வெள்ளி, மே 09, 2014

இரண்டு புத்தக விமர்சனங்கள்


தமிழில் சமயத்தில் எப்போதேனும் அறிய வகை புத்தகங்கள் வருவதுண்டு. முன்பொருகாலத்தில் நூற்றியெட்டு கிளிகள் இருந்தன! என்றொரு சிறுகதை தொகுப்பை கோவையில் ஒரு சிறுகண்காட்சியில் நான் கண்டபோது அங்கே குவிந்திருந்த அத்தனை புத்தகங்களுக்கு மத்தியில் இது மட்டுமே எனை நோக்கி தன் கைகளை நீட்டி பாலுக்கு அழும் குழந்தை போல் தேம்பியது! இப்போது போலவே அப்போதும் அந்த குழந்தையை எடுத்துக்கொள்ள என்னிடம் வெற்று காலி பாக்கெட்டுகளே என் உடையில் இருந்தன! அந்த புத்தகத்தை எனக்கு சென்னிமலை லைப்ரேரியிலிருந்து நண்பர் தெரியாத்தனமாய் எடுத்து வந்து கொடுத்த போது ஒரு தேவதையை அதன் சிறகுகளோடு பிடித்து முத்தமிட்டது போல் மகிழ்ந்தேன்! தமிழில் இதுவரை வந்த சிறந்த சிறுகதை தொகுப்புகளில் முதன்மையானது அது தான். காலகாலமாக நடந்து வந்த கதைசொல்லும் பாணியை முற்றிலுமாக ஒதுக்கி வேறு வடிவத்தில் தமிழில் வந்த தொகுப்பு அது. அவற்றில் பல கதைகளை சிற்றிதழ்களில் முன்பே வாசித்திருந்த காரணத்தால் ரமேஷ் பிரேம் என்ற பெயர் முன்பே மனதில் பதிவாகியிருந்தது.

பிரேதா-பிரேதன் என்ற பெயரில் புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும் கிரணம் வெளியீடாக 25 ரூபாயில் 92ல் வந்த குறுநாவல் என்னால் பலமுறை படிக்கப்பட்டும் இன்னும் விளங்கிக் கொள்ள முடியாத சரித்திரமாகவே இருக்கிறது. ஆனால் மயானத்தில் கிடக்கும் பிணம் அந்த நாவலை எழுதியது போன்ற எல்லா அறிகுறிகளும் இருந்தன. சுபா இரட்டையர் எழுதும் புத்தகங்களை ஒரு காலத்தில் குப்புற விழுந்து படித்தவன் நான். அப்போது எனக்கொரு சோட்டாளை சேர்த்து இரட்டையராக எழுதும் ஆசை இருந்தது. அந்த இரண்டாவது ஆளை என்னால் இன்றுவரை கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் இந்த இரட்டையர்களின் புத்தகங்கள் என் அடுக்கில் வரிசையாக நிற்க ஆரம்பித்து விட்டன. பன்முகம் இதழில் உங்காளு எழுதின கதை வந்திருக்குதுங்க! என்று ஈரோடு இளங்கோ போனில் சொன்ன மறுகணமே 35 கிலோ மீட்டர் என் இரட்டை சக்கர வாகனத்தில் பயணித்துப் போய் வாங்கி வருவேன்

இப்போது அவன் பெயர் சொல் என்கிற இந்த புத்தகத்தைக்கூட என் திருச்சி மேனேஜர் சென்னையில் டிஸ்கவரி புத்தக விற்பனை மையத்தில் எனக்கு அனுப்பிவிடும்படி சொல்லி நாட்களாகி விட்டது. இன்னொரு பத்து அவருக்கு அவருக்கு அனுப்பலாங்களே வேற! என்றே  வேடியப்பனும் சொல்லியிருக்கிறார். “அவரு எந்த புத்தகத்தையும் அப்படி ஆர்வமா கேக்க மாட்டாருங்க! தமிழ்ல அவரு சித்திரக்கதை படிக்கிற ஆளு. மாத நாவல் படிக்கிறேன்னு சொன்னா கொரியர் அனுப்ப சொல்வாரு! மாத நாவல் விலை 10 ரூவா. ஆனா 25 ரூவா கொரியர் சார்ஜ் கொடுத்து அனுப்புவேன். யாருமே தமிழ்நாட்டுல படிக்காத புத்தகத்தை வேணும்பாரு!” என்றே வேடியப்பனுக்கு அவர் சொல்லியிருக்கிறார். கைக்கு வந்ததும் 250 பக்க நாவலை படித்தாகி விட்டது. தமிழில் எல்லா விருதுகளையும் பெறத்தகுந்த புத்தகமாக இது இருக்கிறது. தமிழில் நாவலே வரலை என்று பேசுபவர்களுக்கான புத்தகமாக இது வந்திருக்கிறது.

கவிஞர்கள் நாவல் எழுதுகையில் பலர் சொதப்பி விட்டார்கள். பாலைநிலவன் சிறுகதை தொகுப்பு அழகாக இருந்தது. ரமேஷ் கவிஞர். அவரது எழுத்து இந்த நாவலில் கவிதைத்தனமாக இருக்கிறது. ஒவ்வொரு பத்திகளிலும் கவிதை தலைகாட்டிச் செல்கிறது. அது வாசிக்க சுகந்தமாய் இருக்கிறது. மற்றைய புத்தகங்களில் இருந்த பூடகங்கள் எல்லாம் இந்த நாவலில் இல்லை. அது எளிய வாசகனையும் கைப்பிடித்து கூட்டிச்செல்லும் வேலையை செய்யும்!

மழை! என்னால் யாரையும் நம்ப முடியவில்லை. என்னால் மேலோட்டமாக பழக முடியாது. இதோ இந்தக் கடலின் கரையில் நின்று பாத்திரத்தில் நீர் முகர்ந்து தலையில் ஊற்றி குளிக்க முடியாது. நீருக்குள் இறங்கி விடுவேன். ஆழம் ஆழமாக, ஆழ அடி மண்ணைத் தொடும் வரை

இந்த நாவலுக்கான் விரிவான விமர்சனம் எழுத நான் விமர்சகன் அல்லன். முகநூலுக்கு வந்ததால் நண்பர்களுக்கு இங்கு பரிந்துரைக்கும் பணி மட்டும் செய்கிறேன்.

அகரம், தஞ்சாவூர். விலை 200
00000000000000000000000000000000

கலைஞர்களுக்கு சமூகத்தோடு ஒன்றிப்போகும் குணம் வாய்ப்பதில்லை! அல்லது சமூகம் அவர்களை நிராகரிக்கிறது என்று அவர்கள் முடிவுகள் செய்து விடுகிறார்கள்! இலக்கியம் போன்றே ஓவியக்கலையை பாராட்டவோ, சீராட்டவோ தமிழகம் பின்தங்கியே தான் இருக்கிறது! என் நண்பன் ஷாராஜ் அற்புத ஓவியக்கலைஞன். அவன் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை அதே வன்மத்துடன் கேட்டு புரிந்து கொள்ள மிக சிரமப்படுவேன். ஆனாலும் நண்பன் தன் ஓவியப்பசி பற்றி பேசுகிறான்! அவன் சொல்வதில் பாதியை நான் கிரகித்துக்கொள்ளும் நேரத்தில் அவன் அந்த பசியைத்தாண்டி வேறொரு உலகில் பயணித்துக் கொண்டிருப்பான். 

ஓவியக்கலைஞனின் வாழ்க்கையை முழுமையாக சொன்ன புத்தகமாக சி.மோகனின் விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்நாவல் வந்துள்ளது. நிராதரவின் வெம்மையில் ஆழ்ந்த வேதனையை தாங்கியிருக்கும் கலைஞன் மதுக்கிண்ணத்தில் தேவி என்கிற நாயோடு பகிர்ந்து குடிப்பதாக நாவல் ஆரம்பமாகிறது. கடைசியாக பூச்சி மருந்தை அதில் கலந்து குடித்து மணலில் சாய்கிறான்! ஒரு தற்கொலையோடு நாவல் துவங்குகிறது!

ராமன் என்கிற கலைஞனின் சிறுவயது வாழ்வும் சொல்லப்படுகிறது. அவனுக்கு திக்குவாய்! அவனது அண்ணன்மார்கள் இருவரும் இவனை கடைசி வரை ஒதுக்குகிறார்கள். கோவிலில் அமர்ந்து காகிதத்தில் வரைபவனாக காட்டப்படுபவன் பின்னர் ஓவியப்பள்ளியில் சேர்கிறான். ஓவியர் கிராமத்தில் தனிக்குடிசையில் வாழ்பவனாக கதை நகருகிறது. குடிசையில் ஓநாயின் நடமாட்டம் இருப்பதை அவன் உணருகையில் அவனால் கேன்வாசில் ஓவியம் வரைய முடிவதில்லை! (ஓநாய் குலச்சின்னம் நாவலை மொழிபெயர்த்ததால் அது வந்ததோ?) வந்த வேலை முடிந்து விட்டதாய் தற்கொலை செய்து கொள்கிறான்!

பூமியில் மனிதன் தன் பணி முடிந்ததும் உலக வாழ்விலிருந்து துண்டித்துக்கொண்டு விடைபெற்றுக்கொள்ள முடிந்தால் அதுவே விவேகமான காரியமாக இருக்க முடியுமென்று தோன்றுகிறது! முதலில் மரணம் நேர்வது அவர்களின் கனவுகளுக்குத்தான்! ராமன் தன் ஓவியங்களை கனவுகள் வாயிலாகவே கண்டு அவற்றை தூரிகையால் வரைந்தான்! கனவுகளின் மரணத்துக்குப்பின் வாழநேர்வது அவலம் என்பதை உணர்ந்துதான் அப்படியான முடிவுக்கு வருகிறான்.

இந்த நாவலின் மொழிவளம் சிறப்பாக இருக்கிறது. வாசிக்க தடையெதுவுமில்லாமல் கூட்டிச் செல்கிறது. சி.மோகனின் மொழிபெயர்ப்புக்கதைகளை முன்பு வாசித்திருக்கிறேன். அவரின் முதல் நாவல் என்கிற வகையில் இது சிறப்பு தான். அவர் ஒன்றிரண்டு படைப்புகளை நமக்காக தரவேண்டும்! 

சந்தியா பதிப்பகம். விலை 100.

Post Comment

கருத்துகள் இல்லை: