ஞாயிறு, ஜூன் 29, 2014

ஜுன் முகநூல் பதிவுகள்


இருபது வருட கால நட்பு! ஆச்சரியம் தான்! இருவருக்கும் தெரிந்த ஒரே விசயம் சந்திக்கையில் எல்லாம் சியர்ஸ்! 10 ரூவாகூட மிச்சம் இல்லாமல் வீடு செல்வது தான் சியர்ஸுக்கு அழகு என்பது இருவரின் கொள்கையும்! நேற்றைய விழாவில் என் கெப்பாசிட்டி எனக்கு தெரியுமுங்க! போதுமுங்க அப்படின்னுட்டான்! விகடன்ல மூனு வாரத்துக்கு ஒருக்கா தானுங்க நம்ம ஜோக்கு வருதுங்க! கோவை தினமலர்ல ஒரு ஜோக்கு வந்துச்சுங்க சார்! 750 ரூவா ஒரு ஜோக்குங்குங்க! (கையில் விகடனுடன் உள்ளே எழுதப்படாத போஸ்ட் கார்டுகள் ஒரு கத்தை வைத்திருந்தான். ஒரு கார்டில் நுணுக்கி நுணுக்கி நாலஞ்சு ஜோக்கு எழுதிடுவனுங்க சார்! அஞ்சுல ஒன்னு செலக்ட்டாயிடும்)

-ஏப்பா ஜோக்கு மட்டுமே எழுதி காலத்தை ஓட்டீடறதா? வேற கதை முயற்சியெல்லாம் இல்லியா?'

-சார் அதானுங்க சார் எனக்கு வருது! மன்னா அந்தப்புரத்திலிருந்து ஓலை வந்திருக்கு! அப்படின்னு ஆரம்பிச்சா பத்து ஜோக்கு மன்னா ஜோக்கு தான் எழுதுவேன். கட்சிக்கூட்டத்துக்கு தலைவர் யாரையும் தண்ணி போட்டுட்டு வரக்கூடாதுன்னு சொல்லிட்டார்! அப்புறம்? தலைவரே வரலை! உங்களையாட்ட வாயில கதை நல்லா வருதுங்க சார்! ஆனா எழுதுனா வரமாட்டிங்குது!


(பிரபல ஜோக் எழுத்தாளர் சிக்ஸ்முகத்துடன் அடியேன் திருகலான மதியத்தில்!)

0000000

துயில் என்றொரு நாவல் என்னிடம் பலகாலமாக இருந்து வந்தது! இருந்து வருகிறது! நண்பர் ஒருவர் எனக்கு தள்ளி விட்டு விட்ட பிரதி அது! ஆத்திகுளம் ரயில் நிலையத்திற்கு ரயிலானது வருது வருது வந்துண்டே இருக்குது! 59ம் பக்கம் வந்தே சேர்ந்துடுத்து! படிக்கலைன்னு சொன்னா நண்பர் வருத்தப்படுவாரென்று நாவலை வாசித்து முடித்து இப்போது மறந்தும் போய் விட்டேன். நம்ம கையில எந்த நாவலா இருந்தாலும் நண்பர்களுக்கு படிக்க ஈந்து விடுவேன். இதுவரை 9 நபர்கள் இந்த நாவலை வாசித்து திருப்பிக் கொடுத்து விட்டார்கள். கவனிக்க கொடுத்து விட்டார்கள். என்னிடம் திரும்பி வராத புத்தகங்கள் ஏகப்பட்டது! கள்ளம், கரமுண்டார் வீடு , மலரும் சருகும் எல்லாம் போனது போனது தான். கடைசியாக துயில் கரூர் வரை போன நாவல் வராதென நினைத்தேன். அடுத்த வாரமே வந்து சேர்ந்து விட்டது!

குருவிகளும் கூட இழிந்த வாழ்க்கைதான் வாழ்கின்றன போலும். குருவி சட்டென பறந்து அருகாமையில் உள்ள முருங்கை மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டது. அந்த மரத்தில் எவ்வளவு பூக்கள் இருக்கின்றன. அதில் எதையாவது தின்று வாழ வேண்டியது தானே, குருவிகள் பூக்களைச் சாப்பிடுமா? ஏன் பறவைகள் பூக்களை சாப்புடுவதில்லை. தான் விலகிப்போனாலும் அந்தக் க்ருவி மறுபடி அதே குப்பயைக் கிளறத் துவங்கி விடும் என்பது ஆத்திரமாக வந்தது.

000000

கோவை நண்பர் பேரெழில் ஒரு கதா ரசிகன்! அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இது! நடந்து வருடம் ஒன்றாகிவிட்டது! இருந்தும் இப்போது தேவையாகிறது! உன்னதம், தரிசனம் மிக்க எழுத்தாளரின் சிறுகதை பிரபல பத்திரிக்கையில் வந்த சமயம் நண்பர் பேரெழில் அதன் ஆசிரியரை கூப்பிட்டு விட்டார்! சார் உங்க கதை சிறுகதை ஃபார்மேட்ல இல்லாம கட்டுரை படிக்கிற உணர்வை கொடுக்குதுங்களே! 

நீ என் கதையை படிக்காதே!அவ்ளோதான்! போன் கட்!


ப்பா பேரெழில்! உனக்கு ஒரு எழுத்தாளன் போன் நெம்பர் இருக்குதுன்னா மளார்னு கூப்புட்டு உன் கருத்தை சொல்லுவியா? அதுல உனக்கு சங்கட்டம் வேறயா? அவரு யாரு? நாலு பத்திரிக்கைல உலக சினிமா பத்தி, உள்ளூர் சினிமா பத்தி, சாவப்போற செத்த எழுத்தாளன் பத்தி தொடரு எழுதுறாப்ல! போக சினிமாக்கு வசனம் பண்ற வேலையும் தலைக்கு மேல கிடக்குது! போக புத்தவம் வருசகடசீல பத்தாச்சும் போட்டாத்தான் ஆளுமைங்கற பேரு கிடைக்கும்! புரியுதா! புரியிலியா? நீ பாட்டுக்கு என்னை மாதிரி நெனச்சிட்டியா? சாமத்துல கூப்புட்டு நீ கடலை போட்டாலும் பேச? பிச்சுப்போடுவன் ராஸ்கோல்! ஆளுமைன்னா கொக்கா! (சம்பந்தப்பட்ட ஆள் பேசியதும் உண்மை! பேசப்பட்டதும் உண்மை! உண்மையை தவிர இங்கு எதுவுமில்லை)

0000

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் பள்ளி நண்பன் சிவக்குமாரை ஒரு ஓத நோயாளியாக கோவை காந்திபுரத்தில் சந்தித்தேன்.ஆள் டொக்கு விழுந்து பார்க்க பயங்கரமாயிருந்தான். படைப்பாளிகள் யாரும் அவனைப்பற்றியோ அவனது ஓதத்தை பற்றியோ படைப்பெழுத மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டேன். அப்போது வேனல் வீசிக் கொண்டிருந்தது. மரங்களில் இருந்து காய்ந்த இலைகள் விழுந்து சருகுகளாய் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன. வெக்கையாய் இருந்தது. காகம் ஒன்று அவன் தலையில் கொத்திவிட்டு பறந்தது. (காந்திபுரத்தில் ஏது மரம் காய்ந்த சருகு என்று கேட்கவே கூடாது)

பள்ளியில் கக்கூஸ் ரூமில் அவன் எப்போதும் கவலைப்பட்டபடியே அமர்ந்திருப்பான். அவனது தனிமையை அவன் கக்கூஸ் அறையில் மற்றவர்களுக்கில்லாத ஓதத்தை நினைத்து தடவியபடி போக்கிக் கொண்டிருந்தான். சிவக்குமாருக்கு ஓதம் வந்ததற்கு காரணம் ஆரஞ்சி மிட்டாய் சாப்பிட்டதாக இருக்குமென நினைத்திருந்தேன். அவனை காந்திபுரத்தில் பெருத்த ஓதக்காரனாக பார்த்தபோது துக்கம் தொண்டையை அடைத்து விட்டது. சாப்பிடறியா? என்று கேட்டேன். இல்ல ஆரஞ்சி முட்டாயி இருக்குது என்று ஓதத்தை விலக்கி காட்டினான். அவன் காட்டிய ஆரஞ்சி மிட்டாய் என்னை புதைக்கத் தொடங்கியது. 

ஓதத்தை விரும்பி கூடவே வைத்துக்கொண்டு ஓதமாகவே சாவதில் விருப்பமாக இருப்பதாகவே கூறினான். ஓதத்தை பற்றி எழுத சிவக்குமார் தூண்டிவிட்டான். மீண்டும் காற்று வீசுகிறது! ஆக இது சிவக்குமாரின் கதை மட்டுமில்லை. அவனைப்போல ஓதத்தில் சிக்கி சீரழியும் சமூக அவலத்தின் வெளிப்பாடு!

(
ஓதம் -நாவல்-கெட்டி அட்டை பைண்டிங்- தமிழகத்தின் ஆளுமை- விலை-335)

00000000000


Post Comment

வியாழன், ஜூன் 26, 2014

சயனம் நாவல் பற்றி இங்கு மட்டும்சயனம் நாவல் எழுதப்படும் முன்பே அந்த நாவல் நடைபெறும் ஊரை என் நண்பர்கள் சிலர் மாலை வேலையில் தெற்கே செல்கையில் கண்டிருந்தார்கள். அது கொளத்துப்பாளையம். பக்கத்தில் காட்டுப்பாளையத்தில் எனக்கொரு நண்பர் இருந்தார். அவர் சினிமா முயற்சிகளில் இறங்கி தோற்றுப்போய் இப்போது நாலணா காசு வைத்து நீரோட்டம் பார்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் சொல்லும் இடத்தில் போர் போட்டால் தண்ணீர் வருகிறது என்கிறார். அட! நல்ல தொழிலாச்சே! வறண்ட பூமியில் தண்ணீருக்கு மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இது சரியான தொழில்.

அவரிடம் தான் கொளத்துப்பாளையத்தில் மட்டுமே கதை நகரும்படி ஒரு நாவல் எழுத வேண்டும் என்று முன்பாக சொல்லிக் கொண்டிருந்தேன். அது நடைபெற்று முடிய ஒன்னரை வருட காலம் கழிந்து விட்டது. என் நண்பர்கள் பார்த்தது ஊரின் முழுமையை அல்ல! முகப்பில் பள்ளிக்கூடம், அருகில் மாகாளியம்மன் கோவில் (இதை நல்ல வேளை மாரியம்மன் என்று எழுதியிருப்பேன். நாவலை முடிக்கும் சமயம் அங்கு திருவிழா நடந்தது. 15 நாள் சாட்டாம். வெறொரு நண்பர் தான் அது மாகாளி ஆத்தாடா! என்றார்) தவிர சின்ன ஊர் என்றாலும் ஊரைச்சுற்றிலும் கோவில்கள் தான். ஊரில் உள்ள ஈஸ்வரன் கோவிலை நான் நாவலில் குறிப்பிடவேயில்லை. அந்த ஊரில் பெயருக்கு கூட ஒரு பெட்டிக்கடை கிடையாது. கோவிலின் அருகில் தென்புறமாக சிந்தாமணி! இந்த ஊரை மையமாக வைத்து ஒரு படைப்பை எழுத வேண்டுமென்ற ஆசையை தீர்த்துக் கொண்டேன்.

கள்ளி நாவலுக்குப் பிறகு கொங்கு கிராமிய வாழ்வை நான் என்னுடைய நாவல்களில் பேசவில்லை. 57 ஸ்னேகிதிகள் நாவல் சின்னதாக பேசியது என்றாலும் முழுமையாக பேசவில்லை. கள்ளி நாவல் என் சிறந்த படைப்பு என்கிறார்கள். எழுத்தாளனின் ஒவ்வொரு முதல் படைப்பும் சிறந்தவைகள் தான். கள்ளி வந்த அந்த சமயத்தில் தலித் விடுதலை என்ற சப்தம் இலக்கிய உலகில் பயங்கரமாய் கேட்டுக் கொண்டிருந்தது. சமயத்தில் நாமும் ஒன்று எழுதிப்பார்ப்போமென என் ஏரியாவில் எழுதிய படைப்பு அது. ஆதிக்க சாதியை எதிர்த்து தலித் பல வழிகளில் போராடுவார்கள். விடுதலையை இழவு காரியம் ஒன்றில் சுரேந்திரன் என்ற அவர்களுக்கு மிக சுலபமாக வழங்குவான். அது நல்லதும் கூட! ஏனெனில் வரும் காலத்தில் இழவு காரியத்தில் பல சம்பிரதாயங்களை முன்னின்று செய்ய தலித் ஆட்கள் இல்லை.

சயனம் நாவல் அதிலிருந்து வேறுபட்டு முற்றிலும் வேறாய் நகருகிறது. ஆதிக்க சாதியினர் ஆதிக்க நிலையிலேயே தான் இருக்கின்றனர். தலித் ஆட்கள் எங்கும் கோபப்படுவதும் இல்லை. அவர்கள் இந்த நாவலில் அவர்களாகவே வாழ்கிறார்கள். இனக்குழுக்களில் உள்ள உறவு முறைகளில் வரும் முக்கிய சொல் கொங்கில் உள்ளது! அது - பங்காளி பலியெடுப்பான்! இந்த நாவல் முடிவுக்கு வருகையில் என்னையறியாமலே மீண்டும் இந்த வார்த்தை உண்மையாகியிருக்கிறது. ஆனால் என் இயல்பில் அப்படி ஒன்றை கிடையாதென போட்டுடைத்து எழுதவே வந்தவன் நான்.

இந்த நாவலை எழுதிக் கொண்டிருக்கையிலேயே திட்டமிட்டு திட்டமிட்டு நகர்த்தினேன். என்னிடம் வழக்கமாக இருக்கும் குசும்புகள் இடையில் காணாமலே போய் விட்டது. அது ஞாபகத்திற்கு வந்த போது நாவல் முடியும் தருவாயை எட்டிக் கொண்டிருந்தது. அதுவும் நல்லதற்குத் தான். ஒரு வாழ்வியலைச் சொல்லும் கிராமிய நாவலை இப்போது தான் தொட்டிருக்கிறேன். ஊரை விட்டு வெளியூரில் இந்த நாவல் பயணிக்கவே கூடாதென திட்டம் வைத்திருந்தேன். அப்படியே ஆயிற்று.

வெளியூரிலிருந்து உள்ளூர் வரும் ஆட்கள் ஊருக்குள் நுழைந்ததுமே உள்ளூர்க்காரர்கள் ஆகிவிடுவார்கள். வாழும் மக்கள் ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் முன்று கிலோ மீட்டர்கள் தூரம் இன்னமும் அந்த கிராமத்தில் பயணிக்கிறார்கள். ஒரே ஒரு பேருந்து தான் ஓடுகிறது. ஐந்தாவது வரையிலான அந்தப்பள்ளி நிரம்பித்தான் இருக்கிறது குழந்தைகளால்! சாலைகளில் தீனி தேடி மயில்கள் அலைந்தபடி தான் உள்ளன. கிராமம் இன்னமும் தன் அடையாளத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை. மழை என்ற ஒன்றில்லாத காரணத்தால் கொளத்துப்பாளையம் குளம் கருவேல மரங்களால் நிரம்பி தன் அடையாளம் இழந்து நிற்கிறது. அங்கிருந்து சுற்றுப்புறமெங்கும் பயணித்த வெள்லரிப்பிஞ்சுகளின் ருசியை நான் மறந்து பல காலமாகி விட்டது!

கள்ளி நாவல் சற்று வேகமான நாவல். அழுத்தமான கோர்வைகளால் சென்ற நாவல் அது! அதாவது முன்பே தீர்மானிக்கப்பட்ட முடிவை நோக்கி பயணம் செய்த நாவல் அது. இந்த நாவல் துவங்கிய விதம் வெறும் வாய்ப் பேச்சில் தான். பாக்கியராஜ் முந்தானை முடிச்சில் பொட்டி படுக்கையோடு வாத்தியார் என்று நுழைவது மாதிரி ஒரு ஆசிரியரை ஊருக்குள் கூட்டி வருவது மட்டும் தான் வாயில் பேசிக்கொண்டிருந்தேன். நல்லவேளை அந்த ஆசிரியர் பாட்டில் குடியிலிருந்து சிகரெட் குடி வரை எதுவுமே அறியாத ஆசிரியர். என் கைகளை நானே கட்டிக் கொண்டேன். அப்படித்தான் அதைச் சொல்ல வேண்டும்! நாவல் கதைக்களத்தில் பயணிக்கையில் ஆசிரியர் இரண்டு மூன்று அத்தியாயங்களில் இருக்கிறாரா? என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது. பின்னர் கடைசியாக ஆசிரியர் பணிக்காக வந்த ஆசிரியருக்கு இந்த நாவலில் என்ன பணி என்று நானே கேட்டுக் கொண்டு அவரது பயணத்தை நாவலில் சரிப்படுத்தினேன்.

நாவலில் பழங்கதை என்று சொல்ல வேண்டியவைகளை சொல்லி முடித்தாலும் சமகால கிராமியம் இந்த நிலையில் இப்போது இருக்கிறது என்பதை அழகாக சத்தமில்லாமல் பதிவாக்கி விட்டேன். இந்த நாவல் எனக்கு முற்றிலும் வித்தியாசமான பயணிப்பாய் இருந்தது. மொத்தமாக 23 நாட்கள் இந்த நாவலில் நான் வாழ்ந்தேன். இன்னமும் சொல்ல வேண்டிய சேதிகள் இந்த நாவலில் இருக்கலாம் என்றாலும் நானாகவே முடித்துக் கொண்டேன்! அதாவது மேலே இதை நீட்டித்து அத்தியாயங்களை நகர்த்திச் செல்ல நான் யோசிக்கவே இல்லை! அதுவாக முடிவுக்கு வந்து விட்டது!


இந்த நாவலின் வெற்றி என்பது இதை வாசித்தவர்களின் கருத்துக்களில் இருந்துதான் அறிய முடியும். என்னைப் பொறுத்தவரை  நான் இலக்கியவாதி தான் என்பதை மீண்டும் நிரூபிக்க இந்த நாவலை எழுத வேண்டி வந்தது. சந்தோசம் நண்பர்களே! வாசியுங்கள்!

Post Comment

புதன், ஜூன் 25, 2014

சிறுகதை தொகுப்பு பற்றி இங்கு மட்டும்!
சிறுகதைகளில் எளிமை எல்லோராலும் விரும்பப்படுகிறது. பூடகமான சொற்களுடன் கூடிய சிறுகதைகள் குறிப்பிட்ட வாசகர்கள் மத்தியில் மட்டுமே புழங்கிக் கொண்டு அந்தச் சுற்றோடு மட்டுமே நின்றுவிடுகின்றன. குறிப்பிட்ட வாசகர்களை மட்டுமே சென்றடைந்தால் போதுமானது என்று தீவிரமாக சிறுகதை முயற்சியில் இன்றும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எளிய கதைகளை வாசிப்பதேயில்லை. தீவிரமான கதைகள் பல எழுதி அதே குறிப்பிட்ட வாசகர்களிடம் அறிமுகமானவன் தான் நான். ஆனால் அவைகள் விசயங்களை நேரடியாகச் சொல்லாமல் பூடகமாகச் சொல்கின்றன. எனது மண்பூதம் சிறுகதை தொகுப்பு அப்படியான தொகுதி தான். அவைகள் எழுதப்பட்ட காலங்கள் ரொம்ப பின்னால். ஒவ்வொரு கதைக்கும் இடையில் சரியான இடைவெளிகள் இருக்கும். அவைகளை சாதாரண வாசகர்கள் வாசிக்கையில் ஒரே வார்த்தை தான் சொல்வார்கள். ரொம்ப பயங்கரமா எழுதியிருக்காப்ல!

ரொம்ப பயங்கரமான கதைகள் மொழிபெயர்ப்பு வாயிலாக நமக்கு கிடைத்து விடுகின்றன. நம் முயற்சி அதைவிட பயங்கரமாய் இருக்க வேண்டும். இருந்தும் அப்படியொன்றும் கவனத்திற்கு அந்தக் கதை உடனே வந்து விடுவதில்லை. சிறுகதையைப் பற்றி யாரும் இங்கு விவாதிப்பதுமில்லை. ஒருகதை நன்றாக இருந்தால் அந்த எழுத்தாளனின் எல்லாக் கதைகளும் சிறப்பானது என்று எப்படிக் கூற முடியும்? எழுதப்படும் ஒவ்வொரு கதையும் அவனுக்கு சிறப்பான கதைகள் தான்.

என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் என்கிற இந்த சிறுகதைத் தொகுதியின் கதைகள் முற்றிலும் வேறானவை. என்னை விகடன் மூலமாக பெயரை அறிந்தவர்கள் என் எழுத்தை வாசிக்க புத்தகமாய் எடுக்கிறார்கள். தவிர இலக்கிய பரிச்சயம் கொண்டவர்களும் என் தொகுதியை வாசிக்கிறார்கள். இருவருக்குமான இடைப்பட்ட எழுத்து ஓரளவிற்கு இந்தத் தொகுதியில் பூர்த்தியாகிறது. இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் அனைத்தும் நேரடித்தன்மை கொண்டவைகள் தான். வாசகனை வியப்பில் ஆழ்த்தும் கதைகள் அல்ல இவைகள். நாம் அன்றாடம் காணும் மனிதர்களின் இயல்பை அவ்வளவு அழகாக இந்த தொகுதிகளின் கதைகள் சொல்கின்றன. உங்கள் அருகாமை வீடுகளில் சந்தித்த மனிதர்களின் கதைகள் இவை

என் எழுத்து எந்த தீவிரமான விசயத்தையும் கொஞ்சம் குஜாலாக சொல்வதைத்தான் விரும்பும். அதனால் தீவிரம் குறைந்து விசயம் எளிமையாக்கப்படுகிறது. எளிமையாக்கப்பட்டவைகள் எல்லோராலும் விரும்பப்படும். எந்தக் கதைகளையும் நான்  முன்கூட்டியே திட்டமிட்டு எழுதத் துவங்குவதில்லை. ஒரு காதலைச் சொல்ல கதைக்குள் காதலர்களை நடமாட விடுகிறேன் என்றால் எழுதி முடிக்கையில் தான் எனக்கே அவர்கள் சேர்ந்தார்களா? அல்லது பாதியிலேயே விடைபெற்றுப் போய் விட்டார்களா? என்பது தெரிய வரும். எதுவாக கூட்டிச்செல்கிறதோ அதுதான் அந்த சிறுகதையின் முடிவு. ஒருசில கதைகளையே முன்கூட்டி திட்டமிருகிறேன். அவைகளும் கூட மாறிப்போன சம்பவங்களும் உண்டு.
மனதில் திட்டமிட்ட ஒரு கதையை இரண்டு வருடம் கழித்துக்கூட எழுதி முடித்திருக்கிறேன். திட்டமிட்டவுடனே கூட எழுதி முடித்துமிருக்கிறேன்.

சிறுகதைக்கென்று சில கட்டுக்கோப்புகள் உண்டு. வடிவங்களில் தான் அவைகள் வித்தியாசப்படுகின்றன. நீள்கதை, குறுங்கதை, நிமிடக்கதை என்று பலவடிவங்களில் இங்கு கதைகள் எழுதப்படுகின்றன. எல்லா வடிவங்களையும் எழுதிப்பார்த்து விட்டேன். இவைகள் சவால்களாக என்றுமே எனக்கு இருந்ததில்லை. வடிவ வித்தியாசங்கள் தான்.
சமீபத்தில் நான் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரே விசயம் சிறுகதைகளை நான் எழுதுவதை குறைத்துக் கொள்வேன் என்று! அப்படிப்பார்த்தால் இந்தத் தொகுதிக்கு பிற்பாடு என் புதிய சிறுகதை தொகுப்பு வெளிவர இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும்

இலக்கியச் சிறுகதைகள் எழுதுவது என்பது தனிக் கலவையும், சுவை மிகுந்ததும்  தான். அதில் சுதந்திரம் இருக்கிறது. வடிவத்தில் பல சோதனைகளை செய்யலாம். ஆனால் பைசாவுக்கு பெரும் பிரச்சனை இருக்கிறது. அவைகளை வெளியிட இதழ்கள் பல இருந்தாலும் பைசா தேறாது. பைசா தேறாத எழுத்து ஏன் எழுதப்பட வேண்டும்? பைசாவுக்கே பெறாத எழுத்தை நாலுபேர் பாராட்டி பேசுவதால் எழுத்தாளனுக்கு வயிறு நிரம்பி விடுமா? பெயர் பெற்றால் போதுமென பல காலங்களை நான் இழந்து விட்டேன். பெயரை ஓரளவு பெற் சமயத்தில் மீண்டும் மீண்டும் பெயர் பெற்று என்ன செய்வது?

தொட்ட இலக்கிய இதழ்களில் எல்லாம் பெயரைப்பெற்ற எழுத்தாளர்களே எழுதிக் கொண்டிருந்தால் புதியவர்களுக்கு இடமெங்கே? என்னிடம் சிறுகதை கேட்கும் சிற்றிதழ் ஆசிரியர்கள் எனக்கு நண்பர்கள் தான். எழுதுவதேயில்லை என்று இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். நட்பு அடிப்படையில் நான் பலருக்கும் பல கதைகளை வழங்கியிருக்கிறேன். அவைகள் அனைத்துமே மீச்சிற்றிதழ்கள். அப்படியும் ஒரு இதழ்க்காரர் ரொம்ப சிரமப்படுத்தினார். ‘அங்கு தானய்யா இருபது வருடங்களாகக் கிடந்தேன்! ஒரு ஆளையேனும் சந்தோசமாய் தாட்டி விடுங்களய்யா! என்னைப்போல இன்னொரு எழுத்தாளனை கண்டறிந்து தாட்டிவிடுங்கள் மேலேஎன்று சொல்லிவிட்டேன்

சிற்றிதழ்கள் வெளியிடும் கதைகளுக்கு ஒரு தர நிர்ணயம் இருக்கிறது. அந்த தர நிர்ணயத்தை நான் தாண்டி பலதூரம் வந்து விட்டேன். அவைகள் எல்லாமே நான் தாண்டி வந்த படிகள் தான். திரும்ப அதே படிகளில் கால் வைத்து திரும்ப எண்ணம் எதுவும் இல்லை. அங்கு என்ன கற்றுக் கொண்டேனோ அவைகளின் அடுத்த கட்ட வடிவம் தான் இந்த தொகுதியின் கதைகள். அங்கு எழுதாமல் இங்கு இப்படி தனித்துவமாய் வந்து நின்றிருக்க முடியாது.


இந்தத் தொகுதியில் உள்ல அனைத்துமே தனித்துவம் மிக்கவைகள் தான். கூடவே இவைகளின் எளிமை என்னை வசீகரிக்கிறது. எளிமையாக இருப்பதினாலேயே இவைகள் அவ்விதம் மனதை சந்தோசப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. 2014 ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளிவரும் இந்தத் தொகுதி குறிப்பிடத்தகுந்த கவனம் பெறும் என்று நம்புகிறேன்!

00000000000000

Post Comment

வியாழன், ஜூன் 19, 2014

நாவல் பற்றி இங்கு மட்டும்!
ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி நாவல் வரும் ஆகஸ்டு மாதம் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்காக மலைகள் பதிப்பகம் நண்பர்  சிபிச்செல்வன் கொண்டு வரும் நாவல். பின் அட்டை சொல்லும் தகவல் மிக முக்கியமானதாக இப்போது எனக்குப் படுகிறது. இந்த நாவலை சயனம் நாவல் எழுதி முடித்த பிற்பாடு நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க சம்மதம் தெரிவித்து மிக எளிதாக இருக்கும் என்று எழுதத் துவங்கி விட்டேன்.

உள்ளே நுழைந்த பிறகுதான், ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்டேனோ என்ற மிரட்சி வந்து விட்டது. அது சின்ன மிரட்சிதான். நாவல் எழுதும் அனைவருக்கும் இது ஏற்பட்டதா? ஏற்பட்டிருக்குமா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அந்த மிரட்சி என்பது கணநேரம்தான்.

மிகக் கடினமானதாக ஒரு பணியை முடித்து விட்டு எளிதாக ஒரு பணி செய்வது மனதை சந்தோசம் கொள்ளச் செய்யும் விசயம்தான், அப்படித்தான் இந்த நாவலை துவங்குகையில் நான் நினைத்தது. வெளியீட்டாளருக்கு என்ன பயம் என்றால் புத்தகம் சராமாரியாக விற்க வேண்டுமே! அதற்காக பட்டையைக் கிளப்புங்கள் என்று சொல்லிவிட்டார். அவர் பதிப்பகம் துவங்கி இரண்டு புத்தகங்களை சென்ற வருடம் தைரியமாக கொண்டு வந்தவர்.

எனக்கு என் நாவலை வாசகர்களுக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்ற கலை தெரியும். நாவலுக்குள் பயணிக்கையில் அது எழுத்தாளனை கூட்டிச் செல்லும் அழகு எழுதும் ஆட்களுக்கு தெரியும். அதனால் தான் சொல்கிறார்கள் அது பெரிய விசயமாச்சே! என்று. எழுதுபவனுக்கு அது பெரிய விசயமல்ல. அது அவன் தொழில். எல்லோருக்கும் ஒரு தொழில் அமைந்தது போல எழுத்தும் ஒரு தொழில். அதை தேர்ந்தெடுக்க மனதைரியம் நிரம்ப வேண்டும். என் அப்பா தலைமை ஆசிரியராக இருந்து பணிக்காலத்தில் இறந்தவர். பதினைந்து வருட காலங்களுக்கும் மேலாகி விட்டது. என் காலேஜ் வாழ்க்கையோ பட்டம் பெறாத வாழ்க்கை. அரசாங்க உத்தியோகம் கிடைக்குமென்று மாளாத கையெழுத்துகளை மாளாத இடத்திலிருந்தெல்லாம் வாங்கி ஒன்று சேர்த்து மன உளைச்சல் பட்டு அனுப்பிய முக்கிய தொகுப்பு குப்பைக் கூடைக்கு வந்தது தெரிந்த நண்பருடைய அக்கா அந்த ஆபீஸில் இருந்ததால் மீண்டும் தப்பிற்று. பின் ஆட்சி மாற்றம் வந்ததால் மீண்டும் கையெழுத்துகளை சேகரித்து மீண்டும் அனுப்பி, மீண்டும் திரும்பி என்று என் வயதும் நாற்பதை தொட்டு விட்டது. பின் இப்போது மீண்டும் வேலை உறுதி  “வாங்க” என்றஅழைப்பு வந்தது. அங்கு சென்றால் மீண்டும் கத்தையை அனுப்ப வேண்டும். என்ன எழவுடா இது? எனக்கு வேலை வேண்டாங்க! என்றேன். அதையும் எழுதிக்கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்பது அந்த ரூல்ஸ். அதையும் செய்து விடைபெற்று இரண்டு வருட காலமாகி விட்டது.

நான் செய்யாத தொழில்கள் இல்லை. நான் செய்ததில் மகிழ்ச்சியான தொழில் திருட்டு விசிடி விற்றது. டிவிடி வந்ததும் நான் இது ஒரு பொழைப்பு என்று ஓடி வந்து விட்டேன். அதற்கும் மேல் அந்த தொழில் நசிந்தது. கேஸ் என்றால் உள்ளே போய் உட்கார்ந்து வந்ததும் நடந்தது. இதை நாயுருவி நாவலில் பதிவு செய்திருப்பேன். எழுத்து என் எல்லா காலத்திலும் நேரத்திலும் கூடவே இருந்து வந்தது. எந்த தொழிலில் நான் இருந்தாலும் வருடம் ஐந்து சிறுகதையாவது எழுதிக்கொண்டிருந்தேன். இன்றைய நிலையில்  என் எழுத்து என்னை, ’நம்புடா’ என்று சொல்கிறது. நான் நம்பி எழுதுகிறேன். கதைகளை வாயால் சொல்வது ஒரு கலை என்றால் எழுத்தால் சொல்வதும் கலைதான். அதை கைவரப்பெற்றவன் குடும்ப சூழல், பணி காரணமாக அதை விட்டொழித்து போய்விடுவதும் நடக்கும். இந்த குரூரமான உலகில் பசி ஒரு பெரும் விசயம்தான். முதலில் பசிக்குத் தீர்வு. அப்புறம்தான் பணி.

ரெண்டாவது டேபிளுக்கு நாவலை நான் அழகாக கொண்டாட்டமான மனநிலையில் எழுதி முடித்து விட்டேன். அவ்வளவுதான். இதன் வெற்றி தோல்வி பற்றி இனி வாசகர்கள் பார்த்துக் கொள்வார்கள். எல்லோருக்கும் எல்லா எழுத்துகளும் பிடிப்பதில்லை. ஒருசிலருக்கு ஒருசில எழுத்துக்கள் தான் பிடிக்கும். ஏனெனில் நான் முதலாக வாசகன். தொடர்ந்து எழுதுவோம் நண்பர்களே! முழு நேர எழுத்தாளனின் ஒரு சின்ன கொண்டாட்டமான நாவல் இது அவ்வளவுதான்.


Post Comment

திங்கள், ஜூன் 09, 2014

முகநூல் குறிப்புகள் ஜுன் 2014

யார் உங்களின் காதலி என்று வாழ்க்கைக்கு தெரியாது. யார் உங்கள் காதலி அல்ல என்றும் வாழ்க்கைக்கு தெரியாது. வாழ்க்கைக்கு ஒழுக்கம் என்றாலும் தெரியாது. அது முற்றிலும் ஒழுங்கீனமானது. நீங்கள் அடுத்தவர் மனைவி மீதோ, ஒரு சினிமா நடிகை மீதோ, ஒரு விபச்சாரி மீதோ காதல் வயப்படலாம். வாழ்க்கைக்கு உறவுமுறைகளும் தெரியாது. எல்லாமே நமக்கு நாமே உருவாக்கிக் கொண்டவைகள் தான். அவள் இன்னொருவனின் மனைவி, அவள் மார்பகங்களை ரசிப்பது தவறானது, அது ஒழுங்கு மீறல் என்று மனம் சொல்வதை தான் கேட்டு திருத்திக் கொள்கிறோம். ஆக எல்லாருமே அமைப்புகளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். முக்கியமாக வாழ்க்கையோடல்ல. ஜான் கல்பனாவின் அழுகையை நிறுத்த ஏதாவது பொய்யை சொல்ல தீர்மானித்தான். ஆனால் அதையும் அவள் ஏற்றுக்கொண்டு அழுகையை நிறுத்துவாளா? என்று நம்பிக்கையில்லாமல் குற்றவாளியாக அவள் முகத்தை பரிதாபமாய் பார்த்தான்.

எழுதிக்கொண்டே இருக்கும் சிறுகதையை மணல் வீடு பயல் ஹரிகிருஷ்ணபகவான் ஈமெயிலில் தட்டி விடுங்க என்றான். ஏப்பா என்னையப் பாத்தா எப்படித் தான் தெரியுது உனக்கு? ஏற்கனவே பலகாலமா எனக்கு மொட்டை தான். உங்க மொட்டை அழகா இருக்குன்னு வேற சொல்லி உசுப்பேத்தி வச்சிருந்தாங்க! காலம் பயங்கரமா இருக்கு! மறுக்கா கூசாம உங்க மொட்டெ நல்லா இருக்கும்னு பிளாஞ்சுறியே! இந்த மொட்டைக்குத்தாண்டா பயந்து மறுக்கா வாரக்கூலிக்கு போயிருவனோன்னு பயம்! அவ கேக்கா.. ஏப்பா போசீல சோத்தப் போட்டுட்டு மறுக்கா திலுப்பூரு வேலைக்கி கிளம்புற காலம் எப்ப?

0000000000000

சேகரு அதற்கு தகுதியான ஆள் தானா என்பதை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வதற்கு முன், நம்புவதற்கு முன் பலவழிகளில் சோதித்து அறிய முயற்சிக்கிறீர்கள். அது உண்மையாக இருக்குமோ என்று உங்களுக்கு உறுதி வேண்டும். சேகர் வேறொருவரால் பரிந்துரைக்கப்பட்டவர். நீங்கள் ஏன் அப்படி ஜாக்கிரதை உணர்வுடன் இருக்க விரும்புகிறீர்கள் என்றால் இன்னொரு சேகர் தகுதியான ஆளாக இருந்தால்? இந்த சேகரை எப்படி நம்புவது என்ற தயக்கம் தான். அப்போது உங்கள் அறிவுப்பூர்வமான அகங்காரம் பாதிப்படைகிறது. சேகர் ஒன்றும் உங்களை விட அறிவுப்பூர்வமான தகுதியான ஆள் கிடையாதென நிரூபிக்க விரும்புகிறீர்கள்.

இவன் முடிச்சவுக்கி என்று யாராவது பரிந்துரைத்தால் உடனடியாக நீங்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. அதை உடனே நம்பிவிடுகிறீர்கள். ஏனெனில் நீங்கள் மாத்திரம் முடிச்சவுக்கியல்ல. வேறு ஒருவரும் உங்களைப்போலவே முடிச்சவுக்கியாக இருக்கிறார் என்பதில் உங்களுக்கு ஒரு ஆறுதல்.

ஒருவரை மறுப்பதும், கேலிக்குள்ளாக்குவதும் சுலபமாக ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் அவரை பொது இடத்தில் வைப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் சேகரை உண்மையிலேயே பாராட்டுக்கு உரியவர் தான் என்று கருதினாலும் அதை ஏற்றுக்கொள்வது நிபந்தனையின் அடிப்படையில் தான் இருக்கும். நீங்கள் இப்போது அவரை ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் வேறு வழியில்லை. சேகர் பரிந்துரைக்கப்பட்டுவிட்டார்.

0000000000

நண்பர் சுள்ளிமேட்டு ராமசாமி தான் பிறக்கையில் பெளண்டன் பேனாவோடு பிறந்தார் என்ற கருத்து நிலவி வந்தது. ஆனால் அடியேன் பிறக்கையிலும் கையில் பேனாவோடு பிறந்தமையால் என் தந்தையார் தன் குலத்திற்கு இன்னுமொரு சாபக்கேடு என்று மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். அன்று அவர் அளவுக்கு அதிகமாக பனங்கல் குடித்து கொண்டாடியாதாக தகவல்! தவிர என் கையில் இருந்த பேனாவில் நீல நிற இங்க் இருந்ததாகவும் அது சுள்ளிமேட்டு ராமசாமி பேனாவில் மிஸ்ஸிங் என்றும் கூறி தன் வயிற்றை நிரப்பிக் கொண்டார். 

இப்போது பேனாவுக்கு வேலை இல்லாத தட்டெழுத்துக்கு வந்து விட்டேன்! அந்தப் பேனா எங்கே என்பவர்களுக்கு......... அதை என் வீட்டு டைகர் சாப்பிட்டு விழுங்கி விட்டது! 

இப்படியாக ஒரு சரித்திரக்கதையை சொல்லி முடித்துமாகி விட்டது!

00000000000

எல்லோரும் போதை வஸ்துக்களுக்கு எதிராக பேசியபடியே இருக்கிறார்கள்! அவர்கள கவலைப்படிம்போது என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை! எல்லோருக்கும் கவலகள் இருப்பது தெரிந்த விசயம் தான். போதையை நோக்கி செல்பவர்களின் பின்னணியில் இருக்கும் உளவியலை யாரும் யோசிப்பதில்லை! போதைக்கு எதிராக பேசுவது அவர்களை எப்போதும் தடுக்க முயற்சிக்காது! மதுபானத்திற்கு தடை, எல்லா போதை வஸ்துக்களுக்கும் தடை, இவைகளை ஒழித்துக் கட்டிவிட்டால் மனிதன் அக்கணமே பைத்தியமாகிவிடுவது நடந்து விடும்! உலகம் ஒட்டுமொத்த பைத்தியக்காரர்களின் இருப்பிடமாகிவிடும்!! மதுவருந்துவதால் சிலமணி நேரத்துக்கு இந்த உலகை மறக்க்க்கூடும் குடிப்பவர். அது பிரச்சனைக்கு மொத்த தீர்வாகாது. எந்த சந்தர்ப்பத்திலும் எதுவும் மாறப்போவதில்லை! அது அவர்களுக்கும் நன்கு தெரியும்! சிலமணி நேரமாவது………. சிலமணி நேரமாவது………………

0000000000

இறந்து போன ஒன்றின் மீது நீங்கள் பிரியம் வைக்க முடியாது! அது ஏற்கனவே அங்கு இல்லை! ஆசையாய் வளர்த்த நாய் இறந்து காலங்கள் ஆகி விட்ட பிற்பாடு நீங்கள் பிரியத்தை அதன் மீது எப்படி செலுத்த முடியும்?
சுதந்திரம் அறவே இல்லாத ஒரு பெண்ணை உங்களால் காதலிக்க முடியாது! சுதந்திரம் இல்லாத ஆணை ஒரு பெண் எப்படி விரும்ப முடியும்? தடையின்றிகொடுக்கப்படும் போது தான் காதல் அழகானதாக உருவெடுக்கும்!

எடுத்துக் கொள்ளாத போதும், அதிகாரம் செய்யாத போதும், கட்டாயப்படுத்தாத போதும் காதல் அழகானதாய் இருக்கும்! ஒரு பெண் தனக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காதலிக்கத் துவங்கினால் அவள் ஒரு பொருளாக மாறிவிடுவாள். காதலன் ஒரு மனிதனாக இருக்கலாம். ஆனால் காதலிப்பவள் பொருள்! எவ்வளவுக்கு எவ்வளவு கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிகம் உங்கள் காதலனை கொன்று கொண்டிருக்கிறீர்கள்! எப்படி உங்கள் மீது காதலன் அன்பு செலுத்துவான்? எதிரியாகி விடுவீர்கள்! 

இந்த வாழ்வு பொறாமைக்கார்ர்களை உருவாக்குவதில் கெட்டிக்காரத்தனமாய் செயல்படுகிறது!

காமத்தை அன்பாக உருமாற்றுவது நடந்தால் பொறாமை மறைந்து விடும்!

0000000000

சும்மா!
பாலியல் தொடர்பு ஒருவனை பதட்டமடைய வைக்கிறது! இரவு நெருங்குகையில் அவன் மனம் பாலியலை நோக்கி சிந்திக்கிறது! சின்னதான பயம் அவனை நெருக்குகிறது! காமம் எப்போதுமே ஒரு உறவு ஆகாது! ஒரு பெண்ணுடன் பாலியல் தொடர்பில் இருக்கிறீர்கள் என்றால் அவள் வேறு யாருடனாவது போய் திருட்டு உறவு கொள்கிறாளோ என்று பயந்து கொண்டே இருகிறீர்கள்! இது உண்மையில் ஒரு உறவே இல்லை! வெறும் பாலியல் சுரண்டல் என்று வேண்டுமானால் கொள்ளலாம். ஒருவரை ஒருவர் சிறிது நேரம் பயன்படுத்திக் கொள்வது தவிர்த்து அங்கு எதுவுமில்லை!

அன்பை நீங்கள் செலுத்துவதுமில்லை. வாங்கிக் கொள்வதுமில்லை. அன்பு வெறும் பெயர் மட்டும் தான்! உறவின் மீதான பயம் பொறாமையை நோக்கி தள்ளிவிடும் குணமுடையது. நடைபெறும் விசயங்கள் உங்களுக்கு பிடித்தமாக இருக்காது. ஆக நீங்கள் முற்றிலும் வேறாய் காவலுக்கு அமர்ந்து விடுவீர்கள். உங்கள் இயல்பு நிலை மாறி விடுகிறது. இதே நிலை தான் பெண்ணுக்கும்! கண்காணிப்பின் எல்லைக்குள் நீங்கள் எந்தப் பெண்ணிடமும் பேச இயலாது! அவள் உங்களை தட்டிப்பறித்துக் கொண்டு சென்று விடுவாள் என்ற பயம் பெண்ணையும் ஆட்கொள்ளும்! அங்கு எல்லைப்பாதுகாப்பு நடக்கும். ஆணின் வேலியை பெண்ணும், பெண்ணின் வேலியை ஆணும் தாண்டும் காலம் தூரமில்லை என்பது போன்ற சம்பவங்கள் இருவருக்குமே விசித்திரமாய் இருக்கும்! எல்லா வேலிகளையும் போட்ட பிறகு அங்கு வாழ்க்கை இருக்காது!

0000000000000


யாரும் குற்றம் சொல்லாத எழுத்து! என்னை இலக்கியம் எழுதுபவன் என்று இலக்கிய வாசகர்களே நம்பாத எழுத்தை தான் சமீப காலங்களில் எழுதி வருகிறேன். எல்லோருக்குமான எழுத்தை மரப்பல்லி நாவலில் கொடுத்தேன். இந்த நாவலை எல்லோரும் படித்தார்கள்! எதிர் கருத்தை யாரும் சொல்லவில்லை! ராணிமுத்தை தொடர்ந்து வாசிப்பவர்கள் கருத்தில் ஒன்றை கவனித்தேன். அவர்களுக்கான புதிய இடம் வரப்போகும் மாமனாரிடம் அமர்ந்து சரக்கடிக்கும் மருமகன்! இது மட்டுமே உங்களின் தைரியமான பதிவு என்றார்கள்! அதைக்கூட நான் உணர்ந்து எழுதவில்லை நண்பர்களே! இப்படியான பதிவைக்கூட என் அடுத்த நாவலில் சரி செய்து விடுவேன்! என்னை அலைபேசியில் பேசி ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்! தொடர்ந்து எழுதுவோம். ரமணிசந்திரன் போலவும்! அடுத்த செகண்ட் அஸ்வகோஸ் போலவும்! இரண்டு எழுத்துக்குமான புள்ளி ஒரு நேர்கோட்டில் மாறுகிறது! அவ்வளவு தான்!

000000000000

Post Comment