வியாழன், ஜனவரி 29, 2015

அன்புக்கு பஞ்சமில்லை -புத்தகப் பார்வை


பாவையர் மலர் என்கிற மாத இதழ் தொடர்ந்து வெற்றிகரமாக வந்து கொண்டிருக்க அதன் ஆசிரியரின் உழைப்பே என்று இன்றென்ன எப்போதும் சொல்லலாம்! இதழுக்கான படைப்பாக்கங்களை தேர்வு செய்வது என்பது சாமானிய காரியமல்ல! ஒரு இலக்கிய இதழ் என்றால் நான்கு கவிதைகள், ரெண்டு சிறுகதை, ஒரு தலையங்கம், ரெண்டு புத்தக விமர்சனம், ஒரு கட்டுரை! அவ்வளவுதான். ஆனால் கமர்சியல் தன்மையோடு மாதம் தவறாமல் படைப்புகளை பெற்று தேர்ந்தெடுத்து அச்சுக்கு அனுப்புவது வரை ஆளை கிடையில் கிடத்தி விடும் வேலை அதுதவிர ஆசிரியர் வேறு தொழிலில் முனைப்புடன் இருப்பவர்.

பாவையர் மலரில் என் சிறுகதைகளும் சிலவும் ஆறு மாத தொடர் ஒன்றும் வந்திருக்கிறது. நண்பர் பாக்கியம் சங்கரின்தேனீர் இடைவேளைஎன்கிற வெற்றி பெற்ற தொடர் பாவையர் மலர் இதழில் வெளிவந்தது. பதிப்புத் துறையிலும் அதன் ஆசிரியர் ம.வான்மதி இறங்கியிருப்பதை நாம் பாராட்டுவோம். அவர் தன் பாவைமதி வெளியீடு என்கிற பதிப்பகத்தின் வழியாக இந்த வருடம் இரண்டு புத்தகங்களை கொண்டு வந்துள்ளார். புத்தகத் தயாரிப்பு என்கிற விசயத்தில்  மிக கவனமாய் அட்டை வடிவமைப்பிலிருந்து எல்லாமே மிகச் சிறப்பாய் வந்திருக்கிறது.

அன்புக்கு பஞ்சமில்லை என்கிற இந்தப்புத்தகம் ஆசிரியர் பாவையர் மலர் இதழில் ரோகிணி என்ற பெயரில் தொடராக சொல்லி வந்த விசயங்கள் தான். தொடராக வருகையிலேயே பலரின் பாராட்டை பெற்றது என்பதை அதன் வாசகர்கள் அறிவார்கள்ஆசிரியர் தான் சந்தித்த, தனக்கு தெரிந்த பெண்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் வாழ்வில் வெற்றி பெற படிக்கல்லாய் இருந்தவர்கள் பற்றியும் மிக நேர்த்தியாகச் சொல்கிறார். சொல்லும் முறையில் பாலகுமாரனின் சாயல் இருந்ததை சில இடங்களில் கவனித்தேன். நன்றாக வழுக்கிச் செல்லும் எழுத்து முறைமை.

புத்தகத்தை வாசித்தோர் சாலையில் பணிக்குச் செல்லும் எந்தப் பெண்ணையும் பார்க்கையில், வாழ்வில் வெற்றிக்கு உழைக்கும் பெண்ணாகவே  பார்த்து வாழ்த்துவர். அப்படி வாழ்வில் போராடும் பெண்களை இந்தப்புத்தகத்தில் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு பெண்ணின் வளர்ச்சிக்கும் தோழியோ, தந்தையோ, பின்னால் இருக்கிறார்கள். சுயமாக வெற்றி பெற்ற பெண்கள் தாங்கள் அடைந்த வெற்றிக்கான உழைப்பை பகிர்ந்து கொள்கிறார்கள்.

காதலனை நம்பி ஏமார்ந்த பெண்ணின் கதையும், கோழைக்கணவனைப் பெற்ற பெண் தன்னை விட வயது குறைந்த மற்றவனை மணந்து நிம்மதியான வாழ்வை வாழும் வாழ்க்கைகளும் நிரம்பியே இருக்கின்றன. போக ஆண்களால் பெண்கள் பாலியல் ரீதியாக துன்பப்படுவதும் அதிலிருந்து தப்பிக்க அவர்கள் செய்த செயலையும் சொல்லி முடிக்கிறார். இந்த உலகில் எதுவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும் நிகழும், நிகழத்தான் செய்யும்அதை நோக்கி போராட பெண்களுக்குள் துணிவும் வேண்டுமென அதை ஊட்டும் புத்தகமாகஅன்புக்கு பஞ்சமில்லைபுத்தகம் வந்திருக்கிறது. ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்!


அன்புக்கு பஞ்சமில்லை -.வான்மதி  விலை -120  பேச : 9380164747
Post Comment

புதன், ஜனவரி 28, 2015

கவிதைக்காரரின் சிறுகதைகள்


ஜுலி யட்சி (சிறுகதைகள்) -நிலாரசிகன்

மொத்தம் பத்து கதைகளோடு வந்திருக்கும் இத்தொகுப்பை அதீதங்களின் மீது ஈர்ப்புள்ளவர்களுக்கும், கனவுலகில் எப்போதும் கிட்டாத வாழ்வைப் பற்றி சிந்திப்பவர்களுக்கும், இறுதியாக நவீன கவிதைகளின் பரிச்சியம் உள்ளவர்களுக்குமான சிறு தொகுப்பாக வந்திருக்கிறது. கனவுலகை பதிவு செய்பவர்களாக இதுவரை கவிஞர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். நிலாரசிகனும் கவிஞர் தான். இத் தொகுப்பில் இருக்கும் கதைகள் அனைத்துமே கதைகள் என்ற வடிவத்தை நோக்கி ஏங்கி ஏங்கிப் பயணிக்கின்றன. நவீனம் எல்லாவற்றையும் கலைத்துப் பார்க்கும், கலைத்துப் போடும் தன்மையை உள்ளடக்கியது தான். கதைகளை எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பழக்கத்திற்கு கடந்த இருபது ஆண்டு காலமாகவே தீவிர வாசகர்கள் வந்து விட்டார்கள். ஆரம்ப நிலை வாசகனும் கூட இவரது கதைகளுக்குள் நுழைந்து வாசித்து இன்புறலாம். அதற்கு கொஞ்சம் கவிதைகளின் பரிச்சியம் இருந்தால் போதுமானது.

கதைகள் எல்லாவற்றிலும் ஜன்னலில் நின்றோ, மொட்டை மாடியில் நின்றோ  மரங்களையும், இயற்கையையும், நிலாவையும், கடலையும், ஏரியையும் உருவங்கள் ரசித்துப் பார்த்தபடியே இருக்கின்றன. வனக்காவலராக வரும் தந்தை வனப்பூக்களின் அரசியின் காலில் உள்ள காயத்திற்கு சிகிச்சை செய்கிறார்அவளுக்கு தர்ஷிணிப்பூ என்று பெயரிட்டு அழைக்கிறார் ஆசிரியர். தர்ஷிணிப்பூ  என்று அவர் இட்ட பெயர் வனத்தில் வாழும் எந்த விலங்கினதுமாகக் கூட இருக்கலாம். இயற்கை விலங்குகளின் காப்பாளர்கள் இருக்கும் உலகில் அவற்றை தேவைக்காகவும் உணவின் ருசிக்காகவும் கொல்லும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது! யானை டாக்டர் என்றொரு சிறந்த சிறுகதையை  ஜெயமோகன் முன்பாக எழுதினார். மீண்டும் ஒருமுறை அதை ஞாபகத்துக்கு கொண்டு வரச் செய்த கதை இது. கத்தியில் குத்தினால் ரத்தம் வரும் வலிக்கும் என்பது மாதிரி உடனே நிகழ்ந்த  கதையிது.

தொகுப்பில் ஏராளமான கதைகள் பெண் பார்வையில் நகருகின்றன. எழுதியது பெண் தானோ என்ற ஐயம் அடிக்கடி வந்து போனது எனக்கு. சந்தேகத்திற்கு ஒருமுறை நிலாரசிகையோ என்று அட்டைப்படத்தை பார்த்தேன். பெண்ணின் மனவுணர்வுகள் மிகநுட்பமாக பதிவாகியிருக்கின்றனகதைகளில் வரும் எல்லாப் பெண்களும்  மனதில் பெரும் பாரங்களாக தங்களின் துக்கங்களை சுமக்கிறார்கள். அவற்றுக்கான தீர்வுகளை அவர்கள் கோரமாக நிகழ்த்தவும் தயங்குவதில்லை. தன்னை கூப்பிட்டுக் கொண்டே இருக்கும் ஆடவனை கொலை செய்யும் யட்சியாக பெண் உருக்கொள்கிறாள். அழகற்ற பெண் அழகான வடிவம் பெற்று காதலிக்க வலிய அவந்து பேசும் ஆண்களை ஒதுக்குபவளாக மாறுகிறாள். சம்பளப்பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு செலவிடுவதில் வாழத்துவங்குகிறாள். தனிமை ஒவ்வொரு பெண்ணையும் சிந்திக்கவும் வைத்து விடுகிறது சில நேரங்களில்.

தொகுப்பில் கேவல் என்ற கதை வாசிப்பவர்கள் எல்லோருக்குமான கதையாக இருக்கிறது. ஆசிரியர் முன்பொரு காலத்தில் எழுதியிருக்கலாமோ என்னவோயாருக்கும் அனுமதி தராத தன் சுயத்தினால் பெயரை மறந்த பெண்ணின் கதை படிப்போரை என்ன தான் இவொ பேரு? என்று அறிந்து கொள்ளும் ஆவலை தூண்டிய கதை பிரியம்வதாவின் பகல்!நகரம் தாறுமாறான ஒரு கலாச்சாரத்தை அங்கு பணிபுரியும் பெண்ணிடத்தில் திணித்திருப்பது பெருநகர சர்ப்பம் கதையில் இயல்பாக வந்திருக்கிறது. சொல்லப்பட்ட வடிவ நேர்த்தியில் வேறு ஒரு தளத்திற்கு நிலாரசிகனை பயணிக்க வைக்கும் கதையிது.

சிறுகதைகளுக்கு என்று வடிவ நேர்த்திகள் பலவுண்டுநவீனத்தின் பாதையில் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதையெல்லாம் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரு விசயத்தையும் சொல்ல முற்படாத கதை கூட நேர்கோட்டில் சிறுகதைக்குண்டான வடிவ நேர்த்தியுடன் சொல்லப்பட்டிருந்தாலே போதும் அது சிறந்த கதை தான்சினிமாவில் சின்னச் சின்ன கட் ஷாட்டுகள் வருவது போல இரண்டு பாராகிராப் தாண்டியதும் பெட்டி வைத்து வேறு இடத்திற்கு தாவுவது வாசிக்க ஏதுவாக அமையவில்லை! இந்த இடத்தில் கவிஞனாக இருந்து சிறுகதைக்கு வந்த பாலைநிலவனின் கதைகளின் சொல்முறை அழகு ஞாபகம் வருகிறது எனக்கு.

நிலாரசிகன் கதைகளில் டைனோசர்களும், தேவதைகளும், கன்னிகளும் தொடர்ந்து வரட்டும். நிதானமாகச் சொல்ல வேண்டிய கதைகளை ஏனோ மிக விரைவாக முடித்து விடுகிறார் சொல்ல அவ்வளவு தான் என்று. எழுத எழுதத் தான் அது கைவரும் என்பது போல நிலாரசிகனின் சிறுகதை முயற்சிகளை வரவேற்போம்!


 விலை : 80 - பொள்ளாச்சி இலக்கிய வட்டம் - பேச : 90955 07547, 98422 75662.

Post Comment

செவ்வாய், ஜனவரி 20, 2015

தாழி (சிறுகதை தொகுப்பு) ஒரு பார்வைதாழி (சிறுகதைகள்)

நந்தன் ஸ்ரீதரன்

எறும்புகளின் வாழ்விடங்கள் யானைகளின் கண்களுக்குத் தெரிவதில்லை. யானைக்கு கால்தடம் என்பது எறும்புகளுக்கு பேரழிவாக இருக்கக்கூடும். தாம் நடந்தது எறும்புகளின் குடியிருப்பு என்பதைக்கூட அறியாமல் யானைகள் பாட்டுக்கு நடந்தபடிதான் இருக்கின்றன.

தேனி மாவட்டக் கதைகள் பல எனக்கு ஏற்கனவே அறிமுகப் பட்டிருந்தாலும் நினைவில் வைத்திருக்கும்படியாக எதுவும் அமையவில்லை என்ற நிலைமையை காலகாலத்துக்கும் மறக்க இயலாத கதையாக செல்லக்கிளியின் தம்பி என்கிற கதை இத்தொகுப்பில் அமைந்து விட்டது!

மொத்தமே ஏழு வாழ்விடங்களில் நந்தனுக்காக நடத்தப்பட்ட நாடகங்கள் போன்று இவைகள் துள்ளியமாக நடத்தப்பட்டிருக்கின்றன! நடந்து முடிந்தும் விட்டிருக்கின்றன. நந்தனுக்கு தன் படைப்பாற்றலை வைத்து சொல்ல இன்னும் ஏராளமான விசயங்கள் அவர் வாழ்வில் நடந்தேறியிருக்கலாம்படைப்பாற்றலைத் தரும் சம்பவங்களை மட்டுமே அவர் தேர்ந்து, மிக நிதானமாக ஏற்கனவே அவர் வாசித்திருந்த பல கதை சொல்லிகளின் தன்மையிலிருந்து விலகியும் விடாமல் சொல்லிவிடும் தன்மையை கைவரப் பெற்றிருக்கிறார்.

எந்தத் தொகுப்பையும் முதல்கதையிலிருந்து வாசிப்பவனல்ல நான்! சிறுகதை தொகுதி என்றால் பின்னிலிருந்து முன்னுக்கு வருபவன். இந்தப்பழக்கம் என்னை எக்காலத்திலும் விடாது போலிருக்கிறது. ஆனாலும் இத்தொகுதியை கையிலெடுக்கையில் ஒரு தலைக் காதல் கதை என்ற தலைப்பு என்னை ஈர்க்கவே முதலில் அங்கு ஓடி விட்டேன். காதல் கதைகள் எக்காலத்திலும் படிக்க சுவாரஸ்யம் குன்றாதவைகள்! காதல் வெற்றி பெறுவது, தோல்வி பெறுவது என்பதெல்லாம் பிரச்சனை அல்ல! நான் ஆழ்ந்த வாசிப்பில் இறங்கிய தருணம்அது ஒரு நிலாக்காலம்ஸ்டெல்லாபுரூஸ் நாவலை வாசித்த தருணம் தான். கூடவேதொட்டால் தொடரும்பி.கே.பி. இந்த இரண்டையும் மீறிய ஒரு படைப்பை இன்று வரை நான் காதலாகி கசிந்துருகி வாசித்ததில்லை! ராம்குமார் மாதிரி நல்ல சட்டை அணிய முடியாத பருவத்தில் சுகந்தாக்களை தேடி அலைந்த காலமது! மீண்டும் திரும்புகிறேன் என் தொட்டிலுக்கு என்பது போல எனது படைப்புகளில் இலக்கியம் என்று என்னவென்ன வீரியங்கள் இருந்ததோ அதற்கான சொல்லுமிடமோ கேட்குமிடமோ இல்லாத மண்ணில் என்ன எழுதுவது? இலக்கியம் வரலாற்றின் பதிவு என்பதெல்லாம் இனி வேலைக்காகாது! இந்த மண்ணில் யாரிடமாவது அனுமதி பெற்றுத்தான் எழுத வேண்டும் என்ற நிலைமை வந்து விடும் அபாயத்தை நெருங்கிக்கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது! காதல் கதைகள் இந்த வன்மங்களுக்குள் எக்காலத்திலும் சிக்காது!

மீண்டும் என் தொட்டிலுக்கு திரும்பும் சமயத்தில் நந்தனின் இந்த காதல் கதை நிஜமாகவேஅருமெசொல்ல வைத்து விட்டது! ஆண் தான் காதலுக்காக பெண்ணின் பின்னால் சுற்றுவான். அது தான் அழகானதும் கூட! இங்கு புஷ்பாக்கா செந்தட்டியின் காதலுக்காக அவனை துரத்துகிறாள். அந்த காதல் உண்மையானது அல்ல என்பதையும் நந்தன் முன்பே நமக்கு சொல்லி விடுகிறார். வகுப்பில் பயில்பவர்களில் பணக்காரன் செந்தட்டி! அவ்வளவுதான். எழுதும் வரிகளை நகையாடலுடன் சொல்வதற்கு நிரம்ப மெனக்கெட வேண்டும் ஒரு எழுத்தன். இவரின் மற்ற கதைகளுடன் ஒப்பிடுகையில் இக்கதையில் நகையாடல் அதிகம் தான்.
திரைப்படங்களில் பார் சீன்கள் வருவது தவிர்க்க இயலாத ஒன்றாகி வருவதும் கண்கூடு! குடி அந்த அளவுக்கு மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. திரையில் குடிகார்ர்களை ஒரு பாரில் காட்டுகையில் அரங்கில் எந்த பெண்களும் கூட முகத்தை சுழிப்பதில்லை! காலமாற்றம் என்பதை விட அதன் வழி பயணப்படுதல் என்பது அரங்கேறி விட்டது! வாடகை கதை அப்படியான இடத்தில் துவங்குகிறது! நாயகனின் குடி பற்றிய அறிமுகங்களை நமக்குத் தந்து விட்டு அவன் தாய் வீட்டு வாடகைக்காக திருடிக்கொண்டு மகனுடன் பேருந்தில் பயணிப்பதில் முடிகிறது! அழுத்தம் மேலும் சேர்ந்திருக்க வேண்டிய கதை தகவலாக முடிகிறது!

பெரு நகரங்களில் வாடகை வீட்டில் தங்கியிருப்பவன் சிரமங்களை தொகுதியில் இரண்டு கதைகள் அழுத்தமாய்ச் சொல்கின்றன. மேலே இருந்து கொட்டும் சொற்கள் கதையை விட தேய்ந்த நிலாக்களின் காலம் மிக நிதானமாகவும் அழுத்தமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது! நந்தன் என்ற படைப்பாளியும் வெற்றி பெற்றிருக்கிறார். கிழங்களின் தாக்குதல்கள் வார்த்தை வடிவிலோ, செயல் வடிவிலோ எல்லா ஊர்களிலும் நடந்தேறிக் கொண்டு தான் இருக்கின்றன. வாழ்க்கையை கிழங்கள் கொண்டாட்டமாய் அமைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு சாணிகரைசல் தலையில் விழுவதெல்லாம் தூசிக்குச் சமானம்! சாவுக்கான அழைப்பை நோக்கி அவர்கள் மகிழ்ச்சியாக பயணிக்க தேர்ந்தெடுக்கும் வழி தான் பலருக்கும் சிரமங்களை தருகின்றன.

செளந்தர்யா அப்பா வந்து கேட்டதும், பிரதர் வந்து கேட்டது மாதிரி இருந்துச்சு சார்!’ மனதின் பலவீனங்கள் வாழ்க்கையை பலவீனமாக்கும் முதல் கதை ஒரு போக்கு என்றால் இது வேறு மாதிரி! முதல் கதை எனக்கு ஏற்புடையது தான் என்றாலும் புதிதாக வாசிக்கும் சிலர் புத்திமதிகளை நந்தனுக்கு வழங்கலாம்! அதை அவர் வழக்கமான புன்னகையோடு கடந்தும் செல்வார்!

மொத்தத்தில் ஒரு நிம்மதியான வாசிப்பு அனுபவத்தை தந்த தொகுப்பாக நந்தன் ஸ்ரீதரனின் இந்த முதல் தொகுப்பை வரவேற்கலாம்!
(இந்தியா இங்கிலாந்து ஒரு நாள் மேட்சில் கிடந்திருப்பேன்.. நல்லவேளை 9 மணிக்கு அண்ணன் தவான் துச்சமாக இங்கிலாந்து தடுப்பாளர்களை பார்த்த பார்வையின் போதே மின்சாரம் போய்விட்டது)


-நிலமிசை வெளியீடு - பேச : 99626 03151 – விலை -99

Post Comment