வியாழன், ஜூன் 20, 2013

முகநூல் டிட்பிட்ஸ்--சின்ன கூட்டம்

குழந்தை பிறந்தபோது போய் பார்த்ததோடு சரி. அதன்பிறகு 8 மாதம் கழித்துத்தான் அந்த ஏரியாவிற்கே செல்ல முடிந்தது. போய் வாசலில் நின்றதுமே, “பெரியப்பன் வந்தாச்சு சாமி” என்று என் கையில் தூக்கி கொடுத்து விட்டார்கள். குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்தது. பெரியப்பனை அடையாளம் பாக்குறான் என்றார்கள். இந்த நேரத்துக்கு யாரா இருந்தாலும் மூஞ்சில குத்து உட்டுருப்பானுங்க.. தேனோ இன்னம் கையை ஓங்கவே மாட்டீங்றானே… தேஞ்சாமி பெரீப்பனுக்கு குத்து உடலியா?, என்றார்கள். எனது காமிரா செட்டை எடுத்து பாடல் வைத்து அதன் கையில் கொடுத்து விட்டேன். நின்றிருந்த உறவு சனங்களிடம் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கீழ போட்டுடுவானுங்க..வாங்கிக்குங்க..என்றே சப்தமிட்டார்கள்.
குழந்தை செல்போன் பட்டன்களை விரலகளில் அழுத்தி பாடலை நிறுத்தியது. பின் பாடலை போட்டது. பாடல் வந்ததும் நிறுத்தியது. வெலை அதிகமாட்ட இருக்குது புடிங்குக்குங்க..என்று அதன் அப்பாவும் பரபரப்பாய் சொன்னார். இவர்கள் வீணே கலவரமாகிறார்கள் என்றே தோன்றியது. நைசா வாங்கி வேறு ஜோப்பில் போட்டுக்கணுமாம்! குழந்தை அரைமணி நேரம் என் கையில் இருந்தது. அது கீழே போடவேயில்லை. பாடலை எப்படி வைப்பது என்று கற்றுக் கொண்டுவிட்டது.

என் கவிதைகளுக்குள் நான் என் ஜாதியை
டமிழ் நாட்டிலேயே உயர்ந்தது.. சாலச் சிறந்தது
என்று எழுதவில்லை என்றால் கைகள் முறிக்கப்படும்
என்று ஜாதீயத்தால் எச்சரிக்கப் படுகிறேன். ஆகவே
சேற்றில் முளைத்த செண்டாமரை என்கிறேன் மை ஜாதியை!
  என் மதக் கடவுளின் கருணையால் தான் என் ஊரில்
  மழை கொட்டோ கொட்டென கொட்டியது எண்டு
 அவன் கடவுளுக்கு கவிஞன் நன்றி சொல்லியதை
படியடா நாயே எண்டு என் மதக் கடவுள் என் தலையில்
 கொட்டு வைத்துக் காட்டியதால் நான் கடந்த
 பனிரெண்டு மணி நேரமாக தொடர்ந்து உச்சா
போனபடியே கடவுள் வாழ்த்தை ஹிந்தியில்
பாடியபடியே ஊருக்குள் சுற்றுகிறேன்.
  இங்கே என் மொழிக்காரன் உள்வந்து
  ஏண்டா நீ மலையாளத்தானாடா? என்று மிரட்டுகையில்
 என் மொழியின் ஆளுமையை நொடியில் உணர்ந்து
 கவிதைகள் எண்ட பெயரில் நான் கண்டமானிக்கு
 எழுத தலைப்பட்டுவிட்டேன்!
என் கடவுளின், என் மதத்தின், என் மொழியின் கருணையால்
என் ஊரில் நேற்று வாசல் நனைய மழை ஊத்தியது!

இயல்பாகவே கவிதை தொகுப்புகளை நான் வருடத்தில் மூன்று மட்டுமே படிக்கும் வழக்கம் கொண்டவன். படிக்கத்துவங்கிய காலத்தில் கவிதை தொகுப்பு தவிர எதுவும் படிக்க மாட்டேன். எல்லாம் காலத்தின் கோலம் எனலாம். இவ்வருட துவக்கத்தில் வே.பாபுவின்மதுக்குவளை மலர்படித்து கவிதைகளின் உச்சபட்ச சாத்தியக்கூறுகளைக் கண்டு அதிசயித்துப் போனேன். அதன் பிரமிப்பிலிருந்து விடுபடாமல் நான் இருக்கையில் கதிர்பாரதியின் முதல் கவிதைத் தொகுதி கைக்கு வந்து விட்டது. கவிதைகளை படிக்கத் துவங்குவதற்கு தனித்த வாசிப்பு மனநிலைக்கு தயாராக வேண்டியது அவசியமாகிறது. மனநிலை ஒத்துவராத சமயத்தில் வலுக்கட்டாயமாகப் படித்தால் கவிதைகள் வெறும் வார்த்தைகளாகவே பதியும். நிர்பந்தத்தின் பேரில் படித்தாலும் கவிதைகள் நமக்கு காட்டும் பாதைகளுக்குள் நாம் செல்லவே முடியாது.
   மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்.. தொகுதிக்குள்  நுழைந்த போது முதல் நான்கைந்து கவிதைகளை வாசித்ததும் இவ்வளவு இறுக்கங்களை சாதாரண வாசகன் உணர்ந்து ரசிக்க இயலுமா? என்ற சந்தேகம் வந்துவிட்டது. அதற்கும் எனக்கு வழி இருக்கிறது என்று கடைசிக் கவிதையிலிருந்து பின்புறத்தில் இருந்து வந்தேன்.அவைகள் என் கைப்பிடித்து எளிமையாக முன்புறம் நோக்கி கூட்டி வந்தன.
      மதுக்கூடத்தில் கொண்டாட்டத்திற்கு நுழைந்த கவிஞன் கடைசி மிடறுக்குப் பிறகு விசும்பத் துவங்குகிறான்...காதலியால் உதாசீனப்படுத்தப் பட்டவன் விடுதியில் தங்கி அவளின் நினைவலைகளை  அழிக்க முயன்று தடுமாறித் தவிக்கிறான்...
    இறப்பை நோக்கியே நகரும் கவிதைகள்  காதலின் வலிகளை கசப்பாய் விசிறியடிக்கின்றன...
  கவிஞனாய் இருந்துவிட்ட கவிஞன் லெளகீக வாழ்வில் ஒரு அங்கமாக இருக்க தடுமாறுகிறான். வாழ்வை கவிதையாய் வாழ முயற்சிக்கும் அவன் சுவரொட்டி மீது மூத்திரம் பெய்து தன் கோபத்தை வெளிக்காட்டுகிறான்..அதுவும் நடு இரவில்..கூடவே அவனுக்கு தன் பெயரை சுமந்து கொண்டு திரிவது கூட கனமாய் இருக்கிறது.
  காதலை புறங்கையால் தள்ளிவிடும் கவிதைகளை தீராக் காதலுடன் எழுதித் தீர்க்கிறது இவரது பேனா. இவர் நமக்கு காட்டும் கடவுள் கூட சாத்தானாகும் ஏக்கத்தில் வீழ்ந்து கிடக்கிறார்.
   தலைப்புக் கவிதையும், மகன்களும் மகன்களின் நிமித்தமும் இரண்டையும் சிறுகதை வடிவில் வாசித்து மகிழ்ந்தேன்.
முதல் தொகுதி வந்த பிறகு சிலவற்றை கழித்திருக்கலாம் என்று கதிர்பாரதிக்கே தோன்றி இருக்கலாம்..அவைகள் என் கண்களுக்கும் தட்டுப்பட்டன. ஒரு கவிதை தொகுதி பாராட்டப் படுவதற்கு அனைத்து கவிதைகளுமே சிறப்பானவைகளாக இருக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை.


அட பசகளா!
சோளகர் தொட்டி, அண்டு ரெட் டீ ரெண்டு பொஸ்தவங்களையும் நண்பர் ஒருவர் நான் அதை படிக்காவிட்டால் செத்துக்கித்து போய் விடுவேனோ என்ற பீதியில் கோவிவையிலிருந்து காரில் தூக்கி ஓடி வந்தார். அன்பு நண்பர் கோமுவிற்கு என்று புத்தக பக்கத்தில் கையெழுத்து வேறு.
  சாமி, இதை நீங்களே கொண்டு போயிடுங்க! எனக்கு எத்தனை பிரதிகள் இதுகள் வித்திருந்தாலும் நோ பிராப்ளம்...தூக்கி கொண்டு போயி கார்ல டிக்கில போடுங்க, இல்லீன்னா எடைக்கி போற வழியில போட்டுட்டு போங்க..நான் படிக்கோணுமுன்னு நெனச்சிருந்தா எப்பவோ படிச்சிருப்பேன்..நெனைக்கவே இல்ல சாமி..நான் ஏதோ அஸ்வகோசு, அசோகமித்திரன் படிச்சு எழுத வந்த ஆளு.. சாமிகளா..என்னை பீல்டு அவுட்டு பண்ண வராதீங்க...
  இதே மாதிரி தான் என் சிஸ்யன் மு.ஹரிகிருஷ்ணன் மம்புட்டியான் கதையை பீல்டு வொர்க் பண்ணி நாவலா தர்றேன்னு 3 வருசம் முன்ன குண்டு போட்டான்.. பரிசு வாங்க திட்டம் போட்டுட்டான்னு நெனச்சிட்டன். அதுக்குள்ள கூத்துக்கு பள்ளியோடம் தொவங்கீட்டு பொட்டாட்ட இருக்கிறான். பசகளா! கத்திக்குத்து கணேசன், கும்மாங்குத்து குப்புசாமின்னு தமிழ்நாடு சுத்தி வெட்டியா செத்த கேனக்கிறுக்கனுக கதைக நெறெயா கெடக்குதுக..போயி பீல்டு வொர்க் பண்ணி நாவல்னு குண்டு சைஸ்சுல போட்டா பரிசு நிச்சயம்! சுந்தரராமசாமிக்கி பின்னால இலக்கியமே செத்துப் போச்சுன்னு எல்லாரும் சொன்னாங்க சாமிகளா! அது நெசம் தான். தடி எடுத்தவனெல்லாம் இங்க தண்டல் காரன் தான். சுந்தரராமசாமி.. நீங்க கொடுத்து வச்ச சாமிதானுங்க..எத்தன அலும்பு பாருங்க ..இங்க நீங்க இல்லாம!

நேற்று டிஸ்கவரில் அம்மாவோடு திங்களூர் சென்று கொண்டிருந்தேன். வீரசங்கிலி பிரிவு நான்குமுனை சந்திப்பில் கிழக்கிலிருந்து வீரசங்கிலிக்கி செல்ல 15 வயது பாப்பா எக்ஸெல் சூப்பரில் பின்னால் 12 வயது பாப்பாவோடு வந்தது..என்னை பார்த்தும் போலாமா, வேணாமா குழப்பத்தில் தீமாதிரி முறுக்கிவிட்டது . 5 கியர்வண்டியை 50ல் ஓட்டும் நான் போன வாரத்தில் 2 நண்பர்களை இழந்து விட்டதால் என் ஓட்டத்தை 43க்கு குறைத்து விட்டேன். நானும் குழம்பி பிரேக் பிடித்து நிறுத்திவிட்டேன். பாப்பா சூப்பராய் சாலையை கடந்து சென்று தொப்புகடிர்ரென விழுந்துவிட்டது. அடப்பிள்ளையே..அதான் தாண்டிட்டியே..அப்புறம் ஏன் நொறுங்கினே? நான் வண்டியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு பாப்பாவிடம் செல்கையில் அது எழுந்து பின்புறத்தை தூசிதட்டி வண்டியை எழுப்பி நிறுத்தி கிளம்பிவிட எத்தனித்தது. நல்லவேளை 2 பாப்பாக்களுக்கும் காயமேதுமிலை. என்ன செய்திருப்பேன் என்கிறீர்கள்? 15வயது பாப்பாவின் கன்னத்தில் ரெண்டு அப்பட்டம் போட்டேன். இனிமே வண்டியே ஓட்டப்புடாது நீ..உருட்டீட்டு போ, என்றேன். பெற்றவ்ர்களே! பாப்பாக்கள் கையில் வண்டி கொடுத்து கோதுமை அரைக்கவோ, முட்டாய் வாங்கவோ அனுப்பாதீர்கள் சாலையில்! உயிர்பலிகள் நடக்கின்றன  என்றால் ஏன் நடக்காது?

உள் பொட்டியில் ஒன்னு வந்தது… ச்சார் மாதேரி சாட் பண்ணலாமா? என்று! –ச்சார் மாதேரி நான் எதுக்காவ சாட் பண்ணனூ? என்னை மாதிரி ச்சார் தான் சாட் பண்ணோனு, என்று டைப்பினேன். அது போய்விட்டது. மறுக்கா அதர் பார்ட்டி ஒன்னு வந்தது. –காதல் கவிதை ரெம்ப பிடிச்சிருக்கு, எனக்கு தனியா உள்பொட்டீல தர முடியுமா? என்க, புரபைல் பிச்சர் அதுக்கு குருவி படம். எதுக்கு குருவி?.  – எதுக்கா? என்னோட பாய்பிரண்டுக்கு குடுக்க!  -அவனுக்கு நீ அல்வா குடுடா, கவிதை குடுக்கிறானாம்!
-சார் நான் லேடி சார்..உள் பொட்டிக்கி என் போட்டோ அனுப்புறேன் பாருங்க. எப்பிடி அழகா நானு?
-இருந்துக்கோ, என்றதும், உங்களை ப்ளாக் பண்ணுறேன், என்று குருவி போய் விட்டது. என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்????????????

எழுத்தாளர்கள் என்பவர்களுக்குள் நிறைய கிறுக்குத்தனங்கள் உண்டு. நான் 25 வருடங்களுக்கும் மேலாக கிறுக்குத் தனங்களோடுதான் வாழ்கிறேன். என்னை நான் அப்படியே ஏற்றுக்கொள்ளவும் தொடங்கி விட்டேன். திடீரென தங்கள் தலையில் கொம்பு முளைத்து விட்டது போலவும் நடந்து கொள்வார்கள். அதுவும் கிறுக்குத்தனங்களில் ஒன்றுதான். பொது வாழ்வில் அவன் எப்போதும் ஒட்டாமல் நடிக்க பழகி இருப்பான். எனக்கு முன்பெல்லாம் அடிக்கடி கொம்பு முளைத்து விடும். அன் அம்மாவும், மனைவியும் மட்டுமேதான் சகித்துக் கொள்வார்கள். ஊராரும் சகித்துக் கொள்ள வேண்டுமென நினைப்பது முட்டாள் தனம் தான் என்றாலும் அவர்களுக்கான பைத்திய நிலையில் அப்படியே நம்புவார்கள். பிரபலங்களுக்கும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. காலம் பு.பித்தனையும், பாரதியையும் காலம் கடந்து கொண்டாடி மகிழ்கிறது. என்ன கொடுமையான சூழலில் வாழ்க்கை ஓடுகிறது!

எந்த நேரத்தில் குடி பற்றி போட்டேனோ..என் 30 வருட கால நண்பர் பக்கத்து ஊரில் இறந்து விட்டார். நேற்று நான் வாய் பிழந்து தூங்கிய நேரத்தில் தங்க நாற்கர சாலையை தாண்டுகையில் போலீசாரால் தடுக்கப்பட்டு மாப்பில் வண்டி ஓட்டாதே என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். நான் யாருன்னு நெனச்சே என்று போதையில் நண்பரும் பேசியிருக்கிறார். வேறொரு  தெரிந்த நண்பர், மாப்பிளே நான் வீட்டுல விடறேனுங்க..வண்டிக்கு நான் பொறுப்பு என்று சொல்லியும் கேட்காமல் தங்க நாற்கர சாலையை தாண்டுகையில் அடிபட்டு ...அதான்..சம்பவம் நடந்து முடிந்து விட்டது.
  எப்போது இணைந்து சரக்கடித்தாலும் என் அப்பாவின் தோழமையை பற்றி ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்த என் நண்பர் போய் சேர்ந்து விட்டார். பிணம் வந்து சேர்ந்த போது புதைக்கும் சமயத்தில் அவர் முகம் பார்த்தேன். வாழ்க்கையை வாழ்ந்து முடித்த நிம்மதி அவர் முகத்தில் இருந்தது கண்டு நிம்மதியானேன். ஆனால் கூடவே சுற்றிய அவர் மகள் (7ம் வகுப்பு பாஸ்) மண்ணு தள்ள கூட்டி வந்தார்கள்..அதை பார்த்ததும் என்னையுமறியாமல் உலகம் இருண்டு விட்டதான பயத்தில் அழக்கூட தைரியமின்றி ....ஐயோ...அந்த தாயோலிக் கடவுளுக்கு நான் சாபமிடுகிறேன்..எதற்கடா இந்த உலகம்? என்ன வாழ்க்கையடா இது? அந்தச் சிறுமி இன்றிரவு அப்பா எங்க? இன்னமுமா குடிச்சுட்டு வரலைன்னு கேட்குமேடா?

இன்று காலையில் ஃபிகர் பார்க்கும் வாய்ப்பை அரங்கன் தமிழ் ஏற்படுத்தினார் ஈரோட்டு வீதியில் 20 நிமிடம். அவரை சந்திக்க மணி லாட்ஜ் வாயில் சென்ற போது துணி அயர்ன் செய்ய சென்றிருப்பதாகவும், 10 நிமிடத்தில் வந்து விடுவதாகவும் அலைபேசியில் அறிவித்தார். அவர் வந்து சேரும் வரை சாலையில் ஃபிகர் பார்க்கும் படலம் ஆரம்பித்தேன். 37 ஃபிகர்கள் கடந்து சென்றன. வேலை நிமித்தமாக கடந்து சென்ற அந்த ஃபிகர்கள் எல்லாமே சரியாக சோறே தின்பதில்லை போலும். நெருங்கி இறுக்கி கட்டிக்கொண்டால் புலக்கை தீசி விடும்கள். இரண்டாய் ஒடித்து டீயில் பன் போல தொட்டு சாப்பிடலாம் போல ஒல்லி பிச்சான்கள்.
 ஒருவர் அதை தடை செய்வது போல் 5 ரூவா குடு சார் என்றார். இல்ல போடா என்றேன். 5 ரூபாய் சில்லறை எடுத்து 10 ரூவா நோட்டு குடு சார், சில்லறை 5 தர்றேன், என்றார். போடா! 5வது நிமிடத்தில் என் கவனத்தை திருப்ப தோள் தட்டி 5 ரூவா குடுப்பா என்று ஒரு பெரியவர். ஜீன்ஸ் பேண்ட் வொயட் சர்ட் சகிதமாய்! போடா!
 அருகில் இருந்த ரீசார்ஜ் கடையில் கொளு கொளு பிகர் இருக்க, மேடம் 10 ரூவா ஏர்செல் கார்டு குடுங்க, என்றேன். வாங்கியதும் 1 ரூவா குடுங்க என்றாள், ஒரு கை நீட்டியபடி! 2 கையையும் நீட்டுங்க மேடம் என்றேன். எதுக்கு? என்று கொந்தளித்தாள். 1 ரூவா பிச்சை தானே மேடம் அதான் நீட்ட சொன்னேன், என்றேன். வேண்டாம் என்றாள். ஒருவேளை அவள் நான் சைட் உட்டதுக்காக கம்பெனி சார்ஜ் 1 ரூவா கேட்டிருப்பாளோ!

மொத்த பூமியுமே விளையாட்டு மைதானம் தான்.வாழ்க்கையை நாம் எல்லோருமே விளையாட்டாக பார்க்கவோ, எதிர்கொள்ளவோதான் வேண்டும். விளையாட்டுத்தனம் இல்லாமல், குழந்தைத்தனம் இல்லாமல் வாழ்க்கையை கடினமாக எதிர்கொள்பவர்களைக் கண்டால் எனக்கு எரிச்சல் தான் வருகிறது.வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்பவன் தான் முழுமையாகச் சாகிறான். அதுதான் அழகு. சாவு என்பது மிக அசிங்கமானது.அது சாவினால் அல்ல. முழுமையாக வாழாததினால் தான் அது அசிங்கமாகிறது.
அழகான சாவை சம்பாதிக்க முடியாது.முழுமையாக வாழ்ந்தால் தான் சாவு சுகமானது என்பதை உணரமுடியும்.முழுமையாக வாழாததால் தான் சாவுக்காக பயந்து பயந்து எல்லோரும் அதைப் பற்றிய பீதியில் வாழ்கிறார்கள். உலகம் உருண்டை வடிவிலானது. அது சூரியனை சுற்றி வருகிறது என்று கலிலியோ சொன்ன பிறகு உலகம் ஏற்றுக்கொண்டது. பின் அது பிரச்சனைகளின் மொத்த உருவமாக மாறிவிட்டது.


  நண்பர் சிபியின் அழைப்பு வந்தால் நண்பர்கள் சென்னையில் மிரளுகிறார்களாம். ஐயோ!சிபியா!   நானோ இலக்கிய அனாதை.. யார் அழைத்தாலும் மேல சொல்லுங்க என்பேன். இப்படி இருக்கையில் சிபியின் அழைப்பு.
 “கோமு, இந்தியாவுல எல்லோருக்கும் மலைகள் பத்தி தெரியும்.. உலகம் பூராம் தெரிய வைக்க என்னா பண்டுறது?” என்றார். வுடுவனா...மாட்டிட்டாரில்ல!
 1. malaikal..malaikal..malaikalன்னு இங்லீசுல அடிங்க நண்பா.
 2. வெறும் மேலோட 6பேக் போஸ் போட்டோ போடுங்க.
 3. சாட்டிங் போய் i am mulaikal..you see my mulaikal sorry malaikal..this is indias best magazine. tamil best writters are also living this magazine..என்று சாட்டுங்கள். பார்த்தேன் என்று அவர் சொன்னால்..how? why?what?when?hahahaha..போட்டு கொல்லுங்கள்.
4.ஆங்கிலத்தில் சில படைப்புகளை கேட்டு வெளியிடுங்கள்..நான் நாளவாரம் அவுஸ்திரேலியா போகிறேன்..போய் இறங்கியதும் ha what a surprise..you ..malaikal writer? என்றூ ஒரு ஆளாவது கேட்க வேணும்.

சென்னையிலிருந்து நண்பர் மதியம் அழைத்திருந்தார். இன்னிக்கி ஞாயிறு விடுப்பை தனி ஒருவனாய் அறைக்குள் என்ன செய்வது? என்று யோசித்து வழக்கம் போல ஆப் அடித்து அன்னையர் தினத்தை கொண்டாடாமல் லேப்டாப்பில் படம் பார்த்து கொண்டாட முடிவு செய்து வடபழனி ஏரியாவில் தன் மிதிவண்டியில் தேடி அலைந்து மல்டி காம்ளக்ஸில் நுழைந்திருக்கிறார் கட்டம் போட்ட லுங்கி அணிந்து. டிவிடி விற்பனை கடை சென்று இன்ன படம் வேணும் என்று வரிசையாக கேட்க இல்லை..இல்லை என்றே கடைக்காரர் பதில் சொல்ல, அப்புறம் என்ன இழவுக்குடா பொலீசுக்கு மாமுல் குடுத்து கடை வச்சாங்க? பொழைக்கவா? நாசமாப்போகவா? என்று நழுவும் சமயத்தில் உள் டேபிளில் இருந்து ஓனர் குரல்.. லுங்கி கட்டுனவங்க வந்தா ஒன்னுங் குடுக்காதே…என்று.
  முட்டிங்காலுல இருந்து செவச் செவன்னு காட்டீட்டு பொண்ணு பிள்ளைங்க போனா, வாங்க மேடம்…இருக்கு மேடம் போட்டு குடுக்குறாங்க..நாம காலு வழிய இறக்கி உட்டுட்டு போயி கேட்டா..லொல்லைங்கறாங்க நண்பரே..ஊரு உட்டு 400 கி.மீ அப்பன் ஆத்தா..தம்பி தங்கச்சிய உட்டு பொழைக்க வந்த ஊர்ல குஞ்சாமணிய மறைச்சுத்தான லுங்கில போனேன்.. என்னமோ போங்க, என்றார்.
 ஈவனிங் வழக்கம் போல ஆப் அடித்து விட்டு அழைத்தார். நான் படம் எடுத்து கண்டிப்பா ஜெயிப்பனுங்க..அன்னிக்கி அதே கடைக்காரன் என்னோட பட கூவிடியை கண்ணாடி பொட்டில போட்டு விப்பானுங்க..அவன் மூஞ்சிய அது மேல அமுத்தி..நாயலி..லுங்கில வந்ததுக்கு முடுக்கினீல்லடா.. எம் படத்தவித்து பொலீசுக்கு மாமூல் குடுடா..நாயலி்ன்னு கேட்பனுங்க…,என்றார். வாழ்த்துக்கள் என்றேன்.

4 வருடம் முன்பு எழுதி வெளியிட பதிப்பகம் கிட்டாமல் கிடக்கும் தோழர் சில குறிப்புகள் நாவலில் தோழரிடம் பேட்டிக்காக கேட்கப்பட்ட ஒரு கேள்வி….
1.   உடல் நலத்திற்கு தீங்குன்னே தெரியும் பீடி இத்தனை குடிக்கறீங்களே?
புகை ஊதுறது உடல் நலத்திற்கு தீங்கான விசயம் தான். எங்கம்மாவே காசு இல்லீன்னா பீடி வாங்க காசு குடுக்கும். நோவு நொடி வந்துடும்னு பார்த்தா சோறும்தான் திங்கக் கூடாது. நீங்க வாங்குற மூச்சுக்காத்துல கூட கெமிக்கல் இருக்கு. மூச்சு வாங்காம உட்டுடுவீங்ளா? புகையை அடுத்தவன் மூஞ்சில ஊதினாத்தான் தப்பு. அதுக்கு தடை போடறது தப்பு. வதுலா கவர்மெண்ட்டு இலவச மாஸ்க் குடுக்கலாம்..இலவசமா நிறைய குடுக்குறாங்க அது போலத்தான். பார்த்துட்டே இருங்க..கவர்மெண்ட்டே அடுத்த எலக்சன்ல 3 வேளை சோறு இலவசம்னு அறிவிக்கப் போகுது. இலவச பஸ் பாஸ் மாதிரி அட்டை குடுத்துடுவாங்க.அட்டையை நீட்டினா சோறு! சிரிக்காதீங்க, நடக்கப்போவுது எழுதி வச்சுக்கங்க  (உள்ளே பார்த்து..ஏண்டி இந்த காக்காயிகளுக்கு சோறு வச்சியா? கத்தீட்டே சுத்துதுக பாரு பாவம்)Post Comment

கருத்துகள் இல்லை: