கல்குதிரை இதழ் வழி!



கல்குதிரை முதல் இதழை என் தந்தையார் அமரர் முத்துப்பொருணனுக்கு பத்துப் பிரதிகள் அனுப்பி வைத்திருந்தார் கோணங்கி. ஆண்டு 89. தனியிதழ் விலை ஐந்து ரூபாய் தான். பிரதிகள் சிலவற்றை விற்றுத்தருமாறு கடிதம் இருந்தது. என் தந்தையார் அவற்றை யாரிடம் கொடுத்தார்? கோணங்கிக்கு பிரதிகளுக்கான பணம் அனுபினாரா? இவைபற்றி தெரியாது. பின்னர் கல்குதிரை இரண்டாவது இதழ் ஒரு பிரதி வந்து சேர்ந்தது. எனக்கு ரிசல்ட் தெரிந்து விட்டது. மூன்றாவது இதழ் நாட்டுப்பூக்கள் சுயம்புலிங்கத்தின் படைப்புகளை தாங்கி வந்தது. பின்னதாக கல்குதிரை வீடு வருவது நின்று போகவே தந்தையார் கோவை விஜயாவில் நுழைந்து  எண் வரிசைப்படி சேகரம் செய்தார். ஆப்பிரிக சிறப்பிதழில் இருந்து நான் அதை வாங்க ஆரம்பித்து விட்டேன்.

கல்குதிரை 10 தற்கால உலகச் சிறுகதைகள் என்று 92-ல் 50 ரூபாய் விலையில் வெளியிட்டது. அச்சமயத்தில் என் தினக்கூலியே 20 ரூபாயாக இருந்திருக்க வேண்டும்ஆசை யாரை விட்டது? 28 உலகக் கதைகள். எல்லாப் பெயர்களும் எனக்கு புதிதாக இருந்தது. எல்லா நாட்டு கதைகளும் கிட்டத்தட்ட இடம்பெற்றிருந்தன அதில்மயானத் தங்கம்- அன்னாபாவ் சாத்தே மராட்டிய தலித் எழுத்தாளர்களில் முக்கியமானவர். எஸ்.வி.ராஜதுரை, .கீதா மொழிபெயர்ப்பில் வந்த சிறுகதையை மிரட்சியோடு படித்த ஞாபகம்! இன்னமும் பல கதைகள் படிக்காமல் இருப்பது இப்போது தான் தெரிகிறது. அதற்குள் காப்ரியேல் கார்சியா மார்க்குவஸ் சிறப்பிதழ் என்று கல்குதிரை 12 வேறு. ஆண்டு 1995. விலை 100.  போங்கப்பா நீங்களும் உங்க இலக்கியமும் என்று முடிவெடுத்த பிறகு என் தந்தையார் எங்கிருந்தோ கவ்வி வந்து விட்டார். ஒரு நூற்றாண்டு கால தனிமை வாசம்  நாவலில் சிறுபகுதியும் அவரின் படைப்புகள் பலவும் வந்திருந்தது. தெரிந்தோ தெரியாமலோ என் படைப்பு எழுச்சிக்கு உறுதுணையாய் இருந்த கல்குதிரை இதழ்களை நான் எடைக்கு போடாமல் பைண்டு செய்து வைத்திருக்கிறேன்.

சமீபத்திய கல்குதிரை இதழ்கள்  எல்லாமே மிரட்டல்!






000
000


4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கல்குதிரை இதழ்கள் கடைசியாக வந்த(சிறுகதை சிறப்பிதழ்) சென்னை கே.கே.நகர் டிஸ்கவரி நூல் அங்காடியில் கிடைத்தது. நான் அறிமுகம்; அதுவே எனக்கு. பத்து ஆண்டுகள் முன்பு ஆனந்த விகடனில் கேள்விபட்டது, சில ஆண்டுகளாக தேடினேன், நேசமித்திரன் வலையில் பிடித்து குறிப்போடு அங்கே பெற்றேன், பெரிய அளவில், சுவாரஸ்யமான பக்கங்களோடு, புதையல் கிடைத்தமாதிரி,பாதுகாக்க தோன்றுகிறது, வாசிக்க ஆவலூட்டுகிறது, தமிழ்தான் என்றாலும் புரிவேனா என்கிறது, புது மொழி லாவகம்,மெனக்கெடல், நா.முருகேச பாண்டியன் சட்டென சொல்லிவிட்ட 'வாசக மறுப்பு பிரதி' என்ற வாசகத்தை மறுக்கிறேன் நான். என்ன சொல்கிறீர்கள்?

சந்திரசேகர்.ஜே.கே சொன்னது…

வெகு காலத்திற்கு முன்பு மேதின கவிதை ஒன்றை கல்குதிரையில் படித்த நினைவு.யாருக்கேனும் அது நினைவில் இருப்பின் பதிவு டுமாறு கோருகிறேன்.

அம்பிகாபதி சொன்னது…

கல்குதிரை பழைய இதழ்கள் எங்கேனும் கிடைக்குமா? 1 முதல் 20 இதழ்கள்....

துரை. அறிவழகன் சொன்னது…

கல்குதிரை இதழுடன் தங்கள் பயணம் குறித்த பதிவு சிறப்பு. தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழ் குறித்த தகவல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.