புதன், டிசம்பர் 30, 2015

பட்டவிரட்டி- ஒரு பார்வை

ஆப்கான் வாழ்வியல் முறைமைகளை முதன் முதலாக இந்த புத்தகத்தின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. ரஷ்ய இலக்கியங்களை சிறுவயதிலிருந்தே படித்து அனுபவப்பட்டிருந்த எனக்கு, பின்னர்  பலநிலங்கள் சார்ந்த எழுத்தாளர்களின் புதினங்கள் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வாயிலாக மட்டுமே வாசிக்க முடிகிறது. அவ்வகையில் பட்டவிரட்டி. ஆப்கானிஸ்தானில் குடியரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சோவியத்தின் படையெடுப்பு நிகழ்கிறது! மக்கள் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் வெளியேறுகிறார்கள்! நாவலில் நான்கைந்து இடங்களில் துப்பாக்கியோடு வரும் தாலிபான்கள் வாசிப்பவர்களையே மிரட்டுகிறார்கள்.

அமீர் என்கிற சிறுவன் தன் தந்தையிடம் வேலை பார்க்கும் அலியின் மகன் ஹசனுடன் நட்புறவோடு பழகுகிறான். அவனுக்கு அமீர் துரோகமிழைத்து விட்டதாக அவனாக மனதில் எண்ணி வடுவாய் சுமக்கிறான். அவனது மகன் சொஹ்ராபை கடைசியில் தன்னுடன் வளர்த்துவதாக நாவல் நிறைவடைகிறது. அமீரின் முழு வாழ்க்கையையும் முழுதாக சொல்லும் நாவல் இது. ஒவ்வொரு மகனுக்கும் தந்தையானவர் எப்போதும் ஒரு நாயகன் தான். நாவலில் அமீரின் தந்தை புற்று நோயால் இறக்கும் நேரம் வரை அமீருக்கு அவர் ஒரு நாயகன் தான்.

நீ ஒரு மனிதனைக் கொல்லும் போது, அவன் வாழ்க்கையைத் திருடுகிறாய்! ஒரு கணவனின் மீதான மனைவியின் உரிமையைத் திருடுகிறாய். அவனது குழந்தைகளின் தந்தையைத் திருடுகிறாய். நீ ஒரு பொய்யைச் சொல்லும் போது, ஒருவருடைய உண்மையின் மீதான உரிமையைத் திருடுகிறாய். நீ ஏமாற்றும் போது நேர்மையாக இருப்பதைத் திருடுகிறாய்

பின்குறிப்பு : ஐக்கிய நாடுகள் சபையின் 2002ம் ஆண்டிலிருந்து ஐந்து மில்லியன் ஆப்கானியர்கள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். 2007ம் ஆண்டில் இப்படி தாயகம் திரும்பியவர்களை நாவலாசிரியர் காலித் ஹுஸைனி  சந்திக்கிறார். ஒரு டாலருக்கும் குறைவான செலவில் வாழ்க்கையை ஓட்டும் மக்கள். குளிர்காலம் முழுதும் தரைக்கடில் உள்ள குழிகளில் வாழ்கிறவர்கள். கலங்கிய ஆற்ருநீரை குடிக்கும் மக்கள். சுகாதார வசதிகளோ, கல்வி வசதிகளோ. வேலை வாய்ப்புகளோ இல்லாதவர்கள். பின்பாக காலித் ஹுஸைனி ஃபவுண்டேசன் தொடங்கப்படுகிறது. khaledhosseinifoundation.org  இவை பற்றி அறிந்து கொள்ள!

தமிழாக்கம் - எம்.யூசுப் ராஜா.


எதிர் வெளியீடு- விலை-250.

000

Post Comment

திங்கள், டிசம்பர் 28, 2015

பதினொரு நிமிடங்கள்- நாவல் பார்வை

”ஓர் இரவுக்கா? மரியா நீ மிகைப்படுத்திக் கொண்டிருக்கிறாய். இது உண்மையில் நாற்பத்து ஐந்து நிமிடங்கள் மட்டுமே. உடைகளை களைவது, ப்ரியத்தை வெளிக்காட்டும் போலியான பாவனைகளை செய்வது, சற்று நேரம் உரையாடுவது,, மீண்டும் ஆடை அணிவது இவற்றுக்காகும் நேரத்தை விட்டு விட்டால் உண்மையில் பாலுறவுக்கு ஆகும் நேரம் பதினொரு நிமிடங்களே”

பதினொரு நிமிடங்கள். இந்த உலகம் பதினொரு நிமிடங்கள் மட்டுமே ஆகும் விஷயத்தைச் சுற்றியே சுற்றிவருகிறது. 24 மணி நேரம் கொண்ட ஓர் நாளில், இந்த பதினொரு நிமிடங்களுக்காகவே எவரொருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இந்த சமூகத்தில் ஏதோ பெரிய தவறு இருக்க வேண்டும். அது செய்தித்தாள்கள் கூறுவது போல அமேசான் மழைக்காடுகள் அழிவோ, ஓஸோன் அடுக்கில் ஏற்படும் சேதமோ, பண்டாக் கரடிகள் மரணமோ, சிகரெட்டுகளோ, புற்றுநோய் உண்டாக்கும் உணவுகளோ அல்லது சிறைச்சாலை நிலவரங்களோ இல்லை. அது முக்கியமாக அவள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தொழில் சார்ந்தது தான்; பாலுறவு.

பாவ்லோ கோலாவின் இந்த நாவல் முன்னொரு காலத்தில் மரியா எனும் விலைமகள் ஒருத்தி இருந்தாள், என்று துவங்குகிறது. இந்த விஷயத்தை பொதுமைப்படுத்துவதில் எனக்கு எந்தவித தடுமாற்றமும் இல்லை என்றே அவர் பின்னுரையில் குறிப்பிடுகிறார். இது தனது கணவருடனும் இரு மகள்களுடனும் லூசான்னியில் வசிக்கும் மரியா பல்வேறு சந்திப்புகளில் சொல்லிய கதையின் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகம் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார் பின்னுரையில்.

காபரே விடுதி ஒன்றில் நடனக்காரியாக இருந்தது - ஃப்ரெஞ்ச் கற்றது - விலைமகளாக பணி புரிந்தது - நம்பிக்கை இடமில்லாத வகையில் காதலில் விழுந்தது - என மரியா நான்கு சாகசங்களை மட்டுமே இந்த நாவலில் மேற்கொள்கிறாள்.

வலியானது அவளது ஆன்மாவை ஆக்ரமித்து, அவளது தெய்வீகத்தை அடக்கியபடி காணப்பட்டது. ஏனெனில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நாடகத்தனமாக, நிர்வாணமாக,  உள்ளே வோட்காவும் கேவியரும் சென்றிருக்க, கால்களுக்கிடையில் சவுக்கைத் திணிப்பது ஒன்று, ஆனால் குளிரில், வெறுங்காலில், கற்கள் உங்களது கால்களை சிராய்க்க நடப்பது முற்றிலும் வேறான ஒன்று. அவள் உத்வேகமிழந்தாள். அவளால் அவனிடம் சொல்வதற்கென ஒரு விஷயத்தைக்கூட யோசிக்க முடியவில்லை. அவளது உலகத்தில் இருந்ததெல்லாம், மரங்களுக்கு இடையில் அமைந்த பாதையில் நிறைந்த அந்த சிறிய, கூரான கற்கள் தான்.

-தமிழில் - க. சுப்பிரமணியன்.

எதிர் வெளியீடு - விலை 220.

000

Post Comment

சனி, டிசம்பர் 26, 2015

குதிரை வேட்டை -நாவல் பார்வை

பெர் பெதர்சன் -ன் குதிரை வேட்டை நாவலை வேட்டையாடுதல் என்று எங்களூரில் அணில், எலி என்று செட்டு சேர்ந்து ஆடப்போவது போல சுவாரஸ்யம் இருக்குமோ? என்ற ஆர்வத்தில் வாங்கியது தான். தலைப்பே குதிரை வேட்டை என்று சொல்கிறதேநார்வேயின் கிழக்கு கோடியில் ஒரு சிறுவீட்டில்  உறவுகளிடம் தகவல் தராது தன் விருப்ப வாழ்வை வாழ வந்த வயது முதிர்ந்த கிழவர் தான் இந்த நாவலை செலுத்திக் கொண்டு செல்கிறார். அவரது பால்ய கால சம்பவங்கள் தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் விவரிக்கப்படுகின்றன அல்லது அவரே சொல்கிறார்.

பால்ய கால சம்பவத்தில் ஜான் என்கிற தன் வயதொத்த சிறுவனுடன் குதிரை வேட்டைக்கு செல்லும் நிகழ்வு இரண்டாவது அத்தியாயத்தில் துவங்குகிறது! சற்று நிமிர்ந்து வாசிக்கத்துவங்கி விட்டேன். வழக்கமாக ஜான் குழி முயல்களை வேட்டையாட துப்பாக்கியோடு வருபவன் குதிரைகளை கொல்லப்போவதில்லையாதலால் துப்பாக்கியின்றி வருகிறான். இந்த அத்தியாயம் மிக நேர்த்தியாக மொழியாக்கம் பெற்றிருக்கிறது.

ஜானின் இரட்டைச் சோகதரர்கள் நிலவறைக்குள் விளையாடுவதை அறியாதததால் ஜான் கொண்டு வந்த இரண்டு குழி முயல்களையும் துப்பாக்கியையும் வீட்டினுள் வைத்து விட்டு அவர்களைத் தேடி வெளியில் ஓடுகிறான். ஆற்றை நோக்கி ஓடுகிறான். அப்போது வீட்டிலிருந்து துப்பாக்கி வெடியோசை அவன் காதில் விழுகிறது. அப்போது தான் அவனுக்கு துப்பாக்கியை தாழிட மறந்ததும், அதன் கடைசிக் குண்டினை  அகற்றாமல் வைத்து விட்டு ஓடி வந்த விசயமும் தெரிகிறது. வீட்டை நோக்கி அவன் ஓடி வருகையில் அவனது தந்தையார், அவர் உருண்டு திரண்ட கனத்த மனிதர் மரங்களினிடையே இருந்து தாவி கால்களை அகட்டி அகட்டி அழுத்தமாக வீடு நோக்கி ஓடி வருவதை பார்க்கிறான். வீட்டினுள் இருந்து அவன் தந்தையார் இறந்த ஒரு பையனைத் தூக்கி கைகளில் ஏந்தியபடி வெளி வந்து நிற்பதை காண்கிறான்  புதரில் இருந்தவாறு ஜான்.

விறு விறுப்பான அத்தியாயங்களாய் துவங்கப்படும் இந்த நாவல் தந்தைக்கும் மகனுக்குமான ஒட்டுறவை நாவல் முழுக்க அதிகம் பேசுகிறது! அதிலும் மழை பெய்யும் இரவில் இருவரும் நிர்வாணமாக மழையில் நனைந்து பாடல் பாடியவண்னம் ஆடுவதும், தலைகீழாக கைகளால் நடந்து கொண்டே இருப்பதும் ஒரு வித போதையையே ஏற்படுத்துகிறது! பார்க்கையில் நினைவுகளின் குறிப்புகளாக இது அமைந்து விடாமல் காட்சிகளையும் நிலப்பரப்பையும் விவரித்துச் செல்லும் பாங்கு நம்மை வாசிக்கையில் வியக்க வைக்கிறது. நிரம்ப உன்னிப்பாக வாசிக்க வேண்டிய நாவலாக இருக்கிறது.. குதிரை வேட்டை. இறுதியாகஎது எப்போது துன்புறுத்தும் என்பதை நமக்கு நாமே தான் தீர்மானித்துக் கொள்கிறோம்என்று முடிகிறது நாவல்.

யுவன் சந்திரசேகர் மொழிபெயர்ப்பில் நான் வாசிக்கும் இரண்டாவது புத்தகம் இது. மிக நேர்த்தியாக, சிக்கல் நிறைந்த நாவலை சவாலாக எடுத்து செய்திருக்கிறார். வாழ்த்துக்கள்!

காலச்சுவடு பதிப்பகம். விலை - 200.


000

Post Comment

முகநூல் பதிவுகள் 2


ஆக்டோவியா பாஸ், ஃபூக்கோ - பெளே, டி.எஸ்.எலியட், போர்ஹே, என்று ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களையும் அவர்கள் சம்பந்தமான தகவல்கள்களையும் உரையாடல்களையும் அவர்களின் கவிதைகளையும் வாசித்துப் பழகிய இதழ் மீட்சி! இடையிடையே தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துகள் இருந்தாலும் ஆங்கில எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு பக்கத்தில் கூட நெருங்க இயலவில்லையே? என்ற கேள்வியையும் என்னுள் இந்த மீட்சி இதழ்களே விதைத்தது.

சிற்றிதழ்கள் என்றாலே சரியான நேரத்தில் வந்து சேராது என்பது எல்லோரும் அறிந்தது தான். அதற்கு இந்த இதழும் விதி விலக்கல்ல! இந்த சமயம் பிரம்மராஜனின் அறிந்த நிரந்தரம் கவித்தொகுப்பை வைத்துக்கொண்டு வரி வரியாய் படித்து என்ன தான்யா இவுரு வரிக்கு வரி சொல்ல வர்றாரு? என்று கேள்விகள் பல நண்பர்கள் எழுப்பிக் கொண்டோம்!

ஒரு ஆங்கில இதழை வாசிப்பது போன்ற உணர்வை ஒவ்வொரு இதழும் ஏற்படுத்தின என்று சொன்னால் அது மிகையல்ல தான். பிரம்மராஜனின் உழைப்பு என்றும் நாம் நினைத்துப் பார்த்து போற்றத்தக்க உழைப்பு.

கவிஞர்கள் பிரபஞ்சத்தின் மொழியை- நட்சத்திரங்கள், நீர், மரங்கள் ஆகியவற்றின் மொழையை- மனிதன் மொழியில் கொண்டு வருவதாகச் செயல்படுவதால், அவர்கள் தான் பிரபஞ்ச ரீதியான மொழிபெயர்ப்பாளர்கள் - சார்லஸ் பாதலேர்.

போர்ஹேவின் கதைகள் சிலவற்றை பிரம்மராஜன் மொழிபெயர்த்து ஒரு புத்தகம் கொண்டு வந்தார். அப்படி ஒரு மொழிபெயர்ப்பு அது. 20 வருடமாக படித்து முடித்துக் கொண்டே இருக்கிறேன்!


000


ஏழே ஏழு கதைகள்! ஏழும் மணியானவை! முதலாக 80-களின் கடைசியில் நான் வாசித்த தொகுப்பு! பின்பாக இவரது சாயாவனம் நாவல். அத்தோடு நிறுத்திக் கொண்டேன். இந்தப்பிரதி கிரியா 1974-ல் வெளியிட்ட புத்தகம்! மறுவாசிப்பு செய்ததில் மீண்டும் ஒரு ஆஹா! அதிலும் முதல் கதையான பாய்ச்சல்! அனுமார் வேஷத்தில் வீதியில் தாளமுடன் வசூல் செய்தபடி வருகிறார். அழகு என்கிற சிறுவன் அனுமாரை தொடர்ந்து சென்று அனுமார் பீடி குடிப்பதும் இருமல் போடுவதையும் காண்கிறான். பின்பாக அவனே வாலையும் அனுமார் முகமூடியையும் எடுத்து அணிந்து ஆட்டமாடுகிறான்!

அடுத்து உயிர்கள் என்கிற கதை! அற்புதராஜ் சார் துப்பாக்கி வைத்துக்கொண்டு சிறுவர்களை வேட்டைக்கு அழைத்துச் செல்லும் கதை! கதைகள் அனைத்தும் கிராமியம் சார்ந்து இருப்பதினால் இதனோடு ஒரு ஒட்டுதல் எனக்கு ஏற்பட்டிருக்கலாம்! இப்படி எழுதினால் இலக்கியமோ? என்று கூட அப்போது நானாக புரிந்திருக்கலாம்!

ஆனால் மீண்டும் நிறைய சா. கந்தசாமி எழுதியிருக்கிறார். அவைகள் கிட்டே கூட செல்லாதது இதில் இருந்த நிதானம் மற்றவைகளில் இல்லை என்பதாகக்கூட இருக்கலாம்! எது எப்படியிருந்தாலும் நானும் சா.கந்தசாமியை படித்திருக்கிறேன், என்று கூறிக் கொள்ளலாம்!

தற்கால தமிழ் சிறுகதை தொகுதியை தொகுத்தவர் பத்து வருடம் முன்பாக! அதில் திருவிழாவுக்கு போன மயிலாத்தாள் என்கிற என் சிறுகதை இடம்பெற்றிருகிறது. என் சொந்த ஊர் தஞ்சாவூர் என்று பதிவாகியிருந்தது. தஞ்சை சுகன் இதழில் அந்த கதை வந்ததால் இவரே முடிவெடுத்து போட்டிருக்கலாம். நாளை அந்த புத்தகத்தை வாசிப்பவர் என்னை தஞ்சைக்காரன் என்று நினைப்பதற்குண்டான வாய்ப்புகள் அதிகம் தானே! இருந்துட்டுப் போச்சாறேன்பா!

000

Post Comment

புதன், டிசம்பர் 23, 2015

குழந்தை கவிதையும், ஒரு கோலக் கவிதையும்


வீட்டின் முன் கரும்மலைப் பாம்பென
படுத்திருந்த சாலையில் வெள்ளெனெ
எழுந்து யுவதி ஒருத்தி சார்ஜர் விளக்கொளியில்
பெரிய வர்ணமயமான கோலமொன்றை
இட்டு முடித்தாள். பின்பாக தன் முகநூல்
நட்புகளுக்கு அறியத்தர வேணுமென அதை
பல விதங்களில் அலைபேசியில் புகைப்படம்
எடுத்துக் கொண்டவள் வரைந்த கோலத்தின் மீதே
நடந்து வீட்டுக்குள் மறைந்து போனாள்!
எங்கிருந்தோ வேற்றூர் நாயை துரத்தி வந்த
உள்ளூர் நாய்கள் மிகச்சரியாய் அதை கோலமிட்ட
இடத்தில் தான் வளைத்துப் பிடித்து கடித்துப் புறட்டின!
நல்லவேளை சற்றுமுன் இந்த நிகழ்ச்சி நடந்திருந்தால்
பாவம் தான் அந்த  யுவதி!


000
குருவி தலையில் பனம்பழத்தை
வைச்சது மாதிரி ஏம் மாமா
இந்த ஸ்கூலு பிள்ளைங்க முதுவுல
மூட்டைய தூக்கீட்டு போறாங்க?
அமட்டையுமா படிக்காங்க?

000

எல்லா சுதந்திர தினங்களிலும்
பள்ளியில் ஆரஞ்சி மிட்டாயே
தருகிறார்களே, என்பதில் தான்
அம்முவுக்கு வருத்தம்!

000

எல்லாக் குழந்தைகளும்
அடம்பிடித்து அழுது தான்
சாதித்துக் கொள்கின்றன!

000


என்ன தான் பெண் பிள்ளையை
குளிப்பாட்டி, சீராட்டி, தாலாட்டி
வளர்த்தாலும் அப்பனைக் கண்டதும்
ப்பா! என்று ஓடுகிறதே?
அம்மாவுக்கு பொறாமை தான்.

000

Post Comment

செவ்வாய், டிசம்பர் 22, 2015

டிசம்பர் கவிதைகள் - 8தினமும் எப்படியேனும் சாலைகளில்
விபத்துகள் நடந்தேறி விடுகின்றன.
விபத்து பற்றியான சேதிகள் இல்லாது
ஒருநாள் கூட தினசரிகள்
வீடு வந்து சேருவதில்லை!

சாலையில் நின்று கொண்டிருந்த
வாகனத்தின் மீது பேருந்து
மோதி நான்கு பேர் பலி!
கேட்பதற்கும் புகைப்படங்களைப்
பார்ப்பதற்கும் நாம் அச்சம் கொள்கிறோம்!

அவினாசி சாலை விபத்தில்
இறந்து போன மகனை கைகளில்
ஏந்தியபடி வெற்றுமேலோடு வரும்
தகப்பனை கண்ட துக்கக் காட்சியை
காணச் சகியாது விம்மலுடன் வீடு திரும்பினேன்!

எல்லா துக்கங்களையும்
தாங்கிக் கொண்டே எவ்வாறோ
வாழ்ந்து கொண்டேயிருக்கிறோம் நாம்!

000

ஒன்னரை வருடம் முன்பாக ஓடிப் போன
மூத்த மகள் முத்தரசியை நினைத்து
அன்றைய இரவில் கண்ணீர் உகுத்தாள் அம்மா!

வயசு இருபதாயும் விரல் சூப்பும் பழக்கம்
மாறாத இளைய மகள் சொச்சு சொச்சென
பல்லி கத்துவது போன்றே கத்தியபடி
தூங்கியிருந்தாள் பக்கத்துப் பாயில்!

ஏதுமறியா முருகேசன் பிட்டத்தை
சொறிந்தபடி அல்லையில் திரும்பி படுத்தான்.

காலையில் கதவு நீக்கி வெளிவந்த அம்மா
வாசலில் கையில் குழந்தையுடனும் கணவனுடனும்
நின்றிருக்கும் முத்தரசியை கண்டதும்
பிடித்தாளே ஒரு பிடி!

யாருளே நீயி?
இங்கெங்களே வந்தே காத்தால வாசப்படி தேடி!
நாயி உம்மட மூஞ்சில முழிச்சாக்கூட
பொழுதுக்கும் அதுக்கு இசி கிடைக்காதேடி!
எப்ப ஓடிப்போனியோ அப்பவே நாங்க
தலைக்கு குளிச்சுட்டோமடி!’

வெளிவந்த முருகேசன்
வா சாமி! வாங்க மாப்பிளே! பையனா?
பொண்ணா? என்று கைநீட்டி வாங்கி
முத்தம் ஒன்று கொடுப்பதை
பேச்சை நிப்பாட்டியிருந்த அம்மா
தாவாங்கட்டையில் கைவைத்து
அதிசயமாய்ப் பார்த்தாள்!

000


எல்லாருடைய வேட்டிக்குள்ளும்
வீரவாள் ஒன்றிருப்பதாக
கணேசமூர்த்தி சொல்லிப் போனான்!

000

என்னிடம் பேச உனக்கு
ஒரே ஒரு தகுதி  இருந்தால்
மட்டும் போதுமானது!
ஒரு செடியையேனும் நீ
நீரூற்றி வளர்த்திருக்க வேணும்.
அது உன்னை விட உயர்ந்து
நின்று உனக்கு ஏதேனும் தந்திருக்க
வேண்டும்! -இதுவே போதும்!

000

கெணத்தக்காணாம்னு ஒரு கேசா?

-ஐயா என்னை இந்த யானை
கடுப்படிச்சிப் போட்டுதுங்கொ!
நானு இப்ப ஒரு மாசம்!-என்றது எலி.

-என்னம்மா சொல்றே? கடுப்படிச்சிடுச்சா?

-ஆமாங்க! அந்தா கூண்டுல நிக்குற யானை தான்!
நான் ஏமாந்த நேரம் பாத்து சம்பவத்த நடத்திட்டு
இப்ப ஒன்னும் தெரியாத மாதிரி நிக்குது பாருங்க!

-கனம் கோர்ட்டார் அவர்களே! என் கட்சிக்காரர்
கடந்த மாதம் 20-11 2015 அன்று பொட்டனேரியில்..

-யோவ் வக்கீலு நிறுத்துயா.. இனி நான்
நீதிபதியா இருக்கோணுமா?

-ஐயா!

-வாழ்த் தகுதியே இல்லாத ஊருயா இது
ஒருத்தரும் வாழ முடியாது இங்க! போயிடலாம்!
எல்லாரும் போயிடலாம்!

000


Post Comment

திங்கள், டிசம்பர் 21, 2015

டிசம்பர் கவிதைகள் - 7எல்லா ரயில் பெட்டிகளிலும்
படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பவர்கள்
கையசைத்து மகிழ்ச்சியோடு பிரயாணிக்கிறார்கள்!
அவர்கள் கையசைப்பது வீட்டின் மாடிகளில்
துணிகளை காயப்போடும் பெண்டிரைப் பார்த்தும்..
மட்டையாட்டம் ஆடிக் கொண்டிருக்கும்
சிலரைப் பார்த்தும்,
ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்
பெரியவர்களைப் பார்த்தும்,
ரயில்வே கேட்டில் காத்திருக்கும் பேருந்துகளை
பார்த்தும், சில நேரங்களில் சும்மாவேணும்
கையசைத்துக் கொண்டே பிரயாணிக்கிறார்கள்.
குளக்கரைகளில் குளித்துக் கொண்டிருக்கும்
பெண்களைக் கண்டு விசிலையும் போடுகிறார்கள்.
இறங்க வேண்டிய நிறுத்தத்தில் சோம்பிப் போய்
இறங்கி வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள்.


000

மீன்களெல்லாம் வேறிடம் போய் விட்ட
குளத்திலமர்ந்து  அவன்
வெகுநேரமாய் தூண்டிலை
வீசிக் கொண்டிருக்கிறான்!
காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம்
வேறிடம் போய்விட்ட பிறகு
வேடன் ஒருவன் கையில் அம்புடன்
உள்ளே நுழைகிறான்.
காதலையும் காமத்தையும் முன்பே
முடித்து விட்டிருந்தவளுக்கு ஒரு
ஊமத்தைப் பூவை கையில் வைத்து
நீட்டிக் கொண்டிருந்தான் அவன்.

000

நேற்று மாலை நடந்து முடிந்த வாகன
விபத்தொன்றில் அடிபட்டு
இறந்து போனவனின் பிணத்தை
சில கையூட்டுகள் கொடுத்து மருத்துவமனை
வாகனத்தில் எடுத்துப் போட்டு வீடு
வந்து சேர்ந்த உறவுச்சனத்தைப் பார்த்து
எங்க போனீங்க வெடியமுட்டும்
ஊட்டை பூட்டிட்டு எல்லோரும்?’
என்றான் வீட்டுத்திண்ணையில்
அமர்ந்திருந்த அவன்!

000

மொத்தமாய் உடைக்கப்பட்டு
அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக்
கிடக்கும் இந்தக் கண்ணாடி
வளையல்கள் உங்களுக்கேதேனும்
சேதியைச் சொல்கின்றனவா?

000


சிறுவயதில் நடக்கக் கற்றுக் கொடுத்தாள்
பழனியம்மாள் தன் மகள் பூரணிக்கு!
பழனியம்மாளுக்கு மூன்றாவது காலாய்
ஒரு கவ்வைக்கோல் ஐந்தாறு
வருடங்களாய் இப்போது உபயோகத்தில்!
பழனியம்மாளுக்கு ரொம்பவுமே
முடியாமல் போன போது நான்காவது
கோலாய் மகளைக் கூப்பிட்டாள்
வெளிக்காட்டுக்கு போக!
சாமத்துல தான் இதுக்கு எல்லாமும் வருமென
முனகிக் கொண்டே வந்து கைநீட்டினாள் பூரணி!

000

வைக்கம் முகமது பஷீரின்
பால்ய கால சகிக்கு பல்லு அத்தனையும்
போன கதை உனக்குத் தெரியுமா
கோவாலு? போச்சாது உடு
பாத்துமாவின் ஆட்டை அப்பவே
பக்ரீத்துக்கு போட்ட கதையாச்சிம்?
இப்படி ஒன்னுமே தெரியாம
இலக்கியம் எழுதுறேன்னு எப்படி
கோவாலு கிளம்பிட்டே?

(என்னெய சொல்லிக்கிட்டேன் பாசு)

000

Post Comment

சனி, டிசம்பர் 19, 2015

முகநூல் பதிவு- டிசம்பர்

சிற்றிதழ் ஞாபக வரிசை  1 - வயம் கவிதை காலாண்டு இதழ்!
சோமாலியச் சிறுவனின் முகப்பு தாங்கி 8 ரூபாய் விலையில் விருகம்பாக்கத்திலிருந்து ஜனவரி 2001ல் வந்த இதழ். 16 பக்கங்கள் தான்

குட்டி ரேவதியின் மூன்று கவிதைகள். அவற்றில் அந்த முலைகள் கவிதை இந்த சிற்றிதழில் தான் வெளிவந்துள்ளது. சித்ரா-வின் கவிதகள் மூன்று! இவர் தனி தொகுப்பாக கவிதைகளை போட்டாராவென தெரியவில்லை! இருந்தும் கவிதகளுக்கு அழகான பாடுபொருளை தேர்ந்தெடுத்திருக்கிறார். விஸ்வாமித்ரன் அந்த சமயம் சிற்றேடுகளில் அதிகம் எழுதிக்கொண்டிருந்தார். அவர் தான் இதழின் ஆசிரியர் போல! மேலும் சூர்யமுகி என்றொருவர். இவரையும் அதிகம் எனக்கு தெரியாது. அவரின் கவிதை ஒன்று அந்த இதழில் இருந்து....

குழந்தையின் கைகளால் தினமும் நிகழ்ந்து விடுகிறது
எறும்புகளின் மரணம். - கவனம் திரும்ப சொன்னேன்
எறும்பு பாவம் அதன் அம்மாவிடம் செல்லட்டுமென.
உயிர் பயத்துடன் ஒளிந்து கொள்ள
இடம்தேடி அலைந்த பூரானை
ஆவேசமாய் அடித்துக் கொன்றேன்
(அனைவரின் பாதுகாப்புக்கு என்ற பாவனையில்)
குழப்பத்துடன் குழந்தை கேட்டது
ஏன் அதனை அம்மாவிடம் அனுபவில்லை என்று.
குழந்தைகளை குழந்தையாய் அணுக வேண்டியிருக்கிறது

ஒரு பறவையின் சிந்தனையோடு.


000

ஞாபகத்தில் சிற்றிதழ் வரிசை - 2
நாடக வெளி (நாடகத்திற்கு மட்டும்) கே.கே.நகரிலிருந்து இரு மாத இதழாக ரங்கராஜனால் கொண்டு வரப்பட்டது! பின்பாக அவர் வெளி ரங்கராஜன் என்றே அழைக்கப்பட்டார். 94,95,96 வருடங்களில் இதழ் எண் 25,28,34  ஒரு ஒரு இதழ் மட்டும் வைத்துள்ளேன். எனக்கு நாடகங்கள் எழுதுவதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. அவற்றை வாசிக்கவும் இன்று வரை தடுமாறுகிறேன். மற்றவறை நண்பர்களுக்கு கொடுத்து முடித்தாயிற்று. இவைகளை ஏன் பதுக்கினேன் என்று ஒரு சுத்து பார்த்தால் ஏன்? என்றும் விளங்கிற்று! இதழ் எண் 34-ல் ழான் லெனே வின் கடுங்காவல் நாடகத்தை ப்ரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்கள் ரமேஷ் பிரேதன். ஒருமுழு நாடகம் ஒரு இதழ். எண். 28-ல் அவர்களே மொழிபெயர்த்த ழோட்ழ் பெரெக்-க்கின் பெருக்கம். இந்த நாடகம் 70பதுகளில் அரங்கேற்றம் கண்டதாம். இதழ் எண்-25-ல் பாதல் சர்க்காரின்  நாணயம் இல்லாத நாட்டில் என்.ஜம்புநாதன் மொழிபெயர்ப்பில்! ரமேஷ் பிரேதனின் எழுத்துக்கள் மீது அப்போது யாம் கொண்டிருந்த குழப்பமான ஈர்ப்பினால் இவற்றை பதுக்கியிருக்கிறேன் அது மொழிபெயர்ப்பு எனினும்!
கடைசியாக.. இவற்றை இனிமேயானும் படித்து முடித்து விட வேணும்!


Post Comment