறமாக என்ன முடிவு செய்தார்கள்
என்று இந்துவிற்கு தெரியாது.
இந்து தன் வீடு நோக்கி செல்கையில் தான் பின்னால்
யோசனையில் வருவது போலவே வரும் அவனை பார்த்தும் பாராதது போல நடந்தாள். யாரிவன்? இந்த
ஒரு மாதமாக அடிக்கடி கண்ணில் தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கிறானே! எப்போதும் என்னை பின்
தொடர்வதையே முக்கியமான வேலை போல் செய்கிறானே!
இத்தனை நாள் யாரோ ஒரு பயணி என்றுதான் நினைத்திருந்தாள்
இந்து. ஆனால் அவன் பயணி அல்ல என்று இப்போது பின்னால் வருவதை வைத்து முடிவு செய்தாள்.
ஓரக்கண்ணால் அவனை மனதில் இருத்திக் கொள்வதற்காகப் பார்த்தாள். அவன் அணிந்துள்ள உடை
மற்றும் பாவனை விசயங்களில் ஒரு ஆண்மைத்தனம் இருப்பதை கண்டுணர்ந்தாள்.
சரி இப்படியானவனுக்கு என் பின்னால் என்ன வேலை? நாளை
முதல் இவன் ஏன் கண்களுக்கு தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கிறான் என்பதி கண்டறியா வேண்டுமென
முடிவு செய்து ஓரக்கண்ணால் பார்க்கையில் அவனைக் காணோம். ஒருவேளை இவன் மாயாவியோ? என்ற
நினைப்பில் நடந்தவளின் கைப்பையில் இருந்த அலைபேசி அழைக்கவே நின்று அதன் ஜிப்பைத் திறந்தாள்.
வீட்டிலிருந்து தான் அழைப்பு. சாலையில் வாகனங்களின்
இறைச்சலில் நின்று என்ன பேசுவது? இன்னும் ஐந்து நிமிடத்தில் வீடு போய் சேர்ந்து விடலாம்.
நினைப்பில் அலைபேசியை காதுக்கு கொடுத்தாள் இந்து.
“என்னப்பா சொல்லுங்க?”
“அவுங்க வந்து அரைமணி நேரமா உனக்காக காத்துகிட்டிருக்காங்கம்மா”
என்றார்.
“சும்மா அவுங்கன்னா யாருப்பா?”
“காலையில சொன்னோம்ல சேலத்துல இருந்து.. அவுங்க”
“ஓ, சாரிப்பா நான் மறந்துட்டேன். வீட்டுக்கு கிட்ட
வந்துட்டேன்ப்பா. கட் பண்ணுங்க” என்று அலைபேசியை அணைத்து கைப்பையில் போட்டுக் கொண்ட
இந்துவிற்கு புதிதாய் இதயம் சற்று வேகமாய் துடிக்க ஆரம்பித்து விட்டது. இயல்பாய் நடந்தவளின்
நடை கூட தடுமாற்றமாகி அசிங்கமாய் நடக்கிறோமோ! என்ற சந்தேகத்தை கொடுத்து விட்டது.
தன்னையறியாமலேயே பின்னால் திரும்பிப் பார்த்தாள்.
தன்னை ஒரு மாதமாக பின் தொடர்பவன் இந்த தள்ளாட்டமான நடையை பார்த்து விட்டால்? கிறுக்கு!
என தன்னையே கடிந்து கொண்டாள். அவன் பார்த்தால் தான் என்ன? அவன் யாரோ! என்று நினைக்கையில்
கூட இவளுக்குள் குறுகுறுப்பாய் இருந்தது.
அப்பா வாசலிலேயே காத்திருந்தார். இதயத்தின் துடிப்பு
இப்போது அதிகமாகிவிட்டது. அப்பா நான் யாரையும் பார்க்கலைப்பா..பயமா இருக்குப்பா..என்று
சொல்லி அழவேண்டுமென தோன்றிற்று அவளுக்குள்.
அப்படி சொல்லிவிட்டால் அப்பா தன் கிண்டலை ஆரம்பித்து விடுவார். சின்னப்புள்ளத்தனமால்ல
இருக்கு, என்பார்.
வீட்டினுள்ளேயே செல்ல விடாமல் பக்கது வீட்டு அக்கா
தன் வீட்டுக்கு அழைத்துப் போய் முகம் கழுவ வைத்து இவளின் வேறு புதிய சேலையை கட்டிக்கொள்ள
எடுத்து நீட்டியது. அக்கா வீட்டிலேயே புதுமணப்பெண் போல தயாராகி தன்வீட்டுக்குள் அக்காவின்
துணையோடு வந்தாள்
மாப்பிள்ளை வீட்டிலிருந்து அப்பா, அம்மா,மாப்பிள்ளையின்
தாய்மாமனும் வந்திருந்தார்கள். மாப்பிள்ளைக்கு நகம் கொறிக்கும் பழக்கம் இருக்கும் போலிருக்கிறது.
பத்து விரல்களிலும் நகங்கள் துளிதுளிதான் இருந்தன. இப்போதும் மாப்பிள்ளை அதையேதான்
கொறித்தபடி இருந்தார்.
திருமணத்திற்குப் பிற்பாடு மனைவியின் கையைப் பிடித்து
விரல் நீவி அவளின் நகங்களை கொறித்து விடுவாரோ! என்றுதான் இந்துவின் அம்மா பர்வதம் யோசித்துக்
கொண்டு சமையலறையில் அவர்களுக்காக காபி தயாரித்துக் கொண்டிருந்தாள்.
இந்துவிற்கு தன்னை ஒருவன் பெண் பார்க்க வந்து அமர்ந்திருக்கும்
விசயமே மிகவும் வெட்கமாக இருந்தது.வந்தவர்களுக்கு தட்டில் காபி எடுத்து வந்து கொடுத்தாள்.
மாப்பிள்ளை தன் வாயிலிருந்து விரலை எடுத்து விட்டு தட்டிலிருந்த டம்ளரை எடுத்துக் கொண்டான்.
இவள் வருவதற்கு முன்பாகவே மாப்பிள்ளை வீட்டாருக்கு
இனிப்பு, கார ஐட்டங்களை அம்மா தட்டில் கொடுத்திருக்கும் போல. காலியான தின்பண்ட தட்டுகள்
ட்ரேவில் ஒழுங்கின்றிக் கிடந்தன. மாப்பிள்ளையின் அப்பா, “ காபி யாரும்மா இந்து போட்டது?
சக்கரை வியாதிக்காரனுக்கு கூடுதலா சக்கரை போட்டுட்டாங்க” என்றார்.
சமையல் கட்டிலிருந்த இவள் அம்மாவிற்கு கேட்கும் விதமாகத்தான்
பேசினார் அவர். இதைக்கேட்டது பர்வதம் தன் நாக்கை கடித்துக் கொண்டாள். “ஒரு நாளைக்கி
மருமகள் கையால வாங்கி இனிப்பா குடிச்சா தப்பில்லீங்க” அவருக்கு கேட்கும் விதமாய் உள்ளிருந்து
குரல் கொடுத்தாள்.
“அப்பிடியா சொல்றீங்க, அதுவும் சரிதான்” என்றவர்
காலி டம்ளரை ட்ரேயில் வைத்தார்.
“சக்கரை வியாதி தான் இப்ப யாருக்குப் பார்த்தாலும்
இருக்குதுங்களே! எல்லாம் அரிசியை குக்கர்ல வேக வச்சு சாப்பிடறதால வர்ற வியாதிகள் தானுங்க”
என்று தன் பங்குக்கு ஏகாம்பரமும் சொல்லிவைத்தார்.
“ஏண்டா சண்முகம், பொண்ணுப் பிள்ளைதான் வெட்கப்பட்டு
ஒரு வார்த்தை பேசலைன்னா நீயாச்சும் எங்க வேலைக்கி போறே? என்ன சம்பளம்? இப்பிடியெல்லாம்
கேட்கலாம்ல! ஊமைன்னு நெனச்சுட்டு இருந்துடப்போவுது.” மாப்பிள்ளையின் அப்பா தலை குத்தினது
போல இருக்கும் மகனைப்பார்த்து சொன்னார்.
“நம்ம முன்னாடி பேச ரெண்டு பேரும் வெட்கப்படறாங்ளோ
என்னமோ! மேல மாடில போய் பேசிட்டு வரட்டுமுங்களே! அவங்க தான ஒருத்தரை ஒருத்தர் பேசிப்
புரிஞ்சிக்கணும். என்னுங் நான் சொல்றது?” என்று ஏகாம்பரம் பேச அப்பாவை நிம்மதியாய்
பார்த்தாள் இந்து.
என்ன இருந்தாலும் நம் அப்பா அப்பாதான். எங்கே காலையில்
சொன்ன அந்த ரெண்டு வருசம் கழிச்சி கல்யாணம் என்ற விசயத்தை சபையிலேயே ஆரம்பித்து விடுவாளோ
என்ற பயத்தில் தான் சொல்கிறார் என்று யூகித்து விட்டாள்.
“வாங்க மாடிக்கு போவோம்” என்று சண்முகத்தை அழைத்துக்
கொண்டு மாடிப் படிகள் ஏறினாள். சண்முகம் இந்துவின் பின்னால் அமைதியாய் ஏறி மொட்டை மாடிக்கு
வந்தான். அவனுக்கும் இந்த பெண் பார்க்கும் படலம் இதுதான் முதல்முறை என்பதால் கூச்சமாக
இருப்பதை உணர்ந்தான்..
”இந்து எப்பவும் டூட்டி முடிஞ்சு இந்த நேரத்துக்குத்
தான் வருவீங்களா?”
“இருட்டு விழும் முன்னாடி எப்பவும் வந்துடுவேன்ங்க.
நீங்க? கோவிலுக்கெல்லாம் போயிட்டு இரவு லேட்டா வருவீங்களா?” என்றாள் இந்து சண்முகத்தின்
முகத்தைப் பார்த்தபடி! கோவில் என்றதும் சண்முகம் குழம்புவது தெரிந்தது. அப்பாதான் தான்
குடிக்கப்போகும் இடத்தை கோவிலுக்கு போவதாக தினமும் சொல்வார். அந்தப் பழக்கத்தில் தான்
கேட்டுவிட்டாள்.
“தினமுமா கோவிலுக்கு போவாங்க? அம்மாவாசை, பெளர்ணமி
நாள்ல தானே போவாங்க.. நான் தினமும் டூட்டி முடிஞ்சு வீடுவர எட்டுமணி ஆயிடும்ங்க”
வேறு என்ன பேசுவது என்று தெரியாமல் இந்து நின்றிருக்கையில்
சண்முகமே ஆரம்பித்தான். “நம்ம மேரேஜ் முடிஞ்ச பின்னால என் வீட்டுல நீங்க வேலைக்கி போக
வேண்டியதில்லைங்க. வீட்டுல இருந்தீங்கன்னா போதும். ஏன்னா என் சம்பளமே ரெண்டு பேருக்கும்
போதும்”
“சரிங்க, அப்ப நான் படிச்சது தேவையிலாதது. கம்ப்யூட்டர்
கத்துக்கிட்டது தேவை இல்லாதது. உங்க வீட்டுல நான் சும்மா இருந்தால் போதுங்கறீங்க, இல்லியா?”
“ஆமாங்க ஜாலியா டிவில அம்மாவோட சேர்ந்துட்டு நாடகம்
பாருங்க, அம்மா அந்தக்காலத்துலயே எட்டாவது படிச்சிருக்காங்க. டிவில வர்ற நாடகத்தை ஒன்னுவிடாம
பார்த்து யார் யாரு எந்த எந்த நாடகத்துல என்ன என்ன பண்ணினாங்கன்னு சொல்லுவாங்க.. எங்கம்மாவுக்கு
நல்ல ஞாபக சக்தி”
“சரிங்க, நானும் ஞாபகம் வச்சிருந்து ஒவ்வொரு நாளும்
ராத்திரி சொல்றேனுங்க”
“உங்க வீட்டுல சுடிதாருக தூக்குல கிடந்துச்சுங்க,
கல்யாணத்துக்கு பிறகு சேலை மட்டும் கட்டுங்க. நைட்டி வசதின்னுட்டு வயசானவங்க எல்லாரும்
போட்டுக்கறாங்க, அது எனக்கு ஏனோ பிடிக்காதுங்க”
“சரிங்க, என்ன என்ன பிடிக்காதுன்னு ஊருக்குப்போய்
நல்லா ஞாபகப்படுத்தி அப்பா கிட்ட கூப்பிட்டு சொல்லிடுங்க, விரலை தின்னுட்டே ஞாபகப்படுத்தீட்டு
ஒவ்வொன்னா சொல்லிட்டு இருக்காதீங்க”
“அது கூட நல்ல ஐடியாங்க, உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?”
“ரொம்ம்பப் பிடிச்சிருக்குங்க உங்களை! வீட்டுல பேசியிருப்பாங்களே,
எதாவது உங்களுக்கு தெரியுமா?”
“நீங்க என்ன கேட்கறீங்கன்னு தெரியலைங்களே!”
“இல்ல நகை எல்லாம் எவ்ளோ எதிபார்க்கறீங்கன்னு தெரியலை”
“அதெல்லாம் பெரியவங்க பேசிக்குவாங்க நம்மளுக்கு என்னங்க?”
“நம்மளும் பெரிய மனுசங்க தானுங்க, அதனால தான கல்யாணம்
பண்ணி வைக்க முடிவு பண்ணூறாங்க. சும்மா அவுங்க பேசினதை சொல்லுங்க”
அது அவுங்க முடிவு பண்ணிக்குவாங்க நீங்க கவலைய விடுங்க
இந்து”
என் கவலையே அதுலதானே என்று நினைத்தவள், “நீங்க சொல்லலைன்னா
நான் போயி இவரை கட்டிக்கமாட்டேன்னு இப்ப சொல்லிடுவனுங்க” என்றவள் கிளம்புவது போல நடிக்கவும்,
வேண்டாங்க..வேண்டாங்க என்றான் சண்முகம்.
“பின்ன சொல்லுங்க, நானும் தெரிஞ்சிக்கறேன்”
“அது இருபது பவுனு கேட்கணும்னு அம்மா சொல்லிட்டு
இருந்துச்சுங்க. போக எனக்கு மண்டபத்துக்கு வர்றப்ப கையில ஒரு பவுனு மோதிரம், கழுத்துல
ரெண்டு பவுனுல செயின் போடச்சொல்லி கேட்கணும்னு பேசிக்கிட்டாங்க”
“இதை சொல்றதுக்கு தான் இத்தனை சிரமப்பட்டீங்ளா? உங்க
மாத சம்பளம் எவ்வளவுங்க?”
“பிடித்தமெல்லாம் போக இருபது வருமுங்க”
“எதாவது பிரச்சனைன்னா வேலைய விட்டுட்டு போங்கன்னு
சொன்னா வந்துடணும் இல்லீங்ளா!”
“அப்பிடியெல்லாம் பிரச்சனை பண்ணுறவன் இல்லீங்க நானு.
மண்டபச் செலவு எல்லாம் இந்தப்பக்கம் பொண்ணு வீடும், மாப்பிள்ளை வீடும் பாதி பாதி போட்டுக்கணும்னு
பழக்கம் இருக்கிறதா உங்க அப்பா சொல்லிட்டு இருந்தாருங்க.”
“ஆமா, அது உங்க ஊர்ல இல்லீங்களா?”
“எங்கம்மா முழுச்செலவும் உங்களுது தான்னு பேசிட்டுதுங்க.
நான் வேணா உங்க கிட்ட தனியா ஐம்பது தந்துடறேனுங்க. ஆனா யாருக்கும் தெரியக்கூடாது”
“இந்தப் பக்கமெல்லாம் மண்டபத்துக்காரங்க பொண்ணு,
மாப்பிள்ளையோட ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் குடுத்தாத்தான் திருமணம் பண்ண விடுவாங்க, அதை
எங்கப்பா சொல்லலியா! அதும் அவுங்க சொல்ற டாக்டர் கிட்டத்தான் போய் எடுக்கணும்”
“அய்யோ, இப்பிடியெல்லாம் பழக்கமுங்களா? என்ன பழக்கம்
போங்க! எங்கூர்ல இது மாதிரி பேச ஒரு மண்டபம் இல்லீங்க. நீங்க அழகா பேசறீங்க, அழகா இருக்கீங்க”
“அப்புறம் எங்க கிட்ட இப்போதைக்கி பத்து பவுன் நகைதான்
இருக்குதுங்க. அதை வச்சிட்டு நீங்க கேட்கிறதை இப்போதைக்கி பண்ண முடியாதாட்ட இருக்குங்களே!”
“சரின்னு சொல்லிட்டாருங்ளே உங்கப்பா”
“கடனை வாங்கி போட்டு என்னை தாட்டி உட்டுடுவாருங்க,
கடன்காரன் சேலத்துக்கு நம்ம வீட்டுக்கு வருவான். நீங்க தான் கட்டணும்”
“நீங்க சும்மா சொல்றீங்க. பெரிய மனுசங்க அப்பிடி
பண்ண மாட்டாங்க”
“இது என் வீடுங்க. வீட்டு நிலைமை எனக்கு தெரியாதா?
என்ன போங்க”
“அப்ப நாம என்னங்க பண்ணலாம்?”
”ரெண்டு வருசம் கழிச்சி நீங்க கேட்டது பூராவும் சம்பாதிச்சு
வச்சுக்கறோம்ங்க. அப்புறம் பண்ணிக்குவோம். அதான் வழி”
“குருபலனே இன்னும் நாலு மாசம் தானுங்க எனக்கு இருக்கு.
