வா.மு. கோமு என்கிற பெயரில் எழுதிவரும் வா.மு. கோமகன், ஈரோடு மாவட்டம்,
வாய்ப்பாடி என்னும் சின்னஞ்சிறு கிராமத்தைச்
சேர்ந்தவர். கடந்த பதினைந்து
ஆண்டுகளாகப் பல்வேறு சிற்றிதழ்களில் இருநூறுக்கும்
மேற்பட்ட சிறுகதைகளை
எழுதியிருக்கும் இவர், மண்ணின் மொழியுடன் நவீன மொழியைக் கலக்கிறவர்.
சர்ச்சைக்குரிய எழுத்தாளராகவும் பார்க்கப்பட்டுவருகிறார் வா.மு. கோமு.
வா.மு. கோமு இதுவரை "கள்ளி', "சாந்தாமணியும் இன்னபிற
காதல் கதைகளும்', "எட்றா
வண்டியெ', "மங்கலத்து
தேவதைகள்', "57 ஸ்னேகிதிகள்
சினேகித்த புதினம்', "மரப்பல்லி',
"நாயுருவி', "சயனம்', "ரெண்டாவது
டேபிளுக்கு காரப்பொரி', "சகுந்தலா
வந்தாள்'
என்கிற பத்து நாவல்களும்.. "மண்பூதம்', "சேகுவேரா
வந்திருந்தார்', "தவளைகள்
குதிக்கும்
வயிறு', "பிலோமி
டீச்சர்', "என்னை
மரணத்தின் வருகை என்கிறார்கள்', "ஒரு பிற்பகல்
மரணம்' என்கிற சிறுகதை தொகுப்புகளும் தமிழுக்குக்
கொடுத்திருக்கிறார். "சொல்லக்
கூசும் கவிதை' என்கிற கவிதைத் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது. அவரை "இனிய
உதய'த்திற்காக நாம் சந்தித்தபோது...
சமீபத்தில் உங்கள் சிறுகதைகளை அதிகம்
பார்க்கமுடியவில்லையே! ஏன்?
கடந்த வருடம் முழுமையாக நான் சிறுகதைகள் என்று நான்கு கதைகள்
மட்டுமே
எழுதினேன். அவை பத்திரிகையில் வெளிவந்தன. அதற்குக் காரணம் நான்,
நாவல் எழுதுவதில் கவனம் செலுத்தியமையால்தான்.
சென்றவருடம் ஆகஸ்டு ஈரோடு
புத்தகத் திருவிழாவுக்கு என் ஐந்து புத்தகங்கள்
பதிப்பகங்கள் வாயிலாக
வெளிவந்தன. அவற்றில் மூன்று புத்தகங்கள் நாவல்கள். சொல்ல
வேண்டிய
விசயங்களை விரிவாய்ப் பேச நாவல் என்கிற களம் தேவையாய் இருக்கிறது.
எழுத்தாளர்களின் மனநிலை மாறிக் கொண்டேதான் இருக்கும். நாவல்
என்கிற
வடிவம் திடீரென சலிப்பை உருவாக்குகையில் சிறுகதை, கவிதை என்கிற மற்ற
வடிவங்களுக்குத்
தாவிவிடுவார்கள். என் தற்போதைய மனநிலை யில் மீண்டும்
சிறுகதை எழுதுவதில்
ஆர்வம்வந்து அதில் இறங்கிவிட்டேன். எழுத்தை நான்
காதலித்துக்கொண்டேயிருப்பதால்
இந்த மாற்றங்கள் நடந்துகொண்டேயிருக்கும். வடிவ
மாற்றங்கள் ஒரு பிரச்சினையல்ல!
நீங்கள் எழுதத்தொடங்கியது எப்போது? உங்கள் பின்னணி பற்றிக் கூறுங்கள்?
85-லேயே
நான் எழுதிப் பழக ஆரம்பித்து விட்டேன். எழுதிய முதல் சிறுகதை இன்றும்
ஞாபகம்
இருக்கிறது. கடைவீதியில் கூரான கத்தியை பதம் பார்த்து வாங்கிச் செல்வான்
ஒருவன்.
படிப்போருக்கு வீடு சென்றவுடன் மனைவியைக் கொன்றுவிடுவானோ என்று
தோன்றும்விதமாக
நகர்த்திச் சென்று, அவன்
வீடு சென்று பொம்மை ஒன்றைக்
குத்திக்கிழித்து வீசுவான். குழந்தை ஆசையில் மனைவி
பொம்மை வைத்துக்கொண்டு
முத்தம் கொடுத்த படியே இருப்பது இவனுக்குப் பிடிக்காததால்!
நண்பர்கள் அருமை
என்றார்கள்.
அப்பா முத்துப்பொருநன் கவிஞர். ஏராளமான புத்தகங்கள் அவர்
சேமிப்பில் இருந்தன.
டேபிள்மீது கிடக்கும் "பிரக்ஞை', "கசடதபற', "ஃ' இதழ்களைப் புரட்ட ஆரம்பித்தேன்- 88-ல்.
ஒன்றும் புரியாது.
கதைகள் தென்பட்டால் வாசித்துவிடுவேன். கல்லூரி சென்ற சமயம்
"ஆனந்த விகடன்' வாசகன். பட்டுக்கோட்டை பிரபாகரின்
"தொட்டால்
தொடரும்' தொடரைக் கிழித்து பைண்டு
செய்தேன். எனது முதலும் கடைசியுமான பைண்டிங் அது.
பதிப்புத்துறையிலும் கால்வைத்திருக்கும்
நீங்கள் ’நடுகல்’
என்கிற பதிப்பகத்தை துவங்கி புத்தகங்கள்
கொண்டுவருகிறீர்கள்.
எழுத்தாளர்கள் ஏன் பதிப்புத்
துறையை தேர்ந்தெடுக்கிறார்கள்?
பதிப்புத்துறையில்
எழுத்தாளர்கள் கால் வைப்பது
ஆரோக்கியமான விசயம்தான். எழுத்தாளர்களுக்கான
வாசகர்கள்
அதிகரிக்கவும், புத்தக விற்பனையை
மையப்படுத்தியுமே
பதிப்பகங் கள் இயங்குகின்றன.
எழுத்தாளர்கள் எழுதும் புத்தகங்களுக்கான ராயல்டியின்
சதவிகித தொகை குறைவாக இருக்கிறது. தவிர புத்தகங்கள் எந்த அளவு
விற்பனையாகின்றன? என்ற தகவல் எதுவும் எழுத்தாளனுக்கு தெரியவருவதும்
இல்லை. வேறு
தொழிலில் இருக்கும் எழுத்தாளர்கள் ஒரு புத்த கத்தை எழுதினோமா..
கொடுத்தோமா..
வந்துச்சா.. சரிவிடு என்ற மனநிலையில் இருக்கிறார்கள். முழுநேர
எழுத்தாளர்கள்
அப்படி இருக்க வாய்ப் பில்லை. தமிழில் இலக்கியம் என்ற
வகைமை ஐநூறு பிரதிகளில்தான்
நிற்கிறது. இதை அதிகப்படுத்து வதற்கான
வழிவகைகளை முயற்சித்து தோற்றும்
போய்விட்டார்கள்.
கால வளர்ச்சியில் புத்தகங்களை
அச்சிடுவதற்கான தொகையும் குறைந்திருக்கிறது
. ஆன்லைனில் புத்தக விற்பனை
வந்துவிட்டது. இந்த வளர்ச்சியை எழுத்தாளர்கள்
முடிந்தமட்டிலும் பயன்படுத்திக்
கொள்ள முயற்சிப்பது தவறில்லை. ‘நடுகல்’ பதிப்பக
வாயிலாக தஞ்சை ப்ரகாஷின் "கள்ளம்'’ கொண்டு வந்திருக்கிறோம். தவிர திறன்வாய்ந்த
இளம்
எழுத்தாளர்களுக்கான களமாக ‘நடுகல்’ பதிப்பகம் செயல்படும்.
இலக்கிய உலகில் சமீபத்தில் பெருமாள்
முருகனின்‘"மாதொருபாகன்'’ நாவல்மீது
பலத்த சர்ச்சை எழுந்திருக்கிறதே?
இது கொங்கு மண். இங்கு ஆர்.
சண்முகசுந்தரம் என்கிற படைப்பாளி மட்டும் முன்பு
இலக்கிய உலகில் பேசப்பட்ட
எழுத்தாளர். அடுத்ததாக சி.ஆர். ரவீந்திரன், சூரியகாந்தன்
போன்ற படைப் பாளிகள் மண்ணின் எழுத்துக்கு சொந்தக்காரர்களாக
இருந்தார்கள்.
இவர்களைத் தொடர்ந்து இந்த மண்ணில் இலக்கிய உலகில் பேசப்பட்ட
எழுத்தாளர்
பெருமாள்முருகன். இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் தொடர்ந்து இயங்கி
வந்தவர்.
திருச்செங்கோடு தொடர்பான கள
ஆய்வு ‘"மாதொருபாகன்'’ என்கிறார். கள ஆய்வுகளை
கட்டுரை வடிவிலேதான் நாம் பார்த்துப்
படித்திருக்கிறோம். நாவல் வடிவில் கதையாகச்
சொல்கிறார். இந்த மண் கடவுள்
நம்பிக்கையின்மீது தீராத பற்றுக்கொண்டது. ஒவ்வொரு
குலத்திற்கும் ஒவ்வொரு
குலதெய்வம். கோவில் அமைக்க வசதியில்லாத குலம்கூட
குறிப்பிட்ட நாளில் ஒன்றுகூடி
மரத்தடியில் அமர்ந்திருக்கும் சாமிக்கு பூஜை, பொங்கல்,
படையல் என்று
இட்டுப் போவார்கள். கள ஆய்வுகள் யாரையும் காயப் படுத்தக்கூடாது
தான்.
"எழுத்தாளன் செத்துவிட்டான், அவன் படைப்புகளை திரும்பப் பெற்றுக் கொள்கிறான்!'
என்று அவர் அறிவித்துவிட்டு ஒதுங்கிச்சென்றது பெரும் தவறு! அதை
முகநூலில் அவர்
போட்டு விட்டுச் சென்றதுதான், மற்றைய படைப்பாளி களுக்கு ‘என்ன இது? என்ன
நடக்கிறது?’ என்ற கேள்விகளை
உருவாக்கி அவருக்கு ஆதரவான கரங்கள் கூடின.
திருச்செங்கோடு அவர் சொந்த ஊர்.
உள்ளூரில் மன்னிப்பு கேட்டுக்கொண்டு எழுத்தே
வேண்டாம் என்று முடிவுசெய்ததும், பிழைப்பே போதும் என்று முடிவுசெய்ததும் அவரது
சொந்த விசயமாகி
இருக்கும்.
பெருமாள்முருகன் இப்பிரச்சினைகள் முடிந்து
எழுதவந்தாலும் அது அவரது
எழுத்தாக இனி இருக்காதுதான். இப்பிரச்சினையால் நான் சொல்ல
வருவது திரும்பத்
திரும்ப ஒன்றேதான். இனி இந்த மண்ணில் இலக்கியத்தில் ஒரு
படைப்பாளி
காத்திரமாய் வெளிப்பட வாய்ப்பே இல்லை! அது போக முன்பே சொன்னாற்போல
முன்னூறு, நானூறு பிரதிகள் விற்கும் இலக்கியச் சூழலில் ஆய்வு நாவல்கள்
என்றால் மட்டும் நூறு பிரதிகள் அதிகம் விற்றுத் தீர்ந்துவிடுமா? கலைகளுக்கான
ஆய்வு மையம் ஆவணங்களை சேகரித்து எதை இந்த
காலத்துக்குச்
சொல்லப்போகிறது?
பிரச்சினைகள் நடப்பதும்
நல்லதுதான். வேறு கதவுகளும் திறக்கின்றன. பச்சோந்திகள்
இடத்திற்கு தக்கதாய்
வர்ணத்தை மாற்றிக்கொள்ள வல்லவை. இடம் அப்படியாய்
இருக்கையில் வர்ணங்களை
எப்படியேனும் பூசி வாழ்வதும்கூட வாழ்க்கைதான். போக
கோழைத்தனம் என்பது
எல்லாருக்கும் அமைந்துவிடுவதும் இல்லை! ஒருசிலர்
வரலாற்றில் மறக்கப்படுவதும், மறக்கடிக்கப்படுவதும் நடப்பது ஆடிக்கு ஒருமுறையும்
அமாவாசைக்கு
ஒருமுறையும் தான்.
சினிமா துறை எப்படி இருக்கிறது? நீங்கள் ஏன் அத்துறைக்கு வர
முயற்சிக்கவில்லை?
சிறுநகரங்களில் இன்று
தியேட்டர்கள் பொருள்களைக் கிடத்தும் குடோன்களாகவும்,
காம்ப்ளெக்ஸ்களாகவும் மாறிவிட்டன. முடிந்தது சினிமா என்றார்கள்.
அப்படியெல்லாம்
இல்லை என்பதுபோல அதன் வளர்ச்சி மிகப் பிரம்மாண்டமாய் இருக்கிறது.
குறுநகரில்
தொழில் ரீதியில் வெற்றி பெற்றவர்கள்கூட தயாரிப்பாளர் களாய்
மாறிவருகிறார்கள்.
எத்தனையோ சிரமப்பட்டு தவித்த உதவி இயக்குனர்கள் பலருக்கும்
நம்பிக்கை
வெளிச்சம் கிட்டியிருக்கிறது.
குறைந்த பட்ஜெட்டில் வரும்
பொழுதுபோக்குப் படங்கள் பார்வையாளர்களை
மகிழ்ச்சிப்படுத்து வதில்
தோற்றுப்போவதேயில்லை. ஒரு படம் செய்வது குதிரைக்
கொம்பாய் இருந்த காலம் மலையேறி விட்டது.
இயக்குனர்கள் ஒரு வாரத்திற்கு எல்லா
ஊர்களிலும் தியேட்டர்கள் கிடைத்தால் போதும்
என்ற பார்வைக்கு வந்துவிட்டார்கள்.
திரைத்துறையில் எழுத்தாளர்களுக்கான பணி, வசனப் பகுதி மட்டும்தான். அதை
சிறப்பாக செய்து எழுத்தாளர்கள்
ஜெயமோகன், நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன்
பெயரும் அடைந்திருக்கிறார்கள். நானும் உள்ளே
வந்துவிட்டேன். ஆவலுடன் காத்தும்
இருக்கிறேன் மற்ற இயக்குனர்களிடமிருந்து
வாய்ப்பையும்.
இலக்கியச் சூழல் ஆரோக்கியமாக உள்ளதா?
சிற்றிதழ்கள் ஒரு காலத்தில்
இலக்கிய மேம்பாட்டிற்காக அயராது பணியாற்றின.
அவற்றின் பணியை இன்றும் வாசகர்கள்
பதிவுசெய்தபடிதான் இருக்கிறார்கள்.
தஞ்சாவூரிலிருந்து இன்றும் வந்துகொண்டி
ருக்கும் "சௌந்தர சுகன்' சிற்றிதழின்
பணி
என்னை மலைக்கவைக்கிறது. அது தனி மனிதனின் இலக்கிய தாகம். சுகன் கண்டறிந்த
படைப்பாளி நான். அவர் தன் இதழில் எனக்கு சுதந்திரத்தைக் கொடுத்தார். அந்த
சுதந்திரத்தை இன்று வரை என் எழுத்தில் பயன்படுத்துகிறேன். அந்த இதழ்
இல்லையெனில்
வா.மு. கோமு இன்று தொழிலாளியாகவோ, வியாபாரியாகவோ
காணாமல் போயிருப்பான்.
இன்று முகநூலின் வருகையால்
சிற்றிதழ் களின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டன.
எழுதப்படும் கவிதைகள் உடனடியாக
முகநூலில் அரங்கேறுகின்றன. விருப்பங்களும்
கருத்துகளும் உடனுக்குடன் பார்க்கையில்
கவிஞன் அப்பாடா! என்று மனநிம்மதியடைந்து
விடுகிறான்.
அடுத்து என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? செய்யப் போகும் பணிகள் என்ன?
ஐம்பது சிறுகதைகள் இந்த வருடம்
என்னால் எழுதி முடிக்கப்பட வேண்டும் என்பதுஒரு
கணக்கு! அது நிச்சயம்
நடந்தேறிவிடும். முடியாதவற்றைப் பற்றி நான் பேசுவதேயில்லை
."நடுகல்' வெளியீடுகளை சிறப்பான வகையில் சந்தைப் படுத்துவது பற்றி
யோசித்துச்
செயல்பட வேண்டும்.
படைப்பாளிகளின் சண்டைகள், சச்சரவுகள் பொதுவெளிக்கு வருகையில் என்ன
மாதிரி யோசிக்கிறீர்கள்?
படைப்பாளிகளுக்குள் இதுகாலம்
வரை கருத்துரீதியான சண்டைகள், ஆளைக்
கண்டால்
ஒதுங்கிச் சென்றுவிடுவது என்றெல்லாம் நடந்து வந்தன. முகநூல் வந்தபிறகு
எல்லாரும் எழுத்தாளர்களோ என்ற ஐயம்வேறு எழுத்தாளர்களுக்கு வந்துவிட்டது.
நினைத்த
மாத்திரத்தில் முகநூலில் சண்டையை ஆரம்பித்து விடுகிறார்கள்.
எழுத்தாளர்கள் என்றால்
ஏதோ கொம்பு முளைத்தவர்கள் என்ற பிம்பமெல்லாம் உடைந்து
நொறுங்கியிருக்கிறது.
எழுத்தாளன் தன்னை நிரூபித்துக் கொள்ள பெரும் படைப்புகளை
உருவாக்க வேண்டிய
சூழலுக்குத் தள்ளப் பட்டிருக்கிறான்.
படைப்பாளிகளின் சண்டைகள்
மதுக்கூடங்களில் துவங்கிவிடுகிறது! இது முகநூல்
வழியாக வெளியேவருகிறது. இது எந்தவிதத்திலும் ஆரோக்கியமான நிகழ்வல்ல.
யானை தன் தலையிலேயே மண்ணை வாரித்
தூற்றிக்கொள்ளுமாம். அந்தப்
பழமொழிதான் நியாபகத்திற்கு வருகிறது. வாசகர்கள்
எழுத்தாளர்களை ரொம்பவே
மதிக்கிறார்கள். அந்த மதிப்பை கெடுத்துக்கொள்ளும் வகையில்
படைப்பாளர்கள்
நடந்துகொள்ளலாமா? இதுதான் என்
ஆதங்கம். கதை, நாவல்களில் வருகிற கேரக்டர்கள்
சரியில்லை
என்றால் கொதிக்கும் சமூகம், இப்படிப்பட்ட
எழுத்தாளர்களின் கேரக்டர்களைப்
பார்த்தால், கூர்ந்து கவனித்தால் என்ன ஆகும்? ஏன் இதைச் சொல்கிறேன் என்றால்
வாசகர்கள் இன்று எழுத்தாளர்களைவிட
ஒரு படி மேலே சிந்திக்கிற வர்களாக
இருக்கிறார்கள்.
-நன்றி : இனிய உதயம் மாத இதழ் 2015 பிப்ரவரி
0000