ஞாயிறு, மே 04, 2014

ராணிமுத்துவில் நான்


தமிழ்நிலவனின் கவிதைத் தொகுப்புகள் இரண்டு என் கைவசம் அவர் அனுப்பி மாதங்கள் ஆகிவிட்டன! காதல் கவிதைகளை வாசிக்க ஒரு தனி மனநிலை வேண்டும்! தபுசங்கரின் வெட்கத்தைக்கேட்டால் எட்டணா தருவேன்! ச்சே! அது வந்த காலத்திலிருந்து சொல்லிச் சொல்லி அப்படியே பழகிவிட்டது போங்கள்! அந்த நேரத்தில் காதலில் விழுந்து கிடந்த போது அதை வாசிக்க நல்லாத்தான் இருந்தது! மீராவின் கனவுகள் கற்பனைகள் காகிதங்களுக்கு அடுத்தபடி அது! கூட பேசிச் சிரிக்கும் பெண்களே காதல் என்ற வார்த்தையை கேட்டால் கர்ச்சீப் வைத்து சிரிக்கும் காலத்தில் வாழ்கிறோம்! இருந்தும் பெண்களை பாடுவதும், அவர்கள் அழகை வர்ணிப்பதும் தொன்று தொட்டு வருகிறது! இந்த இரு தொகுப்பிலும் அப்படித்தான்! 
காதலன் என்றறியப்பட்டவன் தன் மனதுக்கு உகந்த பெண்ணை பாட்டாய்ப் பாடி பின்னி எடுக்கிறான். நான் விரித்ததும் படித்த முதல் கவிதை!

கண்ணில் தூசி விழுந்து விட்டதாக சொல்லி பாசாங்கு செய்தேன் உதடு குவித்து நீ ஊதும் அழகை இரசிப்பதற்காக! 

இதை காதலிகளிடம் காதலன்கள் நேரில் சொன்னால் காதலி இலவச இணைப்பாக முத்தம் கூட கொடுக்கலாம்! சிலர் கிள்ளி வைக்கலாம்! சிலர் லூசு! என்கலாம்! நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது!

புரண்டு படுக்கும் கர்ப்பிணி பெண்ணின் கவனத்தோடு சுமக்கிறேன் உன் காதலை! 
வேறு வழியும் இல்லை அப்படித்தான் கவனமாய் காதலிக்க வேண்டியிருக்கிறது சமீப காலங்களில்!

காதலின் அதிசயம் தாஜ்மஹால் என்றார்கள்.காதலுக்கே அதிசயம் நீ என்றேன் நான்! 
காதல் கவிதைகள் ரசிப்போருக்கானவை இரு புத்தகங்களும்! 

-
கற்பகம் புத்தகாலயம், (நடேசன் பூங்கா அருகில்) தி.நகர், சென்னை-17
தமிழ்நிலவனோடு நீங்கள் பேச : 9842373550


ஏ! பயலே! புத்தவக்கடையில தலைகிழுதா நான் தொங்கப் போறேண்டியேய்! ஸ்டேட்டஸா போட்டு கொளுத்துறே மவளே! ஒரு புத்தகம் கூட தமிழ்நாட்டுல ரிட்டர்ன் சென்னை ஆபீசுக்கு போவப்படாது பாத்துக்க! இதென்ன வெளையாட்டு சமாச்சாரமுன்னு நெனச்சியா? காலகாலமான ஆசைடி! யார் வேணாலும் எதை வேணாலும் எழுதலாம். ஆனா வா.மு. மாமு எழுதுறாண்டியேய்! எழுதுவாண்டியேய்!


புகைப்பட உதவி : வா.கோ.துரையரசு!
நண்பர் Chellamuthu Kuppusamy வாய்ப்பாடி வந்த வேளையில் வெய்யல் கொன்னு எடுத்துக் கொண்டிருக்கிறது! இன்று மழை வரலாம் என்ற அறிகுறி உள்ளது! ஏற்கனவே ஒரு சாமியார் அரசனாமலை அடிவாரத்தில் மழைவேண்டி தவம் இருப்பதாக இரண்டு நாளாக பேப்பர் செய்தி! அப்படி இல்லை! விசயத்திற்கு வருவோம்! நடுகல் பதிப்பக வேலையாக வந்தவர் தன் நாவலை ஒப்படடைத்து விட்டு செல்வதற்காக வாய்ப்பாடி வந்தார். வரும் ஆகஸ்டு ஈரோடு புத்தக கண்காட்சியில் நடுகல் வெளியீடாக வருகிறது! இந்த தகவல் என் சென்னை நண்பர்களுக்கு! முதலிலேயே தகவலை அறிவித்திருக்கலாம்! ஆனால் சென்னை போன் எல்லோருக்குமே இடைஞ்சல் செய்கிறது! நீ வாய்ப்பாடி போகாதே! என்றொரு அறிவிப்பு வந்து விடும் என்று நானே அறிவிக்கவில்லை! அப்புறம் நானாவது செல்லமுத்து குப்புசாமியை சந்திப்பதாவது!


என் தந்தையாரின் சேமிப்பில் ராணிமுத்து ஒருரூபாய் விலையில் கனமாய் வந்த புத்தகங்களை வரிசையாக வாசித்திருக்கிறேன். அவற்றில் அறிஞர் அண்ணா, புதுமைப்பித்தன், ஆர்.சண்முகசுந்தரம், என்று பலரும் எழுதியிருந்தார்கள். அவர்கள் அவர்களின் எழுத்தை எழுதினார்கள். ராணிமுத்துவுக்காக அவர்கள் எழுதவில்லை. காலமாற்றத்தில் நானும் அந்த இதழுக்கு வருகையில் என் இயல்பான எழுத்தைத்தான் கொடுத்திருக்கிறேன். என் தந்தையாருக்கு இருந்த புத்தக சேமிப்பு பழக்கம் என்னிடம் இல்லை.

 வாசிக்கத்தான் புத்தகம் என்ற எண்ணத்தில் இருப்பவன் படிப்போருக்கு கொடுத்து விடுவேன். என்னிடம் சேமிப்புகள் இல்லை! எந்த கதையாக இருந்தாலும் வாசிப்பவனுக்கு மகிழ்ச்சியளிக்க வேண்டுமென நினைப்பவன் நான். எழுதுகையில் எனக்கே இது போரடிக்கிறது என்று தெரிந்தால் அதை அப்போதே முடித்து விடுவேன்! இந்த எழுத்து எனக்கு சின்ன தூண்டுகோல் தான். இப்படியான எழுத்தை வாசிக்க அவர்கள் வாசகர்களை வைத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கான எழுத்தை இப்போது தான் நான் எழுதுகிறேன் என்று சொல்லவில்லை. 89 -லேயே ஒருகுயர் நோட்டில் எழுதி கோவையில் ரவுண்டு விட்டிருக்கிறேன். அப்போதே எனக்கு ரிசல்ட் தெரிந்து விட்டது. மேலும் பல இதழ்கள் பெட்டிக்கடைகளில் தொங்குகின்றன! அவைகளில் புதியவர்கள் பலர் இப்போது எழுதுகிறார்கள்.

என் கோவை நண்பர் சாக்குப்பையிலிருந்து சமீபத்திய எழுத்தாளர்களின் புத்தகங்களை பெரிய வலப்பையில் போட்டு வண்டியில் மாட்டி அனுப்பி விட்டார். அவருக்கு இலக்கியம் தெரியாது. இன்றும் குலுக்கல் போட்டிகளில் எழுதி அனுப்பி பரிசுகள் வாங்கிக் கொண்டிருக்கிறார். பரிசாக அவர் பத்து செல்போன்கள் பெற்று பிள்ளைகளுக்கு, மருமகனுக்கு இவருக்கு என்று தூள் கிளப்புகிறார். அவரது ஆசையெல்லாம் உம்மட செலவுக்காச்சும் ஆகுமல்லொ! என்பதே!

மற்றவர்கள் எதாவது நினைப்பார்களோ என்று எண்ணியே பல காரியங்களை நாம் ஒத்திப்போட்டு விடுகிறோம்! அது கூடாது என்பது தான் என் இப்போதைய தெளிவு! இதுவெல்லாம் மிக தாமதம் அல்ல! சரியான நேரம் தான்!

Post Comment

கருத்துகள் இல்லை: