செவ்வாய், ஆகஸ்ட் 20, 2013

முகநூல் பதிவுகள் பல!

எங்கேப்பா இருக்கு உன் இலக்கியம்? என்னிடம் கேட்கப்படும் கேள்விக்கு நான் சொல்லும் பதில் எப்போதும், அதோ அவர்கள் நிரப்பி வைத்திருக்கும் மதுக் கோப்பையில் இருக்கிறது பாருங்கள் உலக இலக்கியமே! என்பேன்!

அடுத்து ஒரு வருடமாக படிப்பானா இவன்? என்று காத்திருந்த புத்தகத்தை கையில் எடுத்து விட்டேன். சும்மாவே மாதக்கணக்கில் புத்தகங்களை தொடாமல் இருப்பேன் என்றாலும் தொட்டேன் என்றால் பேயைப் போல வாசிக்கத்துவங்கி விடுவேன். என் படிப்பு ஒருமாத காலம் வரை நீட்டிக்கும். படிக்க காத்திருந்த புத்தகங்கள் வரிசையாக என் டேபிளுக்கு வந்து கொண்டே இருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் உலக இலக்கியங்களின் பக்கத்தில் வெளியில் சென்ற போது அவ்வப்போது வாங்கின குமுதம், ஆனந்த விகடன், ராணிமுத்து, தவிர வீடு தேடி வந்த மணல்வீடு, குறி, டெக்ஸ்வில்லர் என்று எல்லாவற்றையும் ஒருசேர வாசித்து ஓய்ந்து விடுவேன். மீண்டும் வாசிக்கத் துவங்க எத்தனை மாதங்களாகுமோ!

1997
ல் புக்கர் பரிசு பெற்ற நாவலான இது தமிழில் வெளிவந்து சேரவே ஆயிரத்தெட்டு பரிசுகளை எழுதிய இந்த அம்மாளுக்கு பெற்றுத்தந்து விட்டது போலத்தான் தெரிகிறது! வங்கத்தை சேர்ந்த தந்தைக்கும், கேரள கிறித்துவ தாய்க்கும் மேகாலயாவில் பிறந்து அய்மனம் கிராமத்தில் குழந்தை பருவத்தில் திரிந்தவர் என்று சரிதம் சொல்கிறது. கிடந்து சாட்டாது..

தனிமையின் 100 ஆண்டுகள் முடித்த கையோடு துவங்கி விட்டதால் பெருத்த வித்தியாசமெதுவும் இல்லாமல் உள்ளே போய் விட்டேன். இரட்டையர்கள் பற்றி அதிலும் இருந்தார்கள். இதில் எஸ்தா ஆண் (இது கொஞ்ச தூரம் பெண் என்றே படிக்க வேண்டி வருகிறது) ராஹேல் பெண்.18 நிமிட இடைவெளியில் பிறந்த இந்த இரு இரட்டையர்களின் சின்னச் சின்ன விசயங்கள் தான் நாவல் போல போகிறது,, பார்ப்போம்! ஏற்கனவே ஆங்கிலத்தில் இந்தம்மா படித்த ஒரு புத்தகத்தின் தாக்கத்தில் அம்மாதிரியான விசயங்களை கேரள பின்னணியில் எழுதிக்குவித்து விட்டதாக சொன்னார்கள் கண்டுபிடிப்பாளர்கள். இருந்து சாட்டாது! நமக்கு மண்டையில் என்ன ஏறுகிறது என்பதே முக்கியம்.

நான் என்றுமே விமர்சகன் அல்ல! அது என் வேலையுமல்ல! ஆனால் நல்ல வாசிப்பாளன் என்று இன்னும் நம்புகிறேன்! யார் மொழிபெயர்ப்பு என்பதை கண் பிரச்சனை உள்ளவர்கள் போட்டோவை கிளிக்கிச் சென்று பெரிதாய் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்!

()()()()()()()()()

எது இலக்கியம் என்று இதுவரை தெரியவில்லை தோழி! ஆனால் பல புத்தகங்கள் படித்ததால் இது தாண்டி இலக்கியம் இல்லை என்று முடிவுக்கு வந்து விட்டேன் கண்ணம்மா! பையனிடம், எனக்கு நண்பர்களே இல்லையடா இன்னிக்கி நீ தான் கம்பெனி குடுக்கணும் என்று கேட்டதற்கு, தெற்கயா, வடக்கையா? என்றான். தெற்கே என்றதும் மாட்டேன் என்றான். வடக்கே போனால் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாட அப்பன் 20 ரூபிள் குடுப்பான். ஒரு மணி நேரம் கேம்ஸ் விளயாடி முடித்தால் அப்பன் பீரை போட்டு விட்டு வந்து என்ன சாமி வேணும்? என்று வேறு கேட்டு திங்க ஐஞ்சு ஸ்டார் முட்டாயில இருந்து வாங்கி குடுப்பான் என்பது அவன் கணக்கு. ஆனால் தெற்கு என்று சொல்லி விட்டதால் வேண்டா வெறுப்பாக வண்டி ஏறி விட்டான்.

  ஆரம்பித்தது, விட்டது என்று மழைத்தூறல் வேறு! வாங்கி வந்து பாறையில் அமர்ந்து அவன் புதிதான தீன்பண்டமான கிலாக்காய்யை மிளகாய் பொடி தொட்டு சாப்பிட, சூப்பரப்பா! என்று பட்டையை கிளப்பினான். மழை ஆரம்பித்து முதுகை நனைக்க ஆரம்பித்து விட்டது. திருப்பூர் குமார் போனில் வந்தவர் எந்த இடம்? என்றார். சுற்றிலும் கருவேல மரங்கள் சூழ நடுவே ஒரு பெரிய பாறை.. நானும் நண்பனும் இருக்கோம்! என்றேன். ச்சே கொடுப்பினை எனக்கு இல்லாம போயிடுச்சே! என்றார். எங்களை நனைத்தபின் மழை ஓய்வுக்கு வந்ததும் பையன் வேண்டுமென்றே நடுக்குதப்பா! என்றான். கிளம்பி வருகையில் தூறல் ஆரம்பித்து விட்டது. வீட்டில் மின்சாரத்திடம் நனைஞ்சமானிக்கி ஒரு போட்டோ புடிடி என்றால் 4 படம் எடுத்தாள். அது படமா? ஐய்யோ ஐயோ!

  இப்போது சொல்லுங்கள் தோழி.. இலக்கியம் எங்கிருக்கிறது? மீண்டும் கேட்கிறேன்…. எங்கிருக்கிறது?
()()()()()()()()()

எப்போதுமே புத்தக கண்காட்சி என்றால் எனக்கும் அருணுக்கும் திருவிழா தான். கோவில் திருவிழாக்களை புறக்கணிப்பதால் அந்த உணர்வு கண்காட்சிக்குள் நுழைந்ததும் எங்களுக்குள் நுழைந்து விடும். இந்தமுறை பழைய கறைகளை அழிக்கும் விதமாய் இருவருமே பலர் ஆச்சரியப்படும் விதமாக அன்புடன் நடந்து கொண்டோம்.

  முக்கியமாய் அருண் என்னோடும், ஏனையோருடனும் அமர்ந்து கூல்டிரிங்ஸ் சாப்பிட்டது. அவரிடம் ஏனையோர் கேட்ட கேள்விக்கு ஒரே பதில் தெரிவித்தார். காலம் முழுவதுக்குமான குடியை முன்பே குடித்து முடித்துவிட்டேன் தல! உண்மைதான் நண்பா!
  என் அலைபேசியில் எப்போதோ கோவிலில் அருண் பேசிய வஜனங்களை பதிவு செய்திருந்தேன். அதை கேளுங்கள் என்று போட்டு கொடுத்து விட்டேன்.

-என்னாத்துக்கு புத்தகத்துல நன்றின்னு போட்டு இவிங்க பேரை எல்லாம் போட்டிருக்கீங்க? இவிங்கெல்லாம் என்ன செஞ்சாங்க உங்களுக்கு? ஒரே புத்தகத்துல நன்றின்னு 10 பக்கத்துக்கு போட்டு முடிச்சுக்கலாம்ல!
-அது அப்படி இல்லங்க வால்.. அவர்கள் என் நண்பர்கள். 20 நண்பர்கள் பெயரை குறிப்பிடறது என் வழக்கமாயிடுச்சு..  என்ற போக்கில் பேச்சு போய்க் கொண்டிருந்தது. இப்போது கேட்ட அருண் என்னிடம் கேட்டார். “யார் தல இது? இப்படி கேனவாக்குல பேசியிருக்கான்? முட்டாளா அவன்?” என்று!

 -அது நீங்க தான் அருண்!!!!!!!
()()()()()()()

எழுத்தாளனாக ஒருவன் வாழ்க்கையை ஓட்டுவது தமிழில் சிரமமான விசயம் தான். ஒதுங்கி ஓடிவிடலாம் என்றாலும் இந்த எழுத்தானது அவனை விடுவதே இல்லை.முன்னர் வாழ்ந்த எழுத்தாளர்களில் ஓரளவு குடும்பப் பின்னணி உள்ள எழுத்தாளர்கள் மட்டுமே மன நிறைவுடன் எழுதினார்கள். எழுத்தை மட்டுமே நம்பி வாழ்வில் இன்னும் எத்தனை வருடம் போராடுவேன் என்று எனக்கே தெரியவில்லை.

வாழ்க்கையை ஓரளவேனும் ஓட்ட இலக்கிய எழுத்துக்களால் முடியாத சமாச்சாரம் என்று தாமதமாக தெரிந்து விட்டது. கமர்சியல் எழுத்து எந்த அளவு காப்பாற்றும் என்றும் விளங்கவில்லை.

எழுத்திற்கு வந்து விட்டு இதைத்தான் எழுதுவேன்,அதை எழுத மாட்டேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது.சில வாசகர்களுக்கு பிடிக்கிறது என்பதற்காக சில விசயங்களை வலிந்து எழுத்தாளன் தன் எழுத்தில் திணித்துக்கொண்டே இருக்க முடியாது.

வாசகர்கள் நல்லாயிருக்கு, நல்லாயில்ல..என்று ஒற்றை வரி விமர்சனம் தான் சொல்வார்கள். விரிவாய் சொல்ல அவர்கள் எழுத்தாளர்கள் அல்ல.இன்று வரை என் வாசகர்களிடம் அடுத்த முறை நல்லா பண்ணிடலாங்க, என்றுதான் பேசுகிறேன்.

()()()()()()()()

நீங்கள் சலூன் கடை தேடிச்சென்று தான் முகச்சவரம் செய்து கொள்பவரா? இல்லை வீட்டிலேயே நீங்களாக சவரம் செய்பவரா? தலைமுடியை நீங்களாகவே குறைத்துக் கொள்பவரா? என்னப்பா இத்தனை கேள்வி? என்று நினைக்க வேண்டாம். இப்போதெல்லாம் சவரம், கட்டிங் என்று கடை தேடிச்சென்றால் அவர்களின் சங்கம் நிர்ணயித்த விலைப்பட்டியலை நம் பார்வைக்கு தொங்க விட்டிருக்கிறார்கள். அதை பார்த்துவிட்டு சிலர், “அடுத்த மாசம் பார்த்துக்கலாம்என்று தாடியோடே வீடு திரும்பி விடுகிறார்கள்.
தாடிக்காரர்கள் மாதம் முழுவதும் எதிக்கொள்ளும் கேள்வி.. “என்னா..LOVE AAAA?"

()()()()()()()(

தெரிந்தவர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். போன உடனேயா சாப்பிடுவது? அமர்ந்திருந்தேன். வரிசையாக வந்து சாப்பிட அழைத்தார்கள்.இன்னும் சித்த நேரங்கழிச்சு சாப்புட்டுக்கறேனுங்..என்றேன். விஸ்வரூபம் ரிலீஸ் ஆன தியேட்டரில் டிக்கெட் கவுண்ட்டர் முன் ரசிகர்கள் கூட்டம் நெருக்கி அடிப்பது மாதிரி சாப்பாட்டுக்காக ஹாலை நோக்கி கூட்டம் நெருக்கி ஓடியது. இதில் நுழைவு கேட் வேறு சாத்தப்பட்டிருந்தது.ஹவுஸ்புல் போர்டுமாட்டாதது ஒன்னு தான் குறை.

சிலர் அப்படியும் விடாமல் கைகழுவும் இடம் ஓடி சந்தி முட்டி சாப்பாட்டு ஹாலுக்குள் நுழைந்து யார் சீக்கிரம் இலைச்சாப்பாட்டை முடிக்கப் போகிறார்கள்? என்று தேடிப்பார்த்து, அவர்கள் சாப்பிடச் சாப்பிட காவலாளி போல் அவர்களை ஒட்டி நின்று கொண்டார்கள். இதனால் அவர்களுக்கு எந்த கூச்சமும் இல்லை. சாப்பிடுபவர்களுக்கும் கூச்சம் இல்லை.சென்ற பந்தியில் இலைகள் எடுக்கும் முன்னரே அமர்ந்தவர்கள் தான் அவர்களும். பந்திக்கு முந்து என்று பெருசுகள் சொன்னது இது தானோ!

பல திருமணங்களுக்கு தாமதமாக செல்வதே என் வழக்கம். என்ன சாப்பிட அமர்கையில் சில தீர்ந்து போயிருக்கும். ஆனால் சாப்பாடு ,தயிர் உறுதி.

()()()()()()

முன்னோர்கள் பொன்போல காத்துவந்த நிலபுலன்களின் மதிப்பு இன்று உயர்ந்து விட்டதால், “அதை எதுக்கு மாமா சும்மா போட்டு வச்சிருக்கே? நல்ல விலை வருது. வித்துட்டு காசை கண்ணுல பார்ப்பியா அதை உட்டுட்டு..நான் பாரு.நல்ல விலைக்கு குடுத்துட்டு பேங்க்குல போட்டுட்டேன். அவன் 9ரூவா வட்டி தர்றான்..கார் வாங்கீட்டன்..ஜம்முனு போயிட்டு வர்றேன்என்று பேசி மாப்பிள்ளைகளே தூண்டி விடுகிறார்கள்.
மாமன் தான் என்ன செய்வார் பாவம்..கிணறு வற்றிப்போய் விட்டது. மழை இல்லை, தென்னை மரங்கள் காய்ந்து விட்டன, ஆடு, மாடுகளை தீனிக்கு வழியில்லாமல் விற்றாகிற்று. இனி இந்த நிலம் யாருக்கு வேணும்? பையன்கள் திருப்பூரில் பிழைக்கிறார்கள்...என்ற யோசனைக்கு த்ள்ளப் படுகிறார்கள்.

காட்டுல என்ன அப்புனு போட்டிருக்கே? பருத்தியா? மஞ்சளா? என்ற பேச்சுகளே இல்லை.எந்த பேங்குல போட்டிருக்கே நிலம் வித்த காசை? ப்ரோடவுலயா..இண்டியன்லயா? என்றே பேசிகிறார்கள். இன்னமும் டெபாசிட் அதிகம் வங்கிகளில் வைத்திருப்பவர்கள் கைநாட்டு போடுபவர்களாகவே இருக்கிறார்கள். அதனால் தான் ஈமு வளர்ப்பில் அவர்கள் வீழ்ந்தார்கள். கோவிலில் பூஜை செய்யும் ஐயருக்கு ஈமு வளர்ப்பு பற்றி என்ன தெரியும்? மனைவி கழுத்தில் கிடந்த நகைகளை வைத்து ஈமு பண்ணை போட்டு நட்டப்பட்டார். கர்ப்பக்கிரகத்தில் இருந்த கடவுளாவது ஐயரை நட்டப்படாமல் காப்பாற்றி இருக்கலாம். கடவுள் அதை செய்யவே இல்லை.

()()()()()

திருமணமண்டபத்தில் இரவு நேரத்தில் சீட்டாட்டம், குடி என்று இளவட்டங்கள் கொண்டாட்டம் போடுவதை கண்டிருக்கலாம். இரவுக்காதல்கள் கூட ஓரம்பாரமாய் நடக்கும். நான் சென்ற மண்டபத்தில் இளவட்டங்களையே காணோம். எங்கடா பூட்டாங்க அம்முட்டு பயலுவலும் என்று மண்டபத்தின் பின்புறம் வந்து பார்த்தால் கிரிக்கெட் மேட்ச்சே நடந்து கொண்டிருந்தது விளக்கு ஒளியில். சுற்றிலும் வலை கட்டி உள்ளே ஆட்டம் நடந்த்து. வலைக்கு வெளிப்புறம் ஆட்டகாரர்களை இசுக்காப்படுத்த சுடிதார் பெண்களில் இருந்து உறவினர் கூட்டம்.

யாரோ மாப்பிள்ளை எங்கப்பா மண்டபத்துல காணோம்? இணைச்சீர் செய்யணும்..என்று வெள்ளை வேட்டிகள் ஆட்டகளம் நோக்கி ஓடிவந்தன.மாப்பிள்ளையோ ஸ்டெம்ப்புகள் அருகே அம்பயராக நின்றிருந்தார்.

இந்த ஓவர் முடிஞ்சதும் ஆட்டம் முடிஞ்சுது வர்றேன் மாமா..சுடுதண்ணீல உட்டாமாதிரி பறக்காதீங்க, நீங்க போங்கஎன்று அம்பயர் மாப்பிள்ளை சொன்னார். “விளையாட்டுப் பிள்ளையா இருக்கியே மாப்பிள்ளேஎன்றார்கள் வேட்டிகள். 

பேட்ஸ்மேன் அடித்த கடைசி பந்து அம்பயரின் கிட்னியில் சத்தென விழுந்ததும் மாப்பிள்ளை கீழே சாய்ந்து விட்டார். கெடுத்தீங்கடா கதையை...வேட்டிகள் மடித்துக் கட்டிக்கொண்டு ஓடின. எனக்கும் கூட என்னடா இது இப்படி..என்றாகிவிட்டது. பார்த்தால் நல்லவேளை மாப்பிள்ளை கிட்னி கார்டு போட்டபடி தான் அம்பயரிங் செய்திருக்கிறார்.

()()()()()()

சமிபத்தில் எனது வாசக நண்பர் சத்தியமங்கலத்திலிருந்து அலைபேசியில் அழைத்தார். வீட்டுல தான இருக்கீங்க? என்றார். அடியேன் எப்போதும் வீட்டிலேயே தானே இருக்கிறேன். அவர் 2 உருண்டை வடிவிலான அழகான வொய்ன் பாட்டில்களோடு வந்தார். அவர்கள் வீட்டில் தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் ஊற்ற இந்த பாட்டில்களை பயன்படுத்துகிறார்களாம்.கர்நாடக எல்லைக் கடையில் வாங்கியது என்றார். அங்கே தமிழில் பேசி வாங்கினால் ஒரு ஃபுல் பாட்டில் 150 ரூபாயாம். கன்னடத்தில் பேசி வாங்கினால் 100 ரூபாயாம்.இங்கே த்மிழ் நாட்டில் வொய்ன் கோட்டர் பாட்டிலே 90 ரூபாய்.


மேற்கொண்டு இந்தக் காரியத்தை செய்யாதீர் நண்பரே..நம் அரசு நமக்காக மதுபானக் கடைகளை நம்மை நம்பி ஆட்களுக்கு சம்பளம் கொடுத்து திறந்து வைத்திருக்கிறது. பத்து ரூபாய் முன்னபின்ன இருந்தாலும் நம்ம சரக்கே நமக்கு போதுமானது., என்றேன். சரிதானுங்க, என்றார்.கேரளாவில் பியர் பாட்டிலின் விலை 50 ரூபாய். இந்தியாவில் நல்ல குடிகாரர்களைப் பெற்றிருக்கும் 2வது மாநிலம் தமிழ்நாடு. குடிதான் தங்களை வழிநடத்துவதாக நம்பிக்கையோடு டாஸ்மார்க் நோக்கி எல்லோரும் செல்கிறார்கள். தமிழகத்திற்கு வாட்டர் தரக்கூடாது,குண்டி கழுவ வாட்டர் இங்கே இல்லை என்று கர்நாடகத்தில் கடையடைப்பு, கேபிள் நிறுத்தம், ஒருநாள் சுயமைதுனம் செய்யாமை, என்று போராட்டங்கள் நடத்துகிறார்கள்..முதல் பாட்டிலுக்கு துளி திருகல் ஆரம்பித்ததும், கோபத்தில் 2வது பாட்டிலை டணங் என்று உடைத்து விட்டேன்.வெல்க தமிழ்! வாழ்க தமிழ் நாடு!

()()()()()()()()

திருமணமண்டபத்திற்கு சென்றதே சென்றோம் மாப்பிள்ளையும், பொண்ணும் சிரிச்சமானிக்கி மேடையில நிக்காங்களே போயி கூட நின்னு ஒரு போட்டோ புடிச்சுக்கிட்டமுன்னா வருகை பதிவு ஆகிடும் என்று கிளம்பினேன். மேடைக்கி படிஏறிப்போய் வணக்கம் வைத்தேன். புகைப்படம் எடுப்பவன் மாப்பிள்ளையோட ஒட்டி பல்லக் காட்டுங்கன்னான். அதே சமயம் பொண்ணுப்பிள்ளை பக்கத்தில் ரெண்டு சுடிதார் கிழவிகள் கிக்கிக்கீ புக்கிக்கீ என்று வந்து நின்று பல்லைக் காட்டினார்கள்.மாப்பிள்ளை எந்த நேரமும் டாஸ்மார்க் கடையிலயே கிடப்பவன் இன்று குடியாமை போராட்டத்தில் இருந்தான். போட்டோ கிளிக்கியதும் மாப்பிள்ளை கைப்பிடித்து குலுக்கி வாழ்த்து சொல்லி கிளம்ப எத்தனிக்கையில் பொண்ணுப் பிள்ளை பாய்ந்து வந்துநீங்க வா.மு.கோமுதானஎன்றார். ஆமங்க, என்றேன். எங்கே இனி நின்றால் ஏன் பாலியலை எழுதறீங்க என்று கேட்டு விடுவாரோ என்ற பயத்தில் விடைபெற்று வந்து விட்டேன். இப்புடிக்கூட என் பெயரை அறிந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது சந்தோசமான சந்தோசம் தான்.

()()()()()()()

அரசாங்கம் மதுபுட்டிகளின் விலையை உயர்த்தி அட்டகாசம் செய்கிறது என்றபோது உலக மகாக் கடுப்பான மாணிக்கம் கடைக்குள் மது அருந்தியபடி இருந்த மாப்பிள்ளைகளிடம் கொந்தளித்து விட்டார். குடிகாரர்களை ஒன்று திரட்டி சென்னிமலை தேர்முட்டி அருகே போராட்டம் நடத்த வேண்டுமென கூச்சலிட்டார். அவரது உணர்ச்சிகரமான பேச்சில் மயங்கி போதையின் விளிம்பில் இருந்த மாப்பிள்ளைகள், செஞ்சுடலாங்க மாமா, என்றனர்.
மாப்பிள்ளைகளா..கேஸ் சிலிண்டர் விலைஉயர்வு, டீசல் பெட்ரோல் விலை உயர்வு, கரண்ட்டுத் தட்டுப்பாடுன்னு நடந்தா..சால மறியல், பந்த்து பண்றாங்கள்ல..நாமும் ஒரு வாரம் குடி நிறுத்தப் போராட்டம் செஞ்சம்னா அரசாங்கம் நிதிப்பத்தாக்குறையில தவிக்குமுல்ல.அப்புறம் தன்னப்போல குறைப்பாங்க..ந்னக்கொரு சந்தேகம் மாப்பிளைகளா..இந்த அரசாங்கம் நம்மளை தப்பா நெனச்சுப் போட்டுதோ! ஆளாளுக்கு ஊட்டுல பணம் காய்க்கிற மரம் வச்சிருக்கானுவோ..அதை ஒரு உலுக்கு உலுக்கி கொட்டுற காசை கொண்டாந்து சரக்கு கடையில வீசுறானுவோன்னு நினைச்சுப் போட்டுதா

நீ போ மாமா..ஊட்டுல பொன்னாயா முண்டுக்கட்டையில சாத்தீடப் போவுது

-
ஒரு ரூவா தண்ணி பாக்கெட்டை 5 ரூவாய்க்கி விக்கிற நீ பொன்னாயாளப்பத்தி பேசப்பிடாது..பொன்னாயா எலிசபெத் மகாராணிடா!”

சரி போயி இப்பவே ரோட்டுல உக்காந்து போராடு..லாரிக்காரன் வந்து ஏத்தட்டும்

-
அட மாப்பிள்ளே..இன்னிக்கி அஸ்டமி. அஸ்டமில ஆடு கூட புலுக்கை போடாது. நாளைக்கி நவமி ஆடு அடக்கி வச்சிருந்து நாளைக்கி காலம்பற நேரத்துல புலுக்கை போடும்..பக்தி இல்லாத பூனை பரமண்டலம் போச்சாம் நெத்திலி மீனை வாயில கவ்வீட்டுங்ற மாதிரி பேசுறாம் பாரு பேச்சு.
குடிநிறுத்த போராட்டத்திற்கு குடிமக்களே வராத காரணத்தினால் போரட்டம் சென்னிமலையில் நடவாமல் போனது வேடிக்கை பார்த்த எனக்கும் வருத்தம் தான்.ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்து விடலாம்..ஆனால் குடியாமை கசப்பான விசயம்.

()()()()()(

எதோ புள்ள கூட கடலை போடறான்னு நெனச்சுட்டனுங்கொ! அப்பறமேத்திக்கித்தான் தெரியுது அது ரிங் டோனுன்னு!

--
ஹலோ, ஹலோ. என்னடா போன எடுக்க இவ்ளோ லேட்டா? ஆமா நீ ரொம்பா பிசியாத்தான் இருப்பே! அப்ப நாங்கெல்லாம் என்ன வெட்டித்தனமா சுத்தீட்டு இருக்கமா? இங்க பாரு, போன் அடிச்சா உடனே எடுக்கணும் சரியா! எதுக்கு இவ்ளோ லேட் பண்ணீட்டு இருக்கே?நான் எவ்ளோ நேரமா வெய்ட் பண்ணிட்டிருக்கேன் தெரியுமா..நீ எடுப்பே எடுப்பேன்னு.. எவ்ளோ மிஸ்கால்ஸ்சு.. உன் மொபைல்லயே எடுத்துப் பாரு, ஆமா நீ சொல்ற ரீசனையெல்லாம் இங்க கேக்கற மாத்ரி இல்ல! போன் பண்ணா ஒழுங்கா எடுக்கற வழியப்பாரு, அப்டி இல்லன்னா மிஸ்கால் வந்துச்சுன்னா அதை பாத்துட்டு கால் பண்ண மாட்டியா! அங்க என்ன பண்ணிட்டு இருக்கே? ரோட்ல உக்காந்துட்டு சும்மா போற வர்ற பொண்ணுகள சைட் அடிச்சுட்டு இருக்கிறதே வேலையாப் போச்சு, அறிவிருக்கா உனக்கு கொஞ்சமாச்சிம்,,மூஞ்சப் பாரு. ஆமா நா அந்த வழி போனேனேகொஞ்சமாச்சிம் கண்ணு தெரிஞ்சிச்சா அறிவு கெட்டவனே,,,அப்டியே ஆன்னு வாய பொழந்துட்டு.. அப்டி என்னதாண்டா இருக்கு அந்த பொண்ணுக கிட்டே? த்தே இந்த மாதியெல்லா பண்ணீட்டிருக்கே? அப்டியா ரீசனு! சரி சரி நளைக்கி வருவேன்.. அப்ப பத்து கவினிச்சுக்கறேன் சரியா.. ஓக்கே.. பை!

()()()()()()
.
காலு ஒரு கெடயில தங்கற மாதிரியான ஆளா இருந்தா ஸ்டால் எண் 112ல் வா.மு.மாமுவை 6-8-2013 செவ்வாய் அம்மாவாசை திதியும், பூராடம் நட்சத்திரமும் கூடிய நன்நாளில் மதியம் 1 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வாசகர்கள் சந்திக்கலாம் என்று ஈரோடு புத்தக கண்காட்சி மைக்கில் அறிவித்து (அதுவும் வாசகர்களின் முக்கிய கேள்வியான பாலியலை ஏன் எழுதுகிறீகள்?) தூள் கிளப்பச் சொல்லலாம்! முடிந்த அளவு பக்கத்தில் கோவிலில் வேண்டுமானால் தேங்க பழ தட்டோடு எப்படியும் 2 நண்பர்களோடு இருப்பார் என்று வேண்டுமானால் அறிவிக்க அது நிச்சயம் நடந்து விடும். 

நேற்றே இருந்திருக்க வேண்டிய ஆள்! திருப்பூரில் இருந்து வந்து விடுவதாக சொன்ன நண்பருக்கு பக்கத்து வீட்டில் இழவு காரியம் நடந்து விட்டதால் திட்டம் கான்சல் ஆகிவிட்டது. அவரே மீண்டும் இன்று வந்துவிடுவதாக அறிவிப்பு தந்திருக்கிறார். தவிர வெளியூரிலிருந்து 2 நண்பர்கள் வரவிருப்பதால் கண்காட்சி வாயிலில் மதியம் அவர்களை வரவேற்க காத்திருப்பேன். 

ஆடி மாசம் ஆட்டுகிறது மனுசனை என்பார்கள். புத்தக வெளியீடு சம்பந்தமாக முக்கிய நண்பர்கள் மூன்று பேரை இன்று சந்திக்க வேண்டும் நான். பார்ப்போம். மீதி விசயங்களை நாளை சொல்கிறேன்!

()()()()()()()

கவிநி கமலா முன்ன எழுதுனவை!=================

-
அவளோட உனக்கென்னடா பேச்சு?

-
நீ தான் பேச வேண்டாம்னு சொல்லிட்டியேடி, இனி உனக்கென்ன?

-
பேசலைன்னு சொல்லிட்டா இன்னொருத்திகிட்ட போயிடுவியாடா? நான் உன்ன மாதிரி யாராச்சிம் கிட்ட போயி வாய் கிழிய பேசினேனாடா? என்னை ஏண்டா சாவடிக்கிறே?

-
பேசு போ! நோ அப்ஜக்ஸன்

-
இன்னொரு தடவ நீ பொட்டச்சிகளோட இளிச்சுட்டு நிக்கிறத பார்த்தேன்.. என்ன பண்ணுவன்னு எனக்கே தெரியாது.. டேய்.. சிரிக்கிறியாடா? கொரங்கா!
===============================================

என் முதல் கவிதைகள் ஒரு குயர் ரூல்டு நோட்டில் எழுதி தீர்க்கப்பட்டபின் முதல் காதலிக்கு சமர்ப்பணம் செய்து அவளிடமே நீட்டி விட்டேன். என் இரண்டாம் கட்ட கவிதைகள் ஒரு குயர் பால் பேப்பர் நோட்டில் எழுதித் தீர்க்கப் பட்டபின் இரண்டாம் காதலிக்கு சமர்ப்பித்து அவளிடமே நீட்டிவிட்டேன். பின் நான் கவிதை எழுதுவதை விட்டொழித்து விட்டேன். மனைவி வந்த பிறகு பிளி ஒரு கிலோ, தக்கோளி அரைக் கிலோ, சக்கரை கால் கிலோ என வெத்துத் தாள்களில் எனக்கு கவிதை எழுதி நீட்டுகிறாள். வாழ்க்கை கவிதையாய் நகர்கிறது. உங்கள் காதலிகள் மீது வருத்தமுண்டா? என்றொருநாள் கேட்டாள். வருத்தம் அவர்கள் மீதல்ல..அந்த ஒருகுயர் நோட்டுகள் மீது தான், என்றேன். எனக்கு எப்போது எழுதுவீர்கள்? என்றாள். வயிறு உனக்கு புடைத்திருக்கிறதே தெரியவில்லையா! என்கிறேன்.
()()()()()()()

சாந்தாமணிக்கு!
என்னைப்பற்றியே ஏன் எழுதுகிறாய்? என்கிறாய்!
எனக்கு தெரியாதா..வேறு எதாவது
எழுதினால் கோபிப்பாய்! – அந்த கடிவாளத்தை
பிடித்து ஓட்டத்தை நீ கட்டுப்படுத்தவே இல்லை!
காதல் உன் உன் நெஞ்சம் நிரம்பி வழிவதாய்
சந்திக்கும் சமயமெல்லாம் சந்தோசித்தாய்!
வாழ்ந்த நாட்களும், வாழும் நாட்களும்
எனக்கோ கனவாய்! – புகைப்படலத்தில்
ஒற்றை நட்சத்திரமாய் தோன்றி மறைந்த
விட்டில் நீ! – சிலவற்றை மனதில் பூட்டி
வைப்பது கூட சுகம் தான்! உன்னையும்!
ஒய்யார சஞ்சரிப்பில் இடையூருக்கென்றே
அவ்வப்போது வந்து போகிறாய்!- நடந்து
கொண்டிருக்கும் மர்ம நாடகத்தில் உனது காட்சி
எங்கு வருகிறதோ? – உன்னைப் பற்றிய
ஞாபக ஓசைகளை கடத்திவந்து தாள் நிரப்புவது
எனது வேசங்களை அழுக்கு வேட்டியாய்
அவிழ்த்துப் போட!

யாரும் யாரையும் கண்டு கொண்டதாய்
காட்டிக் கொள்ளவேயில்லை..இருந்தும்
புரோகிதர் மந்திரம் உச்சரிக்கத்தான் செய்தார்.
தாலி கட்டிக் கொண்டு மணமேடை சுற்றினாய்!
விட்டேற்றியாய் நின்று களைத்து தெருவில் இறங்கினேன்!
இனி வாழ்க்கை எனை அழைத்துப் போகும்!
மனிதத்தை தேட வேண்டியது பாக்கி!!!!!!
()()()()()()()()
தமிழில் இலக்கியத்தரமாக சிறுகதை எழுத ஆசைப்படுபவர்கள், எழுதி இலக்கிய சிற்றேடுகளில் வெளிவர ஆசைப்படுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் படிப்பு. யாரை தேர்ந்தெடுத்து படிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். முதலில் அசோகமித்திரன் சிறுகதைகளை வாசித்திருக்க வேண்டும். அவரது சமீபத்திய கதைகளை அல்ல! அவர் முதலில் தொகுப்பு போட அவர் காசையே செலவு செய்து விட்ட சிறுகதை தொகுப்புகள்! அடுத்ததாக அஸ்வகோஷ் (ராஜேந்திரசோழன்) சிறுகதைகள்! தமிழினி இவரது மொத்த சிறுகதை தொகுப்பு வெளியிட்டு விற்று விட்டது! யாரிடமேனும் பிரதி இருந்தால் எனக்கு வேண்டும். எப்போது படித்தாலும் சலிக்காத கதைகள் அவைகள். தமிழில் வேறு யாரையும் நான் சிபாரிசு செய்ய முடிவுகளோடு இல்லை.

  புதுமைப்பித்தன் எழுத்துகள் படித்தேன் என்றாலும் அவைகள் தனி மனிதனின் எழுத்துக்கு தூண்டுகோளாய் இல்லை. அவரை சிபாரிசு செய்ய நான் தயாரில்லை! மொளனி, நகுலன் என்றெல்லாம் சொல்வார்கள் நம் ஆட்கள்! அவைகள் குப்பைகள்! பைத்தியக் குழியில் தள்ளிவிட தயாராய் இருப்பவைகள்! நண்பர்களே! இந்தப் பார்வை கமர்சியல் எழுத்து எழுத கதைக்குதவாது! அது தனி ரூட்!
()()()()()()()()

தேனீர் இடைவேளை=========
நீங்கள் திரையரங்கில் தேனீர் இடைவேளையின் போது
பார்த்திருக்கலாம்.. முட்டை போண்டாவை அவசரமாய்
விழுங்குபவர்களையும், அவசரமாய் பீடி இழுத்துக்
கொண்டிருப்பவர்களையும்.. டீ குடித்து முடித்தான பின்
ப்ளாஸ்டிக் தம்ளர்களை காலில் போட்டு சதக்கென
மிதிப்பவர்களையும்.. கோன் ஐசைப் பிடித்துக் கொண்டு
அரங்கினுள் அமர்ந்திருக்கும் கள்ளக் காதலிக்கு
கொண்டு செல்பவர்களையும்… சோளப் பொரிப்
பொட்டலங்களை மடியில் கட்டிக் கொண்டு திருட்டு
முழி உருட்டிப் போகும் பெண்களையும்…
டீ டோக்கன் வைத்துக் கொண்டு டீ தம்ளருக்காய்
மாஸ்டரிடம் நீட்டிக் கொண்டிருப்பவர்களையும்…
அடுத்து அரங்கிற்கு வரப்போகும் படத்தின் ஸ்டில்களை
பார்த்தபடி இருக்கும் சிலரையும், இதற்கெல்லாம்
வழியின்றி உங்களை போலவே திறந்திருக்கும்
திரையரங்கக் கதவில் சாய்ந்து நின்று பார்த்துக்
கொண்டிருக்கும் சிறுவனையும்.. சிறுமியையும்..
நீங்கள் தேனீர் இடைவேளையின் போது திரை
அரங்குகளில் பார்த்திருக்கலாம்தான்!!!!!!!
()()()()()()()

.

Post Comment

கருத்துகள் இல்லை: