புதன், மே 15, 2013

குட்டிக்காதலின் வரலாறு ..ஆ.வி. கதை
‘பிரிய மகேசுவரி,

பார்த்தும் பாராததுபோல உதறி நடக்கும் உன்னைப்போய் என் இதயத்தில் நட்டுவைத்தேன் பார், நன்றாக அனுபவிக்கிறேன் கிளை படர்ந்து. என் மனம் எங்கெங்கோ தவித்து அலைந்த தருணத்தில், நீ ஒரு திசைகாட்டியாகத்தானே வந்தாய்.

திசையைக் காட்டிவிட்டு நீ ஏன் திரும்பிச் சென்றாய்? நாவுகள் நிஜம் பேசும் என்பது நம்பத் தகுந்தது அல்ல என்பதை நல்லவேளை நீயும் நினைவுபடுத்திவிட்டாய்.

நீ கண்ணீருக்கும் கவிதைக்கும் அடித்தளம் போட்டுவிட்டு, ஒரு கேள்விக்குறியையும் விதைத்துவிட்டுப் போய்விட்டாய்.

வாழ்க்கை நோக்கிப் பயணித்த பாதங்களில் நெருஞ்சி முட்கள் கூட்டம் கூட்டமாக.

நிலவு வானில் கைகோத்து நடை பழக்கிவிட்டு, ஒரு நட்சத்திர வெடிப்பில் கையுருவிப் போனாய். அன்பை விதைத்துவிட்டு அறுவடைக்கு நில்லாமல் போய்விட்டாய்.என்னிடம் இருந்து நீ பிரிந்து போனாலும் இதயம் இல்லாதவள் என்று நான் சபிக்காது இருக்கிறேனே… அது உன்னுடைய பிரியத்தின் வெற்றியாகவோ அல்லது உன் அன்புக்கு நான் தரும் கௌரவமாகவோ இருக்கலாம். இருந்தும் இப்படியாக ஒரு பிரிய சகி என் வாழ்வில் கொலுசு ஒலிக்க நடந்து சென்ற நாட்களை நான் மறக்கவே முயற்சிக்கிறேன் முடியாதெனத் தெரிந்தும்.

தூங்குகிற மணியக்காரரை எழுப்பிவிட்டால், எழுந்தவுடன் முகத்தைத் துடைத்தபடி பழைய கந்தாயப் பணத்தைக் கேட்பாராம் என்பதுபோல, 15 வருடங்களுக்குப் பிறகு என்னுடைய பழைய டிரங்குப் பெட்டியின் குப்பைகளைக் கிளறிக்கொண்டு இருந்ததில் மகேசுவரிக்காக நான் காகிதத்தில் வடித்த கண்ணீரும் காணக் கிடைத்துவிட்டது. பாருங்கள் 15 வருடங்களுக்குப் பிறகும் அதோ அந்தத் திரைச்சீலைக்கு அந்தப்புறமாக ஒளிந்துகொண்டு மோடி வித்தை காட்டுகிறாள் பயபிள்ளை!

பாருங்கள்… நாம் முன்பு ஒருகாலத்தில் பிரியசகி ஒருத்தியால் காதலிக்கப்பட்டு இருக்கிறோம் என்ற நினைப்பே உள்ளுக்குள் எவ்வளவு சுகந்தமாக இருக்கிறது, வருடங்கள் பல போன பின்பும். பல வருடங்கள் முன்பு நீங்கள் காதலித்த அதே ஒல்லிப்பிச்சான் தேவதை, வயதே கூடாமல்… உடம்பும் ஏறாமல் உங்களைப் பார்த்து உதட்டைத் தெற்கு வடக்காகச் சுழித்துக் காண்பிக்கிறாளா? கண்டிப்பாகக் காண்பிப்பாள். ஆனால் இதே சமயத்தில், ‘நீங்க சுத்த மோசம்’ என்று சொன்ன உங்கள் காதலியின் குரலும் ஞாபகத்தில் வர வேண்டும்.

மகேசுவரியை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லைதான். இது முன் எப்போதோ முடிந்துபோன கதை என்பதால், அவளுடைய அழகை 15 வருடங்கள் கழித்து வர்ணித்தால் அவ்வளவு சுத்தப்படாதுதான்.

காலை 8 மணி ஷிப்ட்டுக்கு ஜி.கே.ஸ்டீல் கம்பெனிக்குச் செல்லும் கணவருக்கு டிபன் பாக்ஸில் சாம்பார், ரசம் ஊற்றிவிட்டு, ‘ஏனுங்க ஊறுகாய் வைக்கவா?’ என்றுகூடக் கேட்டுக்கொண்டு இருப்பாள். தன்னுடைய 12 வயது மகனின் படுக்கை அறைக்குள் தலைநீட்டி, ‘இன்னும் என்னடா தூக்கம் படவா? எழுந்து போய் பிரஷ் பண்ணிட்டு வா, காபி ஆறிட்டு இருக்கு’ என்றுகூடச் சொல்லிக்கொண்டு இருக்கலாம்.

காபிக்காகக் கண் பீழையைக்கூடத் துடைக்காமல் விரல் சூப்பிக்கொண்டே தன் கால்களுக்கு இடையே சுற்றும் ஐந்து வயது மகளிடம், ‘இருடி பறப்பெடுத்தவளே, இவ ஒருத்தி ஏழு மணிக்கே தூங்கீட்டு காத்தால நேரத்துல எழுந்திருச்சு காலுக்குள்ளயே சுத்தீட்டு…’ என்றுகூடச் சொல்லிக் கொண்டு இருக்கலாம்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பிரிகால் கம்பெனிக்கு 9 மணி ஷிப்ட்டுக்குச் செல்ல வேண்டிய மகேசுவரி, மகளைத் தன் மாமனாரிடம் பொறுப்பாக ஒப்படைத்து விட்டுச் செல்லும்போது, கம்பெனியில் தோழி ஒருத்தி இந்தக் கதையைப் படித்து, இவளிடம் புத்தகத்தை நீட்டி படித்துப் பார்க்கச் சொன்ன சமயம்… மகேசுவரியும் படித்தாள் என்றால், மீண்டும் காதல் மாதிரி ஒன்று கிளம்பிக் கொந்தளித்தாள் என்றால், என்னுடைய குட்டிக் குடும்பத்தினுள் சரவெடிகள் வெடிக்கவும் சங்குச் சக்கரங்கள் சுழலவும் வாய்ப்பு அதிகம்.

மகேசுவரி, எனக்குக் கண்கள் கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது என்பதற்காக, புத்தக வாசிப்புச் சமயத்தில் கண்ணாடி போட்டுக்கொள்கிறேன். நீ எப்படி? கண்களுக்கு உள்ளேயே லென்ஸ் பொருத்திவிட்டாயா? காது ஓரத்திலும் பொடனியிலும் வெள்ளை முடிகள் வந்துவிட்டனவே என்று வருத்தப்பட்டு கோத்ரெஜ் டை பயன்படுத்துகிறேன். நீ எப்படி வாஸ்மோலா?’

கோவையில் சாய்பாபா காலனிக்கு அருகே டி.சி.எம். டொயோட்டோ கம்பெனி ஒன்றில் ஒரு வருட காலமாக ஆயில் மாற்றிக்கொண்டும், டயர் கழற்றி மாட்டிக்கொண்டும் இருந்த நான், துடியலூர் அருகே நோகாமல் நோம்பு கும்பிடலாம் என்று லேத் வேலைக்குச் சென்றுவிட்டேன். அங்கும் ஆறு மாதமே என்னால் தாக்குப்பிடிக்க முடிந்தது. பின்னே விடிய விடிய லேத்தின் முன் நின்றுவிட்டு காலையில் இரண்டு புட்டுமா, இரண்டு தோசை என்று விழுங்கிவிட்டு என் அறையில்கிடந்தால், மாலையில் 6 மணியைப் போல எழுந்து குளித்துவிட்டு, கடையில் ரெண்டு புரோட்டாவை வயிற்றில் தள்ளிவிட்டு, மறுபடியும் லேத் மெஷின் முன்பு நின்றுகிடந்தால் உடம்பு என்னவாகும்?

உள்ளூர் தலைவர் ஒருவரின் உதவியால் பிரிகால் கம்பெனிக்குள் கால்வைத்த பிறகு தான் ஒரு வெளிச்சம் தோன்றியதாக உணர்ந்தேன். அந்த வெளிச்சத்தில் பிரகாசமாகத் தெரிந்தவள்தான் மகேசுவரி. எனக்கும் ஒரு வருடம் முன்பாகவே கம்பெனி யில் சேர்ந்துவிட்டவளாம். நரசிம்மநாயக்கன் பாளையத்தில்தான் நான் வரும் பேருந்தில் ஏறி வருகிறாள். பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் என்பார்களே… அது நிஜம்தான்.

கம்பெனிக்குள் என் பிரிவில் மகேசுவரி வேலை செய்யவில்லை. கம்பெனி கேட்டினுள் நுழைந்ததும் கூட்டத்தோடு கூட்டமாக அவள் அவளுடைய பிரிவுக்குச் சென்றுவிடுவாள். டாண் என்று 5.30 மணி ஆனதும் மகேசுவரி கிளம்பிவிடுவாள். ஆனால், நான் அப்படி டாண் என்று கிளம்ப முடியாது. நான் எல்லோரிடம் இருந்தும் விடைபெற 7 மணி ஆகிவிடும்.

மகேசுவரி ஒருநாள் காலையில் நான் வரும் பேருந்தில் வரவில்லை. என்னாச்சு கண்மணிக்கு? என்று இந்த இதயம் வேறு, வழக்கத்தைவிட அதிகமாகத் துடித்தது. கம்பெனி வாயிலில் வெகு நேரம் நின்று பார்த்து சோர்ந்துபோய், என் பிரிவுக்குள் நுழைந்தேன். மனம் ஏனோ வேலை யில் ஒட்டவே இல்லைதான். இருந்தும் கூலிக்காக மாரடிக்கும் நோக்கில் ஐ’ யம் பிஸி என்பதாக மற்றவர்கள் முன்பு நடித்துக்கொண்டு இருந் தேன்.

காலையில் இருந்தே வைரஸ் காய்ச்சலால் அவதியுற்றவன்போல் இருந்தவன், மதிய நேரத்தில் சோகமே உருவாக கேன்டீனில் சிகரெட் பிடித்தபடி அமர்ந்து இருந்தேன். என்னுடைய பக்கத்து மேஜை நண்பன் பழனிவேல், கேன்டீனுக்கு வந்தவன் ஒரு டீயைச் சொல்லிவிட்டு என் அருகே வந்து அமர்ந்தான். ”என்ன உம்முனு இருக்கே? உன் ஆள் இன்னிக்கு உன்னை ஒரு தினுசா பார்க்காமப் போயிட்டாளா?” என்று கேட்டதோடு விட்டுவிட்டு, சிகரெட் பிடித்தான்.”நீங்க சிகரெட் பிடிப்பீங்களா கர்ணன்?”- இனிமையான குரலில் இளம் பச்சை நிற சேலையில் என் அருகில் இருந்த காலி சேரில் மகேசுவரிதான் வந்து அமர்ந்தாள். பழனிவேல் என்னை முறைத்துவிட்டு, ”டீ எங்கப்பா? சொல்லி அரை மணி நேரமாச்சு” என்று குரல்கொடுத்துச் சென்றான்.

” ‘அது ஒரு நிலாக் காலம்’ புத்தகம் உங்களுதாமே… ஷாலினி வெச்சிருந்தா. நான் வாங்கிப் படிச்சிட்டு இருக்கேன். ஆமாம், ஷாலினிக்குத்தான் கொடுப்பீங்களா? எனக்குத் தராமல் எப்படி நீங்க அவளுக்குக் கொடுக்கலாம்?” என்று சரளமாகப் பேசியவளிடம் மறுபேச்சு பேசாமல் அமர்ந்து இருந்தேன்.

”புத்தகத்தின் முன் பக்கத்தில், ‘வந்து பார்க்க ஆசைதான் என்றாலும், காத்து இருந்து பார்க்க நீ வேண்டுமே’னு எழுதி இருக்கீங்க… ஷாலினிக்காகவா?” என்று கேட்டவளுக்கு, ”இல்லை” என்று வேகமாகத் தலையை அசைத்தேன். ”காலையில் லேட்டா வந்தியா மகேசுவரி?” என்று நிதானமாகக் கேட்டேன். ”இல்லையே உங்களுக்கு முன்னாடியே வந்துட்டேன்… நீங்க என்ன பண்றீங்கனு நான் மறைஞ்சு நின்னு பார்த்துட்டு இருந்தேன். ஒரு பஸ்ஸையும் விடலை. எல்லாத்தையும் பார்த் துட்டு சோகமாப் போனீங்களே!” என்றாள் புன்னகையுடன்.

”சேலையில் இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கே மகேசுவரி” என்றேன்.

”அம்மாவோடது… ரொம்ப அடம்பிடிச்சு வாங்கிக் கட்டிட்டு வந்தேன். சும்மா தாவணியிலயே பஸ்ஸில் என்னைத் தின்னுடற மாதிரி பார்ப்பீங்க. சேலையில் சொல்லவே வேண்டாம் சாமினுதான் முன்னாடியே வந்துட்டேன்” என்றாள்.

”பின்ன ஏன் மகேசுவரி அன்னிக்கு நான் கொடுத்த லெட்டரை வாங்கின உடனே நாலா மூணா கிழிச்சு வீசினே? வீசிட்டு ஒண்ணுமே சொல்லாமப் போயிட்டே?” என்றேன் அப்பாவியாக. ”எப்படி உருகி எழுதியிருந்தேன் தெரியுமா?” என்று வேறு முனகினேன்.

”எனக்குப் பிடிக்கலைங்க கர்ணன். ஒருத்தர் என்ன பார்வை பார்க்கிறார்னு நாங்க ரொம்ப ஈஸியா கண்டுபிடிச்சிடுவோம். பிடிச்சிருக்கு அப்படினு நேரில் தைரியமாச் சொல்றவங்களைத்தான் எங்களுக்குப் பிடிக்கும். இப்போ சொல்லுங்களேன்” என்றவளிடம், ”வாய் குழறுது” என்றேன்.

”அப்படியே இருக்கட்டும்” என்று சொல்லி எழுந்து சென்றாள்.

”கர்ணா இவளை நீ விட மாட்டியா? இவ குடும்பம் நரசிம்மநாயக்கன்பாளையத்துக்குள்ள சண்டைக்காரக் குடும்பம்ப்பா. சொன்னா உனக்குத் தலையில ஏறாது. பட்டாத்தான் புத்திவரும்” என்றபடி, பழனிவேல் மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்தான்.

”இப்படி மொட்டக் கட்டையா சொன்னா எப்படி?” என்றேன்.

”கர்ணா, அவங்க சொந்த பந்தத்தில் எங்கயும் போக்குவரத்து இல்லை. அவ அம்மாவுக்கு முதல்லயே பேர் கொஞ்சம் ரிப்பேர். அப்பா, நாலு நாளைக்கு வேலைக் குப் போவாப்ல… சீட்டாட்டம், தண்ணி. தம்பி ஒருத்தன் இருக்கான். அவன் ஊர் சுத்தி. ஏண்டானு கேட்டா, ‘நானா சுத்தறேன்? உலகம் சுத்துது, அதனால நான் சுத்துறாப்ல தெரியுதுனு’ எகத்தாளம் பேசிட்டு இருப்பான். அதனாலதான் சொல்றேன்… யோசன பண்ணிப் பழகு” என்றான்.

”மகேசுவரி நல்ல பொண்ணுடா. அவதான் எனக்கு வேணும். வீட்டாரைப் பற்றி என்ன?” என்றேன் பழனிவேலிடம். ”காமாலைக்காரனுக்குப் பார்த்ததெல்லாம் யெல்லோ கலர்லதான் தெரியுமாம். சரி உன் பாடு; நீயாச்சு உன் மகேசுவரி ஆச்சு, கிளம்புவோம்” என்று எழுந்தவன் பின் நானும் நகர்ந்தேன்.

ஒரு சினிமா என்றோ, ஒரு பூங்கா என்றோ, ஒரு தனிமையான இடம் என்றோ எதுவும் இல்லாமல், பேருந்திலும் கம்பெனி கேன்டீனுக்குள்ளும் மட்டுமே எங்கள் சந்திப்பு இருந்தது. மற்றபடி மகேசுவரியின் மடியில் படுத்தபடி நிலா பார்ப்பதும், இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுப் பதும் என் கனவுகளில் கறுப்பு – வெள்ளை வண்ணத்தில் ஓடிக்கொண்டுதான் இருந் தது. இதில், கோவையில் பீச் என்ற சமாசாரமே இல்லை. ஆனால், சுண்டல் கொறித்துக்கொண்டு மகேசுவரியும் நானும் துடியலூர் கடற்கரையில் அமர்ந்தபடி அலைகளை ரசித்த கனவுதான் கேவலமாக இருந்தது.

மகேசுவரிக்கு நான் சிகரெட் பிடிப்பது பிடிக்கவில்லை என்பதால், ”ஒரு நாளில் 10 சிகரெட் பிடிப்பீர்களா?” என்று வேறு ஒரு சமயம் கேட்டாள். இதே விஷ யத்தை பழனிவேலிடமும் மகேசு வரி பேசி இருக்கிறாள். சிகரெட் ஞாபகம் வந்தால் உடனே எடுத்துக் கையில் வைத்துக்கொள்வது மாதிரி அவளிடம், ‘ஹேர்பின், கம்மல்னு ஏதாவது வாங்கிவெச்சுக்கோ’ என்று சொல்லி இருந்தான். மகேசுவரியே தன் கர்ச்சீப்பை என்னிடம் கொடுத்தாள்.

”போன பிறவியில் நான் வள்ளி மச்சான்டார் பீடி கட்டுக்கட்டா வெச்சுக் குடிச்சிக்கிட்டு இருந்தேன். அப்போ, ‘நீ பீடி குடிக்கக் கூடாது அத்தான்’ என்று சொல்லி, உன் மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தாய்… ஞாபகம் இருக்கா?” என்றேன்.

”ரீல் ஓட்டறது சரிதான்… ஆனா, இது ரொம்ப ஓவர்” என்றாள். ”ஏதாவது சின்னதா நீ கோபிச்சுக்கிட்டுப் பேசாமல் இருந்தீன்னா… என்னோட ஐந்து விரல்லயும் சிகரெட் புகையும் பார்த்துக்க” என்று வேறு சொல்லிவைத்தேன்.

”அப்படி உங்க விரல்ல புகைஞ்சா, நானும் புகைவேன்” என்றாள்.

மிரண்டவன் கண்களுக்குப் புளிரசம்கூட விஷம் மாதிரியே தெரியுமாம். மூன்று மாதம்போல ஸ்மூத்தாகப் போய்க்கொண்டு இருந்த எங்களின் இந்தக் காதல் நாடகத்தில், மகேசுவரியே புதியதாக இடைஞ்சலைக் கொண்டுவந்தாள். பார்க்கும்போது புன்னகை இல்லை. ஒரு குட்மார்னிங் இல்லை. கேன்டீன் பக்கம் தலைவைத்துக்கூடப் படுப்பது இல்லை. ஒரு காரணமும் தெரியாமல் தவித்தேன்.

”புண்பட்ட மனதைப் புகைவிட்டுத்தான் ஆத்தோணும்” என்றான் பழனிவேல். கேன்டீனில் எதிரே அமர்ந்து வளையம் வளையமாகப் புகைவிட்டான்.

”என்ன சுகம் தெரியுமா?” என்றான்.

”மகேசுவரியிடம் எப்படியாவது சேர்ப் பித்து விடு” என்று கடிதம் ஒன்று எழுதிக் கொடுத்தேன் பழனிவேலிடம். அதில் ஞாயிறு அன்று கோவை அர்ச்சனா திரையரங்கு வாசலில் காலைக் காட்சிக்கு நான் காத்திருப்பதாகவும், எதையும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் எனவும் எழுதி இருந்தேன். ஞாயிறு அன்று அர்ச்சனா திரையரங்கு வாசலில் யார் வீட்டு நாயோ எதற்கோ காத்திருந்ததுபோல, காலைக் காட்சி முடியும் வரை நின்று பார்த்துவிட்டுத் திரும்பினேன்.

அடுத்த நாள் கேன்டீனில் சிகரெட் பிடித்தபடி அமர்ந்து இருந்த என்னிடம் பழனிவேல், ”என்னப்பா… போல்டா? கேட்ச் அவுட்டா?” என்று சந்தோஷமாகக் கேட்டான். என் கோப முகம் பார்த்து, வேறு டேபிள் சென்றான். அந்தச் சுகத்தை இவளுக்காக இரண்டு மாதம்போல விட்டு இருந்தேனே. புகையை ரசித்து இழுத்து ஊதினேன். மகேசுவரி அன்று கேன்டீனுக்கு வந்தாள்.

”என் கண் முன்னால சிகரெட் குடிக்கிறீங்க… எனக்குச் சங்கடமா இருக்கு. அழுகை வருது… என் வீட்டுல நம்ம விஷயம் தெரிஞ்சுபோச்சு கர்ணன். தம்பி பார்த்து இருப்பான்போல. ஞாயிற்றுக்கிழமை இடிகரையில இருந்து என்னைப் பொண்ணு பார்க்க வந்தாங்க. ஆனா, மாப்பிள்ளைப் பையனை எனக்குப் பிடிக்கலைனுட்டேன். நாம கொஞ்ச நாள் எங்கேயும் பேசிக்க வேண்டாம்” என்றாள்.

”எப்பவுமே பேசிக்கக் கூடாதா? இந்த மாதிரி கேன்டீன்லகூடவா? நிஜமாத்தான் சொல்றியா?” என்ற என் மூன்று கேள்விகளுக்கும் மகேசுவரி ”ம்” என்ற ஒரே பதிலைச் சொன்னாள்.

”என்ன செய்யுறதுன்னே தெரியலை கர்ணன். எனக்கு நாம பழகுறது தப்புனு மட்டும் தெரியுது. வீட்டுல திட்டுறாங்க. அதுவும் அம்மா சொல்றதைப் பார்த்தா ரொம்பப் பயமா இருக்கு” என்றவளைப் பார்த்து, இரு கையையும் உயர்த்திக் கும்பிட்டேன்.

மூன்று மாதங்கள் சென்றிருக்கும். பழனிவேல் தன் ஊரில் மாகாளியம்மன் திருவிழா, ‘வீட்டில் மட்டன்’ என்று தொப்பம் பட்டி அழைத்து இருந்தான். நானும் சென்றிருந்தேன். அதே விசேஷத்துக்குப் பயல் மகேசுவரியையும் அழைத்து இருக்கிறான். அவளோ அந்த வீட்டுப் பெண் போலவே ஓடி ஓடி சாப்பாடு போடுவதும் என்னைப் பார்த்து அதே பழைய புன்னகையை வீசுவதுமாக இருக்க… பழனிவேலிடம், ”என்னால முடியாது பழனி… இவளையும் நீ கூப்பிட்டு இருக்கிறதாச் சொல்லி இருந்தா, நான் வந்தே இருக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

விட்டேனா பார் என்று அடுத்த நாள் கேன்டீனில் என்னை வந்து பிடித்துக்கொண்டாள் மகேசுவரி. ”சௌக்கியமா?” என்றவளிடம் ”டபுள் சௌக்கியம்” என்றேன்.

”பழனி வீட்டுல பார்த்தேன். ஏன் உர்ர்ருன்னே இருந்தீங்க?

ஒரு பேச்சுப் பேசுறதுக்கு என்ன வந்துச்சு உங்களுக்கு? அப்படிக் கோபமா? திடீர்னு பார்த்தா ஆளைக் காணோம். சாப்பிடக்கூட வரலை? நான்தான் பந்தியில் பரிமாறிட்டு இருந்தேன். உங்களுக்கு இலையில சாப்பாடு போடணும்னு ஆசையா இருந்தேன்” என்றாள். இதென்ன இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட அழைக்கிறாளா?

”ஒழுங்கா சாப்பிடறது இல்லையா? இளைச்சுட்டியே?” என்றதும் ”எல்லாம் உங்ககூட இவ்ளோ நாள் பேசாமல் இருந்ததாலதான்” என்றவளைப் பார்த்தேன். மறுபடியும் இரு கைகளையும் உயர்த்திக் கும்பிட்டேன். ஒரு மாதம் கழிந்திருக்கும்.

பழனிவேலோடு மகேசுவரியைக் கவுண்டம்பாளையம் கல்பனா திரைஅரங்கின் வாசலில் பார்த்தேன். இருவருமே என்னையும் பார்த்தார்கள். படம் பார்க்கும் ஆசையை விட்டொழித்துவிட்டு அறைக்குத் திரும்பியவன், அன்று டைரியில் எழுதிய கவிதை போன்ற வரிகள்தான் இந்தக் கதையின் தொடக்கத்தில் நீங்கள் படித்தது!

இந்தக் குட்டிக் காதலின் தோல்வி வரலாறு பிரிய மகேசுவரி என்று ஆரம்பிக்கிறது. மகேசுவரிக்குப் பதிலாக, பிரிய சாந்தாமணி என்று போட்டுக்கொண்டால் அதுவும் எனக்கு இன்னொரு தோல்வி வரலாறே!

- ஜனவரி 2012

Post Comment

செவ்வாய், மே 14, 2013

தினபலன்


தினபலன்
(சொல்லப்படுவன அனைத்தும் ரசித்து சிரிக்க மட்டுமே! யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.)
7-5-2013 ஸ்ரீ நந்தன வருடம் வைகாசி மாதம் 8ம் நாள் திங்கட்கிழமை பிரதமை திதி காலை 8 மணி வரை, பிறகு கார்த்திகை திதி, பூராட நட்சத்திரம் இரவு 7.30 மணிவரை. மரணயோகம் இரவு 11:12 மணிவரை பிறகு சித்தயோகம். நல்ல நேரம் காலை 9.30-10.30, மாலை 4.30-5.30.ராகு காலம் :7.30-9.00. எமகண்டம்   : 10.30-12.00, குளிகை மதியம் 1.30-3.00. வாரசூலை-கிழக்கு. சூரிய உதயம் ; காலை 5.53. அதிர்ழ்ச்ட எண்கள் : 3, 5, 8.
மேஷம்
ஆட்டாங்கல்லுக்கும் அம்மிக்கல்லுக்கும் உள்ள வித்தியாசத்தை உணரவே தெரியாத மேஷராசி அன்பர்களே! உங்களிடமுள்ள உதவும் குணத்தால் இன்று பலபேரது மனதில் நீங்கா இடம் பிடிப்பீர்கள். உங்களது சோம்பேறித்தனம் இன்று அகலும். புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணி விரைந்து செயல் படுவீர்கள். சில முக்கிய பிரச்சனைகளை நண்பர்கள் உங்களுக்காக முன்வந்து முடித்து வைப்பார்கள் என்றாலும் அவர்களிடம் இருட்டு கட்டும் சமயத்தில் மிதி படுவீர்கள். பணவரவு என்ற பேச்சுக்கே இன்று இடமில்லை.
ரிஷபம்
எள் என்றால் எண்ணெயாய் நிற்கும் ரிஷபராசி அன்பர்களே! இன்று செய்தொழிலில் சிறப்புகள் ஏற்படும் நாள். அப்படி என்றாலே பணவரவு கூடும் தானே. அந்தப் பணத்தை உங்கள் வருங்கால கனவுகளை நினைவாக்க சேமிப்பில் பத்திரப்படுத்துவீர்கள். அது களவு போகும். பூர்வீக சொத்து பற்றி உங்கள் நீண்ட கால எதிர்பார்ப்பு இன்று முடிவுக்கு வரும். ஆனால் அதில் பலன் ஒன்றும் இல்லை. இன்று மாலை நேரத்தில் இழவுச்செய்தி ஒன்று வரும். சுடுகாட்டில் இரவில் காலில் முள் ஏறாமல் கவனமாக இருக்கவும். அது தீங்காய் முடிந்து விடும்.
மிதுனம்
கப்பலில் பொண்ணுப்பிள்ளை வருது என்றால் எனக்கொன்னு எங்கப்பனுக்கு ஒன்னு என்று கேட்டு வரிசையில் நிற்கும் மிதுனராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த நாள் குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். பணப்புழக்கம் தாராளமாக இருந்தாலும் செலவழிக்க மனம் இடம் தராது. திடீர் விருந்தினர்கள் இன்று உங்கள் வீட்டைத் துடைப்பார்கள். வாகன பயம் உங்களுக்கு எப்போதும் உண்டு. செல்லும் வழியில் பழனிமலை முருகனை கோவணத்தோடு தரிசிப்பீர்கள். நீண்ட நாட்களாய் மறந்து போயிருந்த விசயத்தை இன்றும் மறப்பீர்கள்.
கடகம்
சாமியே சைக்கிள்ல போவுதாம் பூசாரிக்கி புது புல்லட் வேணுமாம் என்று தொட்டதற்கெல்லாம் பழ்ழமை பேசித்திரியும் கடக ராசி அன்பர்களே! தனவரவில் தடைகள் அகலும் நாள் இந்நாள். நினைத்த காரியம் உடனே நடைபெற வேண்டும் என்றுதான் எப்போதும் நினைப்பீர்கள். பெண் பார்க்கும் படலத்திலேயே பெண்ணிற்கு தாலி கட்ட முயன்று தர்ம அடிபடுவீர்கள். மாலை நேரத்தில் யாரிடம் பேசுகையிலும் கெட்டவார்த்தைகளை தவிர்த்து விட்டு பேசுவது நலம். இடமாற்றம் நடந்தே தீருன்.
சிம்மம்
அடிச்சா மொட்டை வச்சாக் குடுமி என்றிருக்கும் சிம்மராசி அன்பர்களே! உங்களது சங்கடங்கள் அகல சாமி துணை தேவைப்படும் நாள் இந்நாள். இன்று நல்லதே செய்யப்போய் வீண் பொல்லாப்பில் மாட்டிக்கொள்வீர்கள். தங்கள் பெயரில் சாமி என்று ஒட்டவைத்துக் கொண்டிருக்கும் சிம்ம ராசி அன்பர்களுக்கு சிறப்பான நாள். சொந்த பந்தங்களால் வரும்பகை பாதி வழியிலேயே வேறு வீடு முட்டி விடும். உடல் நலத்திற்கென்று காலையில் கிளம்புகையில் 500 பாக்கெட்டில் வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் மனைவி 50 வயதில் உங்களிடம் கோபித்துக்கொண்டு தாஅய் வீடு செல்ல துணிமணிகளை மாலையில் பெட்டியில் அடுக்குவார்.
துலாம்
அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பதை நன்கு உணர்ந்த துலாம் ராசி அன்பர்களே! உங்களது நீண்டநாள் வேண்டுதல் இன்று நிறைவேறும். உங்கள் ஃபைலை உள்ளூர் மாரியம்மன் தன் கையில் எடுத்துக் கொண்டார். எச்.. வி உள்ளதா என்று இந்த வாரத்தில் பரிசோதனை செய்ய வேண்டி வரும். பாக்கெட்டில் இருக்கும் பணம் களவாடப்படும்.
கன்னி
கழுவுற மீனில் நழுவுற மீனாய் இருக்கும் கன்னிராசி அன்பர்களே! இன்று உங்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு தண்ணி இல்லாத பாத்ரூமில் அமர்ந்து தவிப்பீர்கள். பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், “நான் கன்னி ராசிக்காரனாக்கும்”  என்று வீண் ஜம்பம் செய்து, “அதுக்கு என்னை என்னடா பண்ணச் சொல்றே?” என்று அந்தப் பெண்மணி அடிக்க வருவார். விசயம் கேட்டு உங்கள் அன்பு மனைவி தூக்குப்போட முயற்சிப்பார். கன்னிராசிக்காரர்கள் இன்று வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பதே உசிதம். தொட்டது துலங்காது.
விருச்சிகம்
எங்கேயோ போற ஆத்தா எம்மேல வந்து ஏறாத்தா! என்றே புலம்பும் விருச்சிக ராசி அன்பர்களே! மிகப்பெரிய வாய்ப்புகள் எல்லாம் உங்களைத்தேடி வந்து கதவு தட்டும் நாள். சமயம் பார்த்து தூங்கிப் போய் விடுவீர்கள். இருந்தும் தெய்வ அனுகூலம் உங்களுக்கு இருப்பதால் மறுபடியும் தூங்கிப் போய் விடுவீர்கள். உங்கள் செல்ல மனைவி இன்று தன் சுயரூபத்தை காட்டுவாள். மாலை நேரத்தில் தலைவலி, மூட்டுவலி மாத்திரைகளுக்காக மருந்துக் கடை தேடி அலைவீர்கள்.
தனுசு
வன்னார் ஆட்டுத்தலைக்காக பறந்தது போல ந்தற்கெடுத்தாலும் பறக்கும் தனுசு ராசி அன்பர்களே! கடன் சுமையை இன்று சாமார்த்தியமாய் சுமந்து ஓட்டமாய் ஓடி ஜமாளிப்பீர்கள். யோகா ச்ந்ய்கிறேன் என்று அமர்ந்து முதுகெலும்பை முறித்துக்கொள்வீர்கள். உங்கள் காரியங்களீல் உதவ உங்களுடன் ஒரு பெண் துணையிருப்பாள். அவளை யார் நீ? என்று மாலையில் கேட்பீர்கள். அவரோ மனைவிடா என்று சொல்லி உங்களுக்கு அடி போடுவார். இன்று லேசாய் கழுத்துவலி இரவு வரை இருக்கும்.
மகரம்
எல்லோரும் சிரிக்கறாங்கன்னு பூனையும் ஓடி பொடக்காலியில உட்கார்ந்து சிரிச்சா மாதிரி எப்போதும் நடந்து கொள்ளும் மகர ராசி அன்பர்களே! இன்று உங்கள் முன்னேற்றத்திற்கு குறுக்கே முட்டுக்கட்டைகள் விழும் நாள். இத்தனை நாட்கள் தொழிலில் போட்டியாக மட்டுமே இருந்தவர்கள் குட்டான் கூடி தெருச் சண்டைக்கே இழுப்பார்கள். பண வரவு இன்றைய மருத்துவ செலவுகளுக்கு உதவும். குடும்ப ஒற்றுமை கூடும். உங்கள் நண்பர்கள் அவரவர் பிரச்சனைகளுக்கு சுற்றிக்கொண்டிருப்பார்கள்.
கும்பம்
மூக்கு இருக்கிற வரை சளீ தான் என்றே புலம்பும் கும்பராசி அன்பர்களே! வெயில் காலம் என்று தர்பூசணியோ, வெள்ளரிப்பிஞ்சோ, ஏழு அப்போ மாட்டி விடாதீர்கள். இன்று உங்களுக்கு தும்மல் நாள்.அதை மாலை வரை  எண்ணி கணக்கு சரியா? என்று உங்கள் மனைவியோ, மகளோ கேட்பார்கள். இன்று 18 முறை பாத்ரூம் செல்வீர்கள். உங்கள் அலைபேசிக்கு ஏகப்பட்ட மிஸ்டுகால் தொந்திரவும், கம்பெனிக்காரன் மெசேஜ் தொந்தரவும் இருக்கும்.
மீனம்
மோதிரக்கையால் குட்டுப்பட்டும் முன்னேற வழியின்றித் தவிக்கும் மீனராசி அன்பர்களே! நீங்கள் நீண்ட காலமாய் தொடர்பு வைத்திருந்த பெண் இன்று நாசுக்காய் நழுவி வேறொருவன் யமாஹாவில் போவாள். நீங்கள் நொந்து நூலாவீர்கள். புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றியும் போதாமையால் மதுக்கடை நுழைவீர்கள். “பெண்களை நம்பாதே..கண்களே பெண்களை நம்பாதேஇந்தப்பாடலை உங்கள் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்.
பொதுபலன்
எல்லா ராசிக்காரர்களும் இன்று வெள்ளை நிற ஆடை அணிவது நல்லது. இந்த வருசத்திலேயே ஒன்றுக்குமாகாத வெத்து நாள்.
கணித்தவர் : சோதிடக்கலைமாமணீ, கைரேகைப்புலி, வாஸ்து சிங்கம், வலது பக்கம் இதயம் பெற்ற ராசமைந்தன் அவர்கள்.

Post Comment

புதன், மே 08, 2013

சுந்தரேசன் c/o விஜயா
பெருந்துறை சானடோரியத்தில் புறநோயாளிகள் பிரிவில் சுந்தரேசன் நின்றிருந்தான். எந்தப் பக்கம் வரவே கூடாது என்று முடிவெடுத்து மறந்துபோயிருந்தானோ, அங்கேயே வந்து நிற்க வேண்டியதாகிவிட்டதே என்று வேதனையாக இருந்தது.

மருத்துவமனை சூழலில் எந்த விதமான புதிய மாற்றமும் இந்த மூன்று வருட காலத்தில் நிகழ்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இலை உதிர்க்கும் மரங் கள், துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவமனைத் தாதிகள் எல்லாம் அதே அதே. அப்போது திருமணம் ஆகாமல் சிவந்த நிறத்தில் ‘புன்னகை மன்னன்’ ரேவதியை ஞாபகப்படுத்தும் விதமாக இருந்த தாதிக்குத் திருமணம் ஆகிவிட்டதுபோலும். வயிறு மேடிட்டு இருந்தது. ”இந்த ஊசியை எல்லாம் கையில போடக் கூடாதுங்க. பவர் மருந்து இது. பின்னாடி காட்டுங்க… சின்னப் பையனாட்டம் ஊசி போட்டுக்கறதுக்கு இப்பிடிப் பயப்படறீங்களே”- அவளின் இனிமையான குரல் மூன்று வருடங்களுக்குப் பின் ஞாபகம் வந்தது.

முன்பு வந்திருந்தபோது பத்து நாட்கள் தனி அறையில் தங்கி சிகிச்சை எடுத்திருந்தான். வந்து சேர்ந்த ஐந்தாவது நாளே காசத்தின் தீவிரம் குறைந்து விட்டதான உள்ளுணர்வில் படுக்கையில்கிடந்திருக்கிறான். ‘அதற்கு இந்த சானடோரியத்தின் சுற்றுச்சூழல் அமைப்பும் மருந்துகளின் வீரியமும் சரியான உணவு நேரமும்தான் காரணம்’ என்று நினைத்திருந்தான். தவிர, ‘புன்னகை மன்னன்’ ரேவதி ரவுண்ட்ஸ் வரும்போது எல்லாம் நெஞ்சு படபடத்து ‘லொக்கு லொக்கு’ என்று இருமினான். காலை, மாலை இருவேளையும் அவளே வந்தால், மேலும் ஒரு வாரம்கூட இங்கேயே படுத்துக்கொள்ளலாம் என்றுகூடத் திட்டமிட்டு இருந்தான். ஆனால், மாலை வேளையில் மனோரமா மாதிரியான தாதி வந்து இவன் புட்டத்தைக் காட்டச் சொன்னபோது, ”பார்த்து வலிக்காமக் குத்துங்கம்மா” என்றான்.27 வயதில் வெறும் 35 கிலோ உடம்பை வைத்துக்கொண்டு, தீவிரமான காச நோயின் பிடியில் இருப்பவனுக்குத் தாதி மீது காதல் மாதிரியான ஒன்று வரலாமா?

”இன்னிக்கு எத்தனை தடவை ஆய் போனீங்க சுந்தரேசன்?”- குறிப்பேட்டில் குறிக்க கேள்வி கேட்டபடி நின்ற’புன்னகை மன்னன்’ ரேவதியிடம் கூச்சமாக, ”ரெண்டு தடவ மேடம்!” என்றான்.

வெளித் திண்ணையில் எப்போதடா என்று காத்திருந்த காகங்கள் இரண்டு அப்போதே தாதி வெளியேறுகையில் இவன் காதலைக் கொத்திக்கொண்டு சண்டையிட்டபடி பறந்துபோயின. இதில் ஒரு விஷயம் என்னவென்றால், அந்த அழகான தாதியின் உண்மையான பெயரும் ரேவதிதான்.

நோயாளிகள் அமர்ந்திருந்த நீளமான பெஞ்ச்சில் அமர்ந்திருந்த சுந்தரேசன், ரேவதி ஐந்து மாதக் கர்ப்பமாக இவனைக் கடந்து சென்றபோது புறங்கையைக் கழுத்தில் வைத்துக் காய்ச்சல் இப்போதே வந்துவிட்டதா? என்று தொட்டுப்பார்த்துக் கொண்டான். எதிர் சுவரில் காசநோயாளி களுக்கான குறிப்புகள் பெரிய சைஸ் போஸ்டர் போன்று ஒட்டியிருந்தார்கள் விதவிதமாக. காச நோயாளிகள் இருமும் போது கையில் கர்ச்சீப் வைத்துக்கொண்டு இரும வேண்டும் என்றிருந்தது. பக்கத்தில் கோட்டுச் சித்திரத்தில் கர்ச்சீப் வைத்து ஒருவர் இருமிக்கொண்டு இருந்தார். சுந்த ரேசனுக்கு இருமல் வரும்போல் தொண்டை உறுத்தியது. கர்ச்சீப்பை இவன் வருகையில் எடுத்து வந்திருக்க வில்லை. அம்மாவை வெளியே மரத்தடியில் அமரவைத்துவிட்டு வந்திருந்தான். அவளிடம் போனால் பையில் துண்டு இருக்கும்.

வேறு ஒரு போஸ்டரில் ஒரு டி.பி. நோயாளி கட்டிலில் படுத்திருப்பதை வண்ணத்தில் பிரின்ட் போட்டிருந்தார்கள். அவரின் நெஞ்சுக் கூட்டு எலும்புகளை வரிசையாக எண்ணலாம்போல் இருந்தது. இவனுக்குப் பயமாக இருந்தது. ஊரில் எல்லோருமே நன்றாக இருக்க தனக்கு மட்டும் எப்படி இந்த வியாதி தேடி வந்து ஒட்டிக்கொண்டது? அப்படி என்ன பெரிய பாவத்தைச் செய்துவிட்டேன்? அடுத்தவன் நாசமாகட்டும் என்று சதிவேலை செய் தேனா… இல்லை, திருட்டு வேலை செய் தேனா… இல்லை, இளம் பெண்ணைஏமாற்றி னேனா? ஆயிரத்தெட்டு யோசனைகள் சுந்தரேசனை அலைக்கழித்துக்கொண்டே இருந்தன.

உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர், ”வெட் டியா ஏன் போய் காசு அத்தனை குடுத்து தனி ரூம் எடுத்து மருந்து மாத்திரை சாப்பி டறே சுந்தரேசா? எம்.எல்.ஏ-கிட்ட லெட்டர் பேடுல கையெழுத்து வாங்கித் தர்றேன்… சாப்பாட்டுல இருந்து எதும் காசே இல்ல” என்று நேற்றுகூட இவனிடம் சொல்லி யிருந்தார். அவர் 50 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்காக ஒரு மாதம் இரவு பகல் பாராமல் அவர்கூடவே இருந்துஉதவி இருந்தான்.

”ட்ரீட்மென்ட் ஏனோதானோன்னுதான் இருக்கும்ங்க… மாசக்கணக்குல அங்கேயே படுத்திருக்கிறவங்களுக்குத்தான் அது ஆகு முங்க. நான் ஒரு வாரம் மட்டும் இருந்துட்டு வரப்போறனுங்க” என்று சொல்லி அவரிடம் இருந்து நழுவியிருந்தான்.

தனி அறையில் இவன் போன முறை படுத்திருந்தபோது நாள் ஒன்றுக்கு 70 ரூபாய் வாங்கினார்கள். இதுபோக டீலக்ஸ் ரூம் என்று ஒன்று இருந்தது. அது பணக்கார வியாதியஸ்தர்கள் தங்கி வைத்தியம் பார்த்துக்கொள்ள. ஆனால், அந்த அறை களில் ஆட்களை இவன் பார்த்தது இல்லை. அவர்களுக்குச் காசம் வருவதில்லை போலும். லுக்கோமியாடோமியா என்று வேடிக்கையான வியாதிகள்தான் அவர் களுக்கு ஸ்பெஷலாக வருமோ என்று நினைத்துக்கொண்டான்.

முன்பு இங்கு படுத்து எழுந்து போன பிறகும் எப்படியும் பிழைத்துக்கொள்வோம் என்றுதான் வருடம் முழுவதும் 15 நாட் களுக்கு ஒருமுறை வந்து உடலைப் பரி சோதித்து மருந்து புட்டிகளையும் மருந்து வில்லைகளையும் வாங்கிப் போய் சாப் பிட்டுக்கொண்டு இருந்தான். ஆறு மாதத்தில் காசம் போய்விடும் என்று போட்டி ருந்தார்களே ஒழிய இவனுக்கு அப்படித் தீரவில்லை. இதற்காக புகைபிடிக்கும் பழக்கத்தைக்கூடப் பல்லைக் கடித்துக் கொண்டு விட்டிருந்தான். ”ஒரு பீடி குடிச் சின்னா, ஒரு மாசம் நீ சாப்பிட்ட மருந்து எல்லாம் வேஸ்ட்!” என்று டாக்டர் இவனை எச்சரித்து இருந்தார். முன்பு இவன் பார்த்த டாக்டர் கோவையில் இருந்து வந்துகொண்டு இருந்தார். இப் போதுஅவர் பெயர்ப் பலகையே இல்லை.

”நல்லா இருந்தியே சாமி… அந்த முருகம் பாளையத்தான் காது குத்து விசேஷத்துக்குப் போய் கெடுத்துப்போட்டியே கதையை. ரெண்டு வருஷமா தண்ணி போடாம சுத்தமா இருந்தியே சாமி… ரெண்டு டம்ளர் குடிச்சிருப்பியா? ஆசைக்குக் குடிச்சுட்டு வந்து எட்டு நாளா இப்படி இருமுறியே சாமி” என்று அம்மா அழத் துவங்கவும், இவனுக்குத் தன் மீதே வெறுப் பாக இருந்தது. அம்மா சொன்னது மாதிரி அது நப்பாசையில் நடந்துவிட்ட சம்பவம் தான்.

”என்ன மாப்ள… கெடாக்கறிய வாயைத் துளி நனைச்சுக்காம எப்படி மாப்ள சாப்பிடறது?” என்று தூண்டிவிட்டுப் பேச சில மாமாக்கள், கருப்பராயன் கோவிலில் இருக்கத்தானே செய்தார்கள்.

முன்பு இவன் நெஞ்சுக்கூட்டு எக்ஸ்- ரேவை க்ளிப் மாட்டி டியூப்லைட் போட் டுக் காட்டிய கோவை டாக்டர், ”எலும்புல மூணு ஓட்டை தெரியுது பார்… இங் கொண்ணு இருக்குது பார்… இதான் காச நோய்க் கிருமிகள் உன் எலும்பை அரிச்ச அடையாளம். நீ நடந்தா மூச்சு வாங்குதுங் கிறே… வாங்கத்தான் செய்யும். கனமான ஒரு பொருளைத் தூக்க முடியாது. மாடிப் படி ஏற முடியாது. டி.வி.எஸ்-50யை ஸ்டார்ட் பண்ணினா மூச்சு வாங்கும். காலம் முடியும் முட்டும் இனி பத்திரமாத் தான் இருந்துக்கணும் சுந்தரேசன். யோகா சனம் கத்துக்க. தினமும் மூச்சுப் பயிற்சி செய். ஓரளவுக்குச் சிரமம் தெரியாது!” என்றார். அவர் சொன்னது மாதிரியோகா சனப் புத்தகங்கள் வாங்கி தினமும் காலை யில் சம்மணம் போட்டுப் பயிற்சி செய் தான். 15 நாட்கள்தான்… சலிப்பாக விட்டு விட்டான்.

கடைசியாக இவன் எடுத்த கோழை டெஸ்ட் ரிப்போர்ட்டில் கிருமிகள் இல்லை என்றானதும், நாட்டு வைத்தியப் புத்தகங் களை நாடினான். இவனுக்குத் தெரிந்த இலை, வேர்களைப் பிடுங்கி வந்து அரைத் துக் குடித்தான். வீட்டின் முன் தூதுவளை, துளசி, கண்டங்கத்திரி என்று தினமும் தண்ணீர் ஊற்றிப் பாதுகாத்தான். ஒரு கட்டத்தில் இவனது நாட்டு வைத்தியம் இவனுக்கு ஓ.கே. சொல்லிவிட்டது. உடல் எடையை 55 கிலோ ஆக்கிக்கொண்டான். வயது 30 என்பதால் அம்மா கல்யாணப் பேச்சை ஆரம்பித்து இவன் ஜாதகத்தை எடுத்துக்கொண்டது.

காங்கேயத்தில் தூரத்துச் சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்துவர சுந்தரேசனும் இவன் மாமாவும் இரண்டு பங்காளிகளும் போனார்கள். பெண்ணுக்கு அம்மா இல்லை. குடிகார அப்பா மட்டும் இருந்தார். இவர்கள் சென்றபோது காலை மணி 9. இவர்கள் வரும் தகவலை முன் தினமே தெரிவித்திருந்தபடியால், பக்கத்து வீட்டு அம்மாக்கள் பெண்ணை அழகுபடுத்தியிருந் தார்கள். காங்கேயம் என்பதால், அவர்கள் கேஸ் அடுப்பு பற்றவைக்கவில்லை. டீக் கடையில் வடை, பஜ்ஜி, இனிப்புக்காக லட்டு ஒரு பாக்கெட் வாங்கி வந்து இவர் கள் சாப்பிடத் தட்டில்வைத்தார்கள். இவன் மாமாதான், ”பொண்ணு என்ன வேலைக்குப் போகுது? சொந்தபந்தம் எல் லாம் எந்த எந்த ஊர்ல இருக்குது?” என்று விசாரணையில் இறங்கியிருந்தார். பங்காளி கள் பஜ்ஜியையும் வடையையும் காலி செய்வதில் குறியாக இருந்தார்கள்.

பெண் பிள்ளைக்கு வயது 25 ஆகிறதாம். செவ்வாய் தோஷம் என்பதால் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டு இருப்பதாகப் பிள்ளையின் தந்தை பேசினார். நேற்று நல்ல சரக்கு போலிருந்தது. கண்கள் சிவந்து இருந்தன. ”பத்து பவுன் நகை இருக்குது. இந்த வீடு இருக்குது. ஒரே பொண்ணு. கட்டிக் குடுத்துட்டா நிம்மதி. இவ அம்மா டி.பி-யால செத்துப்போய் எட்டு வருசம் ஆச்சு” என்றார்.

சுந்தரேசனுக்கு அவர் டி.பி. என்ற வார்த் தையை உச்சரித்ததுமே பயம் பிடித்துக் கொண்டது. ”ஏம்மா சும்மா நிற்கிறே?ஏதாச் சும் பேசும்மா” என்றார் இவன் மாமா.

”நான் என்னங்க தனியா சொல்றது… என்னைக் கட்டிக்கிறவரு என்னை அன்பா வெச்சுக்கலைன்னாலும் பரவாயில்லைங்க. குடிகாரரா இல்லாம இருந்தாப் போதும். என்னோட அப்பாவை காங்கேயத்துல எல்லா வீதியில இருந்தும் இழுத்துட்டு வந்திருக்கேன். ஒவ்வொரு விசுக்கா எச்சா போச்சுன்னா, ‘யாரு நீ? என்ன வேணும் உனக்கு?’னு என்னையவே கேட்பாருங்க. உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன… என் னைப் பார்க்க வந்த அம்பதாவது மாப் பிள்ளை நீங்க. ஊருக்குப் போய்ச் சொல் றோம்னு போவாங்க. ஒரு பதிலும் இருக் காது. நீங்களாச்சும் பிடிக்குது, பிடிக்கலைனு சொல்லிட்டாவது போங்க!” என்று பெண் பிள்ளை பேசி முடிக்க… மாமா இவன் முகத்தைப் பார்த்தார்.

”டோக்கன் நம்பர் 27” என்று குரல் கேட்கவே சுந்தரேசன் எழுந்து டாக்டர் அறைக்குள் நுழைந்தான். டாக்டர் மேஜை யின் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந் தான். டாக்டர் ஆங்கிலத்தில் அலைபேசியில் யாரிடமோ குசுகுசுப்பாகப் பேசியபடி இருந்தார். சுந்தரேசன் காலையில் எடுத்த சளி டெஸ்ட், ரத்த டெஸ்ட் காகிதங்களையும் எக்ஸ்-ரே படத்தையும் கையில் எடுத்துப் பவ்யமாக டாக்டரின் மேஜையில் வைத் தான். டாக்டர் இவனிடம் எதுவும் பேசா மல் அவற்றைக் கையில் எடுத்துப் பார்த் தார். கடைசியாக இவனிடம்,

”என்ன பண்ணுது?” என்றார்.

”பத்து நாளைக்கு முன்னே கூல்டிரிங்ஸ் குடிச்சுட்டேன் சார்… சளி பிடிச்சுப் பயங் கர இருமல். கால் வலி எந்த நேரமும் பயங் கரமா இருக்குங்க. மூணு வருஷம் முன்னாடி இங்க வந்துதான் மருந்து மாத்திரை வாங்கிச் சாப்பிட்டேன் சார்!” ‘நீங்க இல்ல, ஆனா உங்க கடையிலதான் சார் ஒரு வருஷமா இட்லி சாப்பிட்டேன்!’ என்பது மாதிரி சொன்னான்.

”பயப்படும்படியான சளி இல்லை. உடம் புல சத்துமானக் குறைதான். நோய் எதிர்ப் புச் சக்தி உன் உடம்புல சுத்தமா இல்ல. சளிக்கு மாத்திரை எழுதித் தர்றேன்… டானிக் எழுதுறேன்… வலிக்கு தனியா எழுதித் தர்றேன்… பதினஞ்சு நாளைக்கு!”

”சார், இங்க ஒரு வாரம் தங்கி வைத்தியம் பார்த்துக்கறேனுங்க!”

”நீ பயப்படும்படியா ஒண்ணும் இல்ல… வீட்ல இருந்து சாப்ட்டினா போதும்.”

”இந்தக் கால் வலி என்னை ரொம்பப் பயமுறுத்துதுங்க சார்… முன்ன ரொம்ப சிரமப்பட்டு இருக்கேன். இங்க இருந்துட்டா நீங்க ரவுண்ட்ஸ் வர்றப்ப உங்ககிட்ட சொல்லலாம்.”

”சரி… சரி…” என்று தங்குவதற்கு சீட் எழுதிக் கொடுத்தார். இவன் வணக்கம் போட்டுவிட்டு எழுந்து வெளியே வந்தான். மரத்தடி நிழலில் அமர்ந்தபடி, மண்ணில் விரலால் கோடு கிழித்துக்கொண்டு இருந் தது அம்மா. இவனைப் பார்த்ததும், ”டாக் டர் என்னப்பா சொன்னாரு?” என்று எழுந்துகொண்டது.

”ஒண்ணும் பயப்பட வேண்டியது இல் லைனு சொல்லிட்டாரும்மா?” என்றான்.

”அப்புறம் ஏண்டா ரத்தம் வந்துச்சு?” என்றது.

”அது தொண்டையில புண்ணாம். வா, ஆபீஸ் போய் ரூமுக்கு, சாப்பாட்டுக்குப் பணம் கட்டிட்டுப் போலாம்?” என்று நடந்தான்.

சென்ற முறை தங்கிய அதே 43-ம் எண் அறையே இந்த முறையும் கிடைத்தது. மருந்துக் கடையில் டாக்டர் சீட்டைக் கொடுத்து மருந்துகளை வாங்கிக்கொண்டு அம்மாவோடு தார் சாலையில் நடந்தான். அம்மா இவனுக்காகச் சாப்பாட்டுத் தட் டும் குடம், டம்ளர் என்று சின்ன சாக்குப் பையில் போட்டுத் தூக்கிக்கொண்டு வந்தி ருந்தது. மரங்கள் சூழ்ந்த வனப் பிரதேசத் துக்குள் செல்வதுபோலத்தான் இருந்தது. வெயில் காலம் என்றாலும் எல்லா அறை களிலுமே ஆட்கள் தங்கியிருந்தார்கள். ஒவ் வொரு அறையைக் கடக்கும்போது எல் லாம் இருமல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

தாதிகள் தங்கியிருந்த அறையில், புது அட்மிஷன் என்று சீட்டு நீட்டி ஊசி போட்டுக்கொண்டான். மருத்துவமனை சேவகன் புது படுக்கை உறை, தலையணை உறை, சாவியை எடுத்துக்கொண்டு இவர் களைக் கூட்டிப்போனான். சேவகனுக்குக் கையில் 100 ரூபாய் கொடுத்து தாட்டி விட்டுப் படுக்கையில் நீட்டி விழுந்தபோது தான் அம்மா இவனிடம் அந்த விசயத்தைச் சொன்னது, ”காங்கேயத்துப் பொண்ணு போனு பண்ணிச்சுடா. ஆஸ்பத்திரியில இருக்கோம்னு சொல்லிட்டேன்… புறப் பட்டு வர்றேன்னு சொல்லிடுச்சு!” என்று.

