புதன், ஜூலை 22, 2015

தந்தையின் கவிதை 2, மற்றும் என்னுடைய 2ஒரு பூ மலருவதை
பார்த்துத் தொலைத்து விட்டேன்!
ஒரு புலி தன் குட்டிகளை ஈன்று
அதை இடம் மாற்ற கவ்விச் செல்வதை
பார்த்துத் தொலைத்து விட்டேன்.
ஒரு பூனை முதலையை தன்
இருப்பிடத்திற்கு வராதே என்று
விரட்டியடிப்பதை பார்த்து விட்டேன்.
ஒரு தொங்கு பாலம் காற்றில்
அசைந்து அசைந்து உடைந்து விழுவதை
பார்த்துத் தொலைத்து விட்டேன்.
மதம் ஏறிய யானை தன் சக யானையை
முட்டியே தள்ளிக் கொல்வதை
பார்த்துத் தொலைத்து விட்டேன்.
ஒரு ஒட்டகச் சிவிங்கியை
சிங்கக் கூட்டமொன்று கொன்று
பசியாற போராடுவதையும்
பார்த்துத் தொலைத்து விட்டேன்
சேனலின் வாயிலாக! பார்ப்பதற்கென்று
மீதம் பல இருக்கலாம்! ஆனாலும்
இவைகளில் ஒன்றையும் என் அப்பாருவும்
என் அப்பனும் பார்க்க கொடுத்திருக்கவில்லை!
விதத்தில் நான் பாக்கியவான்! –ஆகவே

இந்த உலகம் காதலால் நிரம்பி வழியட்டும்!

000
-உங்கொக்காளுக்கு பேயி புடிச்சி
புருசங்காரனை கடிச்சு வச்சுட்டாளாமாடா..
சண்டையின்னா இத்தினி நாளு இருந்தாப்
போச்சாது, இப்பவாச்சிம் ஒரு எட்டு போயி
உம்பட மச்சான் கிட்ட என்ன ஏதுன்னு
விசாரிச்சிப் போட்டு வந்துடேன்டா சம்முவா?
நா வேணா போக வர உம்பட புட்டுர்
பைக்கிக்கி தண்ணி ஊத்த காசு தர்றேன்.
அவள நானு எப்புடி எல்லாம் வளத்தியிருப்பேன்
ஒரு விசுக்கா சாமத்துல மூச்சுப்பேச்சு
இல்லாமக் கெடக்காளேன்னு இங்கிருந்து
ஆசுபத்திரிக்கி ஆறு மைலு தூக்கிட்டே
போனனாக்கோ சாமி! இந்தக்கையால எத்தினி வாட்டி
அவ இசிய வழிச்செடுத்துப்போயி ஜிம்மியக்
கூப்புட்டு குடுத்துருப்பேன்! அத்தனையும் அவளக்
கட்டிக் குடுத்ததும் மறந்துட்டு ஆயாகாரி
எனக்கு எனத்த அவுத்துக் குடுத்தான்னு
பேசிப்போட்டாளே! அப்பவே அவளுக்கு
பேயி புடிச்சிருக்குமடா ராசா! பக்கத்தூட்டு
சிங்காரி தான் பேயாப்போயி அவள புடிச்சி
ஆட்டுறாளோ என்னுமோ தெரியலையேடா!
டேய்! சாமி ஒரு எட்டு போயி அவ
எப்பிடி இருக்காளுன்னு பாத்துட்டு
வந்துடுடா என் ராசா சம்முவா! அவ நல்லா
இருக்கான்னு நீ வந்து சேதி சொன்ன
பொறவுதான் உங்காத்தா நானு ஒரு வா
பேஞ்சு சோறு உம்பேன் பாத்துக்க!

000

என் தந்தையாரின் இரண்டு கவிதைகள்!

பிண்டம்
0000
கோவணம் நனைந்து
முட்டி தட்டும்

வெள்ளை நிழலாட
வெளவால் பறக்கும்

வீதி மயிர் முளைக்க
அம்மணம் வலம் வரும்

சக்கரம் சுழன்று
புள்ளியில் உறங்கும்

பச்சை மண் உதிர
உயிர் சமாதி களையும்

பிணை அறுத்து
பாம்பு விரட்டும்

நடந்த தடம்
வால் பிடித்து ஓடும்

சத்திரச் சோற்றுக்கு
சங்கு முழங்கும்

கட்டை எழுந்து
கொள்ளியை வையும்

குடம் உடைந்து
கொதி அடங்கும்

பன்ங்கொட்ட பாத்திக்குள்
பீலி தூக்கும்

(மை டாடி அமரர் முத்துப்பொருநன் ஆத்மாநாம் நடத்திய இதழ் எண் 19-ல்)

000

இஃது ஒரு தனி
000
இரவு பேசும்
ஆந்தைக் கீச்சில்

அண்டவெளி
ஆத்மா அழும்
விடுபறவைக் குரலில்.

ஒருமுனை உச்சம் நோக்கி
சோகம் எரிக்கும்
நிசப்தம் எட்ட.

சுற்று முற்றில்
குட்டைச் சத்தங்கள்
வயிறு வீங்கும்
காகங்கள்
இழுத்துப் பிடுங்கும்

எண்ணிக்கைப் பலம்
மானபங்கப் படுத்தும்
சத்திய சபதம்
இடுப்பொடிக்கும்.

ஒருக்கால்
உப்புக்கடல்
உள்ளங்கை ஏறும்.

000

Post Comment

கருத்துகள் இல்லை: