திங்கள், ஏப்ரல் 29, 2013

காதல் டைரியின் சில பக்கங்கள் -ஆ.வி. 2வருடம் முன்பு


ஜனவரி 1, 1990

புது வருட வாழ்த்துக்களை நண்பர்கள் நாங்கள் எங்களுக்குள் பரிமாறிக்கொண்டோம்.

தொழில் நிமித்தமாக ஊர் ஊராக அலைந்து திரிந்த எனக்கு, ‘நாய்போல நிற்க நேரம் இல்லாமல் அலைகிறானே’ என்று பெருந்துறையில் ஜெராக்ஸ் கடை வைத்துக்கொடுத்தார் அப்பா. அது ஒரு வருடமாக நட்டம் ஏதும் இல்லாமல், வாடகைக்கும் கரன்ட் பில்லுக்கும், இரண்டு வயிறு நான்கு வேளை நிரம்பும் அளவுக்கு மட்டும் சம்பாதித்துக்கொடுத்தது. கூடவே, இப்போது பள்ளிப் பாட நோட்டுக்கள், பேனாக்கள் என்று அயிட்டங்களைக் கடைக்குள் சேர்த்துக்கொண்ட பிறகு, தேவலை என்கிற நிலைக்கு அம்மன் ஜெராக்ஸ் வந்துவிட்டது. குறைந்த சம்பளத்துக்கு சீனாபுரத்தில் இருந்து சொந்தக்காரப் பெண் ஒருத்தி வந்து போகிறாள். புது வருட வாழ்த்துக்களை எனக்குத் தெரிவித்த நண்பர்கள், எங்கள் உள்ளூர் நண்பர்கள்தான். கூடவே, வயது 26 ஆகிவிட்டது. ஜெராக்ஸ் கடையின் எஜமான் வேறு. ஒரு காதலிகூட இல்லாமல் எப்படி உனக்கு வாழ்க்கை ஓடுகிறது? இதோ கந்தசாமி இருக்கானே… ஒரு வேலை வெட்டியும் இல்லை என்றாலும் காலையில், மாலையில் காதல் செய்கிறானே! என்று பேசி என்னை உசுப்பேற்றிவிட்டார்கள். பின்னர்தான் எனக்கும் மனதில் யோசனைகள் ஓடின. ஆம், காதலித்தால்தான் என்ன?!

ஜனவரி 15

நண்பர்கள் தூண்டிவிட்ட அந்தத் திரி விளக்கு ஓயாமல் எரிந்துகொண்டேதான் இருந்தது. காதலிக்க ஒரு பெண் வேண்டும் என்றதும், எனது டி.வி.எஸ்ஸை ஜெராக்ஸ் கடையினுள்ளே விட்டுவிட்டு பேருந்து ஏறிக்கொண்டேன். ஈங்கூருக்கும் பெருந்துறைக்கும் ஒன்பது கிலோ மீட்டர்தான். டி.வி.எஸ் இல்லாமல் வீடு வரும் என்னை அப்பாவும் அம்மாவும் ஏன் என்றுகூட கேட்டுக்கொள்ளவில்லை.

காதலி வேண்டும் என்று பேருந்து ஏறியதால், பேருந்தில் யாரைப் பார்த்தாலும் காதலிக்கத் தோன்றியது. பெண்கள் எல்லோருமே எல்லா விதத்திலும் அழகோ அழகு. இன்று பச்சை வண்ண தாவணிப் பெண் நான் உற்றுப் பார்ப்பது கண்டு புன்னகைத்தாள். எனக்கோ நடுக்கமாகிவிட்டது. அவள் தன் பார்வையை என்னைவிட்டுத் திருப்பவே இல்லை. குழப்பமாகி விட்டது. எச்சரிக்கையாக முகத்தை ஜன்னல் பக்கமாகத் திருப்பிக் கொண்டேன்.

பிப்ரவரி 3

பிரமித்தேன். அதை என்னால் அப்படித்தான் சொல்ல முடிகிறது. என் காதல் தேவதையைப் பார்த்துவிட்டேன் என்பதை நண்பர்களிடம் சொல்வதற்குக் கூச்சமாக இருந்தது. இதை நான் அவர்களிடம் சொல்லப்போவது இல்லை. என் காதலை நானே பார்த்துக்கொள்கிறேன். இதன் வெற்றி- தோல்வி எல்லாமே நானே சமாளித்துக்கொள்கிறேன். அவர்கள் எங்கே உன் காதலியைக் காட்டு என்பார்கள். கண் போடுவார்கள். அவளுக்கு உடம்புக்கு முடியாமல் போய்விடும்.

இந்தப் பேருந்து நான் வழக்கமாக காலையில் ஏறிப் பெருந்துறை செல்லும் பேருந்து அல்ல. அதைக் காட்டிலும் ஒரு மணி நேரம் முன்பாக 7.30-க்கு சென்னிமலையில் இருந்து வருகிறது. அவசர வேலை என்று நான் நேரத்தில் புறப்பட்டது நல்லதாகிவிட்டது. பார்த்த முதல் பார்வையிலேயே என் மனதைக் கொள்ளையடித்துவிட்டாள். இன்று முழுதும் அவள் ஞாபகம்தான். இனிமேலும்தான்.

பிப்ரவரி 20

இன்று அவளுடன் காகத்தின் வண்ணத்தில் ஒரு கலகலப்பான பெண் இருந்தாள். ஒரு மாதம் நோயில் படுக்கையில்கிடந்து வந்தவள்போல தீக்குச்சி சைஸில் இருந்தாள். எப்போதும் பிரட் சாப்பிட்டது போன்றே வரும் என் தேவதை இன்று அவளுடன் கதைத்துக்கொண்டே வந்தாள். என் தேவதை இன்று வயலெட் வண்ண சேலை அணிந்திருந்தாள். தாங்க முடியாமல் முன் ஸீட்டுக்கு ஓடிப் போய் அவள் மடியில் தலைவைத்துப் படுத்துக்கொள்ளலாம்போல கொள்ளை அழகாக இருந்தாள். நிஜமாகவே சொல்லிச் செய்த பீஸ். பெருந்துறை நிறுத்தத்தில் இறங்கி அவர்கள் மேடு ஏறி மேற்கே சாலையைக் கடந்து கோயிலுக்குச் சென்றார்கள். சாமி இல்லை லொல்லை என்று பேசும் நண்பர்களைப் பெற்றிருந்த நான், கோயில் செல்லும் முடிவை மாற்றிக்கொண்டு நடையைக் கட்டினேன்.

இந்தப் பெண் என்னைத் திடீரென ஒரு வாட்டியாவது கவனிக்கிறதா என்றால் இல்லை. இவள் முகம் என் புறமாக எதேச்சையாகவாவது திரும்புமா என்று காத்திருப்பதே எனக்குத் தவமாகிவிட்டது. இந்தப் பேருந்து கண் மூடி விழிக்கும் முன்பாகப் பெருந்துறை வந்துவிடுகிறது. ஏதாவது முகூர்த்த நாள் என்றால் தாமதமாகிறது என்றாலும், கண்மணியைக் கூட்டத்தின் நெரிசலில் பார்க்கவே முடியாது.

பிப்ரவரி 25

என் தேவதையின் குரலைக் கேட்டுவிடலாம் என்றுதான் அந்த இருவரின் பின்னால் கோயிலுக்குச் சென்றேன். கோயிலுக்கு என்றால், எல்லோரையும் காப்பாற்று சாமி என்று வேண்டிக்கொண்டு கும்பிடுவதற்கு அல்ல. கோயில் காம்பவுண்டினுள் இருக்கும் பெரிய அரச மரத்துத் திண்டில் ஏறி அமர்ந்துவிட்டேன். என்னை நினைத்தால் எனக்கே வேடிக்கையாக இருக்கிறது. ஊரும் பேரும் தெரியாத ஒரு வடிவான பெண் சாமி கும்பிட்டுவிட்டு வருவதற்காகக் காத்திருக்கிறேன்.

காதல், மனதின் தூய்மையை அழித்து பைத்தியக் குழியில் தள்ளிவிடும் என்பது என் விஷயத்தில் சரிதான். அவர்கள் இருவரும் கோயிலைவிட்டுப் படிகளில் இறங்கி வந்து தங்கள் மிதியடிகளைப் போட்டுக்கொண்டார்கள். இதையும் சொல்ல வேண்டும். என் தேவதை புதிய மிதியடி அணிந்து வந்திருந்தாள். குதி அருகில் வார் வைத்த மிதியடி, அப்புறம் இன்று பச்சை வண்ணத்தில் சேலை. பச்சை வண்ணம் என் தேவதைக்குக் கணக்காக இல்லை. பின்னாளில் இந்த சேலையைக் கட்டாதே கண்மணி என்று கூற வேண்டும். அவர்கள் ஏதோ ஒரு சின்ன விஷயத்தை ஊதிப் பெரிதாக்கிப் பேசிக்கொண்டு வந்தார்கள். நான் திண்டில் இருந்து குதித்து இறங்கி “என்னங்க…” என்றேன்.

உலகத்தில் காதலிப்பவர்கள் ஆரம்பிக்கும் முதல் கேள்வியைக் கேட்டேன். “மணி என்னங்க?” காக்கா கலரில் இருந்தவள்தான் “எட்டே கால்” என்று பதில் சொன்னாள். அவளுக்கு ஏனோ நன்றி சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை.

மார்ச் 10

எனது நாட்குறிப்பேட்டின் பக்கங்கள் வெற்றுப் பக்கங்களாகவே கழிகின்றன. என் தேவதையும் காக்காவும் குன்னத்தூர் செல்லும் சாலையில் பெரிய மெடிக்கல் கடை ஒன்றில் பணியில் இருந்தார்கள். தலைவலி என்று போய் நின்றேன். காக்காதான் முன் வந்து, “டாக்டர் எழுதிக்கொடுத்த காகிதம் எங்கே?” என்றாள். டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து தர மாட்டார்களாம். “சரி, பெட்டிக் கடையில் போய் அனாசின் வாங்கிக்கொள்கிறேன். அங்கும் டாக்டரின் பரிந்துரைக் காகிதம் கேட்பார்களா?” என்றேன் காக்காவிடம். அவளோ, “எனக்குத் தெரியாது” என்றாள்.

இனி எப்போதும் என் தேவதை பணிபுரியும் கடைக்குள் டாக்டர் சீட்டு இல்லாமல் போக முடியாது. என் தேவதையின் குரல் இனிமையைக் கேட்க முடியாது. தொலைகிறது. ஏதோ என் தேவதையைக் கண்ணால் காண்பதற்காவது ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்களே! அவளும் என்னை மாதிரி நாட்குறிப்பு எழுதி, என்னைப்பற்றி அதில் தீட்டிக்கொண்டு இருந்தால்? ஹா… நினைக்கையிலேயே என்னமாய் இனிக்கிறது. கொடுப்பினை வேண்டும் சாமியோவ் அதற்கெல்லாம்!

மார்ச் 20

இன்று எனக்குத் துக்க நாளா? சந்தோஷ நாளா? என்று தெரியவில்லை. ஆனாலும் மிக முக்கியமான நாள்தான். வழக்கம்போல அவர்கள் கோயில் படிகளை விட்டு இறங்கி புதிதாகத் தென்பட்ட பிச்சைக்காரிக்கு ஆளுக்கு எட்டணா போட்டுவிட்டு வருகையில், நான் திண்டில் இருந்து குதித்து இறங்கினேன். என்னை அவர்கள் கடந்து போகும் சமயம் பார்த்து, “எப்படியோ கோயிலுக்கு வராதவனையே வரவெச்சுட்டீங்க” என்றேன். என் தேவதை ஷாக் அடித்ததுபோல அப்படியே நின்றுவிட்டாள். விடுவேனா? “என்ன வரம் கேட்கறீங்க தினமும் சாமிகிட்டே?” என்றேன்.

முந்திரிக்கொட்டை கணக்காக காக்காதான் “சொல்லியே ஆகணுமா?” என்றாள்.

“உங்ககிட்டே நான் கேட்கலைங்க மேடம். நீங்க விருப்பம் இருந்தா சொல்லுங்க தேவதை. நல்ல வீட்டுக்காரர் அமையணும்னு நீங்க வேண்டுதல் வெச்சிருந்தீங்கன்னா… அது நான்தான்!” என்று சொல்லிவிட்டு, மீண்டும் திண்டுக்கே திரும்பிவிட்டேன்.

தேவதை பதில் சொல்லாமல் நகர்ந்தாள். காக்கா ஏதோ தேவதையிடம் பேசிக்கொண்டு சென்றாள். இருடி உனக்கு வெச்சிருக்கேன். முதல்ல என் தேவதையை என் பக்கம் காந்தம் வெச்சு இழுத்துட்டு, முதல் வேலையா உன் தோழித்தனத்தை வெட்டிவிடச் சொல்றேன்!

மார்ச் 29

தோழிகளால், தோழர்களால் சிலர் வெற்றி பெறுவார்கள். சிலர் பாதாளம் வரை போய்விடுவார்கள். என் கோவை நண்பன் வெற்றிவேலுக்கு இப்படித்தான் தோழி வடிவில் ஒரு சாத்தானின் பெண் பால். நான் மெடிக்கல் ரெப்பாக ஊர் ஊராகச் சுற்றியவன். அந்த வழியில் வெற்றிவேலும் ஒரு ரெப். வெற்றிவேல் காதலித்த பெண்ணிடம் கடைசி வரை பேசவே முடியவில்லையாம். தோழியே பேசினாளாம். கடைசியில் தோழியே இவனிடம், அவள்தான் அழகா? ஏன் என்னைப் பிடிக்கலையா? என்று கேட்டு நண்பனைத் தன் முந்தானையில் முடிந்துகொண்டாளாம். இப்போது அவர்களுக்கு ஒரு குட்டிப் பாப்பா. சண்டை என்று இவர்களுக்குள் வந்துவிட்டால், “நீ அவளைத்தான் ஜொள்ளு ஊத்திட்டுப் பார்க்க வந்தே, என்னையாடா பார்க்க வந்தே!” என்கிறாளாம். இதே கதை பாரத் என்கிற எனக்கும் நடந்துவிடக் கூடாது அல்லவா!

இதற்காக காக்கா என் முழு நேர எதிரி என்றெல்லாம் நினைக்கவில்லை. பெண்களை என்றுமே மனதால் எதிரியாகப் பாவிக்க மாட்டேன். பெண்கள் வீட்டின், நாட்டின் கண்கள்.

இன்று கோயிலில் அமாவாசை என்பதால் கூட்டம் அதிகம். உள்ளே சென்ற பிரியத்துக்கு உரியவளை வெகு நேரமாகக் காணவில்லை. ஒரு வாரத்துக்கும் சேர்த்து இன்றே சாமியிடம் வேண்டுகிறாளோ என்னவோ?! அதைத்தான் அவர்கள் வருகையில் கேட்டேன் மிகத் தெளிவாக. “என்ன, ஒரு வாரத்துக்கும் சேர்த்து இன்னிக்கே வேண்டுதலா?”

தேவதை என்னைப் பார்த்து, “லேட் ஆனாலும் தேவைன்னா காத்திருந்துதான ஆகணும்” என்றாள். இதென்ன இப்படி சொல்லிப்போட்டா?

“தேவைங்கிறதாலதான் காத்திருந்தேன். ஆனா, அல்லக்கை சொல்லிக் கொடுத்து எதையும் பேசாதீங்க, நீங்களாப் பேசுங்க” என்றேன்.

“தெரியுதுல்ல… வாடி டைம் ஆச்சு. இங்க நின்னுட்டு வெட்டிப் பேச்சு எதுக்கு?” என்று காக்கா என் தேவதையை இழுத்துப் போய்விட்டாள். காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வான்னா, சூட்டுக் கோலைக் கொண்டுவருதே!

ஏப்ரல் 4

பேருந்தில் எனக்கு இப்போது எந்த இடைஞ்சலும் இல்லை. நடத்துநர்கள் இருவரும் நெருக்கமாகிவிட்டார்கள். இரவு நேரத்தில் என் ஜெராக்ஸ் கடையை இழுத்துப் பூட்ட இரவு 9 மணி ஆகும். தேவதையும் காக்காவும் டாண் என்று 8 மணிக்கு மெடிக்கல் கடை யைவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். 8 மணிக்கு நான் கடையைப் பூட்ட முடியாது. ஞாயிறு விடு முறை என்ற பலகையை என் கடையில் இருந்து எடுத்துவிட்டேன். தேவதைக்கு விடுமுறையே இல்லை என்பதால், எனக்கும் இல்லை. வீட்டுக் காரி பணி செய்துகிடக்கையில் வீட்டுக்காரன் சும்மா இருந்தால் உலகம் என்ன சொல்லும்!

அப்படியான இந்த நாளில் காக்காவைத் தேவதையுடன் காணவில்லை. 8 மணிக்கு நானும் டாண் என்று ஷட்டரைச் சாத்திவிட்டேன். பஸ் நிறுத்தம் இரைச்சலாக இருந்தது. என் தேவதை யின் வரவை எதிர்பார்த்து நின்றிருந்தேன். இன்று எப்படியாயினும் அவள் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும். தோழியின் துணை இன்றித் தேடும் விழிகளோடு வந்தவள் என்னைக் கண்டதும் அமைதியாகி, என் அருகிலேயே நின்றுகொண்டாள். நான் எச்சிலை விழுங்கிக்கொண்டேன்.

“உங்க பெயரைச் சொல்லுங்களேன்?” என்றேன். அவளுக்கு மட்டுமே கேட்கும்விதமாக, “யோசனை பண்ணித்தான் சொல்லணும்… ம்… மாலதி” என்றாள். அவள் குரலும் யாருக்கும் கேட்டிருக்காதுதான். என் வலது பக்கச் செவிக்குள் மட்டும் நுழைக்கப்பட்ட குரல்.

“நல்ல பேருன்னு சொல்வேன்னு நினைக்க£தீங்க. பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்” என்றேன்.

“பேர்ல என்ன இருக்கு? சுப்பாத்தாள்னுகூட வெச்சுக்கோங்க…” என்றாள்.

“ஓ… அப்படி வர்றீங்களா? ரொம்ப நன்றிங்க” என்றவன் அமைதியாகிவிட்டேன். யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளுமாம். ஏனோ தேவதை ஸாரி, சுப்பாத்தாள் ஏறிய பேருந்தில் ஏற மனமே வரவில்லை. இந்தப் பெண்ணை மடக்கி, என் இடுப்பில் தூக்கி இடுக்கிக்கொள்ளாவிட்டால் இந்தப் பிறப்பே வீண்!

ஏப்ரல் 20

மாலதி என்று பொய்யாகப் பெயர் சொன்னவள் மீது எனக்குக் கோபம் எதுவும் இல்லை. சுப்பாத்தாள் என்றுகூட வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டாள். ஆனால், ஏன் அப்படிச் சொன்னாள் என்றுதான் புரியவே இல்லை. ஒரு வார காலம் அவர்கள் பின்னால் கோயில் செல்வதை விட்டொழித்தேன். மீண்டும் சென்றபோது ‘ரொம்ப அலையுதே’ என்று தேவதை வாயடிக்க ஆரம்பித்தாள். அதுவும் காக்காவிடம் பேசுவதுபோலப் பேசிக் குத்தினாள். ஐயோடா!

“சுப்பாத்தா, ரொம்பப் பிடிச்சதெல்லாம் ரொம்ப அலையவைக் கத்தான் செய்யும். நெனைச்ச உடனே கிடைச்சுட்டா… எந்த அழகான பொருளுக்கும் மதிப்பே இல்லை” என்றேன்.

“ஓ! சுப்பாத்தாள்னு பேரு வெச்சுட்டீங்களா?” என்று காக்கா பேசினாள்.

“ஏன்டி, அடுத்தவங்களுக்குத் தானம் பண்ணினால் மனசுல நினைச்சது நடக்குமாம்ல… என்னை ஒரு பைத்தியம் சுத்திட்டு இருக்குது. அது இனி வரக் கூடாது” என்று ஒரு ரூபாய் காயின் ஒன்றை தேவதை அந்தப் பிச்சைக்காரியின் தட்டில் போட்டாள்.

“நீங்க நினைச்சது நடக்கும்ங்க” என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டேன். எனக்கு இதெல்லாம் தேவையா? முதலில் இதற்குக் காரணமான நண்பர்களைக் கும் மாங்குத்து போட வேண்டும். ஐயகோ!

மே 20

நான் பேருந்தை மாற்றிக்கொண்டேன். எனக்குக் காதல் சகவாசம் வேண்டாம். என்னதான் பேருந்து மாறிவிட்டாலும் மனம் மட்டும் அவள் வரும் பேருந்திலேயேதான் வந்தது. இரண்டு முறை நிறுத்தத்தில் அவளைப் பார்த்ததும் பாராததுபோல நழுவினேன். எப்படியாயினும் இந்தப் பாழும் மனது அவளையே நினைக்கிறது. பின்னால் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். நானும் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். புத்தகம் மூடப்பட்டுவிட்டது. இனி விரித்துப் படிக்க அதில் ஒன்றும் இல்லை.

ஜூன் 2

இனி முடியாது! என் இதயம் சுக்குநூறாக சிதறிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு முறை. ஆமாம் இன்னொரு முறை! அவள் என்னைப் பழித்தாலும் சரி. இந்த வேதனை தீர வேண்டும். நேராகவே அவளிடம் சொல்லிவிடலாம். என்னால் முடியலடி என்று. இதில் தவறேதும் இல்லை.

அப்படித்தான் முடிவில் ஞாயிறு இரவு 8 மணிக்கு நிறுத்தத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தேன். இருவரும்தான் வந்தார்கள். நான் ஒரு பைத்தியம் என்பதால், வேறு இடம் போய் நிற்பார்கள். அப்படிப் போனாலும் தேடிப்போய் பேசிவிட வேண்டியதுதான். ஆனால், அவர்கள் வேறு இடம் போகாமல் என் அருகிலேயே வந்து நெருக்கமாக நின்றார்கள்.

“ரொம்பக் கோபமா?” என்றாள் காக்கா.

“இல்லீங்க சந்தோஷம்தான்” என்றேன்.

“அவ வேணும்னே பிச்சைக்காரிகிட்டே அன்னிக்குப் பேசலைங்க… சும்மா விளையாட்டுக்குத்தான் பேசினா. நீங்களும் கோவமா இனிமேல் வரலைன்னுட்டுப் போயிட்டீங்க. ரொம்ப இதா ஆயிட்டா. பஸ்லயும் வர்றதில்லே… எங்க வேலைல இருக்கீங்கன்னும் தெரியலை. ஒரு ஸாரி கேட்கக்கூட முடியலையேடின்னு அழறா, ரொம்ப ஸாரிங்க” என்று காக்கா நிதானமாக பேசப் பேச, எனக்கே பிடித்துப்போனது. காக்கா நல்ல நல்ல அண்டங்காக்கா. அப்படியே என் இதயத்தை மயிலிறகால் தடவுகிறது.

“முதல் முறையா உங்க ஃப்ரெண்டைப் பார்த்தப்ப இருந்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் இப்படிஎல்லாம் யார் பின்னாடியும் போனதே இல்லே. எனக்குப் பிடிச்சதனால வந்தேன். ஆனா, உங்க தோழி தமாஷ் பண்ணினதா இப்போ சொல்றீங்க. நான் உங்க பின்னாடி வந்து உங்களைச் சிரமப்படுத்திட்டேன். அதுக்காக என்னை மன்னிச்சுடுங்க. என்னோட ஆசை, என்னோட காதல், என்னோட வேதனை, என்னோடவே போகட்டும்” என்றேன்.

“நான்தான் விளையாட்டுப் புத்தியில பண்ணிட்டேன். மன்னிச்சுடுங்கன்னு கேட்கிறேன். மறந்து டுங்களேன் அதை?”- இந்த முறை தேவதை விழிகளில் ஈரமாகப் பேசினாள்.

என்ன நடக்கிறது இந்த இடத்தில்? நான் சென்று மன்னிப்பு கேட்பது போய் அவள் கேட்கிறாள். சுக்கிரன் உச்சத்தில் நின்று எனக்காகப் பேசுகிறானோ?!

இத்தனை நாள் உள்ளுக்குள் துன்பத்தைவைத்திருந்த மனது நொடியில் அதைத் தூக்கி வீசிவிட்டது. தேவதை மீண்டும் ஸ்திரமாக மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டாள்.

“நான் உங்களை விரும்புறேன்” என்றாள்.

“உங்க அப்பா – அம்மா வெச்ச பேரு சொல்லுங்க?” என்றேன்.

“பிருந்தா” என்றாள்.

“என் பெயரை உங்க கற்பனைக்குத் தகுந்தாப்ல முனுசாமின்னு வெச்சுட்டுக் கிள்ளிக்கோங்க… கனவு காணுங்க” என்றேன்.

“பழிக்குப் பழியா… என்னால தாங்கிக்க முடியாதுங்க முனுசாமி, ப்ளீஸ்” என்றாள்.

“எனக்கும் இதே மாதிரிதானே இருந்திருக்கும்” என்று சொல்லி அமைதியானேன். பிருந்தாவும் அமைதியாகிவிட்டாள். அன்பை அனுபவித்தால் அழுகை வருமாம். வரும்போல் இருந்தது.

ஜூன் 12

கோயிலின் முன்பாக அமர்ந்திருந்த பிச்சைக்காரி முன் நின்றேன். இப்போதெல்லாம் பிருந்தாவின் பின்னால் நான் செல்வது இல்லை. அவள்தான் என் பின்னால். சக்கரம் கீழே இருந்து மேல் ஏறிவிட்டது. மேலே இருந்து கீழே வரட்டும். அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

“என்னை ஒரு பைத்தியம் சுத்துது… அது என் பின்னாடி வரக் கூடாதுன்னு நீங்க சொன்ன மாதிரி சொல்லி ஒரு ரூபா போடுவேன்னு பார்க்கறீங்களா?” என்றேன்.

“எங்கே சொல்லிப்பாருங்க… என்ன நடக்கும்னு அப்புறம்தான தெரியும்” என்றாள் பிருந்தா.

நான் ரூபாயை பிச்சைக்காரியின் தட்டில் போட்டேன். “அம்மா… என்னை ஒரு பைத்தி…” பிருந்தா என் வாயைப் பொத்தினாள் அவள் கைகளால்! என் நெஞ்சில் இரண்டு மூன்று குத்துகள்விட்டாள். அவள் கண்கள் வேறு ஈரமாகிவிட்டதால் அவளைக் கட்டிக் கொள்ளலாம் என்றால் பொது இடமாகப் போய் விட்டது. “என் பெயர் பாரத்” என்றேன்.

“போடா முனுசாமி” என்றவள், இன்னும் இரண்டு குத்துவிட்டாள்.

“காக்காவக் காணோமே” என்றேன்.

“காக்காவா?” என்று கேட்டு விழித்தவளுக்கு விளக்கம் சொன்னதும் சிரித்தாள், வெண் பற்கள் பளீரிட!

‘எதுக்குடி அநியாயத்துக்கு இத்தனை அழகா சிரிக்கிற? என் கண்ணே பட்டுடும்போல இருக்கேடி’ என்று மனதில் நினைத்துச் சிரித்தேன்.’

“எதுக்குடா நீயா சிரிச்சுக்குறே… சொல்லிட்டுச் சிரிடா” என்றாள் பிருந்தா!

- ஆகஸ்ட் 2010Post Comment

சனி, ஏப்ரல் 27, 2013

ஒருமுறைதான் பூக்கும் -கல்கி இதழில் மார்ச்
பெருந்துறை பேருந்து நிறுத்தத்தில் வசந்தாமணிக்காக காத்திருந்தான் சுதாகரன். இது இன்று நேற்றல்ல… மூன்று வருடங்களாக நடப்பது தான். மூன்று வருடத்தில் இவனுக்காய் எந்த நாளும் வசந்தா மணி எந்த இடத்திலும் காத்திருந்ததே இல்லை. அவளுக்காக இப்படிக்காத்திருப்பது இந்த மூன்று வருடங்களில் ஒரு முறை கூட சுதாகரனுக்கு சலிப்பான விசயமாகத் தோன்றியதே இல்லை.வசந்தாமணி ஈங்கூர் பெண் ஹையர்செகண்டரி முடித்தவள். வீட்டு நிலைமையை மனத்தில் கொண்டு பனியன் கம்பெனியில் சேர்ந்து கொண்டாள். வீட்டில் அப்பாவும், அக்காவும் தோட்ட வேலைகளை பார்த்துக்கொள்கிறார்கள். தோட்டத்தில் இருபது ஆடுகள் பட்டியிலும், எருமைகள் ஐந்தும் நின்று கொண்டிருக்கின்றன. அம்மா மேல் உலகத்துக்கு டிக்கெட் எடுத்து போய் வருடம் நான்கு போய்விட்டது.

ஊதாரி அண்ணன் ஒருவன் ஸ்டீல் கம்பெனிக்கு வேலைக்கு போவதும் டாஸ்மாக்கில் குடியிருப்பதையுமே வழக்கமாய் கொண்டிருந்தான். மனியன் எங்கேப்பா? என்றால் கோயிலில் இருந்தானே என்பார்கள். டாஸ்மாக் கடையை கோயில் என்கிறார்கள். மணியனுக்கு தனக்கு மூத்தவள் ஒருத்தி திருமணத்துக்கு நிற்கிறாள் என்ற எண்ணம் துளி அளவேனும் இல்லாதவன். மணியனின் அக்கா தேவிகாவுக்கு வயது இருபத்தாறு நடக்கிறது. ஈங்கூர் பள்ளியில் மேல் படிப்பான ஐந்தாவது பாஸ் செய்தவள். வீட்டு வேலைகளிலும், காட்டு வேலைகளிலும் கெட்டிக்காரி. வசந்தாமணிக்கு வீட்டில் வேலை செய்வதோ தோட்டத்தில் வேலை செய்வதோ அலர்ஜியான விஷயம். எருமை சாணத்தை தேவிகா கூடையில் அள்ளி எடுத்து போய் குப்பையில் கொட்டுவதை முகம் சுளித்தபடி பார்ப்பாள். அக்காவுக்கு சமையலில் கூட உதவ மாட்டாள் வசந்தாமணி. போதாதற்கு இவளின் துணிமணிகளைக்கூட தேவிகா தான் சர்ப் எக்ஸல் போட்டுத் துவைத்துக் காய வைப்பாள். சம்பளமில்லாத வேலைக்காரியாக தேவிகா மாறிப்போயிருந்தாள்.

வசந்தாமணியின் அப்பா பிள்ளைப்பூச்சி. தான் உண்டு தன் வேலை உண்டு என்றே இருப்பார். அவரது வருத்தமெல்லாம் மணியன் இப்படி மொடாக்குடிகாரணாக போய்விட்டானே என்று தான். ஈங்கூரில் ஊருக்குள் இருக்கும் வீட்டுக்கும் அவர் அதிகம் வருவதில்லை. தோட்டத்திலேயே மோட்டார் ரூமில் படுத்து கொள்வார். தேவிகா வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு போவாள்.
சுதாகரன் சிகரெட்டின் கடைசி இழுப்பை இழுத்து கீழே போட்டு செருப்பால் அதன் தீக்கங்கை அழுத்தி அணைத்தான். புகைபிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது. சுதாகரன் கொங்கு கல்லூரியில் ஆபீஸ் பியூனாக இருக்கிறான். இதோ இப்போது தான் வேலையில் சேர்ந்தது போல் இருக்கிறது. ஆனால் வருடங்கள் ஐந்து ஓடிவிட்டது. ஆசைத் தங்கையை சேலத்துல கட்டிக்கொடுத்து வருடம் இரண்டு போய் விட்டது. அவளைக் கட்டி கொடுத்து தாட்டி விட்ட நாளில் இருந்து வீட்டில் அப்பாவும் அம்மாவும் இவன் ஜாதகத்தைத் தூக்கி கொண்டு பெண் பார்த்துடலாம். பெண் பார்த்துடலாம் என்று கீழல் விழுந்த டிவிடி தட்டு போல கத்திக்கொண்டே இருந்தார்கள். அவர்களாகவே சோதிடரை தேடிப்போய் ஜாதகத்தை கொடுத்து ரிசல்ட் பார்த்தார்கள்.

இந்த ஜாதகக்காரனுக்கு குரு பலன் வர இன்னும் ஒரு வருஷம் இருக்கே வயது என்ன இருபத்தி ஒன்பதா? முப்பது பிறந்ததும் குரு பார்க்கிறான். அப்புறம் நீங்க நினைச்சால கூட பையன் திருமணத்தை நிறுத்த முடியாது என்ற தகவலை சோதிடர் சொன்னதும் நிம்மதியாக வீடு வந்தவர்கள் ஒரு வருடம் இவன் திருமணம் பற்றி இவனிடம் வாயைத் திறக்கவில்லை.
இதோ சுதாகரனிடம் குரு வந்து விட்டான். வந்ததும் அவசரப்படாமல் முப்பது நாள் தங்க வைத்து சுதாகரனின் பெற்றோர் அதே டிவிடி தட்டை போட்டார்கள். சுதாகரன் இந்த முறை பெற்றோரிடம் கோபிக்கவில்லை. ஒரு வாரத்தில் சொல்றேன்ப்பா என்று அப்பாவிடம் சொல்லிவிட்டான். அதோ வசந்தாமணி காலையிலிருந்து கால் கடுக்க நின்று வேலை செய்த களைப்பில் துவண்டு போய் வந்து கொண்டிருந்தாள். சுதாகரனை பார்த்ததும் வழக்கமாக வீசும் புன்னகையை வீசினாள். அருகே வந்தவள், ஐயா இன்னிக்கு கோபமோ முகம் ஏனோ உம்முன்னு இருக்கே என்றாள். மூன்று வருட பழக்கத்தில் சரளமாக பேசும் குண்ம் மட்டுமே அவளிடம் மிஞ்சியிருந்தது.
ரொம்ப பசிக்குதுப்பா, அக்கா டிபன்ல நாலு இட்லி வச்சி அனுப்பி விட்டுட்டா கம்பெனில இன்னிக்கு அக்கட்ட இக்கட்ட துளி நகர முடியாத அளவுக்கு வேலை. சூப்பர்வைசர் வேற கழுகு மாதிரி பார்த்துட்டே இருந்தான். அவள் பேசிக்கொண்டே யிருக்க சுதாகர் ஹோட்டலை நோக்கி நடந்தான். பின்னால் வந்தவள் இன்று ஏனோ புதிதாய் ஒரு பேச்சு பேசாமல் நகர்கிறானே என்று யோசித்தபடி சுதாகரின் பின்னால் செல்லாமல் நின்று கொண்டாள்.

ஹோட்டலின் அருகாமை சென்ற சுதாகர் திரும்பி பார்த்து வா என்று கையசைத்து கூப்பிட்டான். மக்கள் கூட்டம் பேருந்தை பிடிக்க அலைமோதிக்கொண்டிருந்தது. மாலை நேரத்தில் எப்போதும் இப்படித்தான். கோபித்து கொண்டு நிற்பவளை சமாதானப்படுத்த சுதாகரன் திரும்பவும் அவளிடம் வந்தான். இவர்களின் நாடகத்தை கவனிப்பாரின்றி எல்லோரும் அவரவர் அவசரத்தில் இருந்தார்கள். என்னம்மா சின்னப்பிள்ளையாட்டம் பிடிவாதம்…

பின்ன நான் என்ன கிழவியா? பசிக்குதுன்னு சொன்னேன். சரி வா போகலாம்னுஒரு வார்த்தை பேசாமல் முன்னாடி போனல் என்ன அர்த்தம்? என் கிட்ட காசு இல்லாமல் தான் உங்ககிட்ட பசிக்குதுன்னு சொன்னேனா? நீங்க உம்முன்னு முகத்தை வெச்சுட்டு முன்னாடி போனால் நான் பின்னாடி வரணுமா?
சாரி வசந்தாமணி மேடம். எனக்கும் கூட பசிக்குது. நீங்களும் பெரிய மனசு பண்ணி இந்த ஏழையோட அழைப்பை நிராகரிக்காம வாங்க என்றான்.

கொஞ்சம் நக்கல் தான். இருந்தாலும் எனக்கு பசி என்றவள் சுதாகரனுடன் இணைந்து ஹோட்டலுக்குள் வந்தாள். இருவரும் பூரி இரண்டு செட் ஆர்டர் செய்து விட்டு டேபிளில் அமர்ந்தார்கள். சாப்பிட்டு முடித்து விட்டு வெளியே வரும்வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வெளியில் வுந்ததும் சுதாகரன் ஆரம்பித்து கொண்டான்.

நான் பலமுறை உன்கிட்ட கேட்டுட்டேன் வசந்தா. இனியும் என்னால பொறுத்திருக்க முடியாது. குருபலன் வேற பிறந்துடுச்சாம். அப்பா அம்மா ஆரம்பிச்சுட்டாங்க…
என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? உங்க கூட ஓடிவரச் சொல்றீங்களா? அது முடியாது. என் அக்கா பாவம் சுதாகர். அப்புறம் அவளுக்கு காலம் பூராவும் கல்யாணமே நடக்காம போயிடும். இப்பவே அவளை நாங்க வீட்டுல வேலைக்காரி மாதிரி வச்சுட்டு இருக்கோம். உங்க கூட இப்பவே நான் ஓடி வந்துடலாம். ஓடிப்போன பெண் குடும்பத்துல பெண் எடுக்க யாரும் வரமாட்டார்கள். அக்காவுக்கு வயசு இருபத்தி ஆறு பிறந்தாச்சு. அவள் சாதகத்துலயும் குருபலன் வந்தாச்சு. இருபத்தி ஆறுல நிச்சயம் மேரேஷ் முடிஞ்சிடும்னு சோதிடர் சொல்லிட்டாரு. அதும் இனி பார்க்கிற முதல் ஜாதகமே அக்காவுக்கு பொருத்தமா ஆயிடுமாம். இத்தனை நாள் பொறுத்தவரு எனக்காக கொஞ்சம் நாள் ப்ளீஸ்ப்பா… என்றாள்.
இல்ல வசந்தா… உன்னை கட்டிக்க நான் எப்பவும் தயார் தான். வீட்டுல அம்மாவுக்கு முன்னை போல முடியறதில்லை. அப்பாவுக்கும் சர்க்கரை பிரஷர்னு வியாதிகள். எனக்கும் முப்பது ஆயிடிச்சு. எனக்கும் உணர்ச்சிகள் இருக்கு வசந்தா. நானும் மனுசன் தான். எப்போ நான் இந்த விசயத்தை கேட்டாலும் அக்கா அக்கான்னு அக்கா பாட்டே பாடுறே. அப்பா வாய்விட்டே கேட்டுட்டாருமம்மா… இந்த வாரத்துல நல்ல பதிலா சொல்றேன்னு சொல்லிட்டேன் என்றான்.

நீங்க பேசறதை பார்த்தால் உங்க அப்பாவுக்காக ஒரே வாரத்தில் ஒரு பெண்ணோட போய் நிற்கணும்ங்ற மாதிரி இருக்கே. நீங்க கேட்குறப்பா எல்லாம் நான் ஒரே மாதிரி சொல்றேன்னா எனக்கு என் அக்கா பெருசுதான். அவளோட திருமணத்தை கெடுத்துட்டு நான் நிம்மதியா இருக்கவோ, வாழவோ முடியாதுங்கறதுனாலதான். ஒரே பதிலை நீங்க கேட்குறப்ப எல்லாம் சொல்றேன். என்க்கு நீங்க வேணும் சுதாகர். அது என் மனசுல ஆழமா இருக்கு… என்று வசந்தாமணி பேசத் தொடங்கி விட்ட சமயம் சுதாகரன் திருப்பூர் பேருந்து வர ஓடிப்போய் ஏறிக்கொண்டான். வசந்தாமணிக்கு கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்து விட்டது.

சன்னிமலை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டவளுக்கு சுதாகரன் ஓடிப்போய் பேருந்து ஏறிகொண்ட காட்சியே திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது. இனிமேல் தன்னிடம் பேசுவானோ? மாட்டானோ என்று பயமாய் இருந்தது. அவுன் இல்லாத வாழ்வை நினைக்கையில் அது வெறுமையாய் கண்களுக்கு முன் தெரிந்தது. இரவு உணவு தொண்டைக்கும் கீழ் இழங்க மறுத்தது. நடு இரவு வரை உறக்கம் வராமல் பாயில் கிடந்தாள். தூக்கம் வந்த போது வந்த கனவில் சுதாகரன் வெள்ளை வேட்டி சட்டையில் மாலையும் கழுத்துமாய் நின்றான். அருகில் நின்றிருந்த மணப்பெண்ணின் முகத்தை இவள் எவ்வளவோ உற்று பார்த்தும் அடையாளம் தெரியவில்லை.

அடுத்த நாள் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த வசந்தாமணிக்கு மதியம் போல தலைவலி ஆரம்பித்து விட்டது. மாலை நேரம் வரவர உடல் சூடாய் இருப்பதை உணர்ந்தாள். கண்களில் எரிச்சல் கூடி போயிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் சுதாகரனை காணாமல் டைபாய்டு ஜுரம் வந்தவள் போல, தான் பேருந்து ஏறி வீடு வந்து சேர்ந்தாள். வீட்டில் மாற்றம் தெரிந்தது. சித்தியும், சித்தப்பனும், அப்பாவும், அண்ணனும் இருந்தார்கள். அக்கா தீபாவளிக்கு புதிதாய் எடுத்திருந்த பிங்க் கலர் சேலை கட்டியிருந்தாள். அவள் முகம் பிரகாசமாய் இருந்தது. அக்காவை பெண் பார்த்துவிட்டு போயிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாள். இவர்களின் முகப்பூரிப்பை வைத்து பார்த்தால் பெண் பார்க்க வந்தவர்கள் சம்மதம் சொல்லி விட்டு சென்று விட்டதை யூகித்து விட்டாள்.

சுதாகரனின் செல்போனுக்கு இந்த தகவலை உடனே சொல்லி விட வேண்டும் என்று மனது சந்தோஷ பாட்டு பாடியது. சமையல் கட்டு சென்று பஜ்ஜி கடித்துக்கொண்டே காபி குடித்தாள். அக்காவை பார்த்து கண் சிமிட்டினாள். அக்கா, போடி என்று செல்லமாக சிணுங்கினாள். வெட்கப்பட்டால் அக்கா அழகு தான் என்று நினைத்தாள் வசந்தா மணி.

மாப்பிள்ளை எந்த ஊர்? என்ன வேலையில இருக்காராம்? என்றாள். மாப்பிள்ளை ஊர் விசயமங்கலமாம். தங்கச்சியை சேலத்துல கட்டிகொடுத்து ரெண்டு வருஷம் ஆயிடிச்சாம்.
பேர் என்ன? என்ன வேலையின்னு கேட்டால் ஊர் உலகம் சுத்தறியேக்கா.

பேர் சுதாகரனாம். கொங்குகாலேஜில பியூனா இருக்காராம். சம்பளம் மாசம் எட்டாயிரமாம். சாதகத்துல எட்டு பொருத்தமும் கூடி வந்தது. சென்னிமலை ஈஸ்வரன் கோயில்ல சிம்பிளா கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க. என்று தேவிகா சொல்ல, காபிடம்ளரை தவற விட்டாள் வசந்தாமணி.

- மார்ச் 2013

Post Comment

வெள்ளி, ஏப்ரல் 26, 2013

சிறுகதை : ஜாதிகள் இல்லையடி பாப்பா---தினமணிக்கதிர் 2012

நுவ்வு ஏமி பணி சேஸ்தாவு? நீ என்ன வேலை பண்ணுறே?” – நர்மதா.

“”எங்க பேச்சுப் பேசிப் பழகியே ஆகணும்னு ஏன் நர்மதா பிடிவாதம் பிடிக்கிறே… எங்க உறவுலேயே நாங்க தமிழ்தான் பேசிக்கறோம்” என்றான் ரமேஷ், நர்மதாவைப் பார்த்தபடி.

இருவரும் வீட்டைவிட்டு, ஊரை விட்டு ஈரோட்டுக்கு ஓடிவந்து இரண்டு நாட்களாகிவிட்டன. வெகுதூரத்தில் இருந்தெல்லாம் ஓடிவந்துவிடவில்லை. ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஊரில் இருந்து ஓடிவந்து குமரன்ஸ்ரீ லாட்ஜில் அறை எடுத்துத் தங்கிவிட்டார்கள்.

ரமேஷ் சுள்ளியம்புத்தூரில் தான் சில ஆண்டுகளாகத் தறி ஓட்டுகிறான். வாரம் எப்படியும் ஆயிரத்து ஐநூறுக்குப் பக்கமாய் சம்பாதிப்பவன். நர்மதாவோ கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தவள். அவளுடைய அப்பா டெய்லரிங் கடை வைத்திருந்தார்.

காதல் யார் யாருக்கு எப்போது பூக்கும் என்பதைத்தான் சொல்லவே முடிவதில்லையே. நர்மதா தன் அப்பாவுடன் ஒரு தோழியைப் போலத்தான் பழகினாள். வீட்டுக்கும் ஒரே பெண். தோழனைப் போல பழகிய அப்பாவிடம் கூட தன் காதலைச் சொல்லாமல், ஓடி வந்துவிடும் அளவுக்கு காதல் கண்ணை மறைத்துவிட்டது. காதலைச் சொன்னால் தோழன் விசாரிப்பார், காதலன் யாரென்று. காதலன் மூங்கில் பாளையத்துப் பையன் என்று எப்படிச் சொல்வாள்? தோழன் ஏற்றுக் கொள்வாரா? சரி, சாமி ரொம்ப சிறப்பு என்று கூறி என் பெண்ணின் சாமர்த்தியமே சாமர்த்தியம்தான் என்று அக்கம்பக்கமெல்லாம் தம்பட்டமா போடுவார்?