அப்புறம் நாலு வருசம் கழிச்சித்தான் குருபலன் வருதாமா”
“அப்ப நாலு வருசம் கழிச்சி பண்ணிக்குவோம். இன்னும்
கொஞ்சம் சேர்த்தி சம்பாதிச்சுடுவோம்ல”
“எங்கம்மா ஒத்துக்காதுங்க.. இது வரைக்கிம் நாங்க
ஐம்பது பொண்ணுக வரைக்கும் பார்த்து ஒன்னும் செட் ஆவலிங்க. எனக்கே போதும்டான்னு ஆயிடிச்சிங்க.
இருபதாயிரம் சம்பாதிக்கிறேன், இருபது பவுன் நகை போட வழியில்லைன்னு சொல்லிடறாங்க. நீங்களாச்சிம்
சம்பாதிச்சுட்டு சொல்றேன்னு டைம் கேட்கறீங்க”
“சரி வாங்க போகலாம். நீங்க வீடு போய் உங்க அம்மாகிட்ட
பேசிட்டு எங்கப்பாகிட்ட சொல்லிடுங்க” என்ற இந்து படிகளில் இறங்க பின்னாலேயே யோசனையோடு
விரலைக் கடித்துக் கொண்டு சண்முகம் இறங்கினான்.
“நல்லவேளை வந்தீங்க ரெண்டு பேரும், நாங்களே கூப்பிடலாம்னு
இருந்தோம்” என்றார் ஏகாம்பரம்.
“ரெண்டு பேரும் பேசிட்டீங்கள்ல, ஒரு கொழப்பமும் இல்லைல்ல”
என்று சண்முகத்தின் அப்பா கேட்கவும் இந்து தான் அவருக்கு பதில் சொன்னாள்.
“பேசிட்டமுங்க மாமா” என்றவள் சண்முகத்தை பார்க்க
அவனோ குனிந்த வாக்கில் நின்றிருந்தான்.
“சரி நாங்க புறப்படறமுங்க சம்மந்தி. அப்பப்ப போன்ல
கூப்பிட்டு பேசிக்கறேன். அந்த பைக் விசயம் மட்டும் முதல் தீபாவளிக்கு பண்டீருங்க” என்று
எழுந்தார் மாப்பிள்ளையின் அப்பா. அனைவரையும் வழி அனுப்பி வைத்து விட்டு வீட்டினுள்
வந்த ஏகாம்பரம் இந்துவின் கோப விழிகள் பார்த்து பம்மினார். அவருக்கு கடை காந்தம் போல்
இழுத்துக் கொண்டிருந்தது.
“நீ மாப்பிள்ளை கிட்ட என்ன பேசப் போறீன்னு காலையிலயே
எனக்கு தெரிஞ்சு போச்சும்மா. புதுசா நீ இப்ப ஒன்னும் சொல்ல வேண்டாம். அவங்க கிட்ட காலையிலயே
சொல்லிடலாம்னு தான் போனுக்கு கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன். லைனே கிடைக்கலை. பார்த்தா
மதியமா வர்றவங்க சாயந்திரம் வந்து நிற்கிறாங்க. என்ன பண்ண?”
“ஆமாம்மா அப்பா சொல்றது நிஜம் தான்” என்றாள் பர்வதம்.
“மாப்பிள்ளை கிட்ட தெளிவா சொல்லிட்டியாம்மா. ரெண்டு
வருசம் கழிச்சி நம் வீடு தேடி வருவாரா?” என்று அப்பா கேட்கவும் தலையில் கை வைத்துக்கொண்டு
இந்து ஷோபாவில் அமர்ந்தாள்.பர்வதத்திற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. மகளின் அருகில்
அமர்ந்து அவளை தன் மடியில் சாய்த்துக் கொண்டாள்.
“அவங்க கேட்டதை எல்லாம் சரி சரின்னு சொல்லி தலையாட்டிட்டு
உங்கப்பா விளையாடுறார். விட்டா பொங்கலுக்கு கார் வேணும்னு கேட்பாங்கன்னு நினைச்சேன்.”
என்று அம்மா சொன்னதும் மடியிலிருந்து தலை தூக்கி சிரித்தாள் இந்து.
“விட்டா உங்கப்பா காரு எதுக்குங்க சம்மந்தி.. ரயில்
பொட்டி வாங்கித் தர்றேன்னுடுவார் போல இருந்தாரு. இப்பவே இந்த பொம்பளை இத்தனை கேட்டா
பின்னாடி என்னென்ன கேட்பா யப்பா!”
“ஏம்ப்பா நின்னுட்டீங்க கோயலுக்கு போயிட்டு வாங்க”
என்று இவள் சொன்னதும் நிம்மதியாய் கிளம்பினார் ஏகாம்பரம்.