”ஆஸ்பத்திரியில இருக்கோம்னு ஏம்மா சொன்னே? ஏற்கெனவே அதோட அம்மா இந்த நோவுலதான் செத்துடுச்சு. எனக்கும் அந்த மாதிரினு தெரிஞ்சுட்டா, அந்தப் பொண்ணு என்னைக் கல்யாணம் பண்ணிக்கு மாம்மா”- இவன் கேட்டபோதே அம்மா அழத் துவங்கிவிட்டது. ”திடீர்னு வாயில வந்துட்டுதுடா சாமி. உன்னை எங்கேனு கேட் டதும் டாக்டரைப் பார்க்கப் போயிருக்கான்னு சொல்லிட்டேன் சாமி…”

”வுடும்மா… தலையில எழுதினப்படிதான் நடக்கும். அழுவாதே… இங்கேயும் வந்து கண் ணைக் கசக்கிட்டேதான் இருப்பே. ஆடுகள் எல்லாம் பட்டியிலயே கட்டிப்போட்டுக் கெடக்கும். வீட்டு போனுக்கு ராத்திரி பண் றேன்… நீ கிளம்பும்மா. அந்தப் பொண்ணு வர்றப்ப நீ இங்க இருக்காதே. உன் லொட லொட வாய் நீ சும்மா இருந்தாலும் பூராம் ஒப்பிச்சுடும். உன்கிட்ட எல்லா விசயத்தையும் அந்தப் பொண்ணு கறந்துட்டு காங்கேயம் போய் காறித் துப்பும்.”

இவன் சுவர் பார்த்துப் படுத்துக்கொண்டதும் அம்மா குடத்தை எடுத்துப்போய் பைப்பில் தண்ணீர் பிடித்துக்கொண்டுவந்து உள் அறை யில் வைத்துவிட்டு, ”போனு பண்ணு சாமி… நான் கிளம்பறேன்” என்று கிளம்பிவிட்டது.

2 மணிக்கும் மேல் அறை வாசலில் சைக்கிள் பெல் சத்தம் கேட்க… எட்டிப் பார்த்தான். சாப்பாட்டுக்காரர். இவன் வட்டிலையும் கிண்ணத்தையும் எடுத்துக்கொண்டு வெளித் திண்ணைக்கு வந்தான். வட்டிலில் சாப்பாடு, காய்கறி போட்டபடி ”இன்னிக்குத்தான் வந் தீங்களா?” என்றார் அவர். ”அடையாளம் தெரியலீங்களா… மூணு வருஷம் முன்னாடி வந்திருந்தேனே” என்று இவன் சொன்னதும் உற்றுப் பார்த்தவர், ”அட, நீங்களா? என்னமோ தெரியல இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தவங்க திரும்பத் திரும்ப வந்துட்டேதான் இருக்காங்க. மோரைக் கிண்ணத்துல ஊத்துறேன்…” என்ற வர் ஊற்றிவிட்டு, மறுபடியும் பெல் அடித்தபடி அடுத்த அறைக்கு சைக்கிள் ஏறிச் சென்றார். வட்டிலையும் கிண்ணத்தையும் எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தான். மோர் மட் டும் ஊற்றிக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, மீதச் சாப்பாட்டைப் புற்கள் மீது கொட்டி னான். தூரத்து அறையின் பின்னால் சண்டை யிட்டுக்கொண்டு இருந்த நாய்கள் புயல் வேகத்தில் ஓடி வந்தன.

அறை எண்ணை விசாரித்துத் தேடியபடி வந்து அறைக்குள் விஜயா நுழைந்தபோது மணி 2. சுந்தரேசன் தூங்கிக்கொண்டு இருந்தான். படுக்கையில் அவன் அருகில் அமர்ந்தவள் அவன் தோளைத் தட்டி, ”என்னங்க…” என்று எழுப்பினாள்.

சுந்தரேசன் திரும்பி விழித்துப் பார்த்து, விஜயா என்றதும் எழ முயற்சித்தான். ஆனால், விஜயா அவன் தோளை அழுத்தி அப்படியே படுத்திருக்கும்படி செய்தாள். ”காலையிலயே ஒரு போன் பண்ணி என்னிடம் சொல்வதற்கு என்ன?” என்று கோபித்துக்கொண்டாள். இவன் பழைய தன் வியாதிக் கதையை அவளிடம் ஒப்பித் தான். எல்லாவற்றையும் கேட்டபடி இவனின் எக்ஸ்-ரேவைக் கதவை நோக்கிப் பிடித்து டாக்டர் மாதிரியே பார்த்தாள். பொம்மை பார்க்கிறாளா? என்றுநினைத்துக் கொண்டான். இவன் சளி ரிப்போர்ட் டையும் பார்த்தவள் மாத்திரைகளையும் என்ன என்ன என்று பார்த்தாள்.

”எத்தனை நாள் தங்கணும்?” என்றாள்.

சுந்தரேசன் ஒரு வாரம் என்றான். ”ஒரு வாரமும் உங்ககூடத்தான் இருப்பேன்!” என்று விஜயா சொன்னதும் மிரண்டான். காலை நேரத்தில் இருமும் இருமலைப் பார்த்தாள் என்றால், சளியில் ரத்தம் கலந்திருப்பதைப் பார்த்தாள் என்றால்? ”வேண்டாம் விஜயா நான் தனியா இருந்துடுவேன்” என்றான்.

”உங்களை இப்படிப் படுக்கப் போட்டுட்டு வீட்ல என்னால நிம்மதியா இருக்க முடியாது!” என்றவள், அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

”இப்படி எல்லாம் முத்தம் குடுக்கக் கூடாது விஜி. உனக்கும் இந்தச் சளிஒட்டிக் கிச்சுன்னா, ரொம்பத் துன்பம். இந்த ஆஸ்பத்திரியே உனக்கு வேண்டாம் விஜி… நீ போயிடு” என்றான்.

விஜயா எழுந்து போய் நாற்காலியில் அமர்ந்து முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டாள்.

தாதி ரேவதி படியேறி இவன் அறைக்குள் வரவும் எழுந்து படுக்கையில் கால்களைத் தொங்கவைத்து அமர்ந்தான் சுந்தரேசன். அலமாரியை நீக்கி ஊசியையும் மருந்தையும் விஜயா எடுத்து டேபிளில் வைத்தாள். மருந்துப் புட்டியின் முனையை வேஸ்ட் கூடையில் பட்டெனத் தட்டிவிட்டு சிரிஞ்சை உள்விட்டு மருந்தை உறிஞ்சிக் கொண்டதும் சுந்தரேசன் புட்டத்தைக் காட்டினான்.

”இந்தப் பொண்ணு யாரு சுந்தரேசன்?” என்றாள் ரேவதி.

”நான் கட்டிக்கப்போற பொண்ணு மேடம். அடுத்த மாசம் கல்யாணம்… உங்களைத்தான் மூணு வருஷம் முன்ன வந்தப்ப ரொம்ப விரும்பினேன் மேடம்… மிஸ் ஆயிடிச்சு…” என்றான்.

”அடடே, சொல்லியிருந்தீங்கன்னா… உங்களையே நான் மேரேஜ் பண்ணி யிருப்பேனே!”- உபயோகித்த ஊசியை வேஸ்ட் டப்பாவில் போட்டுவிட்டுப் படி இறங்கிப்போனார் தாதி. சுந்தரேசன் விஜயாவைப் பார்த்தான்.

”இவளையே கட்டியிருக்க வேண்டியது தானே… காங்கேயம் ஏன் வரணும்?” உர்ர் என்று முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள்.

”தமாஸ்கூடப் பண்ணக் கூடாதுங்கிறியா? ஆமா… எல்லாம் தெரிஞ்சமாதிரி எக்ஸ்-ரே பாக்குறே… சளி ரிசல்ட் பாக்குறே… நர்ஸுக்கு மருந்தும் ஊசியும் குடுக்குறே?”

”நானும் நாலு வருசத்துக்கு முன்னாடி பத்து நாள் படுத்து எந்திரிச்சுப் போனவதான்!” என்றாள் விஜயா.

- ஜூலை 2012

Post Comment