கல்லூரியில் சல்பியூரிக் ஆசிட் பற்றி படிக்க வேண்டிய நர்மதா லாட்ஜ் அறையில் தெலுங்கு சொல்லிக்குடு என்று ரமேஷிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவனோ அபிராமி தியேட்டரில் மதியக் காட்சி “பச்சை என்கிற காத்து’ பார்க்க போகலாம் என்று கெஞ்சிக் கொண்டு இருந்தான் நர்மதாவிடம். விழிகளை மிரட்டுவதுபோல உருட்டி விழித்து ஆள் காட்டி விரலை உதட்டருகே வைத்துக் காட்டினாள் நர்மதா!

“”நேனு படத்துக்கு ராலேது.. நுவ்வு ராரா… சரசுக்கு ராரா” என்று இரு கைகளையும் நீட்டினாள் நர்மதா. நல்லவேளை லாட்ஜ் சுவரில் எந்தக் கடவுள் படமும் மாட்டப்பட்டிருக்கவில்லை. இந்தப் பெண் படிப்பில் மண்ணை வாரிக் கொட்டிவிட்டு இங்கு வந்து மெத்தையில் அமர்ந்து கொண்டு ஏன் இப்படி? என்று எந்தக் கடவுளாக இருந்தாலும் வருத்தப்பட்டிருக்கும்.

ரமேஷ் வேறுவழியில்லாமல் அவள் கரங்களுக்குள் சிறைப்பட்டான். அவனை வாரி இழுத்து தன் மீது போட்டுக் கொண்ட நர்மதா, “”நுவ்வு ஏமி பணி சேஸ்தாவு? நீ என்ன வேலை பண்றே?” என்றாள். மீண்டும் அதைக் கேட்கும் மனநிலையில் ரமேஷ் இல்லை.

சமயம் பார்த்து கதவு தடதடவென தட்டப்பட்டது. இருவரும் மிரண்டுபோய் விலகினார்கள். ரமேஷிற்கு உள்ளூர இரண்டு நாட்களாகவே பயம். இவள் குடும்பத்தார்கள் தேடி வந்து தன்னை மிதித்துவிட்டு, இவளைக் கூட்டிப் போய்விடுவார்களோ என்று. அப்படியாகத்தான் இருக்கும். ஆனால் நர்மதா முகத்தில் இவனைப் போன்ற பதட்டம் எதுவும் இருக்கவில்லை. எப்போதும் போலவே கலவரமின்றி இருந்தாள். கதவு மீண்டும் தடதடத்தது.

நர்மதா கட்டிலை விட்டிறங்கிச் சென்று தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறந்தாள். எதிரே காக்கி உடுப்புக்காரர், “”ஒத்தும்மா…” என்று குரல் கொடுத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தார். அறையை நோட்டம்போட்டுவிட்டு, “”நீதான் ரமேஷாடா?” என்றார், ஒதுங்கி நின்றிருந்த இவனிடம். “”ஆமாங்க சார்” என்று முனகினான்.

“”எப்படா இவளை கூட்டிட்டு ஓடி வந்தே? எங்க வச்சு இவளுக்குத் தாலி கட்டினே? காலைல இருந்து ஈரோட்டுல ஒரு லாட்ஜ் விடாம நானும் இன்ஸ்பெக்டர் ஐயாவும் தேடு தேடுன்னு தேடிட்டு வர்றோம்… சொல்றா?” என்று கேட்ட அவர் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“”ரெண்டு நாள் ஆச்சுங்க சார்… திண்டல் மலையில முருகன் முன்னால தாலி கட்டினார் சார்” என்று நர்மதாதான் பதில் கூறினாள்.

“”சரி நடங்க போலாம்” என்றார்.

“”எங்கே சார்?” என்றான் ரமேஷ்.

“”ஓ… சொன்னால் தான் கிளம்புவியா?” என்று ஓர் உறுமல் உறுமினார்.
ரமேஷ் லுங்கியை உறுவிவிட்டு பேண்ட்டை அணிந்து கொண்டான். நர்மதா அவன் லுங்கியை மடித்து தன் பேக்கில் போட்டுக் கொண்டு ஜிப்பை இழுத்துவிட்டு தோளில் போட்டுக் கொண்டு அறைக்கு வெளியே வந்தாள். ரமேஷ் வெளிவர, காக்கி உடுப்புக்காரர் வெளிவந்தார். “”கீழே ஐயா ஜீப்ல இருப்பார்… பார்த்ததும் ரெண்டு பேரும் ஒரு சலாம் வச்சுடுங்க” படிகளில் இறங்கியவரின் பின்னால் இருவரும் இறங்கினார்கள்.

நர்மதா தன் அப்பாதான் ஒருவேளை பெண்ணைக் காணோம். இந்த ரமேஷ் பயல் கடத்திட்டுப் போயிட்டான் என்று போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருப்பாரோ என்று நினைத்தாள். மேஜர் ஆகாத மைனர் பெண் என்று வேறு கொடுத்திருப்பாரோ என்ற யோசனையில் கீழே வர, லாட்ஜ் வாயிலில் நின்றிருந்த ஜீப் அவர்கள் இருவரையும் ஏற்றிக் கொண்டு விரைந்தது.

காவல் நிலையத்துக்குள் நுழைந்த ரமேஷ் தன் அம்மாவையும், அப்பாவையும் பார்த்து அதிர்ந்தான். இவர்கள் ஏன் இங்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள்? அவன் எதிர்பார்த்து வந்ததோ நர்மதாவின் அப்பா, அம்மாவை. அதேபோல்தான் நர்மதாவும் தந்தையை எதிர்நோக்கி வந்தவள், அவர் ஸ்டேசனில் இல்லாததைக் கண்டு நிம்மதியானாள்.

ரமேஷைப் பார்த்ததுமே அவன் அம்மா “ஓ’வென அழத் துவங்கினாள்.

“”அட பாடுவாசிகுக்கா… உனக்கு உடம்பு திமிரெடுத்துப் போச்சாடா… என்ன காரியமடா பண்ணி வச்சிருக்கே… இனிமே உங்கப்பன் வீதியிலே எப்படிடா நடப்பாரு?” என்று அழுகையினூடே அவள் ஒப்பாரி வைத்தாள்.

“”இந்தாம்மா… இதென்ன போலீஸ் ஸ்டேசனா? உங்க ஊடா? அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சா உன்னையும் தூக்கி உள்ளார போட்டுடுவாரு ஐயா” என்று காக்கி சட்டை ஒருவர் சப்தமிட, ரமேஷின் அம்மா ஒப்பாரியை நிறுத்தினாள். அவள் பார்வை நர்மதாவிடம் சென்றது. “காத்தடிச்சா காணாமப் போற ஈக்குமாத்து குச்சி கணக்கா இருந்துட்டு இந்தப் பிள்ளை எம்மவனைக் கூட்டிட்டுப் போயிடுச்சே. இந்த மடையன் இவகிட்ட என்னத்தக் கண்டுட்டான்?’ என்று யோசித்தாள்.

இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து தன் நாற்காலியில் அமர்ந்தார். ரமேஷின் அம்மாவும், அப்பாவும் எழுந்து சுவர் ஓரமாக நின்று கொண்டார்கள். இன்ஸ்பெக்டர் நர்மதாவைப் பார்த்தார்.

“”பையன் அப்பாவி… அவனை ஆசை வார்த்தை காட்டி நீதான் கூட்டிட்டுப் போயிட்டதா இந்தப் பையனோட அம்மா புகார் குடுத்திருக்குது உன் மேல. நீ என்ன சொல்றே?” என்றார் இன்ஸ்பெக்டர் நர்மதாவிடம்.

“”ரெண்டு பேருக்கும் பிடிச்சுப் போச்சுங்க சார்… கல்யாணம் பண்ணிக்க நினைச்சோம். ரெண்டு பேரும் விருப்பத்தோடதான் கட்டிக்கிட்டோம் சார்”

“”நீ என்ன படிச்சிருக்கே?”

“”காலேஜ் போயிட்டிருக்கேன் சார்… ஒருவாரம் லீவ் லெட்டர் குடுத்திருக்கேன். அடுத்த வாரம் போயிடுவேன் சார்… ”

“”உன் வீட்டுல சம்மதிச்சாங்களா?”

“”இல்ல சார்… என் வீட்டுக்காரர்தான் சார் என்னைப் படிக்கணும்னு சொல்றார். அவர் சொன்னதாலதான் ஒருவாரம் லீவு போட்டேன்”

“”ஏம்பா… உன் பேர் என்ன?… ம்… ரமேஷ்… இந்தப் பொண்ணு சொல்றது நிஜம்தானா?”

“”ஆமாங்க, சார்… நான்தான் பத்தாவது பெயில் ஆனதும் படிப்பை நிப்பாட்டிட்டு தறிக்குப் போயிட்டு இருக்கேன். என் சம்சாரமாவது நல்லா படிக்கட்டும் சார். எங்க வழுவுல பத்தாவது தாண்டுனவங்க ஒருத்தரும் இல்லிங்க”

“”எம் பையன் ஏமாந்த பையனுங்க சாமி. இவ அவனை முந்தானையில முடிஞ்சு வச்சுட்டா… அவன் கண்ணைப் பாருங்க சாமி நல்லா… இந்தப் புள்ளை ஏதோ மருந்து மாயம் பண்ணிட்டா என் பையனுக்கு… மந்திரிச்சு உட்டவனாட்டம் பேசுறான் பாருங்க… சாமி… இந்தப் பொண்ணோட அப்பன் டெய்லர் கடை வெச்சிருக்காப்லைங்க சாமி… ஊர் பெரிய மனுசங்க அத்தனை பேரும் நல்ல பழக்கம். நாளைக்கி எம் பையனை ஆள் வச்சு அடிச்சு என்ஹச் ரோட்டுல வீசிட்டா, பையனுக்கு நானெங்கீங்க சாமி போவேன்? நீங்களே நாயத்தைச் சொல்லுங்க. நடந்ததுக்குப் பின்னாடி வான்னா வருமா உசுரு?” ரமேஷின் அம்மா இடையில் பேசினாள்.

“”நீ சும்மா இரும்மா.. மருந்து வச்சா மாயம் பண்ணிட்டாள்னு பேசிட்டு…” என்று அதட்டியதும் அமைதியானாள் ரமேஷின் அம்மா.

“”பையனோட அப்பா என்ன ஊமையா? எதுவும் பேசாம வெறிச்சுப் பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? உனக்கு என்னய்யா பண்ணணும் நாங்க?” இன்ஸ்பெக்டர் கோபம் வந்ததுபோல் காட்டிக் கொண்டு சப்தமாய்க் கேட்டார்.

“”எங்க பையனைக் கூட்டிட்டு நாங்க போறோமுங்க சார்…”

“”இப்போ உன் மருமகளை தெருவுல உட்டுட்டு போறயா? அதுக்கு உன் பையன் ஒத்துக்கோணும்ல.. நீயே கேட்டுப் பாரு உன் பையன் கிட்ட”

“”சாதி வேற சாதிங்க அந்தப் புள்ளை… எங்க கூட எங்க வீட்டுல வந்து இருக்காதுங்க. எங்க சாதிப் புள்ளைய என் பையன் கட்டியிருந்தா ஒரு பிரச்னையும் இல்லீங்கோ… இப்படித்தான் இவனோட அண்ணன்காரன் ஒரு வருசத்துக்கும் மிந்தி வேற சாதிப் பிள்ளையோட ஓடிப் போயிட்டான் கோபிக்கு. ஒரே வாரத்துல தனியா ஊடு வந்தான். ஏன்டான்னு கேட்டதுக்கு அந்தப் பிள்ளை கறி திங்கக் கூடாதுங்குதுன்னு சொல்லுதாம். சோறு ஆக்கத் தெரியலையாம். தினமும் கடையில சாப்பாடு வாங்கிட்டு வரச் சொல்லுதுன்னு ஓடியே வந்துட்டான். அவனுக்குப் பொண்ணு குடுக்குறதுக்கு இப்ப யாரும் இல்ல. இவனுக்கும் நாளைக்கு அந்த கதிதானுங்கோ… ஓரு வாரமோ, ஒரு மாசமோ கழிச்சு இவன் வர்றதுக்கு இப்பவே கூட்டிட்டுப் போயிடுறேனுங்க”

“”என்னடா ரமேசு… உங்கப்பன் சரியாத்தான் சொல்றான். நீ என்ன சொல்றே?”
“”எங்கப்பன் சொல்லுதுன்னு நம்பி வந்த புள்ளைய நட்டாத்துல வுட்டுட்டு போவமாட்டனுங்க சார்”

“”உன் அண்ணன்தான் முடியாதுன்னு திரும்பி வந்துட்டானாமே”

“”ஒரு பொண்டாட்டி சொல்றான்னா கறி திங்காம இருக்க முடியாதுங்களா சார் அவனால? கறிக்காக வாழ்க்கையைப் பாதில உட்டுட்டு எவனாச்சும் வீடு வருவானுங்களா சார்? எங்க அப்பா, அம்மாவே வேற வேற ஜாதிங்க. அவுங்க ஒண்ணா வாழலையா?” ரமேஷ் கேட்டான்.

“”சரி உடு… ஏம்மா உங்கப்பா போன் நெம்பர் இருக்கா?” என்றார் நர்மதாவிடம்.

“”இருக்கு சார்” என்று நம்பர் சொன்னாள். இன்ஸ்பெக்டர் அவள் சொன்ன எண்களை தன் அலைபேசியில் பதிவு செய்து ரிங் விட்டார்.

“”உன் அப்பா பேர் என்னம்மா?” என்றார். சொன்னாள்.

“”ஏம்பா ராமமூர்த்தியா? நான் இன்ஸ்பெக்டர் பேசுறேன். உன் பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு புருசனோட ஸ்டேஷன் வந்திருக்குது. பத்து நிமிசத்துல ஸ்டேசனுக்கு வா” என்றார்.

“”பொண்ணு பேர் என்ன சொல்லுச்சுங்க சார்?”

“”நர்மதா”

“”அப்படி ஒரு பொண்ணே எனக்கு இல்ல சார்” போன் கட் ஆகியது.

“”என்னம்மா… உன் அப்பன் நர்மதான்னு ஒரு பொண்ணே எனக்கு இல்லைன்னுட்டு கட் பண்ணிட்டான்”

“”என் மேல கோபமா இருப்பாப்ல சார்… அதை நாங்க பின்னாடி சரி பண்ணிப்போம் சார்… ” என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தார் இன்ஸ்பெக்டர். தூசு போல ஒவ்வொரு பிரச்னையையும் பேசுகிறதே இந்தப் பெண்.

“”ஏம்பா உன் பையன் சொல்றது மாதிரி நீ வேற ஜாதி. உன் மனைவி வேற ஜாதியா? அப்பவோ காதல் கல்யாணம் பண்ணிட்ட நீ இப்ப ஏன் உன் பையனோட காதலை ஏத்துக்க மாட்டீங்றீயே?”

“”என்னோட ஜாதியிலோ… என் மனைவியோட ஜாதியிலோ இவன் கட்டியிருந்தா எனக்கும் ஒண்ணும் பிரச்னை இல்லீங்களே சார்… மூணாவது ஜாதியாப் போயிட்டாளே இந்தப் பொண்ணு. அந்தக் காலத்துல நான் கல்யாணம் பண்ணிட்ட பொறவு பட்ட கஷ்டமெல்லாம் நெஞ்சுல ஆணி அடிச்ச மாதிரி இறங்கிடுச்சுங்களே… இரண்டு சாதிக்காரங்க கூடவும் ஓர் ஒட்டும் உறவும் எங்களால வச்சுக்க முடியலையே… எத்தனை துன்பம்… எத்தனை வேதனை… இதெல்லாம் என்னோட பையனுக்கும் இனி சாவுற வரைக்கும் வரும்ங்கல்ல… ஒரு நல்லது கெட்டதுக்குப் போக முடியாம என்னங்க வாழ்க்கை வாழ்றது? இதெல்லாம் இவனுக்குத் தெரியுமுங்க… நான் சொல்லியா இனி தனியா தெரிஞ்சுக்கப் போறான்?”

“”ஏன்டா காதல் பண்ணி கல்யாணமும் பண்ணி ரெண்டு பிள்ளைகளையும் ஏன் பெத்தோம்னு இப்ப உட்கார்ந்து ரெண்டு பேரும் கவலைப்படறீங்களா? உங்க ரெண்டு பேர் சொந்தத்துலயும் உங்களுக்கு பொண்ணு கொடுக்க யாரும் வரவே போறதில்ல. பையன் தைரியமா அவனே அவனுக்குன்னு ஒரு பொண்ணைத் தேடிட்டான்னு சந்தோசப்படாம… பிரிச்சுக் கூட்டிட்டு போறதுல நிக்கறீங்க… அந்தப் பொண்ணோட அப்பன் என்னடான்னா அப்படி ஒரு பொண்ணே எனக்கு இல்லீங்கறான். நீயும் உன் பையனைக் கூட்டிட்டுப் போயிடு. அந்தப் பொண்ணு போய் கெணத்துலேயோ, குட்டையிலேயோ விழுந்து சாவட்டும். அதுக்குப் பிறகு உங்க மூணு பேரையும் தூக்கி வந்து ஜெயில்ல போடறேன்”

“”சாமி இப்படிச் சொல்றீங்களே”

“”பின்னே என்ன சொல்றது? காலைல இருந்து தேடி ஈரோட்டு வீதியில அலைஞ்சு இவங்களே உன் கண்ணு முன்னால உசுரோட கொண்டு வந்து காட்டியிருக்கிறோம். லாட்ஜில ரெண்டு நாள் குடும்பம் நடத்தியிருக்கான். என்ன அழிச்சான் புழிச்சான் விளையாட்டா படுதா உனக்கு! இதுக்கு வேற கேஸ் இருக்குது. அதை உன் பையன் பேர்ல போட்டு உள்ளார தூக்கிப் போட்டுடறேன்” இன்ஸ்பெக்டர் கோபமாய்ப் பேசினார்.

“”சார் இவரோட அப்பா அம்மா கூட அவங்க கூப்பிட்டாலும் போகலை சார்” என்றாள் நர்மதா.

“”அட என்னம்மா நீ… உனக்காகத்தான் பேசிட்டு இருக்கேன் நான்”

“”புரியுதுங்க சார்… கள்ளியம்புதூர்ல இவரோட நண்பர் தங்கி இருக்கிற ரூமை இவருக்காகத் தர்றேன்னு சொல்லிட்டாராம். எனக்கு இவர் இருக்கார். இவருக்கு நான் இருக்கேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கறோம் சார்… கூழோ கஞ்சியோ இவர் ஊத்துறதைக் குடிச்சுக்கறேன்னு வசனம் எல்லாம் பேசலை சார் நான். நாங்க நல்லா வாழ்வோம் சார்… இவங்க வாழ்க்கையோட போராடவே இல்லைங்க சார்… அதான் சோர்ந்து போய் பேசுறாங்க.. நாம நல்ல நிலையில் இருந்தால்தான் சார், நாலு பேர் நம்மைத் தேடி வருவாங்க. காதல்ல நாங்க ஜெயிச்சுட்டோம். வாழ்க்கையில இனி ஜெயிக்க போராடுவோம் சார்…” என்று நர்மதா கூறியபடியே ரமேஷின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

“”சந்தோஷமாப் போய் வாழ்க்கைல ஜெயிச்சுக் காட்டுங்க” என்றார் இன்ஸ்பெக்டர்.

- அக்டோபர் 2012

Post Comment

புதன், ஏப்ரல் 24, 2013

டெங்கு

Thanks to Nakeeran iniya uthayam
http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=16156http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=16156      ரு மாத காலமாகவே ஊருக்குள் எல்லாரும் பயந்தபடியேதான் இருந்தார்கள். பத்து கிலோமீட்டர் கிழக்கில் இருக்கும் சென்னிமலையில் இரண்டு பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் என்றும் பதினைந்தாயிரம் பக்கம் செலவு செய்து பிழைத்துக் கொண்டார்கள் என்றும் சேதிகள் ஊருக்குள் உலாவிக் கொண்டிருந்தன. டிவி செய்திகளில் நெல்லையில் நாற்பது பேருக்கும் மேலாக டெங்கு காய்ச்சலால் இறந்து போனதாக வந்த தகவல் எல்லாரையுமே பயமுறுத்திக் கொண்டேயிருந்தது. மூன்று வருடம் முன்பாக சிக்கன் குனியா என்று வந்தபோது சுள்ளிமேட்டூருக்குள் ஒரு ஆள் பாக்கியில்லாமல் துன்பப்பட்டார்கள். 

அதேபோல் தானோ என்று அவரவர் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளை கவிழ்த்துப் போட்டு பாசம் பிடித்ததை சுரண்டிச் சுத்தப்படுத்தி தண்ணீர் மாற்றி உபயோகித்தார்கள். கொசுக் கடித்தால் மஞ்சள் பொடியை தண்ணீரில் கலந்து குடித்து நாட்டு வைத்தியம் செய்து கொண்டார்கள். சந்தோஷமும் துக்கமும் சொல்லிக்கொண்டு தான் வருவதில்லையே!

""ஏண்டி ருக்குமணி... உன்னோட பையன் ஒருவாய் சாப்டுட்டு பள்ளிக்கூடம் போனானா? என்கிட்ட இருக்கிற பணத்தைக் குடுன்னு என் பையன் கேட்டான். எதுக்குடா? பள்ளிக்கூடத்திலதான் துணிமணியில இருந்து புத்தகம் நோட்டு வரைக்கும் அரசாங்கமே தருதேன்னேன். அவன் பிரண்டுக்கு காய்ச்சல் வந்துட்டுதாம். குடுன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்றான்'' என்று சிந்தாமணி பக்கத்து வீட்டு ருக்குமணியிடம் குரல் கொடுத்தது. 

""என்னோட பையனும் அப்பிடித்தான் பணம் கேட்டுட்டு சாப்பிடாம பையைத் தூக்கீட்டு போயிட்டான் அம்மிணி. காலனில நம்ம வேணி பிள்ளை சீதா அஞ்சாப்பு நம்ம பசங்களோட படிக்குதுல்ல அதும்கூட சாப்பிடாமத்தான் போயிடுச்சாம். காசு என்ன மரத்துலயா காய்க்குது? இதுகள் கேட்டதும் போய் ரெண்டு உலுக்கு உலுக்கி எடுத்துட்டு வந்து தர்றதுக்கு? அதான் பள்ளிக்கூடத்துல தினமும் கோழிமொட்டோட மத்தியானம் சோறு போடுவாங்களல்ல காத்தால ஒருவேளை சோறு திங்காட்டி என்ன உடு அம்மிணி'' என்று குரல் கொடுத்தாள் ருக்குமணி.

ராத்திரி நானும் எம்பட பையனும் அந்த அப்புக்குட்டியோட பையனை வீடு போய் பார்த்துட்டு தான வந்தோம். ஒடம்பெல்லாம் அந்த முருகேசனுக்கு பொரிப் பொரியா செவந்தாப்ல இருந்துச்சு. 

சின்னம்மை போட்டிருக்குதுன்னு தான எல்லாரும் சொன்னாங்க! தெய்வானை கூட அப்போத்தான் சின்னவெங்காயம், மஞ்சள், வேப்பங்கொழுந்து வச்சி அம்மியில அரைச்சுட்டு இருந்தாள். வேப்பந்தலை பொறிச்சுக் கொண்டாந்து வெறும் தரையில போட்டு பையனை அது மேல படுக்க வச்சிருந்தாள். அந்த அப்புக்குட்டி நான் வர்ற வரைக்கும் காணம். எங்க குடிச்சுப்போட்டு கெடக்கானோ! நாலு பேருக்கு கட்டிங் ஷேவிங் பண்டி காசு ஜோப்புல சேர்ந்தாப் போதும். நேரா குடிக்கப் போயிடறான். 

தெய்வானை கழுத்துல ஒரு பவுன் செயின் கெடந்துச்சு. அதையும் காணம் இப்ப. மஞ்சள் கயிறு ஒன்னுதான் கெடக்குது''

""ஊருக்குள் மாகாளியாத்தா கோவில் நோம்பி சாட்டி ரெண்டு வருசம் ஆச்சில்ல, அதான் முருகேசன் ஒடம்புல விளையாட வந்திருக்கா ஆத்தா!'' என்றாள் ருக்குமணி.

""அட ருக்குமணி உனக்கு விசயமே தெரியாதாட்ட இருக்குதே! நம்ம  நர்ஸம்மா காலையில அப்புக்குட்டி ஊட்டுக்குப் போயி பார்த்துட்டு சத்தம் போட்டுதாமா தெய்வானையையும் அப்புக்குட்டியையும்''

""அட, அந்த நர்ஸம்மா எதுக்கு ஆத்தா பார்த்த வீட்டுல போயி சத்தம் போட்டுச்சு? ஊருக்குள்ளயே இருந்தாலும் ஒரு தகவலும் தெரியலையே! ஊசி போடச் சொல்லுச்சா அது? ஊசி எல்லாம் போடக் கூடாது ஆத்தா பார்த்த பையனுக்கு! ஆத்தா முத்துகளை அள்ளி வீசி விளையாடற நேரத்துல ஊசி ஒடம்புல ஏறுச்சின்னா கோபமாயிடும். தெரியாதா அந்த தெய்வானைக்கி?''

""நீயும் நானும் சொல்லி என்ன பண்றது? முருகேசன் ஒடம்புல முழுசா பத்துப் போட்டிருந்தாள்ல தெய்வானை. பத்து காய்ஞ்சு விழுந்த இடத்துல எல்லாம் நல்லா பார்த்துட்டு, இப்படி முட்டாள் தனமா பத்துவயசுப் பையனை வீட்டுல படுக்கப் போட்டுட்டீங்களே... சீட்டு எழுதித்தர்றேன். உடனே சென்னிமலை அரசாங்க மருத்துவமனைக்கு கூட்டுட்டுப் போங்கன்னு சொல்லிடுச்சாம். தெய்வானை மாட்டேன்னுதான் சொன்னாளாம். அங்க போனாத்தான் ரத்த டெஸ்ட்டு எடுத்து டெங்கு காய்ச்சலான்னு பார்ப்பாங்க. பையன் உயிர் பிழைப்பான்னு அப்புக்குட்டிகிட்ட சொன்னதும் அப்புறம் தான் நம்ம செல்வன் ஆட்டோவைப் பிடிச்சுட்டு காத்தாலயே சென்னிமலை போயிட்டாங்க... தெரியாதா உனக்கு?'' என்றாள் சிந்தாமணி.

""எனக்குத் தெரியாது அம்மிணி முருகேசனுக்கு வந்த டெங்கோ, டொங்கோ இனி நம்ம பிள்ளைங்களுக்கும் வந்துட்டா காசுக்கு எங்க அம்மிணி போவுறது? நாமளே நூறு நாள் வேலைக்கு ரோட்டுல கல்லு பொறுக்கீட்டு இருக்கிறோம். அது ஒட்டுவாரொட்டி நோவோ என்னமோ!'' என்று பதைபதைப்பாய் பேசினாள் ருக்குமணி. 

""பையனை கையில ஏந்திட்டு ஆட்டோவுல அப்புக்குட்டி உட்கார்ந்தப்ப அந்த அழுவாச்சி அழுதானாமா! 

அத்தாச்சோட்டு ஆம்பிளை அழுது பார்த்ததே இல்லையக்கான்னு சரஸா சொல்றாள். சென்னிமலை ஒரு எட்டு போயி பார்த்துட்டு வரலாம்னா பயமா இருக்குது ருக்குமணி. ஆஸ்பத்திரி வாசல்படி மிதிச்சாலே எனக்கு காய்ச்சல் வந்த மாதிரி ஆயிடும்'' என்றாள்சிந்தாமணி. ஊருக்குள் எல்லாப் பெண்களுமே இதே பேச்சாய்த்தான் இருந்தார்கள்.

அது சரி சொல்லி வச்சது மாதிரி எல்லா பொடுசுகளும் சோறுசாப்பிடாம பள்ளிக்கூடம் போயிருக்குது

களே! பதினொரு மணியைப் போல கோவில் பூசாரி உள்ளூர் சின்னான்தான் அந்தத் தகவலை வந்து அவர்களுக்கு சொன்னான்.

""நம்ம ஊர் பிள்ளைங்க எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு மேற்கே இருக்கிற புங்கை மரத்தடியில் உட்கார்ந்திருக்குதுக! மாரியம்மன் கோயில்ல முருகேசன் காய்ச்சல் குணமாயிடனும்னு என்னைய தனியா பூஜை பண்ணச் சொல்லிச்சுக, நானும் பூஜை பண்ணி திருநீறு குடுத்தேன். பணம் கேட்டாங்களாமா உங்ககிட்ட? 

அதான் ஸ்கூலுக்கும் போகாம, சோறும் உங்காம மரத்தடியில உட்கார்ந்திருக்காங்க. என்னோட வயசுக்கு இப்பிடின்னு கேள்விப்பட்டதே இல்லை சாமிகளா! இந்தக் காலத்து பிள்ளைங்க நெனச்சா நெனச்சமானிக்கி எல்லாம் பண்ணுதுக! டீச்சரம்மா வந்து பிள்ளைங்களைக் கூப்பிட்டதுக்கு எங்கம்மா எல்லாரும் வரட்டும்னு உட்கார்ந்துடுச்சுக.'' என்று சொல்லிவிட்டு சின்னான் சென்றான்.

அப்புக்குட்டி பையன் முருகேசன் வறுமையில் வாடினாலும் நல்ல படிப்பாளி. கணக்குப் பாடமாக இருந்தாலும் சரி, ஆங்கிலப் பாடமாக இருந்தாலும் சரி, அது ஒன்னுமில்லை இப்படித்தான் என்ற புரியாத பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்பான். அவனிடம் இருக்கும் குட்டி சைக்கிளை வைத்துக் கொண்டு தன் ஊர் பிள்ளைகளுக்கு சைக்கிள் ஓட்டவும் கற்றுத் தந்திருந்தான். எல்லாருக்குமே அவனைப் பிடிக்கும். அதே போல் அவனுக்கும் எல்லாரையும் பிடிக்கும்.

""ஏண்டா துரையரசு... நேத்து முருகேசன் சொன்ன மாதிரி செத்துட்டான்னா நம்ம கூட சேர்ந்து படிக்க வரமாட்டான் தானடா? குழிக்குள்ள போட்டு மூடிடுவாங்க தான? எங்கம்மா உங்கம்மா எல்லாம் காசு எடுத்துட்டு இப்போ வருவாங்க பாரு... நாம முருகேசன்கிட்ட கொண்டுபோய் குடுக்கலாம். டாக்டர் ஊசி போட்டு முருகேசன காப்பாத்திருவாங்க ...பாவம்... அவன் பொழச்சு வந்துட்டா நல்லா இருக்குமல்ல'' என்ற மீனாட்சிக்கு நேற்று மாலையில் விளையாட முடியாமல் சோர்ந்து போய் வேப்பமரத்தடியில் முருகேசன் சுருண்டு படுத்துக் கொண்ட காட்சி கண்முன் வந்தது.  

""முருகேசா முருகேசா... ஏன்டா படுத்துட்டே? என்றாது உன் கை, கால்ல எல்லாம் சிவப்பு சிவப்பா பொரிப் பொரியா இருக்குது?''

""மீனாட்சி... என்னால எந்திரிக்கவே முடியாது. போல இருக்குது... டீக்கடையில முந்தா நேத்து முட்டாய் வாங்க போனப்ப கணேசண்ணன்தான் பேப்பர்ல போட்டு இருந்ததை படிச்சு மூர்த்தியண்ணன்கிட்ட சொல்லிட்டு இருந்துச்சு... இப்படி பொரிப்பொரியா வந்து காச்சல் அடிச்சா அது டெங்கு காச்சலாம் மீனாட்சி... எங்கப்பன் கிட்ட காசு இல்ல மீனாட்சி... நேத்து கூட எங்கம்மாட்ட குடிக்க காசு கேட்டுட்டு அடிச்சிட்டு இருந்துச்சு... நான் செத்துப் போயிட்டா... எல்லாரும் நல்லா படிச்சு வாத்தியார் வேலைக்கு போங்க... எங்க அம்மாவைப் பார்த்துக்குங்க. அதுக்கு என்ன விட்டா யாரும் இல்லை. நான் பெரிய ஆபிஸராகி கஞ்சி ஊத்துவேன்னு கனாகண்டிட்டு இருந்தது'' என்றவன் அதற்கும் மேல் ஏதும் பேசமுடியாமல் அழுது கொண்டே சுருண்டு கிடந்தான். மீனாட்சி ஓட்டமாய் ஓடி அவன் அம்மாவிடம் சொன்னான்.

""ஐயோ என் சாமி... இப்படி நாரா கிடக்குதே!'' அழுதபடி ஓடிவந்த தெய்வானை மகனைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு உள்ளூர் நர்ஸம்மாவிடம் ஓடினாள். விளையாட்டில் இருந்த பொடியன்களும் பின்னாலேயே ஓடினார்கள். நர்ஸம்மா வீடு பூட்டிக்கிடந்தது. நர்ஸம்மா காசி பாளையம் மருத்துவமனைக்குப் போய்வந்து கொண்டிருந்தது. குப்பாயாள்தான் பையனைப் பார்த்துவிட்டு, ""அம்மை போட்டிருக்குமாட்ட இருக்குதாயா... போய் வேப்பிலையும், மஞ்சளையும் அரைச்சு இவன் உடம்புல பூசி உடு... நர்ஸம்மா இனி ஒன்பது மணிக்கி மேலதான் வரும்...'' என்றதும் தெய்வானை மகனோடு வீடு சென்றாள். அடுத்த நாள்தான் பிள்ளைகள் அனைவரும் பேசி வைத்துக்கொண்டார்கள். அதன்படியே காலையில் பள்ளிக்கூடம் போகாமல், பட்டினியோடு மரத்தடியில் அமர்ந்து கொண்டார்கள். இப்போதுதான் இவர்கள் விசயம் ஊரெங்கிலும் பரவியது!

நம்பிக்கையும் கெஞ்சலும் கலந்த கண்களுடன் அப்புக்குட்டி மேலங்காட்டுப்பாளையம் ராமசாமியண்ணன் முன்பு நின்றிருந்தான். கிராமத்தில் கொஞ்சம் காசுக்காரர் ராமசாமியண்ணன். அவர் எப்படியும் உதவுவார் என்றுதான் ஆஸ்பத்திரியில் மகனின் பக்கத்தில் தெய்வானையை நிப்பாட்டி விட்டு பஸ் ஏறி வந்திருந்தான். நர்ஸம்மா சொன்னது மாதிரி 

அவனுக்கு டெங்குதான். தவிர இவனைப் போல நான்கு பேர் டெங்கு காய்ச்சலில் அங்கு படுத்திருந்தார்கள். டாக்டரும் இவனிடம், ""பயப்படாதப்பா... உன் பையனுக்கு ஒன்னும் ஆகாது...'' என்று அழும் இவன் தோளில் கை வைத்துச் சொன்னார். தெய்வானையின் கையில் இருந்த ஆயிரம் அவசரத் தேவைக்கென்று அவள் எப்போதும் பாதுகாத்து வைத்திருத்தது, ஆட்டோ வாடகை, ஆஸ்பத்திரியில் படுக்கை என்று காணாமல் போயிருந்தது!

""வாடா அப்புக்குட்டி... காத்தால நேரத்துல வர்றவன் பன்னண்டு மணிக்காட்ட வந்திருக்கே? பேரன் பள்ளிக்கூடம் போயிட்டான்... அவனுக்குத்தான் பொடணியில முடி வெட்டனும். நான் காத்தால கண்ணாடியைப் பார்த்துட்டே தாடியை இழுத்துட்டேன். இந்த மீசையை துளி கத்திரி போட்டு உடு...''

""சாமி நான் அடப்பப் பையை எடுத்துட்டு வரலீங்க... உங்களைப் பார்த்துட்டு போலாம்னு சென்னிமலை ஆஸ்பத்திரியில இருந்து ஓடிவாறனுங்க''. 

""என்னடா சொல்றே?''

""பையனுக்கு ஒடம்புக்கு சுகமில்லீங்க சாமி'' என்றவன் உதடு பிதுங்கி அழவும் விசயத்தை யூகித்துக் கொண்டார் ராமசாமியண்ணன்.

""அதுக்கு என்கிட்ட காசு கேட்க வந்தியா? ஓட்டமே ஒன்னும் இல்லியேடா! திருப்பூர்ல சாயப்பட்டறை எல்லாத்தையும் சாத்திட்டாங்க... எம்பட பெரிய பையன் அதுதான போட்டிருந்தான்... இப்ப பேருக்கு சும்மா பெட்ரோலுக்கும் கேடா போயிட்டு வந்துட்டு இருக்கான்... மழை இல்லாம காடெல்லாம் சும்மா கெடக்குது. 

வேணும்னா பத்து நூறு தர்றேன் வாங்கிட்டுப் போ''

""சாமி கொஞ்சம் சேத்திக் குடுத்தீங்கன்னா ஆவுமுங்ளே... எப்பிடியும் நாலு நாளைக்கி ஆஸ்பத்திரியில தான் நாங்க ரெண்டு பேரும் பையன் பக்கத்துலயே இருக்கணும்ங்ளே! ஒரு நாலாயிரமாச்சிம் குடுங்க சாமி...''

""மடியில நோட்டு இருந்தா உன்னை டாஸ்மாக் கடையில எல்லக்காட்டுல தான் வந்து புடிக்க முடியும்... இப்பத் தெரியுதா? ஒரு அத்து அவசரம்னா கையில காசு இருக்கணும்னு... கண்ணு போன பிறகுதான் சூரியனைக் கும்பிடோணும்னு நினைப்பீங்கடா... சரி சரி இந்த வருசம் கூலிப்பணம் இன்னும் நான் உனக்கு தரலீல்ல... அந்த ஐநூறோட... என் பையன் வந்தா வாங்கி ஆயிரமாத் தர்றேன்... நாளை  மறுநாள் வாடா'' என்றவர் தன் வீட்டினுள் செல்லவும் அப்புக்குட்டி தன் சைக்கிளை நோக்கி தள்ளாட்டமாய் நடந்தான். அவனும் தெய்வானையும் ஒரு வாய் கஞ்சி குடித்தே இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருந்தன. 

இனி யாரிடம் போய் பணம் கேட்பது? என்றே புரியாமல் அப்புக்குட்டி சைக்கிளில் பள்ளிக்கூடம் அருகே வருகையில் கூட்டமாய் மரத்தடியில் உள்ளுர் பெண்கள் நிற்பது கண்டு சைக்கிளை நிறுத்தினான்.

""இதென்ன அப்புக்குட்டி இங்க சைக்கிள்ல சுத்தீட்டு இருக்கறானே... ஏண்டா பையனை ஆஸ்பத்திரியில விட்டுட்டு இங்க என்னடா வேலை?'' சரஸக்காதான் அவனிடம் கேட்டது! ""அதான பாருங்கக்கா'' என்று பெண்கள் ஒருமித்த குரலில் கேட்டார்கள்.

""உன்னோட முருகேசன் உசுரு பிழைக்கோணும்னு எங்க பசங்க பிள்ளைங்க எல்லாரும் சோறு திங்காம எங்க கிட்ட காசு கேட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்காங்கடா... ஞாயித்துக்கெழமை சீட்டுக்குன்னு ஐநூறு ரூபாய் வச்சிருந்தேன். அதை இப்பத்தான் எம்பட பையன் ராசுக்குட்டி கையில குடுத்தேன் என்றது பொன்னமக்கா. அப்புக்குட்டி கூட்டத்தில் நுழைந்து எட்டிப் பார்த்தான். உள்ளுர் பிள்ளைகள் எல்லாம் தலைமை ஆசிரியரை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்கள். தலைமை ஆசிரியர் சண்முகம் கையில் இருந்த பணத்தாள்களை எண்ணி மூவாயிரத்தி முன்னூற்றி ஐம்பது ரூபாய் இருக்குது என்றார்.

""இத்தனை பணம் அரசாங்க ஆஸ்பத்திரியில வேண்டியதே இல்லீங்கம்மா... தனியார் ஆஸ்பத்திரியில முருகேசனை சேர்த்தி இருந்தா இந்தப் பணம் கூட பத்தாது. டெங்கு காய்ச்சலுக்கு அரசாங்க மருத்துவமனையில மருந்துகள் ரெடியா இருக்குது. காய்ச்சல் பரவாம இருக்கத்தான் அரசாங்கம் இப்ப தீவிரமா நடவடிக்கை எடுத்துட்டு இருக்குது. அங்க இவ்வளவு செலவாச்சு, இங்க இவ்வளவு செலவாச்சுன்னு பேசுறதை காதுல கேட்டுட்டு பிள்ளைங்க முருகேசனை உசுரோட பார்க்க முடியாதோன்னு பயந்துட்டு உட்கார்ந்துட்டாங்க... இருந்தாலும் இதும் நல்ல விசயம் தான்... இவுரு தான அப்புக்குட்டி?'' என்று தலைமை ஆசிரியர் சண்முகம் அப்புக்குட்டியைப் பார்த்துக் கேட்கவும், ""சாமி நான் தானுங்க'' என்று அவர் காலில் விழுந்தான்.

""இதென்ன பழக்கம்?'' மிரண்டு போய் பின்வாங்கினார் சண்முகம். பெண்கள் "கொல்'லென்று சிரித்தார்கள். ""எப்பவுமே அப்படித்தான் பண்ணுவானுங்க சார்'' என்றார்கள்.

""எந்திரிப்பா மொதல்ல நீ... இந்தா இந்தப் பணத்தைப் பிடி... எப்படியும் நாலு அஞ்சு நாளைக்கு முருகேசன் ஆஸ்பத்திரிலதான் இருக்கணும். கம்பௌண்டர், நர்ஸ்களை அடிக்கடி கவனிச்சுட்டீன்னா உன் பையனை நல்ல விதமா பார்த்துப்பாங்க... உன் ஊர் பிள்ளைங்கதான் உன் முருகேசனுக்கா பட்டினி இருந்து அவங்க அம்மாக்கள் கிட்ட பணம் வாங்கி குடுத்திருக்காங்க''...

""சாமி, என் பையன் பிழைச்சா போதும் சாமி எனக்கு! 

இந்தப் பணத்தை என் தலையை அடமானம் வச்சாவது பொறவு திருப்பிக் குடுத்துடறணுங்க சாமி''.

""உன் தலையை எவன் அடமானம் வாங்குவான்? பேச்சைப்பாரு... நீ நிறைய குடிப்பியாமா? சொன்னாங்க இவங்க?'' என்றார் சண்முகம்.

""இந்த குத்தமறியாத பிஞ்சுக சாட்சியா சொல்றனுங்க சாமி... சத்தியமா இனி தொடமாட்டனுங்க!'' என்று ஊர்ப் பிள்ளைகளைப் பார்த்து அழுதான் அப்புக்குட்டி.

ஒரு மணி சென்னிமலை பேருந்தில் ஏறி தலைமை ஆசிரியர் சண்முகமும், உள்ளுர் பிள்ளைகளும் சென்னிமலை மருத்துவமனை வந்திருந்தார்கள் முருகேசன் கொசுவலைக்குள் படுத்திருந்தான். நண்பர்களைப் பார்த்ததும் களைப்பாய் புன்னகைத்தான். சின்னான் மாரியம்மன் கோவில் விபூதியை முருகேசன் நெற்றியில் பூசிவிட்டான்.

""உனக்கு காய்ச்சல் சரியாகி வர்றதுக்கு ஒரு வாரமாயிடும்னு சார் சொன்னாருடா... நீ வந்ததும் ஒரு வாரம் என்ன என்ன பாடம் நடத்துனாங்கன்னு நான் உனக்கு சொல்லித் தர்றேன். சரியா?'' என்றாள் சீதா அவனிடம். முருகேசன் பலவீனமாக தலையசைத்தான்.

டாக்டர் உள்ளே வரவும் மாணவர்கள் மௌனமாக வெளியே வந்தனர். ஜன்னல் வழியாக அவர் முகத்தை பார்த்தனர். "எப்படியாவது எங்க நண்பனை காப்பாத்திருங்க டாக்டர்' என்ற இறைஞ்சுதல் எல்லார் கண்களிலும் தெரிந்தது.

Post Comment

வெள்ளி, ஏப்ரல் 19, 2013

சொல்வதெல்லாம் மடமை 4


ொல்வதெல்லாம் மடமை 4
முருகேசன் நீங்க எப்பயும் வீட்டு வெளித்திண்ணையில படுத்துக்குவீங்ளா? அது தப்புத்தானே.. கணவன் ஆண்மகனா இருந்தாதானே பொண்டாட்டிக்கி பிடிக்கும்
கொறட்டை போடுவாளுங்க அவள். ஒரு மனுசன் நிம்மதியா அவ பக்கத்துல படுத்து தூங்க முடியாது வாரத்துல ஒரு நாள்தான் குளிப்பா..பாயை ஈரம் பண்ணிடுவாசார் அவொ
உங்களுக்கு ஒரே மனைவியா முருகேசன்?”
இவுளுக்கும் முன்ன வசந்திங்ற பெண்ணை பெருந்துறைல கண்ணாலம் பண்ணிருந்தேன்
ஏன் அப்புறம் கமலாவை கட்டிட்டீங்க..அதுதப்புதான. முதல்மனைவியை கொன்னு போட்டு இவளை கட்டிக்கிட்டீங்ளா?”
திருவாத்தானாய்யா நீயி..முதல் மனைவி அவ பிருசனோட பெருந்துறைல இருக்கா..சாரே இவ தண்ணிவாக்க மாட்டா..மேட்டருக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லம்பா..அதனால இவ அக்கா தேங்காதுருவியை கட்டிக்கிட்டேன்.அவவாழாவெட்டியா வீட்டுல இருந்தாளுங்க..நான் எப்ப போயிநின்னாலும் பிலுக்கறதே இல்ல
ஒகே,முருகேசன்..நேயர்களே தான் செய்ததை தவறே இல்லைங்றார் இவர்.சிறுஇடைவேளைக்குப் பிறகு அக்கா ஈசுவரியிடம் பேசுவோம்.”
வாங்க அம்மிணி..உட்காரு..அட சிரிப்பென்ன உக்காரத்தான சொன்னேன், அட பல்லு சுளுக்கிக்கப் போவுது.”
எம்பேரு ஈசுவரிங்க..தேங்காதுருவீன்னு அவுரு கூப்புடுவாருங்க.நீங்க எங்கூரு பெரிய கவுண்டராட்ட இருக்கீங்க
உன் தங்கச்சி வாழ்க்கையில பங்கு போட்டுட்டியேம்மா, எந்தூரு நாயம் இது
ஈங்கூரு நாயமுங்க..ஊட்டுக்காரன் ஏமாத்திட்டு போனதால இவுரு வாழ்க்கை குடுத்தாருங்க
அப்ப முருகேசனை கமலாவோட வாழ உடமாட்ட நீ
இழுத்து புடிச்சுட்டா இருக்கேன்..வருவாப்ல, போவாப்ல பணம் குடுப்பாப்ல புருசனை சந்தோசப் படுத்த தெரியாம டிவி பொட்டில நாயம் கேக்க ொல்வதெல்லாம் மடமை 5
நேயர்களே! இவர்களின் ஒவ்வொருவர் பேச்சும் மிகத்தெளிவாகவே இருக்கின்றன.கொங்கு மண்ணின் மகிமையை இவர்கள் வாயிலாக உணருகிறோம். சொல்லுங்க முருகேசன் நீங்க 2 பேர்த்துல யார்கூட இருக்க விரும்பறீங்க?
எனக்கு தேங்காதுருவியோட வாழ விருப்பமுங்க. இவ்ளோதூரம் இந்த சின்ன விசயத்துக்கு இழுத்தடிச்சு என் மானத்தை கப்பலேத்தி உட்டுட்டாளுங்க..இனி ஊர்ல எப்புடிங்க முழிக்கறது
கமலா கண்ணு, நீ என்னம்மா சொல்றே?”
அவுரு எம்பக்கத்துல கூட வந்து நிக்கலை பாருங்க, எம்புள்ளை அவிங்க கூடவே இருக்கட்டும், நான் உங்ககூட வந்துடறேன்
எனக்கு இந்த நிகழ்ச்சி நடத்தி ஏற்கனவே ரெண்டுபேரு இருக்காங்க கண்ணு
மூனாவதா நானும் இருக்கேனுங்க, முருகேசனை பாக்கப்பாக்க கோவங்கோவமா வருது, போவச் சொல்லுங்க ஊருக்கு
நேயர்களே, இப்படியான வழக்கை இதுவரை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள். ஒருவரை ஒருவர் புரிந்து விடுக்கொடுத்து வாழும் பண்பு எந்தப் பிரச்சனைகளுக்கும் வாய்ப்பு தராது. கமலா மாதிரி புதுமைப்பெண்ணுடன் வாழ்வைத் துவங்குவது இனிதான ஒன்று என்று கூறி விடைபெறுகிறேன்.
(ஆகஸ்ட் ஈரோடு புத்தக்காட்சியில் எதிர் வெளியீடாகசொல்வதெல்லாம் மடமைஎன்ற என் நினைவோடை குறிப்பு புத்தகம் வெளிவருகிறது)

Post Comment

வியாழன், ஏப்ரல் 18, 2013

நினைவோடை குறிப்புகள் ; ஒன்று


மழைத்தூறல் இல்லா பின்மாலை நேரம்
            வா.மு.கோமு.
    இன்று வாய்ப்பாடி சந்தை என்றால் அது ஆட்டுசந்தை தான்.வெரும் ஆட்டு வியாபாரம் மட்டுமே நடக்கும் சந்தை இது ஒன்றாகத்தான் இருக்கும்.அதுகூடப் பகலில் அல்ல. இரவு இரண்டு மணிக்கு துவங்கி பச்சென சந்தை நடந்ததற்கான அறிகுறியே இல்லாமல் போய்விடும். அன்றைய நாளில் டீ வியாபாரம் மட்டுமே செய்துவந்த அண்ணன் ஒருவரும் ஒருவருடம் முன்பாக, இந்த தேர்தலில் இரட்டை இலைக்கு ஓட்டைப் போட்டு அம்மா பதவியில் அமர்ந்த பிறகு காலமாகி விட்டார். இப்போது ஆட்டு வியாபாரிகள் விடிகாலை நேரத்தில் டீ இல்லாமலேயே ஆட்டோ, வேனில் வியாபாரம் முடித்துப் போய் விடுகிறார்கள்.சந்தை இல்லாத காரணத்தால் உள்ளூர்ப்பெண்கள் பேருந்து ஏறி செவ்வாய் விசயமங்கலம் சந்தையில் காய்கறிகள் வாங்கி பையை நிரப்பிக் கொண்டு பேருந்தில் வந்து இறங்குகிறார்கள்.
      நான் வாய்ப்பாடி பள்ளியில் 79ல் நான்காம் வகுப்பு படித்தகாலத்தில் வியாழன் அன்று சந்தை காலையிலேயே கூடிவிடும். அன்று தான் அம்மா எனக்கு 10 பைசா தருவார். அது கட்டல் கடைக்காரரிடம் கம்மர்கட்டு, தேன் மிட்டாய் என்று போய்விடும். காலையில் கூடிய சந்தை மாலை இருட்டு விழும் நேரம்வரை இருக்கும். அப்போது ஆட்டு வியாபாரத்திற்கு இப்போது மாதிரி நேரம் ஒதுக்கவில்லை யாரும். முழுநாளும் ஆட்டு வியாபாரம் நடக்கும். இன்று என் மகன் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு செல்கிறான்.நாங்கள் நடந்துசென்று படித்த ஒன்னரை கிலோ மீட்டர் தூரத்திலான பள்ளிக்கு பேருந்தில் பஸ் பாஸ்வைத்து தினமும் 2 ரூபாயோடு பயணிக்கிறான். பாசம் மிகுதி ஆகி விட்டால் அந்தத் தொகையும் அதிகமாகி விடும்.
     என்னுடைய காலத்தில் சந்தைக்கடை பள்ளிக்கூடம் என்று அழைக்கப்பட்ட நடுநிலைப்பள்ளி சந்தைக்கடை 20 வருடங்களுக்கு மேலாக இல்லாததால் வாய்ப்பாடி பள்ளிக்கூடமாக மாறி விட்டது. அன்று நான்கு ஆசிரியர்களை பெற்றிருந்த பள்ளியில் இன்று ஆசிரியர்கள்நிறையப்பேர் வருகை புரிகின்றனர்.
     அன்று கந்தன் பண்டாரமும் அவன் மனைவியும் டீக்கடை வைத்து முறுக்கு,பன் என்று விற்று வந்தார்கள்.வியாழன் அன்று இட்லியும், கறி சாம்பாரும் கிடைக்கும்.கந்த பண்டாரம் கடை இட்லியும்,சாம்பாரும் சுவையோசுவை என்று இன்றும் சொல்வார்கள் அன்று சாப்பிட்டவர்கள். ஒருநாள் கூடாங்கு இட்லி சாப்பிடும் பாக்கியம் கிடைக்கவில்லை. வாரத்தில் ஒருநாள் கிடைக்கும் 10 பைசாவால் அது சாத்தியப்படவில்லை. இன்றோ 10 பைசா செல்லாது.
     கந்தபண்டாரம் ஞாயிற்றுக்கிழமை கசாப்பு போடுவான். உள்ளூர் சனம் பையைத்தூக்கிக் கொண்டு போய் அரைக்கிலோ, ஒருகிலோ என்று வாங்கி  வருவார்கள். அன்று கந்தபண்டாரம் போட்ட ஆடு பெரிய ஆடு. உள்ளூரில் வழக்கமாய் போய் கறி வெட்டி வருபவர்கள் போய்வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டாகிவிட்டது. மதியம் 2 மணியைப் போல மசைபிடித்த நாய் ஒன்றை சந்தைக்கடை பக்கமிருந்து சிலர் துரத்திக் கொண்டு ஓடிவந்தார்கள்.அது அத்தனை பேருக்கும் டிமிக்கி கொடுத்து ஓடி வந்து கொண்டிருந்தது தலையை தொங்கவைத்தபடி ஜலநீர் ஒழுக்கியபடி!  “இத்தாப்பெரிய கல்லுல அதுமோட முதுவுல போட்டனப்பா..ஆனா அதுக்கு சோதிக்கவே இல்ல”. உள்ளூர் ஆட்களும் எங்கே?எங்கே? என்று குண்டாந்தடிகளை தூக்கிக் கொண்டு நாய் போன திசை தெரியாமல் ஓடினார்கள்.சிறுவார்களை வீட்டினுள் தள்ளி வெளியே நாதாங்கி போட்டுவிட்டார்கள். நானும் அப்படி அகப்பட்டுப் போனேன்.
    காடுகரைகளில் சங்காமல் ஓடிய அந்த மசை பிடித்த நாய் திரும்பி எதிர்ப்புறம் ஓடிவருகையில் தலைதெறிக்க அடிக்க ஓடியவர்கள் திரும்பி ஓடி வந்தனர். எல்லோரும் ஓடுகிறார்களே என்று உள்ளூர் நாய்களும் சிலதுகள் புதிதாக ஊருக்குள் நுழைந்த நாயை மிரட்டியோ, கடித்தோ அனுப்பிவிட துரத்தி ஓடின.ஆனால் அவைகளும் ஏனோ இவர்களைப் போன்றே கடிபடாமல் தப்பிக்க திரும்பி ஓடி வந்தன. உள்ளூர் வன்னான் தன் பொம்மி நாய் மசைநாயிடம் கடிபடுவதை பார்த்து விட்டான்.ஓடி வந்தவர்களில் இருவர் வேப்பை மரத்தில் ஏறிக்கொண்டனர். ஊரே நாய்களின் சப்தத்தில் சளை ஓடியது.
    மசை நாய் ரயில்வே கோட்டர்சை தாண்டி ஸ்டேசனுக்குள் ஓடியது. மேற்கே எல்லை மேட்டிலிருந்து எக்ஸ்பிரஸ் ஒன்று ஒலிப்பானை ஒலித்தபடி தடதடத்து வந்தது.மசைநாய் கிழக்கே ரயில்வே ட்ராக்கிலேயே ஓடியது. அப்புறம் என்ன? எக்ஸ்பிரஸில் அடிபட்டு அந்த நாய் இறந்து விட்டது.எல்லோரும் ஓடிப் போய்ப்பார்த்தார்கள்.ஊர் வன்னான் தன் நாயை நைசாக கூட்டிப் போய் சங்கிலியில் பிணைத்து தலையில் கட்டையால் அடித்து கொன்று விட்டான்.
     அப்போதுதான் அந்தத் தகவலை சந்தைக்கடையிலிருந்து நாயை துரத்தி வந்தவர்களில் ஒருவர் சொன்னார். “கந்தபண்டாரம் காலையில் அறுக்க கட்டி வச்சிருந்த ஆட்டை இந்த மசைநாய் கடித்து கொன்று விட்டது. செத்த ஆட்டைத்தான் அஏஉத்து கூறு போட்டு குடுத்திருக்கான்என்று. விசயம் ஊர் முழுவதும் நொடியில் பரவி விட்டது. கறி எடுத்தவர்கள் எல்லோரும் கந்த பண்டாரம் கடைக்குச் சென்று உண்மௌ என்ன? என்று கொதித்துப்போய்க் கேட்டார்கள்.அவனோ சாதாரணமாக சொன்னான். “ஆமா..நானும் பொண்டாட்டியும் கூட அதே கறியத்தான் தின்னோம். கறி வெந்து போயிட்டா ஒன்னும் இல்ல தெரியுமா ?’
    ஊர்க்காரர்கள் 10 பேர் அடுத்த நாள் குன்னூர் போகத்திட்டம் போட்டார்கள். மசை பிடித்து விடுமோ என்றபயத்தில் குன்னூர் செல்பவர்களிடம் பணம் கொடுத்து மருந்து வாங்கி வரச்சொன்னார்கள் சிலர். அப்படித்தான் அவர்கள் குன்னூர் சென்று வயிற்றில் ஊசி போட்டுக் கொண்டு மருந்துப் புட்டிகளுடன் வந்தார்கள்.பெருந்துறை, குன்னத்தூர் என்று சொந்தபந்தங்கள் உள்ள ஊருக்குச் சென்று ஒரு வாரம் தங்கி வயிற்றில் தொப்புளைச் சுற்றிலும் ஏழு ஊசி போட்டுக்கொண்டார்கள்.அந்த மருந்து ப்ரிட்ஜில் தான் இருக்க வேண்டும். நெய் மாதிரி வெள்ளையாக இருந்தது அது. அந்த சமயத்தில் நகர்புறங்களில் ஒன்றிரண்டு மருத்துவர்களிடம் தான் பிரிட்ஜ் இருந்தது. ஆகவே தான் சனம் அங்கு ஓடிப்போய் போட்டுக்கொண்டு கிழவர்கள் போல குனிந்த வாக்கில் ஐயோ! என்ற் வந்து சேர்ந்தார்கள்.வயிற்றை வேறு தூக்கிக் காட்டினார்கள். அது இட்லி மாதிரி புடைத்திருந்தது. இதில் நான்கு இல்லாதப் பட்டவர்கள், “அப்புடி உசுரு போனா போயிச்சாட்டாதுந்ன்று ஊசி போடமலேயே விட்டு விட்டார்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் இன்று வரை மசை பிடிக்கவே இல்லை. அன்று கந்த பண்டாரம் சொன்னது சரிதான். கறி வெந்து விட்டால் ஒன்றுமில்லை. அவனும் அவன் மனைவியும் ஊசி போட்டுக்கொள்ளவில்லை.மேலும் 15 வருடங்கள் உயி வாழ்ந்தார்கள்.
    படிப்புக்காக ஐந்தாவது சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் துவக்கப் பள்ளியில் சேர்ந்தேன். பள்ளி நேரத்திற்கு சரியாக கோபியிலிருந்து விசயமங்கலம், வாய்ப்பாடி, சென்னிமலை, ஈரோடு வரை செல்லும் ஏரீஸ் பஸ் இருந்தது. அரையாண்டுத்தேர்வு நெருங்கும் சமயம் அது நடந்தது.அன்று வெள்ளிக்கிழமை. அது சென்னிமலையில் சந்தை நாள்.பேருந்து கூட்டமாய் இருக்கும்.பேருந்து ஏறுகையில் என் வலது காலை யாரோ கவ்வுவது போல இருந்தது. சொய்க் என்று வலியாய் இருக்கவே காலை உதறினேன். பேருந்தி ஏறியாகி விட்டது...காலில் ரத்தம்.
    இதை எழுதும் போது தான் நினைக்கிறேன்..செருப்பு என்றஒன்றை நான் வாங்கித் தொட்டதே பத்தாவது படிக்கையில் தான்.அதுவும் குதிகாலில் ஆணி விழுந்து விட்டதால் அந்த ஆணியைப் பிடுங்க கரும்புச் சக்கரை வைத்துதீக்கொள்ளியைஅதன் மீது வைப்பது. இரண்டு நாட்கள் அப்படிச் செய்தால் வெள்ளை நிறத்தில் காலாணி வெளிவந்து விடும். இந்த ஆணி காலில் எப்படி விழுகிறது என்றால் காலில் முள்ளை ஏற்றிக்கொண்டு பிடுங்காமல் விடுவதால் காலப்போக்கில் ஆணியாகி விடும்.நடந்து செல்கையில் குந்திக் குந்தி செல்ல வேண்டும். நன்றாக ஊன்றி நடந்தால் வலிக்கும். இப்போது பிள்ளைகள் எல்.கே.ஜி செல்கையிலேயே பூட்ஸ் மாட்டிக்கொண்டு பள்ளி வேனில் பத்திரமாய் சென்று ஓட்டையில் விழுந்து இறந்து விடுகிறார்கள்.நான் பூட்ஸ் அணிந்திருந்தால் அன்று நாய்க்கடிக்கு தப்பி இருப்பேன்.என் தந்தையார் மாபெரும் கஞ்சப்பிசினாரி என்று இப்போது தான் தெரிகிறது. அந்த மனிதர் குடிப்பதற்கும், இலக்கிய சஞ்சிகைகளுக்கு சந்தா கட்டவும், புத்தகங்கள் வாங்கிக் குவிக்கவும் எங்களுக்கு சோறு போடவும் மட்டுமே உழைத்தார். என் அம்மா கையில் அவர் இறக்கும் காலம் வரை ஒரு 100 ரூபாய் தாளை தந்ததில்லை.எனக்குத் தெரிந்து ஒரு முழம் பூ அவர் தன் மனைவிக்கு வாங்கித்தந்ததில்லை.
     நாய்க்கடி வாங்கி வீடு வந்த நான் மெதுவாக அம்மாவிடம் ரத்தம் காய்ந்த காலைக் காட்டி கடி வாங்கிய விசயத்தை சொல்லி விட்டேன்.அன்று இரவு 9 மணி போல சுள்ளிமேட்டில் இருந்து சைக்கிளில் ஒருவர் வந்து, அது மசை நாய் என்றும், எதிரே ஓட்டல் கடைக்காரருடையது..அவரே சொல்லி விட்டார் என்றும் கூறினார்.அடுத்த நாள் கால் வீங்கி விட்டது. ஒரு எட்டு எடுத்து வைக்கவே சிரமம் ஆகிவிட்டது.தந்தையார் காலையில் நேரமே சைக்கிளில் சென்னிமலை சென்று தீர விசாரித்துவிட்டு வந்து விட்டார்.தந்தையார் என்னை பேருந்து ஏற்றி குன்னூர் கூட்டிப் போனார். நாங்கள் சென்ற நேரம் மாலை5 மணிக்கும் மேலிருக்கும். காலில் வலி கொஞ்சம் நஞ்சமல்ல. அத்தாப் பெரிய கட்டிடத்தில் இருவர் மட்டுமே இருந்தார்கள்.
    அவர்கள் இருவருமே சொன்ன வார்த்தை, “டாக்டர் இப்பத்தான் வீடு போயிட்டார்.” வீடு போன டாக்டரை போன் போட்டு ஈரோட்டுலைருந்து வந்திருக்காங்க சார் , என்று சொல்லி வரவழைத்தார். கடிபட்ட இடத்தில் மஞ்சள் வர்ண கிரீம் தடவினார் டாக்டர். ஊசியில் அவர் மருந்தை ஏற்றிக் கொண்டதுமே எனக்கு உதறல் எடுத்து விட்டது.நாற்காலியில் அமர்ந்திருந்தவர் முன் மேல் சட்டையை கழற்றிக் கொண்டு போய் நின்றேன்.வேறு வழியும் இல்லை எனக்கு. குன்னூரில் எந்தச் சந்தில் புண்ணுக்காலை வைத்துக் கொண்டு ஓடுவது?தொப்புள் ஓரத்தில் குத்தினார் டாக்டர்.குனிந்த வாக்கில் பார்த்தேன். ஊசி முழுதாகவே உள்ளே போய்விட்டது போலத்தான் இருந்தது.ஊசியை உருவிக் கொண்டவர் பஞ்சை வைத்து தேய்த்தார். குய்யோ முய்யோ என்று ஆரம்பித்து விட்டேன்.
     டாக்டரிடம் 6 நாட்கள் போடுவதற்கான மருந்துப் புட்டிகளை வாங்கிக் கொண்டு விடைபெற்றுக் கிளம்பினோம்.பேருந்தில் பின் இருக்கையில் தான் இடம் கிடைத்தது.கோத்தகிரி வழியாக இறங்கிய பேருந்து மோசமான பாதையால் டமீர் டமீர் என்று குதித்தது.ஒவ்வொரு குதிக்கும் வயிற்றில் ஊசி ஏற்றிக் கொண்டிருப்பதான வலி இருப்பதாக தந்தையாரிடம் சொன்னேன்.அவர் பேருந்தின் முன்புறம் சென்று யாரையோ கெஞ்சிக் கூத்தாடி பின் இருக்கைக்கு இழுத்து வந்தார்.என்னை முன் இருக்கைக்கு தூக்கிப்போய் அமர வைத்தார்.வலி கொஞ்சம் மட்டுப்பட அப்படியே தூங்கிப்போய் விட்டேன்.
    சென்னிமலையில் பழனிச்சாமி டாக்டரிடம் ப்ரிட்ஜ் இருந்தது.எனக்கான மருந்துப் புட்டிகள் அவரது ப்ரிட்ஜினுள் கோழி அடைகாப்பது போல் வைக்கப் பட்டது. தினமும் ஏரீஸ் பஸ் வீட்டு முன்பாக மதியம் நின்றது. அம்மா ஒத்தை ஆள் என்னைத் தூக்கி பேருந்தி அமர வைக்க முடியாது. பேருந்தில் பயணிப்போர் இருவர் இறங்கி என்னைத் தூக்கிப் போய் இருக்கையில் அமர வைப்பார்கள்.பழனிச்சாமி டாக்டர் நேம்பான மனுசர்.மிகவும் பொறுமையாக 6 நாட்களும் என் தொப்புளைச் சுற்றிலும் போட்டார்.எனக்கும் ஊசி போட்ட இடம் இட்லி மாதிரி வீங்கி விட்டது. அரையாண்டுத்தேர்வு நான் எழுதவில்லை. நாய்க்கடிப்புண் ஆறுவதற்கு நீண்ட நாட்களாகிவிட்டது.
     என் பால்ய காலத்தில் வருடம் ஒரு வினையைத் தேடிகொள்வது வாடிக்கையாகவே இருந்தது. நாய்க்கடிக்கு முந்தைய வருடம் உள்ளூர் மாரியம்மனுக்கு நேர்ந்து விட்ட செம்பிளிக்கிடாய் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி வீழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு.கிடாயானது என்மீது என்ன பகை கொண்டு தாக்கிற்று என்பது தெரியவில்லை.ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த கிழவி தண்ணீர் குடிக்க எந்த வீட்டிற்குப் போனாளோ. என் அபாய ஓலம் கேட்டு வீட்டிலிருந்து என் அம்மா ஓடி வர 5 நிமிடம் ஆகி விட்டது. கிடாயானது பின்னுக்கு தூரம் சென்று ஓடி வந்து என் மீது நான்கைந்து முறையாவது முட்டி இருக்கும். அது என்னைவிட உயரமான கிடாய் வேறு.எனக்கு அந்த வயதில் ஒரு கிடாயுடன் எப்படி போராடுவது என்று தெரிந்திருக்கவில்லை. அம்மா அலறியடித்து அன்னை நெருங்கி வரும் சமயம் நானும் கிடாயின் ஸ்டைலிலேயே அதனை முட்டியிருக்கிறேன். என் நெற்றியில் அதன் கொம்பு ஏறி விட்டது. அந்த நெற்றித் தழும்பை இன்றும் கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் ஒரு செம்பிளி ஆட்டுடன் சரியாய் சண்டையிடத் தெரியாமல் போனது ஞாபகத்திற்கு வந்து கொண்டேயிருக்கிறது. என் அம்மா என்னை பெற்றெடுத்து காலம் முழுவதும் சீரழிவதும், என்னைக் காப்பாற்ற செலவழிப்பதும் இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
     உயிரைக்காப்பாற்றிக் கொள்ள போராடுவதே தொடர்ந்து இந்த வாழ்க்கையில் நான் செய்து கொண்டேயிருக்கிறேன்.உயிரை தக்கவைத்துக் கொள்ள போராடும் போராட்டம் இன்று சலிப்பைக் கொடுக்கிறது.மாத்திரைகளை பல வர்ணங்களில் பார்க்கையில் இன்னும் எத்தனை நாளைக்கு என்றகேள்வி வருகிறது.
     நான் பட்ட நாய்க்கடி சமாச்சாரம் அத்துடன் முடியவில்லை. பத்து வருடங்கள் தொடர்ந்து மட்டன், சிக்கன்,மீன் சாப்பிட இயலாமல் போய் விட்டது. அதற்கு காரணமும் இருந்தது.தூரத்தில் அறிந்தவர்களின் சாவுச் செய்திகள் தான். கோவையில் என் நண்பனின் தந்தையார் நாய்க்கடி பட்ட ஒரு வாரத்தில் மீன் சில்லி சாப்பிட்டு அவரது முழு நடவடிக்கையும் நாய் போலவே மாறி விட்டதாம்.அன்று தொட்டதற்கெல்லாம் குன்னூர் தான். குன்னூரில் ஒரு அறையில் அவரை அடைத்து வைத்து விட்டு ஒன்றும் செய்ய ஏலாது என்று கை விரித்து விட்டார்களாம்.அவர் குரைப்பதும்..தண்ணீர் கேட்பதும்..ஓடி வந்து இரும்புக்கம்பியை கடிப்பதுமாக..வேதனைப்பட்டு இறந்திருக்கிறார்.
     குன்னத்தூரில் ஒரு குடும்பம் குட்டி நாய் வளர்த்தியிருக்கிறது.சிறுவயது அக்காளும், தம்பியும் பள்ளி விட்டு வந்ததும் அதனுடன் விளையாடுவது வழக்கம்.குட்டிநாய்க்கு பொட்டு வைத்து சிங்காரித்து வளர்த்தினார்கள். வழியாக ஓடிய மசை நாய் அந்த குட்டியையும் கடித்து விட்டு ஓடிவிட்டது. அது குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. குட்டிநாய் எல்லோரையும் கவ்விக்கவ்வி விளையாடுவது வழக்கம் என்கிறபடியால் எல்லோரையும் கவ்வி விட்டது.இதில் ஆச்சரியம் என்ன என்றால் அந்தத் தம்பிப் பயலை அது கவ்வவில்லை.
   ஞாயிற்றுக்கிழமை என்றதும் மட்டன், சிக்கன் என்று எடுத்து சாப்பிட்டிருக்கிறார்கள்.மெதுவாக அந்த குணம் அவர்களுக்கு ஆரம்பமாகி விட்டது.பக்கத்து வீட்டாரும், சொந்தபந்தங்களில் ஒன்றிரண்டு பேரும் வேனில் தூக்கிப் போட்டுக்கொண்டு குன்னூர் சென்றார்கள். அவர்களுக்கோ பார்த்தவுடன் நிலைமை தெரிந்து விட்டது. ஒன்னும் பண்ணமுடியாது கொண்டுட்டு போயிடுங்க..வேறு வழி இல்லாமல் மீண்டும் குன்னத்தூர் வந்தவர்கள் தனித்தனி மரத்தில் மூவரையும் கட்டி வைத்து விட்டார்கள். குடும்பத்தில் ஒரு பையன் தான் மிச்சம்.இப்படியான தகவல்களால் ஊசி போட்டிருந்தாலும் என் குடும்பத்தார் எனக்காக கறி தின்பதை விட்டொழித்தார்கள்.
    மூன்று வருடங்களுக்கு பிற்பாடு அவர்கள் மட்டுமே என்னிடம் சொல்லிக் கொண்டு சாப்பிட்டார்கள். பழைய வியாதி எதுவாயினும் கிளப்பி விட்டுவிடும் கறி முயல் கறி.நண்பர்களின் வேட்டையில் அடிக்கடி அகப்பட்டுவிடும். அதை இன்று வரை தொடுவதில்லை நான்.அதை சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது.
      இப்படி கறி என்றவாசனை இல்லாமல் 10 வருடம் ஓடிப்போனது. நண்பர்கள் ஊத்துக்குளி தளவாய்பாளையத்து  குளத்தில் மீன் பிடிக்கப் பயணப்பட்டார்கள். மழைத்தூறல் அன்று காலையிலிருந்தே இருந்து கொண்டிருந்த்து.4 தூண்டில்களுடன்  சைக்கிளில் ஏழுபேர் கிளம்பினோம். ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம். குளத்து மேடு ஏறிப்பார்த்தால் சுற்றிலும் தண்ணீர். நாரைகளும், கொக்குகளும் குளத்தின் ஓரப்பகுதிகளில் டில்லி முள் செடிகள்மீது பறந்தும், உட்கார்ந்தும் இளைப்பாறியவண்ணமிருந்தன. மழைத்தூறல் வேகமெடுத்தது.எங்களுக்கும் முன்பாக பலர் தூண்டில் போட்டு மீன் பிடித்தபடி இருந்தனர். எங்களுக்கான தனி இடம் தேடிப்போய் அமர்ந்து தூண்டில் வீசினோம். மீன் என்றால் பலவகையான மீன் கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். உள்ளங்கை அளவிலான ஜிலேபி மீன்கள் தான்.ஆனால் யார் தூண்டில் வீசினாலும் தூண்டிலை வெறுமனே மீன் இல்லாமல் மேலே இழுக்கவே இல்லை.
      மூன்று பைகளை நிரப்பிக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தோம்.பாறைக் குழி நீரில் சுத்தப்படுத்தி வடைச்சட்டியில் போட்டுக்கொண்டு பொறிப்பதற்காக காலி வீடு ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம். மிளகாய் பொடியும், உப்பும் மட்டும் தான்.ஸ்டவ் பற்றவைத்து வடைச்சட்டியில் எண்ணெய் ஊற்றி பற்றவைத்து மீன்களைப் போட்டு பொறித்தாகி விட்டது.
     “சாப்புடு கோமு..அட ஒன்னு தின்னுசாப்பிட்டுக்கொண்டே நண்பர்கள் சொல்ல, ஆவது ஆகட்டும் என்று ஒன்று தின்றேன். ஒரே படப்டப்பாக இருந்தது. பத்து வருடம் கழித்து ஒரு ஜிலேபி மீன் தின்றாகிவிட்டது. மெலிதாக என் வாயில் இருந்து ஜலநீர் ஒழுகி வந்தது. “இருங்க வர்றேன்என்று பாறைக்குழி நோக்கி தனித்து சென்றேன். ஜலநீர் வருவது நின்றபாடில்லை.யாரையாவது இனி கடித்து வைத்து விடுவேனோ! மழைத்தூறல் நின்று போயிருந்தது. நேரம் ஆக ஆக ஜலநீர் வருவது நின்று போய் விட்டது. நண்பர்களிடம் வந்தேன். “அட எடுத்துக்கோ..டேஸ்டா இருக்குதுஎன்று தான் சொன்னார்கள்.அன்று இரவு தூங்கப் போகையில் அம்மாவிடம் மீன் சாப்பிட்ட விசயத்தை சொன்னேன். “அடப் பாப்புருஎன்று கத்தினார். அன்று விடிய விடிய தந்தையாரும், தாயாரும் தூங்கவில்லை. நான் நிம்மதியாகத் தூங்கினேன்.
     அன்றிலிருந்து தான் என் மனதில் பயம் என்ற உணர்வு விடைபெற்றுப் போய்விட்டது. காசம் என்ற வியாதியில் எட்டு வருடம் நான் துன்பப்பட்டேனே ஒழிய பயப்படவில்லை.
              *******          **********        *************          ***********     **********

Post Comment