வெள்ளி, மே 30, 2014

சிறுகதை - ஸ்னேக சம்பந்தம்


ஸ்னேக சம்பந்தம்

  மின்சாரம் போய்விட்டதால் மின்விசிறி நின்று போயிருந்தது. மதியம் பள்ளியில் இருந்து வந்ததும் களைப்பில் வெறும் தரையில் சட்டையுடனே படுத்து தூங்கியிருந்தேன். மேல் சட்டை வியர்வை மழையில் நனைந்திருந்தது. கழற்றுவதற்குக் கூட சிரமமாய் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் வெளியே வெய்யில் எப்படி இருக்குமென்று. இனி எப்போது மின்சாரம் வருமோ! படிப்படியாக தமிழ்நாட்டில் மின்சாரப்பற்றாக்குறை தீரும் என்ற அறிவிப்பு வெளியாகி நாட்கள் பல ஆகிவிட்டது. இன்னமும் தீர்ந்தபாடில்லை.
  சட்டையை ஓரமாய் போட்டு விட்டு துண்டால் உடலைத் துடைத்துக் கொண்டேன். பின்கட்டு போய் குளுகுளுவென்று தொட்டித் தண்ணீரை தலையிலிருந்துமொடேர்ச் மொடேர்ச்சென போசியில் மோந்து ஊற்றிக்கொள்ள வேண்டும் என்றிருந்தது. வீட்டின் வெளியில் காற்று வீசிக்கொண்டிருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை.
  “தொந்தி போடுதுங்க சார்.. யோகாசனம் பண்ணி தொந்தியை கொறையுங்க! பொண்ணு பார்க்கப் போனீங்கன்னா உங்க தொந்தியை பார்த்து பிள்ளை வேண்டாமுன்னு சொல்லிடுவா!”  என்று பள்ளியில் சக ஆசிரியர் மாலினி சொன்னது இப்போது காதில் எதிரொலிப்பது போலிருக்கவே இளம் தொந்தியை தடவினேன். சீக்கிரம் இதைக் குறைக்க வேண்டும். பார்க்க இப்போதைக்கு பயப்படுத்தும் விதமாய் இல்லை என்றாலும் பெருத்து விட்டால் தொந்தரவு தான்சாப்பாட்டு விசயத்தில் அப்படியொன்றும் அள்ளி பூசிக்கொள்வதில்லை! இருந்தும் இதற்கு மட்டும் தீனி போட்டது போல வருகிறதே! தஞ்சாவூரில் அம்மாவும் அப்பாவும் பெண் தேடிக் கொண்டிருக்கும் சமயத்தில், முப்பது வயதான எனக்கு வயிற்றில் மத்தளாமா? கூடாது தான்.
  “உங்களுக்கெல்லாம் வேளா வேலைக்கி சமைச்சுக் கொட்டணுமா? வெறுமனே  கா! கா! ந்னு கத்திண்டே ஆத்தை சுத்துங்கோ! இன்னும் சித்த நாழியாகும். நீயும் கிளம்பு எங்காச்சும் மரத்தடியிலெ உருண்டு பெறண்டு நாழி கழிச்சு வாகத்தும் காக்கைகளிடமும், திண்ணையில் கிடந்த நாயிடமும் பக்கத்து வீட்டு மாமி பேசிக்கொண்டிருந்தது சிரிப்பைக் கூட்டியது. எழுந்து வெளித்திண்ணைக்கு வந்தமர்ந்தேன்.
  சொல்லவில்லையே! இந்த அக்ரஹாரத்தின் பெயர் பாளையபுரம். ரொம்பப் பழையபுரம் என்று வைத்திருக்கலாம் சரியாய் இருந்திருக்கும். வீதியில் தர்மராசு போய்க் கொண்டிருந்தான். எதேச்சையாய் திரும்பிப் பார்த்தவன் என்னைப் பார்த்து புன்னகைத்தபடி வந்தான்.
  தர்மராசுவுக்கு அப்பா அம்மா என்று யாருமில்லை. இந்த அக்ரஹாரதிற்கு இவன் வந்து நான்கு வருடங்களாகி விட்டது. முதலாக இவன் இங்கு காலடி வைத்த போது பத்து வயது தான் இருக்கும். காற்டித்தால் பறந்து சென்று விடுபவன் போலத்தான் அப்போது இருந்தான். இப்போது கொஞ்சம் தேவலை போல இருந்தான். இந்த நான்கு வருடத்தில் ஆள் அப்படியே மாறி விட்டான். அக்ரஹாரத்தில் எல்லா வீடுகளுக்கும் எடுபிடி ஆளாக இருந்து வந்தான். ஆச்சாரியார் விட்டு திண்ணை தான் இவன் படுக்கும் இடம். எந்த வீட்டில் சாதம் மிஞ்சிப் போனாலும் ராசு! ராசு என்று இவனைத்தான் தேடுவார்கள். எல்லா வீட்டிலும் கை நனைக்கும் ஒரே ஆள் தர்மராசு தான்.
  இரண்டு மாதம் போல நன்றாகத்தான் ஓடி ஆடியபடி இருப்பான். ரேசன் கடை சென்று வருவது, தண்ணீர் எடுத்து வருவது என்று நாள்முழுக்க அவனுக்கு வேலை இருந்து கொண்டேயிருக்கும். திடீரென ஒரு நாள் முழுக்க பிள்ளையார் கோவில் மரத்தடியில் சுருண்டு வயிற்று வலி என்று கிடப்பான். அன்று யார் கூப்பிட்டாலும் அவன் எழ மாட்டான். அன்று யார் வீட்டுக்கும் சாப்பிடவும் போக மாட்டான். எந்த வீட்டு ஆட்களும் அவனிடம் போய், ‘என்னடா வயிற்று வலி? வா டாக்டர் கிட்ட பார்த்துட்டு வருவோம்என்று கூப்பிட்டுச் செல்லவும் மாட்டார்கள்.
  “என்னங்க சார் ஸ்கூல் இன்னிக்கி அரை நாள் லீவா?”
  “ஆமாம்டா! டவுன்ல இருந்து வந்ததும் உடம்பு அடிச்சுப் போட்டாப்ல இருக்க ஆசாரத்துல படுத்து கண்ணசந்துட்டேன். கரண்ட் போனதும் வெளிய வந்துட்டேன். அதவிடு. ரொம்ப நிதானமா போறியே ஜோலி ஒன்னும் இல்லையா?” என்றேன்.
  “சித்த கழிச்சு அக்ரஹாரத்து கோடியில இருக்கிற கோமதி மாமி ஆத்துல தண்ணி மோந்து கொடுக்கப் போகணும் சார். இங்க எல்லா ஆத்துக்காரங்களும் எனக்கு வேலைன்னு எதாச்சும் கொடுக்கிறா, நீங்க மட்டும் ஏன் சார் எதும் சொல்லுறதேயில்ல?”
  “உனக்கு நான் என்ன வேலை செய்ய சொல்றது?”
  “பாத்திரம் அலம்பி வைக்க சொல்லுங்க. அதை ஒன்னு தான் நான் செய்யுறதேயில்ல எங்கேயும். எந்த ஆத்துலயும் சமையல் கட்டு வரை நான் போனதே இல்லை. வெளித் திண்ணையோட சரி.”
  “சனி, ஞாயிறு மட்டும் தான் இங்க சமைக்கிறேன் நான். நானே அதை கழுவி கமுத்திடறேன். இன்னிக்கு ராத்திரி உப்புமா கிண்டுறேன் நீயும் வா சேர்ந்தே சாப்பிடலாம்
  “ஒரு வேலையும் செய்யாம உங்க ஆத்துல நான் சாப்பிட மாட்டேன். எனக்கு கோமதி மாமி இன்னிக்கு புளிக் கொழம்போட சாப்பாடு போடும்
  “நல்ல பழக்கமாடா உனக்கு! மாமிகள் மீந்து போனதை குண்டான் ரொம்ப கொட்டி உனக்கும் டேஸ்ட் கத்துக் கொடுத்திருக்காங்க. உனக்கெங்க சூடா உப்புமா இறங்கும்? போவட்டும் நேத்து கோவில்ல ஆச்சாரியார் என்ன வாதம் சொன்னார்? ஞாபகமிருக்கா?”
  “அதுவா? பிராமண தர்மத்தின்படி பாம்பினோட பிணம் கூட பிராமணனோட கண்ணுல பட்டால் அதுக்கு யோக்கிதையான சவ அடக்கம் பண்ணிடணுமாம். அப்படி செய்யாம போஜனமே பண்ணக்கூடாதுன்னு விதி இருக்கிறதா சொல்லிட்டு இருந்தார். நான் கிளம்புறேன் சார். நாழி ஆயிடுச்சு! மாமி சத்தம் போடும்என்று நகர்ந்தவனிடம், ‘ஆச்சாரியார் கிட்ட நல்லதா ஒரு டவுசர் கேக்கலாமல்லஎன் போது கிழிசல் டவுசரை ஒரு பார்வை பார்த்து புன்னகைத்து விட்டுச் சென்றான்.
  முன்பொருமுறை ஆச்சாரியாரிடம் அவர் வீட்டுத் திண்ணையில் தர்மராசுவின் வயிற்று வலி பற்றி பேசினேன். வெற்றிலையை அதக்கிக் கொண்டே தலையை ஆட்டி கேட்டுக் கொண்டவர், ‘விசயம் புரியுதுடா அம்பி.. உனக்குத்தான் புரியில. அது அவன் ஆத்துல தோப்பனார் ஏதாவது தப்பு காரியம் செஞ்சிருப்பார். அதான் ஆண்டவன் அந்த வம்சத்தை தண்டிக்கிறார். நாம என்ன செய்ய? டாக்டர் கிட்ட கூட்டிப் போகவா? செலவை யார் ஏத்துப்பா? கடவுள் என்ன அவன் தலையில எழுதியிருக்காரோ அதுபடித்தான் நடக்கும்என்றார். இதனால் தான் இதை பழையபுரம் என்றேன்.
  அக்ரஹாரத்து பெண்கள் அவன் வயிற்று வலி என்று படுத்து விட்டால் தாடையில் கைவைத்து பாவமே! என்று பார்த்துப் போய் விடுவார்கள். ஒன்றிரண்டு பேர் கஷாயம் வைத்து கொண்டு போய் கொடுத்த சம்பவமும் உண்டு. ஏதாவது ஒரு நாளில் இவனை வைத்தியரிடம் அழைத்துப் போகும் எண்ணம் என் மனதில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நேரம் வாய்க்கிறதா சீக்கிரம்?
  “கிணிங் கிணிங்சைக்கிள் மணியோசை கேட்டு தர்மராசுவின் நினைவிலிருந்து விலகினேன். ஆச்சாரியாரின் மகள் புஷ்பவள்ளி தான் வேண்டுமென்றே பெல் அடித்து விட்டு ஓரப்பார்வை வீசியபடி சென்றாள். பத்தாம் வகுப்பில் கோட்டை விட்டுவிட்டு வீட்டோடு இருக்கிறாள். எந்த நேரமும் நொறுக்குத் தீனியுடன் டிவிமுன் அமர்ந்திருப்பாள். “எங்காத்துல சமையல் பிரமாதமா இருக்கும். கை நனைச்சுட்டு போங்கோஎன்று எப்போது அவள் வீட்டு வழியே சென்றாலும் குரல் கொடுப்பாள். லலிதா மாமி பையனுக்கு லவ் லெட்டர் கொடுத்தாள் என்ற வழக்கு கொஞ்சம் நாள் முன்பாக அவள் மீதிருந்து அது அழிந்து விட்டது. லலிதா மாமியின் பையன் பார்க்க நன்றாக இருப்பான். பால் வடிந்து ஊற்றும் முகம். பஜாஜ் டிஸ்கவரில் சாலையில் வருவான். ஒருமுறை புஷ்பவள்ளி சைக்கிள் மீது நன்றாக விட்டான் என்றார்கள். அந்தச் சம்பவம் கூட அவளுக்குள் காதல் விதையை தூவி இருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
  00000
  ஞாயிற்றுக்கிழமை என்பதால் படுக்கையில் இருந்து சீக்கிரம் எழாமல் சோம்பலாய்க் கிடந்தேன். வெளியே சிறுவர்களின் கூச்சல் கேட்டபடி இருந்தது. பெண்களின் குரலும் கேட்டது. ‘அங்கெல்லாம் நீங்க போக வேண்டாம். மத்தவா கிட்ட உளறிட்டு திரியாதீங்கோஎன்று குரல் கேட்கவும் என்னவோ நடந்திருக்கிறது என்று எழுந்து முகம் கழுவிக் கொண்டு வெளியில் வந்தேன். காரணம் சீக்கிரம் தெரிந்து போயிற்று.
  ஊர்க்கோடியில் இருந்த கிணற்றருகே தர்மராசு மல்லாந்து கிடந்தான். கால்களை தரையில் பலமாய் உதைத்திருக்கிறான் என்பதற்கான அறிகுறிகளும் இருந்தன. சின்ன வயதில் இப்படி ஒரு சாவா? அக்ரஹாரத்து பிள்ளையார் தூரத்தில் இருந்தபடி பார்த்தபடி தான் இருந்திருக்கிறார். சம்பவம் ஒருவேளை இரவில் நடந்திருக்கலாம். பெரியவர்கள் கைகட்டி ஓரமாய் நின்றிருந்தார்கள். என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. போலீசுக்கு தகவல் சொல்லிடலாம் என்று யாருடைய குரலோ கேட்டது.
  “பார்த்தியா தம்பி.. நான்சொன்னேன்ல சாமி தண்டிச்சுடுச்சுஎன்றார் ஆச்சாரியார் என் அருகாமை வந்து. எனக்கு கோபமாயும் இருந்தது. சரி என்னதான் முடிவெடுப்பார்கள் என்று பார்க்க நின்றிருந்தேன். சிதம்பரம் தான் பேச்சை துவங்கினார்.
  “செத்தவா என்ன ஜாதின்னெல்லாம் அக்ரஹாரத்துல யாருக்கும் தெரியாது. இருந்தாலும் பையனுக்கு பூணுல் மாட்டி விட்டு நீயும் பிராமணன் தான்னு சொல்லிண்டு பேசிண்டு வந்திருக்கோம். இப்போ செத்தவாளை எங்க நிஷ்டை செய்யுறது ஆச்சாரியாரே? குரு பெரியவாளுக்கு சமமான நீங்களே சொல்லுங்கோ. அக்ரஹாரத்து பிராமணியத்தை பாதுகாக்க வேண்டியது உம்ம பொறுப்பு
  “தர்மசாஸ்திரத்துல இதுக்கு ஏதாவது இருக்கும். சாந்தி பண்ணிய பிற்பாடு தான் பிணத்தை கிளப்பணும். சாஸ்திரப்படி நாம நடக்கிறது தான் சரி.” என்றார் அவரும். இப்போது சுவாமிநாதன் என் அருகில் நின்றிருந்தவர் இடையில் புகுந்தார்.
  “சநாதன தர்மத்தின்படி அக்ரஹாரத்துல இருந்து பிணம் போற வரைக்கும் பூஜை, ஸ்நானம், சந்தியா வந்தனம், சாப்பாடு எதுவும் நடக்கக் கூடாதுங்கறது எல்லோருக்கும் தெரியும். அதனால சீக்கிரம் முடிவு சொல்லுங்கோ! இறந்தவாளோட ரத்த சம்பந்தம் இங்க யாரும் இல்லஎன்றார். அர்த்தம் புரியாத மந்திரங்களால் நிரம்பியிருக்கும் பிராமணர்களின் தலையிருள் மந்திரங்களை விளக்கும் ஆச்சாரியார் கூட குழம்பிப் போய் யோசித்தார்.
  “சாமி தண்டிச்சிருக்குண்ணா.. சாமியவே ஒரு வார்த்தை எதுக்கும் கேட்டுடுங்கோஎன்று ஒருவர் கூற நான் பேசத் துவங்கினேன்.
  “ஆச்சாரியாரே! சாமி தண்டிச்சிருச்சுன்னு சொல்லி இது மாதிரி எத்தனை உயிர்களை சாகடிப்பீங்க? பையன் பிணம் வெய்யில்ல காஞ்சுட்டு இருக்கு தெரியுதா? இப்பப் போய் யோசனையா? இனிப்போய் சாஸ்திரம் படிச்சு நீங்க முடிவு சொல்லி.. பாவம் இது
  “பெரியவா பேசுறச்சே நீ வாயை மூடிண்டிரு
  “பூணூல் போட்டுட்டா மட்டும் பெருசில்ல ஆச்சாரியாரே! தலையிலயும் கொஞ்சம் வேணும். எனக்குத் தெரியாதா உங்க குணம்? அனாதை பையனுக்கு உதவி செய்ய மனசு வரலை பதிலா தோசமாம்! இன்னும் ஒருமணி நேரத்துல பிணம் கிளம்பியாகணும் இங்கிருந்து. பிராமணியத்தை யாரும் காப்பாத்த வேண்டாம். இதுல சாஸ்திரம் வேண்டாம் ஆச்சாரியாரே! மனித உடல் இறந்திடுச்சு. அதை அடக்கம் பண்றோம் அவ்ளோதான். ஒவ்வொரு வீட்டுக்கார ஆண்களும் ஆளுக்கு 50 ரூபா என்கிட்ட கொடுங்க. இல்ல குரு பெரியவா கிட்ட ரிப்போர்ட் பண்ணி முழு அக்ரஹாத்தையும் பஹிஸ்காரம் பண்ண வச்சிடுவேன்என்றதும் அவரவர்கள் மடியிலிருந்து பணம் எடுத்து நீட்டினார்கள்.
  “எல்லா வீட்டுலயும் அவன் உபகாரத்தை ஏத்துக்கிட்டதுக்கு கைமாறா இதை பண்ணுங்கோ
  அன்றே பதினொரு மணியளவில் தர்மராசுவின் பிணம் மின்மயான வண்டியில் கிளம்பியது. ஆச்சாரியார் அந்த வேனில் ஏறவில்லை.

 ooooooooooooooooooooo 

Post Comment

கருத்துகள் இல்லை: