சனி, மே 03, 2014

மே 1 ஈரோடு விழா 2014


ஈரோட்டில் நடந்த விழா நேற்று மாலை இனிதே நிறைவு பெற்றது அதில் கலந்து கொண்ட அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்தியதை  நேரில் கண்ட அனைவரும் உணர்ந்தார்கள். நாஞ்சில்நாடன் தன் பேச்சில் பார்வையாளர்களை திகைக்க வைத்தார். எழுத்தாளர்கள் பெறும் தொகை பற்றியும் பதிப்பகங்கள் வெளியிடும் புத்தக எண்ணிக்கை பற்றியும் வேகமாய் பேசினார். கால காலமாக அவர் அனுபவித்து வந்த சிக்கல்களை, வருத்தங்களை நேற்று ஈரோட்டில் சுதந்திரமாய்க் கொட்டி மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தார். கொஞ்சம் வயது எனக்கு கூடிய பின் இவரை விட எடக்கு மடக்காய் மேடைகளில் நானும் பேசுவேன் என்பதை உள்ளுணர்வு இப்போதே சொல்கிறது! எழுத்தாளர்களை கொண்டாடும் இடமாக தமிழகம் இல்லை என்ற பேச்சை வெளிப்படையாக சில எழுத்தாளர்கள் பேசுகிறார்கள்! எதற்காக அப்படி இருக்க வேண்டும்? காரியத்தில் கண்ணை வையடா தாண்டவக்கோனே!

சிஷ்யப்பிள்ளை ஹரிகிருஷ்ணனை விழாவில் எந்த மூலையில் தேடியும் காணோம்! அவனுக்கு ஒரு போனைப்போடலாமென்றால் இந்த செலுப்போனில் பைசா நஹி என்றே கத்தியது! அவன் அஸ்ஸாம் நிகழ்வு நடத்த போயிருப்பதாக தாமோதர் சந்ரு அறிவித்தார்.

சிவராமன் பேச்சை கொஞ்சம் கேட்டுக்கொண்டிருக்கையில் நண்பர் அலாவுதீன் வெண்ணிறத்தில் இருக்கும் சிகரெட்டை பற்ற வைத்து ஊத வெளியே அழைத்துச் சென்றுவிட்டார். அவர் பேசுகையில் கவனித்தது, நான் பேசுவதில் தப்பு இருக்கலாம், இருக்கும்!

மழைக்காதலன் இனிமேல் தான் கவிதை எழுதப்போவதில்லை என்று அறிவித்த சமயம் என் இதயம் சுக்கு நூறாய் வெடித்துச் சிதறி விடுமோ என்று அஞ்சினேன். புகையை ஆழ இழுத்து ஒரே ஊதில் ஈரோட்டை சேலத்துக்கே அனுப்பி விடுவது போல ஒரு ஊது! முன்பெல்லாம் எழுத்தாளர்கள் தான் இனிமேல் எழுதப்போவதில்லை என்றும், இனிமேல் தமிழில் எழுதப்போவதில்லை என்றும் உதார் அடித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது முகநூல் நண்பர்களும் சனத்தைக்கண்டால் அடித்து விடுகிறார்கள் சொற்களை!

மின்னல்மனிதன் அருகிலிருந்த விநாயகர் கோவிலில் கும்பிடு வைத்துக் கொண்டிருந்த யுவதியை தெரியாத் தனமாய் ரசித்து அது கும்பிடு முடித்து விட்டு கிளம்புகையில் முகம் பார்த்து கரூர் நோக்கி முகத்தை திருப்பியவன் வீடு போய் விடும் ஆசையை அறிவித்தான்.

அண்ணன் தாமோதர் சந்ருவுக்கு ஈரோட்டில் கிட்டாத பிரதியான நாயுருவியை கொடுத்தேன். அதை அவர் அங்கிருந்து பத்திரமாய் வீடு கொண்டு சேர்த்திருப்பாரா!


சேலத்திலிருந்து வந்த புயல் மலைகள் மச்சி தன் ஆன் லைன் சேல்ஸ்சை ஒரு மூட்டையாக கட்டி கொண்டு வந்திருப்பார் போலிருக்கிறது! பிழைக்கிற பிள்ளை மூட்டையை ரூமில் வைத்து விட்டு வந்தது ஒரு பெரிய ஆச்சரியக்குறி தான்! மச்சியிடம் சி.மோகனின் நாவலை கேட்டிருக்கிறேன்! அது வந்து சேரும் நாளில் வாய்ப்பாடியில் இடியும் மின்னலும் கூடிய மழையை எதிர்பார்க்கிறேன்! யார்யா நீ? இத்தினி நாளா எங்கேய்யா இருந்தே? உன்ன மாதிரி ஒருத்தன் எங்கூட இருந்திருந்தா எங்கியோ போயிருப்பேனேய்யா! மலைகள் ஆன்லைன் சேல்ஸ்ங்றே! சேலம் புக்ஸ்ங்றே! ரொடுபோட்டு காட்டுனா தார் ஊத்திடறே!

சதீஷ் சங்கவி கூட்டத்தில் அவதரித்த வால்பையனைக் கண்டு மிரண்டது கூடுதல் விசேசம்! அவர் தன் துணைவியார் வந்து கொண்டே இருப்பதாய் அறிவித்தார். அது எனக்கே பயமாய் இருந்தது!


வால்பையனுக்கு கூட்டத்திற்கு வந்ததும் அள்ளி எடுக்கப்பட்டு உடனே அகற்றிய ராஜேஷையும் காலையில் நிச்சயம் ஞாபகமிருக்காது! வாலிடம் மாட்டிய சொற்ப நேரம் மின்னலுக்கு எப்படி இருந்தது என்று சொன்னால் தெரிந்து கொள்ளலாம்! வால் தன்னை திருத்திக் கொள்ளும் நேரம் வரவேண்டும் என்று உண்மையாகவே ஆசைப்படுகிறேன்! (நான் அரைத்தரம் தான் திருந்தியிருக்கிறேன் என்பதும் விசயம் தான்) யானை தன் தலையில் மண்ணை வாறித் தூற்றிக்கொள்ளுமாம்! நேர்ல யாரும் பார்த்ததில்ல! ஆனா வால் அமர்ந்திருந்த வரிசையில் யாரும் அமராமல் ஓரம் போய் நின்றார்கள்! யாராவது அவனை திட்டினாலும் விட்டுக்கொடுக்கவும் என்னால் முடியாது!

கோவில் விடுமுறை நாளில் இப்படி மாபெரும் விழாவை வைத்த ஈரோட்டு நண்பர்களை சன்னமாய் கடிந்து கொண்டிருந்தார் நண்பர் ஒருவர்! அவருக்கு எதுவும் செய்ய இயலாத நிலையில் நானிருப்பதை நினைத்து வேதனை கொள்கையில், எனக்கும் ஞாபகப்படுத்தி கடுப்பேத்திய நண்பா! நண்பா! உனக்கு ஒருவார தூக்கம் இல்லாமல் போகக் கடவது!கடைசியாக லெனினிடம் தெளிவாய் உதிர்த்த நேற்றைய முத்து! எழுத்தாளன் தன்னை எழுத்தாளன் என்று நினைக்கையில் அவன் எழுத்து காணாமல் போகும் பாதை நோக்கி நகரத் துவங்குகிறது!

Post Comment

கருத்துகள் இல்லை: