இறக்கை இதழ் நான் நடத்திய
மூன்றாவது சிற்றிதழ்! நாற்பது இதழ்கள் வரை ஜெராக்ஸ் பிரதியாக 100 பிரதிகள் தமிழகம் முழுக்க
இலவச பிரதியாக அனுப்பிக் கொண்டிருந்தேன். அது எழுத்தோடும் எழுத்தாளர்களோடும் தொடர்பு இருக்க
வேண்டும் என்பதற்காக மட்டுமே! சில சிற்றிதழ்கள் பரிமாற்றுப்பிரதிகளாக வீடு வந்து
கொண்டிருந்தன. சமயத்தில்
ஹரிகிருஷ்ணன் வீடு தேடி வந்த போது அதை அச்சில் கொண்டு வரும் யோசனையை சொல்கையில் நான்
மறுக்கவில்லை! உங்களோடு
என்கிற தலையங்கம் வாசகர்கள் மத்தியில் மிகவும் பேசப்பட்டது! அதற்கு காரணம் என் மொழி! உங்களோடு முன்னால் அமர்ந்து
பேசிக்கொண்டிருப்பதான தொனி அதில் இயல்பாக இருந்தது. நன்றாக ஒரு இதழ் அனைவராலும் பேசப்படும் போது செத்து
விடுவது நல்லது தான்.
53
இதழ்கள் வந்த இறக்கை (எங்கு வேண்டுமானாலும்
பறக்கும்) தன்
புதை குழியை தேடிக் கொண்டது. பின்பாக எதை நோக்கி இப்படி சிற்றிதழ்களை நான் சிரமப்பட்டு
செய்து கொண்டிருந்தேனோ அதை நோக்கி படியேறி விட்டேன்! இனி சிற்றிதழ் நடத்தும் எண்ணமும் என்னிடம் இல்லை! ஒன்று இப்போது தெரிகிறது! என்னை யாரும் சிறப்பாக
எழுதுகிறான் என்று என் முந்தைய எழுத்தாளர் யாரும் குறிப்பிடவேயில்லை! எனக்கான சரியான விமர்சனத்தை
கூட யாரும் முன் வைத்ததுமில்லை! அது பற்றியெல்லாம் கவலைப்பட்டதுமில்லை! எனக்கான போராட்டத்திலேயே
வந்தவன் நான். எனக்கும்
ஹரிக்கும் பயங்கர சண்டை. அதனால் தான் ஹரி மணல்வீடு என்று தனிப் பத்திரிக்கை
ஆரம்பித்து ஓடி விட்டான், என்றெல்லாம் பேசினார்கள். ஒரே தமாஸ் தான்!
பாதைகளை அடுத்தவர்க்காக
திறந்து விடுதல் என்பதை சண்டை என்று பேசி இன்புற்றார்கள்! நான் ஆசைப்பட்டு என்
மண்பூதம் சிறுகதை தொகுதியை என் எழுத்தாள முன்னோடிகளுக்கு அனுப்பி எங்காச்சும் எழுதுவார்கள்
என்று ஆசைப்பட்டு காத்திருந்தேன். அவர்கள் மூச்சு விடாமல் ஒரு வருடம் கழித்து என்னிடம்
பேசுகையில் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டீட்டு இருக்கேன் கோமு! அதுல கட்டுரை கொடுக்க
வேண்டி இருக்குது! இதுல
சிறுகதை ஒன்னு கொடுக்க வேண்டி இருக்குது...! பிரதிகளை நான் நண்பர்களுக்கு கொடுக்க ஆரம்பித்து விட்டேன்! இனி நான் தான் நண்பர்களின்
புத்தகங்களுக்கு எனக்கு தெரிந்தவரையில் எழுத வேண்டும் என்ற நிலைக்கும் வந்து விட்டேன்! ஒரு தனி மனித போராட்டம் நினைத்துப் பார்க்கையில் சந்தோசம்
தான்!
000
1 கருத்து:
உண்மைதான்... நமக்கான இடத்தை நோக்கி ஓடும் போது இப்படித்தான்... இடத்தை அடைந்து விட்டீர்கள் அல்லவா... வாழத்துக்கள்.
கருத்துரையிடுக