ஆனந்தி
வீட்டு தேனீர்
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தினுள் சாய்வு இருக்கையில்
பத்து நிமிடமாக அமர்ந்து எதிர்க்கே தெரிந்த பெரிய மானிடரையே வெறித்துப் பார்த்தபடி
இருந்தான் முருகேசன். எந்த எந்த ஊர்கள் செல்லும் ரயில்கள் எந்த எந்த நேரத்தில் கிளம்பும் என்ற தகவலை
நிதானமாக காட்டி ஓடிக் கொண்டிருந்தது. இவன் காதினுள் பலத்த இறைச்சலுக்கு
இடையிலும் தேனை ஊற்றுவது போல் பெண்ணின் குரல், “பயணிகளின் அன்பான
கவனத்திற்கு” என்று ஆரம்பித்து ஊற்றியது. எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இடம் என்பது போல பயணிகள் வருவதும் போவதுமாகவே
இருந்தனர். யாரும் ஒரு கிடையில் அமர நேரமில்லாதவர்கள் போன்றே
தென்பட்டார்கள்.
பயணக்களைப்பில் தன் தோளில் தூக்கமாட்டாமல் புளிமூட்டை
போல் பேக் ஒன்றை சுமந்து தள்ளாடி வந்த ஜீன்ஸ் அணிந்த யுவதி தன் அம்மாவை திரும்பிப்
பார்த்து, மம்மி
ப்ளீஸ் என்றது. யுவதியின் அம்மாவோ இரண்டு தோளிலும் பேக்கை சுமந்தபடி
மூச்சு வாங்க வந்து கொண்டிருந்தது. முருகேசன் தன் கால்சந்தில்
வைத்த இரண்டு புளிமூட்டைகளும் களவு போய்விட்டதோ என்று குனிந்து பார்த்து நிம்மதியானான்.
சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்புவது என்பது
அங்கு பணி நிமித்தமாக பல மாதங்கள் தங்கியிருந்தோருக்கு எவ்வளவு பெரிய சந்தோசத்தை கொடுக்கும்
என்பதை எழுத்தில் காட்டிவிடுவது முடியாத சமாச்சாரம் தான். இமையம் அளவு, வானம் அளவு என்று தொன்னூத்தி ஒன்பது வாட்டி சொல்லி விட்டார்கள். புதிதாக என்றால் முருகேசனின் பலமாத ஆபிஸ் டென்சன்களையும், பெற்றோரை நேரில் காணாத வருத்தத்தையும் நேற்று மாலை கழுகு ஒன்று கொத்திப் போய்விட்டது
என்று சொல்லலாம்.
முருகேசனின் சொந்த ஊர் ஈரோட்டுக்கு பக்கத்தில் சென்னிமலை. குன்றிருக்கும் இடமெல்லாம்
குமரனும் இருப்பான் என்பதுபோல சென்னிமலையிலும் குமரன் வீற்றிருந்தான். சென்னிமலையில் தயிர் புளிக்காது என்பது ஐதீகம். ஊர் முழுதும்
ஜன நடமாட்டத்துக்கு இணையாக குரங்குகள் நடமாட்டமும் இருக்கும். தவிர மூன்று திரையரங்குகள் தினமும் நான்கு காட்சிகள் ஓடிய காலம் போய் இப்போது
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால்
ஊர்முழுக்க போஸ்டர் மட்டுமே தின்று வளர்ந்த ஆடுகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.
கொமரப்பா செங்குந்தர் பள்ளியில் உயர் கல்வி கற்று
ஈரோடு வாசவி கல்லூரியில் வேதியியல் துறையில் பட்டம் பெற்றவன் ஊருக்குள் இவன் நண்பர்களைப்
போலவே பைசாப் பிரச்சனையால் தறிக்குடோனுக்கு செல்ல முயற்சித்தான். இவன் அப்பா வாசல்படியில்
வெள்ளைத்துண்டு போட்டு தாண்டிப் போனால் சுத்தப்படாது என்று தடை போட்டார் அதற்கு.
சின்ன வயதிலிருந்தே அப்பாவின் சொல்ப்பேச்சு என்ற வெள்ளைத்துண்டுக்கு
மதிப்பு கொடுத்து வந்த முருகேசன் நேசனல் ஜியாகரபியில் புலி, சிங்கம்,
யானைகளின் குடும்ப வாழ்க்கையை பார்த்தபடி டிவிப் பொட்டியின் முன் கிடந்தான்.
இவன் சென்னைக்கு வீட்டாரிடம் சொல்லிக் கொள்ளாமல்
பறந்துவிடவும், வாழ்க்கையில் முன்னேற ஊர்விட்டு ஊர் பறந்துவிட வேண்டுமென்ற பழைய தத்துவத்தை
மறுபடியும் இவன் காதினுள் புகுத்திய ஆனந்தி அந்த சமயத்தில் தான் முருகேசனுக்கு தோழியானாள்.
ஆனந்தி இவனுக்கு பக்கத்து வீடு தான். ஆறு மாதம்
முன்பாகத்தான் அவர்கள் குடும்பம் மூன்று மாதம் காலியாய் கிடந்த வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தது.
நான்கு மாதம் கழித்துத்தான் அந்த வீட்டில் பார்க்க அழகான தாவணி அணிந்த
பெண் ஒன்று இருப்பது இவனுக்கு தெரிய வந்தது. ஆனந்தி இவனை விட
இரண்டு வயது மூத்தவள்.
கரூரில் எப்போதோ அரசினர் பள்ளியில் பத்தாவது முடித்தவள்
இவனை விட தெளிவாயும் அறிவாயும் பேசினாள்.
அதனால் எல்லாப் பெண்களும் அறிவாளிகள் தான் என்ற முடிவுக்கும் வந்திருந்தான்.இவனுக்கு ஏற்கனவே தெரிந்த இரண்டு அறிவாளிகள் இவன் அம்மாவும், அக்காவும்.
பல இளைஞர்களின் கனவாய் இருக்கும் சினிமா ஆசை இவன்
மனதிலும் அப்போது இருந்தது.
கையில் இரண்டு ஸ்கிப்டுகளை வைத்திருந்தான். அதுபோகவும்
மனதில் முடிக்கப்படாத சில ஸ்கிப்டுகளும் கிடந்தன. முருகேசனின்
முதலாவது ஸ்கிரிப்ட் சென்னிமலையிலேயே ஆரம்பித்து
ஊருக்குள்ளேயே முடிந்து விடும் காதல் கதை.
இரண்டாவது ஸ்கிரிப்ட் செக்கோஸ்லோவியாவில் ஆரம்பித்து
திருப்புக்காட்சியில் சென்னிமலைக்குள் நடப்பது போல அமைத்திருந்தான். தயாரிப்பாளர் பெரிய கையாய்
இருக்க வேண்டும். தவிர நாயகிக்கு இரட்டை ரோல் வேறு. மனிதனாய் பிறப்பெடுத்த யாரும் அளவுக்கதிகமாய் ஆசைப்பட வேண்டுமென்ற கொள்கையுடைய
முருகேசன் சீக்கிரமே சோத்துக்கு சிங்கியடிக்கும் நிலைக்கு சென்னை வீதியில் தள்ளப்பட்டான்.
தன் ஆசைகளை சிலகாலம் மனதில் பூட்டி வைத்துவிட்டு பத்திரிக்கை ஒன்றில்
தன்னை நிருபராக ஒப்படைத்தான்.
போஸ்ட்மார்டனிசம், வாதை, கலாச்சாரம் என்று பேசிக்கொண்டிருந்த பத்திரிக்கை இவனுக்கு மூன்றுவேளை சாப்பாட்டுக்கும்
அறை வாடகைக்குமான ஊதியத்தை மகிழ்வுடன் அளித்தது. நல்ல கால நேரத்தில்
வேறு வாரப்பத்திரிக்கைக்கு தாவி விட்டான் ஊதியம் அதிகமென்பதால். பிறகு ஊருக்கு மாதம் தவறாமல் அம்மா லட்சுமி பெயருக்கு நான்காயிரம் செக் அனுப்பத்
துவங்கினான் முருகேசன்.
ஆபீஸில் இவன் துணைக்கு வரும் போட்டோகிராபர் ஸ்வீட்டி
மாநகர மங்கை. மாநகரங்கள் இப்படி ஸ்வீட்டிகளுக்காகவே உருவாகி நிற்கின்றன போலும்.
“ஏனுங்கோ சித்தெ நில்லுங்கோ, வெசயா போவாதீங்கோ”
என்று கோவை சரளா மாதிரி கொங்கு பாஷையில் கூப்பிட்டு இவனை தடுமாறச் செய்வாள்.
மற்றபடி தடை செய்யப்பட்டதை தடையின்றி மென்று கொண்டிருப்பாள்.
இதெல்லாம் தப்புங்க, என்று சொல்வான் முருகேசன்.
ஐ டோண்ட் லைக் அட்வைஸ் குட்டிப் பையா! என்பாள். சண்டே என் ரூம்க்கு வாடா குட்டிப்பையா, நம்ம கார்ட்ஸ்
போடலாம் போரடிக்காது என்றவளுக்கு சலிப்பையே பதிலாக தந்து கொண்டிருந்தான். முன்பு கையில் வைத்திருந்த ஸ்கிரிப்டில் பல மாற்றங்கள் செய்ய வேண்டுமென இவன்
கை அரித்துக்கொண்டே இருந்தது. மெட்ரோரயில் திட்டத்தினால் ட்ராபிக்கில்
சிக்கியது போல் முருகேசனின் கதை சென்னையில் சிக்கிவிடும் போலிருக்கிறது. அது கூடாது தான்.
கோவை எக்ஸ்பிரசில் பக்கத்தில் அமர்ந்திருந்த பாப்பாவிடம்
பத்து வார்த்தைகள் மட்டும் பேசித்தூங்கிப் போனவன் ஈரோடு வந்து தான் விழித்தான். ஈரோடு அவனை வாடா டுபுக்கு,
என்று வரவேற்பதாய் நினைத்து இவனாக சிரித்துக் கொண்டான். ரயில்வே ஸ்டேசனில் எந்த மாற்றங்களும் இல்லை. அதே சிவப்பு
உடை அணிந்த போர்ட்டர்கள் ட்ராலிகளை தள்ளிப் போனார்கள். அதே ராம்ராஜ்
விளம்பரங்கள் தான்.
ஈரோடு பேருந்து நிலையம் போய் அதன் சமீபத்திய அழகை
கண்டு சென்னிமலை பேருந்து ஏறலாமென்ற திட்டத்தை ஒதுக்கி விட்டு வழியே வந்த பேருந்திலேயே
நெரிசலில் ஏறிக்கொண்டான். நண்பர்களில் யார்யாரை சந்திப்பது என்று திட்டம் போட்டபடி நின்றுகொண்டே பயணித்தான்.
முருகேசனின் முதல் ஸ்கிரிப்டின் நாயகியை அவள் தந்தை
அரச்சலூர் மாப்பிள்ளைக்கு கட்டிக்கொடுத்து வருடங்களாகி விட்டது. அவளை குழந்தை குட்டியுடன்
தேர்த் திருவிழாவில் பார்த்ததாக நண்பன் யாராவது சொன்னால் இவனால் பெருமூச்சு ஒன்றை விடமுடியும்.
இவனின் இரண்டாவது ஸ்கிரிப்டின் டபுள்ரோல் நாயகி ஆயிரத்திபத்து காலனியில்
கணவனுக்காக கேஸ் அடுப்பு பற்ற வைத்து வடைச்சட்டி எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
முருகேசன் மேலப்பாளையத்தில் தன் வீட்டினுள் நுழைந்தபோது
அக்கா தன் கணவரோடு வந்திருந்தாள்.
அம்மா இவனைப்பார்த்ததும் கூவென அழுகையை ஆரம்பித்து விட்டது. கடைச்சோறு தின்னு எப்புடி எளச்சிப் போயிட்டான் பாருங்க, என்று அழுத அம்மாவை அப்பாதான் அடக்கினார்.
முருகேசன் அப்பாவுக்கு தன் பேக்கிலிருந்து வேட்டி
சட்டை எடுத்து நீட்டினான்.
அம்மாவுக்கும் அக்காவுக்கும் சேலைகள் கொடுத்தான். அக்காவின் பிள்ளைகளுக்கு வாங்கி வந்திருந்த உடைகளை அவர்களிடமே கூப்பிட்டு கொடுத்தான்.
அப்பா இவன் பிறந்த நாளுக்காக வாங்கி வைத்திருந்த “என் பெயர் பட்டேல் பை” நாவலை கவரிலிருந்து எடுத்துக்
கொடுத்தார்.
”ஈரோடு புத்தக கண்காட்சிப்பக்கம்
போயிருந்தேண்டா. இவதான் ஒருநாள் கூட உருப்படியா ரசம் வச்சதே இல்லையே.
அதான் இவளுக்கு ரசம் வைப்பது எப்படி? புத்தகத்தை
தேடிப்புடிச்சு வாங்கிட்டு வந்து குடுத்தேன். இப்ப என்னடான்னா
வாயில வைக்க முடியாத அளவுக்கு ரசம் வைக்கிறா” என்றார் அப்பா.
”இப்ப அவன் கேட்டானா ரசத்தைப்பத்தி
உங்க கிட்ட? உங்க வாய் இருக்கே சாமீ! நீ
போய் குளிச்சுட்டு வாடா இவரு இனி ஒன்னொன்னா எதாச்சும் சொல்லிட்டே தான் இருப்பாரு”
என்று அம்மா சொல்லவும் துண்டை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு நகர்ந்தான்.
அப்பாவும் அம்மாவும் இன்னமும் சந்தோசமாகவே இருக்கிறார்கள். ஒரு நாள்கூட அப்பா அம்மாவை கைநீட்டி அடித்ததில்லை. அம்மாவைப்
போல தனக்கும் ஒரு துணை அமைந்து விட்டால் வாழ்வில் டைவர்ஸ் பிரச்சனையே இருக்காது என்று
யோசித்தபடி முதல் சொப்பு தண்ணீரை தலைக்கு ஊற்றினான்.
குளித்து முடித்து சாப்பிட்டு விட்டு ஷோபாவில் அமர்ந்தவன்
முன்னால் குட்டிப் பையன் புதுடிரஸ் அணிந்து ஓடி வந்து அழகு காட்டினான். “மாமா பேண்ட் பெருசாப் போச்சுன்னு
உங்கக்கா கீழ ரெண்டு மடிப்பு மடிச்சு உட்டிருக்கா! சட்டை பெருசா
போச்சுன்னு வவுத்துக்குள்ள உட்டு இன் பண்ணி பெல்ட் போட்டு உட்டுட்டா” என்று அழகு காட்டினான். இதான் சாமி இப்பத்த பேசனு!
ஜம்முன்னு இருக்கு மாப்பிள்ளை மாதிரி, என்றதும்
ஓடிப்போய் உள் அறையில் அக்காவிடம், உன் தம்பி சொல்லுது ஜம்முன்னு
இருக்கேனாம், என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
”ஆனந்தி கல்யாணப் பத்திரிக்கை உனக்கு
வந்துச்சாடா முருகேசா? உன்னோட அட்ரசை என்கிட்டத் தான் வந்து கேட்டு
வாங்கீட்டு போனாள். நீ எப்படியும் அவள் கலியாணத்துக்கு வருவீன்னு
நாங்க பார்த்துட்டு இருந்தோம்” அம்மா இவனிடம் சொல்லிக் கொண்டே
வெங்காயம் உறித்துக் கொண்டிருந்தது. அப்பா கறி எடுத்துவர பையை
தூக்கிப் போய்விட்டார்.
முருகேசனுக்கு ஆனந்தியின் கல்யாணத்திற்கு வரமுடியாமல்
போன துக்கம் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது.
இவனின் இரண்டு ஸ்கிரிப்டுகளையும் படித்த ஒரே தோழி அவள் தான்.
படித்ததும் ஒன்று சொன்னாள்.”உனக்கே ரெண்டு வருசம்
போனால் புரிஞ்சிடும் முருகேசு. அப்படி இல்லீன்னா இதே புரிய வச்சிடும்”
ஆறு மாதத்திலேயே புரிந்து கொண்டான் முருகேசன். அன்றிலிருந்து ஆனந்தி வெறும்
தோழி மட்டுமல்ல தீர்க்கதரிசினி இவனுக்கு. அம்மாவிடம் நேம்பாய்
விசாரித்தான். ஆனந்தியை எந்த ஊருக்கு கட்டிக் குடுத்திருக்கும்மா?
“இங்க தாண்டா இருக்கா கொமராபுரியில.
அவ அம்மா கிட்ட எவத்திக்கின்னு கேட்டு ஒருஎட்டு போயிட்டு வந்துடு.
போறப்ப சும்மா வெறுங்கையை வீசிட்டு போயிடாதே. எனக்கு
வாங்கிட்டு வந்தியே சேலை பச்சைக்கலர்ல, அதை எடுத்துட்டு போயி
குடு. எனக்கு புடிக்கலை. ஆறுமுகங்கடையில
வேற பொடிக்கலர்ல எடுத்துக் குடு” அம்மா சொன்னதும் சிரித்துக்
கொண்டான். நான் பச்சைய எடுத்துக்கறேன். எம்பட ஊட்டுக்காரருக்கு நீலக்கலரு புடிக்காது, உள் அறையிலிருந்து
அக்காவின் குரல் கேட்டது.
கொமராபுரியில் ஆனந்தியின் வீட்டை கண்டுபிடிப்பதில்
இவனுக்கு சிரமம் எதுவும் இருக்கவில்லை.
என்ன பக்கத்து வீட்டு கதவை தட்டிவிட்டான். கதவு
நீக்கி வந்த அம்மாள் இவனுக்கு பக்கத்து வீட்டை கைகாட்டி விட்டு மீண்டும் சாத்திக் கொண்டது.
உள்ளே டிவியில் கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டிருந்தது. கிரிக்கெட் ரசிகை போலும் என நினைத்தான்.
நல்லவேளை நீ யாரு? எந்த ஊரு? உங்கொப்பா என்ன வேலை பண்றாரு? கையில என்ன பொட்டணம்?
உங்கொம்மா ஹவுஸ் வொய்ப்பா? என்ன பாட்டு வேணும்?
என்றெல்லாம் கேட்காமல் விட்டதே என்று ஆனந்தி வீட்டு கதவைத் தட்டினான்.
கதவு நீக்கிய ஆனந்தி முகத்தில் ஆச்சரியம் கால்கிலோ அளவு காட்டி இவனை
உள்ளே அழைத்தாள். பழைய ஹாய்டா! சொல்லவேயில்லை.
திருமணத்திற்கு வராத கோபமாய் இருக்குமென நினைத்துக் கொண்டான்.
ஆனால் அதற்கெல்லாம் கோபித்துக் கொள்பவள் இவன் தீர்க்கதரிசினி அல்லவே!
“வாழ்த்துக்கள் ஆனந்தி. உன் திருமணத்திற்கு வரமுடியாமல் போனதற்கு இப்ப மன்னிச்சுடு என்னை” என்றான்.
“பரவாயில்ல விடு முருகேசு,
இப்படி ஷோபாவுல உட்கார்ந்து இந்த போட்டோ ஆல்பத்தை புறட்டி பார்த்துட்டு
இரு, நான் அதுக்குள்ள உனக்கு காபி தயார் பண்ணி கொண்டு வர்றேன்”
என்று சமையலறைக்குள் போய்விட்டாள். ஆனந்தி இவன்
மடியில் வைத்துவிட்டுப் போன கனத்த ஆல்பத்தை விரித்தான்.
மாலையும் கழுத்துமாய் ஆனந்தியின் பக்கத்தில் நின்றிருந்தவரைப்
பார்த்ததும் அதிர்ந்தான் முருகேசன்.
ஆனந்திக்கு சித்தப்பா மாதிரி இருந்தார் அவர். தலைமுடி
சாயம் பூசப்பட்டிருந்தது அப்படி அழகாய் தெரிந்தது. இந்த ஆல்பத்தை
என்னவென்று இனிப் பார்க்க? இதைக் கொண்டுபோய் அதுகிட்ட ஒப்படைத்திருக்கிறார்களே!
இதற்கு சொந்தபந்தங்கள் வேறு சாட்சி. இந்த உலகம்
ஏன் இவ்வளவு கோரமாகி விட்டது? ஏன் இங்கு வாழ்பவர்களும் இவ்வளவு
கோரமாய் மாறிவிட்டார்கள்?
ஆனந்தி இவனுக்கு காபி கொண்டுவந்து கொடுத்தாள். அப்புறம் முருகேசு லீவுல
வந்தியா? சென்னையில எப்படி போயிட்டு இருக்கு பொழப்பு?
அவர் ஈரோடு மருத்துவமனையில மருந்து ஆளுனரா இருக்கார். இப்ப வர்ற நேரம் தான். வந்தா என்னை ஏழுநூத்தி முப்பது
கேள்வி கேட்டு அடிச்சுடுவாரு, என்று நிதானமாய் சொன்னாள்.
கிளம்பீட்டின்னா நல்லது என்பதை மாற்றிச் சொல்கிறாள் என்றே நினைத்தான்.
இருந்தும் மேரேஜ் ஆகி மூனு மாசம் இருக்குமில்ல, என்று சம்பந்தமில்லாமல்
கேட்டான். தொன்னூத்தி நாலு நாள் ஆச்சு, என்றாள். எல்லாமும் நினைப்பது போல் நடந்துவிடுகிறதா என்ன!
ஆனந்தியின் கணவர், “வாசக்கதவை தொறந்து போட்டு வச்சிருக்கியா
நீயி” என்றபடி வந்தார். மரியாதைக்காக இவன்
எழுந்து நின்றான். அவர் இவனை கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் நுழைந்தார்.
“இங்க வா ஆனந்தி” என்று உள் அறையிலிருந்து குரல் கொடுத்தார். காபி எடுத்துட்டு
வர்றனுங்க மாமா, என்றவள் காபி டம்ளரோடு அறைக்குள் சென்றாள்.
உள்ளே நிமிடத்தில் காபி டம்ளர் உருளும் சப்தமும், சக்கரை எதுக்குடி இத்தனை போட்டு எடுத்துட்டு வந்திருக்கே? என்ற அவரின் குரலும் கேட்டது.
இதோ ஒரு நொடியில வேற போட்டு எடுத்துட்டு வந்துடறேனுங்
மாமா, சொன்ன
ஆனந்தி டம்ளரோடு வெளி வந்தவள் கண்களில் ஈரம்மின்ன இவனைப்பார்த்து கை எடுத்துக் கும்பிட்டாள்.
இவன் எழுந்து கிளம்பி வாசல் கதவு வருவதற்குள் பின்னால் வந்தவள் இவன்
கையில் சேலைக்கவரை திணித்து, சாரிடா! உன்
அக்காவுக்கு இதை குடுத்திடு ப்ளீஸ்! என்று சொல்லி விட்டு திரும்பிச்
சென்றாள். முருகேசன் முன் கதவை சாத்திவிட்டு பாதையில் இறங்கினான்.
முருகேசன் வீடு வந்தபோது அம்மா தான், “ஏன் இப்படி பேய் அடிச்சா
மாதிரி இருக்கே? கொண்டு போன சேலைக் கவரையும் திருப்பிக் கொண்டு
வந்துட்டே? ஆனந்திய பார்த்தியா பேசுனியா?” என்று கேட்டது. “புதுசா கல்யாணம் ஆனவங்களை கையில புடிக்க
முடியுமா ஒன்னா! அண்ணமார் தியேட்டருக்கு படம் பார்க்க போயிட்டாங்களாம்.
பக்கத்து வீட்டுல சொன்னாங்க” என்றான் முருகேசன்.
“போச்சாது நாளைக்கு போயி பார்த்துட்டாப்
போவுது போ” என்றது அம்மா.
-ஆனந்த விகடன் 2014 மார்ச்
**************