வெள்ளி, ஜூலை 17, 2015

முகநூல் பதிகள் மூன்று

ஹெல்மட் இல்லீனு பாத்தாகளா? இல்ல ஆடு கொத்த வந்தவனோன்னு பாத்தாகளா?
=====

இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது என்ற இந்த மாலையில் என் டூ வீலரில் ஐந்து கி.மீ. மட்டும் பிரயாணம் செய்து வந்தேன். இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று வினவாதீர்கள்! பிரயாணம் முழுக்கவும் கிராமத்தின் தலைவாசல் வழியாகத்தான் பாதை வருகிறது. வாசலில் நின்றிருந்த ஒவ்வொரு ஊர்க்காரர்களும் என் வண்டியையும் என்னையும் உற்று உற்று பார்த்தார்கள். முதல் இரண்டு ஊர் தாண்டுகையில் இது மனதில் சரியாக ஒட்டவில்லை!

மூன்றவது ஊர் தாண்டுகையில் பாதை வழி கிராஸ் சென்றவரும் என்னை அதிசயமாக பார்க்கத்தான் ரஜினிகாந்த் ஞாபக மறதியில் தர்மத்தின் தலைவன் படத்தில் சாலையில் வேட்டி இல்லாமல் போவது போல நானும் செல்கிறேனோ என்று தமாசாக நினைத்துக் கொண்டேன்.
அப்புறம் ஒரு வேளை அவர்கள் பார்வைக்கு டிராகன் போலவோ அல்லது டிராகுலா போலவோ தோன்றியிருக்குமோ? என்று யோசித்தேன். அல்லது என் தலைக்கும் மேலே நான்கைந்து பொம்பளைப் பேய்கள் சொய்ங்கென பறந்து வந்து கொண்டிருந்திருக்கலாமோ! வாய்ப்பு இருந்திருக்கலாம்!

எப்படியெல்லாம் இந்த மனது செயல்படுகிறது பாருங்கள்!

000

இன்று சமூக வாழ்வின் பல துறைகளிலும் அர்ப்பணிப்புகளும் அறங்களும் மதிப்பற்ற கேலிப் பொருள்களாக ஆகிவிட்டன. சிறுபத்திரிக்கை இயக்கம் அதன் சுழற்சியில் ஓர் இருண்ட கட்டத்தை அடைந்திருக்கும் இன்று, மீண்டும் இவ்வியக்கத்தை வலுவாகக் கட்டமைக்க விழைவதும் பிரயத்தனப்படுவதுமான ஓர் முயற்சி புனைகளம்.

அறங்களுக்கு பதிலாக அதிகார மிடுக்குகள், தார்மீகங்களுக்கு பதிலாக சாதுர்யங்கள், அர்ப்பணிப்புகளுக்கு பதிலாக வியாபார உத்திகள் என இன்றைய இலக்கிய வியாபாரச் சந்தை கொழித்துக் கொண்டிருக்கிறது. முந்தைய தலைமுறைகளின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பை ஆதாய முதலாக்கி வியாபாரத்தை கன ஜரூராக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இந்த சந்தை வியாபாரிகள். தங்கள் யானைக்கால்களால் பாதையை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஊதிப்பெருத்து கரடுதட்டி விகாரமான யானைக் கால்களைப்  புறக்கணித்து விட்டோ, உதைத்து தள்ளி விட்டோ தொடரும் பயணங்களில் ஒன்றாக புனைகளம் அமையும்!
                                     -சி. மோகன். ஜனவரி 2007.

(ரொம்ப சரியான கணிப்பு! சரியான இலக்கியப் போராட்டம்! காலம் போன கடைசியில் புரிகிறது! இது புரிகையில் பாதை மாறிவிட்டது! அர்ப்பணிப்புகளுக்கு இங்கு எப்போதும் இடமில்லை! அவரவர்களுக்கான பொழப்பை அவரவர்கள் எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம்!)

000

பெருமரங்கள் வெட்டி விழும் ஓசை
எப்போதுமிருக்கும் இந்த வனத்திலிருந்து
நான் சீக்கிரமேனும் பறந்து கிளம்ப
ஆயத்தமாக வேணும்! ஒவ்வொரு மரம்
வீழ்கையிலும் என் இருதயம் பகீரென
ஒரு நிமிடம் நின்று விடுகிறது!
அருகிலிருக்கும் பறவையினங்கள்
எல்லாமே இந்த உலகம் அழிந்து விட்டது போல
கீச்சிட்டு அலறி திசை தெரியாமல்
பறந்து கிளம்புகின்றன! சீக்கிரம் நானும்
கிளம்பவேணும் இந்த வனத்தை விட்டு!
அதற்கு என்னிடம் தேவை சிறகுகள் மட்டுமே!
நானும் இந்த வனத்தின் ஒரு உயிரி தான்
அதனால் தான் ஊர்ந்து கடக்கவேணும் முயல்கிறேன்!

000


Post Comment

கருத்துகள் இல்லை: