வரலாற்றின் கதைகள்!முட்டையில இருந்து கோழி வந்துச்சா? கோழியில இருந்து முட்டை வந்துச்சா? மனுசனைக்கூட குரங்குல இருந்து வந்துட்டதா சொல்லிட்டாங்க! மேலே உள்ள கோமாளித்தனக் கேள்வியை சினிமா கூட தத்தெடுத்துக் கொண்டது முன்பாக! இந்த புத்தகத்தின் மூல ஆசிரியருக்கு சிறுவயது முதல்க் கொண்டே கேள்விகள் தான். பண்டைய மனிதர்களின் வாழ்க்கை குறித்து ஏகப்பட்ட கற்பனைகள். கேள்விகளுக்கான விடைகளை ஆசிரியரிடமோ, ஆய்வாளர்களிடமோ  கிடைத்து விடும். இந்தப்புத்தகம் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை என்று முன்பாகவே குறிப்பிட்டு விடுகிறார் ஆசிரியர். போக, கதை மாந்தர்கள் கற்பனை தான் எனினும் அறிவியல் பூர்வ வரலாற்று உண்மையோடு விடைகாண முயன்றதாகவும் முகப்பில் சொல்கிறார் த.வெ.பத்மா.

தமிழில் ஜே.ஷாஜஹான் மொழிபெயர்த்திருக்கிறார். சிறுவர் முதல் பெரியோர் வரை மிக எளிதாக வாசிக்கும்படியான சரளமான மொழிபெயர்ப்பு இது. புத்தகத்தில் ஒவ்வொரு கதைகளையும் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. மூலநூலில் ஓவியங்கள் இருந்தனவா என்பது தெரியவில்லை. ஓவியங்கள் பிஞ்சு விரல்களால் வரையப்பட்டன போன்ற அமைவில் உள்ளன. அது அழகும் கூட! (ஓவியங்கள் - பி.சரவணன் )கி.மு-வில் இரண்டு கதைகள் நடப்பதாகவும், கி.பி-யில் எட்டு வித கதைகள் நடப்பதாகவும் ஒரு முழுத் தொகுதி அமைந்திருகிறது.

மனிதன் நாயை எப்போது ஏன் எப்படி தன்னோடு இணைத்துக் கொண்டான்? நாய் ஏன் மனிதனோடு நட்பு பாராட்டுகிறது? என்ற கேள்விக்கு பதிலாக முதலாக வேட்டையாடச் செல்லும் வாலிபன்  வனத்தில் சந்திக்கும் நிகழ்வுகள் மூலம் பதில் சொல்கிறார். தவிர கதை சொல்லும் முன்பாக முன்னோர்கள் வேட்டையாடிகளாகத்தான் திரிந்து பின் குழுக்களாக வாழத் துவங்கினர் என்பதை அனுமானிக்கத்தான் முடிகிறதாகவும். குழுவில் முழு மனிதனாக தன்னை நிரூபிக்க இளைஞர்கள் சாகசம் செய்ய வேண்டியிருந்தது. அத்தகைய முயற்சியில் சென்ற இளைஞனின் கதை என்ற விளக்கமும் கொடுக்கப்படுகிறது.

நகரத்தில் ஒரு கிராமத்தான் கதை கி.மு. 2300 -ல்! சிந்துச் சமவெளி நாகரிகம் வளமுற்று விளங்கிய சமயத்தில் அவர்கள் எழுத்துகளை வாசித்தறிய முடியாததால் அந்நாளைய வாழ்வை அறிய சிக்கலாக இருக்கிறது. யூகத்தின் அடிப்படையில் நகரமும் கிராமமும் இருக்கிறதாக வைத்து மொகஞ்சதாரோ நகருக்கு கிராமத்திலிருந்து சிறுவன் தன் தந்தையோடு சென்று வருவதாக கதை பின்னப்பட்டிருகிறது. ஒவ்வொரு கதைகளுக்கான குறிப்புகள் இவை தவிர புத்தகத்தின் பக்கங்களில் இது வரையிலான அகழ்வாராய்ச்சி முடிவுகள் பொடி எழுத்தில் கதைகளை ஒட்டியே வருகின்றன.

பின் வரும் கதைகள் அனைத்தும் கி.பி என்பதால்  வரலாற்றுத் தகவல்களோடு குறிப்புகள் தொடர்கின்றன. இந்தியாவில் கிரேக்கர்கள் ‘யவனர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.  யவனர்கள் இந்தியப்பெண்களை மணந்தனர். அத்தகைய கலப்பின தம்பதியினரின் மகன் அகாசிலஸ். அகாசிலஸ் ஒரு சிற்பி! உயர் குலத்தவரின் மகன் இவனை ‘உன் நாட்டுக்குப் போ, பூனைக்கண் யவனா!’ என்றே வசை பொழிகிறான். இருவருக்கும் சண்டையும் நடக்கிறது. அகாசிலஸின் தந்தை வந்து இருவரையும் பிரித்து விடுகிறார். அகாசிலஸ் தன் தந்தையிடம் கேட்கும் கேள்வி.. ‘என் தேசத்தில் நான் ஒரு அந்நியனாக உள்ளேன். உங்களால் எப்படி புன்னகைக்க முடிகிறது?’ தந்தை அவனுக்கு விளக்கங்கள் சொல்கிறார். ‘அன்பை மறந்த கலைஞனால் எப்படி புத்தபிரானை செதுக்கிட முடியும்?’ முடிவில் சுபமாக முடியும் இச்சிறுகதை ஒரு காலகட்டத்தையே தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது.

கதைகள் நீதிகளை சொல்லி முடிப்பது போன்று அமையப் பெறலாம். அல்லது கதைகள் கதைகளாகவே கூட முற்றுப் பெறலாம். இந்தத் தொகுப்பு வரலாற்றின் தகவல்களை தன்னுள் வைத்துக் கொண்டு பல காலகட்டங்களை சிறுவர்களை வைத்து சொல்கிறது சிறுவர்களுக்காக! தமிழில் சிறுவர்களுக்கென வந்த புத்தகங்களில் இது மிக முக்கியமான புத்தகமாகப் படுகிறது. ஒவ்வொருவர் இல்ல நூலகத்தில் இருக்க வேண்டிய முக்கியமான புத்தகம்!

இந்த புத்தகத்தை என் கிராமப் பள்ளிக்கு கொடுத்து விடுகிறேன்!

கனவினைப் பின் தொடர்ந்து..
எதிர் வெளியீடு - பொள்ளாச்சி. பேச : 04259 226012 - விலை : 100.

0000

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல புத்தக அறிமுகம்...
அருமை..