செவ்வாய், ஜூன் 11, 2013

சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்- ஒரு பார்வை

சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - விமர்சனம்
காதலின் அடுத்த படிநிலை காமமா? இல்லை காமமும் காதலும் இரண்டறக் கலந்ததா என்கிற கேள்வி இன்றைய சூழலிலும் பலருக்கும் உண்டு. காதலும் காமமும் உலகில் உயிர் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் பொதுவானது. இந்தக் காமத்தில் கலாச்சாரம் என்னும் வரையறைய வகுத்துக்கொண்டவன் மனிதன். உற்பத்திச் சமூகமாக மனித இனம் உருவான பின்புதான் நாகரிகம், கலாச்சாரம் தோன்றியிருக்கிறது. சமூகம் உருவாவதற்கு முன்பு உலகம் இரண்டு காலகட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று அநாகரிக காலகட்டம் இன்னொன்று நாகரிக காலகட்டம். அநாகரிக காலகட்டத்தில் உடலுறவு கொள்வதற்கு ஆண் பெண் என்னும் வரையறை மட்டுமே இருந்திருக்கிறது. மற்றபடி உறவு வரையறைகள் அந்தக் காலங்களில் வகுக்கப்பட்டிருக்கவில்லை. இப்படியாக உற்பத்திச் சமூகமாக உருவான போதுதான் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கலாச்சார நெறிமுறைக்குள் காமம் கட்டுப்படுத்தப்பட்டது. இப்படியாக கலாச்சாரச் சூழலில் கட்டுப்படுத்தப்பட்டு ஒரு வரையறைக்குள் இருந்த பாலியல் என்பது இன்றைய கலாச்சார சீர்கெட்டில் எப்படியெல்லாம் இருக்கிறது என்பதை நமக்குப் படம் பிடித்துக் காண்பித்திருக்கிறது இந்த நாவல். கிராமத்தின் அறியப்படாத இன்னொரு முகத்தை அழுத்தமாக பதிந்ததில் இந்நாவல் பாராட்டுக்குரியது. இருந்தும் இந்நாவல் பல விமர்சனங்களுக்கும் உரியதாக ஆகியிருப்பதற்கு காரணம் இதில் கையாண்டிருக்கும் மிகத் தீவிர பாலியல்தான். பாலியல் என்பது எந்த இலக்கியத்தில்தான் பேசப்படவில்லை. ராமாயணம், சரசுவதி சபதம் ஆகியவை எதைப் பேசுகின்றன? இலை மறைவு காய் மறைவாய் சொல்லப்பட்டு வந்த பாலியலை வெட்ட வெளிச்சமாய் முதலில் பேசியது ஜி.நாகராஜந்தான். குறத்தி முடுக்கு, நாளை மற்றுமொரு நாளே என பாலியல் என்பதன் கூறுகளையும் பாலியல் தொழிலாளர்களைப் பற்றியும் முதலில் பதிவில் வைத்தவர் அவர். அடுத்து தஞ்சைப் பிரகாஷின் மீனின் சிறகுகள் பாலியலை ஓரளவு காட்டமாகவே கையாண்டது. இவையெல்லவற்றையும் விட இந்நாவல் பாலியலை அப்பட்டமாய் பதிவு செய்திருக்கிறது கதையை தூக்கி நிறுத்தும் பாத்திரப் படைப்புகள் மட்டும் இதில் இல்லையெனில் இது சரோஜா தேவி புத்தகமாகப் பார்க்கப்பட்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நாவலை படிக்கையில் மனுஷ்ய புத்திரனின் விற்பனைப் பசிக்கு வாய்ப்பாடியில் அமர்ந்து கொண்டு வா.மு.கோமு தீனி போட்டிருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
முதலில் சாந்தாமணி....
சம காலத்தில் காதல் என்பதைப் பற்றின புரிந்துணர்தலே பலரிடம் காணப்படுவதில்லை. ஆறாம் வகுப்பு மாணவி எட்டாம் வகுப்பு மாணவனோடு ஓடிப்போக முயற்சித்த போது மாட்டிக் கொண்ட கதைகளை நிவிஸ் பேப்பரில் படித்திருக்கிறோமே. சமீபத்தில் வந்த களவாணி முதற்கொண்டு பள்ளிக்குச் செல்லும் பெண்ணை காதலிப்பது போன்ற கதைகள் சினிமாக்களில் பேசப்பட்டிருக்கிறது. பள்ளிக்காதல்கள் பெரும்பான்மையான விழுக்காடு தோல்வியில்தான் சென்று முடியும் என்பது மனோ ரீதியான உண்மை. அதைச் சொல்லும் நோக்கோடு எழுதினாரோ தெரியவில்லை சாந்தாமணி இதைத்தான் பேசுகிறது. வேலம்பாளையத்தில் சாந்தாமணியிடமிருந்து தொடங்குகிறது கதை. பழனிச்சாமி என்ற மாணவன் தனது பள்ளியில் மாணவத் தலைவராக போட்டியிடுகிறான் என்பதையும் அவன் தன்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது போலவும் அத்தியாயம் தொடங்குகிறது. பள்ளி மாணவர் தலைவன் தேர்தல் குறித்து அழகாக விவரிக்கப்படுகிறது. பழனிச்சாமி தேர்தலில் தோற்கிறான்( நல்ல வேலை ஹீரோயிசம் காட்டப்படவில்லை)இப்படியான காட்சிகள் ஓடிக்கொண்டிருக்க வகுப்பறையை விட்டு பழனிச்சாமியும் சக்தியும் சென்று பள்ளி எதிர்க்கவே தம் அடித்து நிற்பது போல் காட்டும் காட்சி இலேசான அதிர்ச்சியைத் தருகிறது. ஆறாம் வகுப்பு மாணவனது பாக்கெட்டில் இன்று ஹான்ஸ் பாக்கெட்டைப் பார்ப்பது சாதாரணமானது என்றாலும் பள்ளி எதிர்க்கவே ஒரு மாணவன் புகை ஊதும் அளவான தைரியம் எப்படி என்பதில் எனக்கு சற்றே ஒரு குழப்பம். பழனிச்சாமி சாந்தாமணியை உசுருக்கு உசிராய் காதலிக்கிறான் எந்நேரமும் அவள் நினைப்பிலேயே ஆகாசத்தில் பறக்கிறான். ஆனால் சாந்தாமணிக்கோ பழனிச்சாமியைக் காதலிப்பதற்காகவா அம்மா நம்மைப் பெற்றெடுத்து ஊத்துக்குளிப் பள்ளிக்கு போய் வா மகளே என்று அனுப்பியது என காதலைப் புறந்தள்ளுகிறாள். காதல் புறக்கணிக்கப்பட புறக்கணிக்கப்பட வளரல்லவா செய்கிறது. பழனிச்சாமியின் சாந்தாமணி குறித்த கவிதைகளை படிக்கும்போது சாந்தாமணிக்குள்ளும் காதல் மலர்கிறது. இங்குதான் கவுண்ட் டவுன் ஸ்டார்ட். சமகாலப் பெண்களின் மன நிலை எப்படிப்பட்டது என்பதை தெள்ளத் தெளிவாக சாந்தாமணி பாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறார். தனக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பழனிச்சாமியின் கற்பனை ஓவியத்தைக் கந்தலாக்கும் ஒரு காட்சி போதுமே. பள்ளிப்பருவத்தில் ஹார்மோன் நச்சரிப்பால் எழும் ஒரு வித ஈர்ப்பு  காதல் என்று தவறாக உணர்ந்து கொள்ளப்படுகிறது. சாந்தாமணி பன்னிரெண்டாம் வகுப்புப் பெண்னாக இருந்தாலும் அவளிடம் குழந்தைத் தனங்களே நிரம்பியிருக்கின்றன. தன் காதலன் தான் சொன்னதுக்கெல்லாம் தலையாட்ட வேண்டும் என்பது எல்லாக் காதலிகளின் கனவாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சக்தி போன்ற காதலன்களால் அவர்களின் கனவு சுக்கு நூறாக்கப்படுகிறது. சக்தியை தன் உறவுக்காரப் பெண்ணான பூங்கொடி விரும்புகிறாள். சக்திக்குள்ளும் எழுந்து நிற்கும் கிளர்ச்சி பூங்கொடியுடன் எப்படியேனும் உறவு கொண்டாக வேண்டும் என்கிற முயற்சி ஆகியவை பாலியல் வசனங்களோடு பதியப்படுகிறது. சினிமா தியேட்டரில் முலை கசக்கும் சக்தியின் கையைத் தட்டி விட்டதற்காக பூங்கொடியின் மீது கோபம் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது? பூங்கொடி எப்படிப்பட்டவள் என்பது பின்னால் விவரிக்கப்பட்டாலும் சக்தியின் செயல்பாடும் வரம்பு மீறல்தானே. தன்னோடு பேச மறுக்கும் சக்தி முன் கையை காம்பஸால் கிழித்துக் கொண்டு தன்னோடு அவனைப் பேச வைத்தே ஆக வேண்டும் என்கிற பூங்கொடியின் வெறி பெரும்பாலான பெண்களின் இயல்பில் ஊறிப்போனதை இங்கு எவரும் மறுப்பதற்கில்லை. சொன்னால் பெண்ணியவாதிகள் கொந்தளிப்பார்கள். “உன்கிட்டே ஒவ்வொரு நிமிசமும் பயந்துக்கிட்டேதான் பேச வேண்டியிருக்கு... திடீர்னு கத்தி எடுத்துட்டு கழுத்துல வெச்சுட்டு செத்துவன்னு கூட நீ மிரட்டுவேஎன்று சொல்லி காதலை உதறிப்போகும் இடம் சிறப்பு. ஊர்த்திருவிழாவுக்கு வர முடியாததற்கு உடம்பு சரியில்லைங்கிறது காரணமா என்று தேவையில்லாமல் கோபம் கொள்ளும் சாந்தாமணியை பழனிச்சாமி தூக்கியெறியும் தருணங்களும் அப்படித்தான். புரிந்துணர்வு இல்லாத காதலைப் பற்றியும் ஆண் பெண் ஈகோ குறித்தும் பேசிய படங்களைக் காட்டிலும் கொங்கு மண் வாசத்தோடும் அதன் இயல்போடும் கதையை கட்டமைத்த விதத்தில் இது இந்நாவலைப் பாராட்டலாம். அதே சமயம் பள்ளிப் பருவக்காலங்களிலிருந்தே பழனிச்சாமியின் பாலியல் விளையாட்டுக்களைக் காட்டியாக வேண்டும் என்கிற அவசியம் என்ன இருக்கிறது? ஜான்சி கதாப்பாத்திரத்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டோமேயானால் தன் வீடேறி வரும் பழனிச்சாமியை நினைத்து பூரிக்கும் தருணம் சாதியம் குறித்து சற்றே அலசப்படுகிறது. காதலை அறவே வெறுக்கும் ஜான்சி பழனிச்சாமியின் பாலியல் குறும்புகளுக்கு ஒத்துழைக்கிறாள் என்றால் அது அவளின் மீதான பிம்பத்தில் கல் கொண்டு எறிவது போலத்தான் ஆகி விடும். இதை விடக் கொடுமை என்னவென்றால் தன் அக்காவின் காதலனை மச்சான் என்று அழைக்கும் சாந்தாமணி தங்கை சுகந்தியின் கதாப்பாத்திரம்தான். தன்னைத் தூக்கிக் கொள்ளச் சொல்லும்போது தன் முலைகளையும் தொட்டு வருடும்படியான காட்சிகளை வைத்து நாம் ஒட்டுமொத்த மாணவிகளையும் மேம்போக்கான கருத்தில் கொள்ள முடியாதே. புரிந்துணர்வற்ற பள்ளிக்காதல்கள் தோற்கும் என்ற உண்மையை பதிந்தது என்றாலும் சாந்தாமணியில் வரும் ஜான்சி, சுகந்தி கதாப்பாத்திரங்கள் மனுஷ்யபுத்திரனின் விற்பனைக்கு தீனி போட்டதாய் அமைந்திருக்கிறது. பழனிச்சாமியின் கடிதங்கள் அவனது காதலின் வலியை அழுத்தமாக உணர்த்திற்று. பழனிச்சாமி, சாந்தாமணி, சுகந்தி இவர்கள் மூவர் கடிதம் எழுதியிருக்கலாம் நாவலோடு சேர்த்து நாவல் நடையிலேயே ஆசிரியர் கடிதத்தை எழுதியிருப்பதைத் தவிர்த்திருந்தால் உண்மைத் தன்மையோடு இருந்திருக்கும்.
அடுத்து இன்ன பிற காதல் கதைகள்...
இது பழனிச்சாமியின் திருவிளையாடல்கள். இதை ஒவ்வொரு அத்தியாயமாக விளக்கித்தான் தீர வேண்டும். பெல்லா கதாப்பாத்திரத்திடம் நடக்கும் போன் உரையாடல்தான் முதல் அத்தியாயம். திருமணம் முடிந்து தன் கணவனோடு எப்படியெல்லாம் உறவு கொண்டேன் என்று பெல்லா பழனிச்சாமிக்கு விவரிக்கிறாள். கணவன் மனைவி அந்தரங்கத்தை மனைவி இன்னொரு ஆணுடன் பகிர்ந்து கொள்வது என்பது எவ்வளவு பெரிய அறுவறுப்பு. அடுத்த அத்தியாயம் சுமதி. ஒரு பாலியல் தொழிலாளியிடம் பழனிச்சாமி உறவு கொண்டதை அஞ்சரைக்குள்ள வண்டி போல் விளக்கியிருக்கிறது இதன் அவசியம்தான் என்ன? எத்தனையோ பேருடன் உறவு கொள்ளும் அவள் பழனிச்சாமியுடன் உறவு கொள்வதை மட்டும் ஏதோ விசேஷம் போல் அதற்கு ஒரு அத்தியாயத்தை தாரை  வார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ஷாலினி அத்தியாயத்தில் மிகவும் கனமான சம்பவத்தை போகிற போக்கில் கடந்து சென்று விட்டார். முலைகளையும் தொடைகளையும் வெறிகொண்டு கடித்துத் துப்பிய ஒரு காமப்பிசாசிடமிருந்து தப்பி வந்த அவளது வலிகளை இன்னும் அழுத்தமாக்கியிருக்கலாம் அவளது வலிகளுக்கு பழனிச்சாமியின் காமம் மருந்தாக அமைந்திருக்கிறது. கீதாவிற்கு பழனிச்சாமி எழுதும் கடிதம் உண்மையிலுமே பாதிக்கப்பட்டவனின் வலிகளை கண் முன் நிறுத்துகிறது. கீதா தன்னை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை தன்னை வேண்டுமென்றே புறக்கணிக்கிறாள் என்பது தெரிந்தும் கூட பழனிச்சாமி கீதா பின்னாலே லோ லோ வென சுத்துவது டூ டூ மச். புது கிராக்கியிடம் உறவு கொண்டு விடி வாங்கிக்கொள்ளும் சுந்தரேசன் கதாப்பாத்திரத்திற்கான அத்தியாயத்தில் திருநங்கைகளின் பாலியல் வாழ்க்கை மெல்ல கடந்து செல்கிறது. விடி வாங்கிக் கொண்டு இவன் படும் அல்லல் குறித்து விளக்கப்படுகிறது. எல்லாம் சரி மருத்துவமனையில் அந்த நர்ஸ் துணியை அவிழ்த்துக்காட்டுவதெல்லாம் எந்த ஊர் நியாயமுங்க? மீனா அத்தியாயமும் மீனா பழனிச்சாமிக்கான போன் உரையாடல்தான். நீலப்படங்கள் போல் கல்லூரி மாணவிகளிடம் மாணவன் ஒருவன் செக்ஸியாகப் பேசிய பதிவுகள் நிறைய பேரின் செல்போன்களில் உலா வரத் தொடங்கின. அப்படிப்பட்ட ஒரு போன் பதிவைத்தான் இவற்றில் பயன்படுத்தியிருக்கிறார். இது படிப்பவர்களுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை ஜிவ்வென்ற பூரிப்பை ஏற்படுத்துமோ தவிர வேறெதையும் ஏற்படுத்தவில்லை. கணவனுடன் உறவே கொள்ளாமல் விதவையாகிய குணவதியின் வலியைஎனக்கு கலர் சேலை கட்டிப்பாக்கனும்னு ஆசையா இருக்கு பழனிஎன்று சொல்லும் ஒரே வார்த்தையில் பதிய வைத்தது ஒரு வித உருக்கத்தை விதைக்கிறது. இப்படியாக வாழ்வில் பல பெண்களுடன் பழனிச்சாமி நடத்திய காமக்களியாட்டத்தை சொல்லிச் செல்லும் கதைக்கு முடிவு வேண்டுமல்லவா? மூன்று பேரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணை தனக்குத் துணைவியாக்கிக் கொள்கிறான் பழனிச்சாமி. இறுதியில் மீனாவுடன் ஒரு செல்போன் உரையாடலோடு நாவல் முடிகிறது. நாந்தான் உன்னை ஏமாத்திட்டேன் நீ என்னை எடுத்துக்கோ என்று மீனா சொல்லும் தருணம். “அம்மா போனதுல சுத்தமா மனசு விட்டுட்டேண்டி. வீட்டுல திரும்பின பக்கமெல்லாம் அம்மா நின்னுட்டு இன்னும் என்னடா படுக்கை... உடம்பு சரியில்லையாடா? சாப்பிட வாடான்னு கூப்பிட்டே இருக்கிற மாதிரி இருந்துச்சு. எத்தனை தடவை இதா வந்துட்டன்மான்னு எந்திரிச்சு போய் தேடினேன் தெரியுமா?”இந்த இடம் உண்மையிலுமே தாய் இறந்த வலிகளை வாசகனுக்குக் கடத்திச் செல்கிறது.
ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள் என்று கேட்காதீர்கள் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கேளுங்கள் - ஜி.நாகராஜன். இந்நாவலில் அந்த ஏன் என்ற கேள்விக்குத்தான் பதிலைக் கண்டுணரவே முடியவில்லை. கலாச்சார சீர்கேடு என்பதை கிராமிய அளவில் பதிவு செய்திருந்தாலும் அது ஏன்? என்கிற காரணப்பொருளை விளக்காததால் இந்நாவல் முழுமையடையாததாகவே தோன்றுகிறது.
                                                     -
கி..திலீபன்


Post Comment

கருத்துகள் இல்லை: