சனி, ஜூலை 04, 2015

கவிதைகள் இரண்டுசுடுகாடு நோக்கி அந்தப்பிணம் பிரயாணப்பட
ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது!
தூரத்திலிருக்கும் சொந்தங்களெல்லாம்
கடைசி முறையாக முகம் காண தாமதமாகிவிட்டது!
பாடையில் பிணம் மாலை மரியாதையோடு
சுடுகாட்டுக்கு கிளம்பி விட்டது.
பட்டாசுகள் கட்டுக் கட்டாய் முழங்கின!
பொரிகள் தெருவெங்கும் விதைக்கப்பட்டன.
இந்தப் பிணத்திற்கு வந்த சனம் அதிகம் தான்
என்ற பேச்சு நிலவியிருந்தது! – இந்தப்பிணம்
முன்பாக எல்லோரையும் நேசித்து அரவணைத்து
நடந்து கொண்ட பிணம் என்று பேசப்பட்டது!
நட்பு வட்டம் பிணத்திற்கு பெரிதென பேச்சிருந்தது!
ஆகவே பிணம் காண கூட்டமோ கூட்டம் என்றும்
பேச்சிருந்தது! –ஏராளமான வருங்காலப் பிணங்கள்
பின் தொடர்ந்து செல்ல சுடுகாட்டில் எந்தக்
காக்கைகளும் காணோம்! –எல்லாம் உணவுக்காக
அரசாங்கப்பள்ளி சென்றிருக்கலாம் என்ற பேச்சும்
அவ்விடமிருந்தது! – ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்டிருந்த
குழியினுள் பிணம் கிடத்தப்பட்டு சம்பிரதாயங்கள்
பல் நிகழ்ந்தன! – பிணம் கடைசியாக ஏதாவது
சொல்லுமென எதிர்பார்த்த முகங்கள் அது எதுவும்

சொல்லாத்தால் பிணக்களையுடன் வீடு திரும்பின!

000இந்த மைதானம் சிறுவர்களின்
ஒட்டு மொத்த இரைச்சலால் நிரம்பியிருக்கிறது!
டென்னீஸ் பந்தில் மைதானத்தினுள் மூன்று
இடங்களில் மட்டைப்பந்து ஆட்டம்
நடந்து கொண்டிருந்தது.- எல்லோருமே
பள்ளி உடையில் தானிருந்தார்கள்.
சிறுமிகளும் தங்கள் விளையாட்டாக
மட்டைப்பந்தையே தேர்ந்தெடுத்து
விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
மட்டையாட்டாத்தில் இவ்ளோ ப்ரியமாக
பொட்டு பொடுசுகள் தேர்ந்தெடுத்து ஆட
சச்சின் தான் காரணமென்றும், டோனி தான்
காரணமென்றும் சில முட்டாள்கள் கருத்து
கூறிக்கொண்டிருக்க மைதானத்தினுள் மூன்று
பிரிவுகளின் ஆட்டமும் முடிவை நெருங்கிக்
கொண்டிருந்தது! –தோற்றுப்போன அணியின்
மட்டையாளன் ஒருவன் இரைச்சலுக்கிடையே
ஒரு கெட்ட வாரத்தையை வரிசையாக வீசினான்.
ஆங்கிலக் கல்வியை மட்டுமே அறிந்திருந்த
வெற்றி பெற்ற அணியினர் தோற்ற அணியின்
தலைவன் பேசும் வார்த்தைகளை என்ன?
என்று தெரியாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருவன் மட்டுமே மற்றவனிடம் கேட்டான்.
Does anyone know this?

 000

வணக்கம் சார்.


நலம்தானே. வரும் புதன் முதல் வெளியாகவிருக்கும் பத்திரிகை டாட் காம் இணைய இதழின் 
ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கிறேன்.. அதற்காக தங்களிடம் சில கேள்விகள். பேஸ்புக் தொடர்பானது என்பதால் இதன் மூலமே கேட்கிறேன். 1. பேஸ்புக்கில் சில பலர் எழுதும் வரம்பு மீறிய கருத்துகள், இதற்கு கட்டுப்பாடு வேண்டும் என்ற குரல் எழும்ப காரணமாகியிருக்கிறது. கட்டுப்பாடு அவசியமா.. 2. அப்படியெனில் "இந்தியர்களுக்கு சுதந்திரத்தை அனுபவிக்கத் தெரியாது" என்ற கருத்து சரிதானா.. 3. கட்டுப்பாடு என்றால், பேஸ்புக்கில் அக்கவுண்ட் தொடங்குபவர்கள், தங்களது அடையாளச் சான்று சமர்ப்பிக்க வேண்டும். அதாவது செல்போன் கார்டு வாங்குவது போன்ற நடைமுறையை ஏற்படுத்தலாமா 4 இது போன்ற சூழ்நிலைியல் 66 ஏ சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வரலாமா.. தங்களது பதிலை இன்பாக்ஸிலேயே அனுப்பலாம். எந்த வித மாற்றமும் இன்றி அப்படியே தங்கள் கருத்து வெளியாகும் என்பதற்கு நான் உத்தரிவாதம் அளிக்கிறேன். எனது எண்: 9942898415. பத்திரிகை இணைப்பு: patrikai.com

பொதுவாக முகநூலில் முதலாக வருபவர்கள் எல்லோரும் இருக்கிறார்களே? நாமும் இருப்போமே என்றுதான் வருகிறார்கள். முகநூலைப் பயன்படுத்துவது என்பது அவரவர் புத்தி சார்ந்த பகுதி தான். யாருக்கு எதன் மீது நாட்டமோ அதன்படியே இயங்குகிறார்கள்.

நான் முகநூலில் வந்த நாள் முதல் இன்றைய நாள் வரை அதை வரப்பிரசாதமாக பார்க்கிறேன். என் புத்தகங்கள் பற்றியான தகவல்களை முன்பாகவே ஓரளவேனும் தெரிவிக்கிறேன். நடுகல் பதிப்பகம் துங்கிய போது இன்ன இன்ன புத்தகங்கள் வருகின்றன என்பதை தெரிவிக்க ஒரு களமாக முகநூலை பயன்படுத்துகிறேன்.

என் சிறுகதைகள் ஏதேனும் இதழில் வருகையில் அதுபற்றிய தகவல்களை கொடுக்கிறேன். இப்படி போட்டுட்டா நாங்க படிச்சிடுவமா? என்றொரு நண்பர் கேட்டிருந்தார். வேறு முகநூலில் நான் என்ன செய்யலாமென கூறுங்கள், என்று கேட்டேன். சப்தமில்லை! அப்படியும் நண்பர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

மூன்று வருடங்களில் சண்டை சச்சரவுக்கான பக்கமாக என் முகநூலை நான் பயன்படுத்துவதில்லை. வெளிப்பக்கங்களில் தங்கள் கருத்துக்களுக்காக சண்டையிடும் எத்தனையோ நண்பர்கள் எனக்கும் நண்பர்களாக இயங்குகிறார்கள். சச்சரவுகளுக்கான தகவல்களை நான் என் பக்கத்தில் இடுவதில்லை.

ஆமை மீது ஏறி நின்று புகைப்படமெடுத்து முகநூலில் வெளியிட்டவர் உடனடியாக கைது செய்யப்படுகிறார். குழந்தைகள் பற்றி தவறான கருத்துகள் வெளியிட்டவர் கைது செய்யப்படுகிறார். இப்படியெல்லாம் ஒருபக்கம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

கட்டுப்பாடுகள் என்பதை அடுத்தவர் உருவாக்கிய பிறகு அதன்படி நடந்து கொள்வதல்ல! தலைக்கவசம் என்பது உயிர் காக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் அதை அரசு அறிவிக்கையில் குறை கூறிக்கொண்டேனும் நிச்சயம் அணிவார்கள். முகநூலில் கட்டுப்பாடுகள் எனபதை அவரவரே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கருத்துச் சுதந்திரம் என்று தனியே ஒன்று நாமாக ஆரம்ப காலத்திலிருந்து அது உண்டு! அது உண்டு! என்று பேச்சில் வைத்துக் கொண்டது தான். அதற்கும் ஒரு எல்லை உண்டு. அளவுக்கும் மீறினால் எதுவும் விஷம் தான். பெண்கள் மடியில் படுத்திருந்தவன் அந்த புகைப்படத்தை தன் பக்கத்தில் ஏற்றுகிறான். அவர்கள் என் தோழிகள் என்கிறான். ஆனாலும் பெண்களின் உறவினர்கள் மெனக்கெட்டு தேடிப்போய் அவனை உதைக்கிறார்கள். இது தவறான விசயம் தானா? என்பது படிப்போர் அறியாததா?

முகநூல் பலருக்கு நேரத்தை கடத்தும் இடமாக இருக்கலாம். சிலருக்கு பணிக்கான இடமாகவும் இருக்கலாம்! மது அருந்தும் காட்சிகள் திரையில் வருகையில் நீங்கள் பார்க்கலாம். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு! என்றொரு பெட்டிச் செய்தியை!

அடையாள அட்டை சமர்ப்பித்தல் என்ற உங்களின் கேள்வியில் என்னவோ இருக்கிறதே! என்று இன்னமும் யோசித்துக் கொண்டே தான் இருக்கிறேன். அட!

000

Post Comment

கருத்துகள் இல்லை: