செவ்வாய், ஜூன் 18, 2013

வருகை- டிட் பிட்ஸ்

வர் கடைசியாக வந்தே விட்டார். நகரெங்கும் இந்த ஒரு வாரமாக இதே பேச்சுதான். அவர் வருவாரா மாட்டாரா? அவர் வந்தாலோ வராவிட்டாலோ மாக்களை அமைதியாக் இருக்கும் படி அரசாங்கம் கேட்டுக்கொண்டது. கடைசியாக அவர் மாக்களின் அவாவின்படி வந்து சேர்ந்தே விட்டார். லட்சக்கணக்கான மக்கள் அவர் வருகை புரிவதை எதிர் நோக்கி நகரின் மத்தியில் கூடி, 2637 பேர் நசுங்கிச் செத்தனர். கூட்டநெரிசலில் நானும் கூவியிருப்பேன். நல்லவேளை நூல் பாய்ண்ட்டில் தப்பித்தேன். 5000 பேர் காயம்பட்டு மருத்துவமனையில் லொய்யோ லொய்யோ என்று கிடந்தார்கள்.
  வந்தவர் நமக்காகத்தானே வந்தார்..அவரை தரிசிக்க முடியாமல் என்ன வாழ்க்கை இது என்று நொந்தேன். அடுத்த நாள் நாளிதழ் ஒன்று வந்தவரின் திரூஉருவத்தை வர்ணத்தில் போட்டிருப்பதாக அறிந்து மகலட்ச்சுமி பேக்கரிக்கு ஓடினேன். பேப்பரைச் சுற்றி ஒரு கும்பல் நின்றிருந்தது. பார்த்தவர்கள் முகமெல்லாம் வெளிறிப்போயிருந்தது. தரிசனம் என்றால் சும்மாவா? நானும் கூட்டத்தில் முட்டிப் பார்த்தேன். வர்ணத்தில் முழுப்பக்கம் போட்டிருந்தார்கள். வந்தவர் அவர் அல்ல. அது! கண்ணாடிப்பெட்டிக்குள் துக்கிளிக்கூண்டு இருந்தது.

இண்டியாவில் 3 நிமிசத்துக்கு ஒரு விபத்து நடக்குதாம். ஒவ்வொரு 9 நிமிசத்துக்கு ஒருத்தன் உயிர்பலி ஆகிறானாம். ஆண்டுக்கு 65 ஆயிரம் பேர் சாலை விபத்தில் பலியாகிறார்களாம். வாகன ஓட்டிகள் சீக்கிரம் சாவ ஐடியாக்கள் ரெடி!
ஓரோன் ஒன்னு : புல் மப்புல ஓட்டுங்க..
ரெண்டோன் ரெண்டு : சாலை விதிகள் பொழைக்கிறவனுக்கு..நமக்கல்ல..
மூனோன் மூனு : வண்டில 100தான் ஸ்பீடுன்னா ஏன் அதுக்கு மேல போகாதா? முறுக்குங்கள்.
நாலோன் நாலு : லெப்டுல முந்துங்க..
அஞ்சோன் அஞ்சு : லைசென்சுக்கு காசு வெட்டி..அதுக்கு கோட்டரை கணக்கு போடுங்க!
ஆறோன் ஆறு : ஹெல்மட் வீட்டுல வாங்கி குடுத்தாலும் பாதி விலைக்கி வித்து குடிச்சிடுங்க.
ஏழோன் ஏழு : நெம்பர் பிளேட் தண்ணி போடற வண்டிக்கி எதுக்கு? அவன் வந்து புடிக்கவா?
எட்டோன் எட்டு : நாம குருடனுகளா? தண்ணி போட்டதும் பவரா தெரியுமே கண்ணு!
ஒம்பதோன் ஒம்பது : வண்டியே இல்லின்னாலும் தண்ணி போட்டவன் வண்டில பொறவுக்கு ஏறிக்கனும்..
பத்தோன் பத்து : வண்டில போயி சாவுறது ஏரோபிளேன் ஓட்டி சாவுறதுக்கு இணையானது.

நல்ல போதையில் தூங்கி விழித்ததும் தோன்றுபவைகள்....
1. உயிரோடதான் இருக்கமா?
2.எப்படி ஊடு வந்து சேர்ந்தோம்?
3.யாரையாச்சிம் அடிச்சுட்டமா? இல்ல யாராச்சும் மிதிச்சாங்ளா?
4.இன்னிக்கி மட்டும் குடிச்சுட்டு நாளையில இருந்து இந்த கெரகத்த குடிக்கப்படாது
5.போன்ல ரிங் உடக்கூட காசில்லியே..அவங்கூட 1 மணிநேரம் என்ன பேசினேன்?
6.காலு வலிக்கிதே கீழ உழுந்துட்டமா?
7.எப்ப குடிச்சாலும் இனி அளவா குடிக்கணும்..நடக்காதே.

சொலவடை அடுத்த செட்!
1.வேண்டாத பொண்டாட்டி கைபட்டா குத்தம் கால் பட்டா குத்தம்
2.நாய் வேசம் போட்டா கொரச்சுத் தான் ஆவோணும்
3.பாறையில இசி இருந்த பூனையாட்டம் முழிக்காம் பாரு
4.எல்லாருஞ் சிரிக்காங்கன்னு பூனையும் ஓடி பொடக்காலியில உக்காந்து சிரிச்சுதாம்
5.நக்குற மாட்டுக்கு தெரியுமா செக்குல ஜிலேபின்னு
6.தானத்துக்கு வந்த மாட்டை பல்லை பிடிச்சு பார்த்தானாம்
7.கேக்கறவங் கேனையின்னா கேரளாவுல எலி எலிகாப்ட்டர் ஓட்டுச்சும்பானாம்
8.கழுதைக்கி தெரியுமா மைசூர் சேண்டல் வாசனை
9.கழுதை உழவுக்கு போப்போறதுமில்ல, வன்னாம் பன்னாடி ஆவப்போறதுமில்ல
10.வித்தாரகள்ளி வெறவுக்கு போனாளாம் கத்தாழைமுள்ளு கொத்தோட ஏறுச்சாம்

சிங்கள சொலவடைகள்! படித்தது!
1.பயந்த நாவிதனை பார்த்தா ஆடு கூட தாடியக் காட்டுமாம்.
2.பழுத்த பழம் இருக்க பச்சக்காய் விழுந்தது போல.
3.பிறப்பதற்கு முன் தொப்புள் கொடியை வெட்ட முடியாதாம்.
4.புது வருசத்துக்கு சாப்பிடப் போய் வெறும் வயித்தோட வந்ததுபோல்
5.மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டியது போல
6.மறைஞ்சு மறைஞ்சு வேசம் போட்டாலும் வெளியிலதான் நடனமாடனுமாம்
7.மூக்கு இல்லீன்னா பெண்கள் எதைவேணாலும் சாப்பிடுவாங்களாம்
8.வண்டியில ஏறி உட்கார்ந்துட்டா வண்டிக்காரனும் சக்கரவர்த்திதானாம்
9.வயது போனால் பிசாசும் விரதம் அனுஷ்டிக்குமாம்
10.வீணன் மொட்டையடித்த போது கல்மழை பெய்தததாம்!

நேற்று மாலையில் நந்தாகுமாரனின் மைனஸ் ஒன் கவிதை தொகுப்பு வந்துள்ளதாக கொரியர் ஆபிஸில் இருந்து போன் வரவும் நோக்காட்டுக் குதிரைக்கி சருக்குனதே சாக்காடு என்று தேங்காய் உடைக்க விஜயமங்கலம் போக சாக்காடு கிடைத்து கிளம்பி விட்டேன். பாதிவழியில் ஒருவர் லிப்ட் கேட்டு ஏறிக் கொண்டார். தன் பரம்பறை பற்றியும், அப்பா இந்த எடத்துல தானுங்க டிவிஎஸ்ல விழுந்து கைகால் முறிஞ்சு செத்தாருங்க என்றும் பேசத்துவங்க,  ஆள் போதை என்பது அப்புறம் தான் தெரிந்தது. போயி துளி குடிச்சுபோட்டு வர்றேண்டிங்றன்.. வண்டி சாவியை தூக்கி ஒழிச்சு வச்சுட்டாளுங்க எம் பொண்டாட்டி! நடந்து வந்தேன் நீங்க வந்தீங்க.. நம்ம ரோட்டுல தான் இந்த வாரத்துல 2 எழவு உழுந்துடிச்சுங்ளே! நேரம் முடிஞ்சுது போயி சேர்ந்துட்டாங்க.. நாமளுமா செத்துடுவோம்? வண்டி சாவிய புடிங்கீட்டாளுங்க! நடுக்கடைக்கி உடுங்க துரூவா! என்றார்.
 இல்லீங்க நீங்க போயி பாருங்க.. என்று தாட்டி விட்டேன். இப்பவே ஆளுக்கு கணக்காய் இருக்கு. இன்னம் குடிச்சு மாப்பிள்ளை போட்டு போகையில் வேறு வண்டியில் தொற்றிக் கொள்வார். வண்டி ஓட்டுபவனையும் ஒழுக்கமாய் ஓட்டவிடாமல் நாயம் பேசி கீழே தள்ளுவார். மதியம் 12 மணிக்கி எனக்கு ஒரு போன். என் இன்னொரு பக்கத்து ஊர் நண்பர் சாலையில் அவுட். அவருக்கு 2 குழந்தைகள். பட்ட காலிலேயே படும் என்பார்கள். இதென்ன சாவு செய்தியாகவே வருகிறதே!

மொத்த பூமியுமே விளையாட்டு மைதானம் தான்.வாழ்க்கையை நாம் எல்லோருமே விளையாட்டாக பார்க்கவோ, எதிர்கொள்ளவோதான் வேண்டும். விளையாட்டுத்தனம் இல்லாமல், குழந்தைத்தனம் இல்லாமல் வாழ்க்கையை கடினமாக எதிர்கொள்பவர்களைக் கண்டால் எனக்கு எரிச்சல் தான் வருகிறது.வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்பவன் தான் முழுமையாகச் சாகிறான். அதுதான் அழகு. சாவு என்பது மிக அசிங்கமானது.அது சாவினால் அல்ல. முழுமையாக வாழாததினால் தான் அது அசிங்கமாகிறது.
அழகான சாவை சம்பாதிக்க முடியாது.முழுமையாக வாழ்ந்தால் தான் சாவு சுகமானது என்பதை உணரமுடியும்.முழுமையாக வாழாததால் தான் சாவுக்காக பயந்து பயந்து எல்லோரும் அதைப் பற்றிய பீதியில் வாழ்கிறார்கள். உலகம் உருண்டை வடிவிலானது. அது சூரியனை சுற்றி வருகிறது என்று கலிலியோ சொன்ன பிறகு உலகம் ஏற்றுக்கொண்டது. பின் அது பிரச்சனைகளின் மொத்த உருவமாக மாறிவிட்டது.Post Comment

கருத்துகள் இல்லை: