புதன், ஜூன் 19, 2013

சாந்தாமணி நாவல்-- பிரச்சனையிசம்

விதி வலியதுன்னு சொல்றதுல எதோ இருக்குன்னுதா தோணுது. இல்லேன்னாசொற்கப்பலும் தக்கையும் சேர்ந்து நடத்துற கூட்டத்துல வந்து கருத்துரை சொல்லுங்கன்னு அஜயன் பாலா என்னைக் கூப்பிட்டிருக்கமாட்டார். நானும் பொட்டியத் தூக்கிட்டு சேலத்துக்கு பஸ்ஸேறிப் போயிருக்கமாட்டேன். அதெல்லாஞ் சிக்கல் இல்லே. வா.மு.கோமுவோடசாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்பத்தி நான் கருத்துரை சொல்றேனேன்னு என்னய சொல்லவைச்ச பல்லி எதுன்னு தெரியலை. ‘விதிங்கிறாங்கபல்லிங்கிறாங்கசரியான பிற்போக்குவாதியா இருப்பாங்கநல்லாப் படிச்ச செலபேர் கதைய அவுத்து விடுவீங்கன்னு எனக்குந் தெரியுது. உப்பு,புளி,காரசாரத்துக்காக இதெல்லாம் எழுதிக்கிறதுதான தவிர்த்து வேற புனித நோக்கம் ஒண்ணுங் கெடயாது. 

ஆங்அந்தப் புத்தகம் கைல இருக்குங்றதனால அதைப் பத்திக் கருத்துச் சொல்றதா ஒப்புக்கிட்டனோ என்னமோ…. அந்தப் புத்தகத்த மொதல்லயும் ஒருவாட்டி புரட்டிப் பாத்திருக்கேன். எப்பிடி எப்பிடிப் படுத்துக்கலாம்னு செல விசயம் கண்ணுல படத்தான் செஞ்சுது. ஆனாலும், புத்தகம் முழுசுமே வில்லங்கம் விவகாரம்னு தெரிஞ்சிருந்தா வேணாஞ் சாமீன்னு ஒதுங்கியிருப்பேன்.
அப்புறம் சாஹிப்கிரன் வா.மு.கோமுவோடசாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும்பற்றி கட்டுரை வாசிச்சார். அதுக்கு முன்னாடி வா.மு.கோமுவை மணல்வீடு ஹரிகிருஷ்ணன் அறிமுகம் செய்ஞ்சுவைச்சுப் பேசினார். ‘அவர் என்னோட வாத்யார். அவர் எழுத்துக்கள நான் காதலிக்கிறேன்அப்டீன்னு ஆரம்பிச்சு அவருக்கேயுரிய மண்வாசனை நடைல சுவாரசியமாப் பேசினார். சரிதான் அப்டீன்னு நெனைச்சுக்கிட்டேன். ‘இதுவொரு இன்பமூட்டக்கூடிய எழுத்துஆனாலும், ஏனைய விடயங்களிலும் வா.மு.கோமு கவனஞ் செலுத்தியிருக்க வேணும்ங்கிற ரீதியில சாஹிப்கிரனோட பேச்சு அமைஞ்சிருந்துச்சு. எதோ சொல்ல வந்து சொல்ல வந்து சொல்லாம தொண்டைக்குள்ள இறுக்கிப் பிடிச்சுக்கிட்ட மாதிரி ஒரு விமர்சனக் கட்டுரை அது. அப்றந்தான் ஆரம்பிச்சுது வெனை. ‘யாராச்சும் கருத்துச் சொல்லுங்கப்பான்னார் அஜயன். நான் கம்யூட்டர்ல தட்னத பேப்பர்ல எடுத்துட்டுப் போகலை. சேலத்துல அப்போ மின்சாரம் அறுந்திருந்த நேரம். சரிதான்னுட்டு ஞாபகத்துல இருந்தவரைக்கும் எங் கருத்தைச் சொன்னேன். நான் என்ன பேசுனேன்கிறதோட சாரம் இதுதாங்க:

நான் இந்தப் புத்தகத்தப் பத்தி கருத்துரை சொல்றதுக்கு முன்னாடி ஒரு விசயம் சொல்லியாகணும். அதாவது நான் ஒரு அடிப்படைவாதி கெடையாது. அப்றம் இந்தக் கற்பு, கலாச்சாரம் ஒழுக்க மதிப்பீடுகள்ளயும் கறாரான ஆள் இல்லை. நான் தமிழ்ல ஒரளவுக்கு படிச்சுக்கிட்டிருக்கிற ஆள்தான். அதனால இதையொரு நாவல்னு என்னால ஏத்துக்க முடியலை. இந்தப் புத்தகத்த நான் வாசிக்க ஆரம்பிச்சு ஒரு நூறு பக்கத்துக்கு மேல போனப்புறமும் என்னால கதையோட ஒன்ற முடியலை. பள்ளிக்கூடத்துல படிக்கிற பழனிச்சாமி சாந்தாமணியை விரட்டி விரட்டிக் காதலிக்கிறான். அவ அவனைப் பாக்காம மூஞ்சியத் திருப்பிக்கிறா. பழனிச்சாமிய ஜான்சி காதலிக்கிறா. அப்றம் பழனிச்சாமி ஜான்சியோட சில்மிஷம் பண்றான். சாந்தாமணி கதை முடிஞ்சப்புறம் பழனிச்சாமி அவளோடயும் இவளோடயும் எவளோடயும் படுத்துக்கிறான். அவன் எப்டி எப்டியெல்லாம் யார் யாரோடல்லாம் படுத்துக்கிறாங்கிறதப் பத்தின பக்கம் பக்கமான விஸ்தாரமான விவரிப்புதா இந்த நாவல். என்னடாது இப்டி வில்லங்கமாயிருக்கேன்னு முன்னுரையப் போய்ப் படிச்சுப் பாத்தாஇந்தக் கதைல வர்ற கீதாவும் பழனிச்சாமியும் அவளும் இவளும் இப்பயும் இருக்கத்தான் இருக்காங்க. இதெல்லாம் அசாத்தியம்னு நீங்க நெனைக்கப்படாதுன்னு எழுதியிருக்காரு. இதெல்லாம் தனக்கு பாதகமான எதிர்வினை வரும்னு தெரிஞ்சுக்கிட்டு அதத் தடுக்க கவசமா முற்கூட்டியே எழுதிவைக்கிறது. பக்கம் பக்கமா பாலியலை எழுத்தா நிரப்பி வைச்சிருக்கிறதத் தவிர்த்து வா.மு.கோமுவோட இந்தப் புத்தகத்துல ஒண்ணுங் கெடயாது. காமத்தை எழுதக்கூடாதுன்னு நாஞ் சொல்லவரலை. நானுங்கூட எழுதியிருக்கேன். ஆனா, எழுத்துக்குள்ள காமம் வரலாம். காமம் மட்டுமே எழுத்தாயிருந்தா அதுக்கு வேற பேரு. 

சில இணையத்தளங்கள் கலவியை மிருக சர்க்கஸா, மாமிசக்கூடலா மலினமாக்கிட்ட அதே வேலையை இலக்கியமுஞ் செய்றது சரிதானா? காமம் ஒண்ணும் பாவம் கிடையாது. ஆனாலும், காமத்தினால் மட்டுந்தான் இந்த உலகம் இயங்கிட்டிருக்கிறதுமாதிரியான ஒரு சித்திரம் இந்தப் புத்தகத்தைப் படிச்சிட்டிருந்தப்போ கெடைச்சுது. போர்க்களத்துல பிணங்களா விழுந்து கிடக்கிறது மாதிரி இந்தப் புத்தகம் நிறைய உடல்களா அவிழ்ந்து கிடக்குது. உயிர்மை கூட்டத்தில இந்தப் புத்தகத்தை வெளியிட்டுப் பேசின முருகேசபாண்டியன் சொன்னார்.“இதைப் படிக்கிறபோது பெண்கள் எல்லோரும் பாவாடை நாடாவை அவிழ்த்து கையில வைச்சுக்கிட்டு ரெடியா இருக்கிறமாதிரி தோணுச்சுன்னு. எனக்கும் அதே கருத்துத்தான். இந்த சமூகத்தில இருக்கிற அநேகமான பெண்கள் காமம் என்கிற தீர்க்கமுடியாத கொடிய வியாதியினால பீடிக்கப்பட்டு அங்கேயும் இங்கேயும் அந்தரிச்சு அலமலந்து ஓடித்திரிவதான ஒரு காட்சி என் மனக்கண்ணில வந்துபோச்சு. பெண்களை இந்த நாவல்ல ரொம்ப மலினப்படுத்தியிருக்கிறதா எனக்குத் தோணுது.


இந்தப் புத்தகத்துல வர்ற பழனிச்சாமி என்கிற ஆளுக்காக பெண்கள் வரிசையா நின்னுக்கிட்டு ஏங்கிறதைப் பார்த்தா மகாக்கொடும்மையா இருக்கு. அவனுக்கு உடம்பைக் குடுக்கிறதைத் தவிர்த்து அந்தப் பெண்களுக்கு வாழ்க்கைல இலக்குங்கிறது ஒண்ணுமே கிடையாதாங்கிற எரிச்சல் வருது. அத்தோட ஒரு ஆணால தன்னோட சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி எத்தனை பொண்ணுங்களை வேணும்னாலும் படுக்கைல சாய்ச்சுக்க முடியும்கிறது விரசமா இருக்கு. ‘இதெல்லாம் சாத்தியம்தானுங்கோன்னு முன்னுரையிலயே கோடி காட்டியிருக்கிற வாமு.கோமுகிட்ட ஒரேயொரு கேள்வி கேட்கணும்னு தோணுது. எங்கயாச்சும் தான் காதலிக்கிற பொண்ணுமுன்னாடி, வயசுக்கு வந்த அவ தங்கையை எந்த ஒரு ஆணாவது கையில தூக்கிக்குவானா? அப்படியே தூக்கிக்கிட்டாலும் காதலி இருக்கும்போதே அவ தங்கைக்கிட்ட சில்மிஷம் பண்ணுவானா? அப்பிடிப் பண்ணின ஒரு ஆளை அந்தப் பொண்ணு சாந்தாமணி காதலிப்பாளா? (இப்டில்லாம் நடக்கும்ங்கிறாரு சிபிச்செல்வன்)

அப்புறம் தமிழில புதுசாப் படிக்கணும்னு வர்ற ஒருத்தன் அல்லது ஒருத்தி அவங்க காலக்கொடுமையினால இந்தப் புத்தகத்தைப் படிக்கிறாங்கன்னு வைச்சுக்கோங்கஇலக்கியம் பற்றி அவங்களுக்கு என்ன மரியாதை வரும்கிறீங்க…! இலக்கியத்துக்கு சமூகத்துல இப்பவும் ஒரு மரியாதை மயிருங் கெடயாதுன்னு செலபேர் சொல்லலாம். அதை உயிருன்னு நெனைச்சுட்டு வாழுற செலபேர் எல்லாக் காலத்துலயும் இருந்துக்கிட்டுத்தான இருக்காங்க.

பெண்ணெழுத்துப் பற்றி பரவலான சர்ச்சைகள் ஓடிட்டிருக்கிற இந்தக் காலகட்டத்துலசாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் ஒரு பெண் எழுதியிருந்தா என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன். ரொம்ப காமெடியான (குரூரமானதும்) காட்சிகள் கண்முன்னாடி வந்துபோச்சு. தப்புப் பண்ணினவங்களை ஊருக்கு வெளியில ஒதுக்கிவைக்கிறதுமாதிரி சுடுகாட்டுக்குப் பக்கத்துல கொண்டுபோய்த் தள்ளிவைச்சிருப்பாங்கங்கிறதுல சந்தேகமேயில்லை. ‘முலைகள்னு தன்னோட கவிதைத் தொகுப்புக்குத் தலைப்பு வைச்சதுக்காக கவிஞர் குட்டி ரேவதியை இருட்டடிப்பு செய்த சமூகந்தான இது?

வாமு.கோமு எழுத்தைப் பத்தி நீங்க கருத்துரைக்க வேண்டியதில்லைதவிர்த்துடுங்கஎதுக்கு தேவையில்லாம பிரச்சனையை வளர்த்துக்கிறீங்கன்னு என்னோட நண்பர்கள்ல ரெண்டு மூணு பேர் சொன்னாங்க. “விமர்சனங்கிறதை ஏத்துக்கிற பக்குவம் அவருக்கு இருக்கும்னுதான் நான் நினைக்கிறேன். அதை தனிப்பட்ட வன்மமா அவர் வளர்த்துக்கமாட்டார்னு நான் பதில்சொன்னேன். தவிர, இது அவரோட புத்தகம் தொடர்பானதுதானஅவரைப் பற்றிக் கிடையாதுல்ல. ஆட்களைப் பற்றித்தான் அதாவது அவங்க தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித்தான் விமர்சனம் பண்ணக்கூடாது. அது தப்பு. அவர் படைப்பைப் பற்றி விமர்சனம் பண்ணலாம்ல. நான் இன்னும் கள்ளி, தவளைகள் குதிக்கும் வயிறு இதெல்லாம் படிக்கலை. கள்ளி நல்லா வந்திருக்கிறதா சொல்றாங்க. படிக்கணும்.”

இவ்ளோதான் நான் பேசுனது. ஒடன சிபிச்செல்வன்ட்ட இருந்து ஒரு ஆட்சேபக்குரல் கௌம்புது.

இந்த சமூகத்துல இப்டியெல்லாமா நடக்கும்ங்கிற மாதிரி தமிழ்நதி பேசுனாங்க. ஏராளமா நடக்குது. தமிழ்நதிக்குத்தான் அதெல்லாந் தெரியலை

நான் எவ்ளோ விசயம் சொல்லியிருக்கேன். இவர் இத எப்டி மாத்துறார் பாருங்கன்னு நான் உள்ளுக்குள்ள நெனைச்சுக்கிட்டேன்.

சந்திரா ஒடன சத்தம் போட ஆரம்பிச்சா. 

இதெல்லாம் ஆணாதிக்க எழுத்துஇதயெல்லாஞ் சகிச்சுக்க முடியாதுஅப்டிங்கறா,

ஒரு ஆளத் தேடித் தேடிப் போய்ப் படுத்துக்கிறதத் தவிர்த்து பொண்களுக்கு வேற வேலையே கெடயாதுங்கிறீங்களா…?”;-இது நான்.

பெண்களை வெறும் தசைப் பிண்டமாப் பாக்கிற வேலை இதுன்னு உங்களுக்குத் தோணலையா”-இது சந்திரா.

சிபிச்செல்வன்இல்லல்லஅவர் அப்டியெல்லாம் நெனைச்சு எழுதியிருக்கமாட்டார்அப்டீன்னு தொடர்ந்து பேசிட்டே இருந்தார். ‘அப்புறம் இதெல்லாஞ் சமூகத்துல உள்ளதுதாங்கிற தொனியை கடேசிவரைக்கும் விடலை. அதுவா பிரச்னை? போதாக்குறைக்கு வா.மு.கோமு பக்கத்துல இருந்த ஒரு நண்பர் ஏதோ சத்தம் போட ஆரம்பிச்சார். அவர் பேரு தெரிலை.

இதெல்லாம் மூடி மூடி வைக்கணும்கிறீங்களேஇப்பல்லாம் பள்ளிக்கூடங்கள்லயே சொல்லிக் குடுக்கிறாங்க தெரியுமா?”ங்கிறாரு சிபிச்செல்வன்.

எப்டி எப்டில்லாம் படுத்துக்கலாம்னா? இந்தப் புத்தகத்த ஒங்க கொழந்தைக்கு நீங்க வாசிக்கக் குடுப்பீங்களா?”ன்னு கேக்கிறா சந்திரா.

நாங்க முலை, யோனின்னு ஒண்ணு ரெண்டு வார்த்தைகள கவிதைல வைச்சு எழுதினா கலாச்சாரத்தைக் கெடுக்கிறாங்க லபோதிபோன்னு வயித்துல அடிச்சுக்கிட்டு சத்தம் போடுறீங்களேஇந்தப் புத்தகம் கெட்டவார்த்தைக் களஞ்சியம் மாதிரி இருக்கேஇதுக்கு ஒண்ணுஞ் சொல்லமாட்டீங்களே”-நான்.

இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கிற யாரும் பெண்ணெழுத்துக்கு எதிரானவங்க கெடயாது”-சிபிச்செல்வன்.

இதுல நாவலுக்குரிய எந்தக் கூறு இருக்கு?”

இது இப்டித்தான் இருக்கணும்னு எதாவது உண்டா? எல்லாத்தையும் கலைச்சுப் போடறதுதான இலக்கியம்

அப்ப நாவல் விமர்சனக் கூட்டத்துல இந்தப் புத்தகம் எப்டி வந்துச்சு?”

சந்திரா நல்லா சண்டை போட்டா.அப்புறம் சிபிச்செல்வனும் ஜோஸ்ம் ஒருத்தரையொருத்தர் பாத்து எதோ பேசிக்கிட்டாங்க. அவங்க ரெண்டு பேரும்சட்டகம், பின்னவீனத்துவம், கட்டுடைத்தல்இந்த மாதிரி வார்த்தைகளப் போட்டு மெரட்டிட்டிருந்தாங்க. அப்பறம் அஜயன்அமைதிஅமைதி…’ன்னு எந்திரிச்சாரு. ‘யாராவது கருத்துச் சொல்லணும்னா முன்னாடி வந்து பேசுங்கஇப்டி உங்களுக்குள்ளயே பேசிட்டிருந்தா எப்டின்னாரு. 

இளங்கோ கிருஷ்ணன் எழுந்து வந்தார். வழக்கமான நிதானமான பாவம். 

போர்னோகிராபிக்கும் போர்னோ இலக்கியத்துக்கும் வித்யாசம் இருக்கு. இது போர்னோவா நின்னுடுச்சு. ஆர்ட் பார்மா மாறலைஇத வைச்சு கைமுஷ்டி அடிச்சுக்கலாம்.”அப்டின்னார் இளங்கோ.

பால்நிலவன் எழுந்து வந்தார்.

தமிழ்நதி சொன்னதுல ஒரு விசயத்த மட்டும் எடுத்துக்கிட்டுப் பேசப்படாது. பெண் எழுத்து தொடர்பான சர்ச்சைல்லாம் ஓடிட்டிருக்கிற இந்தக் காலத்துல இதையே ஒரு பெண் எழுதியிருந்தா என்னவிதமான எதிர்வினை ஏற்பட்டிருக்கும்னு அவங்க கேட்டாங்க. அப்புறம் இதுல வர்ற பெண்கள் காமப்பண்டங்கள்ங்கிறதுக்கு மேல பேசப்படலையேன்னு கேட்டாங்க. பேச்சு திசைதிரும்பிடப்படாதுன்னார்.

சரிஇந்தப் புத்தகத்த எழுதி இப்டியெல்லாம் சர்ச்சையக் கிளப்பிவிட்ட வா.மு.கோமு என்ன சொல்றாருன்னு இப்ப கேட்டுக்கலாம்னாரு அஜயன். 

நாவல் எழுதினா நல்லா விக்கும்னு நண்பர்கள் சொன்னாங்க. அதுக்காக எழுதினதுதான் இது. எங் கள்ளி நாவல் தோத்துப்போயிடுச்சு. பெருசா விக்கலை. இதாவது காசு குடுக்கும்னு நெனைச்சு எழுதினேன். வேற பெரிய நோக்கங்கள் எல்லாம் கெடயாது. தஞ்சைப் பிரகாஷோட மீனின் சிறகுகள் புத்தகவத்தைப் பக்கத்துல வைச்சுக்கிட்டுத்தான் இத எழுதினேன். தமிழ்நதியோட கானல் வரிய மூணு நாளைக்கு முன்னால படிச்சேன். கடுப்பாயிடுச்சு. என்னோட கொளத்தங்கரை இதெல்லாங்கூட அச்சுக்குக் குடுத்திருக்கலாமேன்னு அப்போ தோணுச்சு.”ன்னு பதிலுக்கு வாரினாரு.

அட கொக்கமக்கா! நானும் சந்திராவும் கொழுத்துற வெயில்ல மிச்சமிருந்த தொண்டத் தண்ணி காயுறவரைக்கும் சத்தம் போட்டிருக்கோம். இவுரு சாவதானமா எந்திருச்சு வந்துஇப்டி எழுதுனா விக்கும்னாங்கஅதனால அப்டி எழுதினேன்ங்கிறாரேநம்மள இப்டிக் காலி பண்ணிட்டாரேன்னு நெனைச்சுக்கிட்டேன். ஒலகந் தெரிஞ்ச ஆளு. நம்மள மாதிரியா?
தமிழ்நதி சாந்தாமணி நாவல் பற்றி…சேலத்தில்!

Post Comment

கருத்துகள் இல்லை: