புதன், ஜூலை 15, 2015

அன்பிற்கினியவள் -குறும் தொடர் ஒன்று


அன்பிற்கினியவள்

ஒன்று

கல்யாணி காய்கறி மார்க்கெட்டினுள்ளிருந்து வெளிவரும்போது களைத்துப் போயிருந்தாள். அவள்  இரு கைகளிலும் காய்கறிகள் நிரம்பிய பை இருந்தது. கணேசன் வந்து விடுவான் என்று அவள் எதிர்பார்த்து சாலையோரத்தில் நின்று விட தயாரில்லை. ஏனெனில் அவன் வழக்கமாக காத்திருக்கும் டீக்கடை முன்பாக அவன் ஸ்கூட்டர் இல்லை. கல்யாணிக்கு கணேசனின் ஸ்கூட்டர் அங்கு இல்லாதது எந்த வருத்தத்தையும் தரவில்லை.

கணேசனுக்கு இப்போதெல்லாம் அலுவலகத்தில் கடினமான பணி. வீடு வந்து சேருவதற்கே இரவு எட்டு மணியை போல ஆகிவிடுகிறது. அவன் வரும் நேரத்தில் அஸ்வின் தூங்கிப் போய் விடுவான். இருந்தும் இன்று ஐந்து மணியைப் போல மார்கெட்டுக்கு வந்து விடமுடியும் என்றே காலையில் சொல்லிச் சென்றிருந்தான் கணேசன். கல்யாணிக்கு சந்தேகமாய்த்தான் இருந்தது அவன் சொல்கையிலேயே. இப்போது தான் நினைத்தது சரிதான் என்று ஆகி விட்டது.

கல்யாணிக்கு வயது இருபத்தியெட்டு ஆகிவிட்டது. திருமணமாகி எட்டு வருடங்கள் கண்ணை மூடி விழிக்கும்  சமயத்தில் கழிந்து விட்டது. அஸ்வினுக்கு இப்போது ஏழு வயது. கணேசன் அஸ்வினுக்கு ஒரு தங்கையை கொடுத்தால் சரியாய் இருக்கும் என்றும் நாமிருவர் நமக்கிருவர் என்பதே சரியென்றும் சொன்னான். ஆனால் அதற்கு வழியில்லாமல் அவள் கர்ப்பப்பை துன்பம் செய்தது. கடைசியாக ஒருவழியாக இருவருமே அந்த எண்ணத்தை கைவிட்டார்கள். அஸ்வின் இப்போது மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறான். கணேசனுக்கு சின்னதாக தொப்பை போட்டு விட்டது. காதோரம் வெள்ளை நிற முடிகள் எட்டிப்பார்க்க ஆரம்பித்து விட்டது.

கல்யாணியை கணேசன் திருமணம் செய்கையில் வயது இருபத்தியெட்டு. பார்ப்பதற்கு முப்பது வயது தாண்டியவனாகத் தான் தெரிந்தான். கல்யாணிக்கு தன் வீடு தேடி வரும் மாப்பிள்ளைகளுக்கு காபி கொடுத்து கொடுத்து சலித்து விட்டது. அவள் முதலாக ஒரு மாப்பிள்ளைக்கு காபி கொடுத்த போது வயது பத்தொன்பது. அப்போது தனக்கு கணவனாக வருபவன் அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டுமென்ற கனவுகள் எல்லாம் இருந்தது. ஒரே வருடத்தில் முப்பது மாப்பிள்ளைகளுக்கு காபி கொடுத்து சலித்த பிறகு கனவுகளையும் சுருக்கிக் கொண்டாள்பின்பாக மாப்பிள்ளை என்ற மிடுக்கெல்லாம் இல்லாமல் வந்து காபி குடித்தவன் தான் கணேசன்.

கூடவே அவன் அம்மா வந்திருந்தது. அப்பா இறந்து நான்கு வருடங்களாயிற்றாம். இவளுக்கோ அம்மா இல்லை. அம்மா இறந்து நான்கு வருடங்களாகி இருந்தது. பென்சன் வாங்கும் அப்பாவும் இவளும் மட்டும் தான் வீட்டில். அதனால் தான்  ஊள்ளூரில்  தான் மாப்பிள்ளை வேண்டும் என்று தரகரிடம் அப்பா சொல்லியிருந்தார். அவர் தரகருக்கு தெரிவித்த ஒரே கண்டிசன் அது மட்டும் தான். மற்றபடி மாப்பிள்ளை மாதம் சொளையாய் அல்லது கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவேயிலை. தரகர் ஒரு நடுத்த குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். அவனுக்கு தெரிந்த உள்ளூர் மாப்பிள்ளைகளை வரிசையாக கொண்டு வந்து இவள் முன்பாக நிறுத்தினான். எல்லாமும் ஜாதக கோளாறுகளாக இருக்கவே அப்பா ஒரு கட்டத்தில் சலித்துப் போன பிறகு வந்தவன் தான் கணேசன்.

கணேசனுக்கு சொந்த வீடு இருந்தது. அப்பா போய் சுவற்றை தட்டிப் பார்த்து விட்டு வந்து இன்னம் ரெண்டு தலைமுறைக்கு தாங்கும் வீடு அது என்றார்கணேசனுக்கு ஆபீஸ் ஒன்றில் மாத வருமானம் பதினைந்தாயிரம் என்றார். அப்பாவின் பென்சன் பணமே பத்தாயிரம் என்று நினைத்துக் கொண்டாள். கணேசனின் அம்மாவிற்கும் பென்சன் என்று ஐந்தாயிரம் வருவதாக அப்பா சொன்னார். ஆனால் இவள் கணேசனை கட்டி வந்த ஒரு வருடத்தில் பேரனைக் கண்ணால் கண்டதும்  அவர் கண்ணை மூடி விட்டார்.

கல்யாணி ஆட்டோ ஏதாவது பாதையில் வருகிறதா என்று பார்த்தாள். வரும் ஆட்டோவிலெல்லாம் பயணிகள் இருந்தார்கள். ஆட்டோ ஸ்டாண்டு செல்ல வேண்டுமானால் அரைப் பர்லாங் தூரம் நடந்து செல்ல வேண்டும். ஷேர் ஆட்டோ கிடைத்தால் சந்தோசம் தான். ஆனால் அது கிடைப்பது அதிசயமாக இருக்கும்.

அப்போது தான் தன்னை ஒட்டினாற் போல ஆட்டோவை எதிர்பார்த்து வந்து நிற்கும் பெண்மணியை அவள் பார்த்தாள். அந்த உருண்டை வடிவான முகத்தை எங்கோ பார்த்ததாக அவளுக்கு தோன்றியது. அருகில் நின்றிருந்தவளும் இவளை அதே ஆச்சரியக் கண்களோடு தான் பார்த்தாள். இருவருக்குமே சரியாய் ஞாபகம் வராததால் குழம்பிப்போய் நின்றிருந்தார்கள். கடைசியாக அவள் தான் இவளை அடையாளம் கண்டு, நீ கல்யாணி தானே? என்றாள். கல்யாணிக்கு அப்போதும் அவளை யாரெனத் தெரியாமல் ஆமாமென தலையை ஆட்டினாள்.

பின்பாக அவளே தன்னை கீதா என்று அறிமுகப் படுத்திக் கொண்டாள். இப்போது தான் கல்யாணிக்கும் அவளை ஞாபகத்திற்கு வந்தது. கீதா இவள் பத்தாவது படிக்கையில் வகுப்புத் தோழி! பயங்கர வாயாடி! வகுப்பில் அவளுக்கு வாயாடி என்ற பட்டப் பெயரும் இருந்தது.

நீ வாயாடி தானே?” என்று அவள் சங்கடப்படுவாளோ என்பதை அறியாமலே கேட்டு விட்டாள். ஆனால் அதற்காக கீதா வருத்தமேதும் படாமல் சந்தோசமே அடைந்தாள். மேரேஜ் ஆகி கொழந்தைகள் எத்தனை? வீட்டுக்காரர் என்ன செய்கிறார்? என்று பல கேள்விகளை கீதா அவளிடம் அடுக்கினாள். ஒவ்வொன்றாய் பதில் சொல்லி முடித்த கல்யாணி கடைசியாய் கீதாவிடமும் அதே கேள்விகளை திருப்பினாள். கீதா முகம் உம்மென்றிருந்தது.

கணவரை விட்டு விட்டு காதலன் ஒருவனோடு ஓடி வந்த கதையை அவள் என்னவெனச் சொல்வாள்? தூரத்தில் இருக்கையில் இனித்த காதலன் பக்கத்தில் இருக்கையில் கடுப்பைக் கிளப்பியதை என்னவென்று சொல்வாள்? பதில் சொல்ல வேண்டுமே என்று கணவன் இறந்து விட்டதாய் சோக முகத்தை வைத்துக் கொண்டு கீதா சொன்னாள்.

அதைப்பற்றியெல்லாம் பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று காலியாய் வந்த ஆட்டோவை கல்யாணி நிறுத்தினாள். கீதாவின் கைப் பிடித்து ஆட்டோவில் ஏற்றினாள்கல்யாணி கீதாவை தன் வீட்டு வாசலில் இறக்கினாள். வீட்டு வாசல்படியில் ஸ்கூல் பேக்கோடு அமர்ந்திருந்த அஸ்வினை கீதாவுக்கு அறிமுகப் படுத்தினாள். கீதா அஸ்வினை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு கொஞ்சினாள். கல்யாணி வீட்டின் கதவைத் திறந்து உள்சென்று கீதாவை அழைத்தாள். கீதா அஸ்வினை இறக்கி விடாமலே வீட்டினுள் சென்றாள்.

கீதா கல்யாணியின் வீட்டை சுற்றிலும் ஒருமுறை பார்த்து விட்டு வீடு அழகாக இருப்பதாய் சொன்னாள். அதற்கு கல்யாணி புன்னகைத்து விட்டு சமையலறைக்குள் சென்றாள். அஸ்வின் இவளை யாரெனத் தெரியாமல் குழப்பத்திலேயே இருந்தான்.

ஆண்ட்டி, என்னை இறக்கி விடுங்க! நான் போய் கைகால் அலம்பி விட்டு வேறு ட்ரஸ் போட்டுட்டு வர்றேன். அப்புறமா மறுபடியும் என்னை தூக்கி வெச்சு கொஞ்சுங்க!” என்றான். கீதா அவனை கீழே இறக்கி விட்டாள். அஸ்வின் அவனாகவே தன் அறைக்கு புத்தகப்பையோடு சென்றான். கீதா கல்யாணியைத் தேடி சமையலறைக்குள் வந்தாள். கல்யாணி அனைவருக்கும் காபி போட்டுக் கொண்டிருந்தாள்.

வீட்டுல உங்க குடும்ப போட்டோ ஒன்னு கூட காணோமேடி?” என்றாள் கீதா.

அது முன் ஹால்ல மாட்டித்தான் இருந்துச்சுடி, சுவர் பெய்ண்ட் பண்ணுறப்ப கழட்டினது அப்புறம் மாட்டாம என் பெட் ரூம்லயே கிடக்குது!”

உன் வீட்டுக்காரர் எத்தனை மணிக்கு வருவார்?”

அவர் வர நைட் எட்டு மணி ஆயிடும்! ஏன் நீ வீடு போகணுமா?”

வீடு போறதா? நான் இருக்குறது ஒரு பொட்டி வீடு! அதும் வாடகை வீடுடி! என்னோட கதையை நீ கேட்டீன்னா உக்காந்து கோன்னு அழுதுடுவே!”

அப்ப நிதானமா உக்காந்து சொல்லு. நீ சொல்லி முடிச்சதும் கோன்னு அழறேன்!”

கீதா சட்டென அழ ஆரம்பித்தாள்.

ஏய் ஏண்டி அழறே? நீ உன் கதையை சொல்லவே வேணாம். அது எப்படியோ இருந்துட்டு போகட்டும். அதுக்காக அழாதேடி!”

கீதா அழத்துவங்கியதும் திடீரெனத்தான். அதேபோல் கல்யாணி அழுகையை நிறுத்தச் சொன்னதும் நிறுத்திக் கொண்டாள் திடீரென. அது கல்யாணிக்கே ஆச்சரியமாக இருந்தது. அஸ்வின் அப்போது சமையலறைக்குள் நுழைந்ததும் கல்யாணி அவன் டம்ளரில் காபி ஆற்றிக் கொடுத்தாள். அஸ்வின் அதை வாங்கிக் கொண்டு ஹாலுக்கு வந்தவன் டிவியை ஆன் செய்து கார்ட்டூன் சேனலில் ஆழ்ந்தான்.

எனக்கு கொஞ்சம் நாள் உன் வீட்டுல தங்கிக்க இடம் தருவியா கல்யாணி?” அடுத்த அஸ்திரம் ஒன்றை கீதா தொடுத்தாள்.

கணவனிடம் அனுமதி வாங்காமலேயே எப்படி இவளுக்கு நம்பிக்கை அளிப்பது என்று குழம்பியவள் அவளுக்கு காபி டம்ளரைக் கொடுத்தாள்.

உனக்கு சிரமம்னா வேண்டாம்டி, நான் என் பொட்டி வீட்டுக்கே போறேன். ஆனா எனக்கு அங்கே தொந்தரவுகள் ஜாஸ்திடி! நல்லவேளை உன்னை மார்கெட் கிட்ட பார்த்தேன். கடவுளாப் பார்த்து குழம்பியிருந்த எனக்கு உன்னை காட்டினார்!”

கல்யாணிக்கு அவள் பிரச்சனைகள் எதுவும் தெரியாததால் சும்மா தான் இருந்தாள்.

எதுக்கும் என் வீட்டுக்காரர் வரட்டும் பேசிடறேண்டி!”

சரி அவரு ஆள் எப்படி? ரொம்ப கோவக்காரரோ?” என்றாள். அதற்கும் பதில் சொல்லாமல் கல்யாணி காபி உறிஞ்சியபடி இருந்தாள்.

இரண்டு

கணேசன் படுக்கையில் வந்து விழுகையில் இரவி பத்தாகி விட்டது. கல்யாணி படுக்கையறைக்கு வந்து சேர இன்னமும் அரை மணி நேரமாகும். இன்று ஆபீஸில் அதிக வேலைப்பளுவால் உடம்பு பயங்கர அசதியாய் இருந்தது. கண்கள் சொக்கிக் கொண்டு வந்தது கணேசனுக்கு. இருந்தும் அவன் கல்யாணியின் வரவுக்காக காத்திருக்கத் துவங்கினான்.

வீட்டினுள் புதியதாக கல்யாணியின் தோழி இருப்பதால் சப்தமிட்டு கூப்பிடவும் இயலாது. அந்தத் தோழி நமட்டுச் சிரிப்பு சிரித்தாலும் சிரிப்பாள். கீதா அஸ்வினின் அறைக்குள் தூங்கப் போன பிறகு தான் கணேசன் தன் படுக்கையறைக்கே வந்தான். அவனுக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது.

கீதா என்கிற கல்யாணியின் தோழி இந்த வீட்டில் தங்கிக் கொள்வது சரியானது தானா? என்றே தெரியவில்லை. இருந்தும் ஒரு வழியற்ற பெண்ணுக்கு உதவலாமே என்ற மனப்போக்கில் தான் சம்மதம் சொன்னான். ஆனாலும் ஏதோ ஒரு பட்சி உள்ளுக்குள் பயமுறுத்தியது.

அந்தப்பெண் கீதா நல்ல வாயாடியாக பள்ளியில் இருந்ததாக கல்யாணி சொல்கிறாள். அவள் வாயாடியாகவோ, இல்லை ஊமைக்கோட்டானாகவோ இருந்தால் இவனுக்கு என்ன வந்தது என்று புரியவே இல்லை. கீதாவின் அப்பா, அம்மா யாரும் இல்லை என்கிறாள். கணவன் இறந்து விட்டான் என்கிறாள். ஆனால் காலில் மெட்டியும் கழுத்தில் தாலியும் நெற்றியில் பொட்டும் இருக்கிறது. அது ஊராரின் தொந்தரவுக்காக அவள் போட்ட வேஷம் என்கிறாள். விதவையான ஒரு பெண்ணை யார் போய் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்று கேட்டால், உலகம் உங்களுக்கு தெரியவில்லை! என்று வாயடிக்கிறாள்.

ஒருவேளை உலகம் தெரியாததற்கு காரணம் தூங்கி விழித்ததும் ஆபீஸ், ஆபீஸ் முடிந்ததும் வீடு என்றிருப்பதால் நிஜமாகவே உலகம் தனக்குத் தெரியத்தான் இல்லையோ என்ற சந்தேகம் வந்து விட்டது கணேசனுக்கு. கீதாவின் பார்வை கணேசனுக்கு சுத்தமாய் பிடிக்கவும் இல்லை. அன்னிய ஆடவன் அதுவும் தோழியின் கணவன் என்ற மரியாதை இல்லாமல் உதட்டைக் கடித்தபடி பேசுவதும் சேலை விலகியிருப்பதை கவனியாமல் இருப்பதும்! அது கூட அந்தப்பெண்ணின் இயல்பாகவும் இருக்கலாம் என்று கணேசன் நினைத்தான்.

ஒருவேளை தன் பார்வை தான் சரியில்லையோ? அவள் அப்படி இப்படி இருப்பதை எதற்காக நான் கவனிக்க வேண்டும்? இத்தனைக்கும் கல்யாணி அவளை விட உசத்தி தான். ஆனாலும் பெண்களில் சிலர் இந்த நகரத்தில் அப்படி இப்படி இருக்கத்தானே செய்கிறார்கள். இவனது ஆபீசிலேயே கூட அம்சவேணி இருப்பதில்லையா? அம்சவேணிக்கு அழகாக இரண்டு குழந்தைகள் கூட இருக்கின்றன. அவளது கணவர் கூட அழகானவர் தான். இருந்தும் ஆபீசில் அர்ஜுணனுடன் அவளுக்கு காதல் என்று தானே பேசுகிறார்கள். கலியாணமான பிறகு வருவது காதலா? என்று தான் இவனுக்கு புரியவில்லை. வாழ்க்கையை ஒவ்வொருவரும் விதம் விதமாக வாழ்ந்து கழிக்கத்தான் செய்கிறார்கள்.

இனி பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் இந்த கீதாவை கவனிப்பார்கள். கணேசன் வீட்டில் இன்னொரு பெண் என்பதை வீதியெங்கும் பரப்புவார்கள். கணேசன் வீட்டில் கல்யாணி என்கிற ஒரு பெண் தானே இருக்க வேண்டும்? எப்படி கீதா என்கிற இன்னொரு பெண் திடீரென முளைத்தாள்? சந்தேகங்கள் மனித மனங்களில் விழுந்து விட்டால் விடை தெரியும் வரை அதை நோண்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் மனதில் கல்யாணிக்கு மாற்றாக கணேசன் கீதாவை கொண்டு வந்து சேர்த்திருக்கிறான் என்றே இருக்கும்.

கணேசனுக்கு இதெல்லாம் தானாக தேடிக் கொண்ட தொல்லைகளாக தெரிந்தது. பின்னால் வரும் துன்பங்களை பற்றி யோசிக்கும் மனநிலையில் கல்யாணி இல்லை. அவள் எப்போதும் அப்படித்தான். அவளாக பஞ்சைக் கொண்டு வந்து தீயின் அருகில் வைத்து விட்டு பின்னால் ஐயோ பற்றிக் கொண்டதே! என்று வேண்டுமானால் கதறுவதற்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

என்ன சிந்தனைகள் இவை? யாரோ ஒரு அன்னியப் பெண் தன் வீட்டில் அடைக்கலம் தேடி வந்திருக்கிறாள். அந்தப் பெண்ணைப் பற்றி இப்படி தாறுமாறாய் யோசித்துக் கொண்டு கிடப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? எப்படிப் பார்த்தாலும் கீதாவின் பார்வை கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருந்தது உறுதி தான் இவனுக்கு.

இன்னம் தூங்கலை போல?” என்று தண்ணீர் செம்புடன் உள்ளே வந்த கல்யாணி அதை மேஜை மீது வைத்து விட்டு கதை உள்புறமாகத் தாளிட்டாள். அருகில் வந்து படுக்கையில் விழுந்தவள், ”ஐயா யோசிச்சு யோசிச்சு குழம்பிப் போய் இருக்கீங்களோ?” என்றாள். அவளுக்குத் தெரியாதா எட்டு வருட பழக்கத்தில் கணவனின் மனநிலை பற்றி!

தூக்கம் எப்படி வரும் எனக்கு கல்யாணி? துன்பத்தை கொண்டு வந்தது போல காரியம் செய்து விட்டு?”

ஏன் துன்பமா நினைக்கறீங்க நீங்க? அவ என் தோழிங்க! அவளா உதவி பண்ன முடியுமான்னு கேட்டா நான் என்ன சொல்றது? சரி நீங்க வந்த பிறகு கேட்டுச் சொல்றேன்னேன். அப்ப நான் கேட்ட போதே இது சுத்தப்படாதுன்னு நீங்க சொல்லியிருக்கலாமே! அதை விட்டுட்டு இப்ப வந்து சரியா? தப்பான்னு பேசிட்டு இருக்குறது எப்படிங்க?’ அவள் கேட்பதிலும் ஒரு நியாயம் இருப்பதாகத்தான் நினைத்தான் கணேசன். ஆமாம், அப்போதே இங்க வசதிப்படாது என்று சொல்லியிருக்கலாம்! ஆனால் அது முடியாமல் போனதற்கு அவளிடம் எதோ மாயக்கட்டு வித்தை இருந்ததாக நினைத்தான்.

சரி விடுங்க அந்த விசயத்தை, அவளுக்கு உங்க சிபாரிசுல ஒரு வேலை வாங்கிக் கொடுத்திட்டீங்கன்னா அவ பாட்டுக்கு தனியே கிளம்பிடப் போறா! அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க சீக்கிரம்

வேலை என்ன எல்லோரும் கையில வச்சுட்டு வா! வா! வான்னா உக்காந்துட்டு இருக்காங்க? பத்தாவது படிச்சிருக்கா. அதும் உன்னை மாதிரியே அதுல கோட்டை உட்ட படிப்பு. எங்காச்சும் கட்டிட வேலை நடந்துட்டு இருந்தா செங்கல் சுமக்கத்தான் உன் தோழி போகணும். உனக்கு சிரமமா இருந்தா கூட நீயும் போய் தூக்கு.”

என்னங்க இப்படி சொல்றீங்க? அப்ப அவளுக்கு உங்களால வேலையும் வாங்கி கொடுக்க முடியாதா?”

வேணும்னா உன் தோழிக்கு கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில ஒரு டாக்டராவோ இல்ல உள்ளூர் ஸ்டேசன்ல இன்ஸ்பெக்டராவோ வேலை வாங்கிக் குடுத்துடட்டுமா? அதுக்கு உன் தோழி சம்மதிப்பாங்களான்னு தெரியலையே!”
நீங்க இனி கிண்டல் பண்ணீட்டு தான் இருப்பீங்க அவளை.”

நான் எதுக்கு உன் தோழிய கிண்டல் பண்ணுறேன். வெளிய ஆபீஸ் வேலையெல்லாம் இந்தப் பொண்னு படிப்புக்கு கிடைக்காது. எங்காச்சும் வளையல், பலூன் விக்குற கடையில மாசம் நாலாயிரத்துக்கு வேணா வேலை வாங்கிக் குடுக்கலாம். சம்மதமான்னு காலையில கேட்டுச் சொல்லு!”

ஏனுங்க அந்த வேலை தான் கிடைக்குமா? அந்தச் சம்பளத்தை வச்சு அவ என்னுங்கொ பண்ணுவா?”

ஏண்டி அறிவிருக்கா உனக்கு? இப்படி ஒருத்திய ரோட்டுல பார்த்து வீட்டுக்கு கூட்டி வந்திருக்கோமே.. இதுக்கு முன்ன என்ன வேலை பார்த்துட்டு இருந்தா? எங்க இருந்தா? புருசன் செத்து எத்தனை வருசமாச்சு? இப்ப புவ்வாவுக்கு என்ன பண்ணுறா? இதெல்லாம் விசாரிக்கவே மாட்டியாடி?”

காலையில கேட்டுக்கிறேனுங்க

இனி காலையில வேற தனியாவா? அப்பத்தான புருசன் சாமத்துல இதெல்லாம் கேட்கச் சொல்லி பாடம் நடத்தியிருக்கானாட்டன்னு அவ நினைக்க வசதியா இருக்கும்ல!”

என்னைய தூங்க உடுங்க! என்னமோ பண்ணுங்க அவளை!” என்றவள் கோபித்துக் கொண்டவள் போல மறுபுறமாக திரும்பிப் படுத்துக் கொண்டதும் தான் கணேசனுக்கு முதலாக பயமாக இருந்த்து. அந்தப் பெண் வந்த முதல் நாளே கல்யாணி சலிப்பாய் திரும்பிப் படுக்கிறாளே!

(மறுபடியும் வளரும்)Post Comment

3 கருத்துகள்:

Avineni Bhaskar / అవినేని భాస్కర్ / அவினேனி பாஸ்கர் சொன்னது…

ஆரம்பம் நல்லா இருக்கு!

வாழ்த்துக்கள்!

சேக்காளி சொன்னது…

//அந்தப் பெண் வந்த முதல் நாளே கல்யாணி சலிப்பாய் திரும்பிப் படுக்கிறாளே!//
என்னடா உப்பு சப்பு இல்லாம தொலைக்காட்சி தொடர் மாதிரியே நகருதே ன்னு நெனச்சேன்.கடேசில திரும்பி படுக்க வச்சு தொடர் எப்ப தொடரும் னு காத்திருக்க வச்சிட்டீங்களே.

வா.மு.கோமு சொன்னது…

அந்தப் பெண் வந்ததும் கல்யாணி திரும்பிப் படுக்கிறாள்! ஹா! ஹா! எதேச்சையாய் அமைந்தது தான் நண்பா! கீதா நம்மாளை என்னாச்சிம் பண்டீடுவாளோன்னு இப்ப புதுசா யோசிக்கிறேன்!