நடுகல் நினைவலைகள் -1எமது நடுகல் முதல் இதழ் ஆவணி 91ல் திருப்பூரில் இருந்து வெளிவந்தது. சர்ரியலிசம் சாம்பார்ரசம் கதைகள் எல்லாம் அதில் எழுதிப் பழகினேன். நண்பர்களின் ஒத்துழைப்பு இந்த இதழுக்கு இருந்தது. தமிழகம் முழுக்க படிக்கத் தெரிந்தவர்களுக்கு சும்மா  போஸ்ட் செய்தோம். முதல் இதழ் மூன்று ரூபாய். கோவை விஜயாவில் பத்து புத்தகம் கிடத்தினோம். அடுத்த மாத புத்தகத்தை கொண்டு சென்ற போது வேலாயுதம் காசுக்கு புத்தகம் எடுத்துக்கங்க! என்று அன்போடு சொல்லி விட்டார்.

முதல் ஆறு இதழ்கள் இத்தன பைசா என்று விலை போட்டிருந்தோம். பொறவு அது எதுக்கு சும்மா போடணும்னு விட்டுட்டோம். யூமா வாசுகி ஒருமுறை திருப்பூரில் அவர் நண்பரின் ஸ்கிரீன் ப்ரிண்டிங்கில் தங்கியிருக்கையில் குதிரை வீரன் பயணம் கொண்டு வந்தார். அவரை வைத்து ஒரு நடுகல் இதழ் அட்டை வடிவமைப்பு செய்தோம். அதற்கும் முன்பாக லாரி டியூப் வெட்டி அட்டை ஓட்டினவன் நான். அவைநாயகன் கடிதம் ஒன்றை சில்வர் இங்க்கில் கறுப்புத் தாளில் அச்சடித்துப் பார்த்தேன்.

பத்து இதழ்களுக்கும் மேலாக வந்த இதழ்கள் அனைத்திலும் தஞ்சாவூர் படைப்பாளிகள் களம் இறங்கி விட்டார்கள். அனைவரும் கவிஞர்கள். தஞ்சை ப்ரகாஷ் சந்தோச மிகுதியில் கவிதைக் கூட்டத்தையே அனுப்பி வைத்தார். ஒரே முறை நட்சத்திரன் நடுகல் வளர்ச்சி நிதி என்று நூறு ரூபாயை என் பாக்கெட்டில் தள்ளினான். அதை நான் பமீலா ஒயின்ஸில் ஓரமாய் நின்று காலி செய்தது பெருந்துறையில்! 23 இதழ்கள் வந்த இந்த சிற்றிதழ் பல வருடங்கள் கூடித்தான் அந்த எண்ணிக்கையை தொட்டது. இதழின் அளவுகள் யாரும் பைண்டு செய்து பாதுகாக்க முடியா வண்ணம் பல வடிவங்களில் வர நான் அச்சக தொழிலாளியாக இருந்ததே காரணம்!

தந்தையார் இறந்த பிறகு அவரின் கவிதைகளோடு நினைவஞ்சலி இதழாக வந்து தன் மூச்சை நிறுத்திக் கொண்ட இந்த சிற்றிதழ் தற்போது பதிப்பகமாக வளர்ந்து நிற்க நண்பர்களின் ஆதரவே காரணம்! நினைத்துப் பார்த்தல் என்பது எப்போதுமே சுகமானது தான்!

000

கருத்துகள் இல்லை: