திங்கள், மே 12, 2014

மேலும் படித்த இரு புத்தகங்கள்


நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது! -ஹாருகி முரகாமியின் ஆறு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பை வாசித்து ஒன்பது வருடங்கள் பறந்து விட்டது. ஏதோ முந்தாநேத்து படித்தது போல் இருக்கிறது. வம்சி அந்த புத்தகத்தை வெளியிட்டிருந்தது. வெகு நிதானமாகவும், நேர்த்தியாகவும் அவரசரமின்மையாலும் எழுதப்பட்ட கதைகளை அவசரமின்றி வாசித்து அடுக்கில் போட்டுவிட்டேன். அவரது நாவல்களை வாசிக்க ஒரு சமயத்தில் ஆர்வம் இருந்தது. அதேசமயம் தான் சக்கரியா கதைகளும் தமிழில் வாசிக்க கிடைத்தன. இப்படியான கதைகள் என்னை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டன.

இப்போது, யானை காணாமலாகிறது -முரகாமியின் தொகுதியை அவர் எழுத்துகளின் மீது ஆர்வம் கொண்டிருந்த சிபிச்செல்வனால் மிகுந்த சிரமங்களுக்கிடையே அவரது பதிப்பில் வந்துள்ளது. முரகாமியை அவர் ஆங்கிலத்தில் வாசிக்கிறார். நம்மைப்போன்ற ஆட்கள் தமிழில் படிக்க மிக சிரமம் எடுத்து மொழிபெயர்ப்பாளர்களிடம் வாங்கி அவரது மலைகள் இதழில் வெளியிட்டிருந்தார்.

ஜப்பானிய நவீன எழுத்தாளர் வரிசையில் முதன்மையானவர் முரகாமி. அவரது கதைகளில் யானை மட்டுமல்ல எல்லோருமே அவ்வப்போது காணாமல் போய்க் கொண்டே இருக்கிறார்கள். தன் கதைகள் வாயிலாக அவர் அரசியல் விமர்சனங்களை  வலிந்து செய்கிறார். நவீன வாழ்க்கையில் மனிதர்களின் மனப்பாங்கு ஒரு இயந்திரம் போல் மாறிவிட்டதை வெளிப்படையாக கூறாமல் மாற்று வடிவங்களில் கூறுகிறார். அவரின் கதை சொல்லல் முறை மிக நிதானமாக இருக்கிறது.

தினம் நகரும் சிறிநீரக வடிவக்கல் சிறுகதை தந்தைக்கும் மகனுக்குமான உறவுச்சிக்கலோடு துவங்குகிறது. “ஒரு ஆண் தன் வாழ்வில் சந்திக்கும் பெண்களில் மூன்றுபேர் மட்டும் அவனுக்கு அர்த்தமுள்ள உறவாக முக்கியமானவர்களாக இருப்பார்கள்என்கிறார் தந்தை. அதன்படி அவன் இரண்டு பெண்களை அர்த்தமுள்ளவர்களாக  வாழ்வில் சந்தித்து தோல்வியுறுகிறான். மூன்றாவதாக சந்திக்கப்போகும் பெண்ணை மனதால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென தீர்மானிக்கிறான். இந்தக்கதையில் கதைக்குள் கதை சொல்லும் யுத்தியை கையாள்கிறார் முரகாமி. தொடர்ந்து வரும் தூக்கம் கதையிலும் கதைக்குள் மற்றொரு கதை  சொல்லும் வழியை பின்பற்றுகிறார். இவரது கதைகளுக்குள் ஒரு அமானுஷ்யத்தன்மை இருப்பதை நான் உணருகிறேன். மரபுசார்ந்த ஒழுக்கங்களையும், கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கும் ஆட்களுக்கு இவரது கதைகளில் இடமில்லை.

நான்கு கதைகள் இடம்பெற்றிருக்கும் இத்தொகுதி தமிழுக்கு வளம் சேர்க்கும் தொகுதி. நல்லவேளை இப்படியான எழுத்தாளர் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. யானை காணாமலானது போல்  ஒரு மூலையில் காணாமல் போயிருப்பார். ஒருவாரம் காணாமல் போன எழுத்தாளனைப்பற்றி பேசிவிட்டு வேறு செய்திகளுக்கு போயிருப்பார்கள்.


சொந்தமாக ஜாஸ் கிளப்பை நடத்தியவர் தன் இலக்கியப்பணி மூலமாக பேரும் பொருளும் கிட்டியதால் கிளப்பை விற்று விட்டு முழுநேர எழுத்தாளராக மாறியவர். நாம் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.


ஓநாய் குலச்சின்னம் என் கைக்கு வந்து வருடத்திற்கும் மேலாகி விட்டது. வாசிக்கப்படாமல் கிடந்ததை 15 மணிநேர அளவில் முடித்தாகி விட்டது. மேய்ச்சல் நிலத்தில் மங்கோலியர்கள் தங்கள் வளர்ப்புப்பிராணியான் நாய்களுடன் பெரிய மந்தைக்கூட்டத்தையும், குதிரைக்கூட்டத்தையும் வளர்ப்பதாக துவங்கிய நாவலை கீழே வைக்க இயலாத அளவு அதில் கட்டுண்டு கிடக்க வைத்து விட்டது. மேய்ச்சல் நிலத்தில் ஓநாய்க்கூட்டத்தின் திட்டமிடல்கள், அவைகள் குதிரைக் கூட்டத்தை தாக்கும் வெறித்தாக்குதல்கள் நம்மை பயப்பீதியில் உறையச் செய்கின்றன. இந்த நாவல் ஒரு யுத்த களத்தில் நாம் நின்றிருப்பதான உணர்வைக் கொடுத்தது. 

கடலும் கிழவனும், பட்டாம்பூச்சி, பொன்னியின் செல்வன், வாடி வாசல், என் பெயர் பட்டேல் இப்படியான புத்தகங்களை நீங்கள் வாசிக்கையில் என்ன உணர்வை அடைந்தீர்களோ அந்த உணர்வை திரும்பப் பெறலாம் இந்த நாவலை வாசிக்கையில்.

Post Comment

கருத்துகள் இல்லை: