வியாழன், ஜனவரி 30, 2014

கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


 கொங்கு சனங்களின் கதை பேசும் ”விசாலம்”

கவிதை எழுதுதல் என்பது எல்லோருக்குமே ஆறுதல் தரும் விசயமாகவே இருந்து வருகிறது. கவிதை எழுதுகையில் கவிஞன் முகமூடி அணிந்து கொள்வதில்லை. அதனால் அவன் எழுதுபவை முதலில் அவனை ஆற்றுப் படுத்தும் வேலையை செய்து விடுகிறது. கவிஞன் அதன் நிம்மதியை சுவாசிப்பதற்குள் அடுத்த கவிதைக்கான பொறி தட்டிவிட அதனுள் நுழைந்து விடுகிறான். பொதுவாக கவிதைகளில் ஆழ்மனதின் ஏக்கங்களை சொல்லும் வரிகள் வாசகனை பிரம்மிக்கச் செய்து விடுகின்றன.

தமிழில் போதாமைகள் உள்ளபோது தான் எழுத்து வடிவம் வேறொரு ரூபத்திற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. நிலாவைப் பார்த்தும், பறவையினங்களைப் பார்த்தும், காந்தித் தாத்தாவுக்கும் தலைப்பு வைத்து கவிதை எழுதிக் கொண்டிருந்த கவிஞர்கள் இப்போது அடிக்கும் புயல் காற்றில் காணாமல் போய் விட்டார்கள். ஆனால் பாரதி இன்றும் நின்று கொண்டிருக்கிறான். தங்கள் பெயருக்கும் முன்னால் பாரதியை சேர்த்துக் கொண்ட கவிஞர்களும் காணாமல் போய் விட்டார்கள். கவிதைகள் இப்போது நவீனம் என்று சொல்லிக் கொண்டு தன்னைத் தானே எழுதிக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை தமிழில் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது. தனித்துவமான கவிஞர் என்று இன்று எழுதிக் கொண்டிருப்பவர்களை பிரித்தும் பார்க்க முடியாமல் இருக்கிறது. இந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் ஐய்ம்பது கவிதை தொகுதிகள் வெளியாகி இருக்கின்றன. கவிதை தொகுப்புகள் விற்பதில்லை என்று பதிப்பகத்தாரும் சொல்லி வருகிறார்கள். ஆனால் எழுத்தை நோக்கி வருபவர்களுக்கு முதல் பாதையாக கவிதைகளே இருக்கின்றன. ஏனெனில் கவிதை என்கிற விசயம் மிக எளிமையாக இருக்கிறது.

நான் வீட்டு மாடியில் ஒரு ரூம் போட ஏற்பாடு செய்து வருகிறேன். அதற்கான பணிக்கு வருபவர்கள் இளைஞர்கள். தினமும் அவர்களுக்கு 600 ரூபாய் சம்பளம். அவர்களுக்கு காதலிகள் பள்ளியில் படிக்கிறார்கள். பள்ளி விட்ட நேரம் மிஸ்டு கால் வருகிறது. 7 மணியைப் போல ஈஸ்வரன் கோவிலில் சந்திப்போம் என்று குஜாலாக பேசுகிறார்கள். அவர்களில் ஒருவன் என்னிடம், ”ஒரு கவிதை எழுதி குடுங்க! கொண்டு போயி என்ற ஆளுகிட்ட குடுக்குறேன்! நீங்க தான் என்னேரமும் லொட்டு லொட்டுனு தட்டீட்டே இருக்கீங்களே!”ன்னான். பயலுக்கு என்னை சரியாக தெரியாது. “நான் எழுதி குடுத்தா உன் காதல் எப்பவோ புட்டுக்கறது சடனா புட்டுக்கும்என்றேன். இருந்தாலும் அவனுக்காக எழுதித் தர ஆசை தான்!

என் அன்பான கடுகு மணிக்கு உன் அன்பான சீரகமணி எழுதி கொள்ளும் கொத்துமல்லி கவிதை!!” என்று கொடுத்தால் நிச்சயம் அந்தக் காதல் கலியாணத்தில் தான் நிற்கும்.

கவிதைக்கான எல்லை என்று எதுவும் இல்லை. தீர்மானிக்கப்பட்டு முன்முடிவுகளோடு எழுதப்படும் கவிதைகள் கவிதைகள் ஆகாது தான். கவிதைக்கான மொழியிலிருந்து விடுபட்டு சுதந்திரமாய் கொங்கு மண்ணின் பேச்சு வழக்குகளோடு புதிய வடிவத்தை நான் பதினைந்து ஆண்டு காலமாக ஆங்காங்கு முயற்சித்துக் கொண்டே இருந்தேன். அவைகள் அப்படியொன்றும் பிரமாதமான வரவேற்பை பெற்றுத் தரவில்லை என்றாலும் எனக்கு கொங்கு மண்ணின் வழக்குகள் பிடித்திருந்தன. என் சொல்லக் கூசும் கவிதை தொகுப்பை கவிஞர் ரத்தினமூர்த்தி வாசிக்கையில் ஏற்கனவே மூன்று கவிதை தொகுப்புகளுக்கு சொந்தக்காரர். அவருக்கு மண்ணிலிருந்தே வெளிப்பட்ட அந்தக் கவிதைகள் ஒரு ஈர்ப்பை கொடுத்திருப்பதைவிசாலம்என்கிற அவரது கவிதை தொகுப்பினை முழுமையாக வாசிக்கையில் உணர்ந்தேன்.

என் கவிதைகளில் வடிவம் என்ற ஒழுங்குகளை சிதைத்தே எழுதுவேன். ஆனால் ரத்தினமூர்த்தி அவ்விதம் சிதைக்காமல் கதை சொல்லும் பாணியில் இந்த தொகுப்பின் அனைத்துக் கவிதைகளையும் படைத்திருக்கிறார். அவரது வாழ்வியலில் இருந்து தோண்டியெடுத்த சம்பவங்கள் கவிதை வடிவம் கொள்ளும் போது சற்றே பிரமிப்பாகவும் இருக்கிறது எனக்கு. கிணற்றுத் தவளையாகவே கிடந்த கவிதை வடிவங்கள் சமீப காலங்களில் பின் நவீன அரிதாரம் பூசிக் கொண்டு வெளிப்பட்ட்து போல் இதுவும் வேறு வடிவம். பழமலை தன் சனங்களின் கதை தொகுப்பை கொண்டு வந்த போது கவிஞர்கள் அனைவருமே ஆச்சரியப்பட்டார்கள். இவைகள் கவிதைகளா? என்றார்கள். அடுத்து அவர் குரோட்டன்களோடு கொஞ்ச நேரம் வெளியிடுகையில் அமைதியாகி விட்டார்கள். கொங்கு கிராமங்களையும், அங்கு மக்களின் வாழ்வாதாரங்களையும்  அறியாத நகரவாசிகள் கிராமங்கள் தன் முகத்தை இழந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வாசித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இத்தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது.

கவிதைகளின் தேக்க நிலையை சரிப்படுத்த இம்மாதிரியான தொகுப்புகளின் வரவு நிச்சயம் தேவைதான்.

ஊளை மூக்க கையில தொடைக்கத் தெரியாம நாக்குல நக்குனவளா இப்படி பேசுறா?” –மருமகளா வரப்போற பொறந்தவன் பொண்ணுகிட்ட மாமியா பேசும் பேச்சு அச்சு அசல் கிராமியத்தை ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறது!

காத்துல கலக்குற நாங்க வுடற மூச்சுக்காத்த வேண்டான்னு மூக்க பொத்திக்க முடியுமா?” –என்று தலித் தன் உள்ளக் குமுறலை சொல்லும் இடத்தோடு கவிதை முற்றுப் பெறுகிறது! படிப்பவரையும் யோசிக்க வைத்தபடி!

சாதிக்காரனை நகரத்தில் தேடி அலைந்து கடைசியில் இஸ்திரி கிட்ட வந்தவன் மகனுக்கு பொண்ணு கிடைக்குமா? என்று விசாரிக்கிறான்.

அவன் சொன்ன பதிலால வழுக்கு பாறையில
வெளுக்குக்குறப்ப வழுக்கி விழுந்தாப்ல ஆச்சுது!
பின்ன என்ன அவஞ்சாதி ஏகாளி இல்லியாம்னு நான்
சொன்னதக் கேட்ட சின்னாத்தாவிக எல்லாத்துகிட்டயும்
சொல்லி சிரிசிரின்னு சிரிச்சாங்க. – டவுன்ல பெரிய
சாதிக்காரங்கூட செருப்புக்கடை வெச்சிருப்பான்னு!

ரத்தினமூர்த்தி தன் தொகுப்பில் நாவிதனின் பார்வையிலும், ஏகாளியின் பார்வையிலும், காதலனின் பார்வையிலும், தலித்தின் பார்வையிலும் பேசி இருக்கும் கவிதைகள் தனித்து நிற்கின்றன.

கொங்கு வாழ் மக்களின் சொலவடைகள் தொகுதியெங்கும் பறந்து விரிந்து கிடக்கின்றன. நானே இதுவரை கேள்விப்படாத சொலவடைகள் வரிசை கோர்த்து வருவது தொகுதிய வாசிக்கையில் இன்ப அனுபவமாக இருந்தது.

சாணி சந்தைக்குப் போயி
எருவாமுட்டி எதுக்கோ வந்த்து போல

நீரு நின்ன இடத்துல தானே சேறும் நிக்கும்

வெளுத்ததெல்லாம் பாலு பாத்த்தெல்லாம் கூத்து

படிப்படியா சொன்னாலும் அடுப்படியில தான் உக்காருவான்

குன்னி மரத்துல் தூரி கட்டி குந்தானிப் பொண்ணுங்கெல்லாம் அந்து அந்து விழுந்தாங்களாம்

சொலவடைகள் மக்களின் மனதில் ஊறிப்போன வார்த்தைகள். இப்படியான எழுத்துக்குள் வருபவர்களின் தேவைகளுக்காக அவற்றை சொல்லும் பெருசுகள் இன்று உயிருடன் இல்லை. யாரும் இந்த மண்ணிற்காக பணியாற்றவில்லை. கொங்கு மண்ணிற்காக உழைத்தவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. அதையெல்லாம் நிவர்த்தி செய்ய இன்னும் எத்தனை படைப்பாளிகள் இந்த மண்ணில் உதித்தாலும் அவர்களுக்கு தூண்டுகோலாய் நான் காலம் உள்ளவரை இருப்பேன். நான் இல்லை எனினும் என் எழுத்துகள் குறைந்த பட்சம் பின் வரும் சந்ததியினருக்கு வழி சொல்வதாக பல காலம் இருக்க வேண்டும். அதுபோல் தான் ”விசாலம்” கவிதை தொகுதியும் என் மனதிற்கான மண்ணின் படைப்பு.

விசாலம் கவிதை தொகுதியை படிக்கும் யாரும் இவைகள் கவிதைகள் என்று சொல்வதை விட காலத்தின் பதிவு என்றால் சந்தோசம்! தலித்துகளின் பார்வையில் தலித் விடுதலை விரும்பிகளே இதுவரை பேசவில்லை. கொங்கு மண்ணில் தலித்துகள் பற்றி உண்மையான நிலையை யாரும் பதிவும் இது வரை செய்யவில்லை. அந்த வகையில் தலித்துகளின் பார்வையில் சொல்லப்பட்ட முக்கியமான கவிதை தொகுதி விசாலம்!

பிரக்ஞையின் வழி கவிதைகள் குறித்த எல்லா ஆய்வுகளும் கொம்பாதி கொம்பனுக்கும் குழப்பத்தை தோற்றுவிப்பனவையாகவே உள்ளன. நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம் இங்கு நடைபெறும் கூத்துகளை! கவிதை தொகுப்பு வெளியிடும் நிறுவனம் உள்ளே இருக்கும் கவிதைகள் பின்நவீனத்துவத்தை கூறுகட்டி வித்துப் போடுச்சுன்னு சொல்வதை. அதில் எந்த முடையும் வெளியிடுபவனுக்கு இல்லை தான். கவிதைகள் மீது அதீத ஈடுபாடுள்ள கவிஞர் என்றால் நேரில் பின்நவீன கவிதைகளுக்குண்டான கூறுகளை விளக்கலாம். விவாதத்தை என்னிடம் வைக்கும் போது நேர் பேச்சில் படிம்ம், பூடகம், இருண்மை, லொட்டு லொசுக்கு ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை. கவிஞர் தன் நிலைப்பாட்டை இதை நோக்கி இந்த ஒற்றை வரி போகுது…. அந்த சந்துல சுத்தி லத்தீன் போகுது, வறண்ட கெணத்தை தாண்டி வந்து 34ம் பக்கம் நிக்குதுன்னு நேரில் பேச முடியாது இல்லீங்களா? புரியாததை புரிந்து கொள்ள யாரும் இங்கு தயார்.

கவிதைகளில் எளிமையை விதைப்பவன் தோற்றதாக சரித்திரம் கிடையாது தான். மக்கள் பேசும் மொழியை அதற்காகத்தான் நான் தேர்ந்தெடுத்தேன். இந்தக் கவிதைகளில் பூடகமும், இருண்மையும் இல்லை! நேராக வாசகனைச் சென்றடையும் கவிதைகள்.

யாப்பும் சீரும் கொண்டவைகள் தான் கவிதைகள் என்ற வழக்கை அழித்தொழித்து வருடங்கள் பலவாயிற்று. புதிய வடிவங்களின் மீதான ஈர்ப்பு இன்று அதிகமாகி இருக்கிறது. கவிதைகளில் மேலும் சுதந்திரம் உட்கார்ந்து விட்டது. வாசிக்கையில் வாசகன் அதன் சப்த அமைப்பில், கூடவே பேசும் தொனியை அனுபவிப்பான் என்பது நிச்சயம். இம்மாதிரி, வாசிப்பை எளிமையாக்கும் தொகுதிகள் வருகையில் மேலும் கவிதை பற்றியான வாசிப்பு பயம் வாசகனுக்கு அகன்று விடும் என்அது நிச்சயம். சமூகவியலை அகவியலுடன் சேர்த்துப் பார்க்கிற நிலையில் கவிதைகளுக்கு ஒரு ஆழம் சிலகாலம் இருந்து வந்தது. அது கவிதைகளை புரிந்து கொள்ள சிரம்மாகவும் இருந்தது. அந்நியமாகவும் தென்பட்டது. அதை அழித்தொழிக்கும் பணியில் என்னோடு கைகோர்த்த ரத்தினமூர்த்திக்கு என் வாழ்த்துக்கள்!

கடைசியாக….

அனுபவம் தரும் பாடங்களை கவிதைகள் நமக்குச் சொல்கின்றன. ஆகவே அவைகளில் நெறிகளும் மெய்யனுபவங்களும் இயல்பாகவே பதிகின்றன! வாழ்த்துக்கள் நண்பரே! இந்த தொகுப்பின் வெற்றியானது தொடர்ந்து உங்களை மண் சார்ந்து இயங்கச் செய்யும் பணியை தூண்டட்டும்!!!

அன்போடே என்றும்
வா.மு. கோமு
30 -1-2014Post Comment