வியாழன், மார்ச் 26, 2015

பதிவுகள்!!


நேற்று பல்லடத்திலிருந்து மிதமாக பேருந்தின் இடது கை ஓரமாக அமர்ந்து திருப்பூர் நோக்கி பிரயாணம் செய்கையில் என் அருகில் அமர்ந்தவன் ஒரு ஹிந்தி வாலா பொடியான். ’திருப்பூர் மேலே ஜாத்தாஹே?’ என்றான் என்னிடம். ஆமாடா ஆமாம்! என்றதும் புன்னகைத்தான். அந்த பேருந்து பூராவும் ஹிந்தி வாலா பொடியன்கள் தான் நின்றிருந்தார்கள். பேருந்தின் கண்டக்டெக்டர் அரை குறை ஹிந்தியில் அவர்களை நொங்கெடுத்தார். அவர் வேதனை அவருக்கு. ஹிந்திப் பயல்கள் தாங்கள் இறங்கும் இடத்தின் பெயரை சரியாக உச்சரிக்காததால் அவர் அனைவருக்கும் ஒரே 10 ரூபாய் வசூல் செய்தார். வெளியே ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஹிந்தி பெண்களிடம் ஹிந்திப் பையன்களின் ஓட்டங்கள் நடைபெற நான் அருகில் இருந்த பையனைப் பார்த்தேன். அவன் புன்னகை பல மொழிகளை எனக்கு கற்றுக்கொடுத்தது! திருப்பூர் எங்கே பிரயாணப்படுகிறது? அல்லது ஜாத்தாஹே பண்ணுகிறது?

000

கருத்துச் சுதந்திரம் என்ற ஒன்று எங்கிருந்து எப்படி வந்தது என்று அனைவரும் யோசித்தோமா? 1947-ல் அவர்கள் விடுதலை அளித்து விட்டு செல்கையில் ஒருவேளை கருத்துச் சுதந்திரத்தையும் கொடுத்துச் சென்றார்களா? இது நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட ஒன்றுதான். அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவும் நமக்கு அப்போது இருக்கிறது என்பதே அதன் உள்ளடக்கம்.

ஒரு எழுத்தாளர் தன் புத்தகத்திற்கு எழுதும் முன்பாகவே லட்சக்கணக்கில் தொகை பெற்று அவர்கள் என்ன செய்யச் சொல்லி தொகை கொடுத்தார்களோ அதற்கான முயற்சியில் இறங்கி நாவல் எழுதுவதால் அந்த எழுத்து, அதை எழுதும் ஆசிரியரியனுக்கு நிம்மதியான எழுத்தாக இருக்குமா? நீ சொன்னதை நான் எதற்காக எழுத வேண்டும் என்ற கேள்வி இருக்காதா? பணம் எழுத்தாளனுக்கு தேவை தான் என்று வைத்துக் கொண்டால் அந்த எழுத்திற்கு ஒரு நியாயத்தை கற்பித்து வரிசைப்படுத்தலாமா?

போக சொந்தப் பிரச்சனையை, பக்கத்து வீட்டாரிடம் ஏற்படும் வசவுகளையோ, அடிதடிகளையோ அவர்களோடு போட்டியிட முடியாத, வெல்ல முடியாத நிலையில் எழுதத் தெரியும் என்ற ஒரே காரணத்தால் எழுத்தில் பக்கத்து வீட்டாரைபற்றி குறை சொல்லி எழுதி வைப்பதும் கருத்துச் சுதந்திமா? அது நியாயம் தான் என்று வாசிப்பாளனுக்கு தோன்றுமா?

எழுத்திற்கு நேர்மை என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறதா? இல்லை வரும் காலத்தில் இவைகள் அடியோடு போய்விடுமா?

000

தனது அங்ஙாடி புத்தகத்தை வாசகனுக்கு ‘20% தள்ளுபடி’ என்று பூமணி ஸ்டாலில் அமர்ந்து கையில் திணிக்கவில்லை! சு.வெங்கடேசனும் அப்படிச் செய்யவில்லை. நாஞ்சில்நாடனும் அப்படி செய்யவில்லை! முந்தைய எழுத்தாளர்கள் அப்படி செய்ததாக கேள்விப்பட்டதுமில்லை! 

சாருநிவேதிதா இங்கு வருகையில் தன் புத்தகத்தில் மட்டுமே கையெழுத்து இடுவதாக முன்பே சொல்லி விட்டு வந்தார். அவரிடம் அவரது புத்தகங்களை ஏற்கனவே வீட்டில் வைத்திருந்தவர்கள் கொண்டு வந்தும், ஸ்டாலில் இருந்து புதிதாக வாங்கியவர்களும் வந்து நீட்டி அவரின் கையெழுத்தை பெற்றுக்கொண்ட காட்சியை நான் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது.  ஒரு எழுத்தாளனாக புத்தக கண்காட்சிகளுக்கு சென்று வருவதில் மகிழ்ச்சியடைந்தேன். 

புத்தகம் ஒரு பதிப்பாளரால் பதிப்பிக்கப்பட்ட பின் அதன் விற்பனை சார்ந்த விசயங்களை பதிப்பாளர் அறிவார். அவருக்குத் தெரியும் அது விற்றுமுடிய இவ்வளவு காலம் ஆகும் என்று. ஒரு மினிமம் கேரண்டி எழுத்தாளரின் எழுத்தைத் தான் பதிப்பித்து இருக்கிறோமென தெரிந்து தான் அவர் புத்தகத்தை சந்தைக்கு கொண்டு வந்திருக்கிறார். 

இதன் நீட்சி எங்கு போய் முடியும் என்று உங்கள் பலருக்கும் தெரியும் தானே நண்பர்களே! இருந்தும் ஒரு விளம்பரம் ஒரு பொருளுக்கு தேவைப்படுகிறது அல்லவா! ஆகவே நாம் புதிதாக சந்தைக்கு வந்திருக்கும் அந்த குளிர்பானத்தை வெய்யில் சீசன் என்பதால் அருந்தி மகிழ்வோம்!

000

Post Comment

புதன், மார்ச் 25, 2015

மயூராவின் ... மூன்றாவது துளுக்குதன் முதல் சிறுகதை 1998ல்  விகடனில் பிரசுரமானதாக மயூரா ரத்தினசாமி தொகுப்பின் முகப்பில் அறிவிக்கிறார்.  பலரையும் போல வெகுஜன இதழ்களின் வாசிப்பாளராக துவங்கி பிற்பாடாக சிற்றிதழ்களின் சிறுகதை வடிவங்களைக் கண்டு கதையானது முன்னைப்போலவே முடிவுகளைத் தாங்கியிருக்க வேண்டிய அவசியமேதுமில்லை என்பதை உணர்ந்தவராகிறார். ஒவ்வொரு கதையும் முடிவிலிருந்து ஒரு நீட்சியை கொண்டதாகவே உள்ளதை கண்டுணரும் சமயம்  ஒரு சிறுகதை எழுத்தாளாரக தன்னையே உனர்ந்து கொள்கிறார் மயூரா ரத்தினசாமி.

சுழற்சி என்கிற முதல் கதையை வாசிக்கத்துவங்குகையில் அவரது வெகுஜன எழுத்தின் வாசிப்புத்தன்மை அப்படியே அப்பட்டமாக அதில் இருப்பதைக் கண்டு இதை இப்போதைக்கு வாசிக்கலாமா? இல்லை பிற்பாடு பார்த்துக் கொள்ளலாமா? என்றே யோசித்தேன். சிறுகதைக்காக கதைக்களன்களை எழுத்தாளனே முடிவு செய்து துவங்குகிறான். அவன் எங்கு முடித்துக் கொள்ள யோசிக்கிறானோ அங்கு முடித்து வைத்து விட்டு அவ்வளவுதான் என்கிறான்.
இந்தத் தொகுப்பில் விகடனில் வெளியான கதைகள் அனைத்தும் எதற்காக கடைசி வரிசைக்குச் சென்றன? என்ற கேள்வியும் இருந்தது எனக்கு.

விகடனில் இம்மாதிரியான கதைகள் இப்போது வெளிவருவதில்லை என்பதே இப்போதைய நிலைமை. காலத்தின் வேகத்திற்கு ஏற்ப வெகுஜன இதழ்களும் சிறுகதைகளில் முற்றும் சொல்லும் கதைகளை நிராகரிக்கின்றன.
பச்சைக்கண்ணாடி என்கிற கதை குழந்தைகளின் வாழ்வை அழகாகச் சொல்கிறது. சித்தப்பனின் கண்ணாடி உடைந்ததற்காக கன்னத்தில் அடித்த சித்தப்பனை வெறுப்பாய் குழந்தை பார்ப்பதில்லை. ஆனால் அண்ணி சுடுசொற்களைக் கூறி  கதை சொல்பவனின் மனதை நோகடிக்கிறாள். குழந்தை தன்னுடைய உடையாத கலர் கண்ணாடியை சித்தப்பனுக்கு தருகிறது. விகடனில் இவர் எழுதிய கதைகளனைத்தும் வாழ்வியல் கதைகள்.  இதைப்போலவே காதலித்து மணம் புரிந்து கொண்டவர்களின் வாழ்க்கை ஊடல்களை மிக அழகாக, பூட்டைத் தொலைத்து விடு கதை வாயிலாக சொல்கிறார்.

வெயிலைக் கொண்டு வாருங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுதி. வானசஞ்சாரக்கதை என்று அத்தொகுப்பின் முதல்கதையை வாசித்த பிரமிப்பில் இவரும் அதைப்போன்றே எழுத முயற்சித்திருக்கிறார். இதை, போலச் செய்தல் என்றே குறிப்பிடுகிறார். போலச் செய்தல் தவறில்லை என்றாலும் எந்த சுவாரஸ்யமும் இன்றி இது நீள்கதையாகி வாசகனுக்கு சலிப்பைத் தருமாறு அமைந்து விட்டது. இம்மாதிரியான முயற்சிகளை மயூரா ரத்தினசாமி தவிர்த்தல் நலம் என்றே படுகிறது.

மீண்டும் வருவார் தொகுப்பில் கடவுள் எழுந்தருளியதைப் பற்றி கதை பேசும் பகடி எழுத்து. இன்னமும் வேடிக்கை பலவற்றை சேர்த்திருக்கலாம். பல்லி வேட்டை இவரது மாற்று கதை சொல்லல் வடிவத்திற்கான முயற்சியாக  கொள்ளலாம்.  வாசிக்க உகந்த கதைகளை தாங்கிய தொகுப்பாக மயூரா ரத்தினசாமியின் முதல் தொகுப்பு இருக்கிறது.

இந்தத் தொகுப்பை முன்பாகவே வாசித்து நன்றாக இருக்கிறது கோமு என்று கூறிய விஜய் மகேந்திரனுக்கு இந்த இடத்தில் ஒரு நன்றியை சொல்லிவிடுகிறேன்.

மூன்றாவது துளுக்கு- விலை 130 - எதிர் வெளியீடு, பொள்ளாச்சி. பேச : 04259-226012.

000

Post Comment

திங்கள், மார்ச் 23, 2015

பொள்ளாச்சி தீ இனிது இலக்கிய அமர்வு
பொள்ளாச்சி தீ இனிது இலக்கிய அமைப்பின் இரண்டாவது அமர்வு நேற்று நடந்தது. ஒரு பத்து நிமிசம் பேசுவனுங்க! நான் பேச்சாளரெல்லாம் கிடையாது, என்று சொல்லியிருந்தேன் அதன் அமைப்பாளர்களிடம். இப்படி கூட்டத்திற்காக சென்று சிறப்பு அழைப்பாளராக பேசுவதெல்லாம் இது வரை நடந்ததில்லை. முக்கால் மணிநேரம் பேசியதாக என் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த எதிர்வரிசை நண்பர் சொன்னார். எனக்கு பயம் பிடித்துக் கொண்டது. எங்கே இனி பேச்சு பேச்சு என்று மைக்கு வேண்டும் என்று மைக் மோகனாகி, இதயம் ஒரு கோவில்.. அதில் உதயம் ஒரு பாடல்! என்று பாட்டுக்கட்டி விடுவேனோ என்று!

நண்பர் ராசு மொக்கை போட்டீங்க! என்று வெளிநடப்பு செய்தது மேலும் மகிழ்ச்சியாக இருந்தது. அதாவது அவரிடம் முன்னொரு காலத்தில் கோவிலில் அமர்ந்து பேசியவைகளைத் தான் பேசியதாகவும், அதனால் பாக்கெட்டிலிருந்த தேங்காயை உடைக்கச் சென்றதாகவும் கூறினார். திரும்பி அவர் வருகையில் மீட்டிங் முடிந்ததா? என்று கேட்கையில் அவர் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சிக்களை.. மறக்க இயலாதது. ஆக பேருரைகளை ஆற்றி கேசட் போடும் நிலைக்கு நான் செல்லாதிருக்க நண்பர்கள் ஆசி வழங்க வேண்டும்!


இதற்கும் முன்பாக நான் எமது நடுகல் புத்தக வெளியீடு, மற்றும் எமது புத்தக வெளியீடுகளில் மட்டுமே பேசி இருக்கிறேன் சுருக்கமாக! ஆரம்பத்தில் இருந்த பதட்டம் இப்போது கொஞ்சமாக விலகி விட்டது உண்மைதான். இருந்தும் பேச்சு எனக்கு பிடிப்பதில்லை. சமயத்தில் நாம் வாயில் வருவனவற்றை பேசி விட்டு வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கும் வேலையெல்லாம் வந்து விடும். பொதுவாக நிதானத்தை கடைபிடித்து வருபவனும் அல்ல நான். இதுவே ஒரு 100 பேருக்கும் மேலானோர் கலந்து கொண்டிருந்த கூட்டமென்றால் மைக் வளையும் வரை பேசி நாலு பேரின் பாராட்டையும் நாலுபேரின் தூற்றலையும் வாங்கி வீடு வந்திருக்கலாம். பார்ப்போம்! தொடர்வோம்!

000

Post Comment

செவ்வாய், மார்ச் 17, 2015

பழைய விசயம் புதிய செய்தி 1


1989 -நண்பர் ஒருவரின் மகள் தொட்டிலில் கோவையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் பெயர் வானதி. அவருக்கு இப்போது திருமணமாகி இரண்டு குழந்தைகள். நண்பர் வரும் ஏப்ரல் 28ல் தொழிலில் இருந்து ரிட்டயர் ஆகிறார். விசேசத்திற்கு கோவை அழைத்திருக்கிறார். அந்த முதல் குழந்தையின் பெயரில் உள்ளூரில் வானதி என்கிற கையெழுத்து மாத நாவல் துவங்கப்பட்டது. அப்போது ஊன்றுகோல் என்கிற சிற்றிதழ் என்னால் 300 பிரதிகள் அங்கு நடத்தப்பட்டது. (அவை பற்றியான தகவல்கள் மேலும் வரும்)

இப்போது இதை வாசிக்கையில் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. இது போல கொலை, பேய், காதல், என்று 4 மாத நாவல் வந்தன. பத்திரமாக வைத்து கொடுத்து உதவிய நண்பருக்கு நன்றிகள் பல. ஓவியங்கள் பல நானே வரைந்தது.

டுர்டுரா இப்போது சிறுவர்களாக இருந்து பெரியவர்களுக்கான குறுநாவலாக மறுஎழுத்து எழுதிக் கொண்டிருக்கிறேன். 8-பக்கங்கள் மட்டுமே எழுதியவற்றை கி.ச.திலீபன் வாசித்து பார்த்து விட்டு மொழிபெயர்ப்பு நாவல் போல வருதே.. உங்க ஸ்டைல் இல்லியே! என்றான். என் ஸ்டைல் எதற்காக இருக்க வேண்டும்? எனக்கென ஸ்டைல் இருக்கிறதா என்ன?

கொங்கில் நடைபெற்ற சில சம்பவங்கள் என்னை வேறு பாதை நோக்கி இழுத்துப் போவது தவிர்க்க முடியாத விசயமாக மாறி வருகிறது. இருக்கட்டும் இப்படியும்!

Post Comment

திங்கள், மார்ச் 16, 2015

முக்குழிச்சான் கோழி அல் நீர்க்காக்கா


முக்குழிச்சான் கோழி என்கிறார்கள் இதை. நீர்க்காக்கா என்றும் இங்கே சொல்கிறார்கள். நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் அதுபாட்டுக்கு சென்று கொண்டிருந்தது. ஜோடியாக இதை பார்த்ததேயில்லை. ஊர் ஊரிற்கு பாறைக்குழி என்றிருந்தால் அங்கங்கே ஒன்று மட்டும் நீரில் முக்கு போட்டு தலை நீட்டி பார்த்துக் கொண்டிருக்கிறது.

8 வருடம் முன்பு ஊரின் அருகாமையில் இருக்கும் ஏரியில் நீர் வரத்து அதிகமிருக்கையில் டில்லி முற்களுக்கிடையில் முட்டைகள் வைத்து இனவிருத்திக்கு இவை ஏற்பாடு செய்தன. இரவு நேரத்தில் எளிதாக பிடித்து விடலாமென நண்பர்கள் சிலர் முடிவெடுத்து லாரி டூப்பில் காற்றடைத்து ஒருவன் மட்டுமே ஏரி நீருக்குள் சப்தமில்லாமல் சென்றான். திரும்பி வருகையில் அவன் கையில் சின்னச் சின்ன முட்டைகள் மட்டுமிருந்தன. கிட்டப்போனா டொபுக்குனு முக்குழி போட்டுட்டு போயிடுதுடா! என்றான். இதை சிரமப்பட்டேனும் பிடித்து சாப்பிட்டவனின் கருத்து : வெண்ணெய் ஒழுகுது!

இருந்தும் இது தனியாகவே பாறைக்குழியில் அங்கங்கே தென்படுவது ஏன்? என்பது புதிர் தான். (மறுபடியும் என் ஜூம் போட்டோ)

000


எழுதிக் கொண்டிருக்கும் சிறுவர் குறுநாவலான ‘டுர்டுரா’ நாவலுக்கு கதை நடைபெறும் களத்திற்கான மேப். துரையரசு வரைந்தது. அடுத்த படம் நானாக முயற்சியெடுத்தது.

000

Post Comment

வியாழன், மார்ச் 12, 2015

காடோடி மற்றும் செத்த போன்


காடோடி - நக்கீரன்

பன்முகத்தன்மை கொண்ட இவர் முதலாக சூழலியளார் என்றே அறியப்பட்டவர். காடோடி இவரின் முதல் நாவல் முயற்சி. கட்டுரையாளர்கள் நாவல் என்ற வடிவத்திற்குள் வருகையில் தொய்வு ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால் சொல்லக் கூடிய விசயம் தீவிரத் தன்மை கொண்டமையால் தொய்வுகள் வாசகனுக்கு தெரிவதில்லை.

நாவல் முழுக்க பலவித பறவையினங்கள், விலங்கினங்கள் பற்றியான தகவல் களஞ்சியமாக இருக்கிறது. அன்னா,பிலியவ், பார்க்,ஒமர்,ரலா போன்ற கதாபாத்திரங்கள் நாம் நாவலில் தான் பயணிக்கிறோம் என்ற நினைவை அடிக்கடி நமக்கு தந்து உதவிக் கொண்டிருக்கின்றன. அதுவும் பிலியவ் என்ற கதாபாத்திரம் நாவலின் மையமாக ஒரு அமானுஷ்ய சக்தியுடன் செயல்படுகிறது.

வனம் என்ற பிரமாண்டம் ஒன்றே நம்மை இந்த நாவலுக்குள் பயணிக்க வைக்க வல்லதாயிருக்கிறது. ஆனால் வனத்தின் அழிவைப்பற்றி இந்த நாவல் போன்று இதுவரை தமிழில் எந்த நாவலும் பேசவில்லை. ஒவ்வொரு மரம் வீழ்கையிலும் நம் இதயம் ஒருகணம் அந்தக் கட்டி வைக்கப்பட்டிருந்த கோழி கத்துவது போல துடித்தே நிற்கிறது. இந்த புத்தகத்தை முடிக்கும் தருவாயில்  எனக்கென நான் வளர்த்திக் கொண்டிருக்கும் முருங்கை, எலுமிச்சை என்ற சின்ன வகை மரங்களின் மீது ஒரு தனி பாசம் ஏற்பட்டத்தான் செய்தது. போக தாய்மரம் வெட்டப்பட்ட பிறகு கதை சொல்பவர் அதன் மடியில் தலை சாய்த்து அழுவது எனபது கண்ணீரை வரவழைத்த இடம்.

இந்தப் புத்தகத்தைப் பற்றி அதிகம் பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. இயற்கையின் மீது காதல் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் என்ற போதிலும் அவர்களாலும் எந்த பிரயோசனமும் இந்த இயற்கைக்கு இல்லை என்பதே இதை வாசிக்கையில் நான் உணர்ந்து கொண்டது. கொஞ்சம் நிலபுலன் வைத்திருக்கும் காட்டாளன் யாரும் இந்தப் புத்தகத்தை வாசிக்கவும் போவதில்லை என்பது தமிழுக்கான சாபக்கேடு!

இந்தப் புத்தகம் நல்லாயிருக்கு என்று  வாசகர்களுக்கு சொல்வது  கூட என் அறிவீனத்தின் ஒரு பகுதி தான்.

காடோடி,  அடையாளம் வெளியீடு,  விலை 270.  பேச ; 04332 273444

000


Late Fee shall be leavied in the next bill @2% of the outstanding amount pending after payment due date. Minimum late fee is 10/-.

மாத கட்டணம் 180.00, பயன்பாட்டு கட்டணம் 43.00 தள்ளுபடி -1.00, சேவை வரி 27.00. மொத்தம் 249.00.

அம்மா : ஒரு மாசம் பேசவே இல்லடா! போனும் வாங்கி குடுத்துட்டே! இந்த போனு செத்தே கெடக்குது ஒரு மாசமா! வேலை செய்ய ஆளே இல்லியாம். பேசாம இதை கட்டாம ட்டுடலாமா?

அடியேன் : இது எப்பயும் நடக்குறது தானே! இப்ப என்ன புதுசா? 2000 ரூவா அட்வான்ஸ் குடுத்து வாங்குனது எப்பன்னு எனக்கு மறந்தே போச்சே! அப்புறம் இந்த கிராமத்துல ஒருத்தரு ஒரு இருவது ஊட்டுல பத்து ரூவா வசூல் செஞ்சு போய் கட்டீட்டு வந்துட்டு இருக்காரே! அவருக்கு சங்கடமா இருக்குமே!

அம்மா : என்ன பண்ணலாம்னு கேட்டா நாயம் பேசுறான்.

அடியேன் : இப்பயும் செத்து கெடக்குது. யாரும் கூப்பிடவும் முடியாது.. நீயும் பண்ண முடியாது.

அம்மா : அது எப்ப செத்துச்சுன்னே தெரியிலடா! சேவை வரி, மாச கட்டணம்னு போட்டு தாக்கியிருக்காங்க! இங்கென்ன காசு வெளையுதா? நீ போன் பில்லு கட்டுனீன்னா தெரியும் வருத்தம்.

அடியேன் : ஐய்யய்யோ! செத்த போனு செத்ததாவே இருக்கட்டும். பில்லு கட்டாதே உடு!


இப்படியாக ஒரு குடும்ப நண்பராக இருந்த ஒரு உயிரற்ற …..!!!!

000

Post Comment

புதன், மார்ச் 04, 2015

சுத்தம் -சிறுவர் நாடகம்சிறுவர் நாடகம்வா.மு.கோமு.
5-ம் வகுப்பு அல்லது 6-ம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்காக!

சுத்தம்

பாத்திரங்கள் : மாணிக்கம், அம்மா, கயல்விழி

காட்சி ஒன்று

மாணிக்கம் பள்ளிக்குச் செல்ல தன் புத்தகப்பையை தோளில் போட்டுக் கொள்ளுதல்.

மாணிக்கம் : அம்மா! நான் ஸ்கூலுக்கு போயிட்டு வர்றேன். பஸ்ஸுக்கு டைம் ஆயிடுச்சு!

அம்மா : இருடா மாணிக்கம். நேற்றே தலையை வாறாமல் அவசரமாய் ஓடி விட்டாய். இன்றாவது தலையை வாறியிருக்கிறாயா?

மாணிக்கம் : அதெல்லாம் ஆச்சும்மா! தின்னீரு கூட இட்டாச்சு!

அம்மா : சரி தண்ணி கேன் எடுத்துக்கிட்டியா?

மாணிக்கம் : போம்மா, எப்பப் பாரு தண்ணிக்கேனு தண்ணிக்கேனுட்டு!

அம்மா : நம்ம ஊர்ல நிலத்தடி நீர் மாசுபட்டிருக்காம்டா! சொன்னா புரியுதா ஒன்னா உனக்கு!

மாணிக்கம் : பள்ளிக்கூடத்துலயே தண்ணி இருக்கும்மா! வெட்டியா கேன்ல சுமந்துட்டு போகணுமா நானு? வேண்டாம்மா!

அம்மா : சுடவெச்ச தண்ணிய ஆறவெச்சு கேன்ல ஊத்தி வச்சிருக்கேன்டா மாணிக்கம். அம்மா உன் நல்லதுக்கு தான சொல்வேன். பன்னிக் காய்ச்சல், யானைக் காய்ச்சல்னு விதம் விதமா வருதுடா!

மாணிக்கம் : அதெல்லாம் எனக்கு வராதும்மா!

அம்மா : நோய் எதிர்ப்பு சக்தி இருக்குறவங்களுக்கு வராதுடா! உனக்குத்தான் எப்போப் பார்த்தாலும் எதோ ஒன்னு வந்துட்டே இருக்கே! அதனால தான் சொல்றேன் கேனை எடுத்துட்டு போ!

மாணிக்கம் : அம்மா நீங்க வீணா பயப்படறீங்கம்மா! எல்லாரும் பள்ளிக்கூடத்துல குடிக்கிற தண்ணியத்தான் நானும் குடிக்கிறேன். எனக்கு அப்பப்ப சளி பிடிச்சுக்குது. அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லேன்றீங்களா?

அம்மா ; சரி பஸ்சுக்கு நேரமாச்சு கிளம்பு! டாட்டா!

மாணிக்கம் அம்மாவைப் பார்த்து டாட்டா சொல்லி விட்டு கிளம்புதல்.

காட்சி இரண்டு

பள்ளியில் இடைவேளை சமயத்தில் மாணிக்கமும் கூடவே படிக்கும் கயல்விழியும் பேசிக் கொண்டிருத்தல்.

கயல்விழி : என்ன முட்டைக் கண்ணா என்னைப் பார்த்து இன்று திரு திருவென முழித்துக் கொண்டே இருக்கிறாய்? (முட்டைக்கண்ணன் பள்ளி பட்டப்பெயர்)

மாணிக்கம் : இல்லையே பூனைக்கண்ணி, உன் பூனைக்கண்ணுக்கு அப்படித் தெரியும் போல இருக்கிறது.

கயல்விழி : ஏன் நீ இடைவேளையில் வெளியே போனவுடன் ஓடி வந்து விட்டாய் முட்டைக்கண்ணா?

மாணிக்கம் : நீ என்ன என்னை எப்போப் பார்த்தாலும் முட்டைக்கண்ணா என்றே கூப்பிடுகிறாய்? டீச்சர் அன்று வகுப்பில் பட்டப்பெயர் வைத்து யாரும் யாரையும் கூப்பிடக் கூடாது என்று சொன்னார்கள் அல்லவா?

கயல்விழி : நீயும் தானே என்னை பூனைக்கண்ணி என்கிறாய்!

மாணிக்கம் : நீதானே என்னை முதலில் முட்டைக்கண்ணன் என்று கூப்பிட்டாய்! அதனால் தான் நானும் கூப்பிட்டேன்.

கயல்விழி : சரி இருவரும் இனிமேல் அதை விட்டு விடுவோம் மாணிக்கம்.

மாணிக்கம் : சரி கயல்விழி. நீ தண்ணீர் கேன் கொண்டு வந்திருக்கிறாயல்லவா.. எனக்கு தண்ணீர் தாகமாய் இருக்கிறது குடேன்.

கயல்விழி : என் அம்மா, எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்று ஒரு வாரமாகவே சுடுதண்ணி ஊற்றிக் கொடுத்தனுப்புகிறது மாணிக்கம். அது எனக்கு மட்டும் மாலை வரை சரியாக இருக்கும்.

மாணிக்கம் : இல்லை. இப்படி நீ சொல்லக்கூடாது. எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது என்றுதான் கேட்கிறேன். வெளியே பள்ளி டேங்கில் மின்சாரம் இல்லையென்பதால் தண்ணீர் வரவில்லை.

கயல்விழி : மதியம் சாப்பிட்டு விட்டு நான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மாணிக்கம் : அதற்குள் டேங்கில் தண்ணீர் நிரப்பி விடுவார்கள் கயல்விழி. அதை உன் கேனில் நான் பிடித்துத் தருகிறேன்.

கயல்விழி : ஐயோ! அது மட்டும் முடியாது. ஏற்கனவே நம் நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதாக அன்று டீச்சர் சொன்னாங்க இல்லையா! அவங்க தானே தண்ணியை சுடவச்சு குடிக்க சொன்னாங்க!

மாணிக்கம் : சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க கயல்விழி, இப்ப எனக்கு தண்ணீர் தருவாயா தரமாட்டாயா?

கயல்விழி : என்னால் முடியாது.

மாணிக்கம் : போயும் போயும் உன்னிடம் கேட்டேன் பார் நான். எச்சிக் கையால காக்காய் விரட்ட மாட்டீல்ல நீ!

கயல்விழி : அப்படிச் சொன்னாய் என்றால் நான் டீச்சரிடம் சொல்லி விடுவேன்.

மாணிக்கம் அமைதியாகி எழுந்து வெளியே தண்ணீருக்காக செல்லுதல்.

காட்சி மூன்று

மாணிக்கம் வீடு. மாணிக்கம் அம்மா டிபன் கேரியரில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டிக் கொண்டிருக்கையில் கயல்விழி அங்கு வருதல்.

கயல்விழி : அம்மா வெளியே கிளம்பி விட்டீர்கள் போலிருக்கிறதே! மாணிக்கம் எங்கே காணோம்?

அம்மா : மாணிக்கத்திற்கு இரவில் காய்ச்சல் வந்து சிரமப்படுத்தி விட்டது. இன்று சனிக்கிழமை நீ பள்ளிக்கு கிளம்பாமல் இங்கே எங்கு வந்தாய்?

கயல்விழி : இன்று பள்ளி விடுமுறை நாள் அம்மா. மாணிக்கம் இப்போது எங்கே?

அம்மா : அவன் அப்பா இரவிலேயே மருத்துவமனையில் சேர்த்தி விட்டார். அவர்களுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்கிறேன் இப்போது.

கயல்விழி : அம்மா நானும் உங்களுடன் மருத்துவமனை வரட்டுமா? எனக்கும் மாணிக்கத்தை பார்க்க வேண்டும் போல் உள்ளது.

அம்மா ; சரி வா இருவரும் செல்வோம்.

(இருவரும் மருத்துவமனை கிளம்புதல்)


காட்சி நான்கு

மருத்துவமனையில் படுக்கையில் மாணிக்கம் படுத்திருத்தல். அம்மாவிடன் வரும் கயல்விழியைக் கண்டு புன்னகைத்தல். அம்மா டேபிளில் சாப்பாட்டு கேரியரை வைத்து விட்டு மாணிக்கத்தின் அப்பாவிடம் பேசிக் கொண்டிருத்தல். மாணிக்கமும் கயல்விழியும் பேசுதல்.

மாணிக்கம் : வா கயல்விழி!

கயல்விழி : எல்லாம் என்னால் தானே இப்படி உனக்கு ஆகிவிட்டது.

மாணிக்கம் : அப்படியெல்லாம் இல்லை கயல்விழி. எல்லாம் சொல் பேச்சு கேட்காத என்னால் தான்.

கயல்விழி : நீ தண்ணீர் கேட்ட போது நான் கொடுத்திருந்தால் உனக்கு காய்ச்சல் வந்திருக்காது இல்லையா! நீ சொன்னது போல நான் எச்சிக் கையால் காக்கா விரட்ட மாட்டாதவள் தான்.

மாணிக்கம் : நீ கொடுத்து நான் குடித்திருந்தாலும் நீ தண்ணீருக்கு மளிகை கடை தான் சென்றிருப்பாய். உனக்கு காய்ச்சல் வந்திருக்கும் கயல்விழி. நல்லவேளை அப்படி நடக்கவில்லை.

அம்மா இடையில் நுழைந்து : இவனுக்கு இது படிப்பினையாக இருக்கட்டும் கயல்விழி. நானும் பல நாட்களாக சுடுதண்ணி கேனை எடுத்துப் போகுமாறு சொல்லி விட்டேன் இவனிடம். கேட்கவேயில்லை.

கயல்விழி : இப்போது காய்ச்சல் உனக்கு பரவாயில்லையா மாணிக்கம்?

மாணிக்கம் : இப்போது காய்ச்சலே இல்லை கயல்விழி. என்ன இரண்டு ஊசிகள் டாக்டர் என் இடுப்பில் போட்டார். அதுதான் வலியாய் இருக்கிறது. ஊசி என்றாலே எனக்கு பயம் தான். அதற்காகவேணும் நான் இனி சுடவச்ச தண்ணீரையே குடித்துக் கொள்கிறேன்.

(அனைவரும் சிரித்தல்)

0000Post Comment