சிறுவர் நாடகம் – வா.மு.கோமு.
5-ம் வகுப்பு அல்லது 6-ம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்காக!
சுத்தம்
பாத்திரங்கள் : மாணிக்கம், அம்மா, கயல்விழி,
காட்சி ஒன்று
மாணிக்கம்
பள்ளிக்குச் செல்ல தன் புத்தகப்பையை தோளில் போட்டுக் கொள்ளுதல்.
மாணிக்கம் : அம்மா! நான்
ஸ்கூலுக்கு போயிட்டு வர்றேன். பஸ்ஸுக்கு
டைம் ஆயிடுச்சு!
அம்மா : இருடா மாணிக்கம். நேற்றே
தலையை வாறாமல் அவசரமாய் ஓடி விட்டாய். இன்றாவது
தலையை வாறியிருக்கிறாயா?
மாணிக்கம் : அதெல்லாம் ஆச்சும்மா! தின்னீரு
கூட இட்டாச்சு!
அம்மா : சரி தண்ணி கேன் எடுத்துக்கிட்டியா?
மாணிக்கம் : போம்மா, எப்பப்
பாரு தண்ணிக்கேனு தண்ணிக்கேனுட்டு!
அம்மா : நம்ம ஊர்ல நிலத்தடி நீர் மாசுபட்டிருக்காம்டா! சொன்னா புரியுதா ஒன்னா உனக்கு!
மாணிக்கம் : பள்ளிக்கூடத்துலயே தண்ணி இருக்கும்மா! வெட்டியா கேன்ல சுமந்துட்டு போகணுமா நானு? வேண்டாம்மா!
அம்மா : சுடவெச்ச தண்ணிய ஆறவெச்சு கேன்ல ஊத்தி வச்சிருக்கேன்டா மாணிக்கம். அம்மா
உன் நல்லதுக்கு தான சொல்வேன். பன்னிக்
காய்ச்சல், யானைக்
காய்ச்சல்னு விதம் விதமா வருதுடா!
மாணிக்கம் : அதெல்லாம் எனக்கு வராதும்மா!
அம்மா : நோய் எதிர்ப்பு சக்தி இருக்குறவங்களுக்கு வராதுடா! உனக்குத்தான்
எப்போப் பார்த்தாலும் எதோ ஒன்னு வந்துட்டே இருக்கே! அதனால
தான் சொல்றேன் கேனை எடுத்துட்டு போ!
மாணிக்கம் : அம்மா நீங்க வீணா பயப்படறீங்கம்மா! எல்லாரும் பள்ளிக்கூடத்துல குடிக்கிற தண்ணியத்தான் நானும் குடிக்கிறேன். எனக்கு அப்பப்ப சளி பிடிச்சுக்குது. அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இல்லேன்றீங்களா?
அம்மா ; சரி பஸ்சுக்கு நேரமாச்சு கிளம்பு! டாட்டா!
மாணிக்கம்
அம்மாவைப் பார்த்து டாட்டா சொல்லி விட்டு கிளம்புதல்.
காட்சி இரண்டு
பள்ளியில்
இடைவேளை சமயத்தில் மாணிக்கமும் கூடவே படிக்கும் கயல்விழியும் பேசிக் கொண்டிருத்தல்.
கயல்விழி : என்ன முட்டைக் கண்ணா என்னைப் பார்த்து இன்று திரு திருவென முழித்துக் கொண்டே இருக்கிறாய்? (முட்டைக்கண்ணன் பள்ளி பட்டப்பெயர்)
மாணிக்கம் : இல்லையே பூனைக்கண்ணி, உன் பூனைக்கண்ணுக்கு அப்படித் தெரியும் போல இருக்கிறது.
கயல்விழி : ஏன் நீ இடைவேளையில்
வெளியே போனவுடன் ஓடி வந்து விட்டாய் முட்டைக்கண்ணா?
மாணிக்கம் : நீ என்ன
என்னை எப்போப் பார்த்தாலும் முட்டைக்கண்ணா என்றே கூப்பிடுகிறாய்? டீச்சர் அன்று வகுப்பில் பட்டப்பெயர் வைத்து யாரும் யாரையும் கூப்பிடக் கூடாது என்று சொன்னார்கள் அல்லவா?
கயல்விழி : நீயும் தானே என்னை பூனைக்கண்ணி என்கிறாய்!
மாணிக்கம் : நீதானே என்னை முதலில் முட்டைக்கண்ணன் என்று கூப்பிட்டாய்! அதனால் தான் நானும் கூப்பிட்டேன்.
கயல்விழி : சரி இருவரும் இனிமேல் அதை விட்டு விடுவோம் மாணிக்கம்.
மாணிக்கம் : சரி கயல்விழி. நீ
தண்ணீர் கேன் கொண்டு வந்திருக்கிறாயல்லவா.. எனக்கு தண்ணீர் தாகமாய் இருக்கிறது குடேன்.
கயல்விழி : என் அம்மா, எனக்கு
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்று ஒரு வாரமாகவே சுடுதண்ணி ஊற்றிக் கொடுத்தனுப்புகிறது மாணிக்கம். அது
எனக்கு மட்டும் மாலை வரை சரியாக இருக்கும்.
மாணிக்கம்
:
இல்லை. இப்படி
நீ சொல்லக்கூடாது. எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது என்றுதான் கேட்கிறேன். வெளியே
பள்ளி டேங்கில் மின்சாரம் இல்லையென்பதால் தண்ணீர் வரவில்லை.
கயல்விழி : மதியம் சாப்பிட்டு விட்டு நான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மாணிக்கம் : அதற்குள் டேங்கில் தண்ணீர் நிரப்பி விடுவார்கள் கயல்விழி. அதை
உன் கேனில் நான் பிடித்துத் தருகிறேன்.
கயல்விழி : ஐயோ! அது
மட்டும் முடியாது. ஏற்கனவே
நம் நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதாக அன்று டீச்சர் சொன்னாங்க இல்லையா! அவங்க
தானே தண்ணியை சுடவச்சு குடிக்க சொன்னாங்க!
மாணிக்கம் : சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க கயல்விழி, இப்ப
எனக்கு தண்ணீர் தருவாயா தரமாட்டாயா?
கயல்விழி : என்னால் முடியாது.
மாணிக்கம் : போயும் போயும் உன்னிடம் கேட்டேன் பார் நான். எச்சிக்
கையால காக்காய் விரட்ட மாட்டீல்ல நீ!
கயல்விழி : அப்படிச் சொன்னாய் என்றால் நான் டீச்சரிடம் சொல்லி விடுவேன்.
மாணிக்கம்
அமைதியாகி எழுந்து வெளியே தண்ணீருக்காக செல்லுதல்.
காட்சி மூன்று
மாணிக்கம்
வீடு. மாணிக்கம்
அம்மா டிபன் கேரியரில் சாப்பாடு எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டிக் கொண்டிருக்கையில் கயல்விழி அங்கு வருதல்.
கயல்விழி : அம்மா வெளியே கிளம்பி விட்டீர்கள் போலிருக்கிறதே! மாணிக்கம் எங்கே காணோம்?
அம்மா : மாணிக்கத்திற்கு இரவில் காய்ச்சல் வந்து சிரமப்படுத்தி விட்டது. இன்று
சனிக்கிழமை நீ பள்ளிக்கு
கிளம்பாமல் இங்கே எங்கு வந்தாய்?
கயல்விழி : இன்று பள்ளி விடுமுறை நாள் அம்மா. மாணிக்கம்
இப்போது எங்கே?
அம்மா : அவன் அப்பா இரவிலேயே மருத்துவமனையில் சேர்த்தி விட்டார். அவர்களுக்கு
சாப்பாடு எடுத்துக் கொண்டு செல்கிறேன் இப்போது.
கயல்விழி : அம்மா நானும் உங்களுடன் மருத்துவமனை வரட்டுமா? எனக்கும்
மாணிக்கத்தை பார்க்க வேண்டும் போல் உள்ளது.
அம்மா ; சரி வா இருவரும்
செல்வோம்.
(இருவரும்
மருத்துவமனை கிளம்புதல்)
காட்சி நான்கு
மருத்துவமனையில்
படுக்கையில் மாணிக்கம் படுத்திருத்தல். அம்மாவிடன் வரும் கயல்விழியைக் கண்டு புன்னகைத்தல். அம்மா டேபிளில் சாப்பாட்டு கேரியரை வைத்து விட்டு மாணிக்கத்தின் அப்பாவிடம் பேசிக் கொண்டிருத்தல். மாணிக்கமும் கயல்விழியும் பேசுதல்.
மாணிக்கம் : வா கயல்விழி!
கயல்விழி : எல்லாம் என்னால் தானே இப்படி உனக்கு ஆகிவிட்டது.
மாணிக்கம் : அப்படியெல்லாம் இல்லை கயல்விழி. எல்லாம்
சொல் பேச்சு கேட்காத என்னால் தான்.
கயல்விழி : நீ தண்ணீர்
கேட்ட போது நான் கொடுத்திருந்தால் உனக்கு காய்ச்சல் வந்திருக்காது இல்லையா! நீ
சொன்னது போல நான் எச்சிக் கையால் காக்கா விரட்ட மாட்டாதவள் தான்.
மாணிக்கம் : நீ கொடுத்து
நான் குடித்திருந்தாலும் நீ தண்ணீருக்கு
மளிகை கடை தான் சென்றிருப்பாய். உனக்கு காய்ச்சல் வந்திருக்கும் கயல்விழி. நல்லவேளை
அப்படி நடக்கவில்லை.
அம்மா
இடையில் நுழைந்து : இவனுக்கு இது படிப்பினையாக இருக்கட்டும் கயல்விழி. நானும்
பல நாட்களாக
சுடுதண்ணி கேனை எடுத்துப் போகுமாறு சொல்லி விட்டேன் இவனிடம். கேட்கவேயில்லை.
கயல்விழி : இப்போது காய்ச்சல் உனக்கு பரவாயில்லையா மாணிக்கம்?
மாணிக்கம் : இப்போது காய்ச்சலே இல்லை கயல்விழி. என்ன
இரண்டு ஊசிகள் டாக்டர் என் இடுப்பில் போட்டார். அதுதான்
வலியாய் இருக்கிறது. ஊசி
என்றாலே எனக்கு பயம் தான். அதற்காகவேணும்
நான் இனி சுடவச்ச தண்ணீரையே குடித்துக் கொள்கிறேன்.
(அனைவரும்
சிரித்தல்)
0000
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக