செவ்வாய், டிசம்பர் 10, 2013

இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி  அவிநாசி பேருந்து நிறுத்தம் மாலை வேளையில் பரபரப்புடன் இருந்தது. சாலையோரத்தில் தள்ளுவண்டி கடைகளில் பொறிக்கப்படும் மீனின் வாசனை பேருந்து நிலையம் முழுதும் நிரம்பி இருந்தது.

  வாசனை பிடிக்காதவர்கள் தங்கள் மூக்கை கர்ச்சீப்பால் பொத்திக்கொண்டு தங்கள் பேருந்து சீக்கிரம் வந்தால் தேவலையே என்று சாலையை எட்டிப் பார்த்தார்கள். மல்லிகைப்பூவை கூடையில் தூக்கி வந்த பெண்மணி கணவர்களின் அருகில் நிற்கும் பெண்களிடம்முழம் பத்து ரூபாய் தான்மா, வாங்கிக்கோங்கஎன்று கூடையை கீழே இறக்கி வைத்து வியாபாரம் செய்து தொகை வாங்கிக் கொண்டு அடுத்த கணவரையும் அவர் மனைவியையும் தேடிச் சென்றாள்.

 பேருந்து நிறுத்தத்தினுள் இருந்த டீக்கடையில், விழியே கதை எழுது..கண்ணீரில் எழுதாதே..மஞ்சள் வானம்.. என்று பாடல் பெருத்த சப்தமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. டீ மாஸ்டர் அவனே பாடகன் போல் பாடலுடன் கூடவே பாடிக்கொண்டே டீ ஆற்றிக் கொண்டிருந்தான்.

  திருப்பூரிலிருந்து கோவை செல்லும் பேருந்துகள் நிரம்பிப்போய் வந்து ஓய்ந்து நின்றன. ஜன்னல்புறமாய் அமர்ந்திருந்த பயணிகளை நோக்கி கூடையில் முறுக்கு, சோன்பப்படி வைத்திருந்தவர்கள், பாக்கெட் பத்து ரூவா, பாக்கெட் பத்து ரூவா.. என்று விற்பனை செய்ய பறந்து ஓடி கூவினார்கள்.

  ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த குழந்தை ஒன்று எனக்கு வேணும், எனக்கு வேணும் சோனுபப்புடி என்று அழுகையை ஆரம்பித்த போது அந்தப் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிவிட்டது. அந்தக்குழந்தை எவ்வளவு நேரம் சோன்பப்படி கேட்டு அழுமோ தெரியவில்லை.

  பேருந்துகளில் மக்கள் வந்து இறங்குவதும், ஏறிச் செல்வதுமாக இருக்க சரியாய் ஆறு மணி என்கிறபோது திருப்பூரிலிருந்து வந்து நின்ற குமரன் பேருந்தில் வாடிப் போன பதுமையாய் இளநீல வர்ண சேலை அணிந்த அந்தப்பெண் தன் கைப்பையை பத்திரமாய் அழுத்திப் பிடித்தபடி இறங்கினாள்.

 குமரன் பேருந்தின் நடத்துனர் இவள் பின்னேயே இறங்கியவன் தினமும் பேருந்தில் வரும் ஒரே தேவதையான இவளைப் பார்த்து அசட்டுப் புன்னகை ஒன்றை வீசினான்.பதிலுக்கு புன்னகைக்க முடியாதபடி இன்று இவள் கம்பெனியில் கம்ப்யூட்டரில் கணக்கு வழக்கு என்று ஐந்து மணி வரை நிமிரக்கூட முடியாமல் வேலையின் களைப்பு அவளை சோர்வடையச் செய்திருந்தது.

 எப்போதும் இப்படி வேலை கம்பெனியில் இருக்காது தான். வெளி மாநிலங்களுக்கு ஆர்டர் முடிந்த பார்சல் பெட்டிகளை அனுப்பும் நாட்களில் மட்டும் இப்படித்தான் இருக்கும். நாளை கம்ப்யூட்டர் முன் பொழுதை கழிப்பதாகத்தான் இருக்கும். முகநூலில் உட்கார்ந்து வெளிஊர் தோழிகளிடம் வெட்டியாய் சாட்டிங் செய்து கொண்டு இருக்கலாம்.

 வீட்டில் இன்று வேலைக்கு செல்வதை அம்மாவும், அப்பாவும் காலையிலேயே வேண்டாம் என்றுதான் பேசிக் கொண்டிருந்தார்கள். சேலத்திலிருந்து பெண் பார்க்க வருகிறார்கள், என்று இவள் அப்பாவை அதட்டிக் கேட்ட போது தான் சொன்னார்.

 யாரோ குடுமி சும்மா ஆடாதாம் என்பது போல அதைக் கேட்டதும் உணர்ந்தவள், “ஏன் இப்படி என் கல்யாணத்திற்கு அவசரப்படறீங்க? நான் உங்களோட இருக்கிறது பிடிக்கலையா? துறத்தியடிக்கப் பார்க்கறீங்களா?” என்று கேட்டு விட்டாள்.

 “அப்படி இல்லம்மா இந்து, உன் வயசு தான் பக்கத்து வீட்டு பிரேமாவுக்கு.. அவள் கல்யாணம் பண்ணிப் போய் இப்ப ரெண்டு குழந்தைகள். அவினாசி தேருக்கு வந்தவளை நீயும் தான பார்த்து பேசினே! எங்களுக்கும் எங்க பேரப்பிள்ளைகளை கையில தூக்கி கொஞ்சணும்னு ஆசை இருக்காதா?” என்றாள் அம்மா பர்வதம்.

 “அந்த ஆசைக்காக நான் கல்யாணம் பண்ணிக்கனுமா? என்னம்மா பேசுறே நீ? இப்பத் தான் நான் வேலையில சேர்ந்து ஒன்பது மாசம் ஆகுது. டிகிரி முடிச்சு சும்மா இருக்கேன்னு கம்ப்யூட்டர் கிளாஸ் போனேன். கத்துக்கிட்டு வேலையில சேர்ந்ததும் மாப்பிள்ளை சேலத்துல இருந்து வர்றாருங்கறீங்க. எனக்கு இருபத்திரெண்டு வயசு தான்மா..இன்னம் ரெண்டு வருசம் போகட்டும்மா” என்றாள் இந்து.

 “அவிங்க மதியம் வருவாங்கடி.. நம்ம சொந்தம் தான். மாப்பிள்ளை எதோ மோட்டார் கம்பெனில மேனேஜரா இருக்காப்லையாம். நல்ல சம்பளம். ராசாத்தி மாதிரி கட்டிட்டு போறதை உட்டுட்டு இப்படி பிகு பண்ணிக்கிறியேடி!” என்றாள் பர்வதம்.

 “என்னது பிகு பண்ணிக்கிறேனா? ரெண்டு வருசம் போகட்டும்னு தான் சொல்றேன். கல்யாணம் வேண்டாம்னு எல்லாம் சொல்லலைம்மா. போக இன்னிக்கி நான் கம்பெனிக்கி போகலைன்னா எப்பயும் வரவேண்டாம்னு சொல்லிடுவாங்க.” என்றாள்.

 “எதுக்கு வர வேண்டாம்னு சொல்றாங்க? போனு போட்டுக்குடு நான் பேசுறேன். இந்த மாதிரி என் பொண்ணை பார்க்க மாப்பிள்ளை வீட்டுல இருந்து இன்னிக்கி வர்றாங்க, இன்னிக்கி மட்டும் இந்து வரமாட்டாள்னு நான் சொல்றேன்“

 “அம்மா உனக்கு சொன்னா புரியாதும்மா விடேன்”

 “நாங்க வரச் சொல்லிட்டமேடி. வந்தவங்களுக்கு என்ன பதில் சொல்ல?”

 “சுவத்துல மாட்டியிருக்கில்ல என் போட்டோ..அதான் பொண்ணுன்னு காட்டுங்க”

 “விளையாட்டு பேசாதேடி”

 “என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லாமல் வரச்சொன்னீங்கள்ல, நீங்களே ஜமாளிங்க!”

 “நம்பி சொல்லிட்டோம்டி. சங்கடமா நினைச்சுட்டாங்கன்னா தப்பாயிடும்டி”

 “அப்பாவை போன்ல பேசச் சொல்லிடும்மா.. நாளைக்கி வரட்டும் அவங்க. ஆனா மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கணும். பிடிச்சாலும் ரெண்டு வருசம் கழிச்சித்தான் திருமணம்னு சொல்லுவேன். அவசரம்னா அவங்க சேலத்துலயே பொண்ணு தேடி கட்டிக்கட்டும். ஓ.கேவா!”

 “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான் ஓவர் பந்தா காட்டுவாங்க, இங்க என்னடான்னா பொண்ணு பிள்ளை ஓவர் சீன் போடுது” இப்போது தான் அப்பா ஏகாம்பரம் பேசினார்.

 ஏகாம்பரம் அவிநாசி யூனியன் பாங்க்கில் காசாலராக இருக்கிறார். ஆயிற்று அவர் ஓய்வு பெற. குடி ஒன்று தான் அவரிடம் உள்ள மிகப் பெரிய குறை. மற்றபடி தங்கமானவர். யாரையும் கடிந்து ஒரு சொல்கூட சொல்லாதவர். இந்து இப்போது அவரிடம் திரும்பி நின்று கொண்டாள்.

 “சீன் நீங்க தான் போட்டிருக்கீங்க அப்பா. சரி எனக்கு செய்ய எவ்ளோ வச்சிருக்கீங்க? மாப்பிள்ளை இருபத்தஞ்சு பவுன் கேட்டா என்ன செய்வீங்க?” என்றாள்.

 “கடனோ உடனோ வாங்கி செய்வோம்மா. அதைப்பத்தி உனக்கென்ன?”

 “என்னை எதுக்குப்பா படிக்க வச்சீங்க? அதைப்பத்தி உனக்கென்னன்னு கேட்கறீங்க? நீங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டணும்னா நான் கையெழுத்து போடத் தெரிஞ்சதும் படிப்பை நிறுத்தியிருக்கலாமேப்பா”

 “அதுக்கு சொல்லலைம்மா.. குழப்பிக்காதே. காரியம்னு வந்துட்டா, அதும் நல்ல காரியத்துக்கு யோசிக்காம செய்யணும்ங்கறேன்.
 “அம்மா கழுத்துல இருக்கிற பத்து பவுனை நம்பி பேசிட்டு இருக்கீங்கன்னு நான் நினைக்கிறேன். நான் இந்த வீட்டை விட்டு என் வீட்டுக்காரரோட அவங்க வீடு போறப்ப அம்மா கழுத்துல நகை அப்படியே இருக்கணும். ஓ.கேன்னா சொல்லுங்கப்பா. நான் இப்பவே வேலையை விட்டுடறேன். இதா போன் போடறேன்.” என்றாள் இந்து.

 அப்பாவிடம் பேச்சு எதுவும் இல்லை. அவர் பர்வதத்தின் முகம் பார்த்தார். பர்வதம் பதில் பேச முடியாமல் கை பிசைந்து கொண்டு நிற்கவும் இந்து தன் கைப்பையை தூக்கிக் கொண்டு கிளப்பினாள். அவர்கள் அப்புறமாக என்ன முடிவு செய்தார்கள் என்று இந்துவிற்கு தெரியாது.

 இந்து தன் வீடு நோக்கி செல்கையில் தான் பின்னால் யோசனையில் வருவது போலவே வரும் அவனை பார்த்தும் பாராதது போல நடந்தாள். யாரிவன்? இந்த ஒரு மாதமாக அடிக்கடி கண்ணில் தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கிறானே! எப்போதும் என்னை பின் தொடர்வதையே முக்கியமான வேலை போல் செய்கிறானே!

 இத்தனை நாள் யாரோ ஒரு பயணி என்றுதான் நினைத்திருந்தாள் இந்து. ஆனால் அவன் பயணி அல்ல என்று இப்போது பின்னால் வருவதை வைத்து முடிவு செய்தாள். ஓரக்கண்ணால் அவனை மனதில் இருத்திக் கொள்வதற்காகப் பார்த்தாள். அவன் அணிந்துள்ள உடை மற்றும் பாவனை விசயங்களில் ஒரு ஆண்மைத்தனம் இருப்பதை கண்டுணர்ந்தாள்.
 சரி இப்படியானவனுக்கு என் பின்னால் என்ன வேலை? நாளை முதல் இவன் ஏன் கண்களுக்கு தட்டுப்பட்டுக் கொண்டே இருக்கிறான் என்பதி கண்டறியா வேண்டுமென முடிவு செய்து ஓரக்கண்ணால் பார்க்கையில் அவனைக் காணோம். ஒருவேளை இவன் மாயாவியோ? என்ற நினைப்பில் நடந்தவளின் கைப்பையில் இருந்த அலைபேசி அழைக்கவே நின்று அதன் ஜிப்பைத் திறந்தாள்.

 வீட்டிலிருந்து தான் அழைப்பு. சாலையில் வாகனங்களின் இறைச்சலில் நின்று என்ன பேசுவது? இன்னும் ஐந்து நிமிடத்தில் வீடு போய் சேர்ந்து விடலாம். நினைப்பில் அலைபேசியை காதுக்கு கொடுத்தாள் இந்து.

 “என்னப்பா சொல்லுங்க?”

 “அவுங்க வந்து அரைமணி நேரமா உனக்காக காத்துகிட்டிருக்காங்கம்மா” என்றார்.

 “சும்மா அவுங்கன்னா யாருப்பா?”

 “காலையில சொன்னோம்ல சேலத்துல இருந்து.. அவுங்க”

 “ஓ, சாரிப்பா நான் மறந்துட்டேன். வீட்டுக்கு கிட்ட வந்துட்டேன்ப்பா. கட் பண்ணுங்க” என்று அலைபேசியை அணைத்து கைப்பையில் போட்டுக் கொண்ட இந்துவிற்கு புதிதாய் இதயம் சற்று வேகமாய் துடிக்க ஆரம்பித்து விட்டது. இயல்பாய் நடந்தவளின் நடை கூட தடுமாற்றமாகி அசிங்கமாய் நடக்கிறோமோ! என்ற சந்தேகத்தை கொடுத்து விட்டது.

 தன்னையறியாமலேயே பின்னால் திரும்பிப் பார்த்தாள். தன்னை ஒரு மாதமாக பின் தொடர்பவன் இந்த தள்ளாட்டமான நடையை பார்த்து விட்டால்? கிறுக்கு! என தன்னையே கடிந்து கொண்டாள். அவன் பார்த்தால் தான் என்ன? அவன் யாரோ! என்று நினைக்கையில் கூட இவளுக்குள் குறுகுறுப்பாய் இருந்தது.

 அப்பா வாசலிலேயே காத்திருந்தார். இதயத்தின் துடிப்பு இப்போது அதிகமாகிவிட்டது. அப்பா நான் யாரையும் பார்க்கலைப்பா..பயமா இருக்குப்பா..என்று சொல்லி அழவேண்டுமென தோன்றிற்று  அவளுக்குள். அப்படி சொல்லிவிட்டால் அப்பா தன் கிண்டலை ஆரம்பித்து விடுவார். சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு, என்பார்.

 வீட்டினுள்ளேயே செல்ல விடாமல் பக்கது வீட்டு அக்கா தன் வீட்டுக்கு அழைத்துப் போய் முகம் கழுவ வைத்து இவளின் வேறு புதிய சேலையை கட்டிக்கொள்ள எடுத்து நீட்டியது. அக்கா வீட்டிலேயே புதுமணப்பெண் போல தயாராகி தன்வீட்டுக்குள் அக்காவின் துணையோடு வந்தாள்

 மாப்பிள்ளை வீட்டிலிருந்து அப்பா, அம்மா,மாப்பிள்ளையின் தாய்மாமனும் வந்திருந்தார்கள். மாப்பிள்ளைக்கு நகம் கொறிக்கும் பழக்கம் இருக்கும் போலிருக்கிறது. பத்து விரல்களிலும் நகங்கள் துளிதுளிதான் இருந்தன. இப்போதும் மாப்பிள்ளை அதையேதான் கொறித்தபடி இருந்தார்.

 திருமணத்திற்குப் பிற்பாடு மனைவியின் கையைப் பிடித்து விரல் நீவி அவளின் நகங்களை கொறித்து விடுவாரோ! என்றுதான் இந்துவின் அம்மா பர்வதம் யோசித்துக் கொண்டு சமையலறையில் அவர்களுக்காக காபி தயாரித்துக் கொண்டிருந்தாள்.

 இந்துவிற்கு தன்னை ஒருவன் பெண் பார்க்க வந்து அமர்ந்திருக்கும் விசயமே மிகவும் வெட்கமாக இருந்தது.வந்தவர்களுக்கு தட்டில் காபி எடுத்து வந்து கொடுத்தாள். மாப்பிள்ளை தன் வாயிலிருந்து விரலை எடுத்து விட்டு தட்டிலிருந்த டம்ளரை எடுத்துக் கொண்டான்.

 இவள் வருவதற்கு முன்பாகவே மாப்பிள்ளை வீட்டாருக்கு இனிப்பு, கார ஐட்டங்களை அம்மா தட்டில் கொடுத்திருக்கும் போல. காலியான தின்பண்ட தட்டுகள் ட்ரேவில் ஒழுங்கின்றிக் கிடந்தன. மாப்பிள்ளையின் அப்பா, “ காபி யாரும்மா இந்து போட்டது? சக்கரை வியாதிக்காரனுக்கு கூடுதலா சக்கரை போட்டுட்டாங்க” என்றார்.

 சமையல் கட்டிலிருந்த இவள் அம்மாவிற்கு கேட்கும் விதமாகத்தான் பேசினார் அவர். இதைக்கேட்டது பர்வதம் தன் நாக்கை கடித்துக் கொண்டாள். “ஒரு நாளைக்கி மருமகள் கையால வாங்கி இனிப்பா குடிச்சா தப்பில்லீங்க” அவருக்கு கேட்கும் விதமாய் உள்ளிருந்து குரல் கொடுத்தாள்.

 “அப்பிடியா சொல்றீங்க, அதுவும் சரிதான்” என்றவர் காலி டம்ளரை ட்ரேயில் வைத்தார்.

 “சக்கரை வியாதி தான் இப்ப யாருக்குப் பார்த்தாலும் இருக்குதுங்களே! எல்லாம் அரிசியை குக்கர்ல வேக வச்சு சாப்பிடறதால வர்ற வியாதிகள் தானுங்க” என்று தன் பங்குக்கு ஏகாம்பரமும் சொல்லிவைத்தார்.  

 “ஏண்டா சண்முகம், பொண்ணுப் பிள்ளைதான் வெட்கப்பட்டு ஒரு வார்த்தை பேசலைன்னா நீயாச்சும் எங்க வேலைக்கி போறே? என்ன சம்பளம்? இப்பிடியெல்லாம் கேட்கலாம்ல! ஊமைன்னு நெனச்சுட்டு இருந்துடப்போவுது.” மாப்பிள்ளையின் அப்பா தலை குத்தினது போல இருக்கும் மகனைப்பார்த்து சொன்னார்.

 “நம்ம முன்னாடி பேச ரெண்டு பேரும் வெட்கப்படறாங்ளோ என்னமோ! மேல மாடில போய் பேசிட்டு வரட்டுமுங்களே! அவங்க தான ஒருத்தரை ஒருத்தர் பேசிப் புரிஞ்சிக்கணும். என்னுங் நான் சொல்றது?” என்று ஏகாம்பரம் பேச அப்பாவை நிம்மதியாய் பார்த்தாள் இந்து.

 என்ன இருந்தாலும் நம் அப்பா அப்பாதான். எங்கே காலையில் சொன்ன அந்த ரெண்டு வருசம் கழிச்சி கல்யாணம் என்ற விசயத்தை சபையிலேயே ஆரம்பித்து விடுவாளோ என்ற பயத்தில் தான் சொல்கிறார் என்று யூகித்து விட்டாள்.

 “வாங்க மாடிக்கு போவோம்” என்று சண்முகத்தை அழைத்துக் கொண்டு மாடிப் படிகள் ஏறினாள். சண்முகம் இந்துவின் பின்னால் அமைதியாய் ஏறி மொட்டை மாடிக்கு வந்தான். அவனுக்கும் இந்த பெண் பார்க்கும் படலம் இதுதான் முதல்முறை என்பதால் கூச்சமாக இருப்பதை உணர்ந்தான்..
 ”இந்து எப்பவும் டூட்டி முடிஞ்சு இந்த நேரத்துக்குத் தான் வருவீங்களா?”

 “இருட்டு விழும் முன்னாடி எப்பவும் வந்துடுவேன்ங்க. நீங்க? கோவிலுக்கெல்லாம் போயிட்டு இரவு லேட்டா வருவீங்களா?” என்றாள் இந்து சண்முகத்தின் முகத்தைப் பார்த்தபடி! கோவில் என்றதும் சண்முகம் குழம்புவது தெரிந்தது. அப்பாதான் தான் குடிக்கப்போகும் இடத்தை கோவிலுக்கு போவதாக தினமும் சொல்வார். அந்தப் பழக்கத்தில் தான் கேட்டுவிட்டாள்.

 “தினமுமா கோவிலுக்கு போவாங்க? அம்மாவாசை, பெளர்ணமி நாள்ல தானே போவாங்க.. நான் தினமும் டூட்டி முடிஞ்சு வீடுவர எட்டுமணி ஆயிடும்ங்க”

 வேறு என்ன பேசுவது என்று தெரியாமல் இந்து நின்றிருக்கையில் சண்முகமே ஆரம்பித்தான். “நம்ம மேரேஜ் முடிஞ்ச பின்னால என் வீட்டுல நீங்க வேலைக்கி போக வேண்டியதில்லைங்க. வீட்டுல இருந்தீங்கன்னா போதும். ஏன்னா என் சம்பளமே ரெண்டு பேருக்கும் போதும்”

 “சரிங்க, அப்ப நான் படிச்சது தேவையிலாதது. கம்ப்யூட்டர் கத்துக்கிட்டது தேவை இல்லாதது. உங்க வீட்டுல நான் சும்மா இருந்தால் போதுங்கறீங்க, இல்லியா?”

 “ஆமாங்க ஜாலியா டிவில அம்மாவோட சேர்ந்துட்டு நாடகம் பாருங்க, அம்மா அந்தக்காலத்துலயே எட்டாவது படிச்சிருக்காங்க. டிவில வர்ற நாடகத்தை ஒன்னுவிடாம பார்த்து யார் யாரு எந்த எந்த நாடகத்துல என்ன என்ன பண்ணினாங்கன்னு சொல்லுவாங்க.. எங்கம்மாவுக்கு நல்ல ஞாபக சக்தி”

 “சரிங்க, நானும் ஞாபகம் வச்சிருந்து ஒவ்வொரு நாளும் ராத்திரி சொல்றேனுங்க”

 “உங்க வீட்டுல சுடிதாருக தூக்குல கிடந்துச்சுங்க, கல்யாணத்துக்கு பிறகு சேலை மட்டும் கட்டுங்க. நைட்டி வசதின்னுட்டு வயசானவங்க எல்லாரும் போட்டுக்கறாங்க, அது எனக்கு ஏனோ பிடிக்காதுங்க”

 “சரிங்க, என்ன என்ன பிடிக்காதுன்னு ஊருக்குப்போய் நல்லா ஞாபகப்படுத்தி அப்பா கிட்ட கூப்பிட்டு சொல்லிடுங்க, விரலை தின்னுட்டே ஞாபகப்படுத்தீட்டு ஒவ்வொன்னா சொல்லிட்டு இருக்காதீங்க”
 “அது கூட நல்ல ஐடியாங்க, உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?”

 “ரொம்ம்பப் பிடிச்சிருக்குங்க உங்களை! வீட்டுல பேசியிருப்பாங்களே, எதாவது உங்களுக்கு தெரியுமா?”

 “நீங்க என்ன கேட்கறீங்கன்னு தெரியலைங்களே!”

 “இல்ல நகை எல்லாம் எவ்ளோ எதிபார்க்கறீங்கன்னு தெரியலை”

 “அதெல்லாம் பெரியவங்க பேசிக்குவாங்க நம்மளுக்கு என்னங்க?”

 “நம்மளும் பெரிய மனுசங்க தானுங்க, அதனால தான கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணூறாங்க. சும்மா அவுங்க பேசினதை சொல்லுங்க”

 அது அவுங்க முடிவு பண்ணிக்குவாங்க நீங்க கவலைய விடுங்க இந்து”

 என் கவலையே அதுலதானே என்று நினைத்தவள், “நீங்க சொல்லலைன்னா நான் போயி இவரை கட்டிக்கமாட்டேன்னு இப்ப சொல்லிடுவனுங்க” என்றவள் கிளம்புவது போல நடிக்கவும், வேண்டாங்க..வேண்டாங்க என்றான் சண்முகம்.

 “பின்ன சொல்லுங்க, நானும் தெரிஞ்சிக்கறேன்”

 “அது இருபது பவுனு கேட்கணும்னு அம்மா சொல்லிட்டு இருந்துச்சுங்க. போக எனக்கு மண்டபத்துக்கு வர்றப்ப கையில ஒரு பவுனு மோதிரம், கழுத்துல ரெண்டு பவுனுல செயின் போடச்சொல்லி கேட்கணும்னு பேசிக்கிட்டாங்க”

 “இதை சொல்றதுக்கு தான் இத்தனை சிரமப்பட்டீங்ளா? உங்க மாத சம்பளம் எவ்வளவுங்க?”

 “பிடித்தமெல்லாம் போக இருபது வருமுங்க”

 “எதாவது பிரச்சனைன்னா வேலைய விட்டுட்டு போங்கன்னு சொன்னா வந்துடணும் இல்லீங்ளா!”

 “அப்பிடியெல்லாம் பிரச்சனை பண்ணுறவன் இல்லீங்க நானு. மண்டபச் செலவு எல்லாம் இந்தப்பக்கம் பொண்ணு வீடும், மாப்பிள்ளை வீடும் பாதி பாதி போட்டுக்கணும்னு பழக்கம் இருக்கிறதா உங்க அப்பா சொல்லிட்டு இருந்தாருங்க.”

 “ஆமா, அது உங்க ஊர்ல இல்லீங்களா?”

 “எங்கம்மா முழுச்செலவும் உங்களுது தான்னு பேசிட்டுதுங்க. நான் வேணா உங்க கிட்ட தனியா ஐம்பது தந்துடறேனுங்க. ஆனா யாருக்கும் தெரியக்கூடாது”

 “இந்தப் பக்கமெல்லாம் மண்டபத்துக்காரங்க பொண்ணு, மாப்பிள்ளையோட ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் குடுத்தாத்தான் திருமணம் பண்ண விடுவாங்க, அதை எங்கப்பா சொல்லலியா! அதும் அவுங்க சொல்ற டாக்டர் கிட்டத்தான் போய் எடுக்கணும்”

 “அய்யோ, இப்பிடியெல்லாம் பழக்கமுங்களா? என்ன பழக்கம் போங்க! எங்கூர்ல இது மாதிரி பேச ஒரு மண்டபம் இல்லீங்க. நீங்க அழகா பேசறீங்க, அழகா இருக்கீங்க”

 “அப்புறம் எங்க கிட்ட இப்போதைக்கி பத்து பவுன் நகைதான் இருக்குதுங்க. அதை வச்சிட்டு நீங்க கேட்கிறதை இப்போதைக்கி பண்ண முடியாதாட்ட இருக்குங்களே!”

 “சரின்னு சொல்லிட்டாருங்ளே உங்கப்பா”

 “கடனை வாங்கி போட்டு என்னை தாட்டி உட்டுடுவாருங்க, கடன்காரன் சேலத்துக்கு நம்ம வீட்டுக்கு வருவான். நீங்க தான் கட்டணும்”

 “நீங்க சும்மா சொல்றீங்க. பெரிய மனுசங்க அப்பிடி பண்ண மாட்டாங்க”

 “இது என் வீடுங்க. வீட்டு நிலைமை எனக்கு தெரியாதா? என்ன போங்க”

 “அப்ப நாம என்னங்க பண்ணலாம்?”

 ”ரெண்டு வருசம் கழிச்சி நீங்க கேட்டது பூராவும் சம்பாதிச்சு வச்சுக்கறோம்ங்க. அப்புறம் பண்ணிக்குவோம். அதான் வழி”

 “குருபலனே இன்னும் நாலு மாசம் தானுங்க எனக்கு இருக்கு. அப்புறம் நாலு வருசம் கழிச்சித்தான் குருபலன் வருதாமா”

 “அப்ப நாலு வருசம் கழிச்சி பண்ணிக்குவோம். இன்னும் கொஞ்சம் சேர்த்தி சம்பாதிச்சுடுவோம்ல”

 “எங்கம்மா ஒத்துக்காதுங்க.. இது வரைக்கிம் நாங்க ஐம்பது பொண்ணுக வரைக்கும் பார்த்து ஒன்னும் செட் ஆவலிங்க. எனக்கே போதும்டான்னு ஆயிடிச்சிங்க. இருபதாயிரம் சம்பாதிக்கிறேன், இருபது பவுன் நகை போட வழியில்லைன்னு சொல்லிடறாங்க. நீங்களாச்சிம் சம்பாதிச்சுட்டு சொல்றேன்னு டைம் கேட்கறீங்க”

 “சரி வாங்க போகலாம். நீங்க வீடு போய் உங்க அம்மாகிட்ட பேசிட்டு எங்கப்பாகிட்ட சொல்லிடுங்க” என்ற இந்து படிகளில் இறங்க பின்னாலேயே யோசனையோடு விரலைக் கடித்துக் கொண்டு சண்முகம் இறங்கினான்.

 “நல்லவேளை வந்தீங்க ரெண்டு பேரும், நாங்களே கூப்பிடலாம்னு இருந்தோம்” என்றார் ஏகாம்பரம்.

 “ரெண்டு பேரும் பேசிட்டீங்கள்ல, ஒரு கொழப்பமும் இல்லைல்ல” என்று சண்முகத்தின் அப்பா கேட்கவும் இந்து தான் அவருக்கு பதில் சொன்னாள்.
 “பேசிட்டமுங்க மாமா” என்றவள் சண்முகத்தை பார்க்க அவனோ குனிந்த வாக்கில் நின்றிருந்தான்.

 “சரி நாங்க புறப்படறமுங்க சம்மந்தி. அப்பப்ப போன்ல கூப்பிட்டு பேசிக்கறேன். அந்த பைக் விசயம் மட்டும் முதல் தீபாவளிக்கு பண்டீருங்க” என்று எழுந்தார் மாப்பிள்ளையின் அப்பா. அனைவரையும் வழி அனுப்பி வைத்து விட்டு வீட்டினுள் வந்த ஏகாம்பரம் இந்துவின் கோப விழிகள் பார்த்து பம்மினார். அவருக்கு கடை காந்தம் போல் இழுத்துக் கொண்டிருந்தது.

 “நீ மாப்பிள்ளை கிட்ட என்ன பேசப் போறீன்னு காலையிலயே எனக்கு தெரிஞ்சு போச்சும்மா. புதுசா நீ இப்ப ஒன்னும் சொல்ல வேண்டாம். அவங்க கிட்ட காலையிலயே சொல்லிடலாம்னு தான் போனுக்கு கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன். லைனே கிடைக்கலை. பார்த்தா மதியமா வர்றவங்க சாயந்திரம் வந்து நிற்கிறாங்க. என்ன பண்ண?”
 “ஆமாம்மா அப்பா சொல்றது நிஜம் தான்” என்றாள் பர்வதம்.

 “மாப்பிள்ளை கிட்ட தெளிவா சொல்லிட்டியாம்மா. ரெண்டு வருசம் கழிச்சி நம் வீடு தேடி வருவாரா?” என்று அப்பா கேட்கவும் தலையில் கை வைத்துக்கொண்டு இந்து ஷோபாவில் அமர்ந்தாள்.பர்வதத்திற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. மகளின் அருகில் அமர்ந்து அவளை தன் மடியில் சாய்த்துக் கொண்டாள்.

 “அவங்க கேட்டதை எல்லாம் சரி சரின்னு சொல்லி தலையாட்டிட்டு உங்கப்பா விளையாடுறார். விட்டா பொங்கலுக்கு கார் வேணும்னு கேட்பாங்கன்னு நினைச்சேன்.” என்று அம்மா சொன்னதும் மடியிலிருந்து தலை தூக்கி சிரித்தாள் இந்து.
 “விட்டா உங்கப்பா காரு எதுக்குங்க சம்மந்தி.. ரயில் பொட்டி வாங்கித் தர்றேன்னுடுவார் போல இருந்தாரு. இப்பவே இந்த பொம்பளை இத்தனை கேட்டா பின்னாடி என்னென்ன கேட்பா யப்பா!”

 “ஏம்ப்பா நின்னுட்டீங்க கோயலுக்கு போயிட்டு வாங்க” என்று இவள் சொன்னதும் நிம்மதியாய் கிளம்பினார் ஏகாம்பரம்.

                              

Post Comment

திங்கள், டிசம்பர் 09, 2013

இரண்டு அடேங்கொன்னியா கதைகள்தோழரின் படைப்புகள்

  அந்த நகரத்தின் பேருந்து நிறுத்தத்தில் வந்திறங்கிய பழனிச்சாமி தனது தோள் பையையும், சூட்கேசையும் பத்திரமாக எடுத்துக் கொண்டு இறங்கினான். பேருந்து நிறுத்தம் இறைச்சலாக இருந்தது. எல்லோரும் பரபரப்பாய் தங்களது பேருந்துகளை தேடி ஓடிக் கொண்டிருந்தார்கள். இவன் இறங்கிய பேருந்து மள மளவென ஜனம் நிரம்பி கர்ப்பிணி பெண் போல நின்றிருந்தது. பழனிச்சாமி தன் கடிகாரத்தைப் பார்த்தான். அது இரவு எட்டு மணி என்றது. இனி நடந்தே வீட்டுக்கு போய் விடலாம் என்று முடிவு செய்து கிளம்பினான். தோள்ப்பையை விட சூட்கேஸ் தான் அதிகமாய் கனத்தது.

  மூத்திரம் வேறு அவசரமாய் முட்டிக்கொண்டு நின்றது. பேருந்து நிறுத்த காம்பெளண்டு சுவர் ஓரத்தில் வரிசையாக எல்லோரும் அமர்ந்தும், நின்று கொண்டும் மூத்திரம் பெய்து கொண்டிருதார்கள். இரவு வேளை என்பதால் யாரும் இலவசமாய் சுவரோரம் கட்டி வைத்திருந்த சிறுநீர் கழிக்குமிடத்தை பயன்படுத்தவில்லை. பழனிச்சாமி தலை மீது தன் சூட்கேசை தூக்கி வைத்துக் கொண்டு சுவரோரம் ஒதுங்கினான். அருகில் இவனைப்போலவே அவசரமாய் சுவற்றில் பிஸ் அடித்தவன், மணி எட்டுக்கும் மேல இருக்குமுங்களா? என்றான். எட்டு தான் ஆச்சு! என்றவன் அவன் கையில் வார்ச் இருப்பதையும் பார்த்தான். ஜிப்பை மேலேற்றிவிட்டு திம்பியவன் நிறுத்தத்தை விட்டு வெளியே பிரதான சாலைக்கு வந்தான்.

  பழனிச்சாமி இந்த நகரத்தில் குப்பை கொட்டிக்கொண்டு திரிந்தது நான்கு வருடங்களுக்கு முன்பு. சுத்தமாக ஊரை விட்டுப் போய் நான்கு வருடமாகி விட்டது. பெரிதாக மாற்றம் எதுவும் அடைந்திருக்கவில்லை. பேருந்து நிலையம் மட்டும் புதிதாக ரயில்வே ஸ்டேசனுக்கு வடக்கே துவங்கியிருக்கிறதாம். பேருந்து ஏறுகையில் நடத்துனர் புதிய பேருந்து நிலையமா? பழையதா? என்று தான் கேட்டார். புதிய பேருந்து நிலையம் எங்கே என்று கூட இவனுக்குத் தெரியாது. பழையது என்று சொல்லி டிக்கெட் வாங்கிக் கொண்டான். இந்தப்பேருந்து புதிய பேர்ந்து நிலையம் செல்லாதாம். அருகில் அமர்ந்திருந்தவர் தான் தகவல்களை சொன்னார்.

  பழனிச்சாமி தன் தாய் தந்தையரை பார்த்து நலம் விசாரித்து விட்டு இரண்டு நாள் தங்கிப்போகத்தான் அத்தனை பணியிலும் பெங்களூரிலிருந்து வந்திருந்தான். பணி மாற்றலாகி முன்பு போனவன் தான். ஊரையும் தாய் தந்தையையும் மறந்தே விட்டான். இதோ வருகிறேன் இதோ வருகிறேன் என்று போனில் சொல்லிச் சொல்லி இவனுக்கே சலித்துப்போய் விட்டது. எந்த நேரமும் வேலை வேலை என்றிருந்து இயந்திரமாகி விட்டான். இந்தமுறை விடுப்பைச் சொல்லி விட்டு கிளம்பிவிட்டான். வேலை எல்லா நாட்களும் தான் இருக்கிறது. வேலை இல்லாத நாள் என்று ஒரு நாளும் இவனுக்கு இல்லை. இவனது உயரதிகாரி இந்த ஐந்து நாள் விடுப்புக்கு காலில் எல்லாம் விழுவான் பழனிச்சாமி என்றெல்லாம் எதிர் பார்த்தார். போக அப்படிச் செய்வான் என்று தன் சூ அணிந்த காலை இவன் பக்கமாக நீட்டிக் கொண்டே இருந்தார். பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்றால் குழந்தைகள் கூட தூக்கி கனம் பார்க்கத்தான் செய்யும். பழனிச்சாமியும் தன் விடுப்பிற்காக எதையும் செய்ய தயாராக இருந்தான்.

  பழனிச்சாமி வீட்டுக்கு ஒரே பிள்ளை. இவனுக்கு மூத்தவன் ஒருவன் பிறந்ததும் இறந்ததாக சின்னவயதில் உறவினர்கள் சொல்லிக் கொள்கையில் தெரியும். அவன் உயிரோடு இருந்திருந்தால் தம்பியுடையான் படைக்கஞ்சான் என்று இவனை சொல்லிக் கொண்டிருந்திருப்பான். ஆனால் இவன் ஒரு நாள் கூட, டேய் அண்ணா கவலைப்படாதடா நான் பாத்துக்கறேன் என்று சொல்லவே போவதில்லை அவனுக்கு. இவன் அம்மாவிடம் அப்படி ஒரு அண்ணன் பிறந்தானா? என்று ஒரு நாளிலும் கேட்டதில்லை. அவர்களின் குடும்பச் செலவுக்கு என்று மாதா மாதம் பணம் அனுப்புவதோடு பெற்ற கடனை தீர்த்துக் கொண்டிருந்தான்.

  ஒன்றே ஒன்று என்று அரசாங்கம் சொன்னது போல் பெற்றுக் கொண்ட தம்பதியர் எல்லோருமே அந்த ஒன்றே ஒன்றை தங்கள் கண்களுக்குள் வைத்திருந்து பார்த்துக் கொள்ளத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த நான்கு வருடங்களாக அவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டது. இப்படி எங்கேயோ சென்று வேலை செய்து சம்பாத்தியத்தை அனுப்புவான் என்றா பெற்று வளர்த்தினார்கள்? அவர்கள் ஆசையெல்லாம் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்றிருப்பவன் தங்கள் கைக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்று தான் ஆசை வைத்திருப்பார்கள். ஆனால் சிறு வயதிலிருந்தே இவன் தேசாந்திரி. ஊர் சுற்றுவது என்பது இவனுக்கு பிடித்தமான விசயம். நண்பர்களூடன் சேர்ந்து கொண்டானென்றால் டூர் தான். அந்த ஆசை இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்றாலும் குடும்பம் என்று ஒன்று அமைந்து போனதால் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாகி விட்டான்.

  இந்த நான்கு வருடங்களில் பழனிச்சாமி தன் மனதளவிலும் கூட நினைத்தேயிராத சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது தான். குறிப்பாக அவனது பணியில் ஒரு மரியாதையான பீடம். அடுத்ததாக ஆபீஸில் இருந்த கன்னடப்பைங்கிளி கார்த்தியாயினியின் காதல். அவள் வீசிய வலையில் இவன் கேள்வியெதுவும் கேட்காமலே போய் விழுந்தான்.. உறவினர்களுக்குக்கூட தெரியப்படுத்தாமல் அவளை மணந்து கொண்டான் இப்படி ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்தேறி விட்டன.

  ஊருக்கு சென்று வருவதாய் கார்த்தியாயினியிடம் இவன் சொல்கையில் அவள் முகம் சுண்டிப்போனது. அவளையும் இங்கு கூட்டி வருவதுதான் இவனது யோசனையும். ஆனால் அவளுக்கு தூரப்பிரயாணம் உடம்புக்கு ஒத்துவருவதில்லை. கார்த்தியாயினி வெறும் ஒரு பூ. இவன் ஊருக்கு கிளம்புவதே தன்னை விட்டு ஓடிப் போகிறான், இப்போது பார்ப்பது தான் கடைசி என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ளும் பூ. அவளை பிறகொரு நாள் கூட்டி வரும் யோசனையில் தனியாக புறப்பட்டு விட்டான். கார்த்தியாயினிக்கு தன் அழுகையால் இவன் திட்டத்தை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையும் பொய்த்து விட்டது.

  வில்ஸ் பில்ட்டரை ருசித்து இழுத்து புகை ஊதியபடி நடந்தவன் கண்களுக்கு குறுக்கு வழியில் இவன் செல்லக்கூடிய வீதி வெறிச்சோடிக் கிடப்பது ஆச்சரியப் படுத்திற்று. நகரமே சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இரவு வேளையில் இந்த வீதிக்கு மட்டும் என்ன நோக்காடு வந்து விட்டது. சாலையைக் கடந்து போய் மெர்க்குரி விளக்குக்கு அடியில் வைத்திருந்த பெரிய பலகையில் எழுதப்பட்டு இருந்ததை வாசித்தான். “இந்த வீதிக்குள் நடப்பது உசிதமான காரியமல்ல”

  பழனிச்சாமிக்கு ஒன்றும் விளங்கவில்லை.. இந்த வீதியில் இவன் சென்றால்  வீட்டுக்கு உடனடியாக சென்று விட முடியும். மிகச்சுலபமான குறுக்கு வழி இது. இந்தப்பாடையை நம்பித்தான் ஆட்டோ பிடிக்காமல் பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே வந்தான். ஊர் மாறிவிட்டது என்று இப்போது நம்பினான் இவன். இனி நேர் வடக்கே சென்று முசல்மான் வீதி வழியாக சுற்றித்தான் வீடு சென்று சேர முடியும்.

  எதிர்க்கே சனம் வீடு போகும் அவசரத்தில் இருந்தது. ஒரு பெரியவரை நிறுத்தி வீதி பற்றி விசாரித்தான். அதான் போக வேண்டாமுன்னு போட்டிருக்கான்ல! என்று அழுத்தமாய் சொல்லிப் போனார். இவனிடம் பேசுவதற்கு நேரமில்லை என்பது மாதிரி அவசரத்தில் இருந்தார். நகரங்களில் மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் அல்லது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நகரம் நிர்பந்தப்படுத்தி விடுகிறது.

  இந்த நான்கு வருடங்களில் தன் வாழ்வில் மட்டும் திசைகளின் மாற்றம் நடந்து விடவில்லை. சொந்த ஊரிலும் வீதிகளின் திசைகளும் கூட மாறித்தான் போய் விட்டன என்று பழனிச்சாமி யோசித்தபடியே வீதியின் எதிர்க்கே தென்பட்ட பேக்கரிக்கு நடந்தான். மாஸ்டரிடம் டீ ஒன்று சொன்னான். அவரோ டோக்கன் குடுங்க, என்றார். கல்லாவில் அமர்ந்திருந்த பெண்ணிடம் டோக்கனை காசு கொடுத்து வாங்கி வந்து மாஸ்டரிடம் கொடுத்தான். அந்த வீதி ஏனுங்க அப்படி? உள்ள வெறோச்சுன்னு இருக்கு? என்று பேச்சுக் கொடுத்தான். மாஸ்டர் டீ டம்ளரை இவனிடம் கொடுத்து விட்டு பேச்சை ஆரம்பித்தார். இவன் டீயை சுவைத்துக் கொண்டே கேட்டான்.

  “இந்த ஆறு மாசமாத்தான் யாரும் இந்த வீதியில போறதே இல்லீங்க. முனுசிபாலிட்டில சொல்லி இந்த வீதியையே முழுசா சுவரு வெச்சு அடைச்சுப் போடோணுமுன்னு ஊர்வலம் கூட நடந்துச்சுங்க. நீங்க வெளியூரா?” என்றவனிடம் உள்ளூர் தான் வெளியூரில் வேலை என்றும் சொன்னான். நீங்க முழுசா சொல்லலையே! ஏன் அப்படியாச்சு? என்றான்.

  ”அதுல சொல்றதுக்கு என்னங்க இருக்குது, இப்ப ஒரு நாயோ, பூனையோ இந்த வீதியில் முட்டி உள்ளார போயிடுச்சுன்னு வச்சுக்கோங்க.. திரும்பி அதுக வர்றப்ப பொடிக்குட்டிகளா கொழந்தைக மாதிரி தத்தீட்டு வெளிய வருதுக” என்றான் மாஸ்டர்.

  “அதெப்படிங்க! நீங்க சொல்றது எனக்கு எச்சா கொழப்பமா இருக்கே!”

  “இப்ப நானே இருக்கறன்னு வச்சுக்கங்க ஒரு பேச்சுக்கு.. என்னோட வயசு இப்போ நாற்பத்தி அஞ்சு. ஒரே ஒருவாட்டி இந்த வீதியில நுழைஞ்சு அந்த கடை வரைக்கும் போயிட்டு திரும்பி ரோட்டுக்கு வந்தன்னு வச்சுக்குகுங்க. எனக்கு வயசு கொறஞ்சு போயிடும். இருவத்தி அஞ்சு வயசுப் பையனாட்ட ஆயிடுவேன். அதானுங்க இந்த வீதியில பிரச்சனை. இப்ப தெளிவா புருஞ்சுதுங்களா!” மாஸ்டரிடம் காலி டம்ளரைக் கொடுத்தான் பழனிச்சாமி.

  “இந்த வீதியி நாலஞ்சு ஜவுளிக்கடை, எலக்ட்ரானிக்கடைக அதுஇதுன்னு எல்லாம் இருந்துச்சுங்களே? எல்லாம் போச்சா?” என்றான்.

  ”எல்லாம் காலி” என்றவன் டம்ளரைக் கழுவத்துவங்க, எதற்கு வம்பு என்று பழனிச்சாமி முசல்மான் வீதியில் சென்றுவிட நடையைக் கட்டினான்.

  இவன் வீடு வந்த சமயம் அந்த வீதியே சப்தமில்லாமல் கிடந்தது. எந்த வீட்டின் முன்பாகவும் ஆள் நடமாட்டமே இல்லை. பிள்ளையார் கோவில் திண்டில் சில ஆட்கள் தென்பட்டார்கள். கோவிலில் கொடை ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. ஏஆர்சி பார்சல் சர்வீஸ் முன்பாக லாரியில் சிலர் லோடு ஏற்றிக் கொண்டிருந்தார்கள். இவன் வீடும் இருளில் தான் கிடந்தது. இவன் படியேறிச் சென்று கதவைத் தட்டினான். அம்மா அம்மா என்று குரல் எழுப்பினான். வெளி விளக்கு சுவிட்சைத் தட்டினான். குண்டு பல்பு பிரகாசித்தது. ஜன்னல் அருகில் சென்று தட்டிக் கூப்பிட்டான். உள்ளே எந்த சப்தமுமில்லை. மீண்டும் கதவுக்கே வந்து தட்டினான். அப்போது தான் கவனித்தான் தாழ்ப்பாள் இவன் முட்டிங் காலுக்கு அருகில் இருந்தது.

  கதவு நீக்கி உள்ளேயிருந்து ஒரு சிறுவனும் சிறுமியும் வெளி வந்தார்கள். பழனிச்சாமியை அன்னாந்து பார்த்து சந்தோசம் மிகுதியில் குதித்தார்கள். அம்மா சின்னப்பிள்ளை போல கவுன் அணிந்திருந்தது. அது ஜங்கு ஜங்கென குதித்தது.

  “ஐ! பழனான் வந்துட்டான். டேய் பழனா பெங்களூருல இருந்து எங்களுக்கு என்னடா வாங்கிட்டு வந்திருக்கே? பிஸ்கட்டு வாங்கிட்டு வந்தியா? ரப்பரு வளையலு, கலரு ரிப்பனு எல்லாம் தான வாங்கிட்டு வந்தே? நீங்க தள்ளுங்க அக்கட்டால” என்று அம்மா அப்பாவை பிடித்துத் தள்ள, அப்பா தரையில் சாய்ந்து கண்ணைக் கசக்கினார். “தள்ளி உட்டுட்டா பார்றா குண்டி” என்று பழனிச்சாமியிடம் ரிப்போர்ட் செய்தார்.
  சப்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து சித்தி வந்தது. சித்தியைக் கண்டதும் இருவரும் மிரண்டு வீட்டுக்குள் ஓடினார்கள். சித்தியின் கையில் சாட்டைக்குச்சி இருந்தது.

 “வந்துட்டியாப்பா, உங்கொப்பனையும், உங்கோயாளையும் இங்க என்னால சமாளிக்க முடியலைடா சாமி. போறப்ப இது ரெண்டையும் கையோட கூட்டீட்டு போயிடுப்பா! சொன்ன சொல்லு ரெண்டும் கேக்குதுகளா ஒன்னா? தொட்ட சாமானையெல்லாம் ஒடச்சிப்போடுதுக. நீ இன்னிக்கி வர்றீன்னு காலைல இருந்து ஒரே துன்பம்டா. பையன் வர்றான் பையன் வர்றான்னு என்னமா குதியாளம் போட்டாங்க தெரியுமா! தடி எடுத்தாத்தான் அடங்குதுக!” என்று சித்தி வீட்டினுள் போக இவனும் பின்னால் சென்றான். உள்ளே இவன் அப்பாவும் அம்மாவும் வாயில் ஒரு விரலை வைத்து ஷோபாவில் உட்கார்ந்திருந்தார்கள். பழனிச்சாமி தலையில் கையை வைத்துக் கொண்டு போய் நாற்காலியில் உட்கார்ந்தான்.

  குறிப்பு :
  ( இந்தக் கதைக்கு தோழர் தலைப்பு எதுவும் வைக்கவில்லை. கதை நடைபெறும் ஊரையும் குறிப்பிடவில்லை. ஆனால் திருப்பூர் என்று உறுதியாக தெரிகிறது. அடுத்து வரும் கதை கருவிழி மிதிபடும் நேரம். இது தஞ்சாவூரிலிருந்து வெளிவரும் செளந்தர சுகன் இதழில் வெளிவந்தது. சிறுகதைகள் பல தோழர் எழுதியிருந்தாலும் அதில் வரும் நாயகன் என்கிற பாத்திரத்துக்கு பழனிச்சாமி என்கிற பெயரையே பயன்படுத்தினார். தனக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தால் பழனிச்சாமி என்றே பெயர் வைத்திருப்பேன் என்று நண்பர்களிடம் கூறியிருக்கிறார். )


       
  பழனிச்சாமிக்கு குடிப்பழக்கம் உள்ளூர் நண்பர்களாலேயே பழக்கப்படுத்தபட்ட சமயம் இருபதாவது வயதில் அடியெடுத்து வைத்திருந்தான். எட்டாவது வரை படிப்பை முடித்திருந்த பழனிச்சாமி சிகரெட் மற்றும் பான்பராக் போடும் பழக்கங்களோடு உள்ளூரில் கணவனை இழந்த பெண்களிடம் ராக்காலங்களில் சென்று வந்து கொண்டிருப்பதை பழக்கப்படுத்தி கொண்டதும் அவனது இருபதாவது வயதில் தான்.

  அந்த விதவைகள் அடிக்கடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்தார்கள். ஒருத்தியிடம் செல்வது ஒருத்திக்கு தெரியாது என்று தான் பழனிச்சாமி நினைத்திருந்தான். ஆனால் ஒவ்வொருத்தியும் பழனிச்சாமி தன்னிடம் மட்டுமே வந்து போக வேண்டும் என்றும் மற்றவள்கள் ஊசைகள் என்றும் நோவு நொடிகள் வந்து விடும் என்று கூறியும் ஒவ்வொருத்தியும் இவன் உதட்டில் கிறக்கமாய் முத்தம் கொடுத்தார்கள். பழனியை நெஞ்சோடு சேர்த்து இறுக்கமாய் கட்டிக் கொண்டு தன்னை விட்டு விலகிப் போகாதபடிக்கு வித்தைகள் செய்தார்கள். பழனிச்சாமி ஒவ்வொருத்தி தலையிலும் சத்தியமடித்து நீ தானடி எனக்கு தங்கம்! என்றே பேசக் கற்றுக்கொண்டதும் அவனது இருபதாவது வயதில் தான்.

  அவர்கள் எல்லோருமே இவனது குடிப்பழக்கத்திற்காக கடிந்து கடிந்து பேசி பின்னர் சலித்து விட்டு விட்டார்கள். பழனிச்சாமி அவர்களுக்கும் ஒன்னும் பண்ணாது சும்மா குடி என்று குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தான். அவர்கள் இப்போதெல்லாம் பழனிச்சாமியிடம் பாட்டிலோடு வா என்று அழைக்கிறார்கள். சுகம் கூட்டல் சுகம் சமம் சொர்க்கம் என்கிறார்கள். கணவனை இழந்த பெண்கள் மீது கைவைத்தால் வாழ்க்கை வீணாய்ப் போயிடும்டா பையா! என்று அந்தப் பெண்களைப் பார்த்து பெருமூச்சு விடும் சிலர் இவனிடம் சொல்வார்கள். இவன் அவர்களுக்குத் தரும் ஒரே பதில் உன் வீட்டுக்கு சாமத்துல நான் வரலைல்ல!

  ஆரம்பத்தில் பழனிச்சாமி பற்றி ஊருக்குள் குசுகுசுவென பாசிய பெண்களாகட்டும், ஆண்களாகட்டும் போகப்போக அந்தப்பேச்சை விட்டு விட்டார்கள். சுனாமி வந்து போனது என்றால் இன்னமுமா எந்த நேரமும் சுனாமி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம்? புதுப்பொண்ணு என்பவள் அடுத்த புதுப்பொண்ணு ஊருக்குள் வரும் வரை தான். அடுத்த பெண் வந்து விட்டால் அவள் தான் புதுப்பொண்ணு.

  பழனிச்சாமி ஊருக்குள் தான் இப்படி என்றில்லை. அவன் தறி ஓட்டச் செல்லும் வெளியூரிலும் தார் நூல் போட வரும் சின்னப் பெண்களையும் தன் வலைக்குள் வீழ்த்தியடிக்கத் துவங்கினான். இப்படியாக பழனிச்சாமி ருசிகண்ட பூனையாக அதுவும் திருட்டுப் பூனையாக உருவெடுத்தான். பழனிச்சாமி ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தபோதே அவன் தாய் மரணமெய்தி விட்டாள். அவன் எட்டாவது படிக்கையில் அவன் அப்பாவும் டிக்கெட் வாங்கிப் போய் விட்டார். பழனிச்சாமி பின் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் தான் பின்னர் இருந்தான்.  பாட்டி போன பிறகு பொட்டு, பூ வைக்காதவள் ஒருத்தியை தாத்தாவை கவனித்துக் கொள்ள வீட்டில் வைத்திருந்தான் பழனிச்சாமி.

  மருந்து வைத்து விடுவது என்று ஒரு பழக்கம் கிராமங்களில் இன்றும் கூட இருந்து வருகிறது. வழக்கமான பழக்க வழக்கங்களில் இருந்து ஒரு ஆள் அல்லது ஒரு பெண் மாற்றமாக திடீரென தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டால் யாரோ மருந்து வைத்து விட்டார்கள் என்று அர்த்தம். கணவன் வேறு பெண்ணிடம் போய் அனுபவித்து விட்டு வந்தால் மனைவி கணவனுக்கு போடும் சாப்பாட்டிலோ, குழம்பிலோமருந்து வைத்து விடுவாள். அந்த மற்றுப் பெண்ணிடம் கணவன் போய் சுருண்டு கிடக்காமல் இருக்கவும் தன்னிடம் மட்டுமே சிறப்பான உறவை வைத்துக் கொள்ளவும் அப்படி செய்வாள். சில சமயம் எதிர் பார்ட்டியும் மருந்து வைத்து விடுவாள்.

  மருந்தின் அளவு, விகிதம் பொறுத்துத் தான் காரியம் கைகூடும். இந்த கம்ப்யூட்டர் காலத்தில் கூட இப்படியா? என்று கேட்கக் கூடாது. நீங்கள் அறியாமலேயே இவைகளெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பழனிச்சாமி எவள் வைத்த மருந்தையோ சாப்பிட்டு விட்டான். மருந்தின் அளவு அதிகம் என்கிறபடியால் புத்தி மாறாட்டம் ஏற்பட்டு பெண்களை மறந்தான். அவனோடு தொடர்பில் இருந்த பெண்கள் அனைவரையும் யார் என்று கூடத் தெரியவில்லை. என்ன தொழிலில் இருந்தான் என்பதையும் மறந்து போனான். ஆனால் குடிப்பழக்கம் மட்டும் ஞாபகத்தில் இருந்தது. உள்ளூரில் சுனாமி வந்துவிட்டது போல பழனிச்சாமி விசயத்தை பேசினார்கள். எனக்கு அப்பவே தெரியும் என்றாள் ஒருத்தி. ஆடின ஆட்டத்துக்கு இது தான் தண்டனை! என்றாள் அவனுடன் படுக்கையில் கிடந்தவளே ஊருக்குள். தான் ஒன்றுமில்லாமப் போனதை ஒரு புள்ளியில் உணர்ந்தான் பழனிச்சாமி.

  ஆக பழனிச்சாமி தன் தாத்தாவை கொன்று விடுவதாக முடிவு செய்த நாளில் உள்ளூருக்குள் மழை சோவெனப் பெய்து கொண்டிருந்தது. சிலசமயம் ஓய்ந்து போனது போல் தோன்றினாலும் மருபடியும் வேகம் பிடித்துக் கொண்டது. இவன் வீட்டினுள் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி பாக்குப் பொட்டணம் ஒன்றை கிழித்து வாயில் கொட்டிக் கொண்டான்.வெளியி இடி ஒன்று அருகில் டொமீர் என்று விழுந்த ஓசை கேட்டது. தாத்தா அவர் கட்டிலில் அட்டணங்கால் போட்டு படுத்திருந்தார். அவருக்கு இடியோசை கேட்டிருக்காது. காது இரண்டும் முன்பே போய்விட்டது. பழனிச்சாமிக்கு இப்படி ஆனதிலிருந்து அந்த பொட்டு வைக்காத பெண் தன் குழந்தையோடு காலையில் வந்து இவர்களுக்கு சாப்பாடு ஆக்கி வைத்து விட்டு போய் விடுகிறது. முன்பு போல இரவில் தங்குவதில்லை. அவளையே, என் விட்டில் உங்களுக்கு என்ன வேலை? என்று சில சமயம் கேட்பான் பழனிச்சாமி. அந்தப்பெண் பெரிதாய் அதை எடுத்துக் கொள்வதில்லை.
  பழனிச்சாமி சில சமயம் நிதானமாகவும், சில சமயம் நிதானமின்றியும் நடந்து கொண்டான்.தன் அறை ஜன்னலில் இருந்து பார்க்கையில் தாத்தாவின் ஜம்பமான படுக்கையை பார்த்து வெறியானான். தான் எடுத்த முடிவு சரியானது தான் என்று தேதிக்காலண்டரை நோக்கி ஓடினான் எழுந்து. சுபமுகூர்த்தவேளை எப்போது துவங்குகிறது என்று பார்த்தான். இரவு சுபமுகூர்த்தமே இல்லை. தன் கட்டிலில் தூக்குப்போட்டுக் கொள்ள வைத்திருந்த கயிற்றை எடுத்துக் கொண்டு தாத்தாவின் அறைக்குள் வந்தான். தாத்தா சீராக புஸ்புஸ் என மூச்சு விட்டபடி கட்டில் கண்மூடி படுத்திருந்தார். அவரது பொக்கை வாய் யாராவது பழம் திணிப்பார்களா? என்பது மாதிரி திறந்திருந்தது. தாத்தா ஒரு பிரேதம் போலத்தான் நெஞ்சு எலும்புகள் வெளித்தெரிய கட்டிலில் கிடந்தார்.

  பழனிச்சாமி தாத்தா அருகில் கிட்ட நெருங்கி நின்று பார்த்தான். அவன் கை கயிற்றை சுழற்றிக் கொண்டிருந்தது. தாத்தா திடீரென பேராண்டி! என்று புன்னகைப்பது மாதிரி தோன்றியது. அதே மாதிரி புன்னகை ஒன்றை இவனும் அவருக்கு தந்து விட்டு கயிற்றை அவரின் கழுத்தை தூக்கி உள் செருவி வெளியே விட்டெடுத்தான். என்ன காரியமடா பண்றே ராஸ்கோலு! என்று தாத்தா பேசியதாக இவன் காதில் விழுந்தது.. ஆனால் தாத்தா கண் விழிக்கவில்லை. கயிற்றை இறுகப் பற்றி இறுக்க ஆரம்பித்தான். தாத்தா கெக்கென சப்தமிட்டு தலை சாய்ந்தார். இவனுக்கு நிம்மதியாய் இருந்தது. தாத்தாவை கொல்வது எளிதான காரியமில்லை என்று தான் நினைத்திருந்தான்.. ஆனால் சுலபமாகவும், சுபமாகவும் முடிந்து விட்டது. கயிற்றை உறுவி அறையின் மூலைக்கு வீசினான்.

  நிதானமாய் முகத்தைச் சாய்த்து தாத்தாவின் பேரழகை ரசித்தான். பிணமாய் தாத்தா பிரகாசித்தார். சமையல் அறைக்கு வந்தவன் ப்ளாஸ்க்கில் ஒருந்த காபியை டம்ளரில் ஊற்றிக் கொண்டான். வெளியே மழை இன்னமும் கனமாய்த் தான் பெய்து கொண்டிருந்தது. தாத்தாவின் அறைக்குள் காபி டம்ளரோடு வந்தான். பிணத்தின் அருகிலேயே ஸ்டூல் ஒன்று போட்டு அமர்ந்து கொண்டு காபியை ருசித்தான். தன் வலது காலைத்தூக்கி தாத்தாவின் வயிற்றின் மேல் போட்டுக் கொண்டான். இன்னொன்றையும் அதன் அருகில் தூக்கிப்போட்டு நீட்டி அமர்ந்தான். காபியில் சக்கரை கூடுதலாக இருப்பது மாதிரி இருந்தது. வாய் முழுதும் இனித்துக் கிடந்தது. டம்ளர் காலியானதும் கயிறு கிடந்த மூலைக்கு டம்ளரை வீசினான்.

  பழனிச்சாமி தன் வலது காலைத் தூக்கி தாத்தாவின் நாசித் துவாரம் அருகே கொண்டு சென்று பெருவிரலை அவரின் நாசித் துவாரத்தில் நுழைக்க முயற்சித்து தோற்றான். இவனது கால் பெருவிரலின் அளவை விட தாத்தாவின் நாசித்துவாரம் சிறியதாக இருந்தது. சிகரெட் ஒன்றை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து உதட்டில் வைத்துக் கொண்டவன் தீப்பெட்டி பாக்கெட்டில் தட்டுப்படாமல் எரிச்சலடைந்தான். கால்களை இறக்கிக் கொண்டு தாத்தாவின் அண்டர்வேர் பாக்கெட்டில் கைவிட்டு உள்ளே தேடினான். பாதி தீர்ந்த நிலையில் ஒரு சுருட்டும், மணிபர்ஸ் ஒன்றும் கிட்டியது. தாத்தாவிடம் தீப்பெட்டி இல்லை. தாத்தாவின் தலையணைக்கடியில் கை விட்டுத் தேடினான். அங்கு கைக்கு தீப்பெட்டி சிக்கியதும் நிம்மதியானான். சிகரெட்டை பற்ற வைத்து புகை ஊதினான் பழனிச்சாமி. மணிபர்ஸை விரித்தான்.

  உள்ளே தாத்தா பாட்டியுடன் மீசையை முறுக்கியபடி நின்றிருக்கும் பழைய கருப்பு வெள்ளை புகைப்ப்டம் ஒன்றிருந்தது. அதை உருவி எடுத்து பலவாறு பார்த்து பின் வாயில் போட்டு மென்றான். சக்கை போல் மென்று துப்பினான். தாத்தா பர்சினுள் முன்னூற்றி ஐம்பது ரூபாய் வைத்திருந்தார். எல்லாம் ஐம்பது ரூபாய் தாள்களாக இருந்தன.அவைகளை விசிறி மாதிரி விரித்துப் பிடித்து தீப்பெட்டியை உரசினான். தன் அறைக்கு வந்து புத்தம் புதிய பிளைடு ஒன்றை எடுத்துக்கொண்டு தாத்தாவின் அறைக்குள்ளேயே வந்தான். மேல் காகிதத்தை எடுத்து வீசி விட்டு தன் உள்லங்கையில் ஒரு கோடு இழுத்து பதம் பார்த்தான். ரத்தம் கொப்பளித்து வரவும் நிம்மதியானான்.

  அடுத்ததாக தாத்தாவின் முகத்தின் அருகாமை குனிந்து அவரின் வலது காதை தனியே அறுத்து கையில் வைத்து ஆராய்ச்சியாளன் போல பார்த்துவிட்டு தூற எறிந்தான்.. பின் மூக்கு, உதடு என்று அறுத்து அறைக்குள் வீசினான். தன் ஆள்காட்டி விரலை தாத்தாவின் கண்களுக்குள் நுழைத்து பிதுக்கியெடுத்து கட்டிலுக்கு அருகில் போட்டான்.


  அரைமணி நேரத்தில் தாத்தாவின் சதைகள் அறைக்குள் நிரம்பிக் கிடந்தன. பழனிச்சாமி ஸ்டூலில் ஓய்ந்து போய் அமர்ந்தான். தனது மேல் சட்டையையும், பனியனையும் கழற்றி கட்டிலின் மேல் போட்டான். தாத்தாவின் விழிகளில் ஒன்று இவனது காலில் ஈரத்தவளை மிதிபட்டு வழுக்கிச் செல்வது போல் பிதுங்கி வழுக்கியது. கால் பெருவிரலால் நசுக்க முயற்சித்து தோற்றான். அது தூரமாய் பிதுங்கி தெறித்தது. சமையலறைக்குள் போய் சீமெண்ணெய் கேனை எடுத்து வந்து அறை முழுக்க தெளித்தான். தன்மீதும் தலையில் கவிழ்த்திக் கொண்டவன் முன்று மடக்கு குடித்தான். ஞாபகம் அவனுக்கு அப்போது தான் வந்தது. அவனது அறையில் பெட்ரோல் ஐந்து லிட்டர் இருந்தது. ஓடிப்போய் அதையும் எடுத்து வந்து அறைக்குள் ஊற்றினான். நாற்காலியில் அமர்ந்தவன் கவனமாக தீப்பெட்டியை தலையணைக்கு அடியில் இருந்து எடுத்து உரசினான்.

Post Comment