புதன், ஜூலை 22, 2015

ரசிகா -குறும்தொடர் ஒன்று

ரசிகா
வா.மு.கோமு
ஒன்று

ஹெட்போனில் சாலையில் வண்டியில் சென்று கொண்டிருக்கையில் அலைபேசியை உபயோகப்படுத்தக் கூடாது என்று எல்லோருமே தெரிந்து தான் வைத்திருக்கிறார்கள். சிலர் அதை சாகசமாக கழுத்தை ஒரு புறம் சாய்த்து  கழுத்தாலேயே அலைபேசியை கீழே விழாவண்ணம் முட்டிக் கொண்டு சாலையில் பேசியபடி செல்கிறார்கள்அரசு தலைக்கு ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சொன்ன பிறகு கோவை மாதிரியான நகரங்களில் அப்படியான சாமார்த்தியசாலிகள் வண்டியை ஓரம் கட்டி நின்று பேசி முடித்து விட்டு செல்கிறார்கள்.

இங்கே விக்னேஷ் என்கிற இருபத்தியாறு வயதின் துவக்கத்திலிருக்கும் ஆண்மகன்  தன் டூவீலரை அறையிலேயே நிறுத்தி விட்டு சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறான். அவனிடம் நாளுக்கு நாள் பெட்ரோல் விலையேற்றம் கடுப்படித்ததால் தானா இப்படி சைக்கிளுக்கு மாறி பயணிக்கிறீர்கள்? என்று எந்த சேனல்காரர்களுக்கும் சாலையில் நிறுத்தி மைக்கை நீட்டி கேட்கத் தோணவில்லை. அப்படிக் கேட்டிருந்தாலும் அவன் அப்படித்தான் சொல்லியிருப்பான்.

விக்னேஷ் திருப்பூர்க்காரன். அம்மாவும் அப்பாவும் காலமாகி வருடங்கள் ஓடிவிட்டன. இருந்த ஒரு பெரியப்பாவும் பெரியம்மா பேச்சை மதித்து இவனை புறப்படச் சொல்லி வருடம் இரண்டு போய்விட்டது. பெரியம்மா பேராசைக்காரியாக இருந்ததால் வந்த வினைகள். பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்க இவன் இருந்த பாண்டியன் நகரில் பெரிய தலைகள் இல்லை. போக இவன் திருப்பூர்க்காரன் தானா? என்ற சந்தேகம் இவனுக்கே இருந்தது. திருப்பூரில் எல்லோருமே வெளியூரில் இருந்து வந்து பிழைப்புத்தனம் செய்து கொண்டிருப்பவர்கள். இவனும் அப்படியான ஆள் தான் என்று திருப்பூர் நம்பியது.

கோவையில் லேத் வொர்க்‌ஷாப்பில் பணியில் இருக்கும் தன்னைப் போன்ற அனாதைப் பயலான சுதாகருக்கு விக்னேஷ் ஒரு ரிங் விட்டு கட் செய்தான். சுதாகரன் முன்பாக இதே பாண்டியன் நகரில் வாழ்ந்த காலத்தில் இவனுக்கு நண்பன். பிற்காலத்தில் அவன் உதவி இவனுக்கு தேவைப்படும் என்றெல்லாம் அப்பா அம்மா இருந்த காலத்தில் விக்னேஷ் நினைத்துப் பார்த்தவனில்லை. இப்போது கோவையில் துடியலூரில் ஒரே அறையில் இருவரும் தங்கி இருக்கிறார்கள்.

வந்த புதிதில் விக்னேஷும் சுதாகருடன் லேத் வொர்க்‌ஷாப்பிற்குத் தான் சென்றான். ஒரே மாதத்தில் இது தனக்கு ஒத்து வராத தொழிலென அவனிடம் சொல்லி  விட்டொழித்தான். போக அவனுக்கான தொழில் எது என்று அவனுக்கே கூடத் தெரியவில்லை. காலைப் பேப்பரை வீடு வீடுக்கு கொண்டு சென்று போடும் டெலிவரி பாயாக மாறினான்ஒயரிங் கொஞ்சம் தெரியுமென்பதால் எலக்ட்ரிகல் கடையில் பழக்கமானான். அவர் புதிய வீடு எங்கேனும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் தகவலை இவனுக்குச் சொல்ல ஆரம்பித்தார். இவன் தனியே அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டான். இந்த இரண்டு வருடத்தில் துடியலூரில்  கால்வாசி அளவு நபர்களுக்கு  விக்னேஷ் ஒரு ஒயரிங் மேன் என்று தெரிந்திருந்தது.

அவன் தனது விசிட்டிங் கார்டை அடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். போக மாலை நேரத்தில் சைக்கிளில் ஏலக்காய் டீயை தன் அறையில் போட்டு சைக்கிளில் கட்டிக் கொண்டு சுற்ற ஆரம்பித்தான் இந்த ஆறு மாத காலத்தில். வருமானம் அதிலேயே இருக்கிறதே நண்பா! பின் எதற்கு சைக்கிளில் ட்ரம்மை கட்டிக் கொண்டு ஊர் ஊராய் சுற்றுகிறாய்? அதான் கேரளத்து குட்டேட்டன்கள் வீதிக்கு வீதி பயங்கரமாய் சோடித்து பேக்கரிகளை வைத்திருக்கிறார்களே! என்று சுதாகரன் தான் கேட்டான் இவனிடம்.

சைக்கிளை மிதித்து பயணம் செய்வது உடல் நலத்திற்கு நல்லது என்றும், உடம்பு பைக்கிலேயே சென்று கொண்டிருந்தால் சோம்பேறித்தனம் பட்டு விடும் என்றும் அவனுக்கு விளக்கினான். ஏலக்காய் டீ விற்பது பெயருக்குத்தான் என்றும் மாலை நேரத்தில் சக்கரை வியாதிக்காரர்கள் கையை வீசி வீசி நடந்து கொண்டிருப்பதைப் போல பின்னாளில்  நான் நடக்க வேண்டிய அவசியமேதும் இல்லை என்றும் சொன்னான். இவன் சொல்கையில் சுதாகரனுக்கே இன்னொரு ட்ரம் வாங்கி விடும் ஆசை வந்தது.

விக்னேஷ் எதைச் செய்தாலும் அதில் தான் மட்டுமே இருக்க வேண்டுமென்று நினைக்கிறான். அவனுக்கு ஒரு முதலாளி என்கிற ஆளைப் பிடிக்காது. அவனே முதலாளியாக இருக்க வேண்டும். அதனாலேயே லேத் மெஷின் வாழ்க்கை அவனுக்கு பிடிக்கவில்லை. இப்போது இவனைப்பார்க்கையில் சுதாகரனுக்கும் அவன் தொழில் மீது ஒரு சலிப்பு இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அவன் அந்த வொர்க்‌ஷாப்பிலிருந்து  விடுபட்டு வர முடியாத அளவுக்கு ஐந்து வருட காலமாக மாட்டிக் கொண்டான்.

அங்கு பத்து லேத் மிஷின்கள் ஓடுகின்றன. இவன் ஒரு டர்னர் அங்கு. தவிர முதலாளி இவனை மலைபோல் நம்புகிறார். வரும் ஆட்கள் எல்லோரும் வெளியூர் ஆட்கள். ஒரு வருடம் அவர்கள் கணக்கு. தீபாவளி போனஸை கண்ணில் பார்த்ததும் ஊர் சென்றவர்கள் யாரும் திரும்புவதில்லை.

முதலாளியின் சின்ன மகள் ஐஸ்வர்யாவின் காதல் வலையில் வேறு விழுந்து விட்டான் சுதாகரன். ஐஸ்வர்யா இப்போது தான் கல்லூரியில் முதலாண்டில் காலடி வைத்திருக்கிறாள். அவளைக் கட்டிக் கொண்டால் பிற்காலத்தில் வீட்டோடு செட்டில் ஆகிவிடும் கணக்கை வேறு போட்டுக் கொண்டிருந்தான்.

காதலி இருக்குமிடத்தை விட்டு விட்டு வேறு தொழில் என்று தாவி விட்டால் ஏங்கி ஏங்கி துரும்பாய் இளைத்து விடுவோமென்ற கவலையும் அவனுக்கு இருந்தது. போக ஏற்கனவே துரும்பாயிருக்கும் ஐஸ்வர்யா வேறு இன்னமும் இளைத்தாள் என்றால் அது பார்க்க வேறு சகிக்காது.

பாக்கெட் மணிபர்சில் இருக்கும் அவளது புகைப்படத்தை ஒருநாள் சுதாகரன் விக்னேசுக்கு காட்டினான். எப்படி என்னோட ஆளு? என்றொரு கேள்வியையும் வைத்தான். செக்கச் செவேல்னு வெளிநாட்டுல இருந்து இறங்குன புள்ளை மாதிரி இருக்கேடா? உனக்கு சூட் ஆகுமா? என்றான் விக்னேஷ். அதெல்லாம் ஆகும் லைட்டை ஆப் பண்ணிட்டா! என்றி சொல்லிச் சிரித்தான் சுதாகரன்.

சுதாகரன் இவனை விட ஒரு வயது மூத்தவன். அவனுக்கு இப்போது இருபத்தியேழு! விக்னேஷ் தான் அந்தக் கணக்கைச் சொன்னான். அந்த பொண்ணு காலேஜ் முடிச்சதும் உன்னை கட்டிக்கிறேன்னு சொல்றதை நம்பாதே சுதாகராஅவங்க அப்படித்தான் சொல்வாங்க! உன் முதலாளி அவளை மேலே படிக்க வைக்க அனுப்பமாட்டார்னு எந்த நிச்சயமும் இல்லை! அப்புறம் அவர் கிட்ட கைநீட்டி சம்பளம் வாங்குற உனக்கு அவரோட பொண்ணைத் தர நிச்சயம் சம்மதிக்க மாட்டாரு!

அந்தப் பொண்ணும் இப்ப உன் மேல காதலா இருக்குற மாதிரி மூனு வருஷம் கழிச்சும் இருக்கும்னு உறுதி எல்லாம் இல்லை. உனக்கு டாட்டா காட்டிட்டு நேரா ப்ளைட் புடிச்சு அமெரிக்காவுல கூட போய் செட்டில் ஆயிடும். உனக்கு சரியா குட்டானா தாடி கூட வர்றதில்லேடா! அங்கங்கே ஒட்டுப்புல்லு மாதிரி வருது. வளர்த்தினா அசிங்கமா வேற இருக்கும்.

வேற என்ன தான் என்னை பண்ணச் சொல்றே விக்னேஷ்? என்றவனுக்கு அவன் சொன்ன ஐடியா அழகாக இருந்தது. பேசாம அந்த பொண்ணு கிட்ட பேசிடு! எதுக்கு படிப்பு உனக்கு? பேசாம என்னை கட்டிக்கிற வழியப்பாருன்னு பேசு! வயசு வேற ஆயிட்டே இருக்குதுன்னு சொல்லு!

அவன் அதை அவளிடம் பேசுவதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தான் போனில் பேசும் விசயமல்லவே இது! வாழ்க்கை பிரச்சனைகளை பலர் போனில் பேசியே கடுப்பாகி தொலைத்துக் கொள்கிறார்களே! நேரில் பேசுகையில் அவளின் முகம் செல்லும் போக்கிலிருந்து அவளுக்கு தான் சொல்லும் திட்டம் முதலில் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதைக் கூட பார்த்து அறிந்து விடலாமே! நல்ல முறையில் எடுத்து இயம்பிய விக்னேஷுக்கு நன்றி சொன்னான் சுதாகரன்.

அன்றிலிருந்து விக்னேஷிடம் சீக்கிரம் நான் ரூமை காலி பண்ணிட்டு மாமனாரு வூட்டுல போயி செட்டில் ஆயிடுவேன்டா! அப்புறம் நீ தனியாத்தான் இங்க கிடக்கணும். அவ ரூம் வேற ஏசியாம்டா! கொஞ்சம் பழக்கமாகுறதுக்கு சிரமம் தான். சளி வேற பிடிச்சுக்கும் எனக்கு! ஆனா சீக்கிரம் நானும் செக்கச் செவேல்னு ஆயிடுவேன்லஎன்று மந்திரித்து விடப்பட்டவன் போல பேசிக் கொண்டிருந்தான். அவன் நிலை இவனுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. காதலில் என்ன வேண்டுமானாலும் நடந்து விடும் என்று இவனுக்குத் தெரியாதா என்ன? ஏன் இப்படி முட்டாள் தனமாக ஐஸ்வர்யா பாட்டாகவே பாடிக் கொண்டிருக்கிறான் என்றும் புரியவில்லை.

விக்னேஷ் டீ ட்ரம் கட்டிய சைக்கிளில் கவுண்டர் மில் ஸ்டாப்பிலிருந்து மேற்கே சாலையில் சென்று கொண்டிருந்தான். அவன் அபினயா கல்லூரி வாசலுக்குத்தான் வேகமாகச் சென்று கொண்டிருந்தான்மூன்று மணி என்றிருக்கையில் கல்லூரியிலிருந்து மாணவர்களும் மாணவிகளும் வெளியே நடமாடுவார்கள். ஆறு மாத காலமாக இவன் அங்கு மாலை மூன்று மணிக்கு டாண் என்று சென்று கல்லூரி வாசலில் நின்று கொண்டிருக்கிறான்அங்கு அவனுக்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் இப்போது பெருகி விட்டது.

இன்று எப்படியும் ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டதோ என்று விரைவாக சைக்கிளை அழுத்தினான் விக்னேஷ். வானம் வேறு மேகங்கள் சூழ்ந்து கொண்டு மிரட்டியது. எப்படியும் கனத்த மழை வந்து விடுவதற்கான அறிகுறியோடு இருந்தது. “ஏலக்காய் டீ! ஏலக்காய் டீ! ட்ரம் டீ!” என்று சப்தமிட்டவாறு இவன் வழக்கமான இடத்தில் சைக்கிளை ஓரம் கட்டி நிறுத்தினான். இவனுக்காக காத்திருந்த சிலர், ‘வந்து சேர்ந்தியா மவராசா!” என்று கலாட்டா செய்தார்கள். பெண்கள் கூட்டமொன்றும் இவனை நெருங்கியது. எப்படியும் முப்பத்தைந்திலிருந்து நாற்பது கிளாஸ் டீ வரை அங்கு ஓடி விடும். இரநூறு ரூபாய் பாக்கெட்டுக்கு வந்து விடும்.

விக்னேஷ் படப்படவென காகித அட்டை டம்ளரில் ட்ரம்மிலிருந்து பிடித்து விரைவாக தன் முன் நீண்டிருந்த கைகளுக்கு கொடுத்தான். அங்கு இவனை ஏமாற்றி குடித்துவிட்டுச் செல்ல யாருமில்லை. போக ஆறு ரூபாய்க்கு தான்  ஒரு கப் டீயை கொடுக்கிறான். சில்லறை இல்லாதவர்கள் மறு நாள் கூட கொடுத்து விடுகிறார்கள். கொஞ்சம் நிதானத்திற்கு வந்ததும் தான் அவன் கூட்டத்தில் அந்தப் பெண்ணைத் தேடினான். அந்தப் பெண் அவனது தேவதை.

இப்போதெல்லாம் இரவுக்கால கனவுகளில் அவள் மட்டுமே வருகிறாள். முன்பாக சினிமா நடிகைகள் அவன் கனவுகளில் வந்து கைப்பிடித்து மரக்கூட்டங்களுக்கு இடையில் ஓடினார்கள். அவர்களைத் துத்தியபடி ஒரே நிறத்தில் உடையணிந்த பல பெண்கள் குலவைச் சத்தம் போட்டபடி ஓடி வந்தார்கள். அவர்களெல்லாம் என்னவானார்கள் என்று தெரியவில்லை இப்போது இவனுக்கு. அதாவது இந்த தேவதை வந்து சேர்ந்த பிறகு எக்ஸ்ட்ரா ஆர்ட்டிஸ்டுகள் குலவை போட வருவதில்லை.

இவனுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கையில் எட்டாக் கனிக்கு ஆசைப்படுவது போலத்தான் இருந்தாலும் மனதில் நினைத்துக் கொள்வதற்கு என்ன? என்று நினைத்துக் கொண்டான். அவள் பார்வைக்கு சுதாகரன் சொன்னது போலவே ஏசி அறையில் படுத்துறங்கி வெளிநாட்டு மாப்பிள்ளையை கட்டிக் கொண்டு  விமானம் ஏறுபவள் தான்.

விக்னேஷிற்கு அந்தப் பெண்ணின் பெயர் கூடத் தெரியாது என்றாலும் அவளைப் பார்க்கையில் இவள் மனைவியாக வாய்த்தால் இந்த வாழ்க்கை பயங்கரமாய் இனிப்பு சுவை கூடியதாய் மாறி விடும் வாய்ப்பு இருப்பதாக நினைத்தான். மனிதன் ஆசைப்படுவதற்கு அளவு என்று எதுவும் இல்லை தான்.

டீயை குடித்து முடித்தவர்கள் அந்த கப்புகளை ஒரே இடத்தில் குவித்தார்கள். இவன் அந்தக் குப்பைகளாய் விழுந்த டம்ளர்களை அள்ளி எடுத்து தன் சைக்கிளில் இருக்கும் சாக்குப்பையில் போட்டு விட்டு கிளம்பி விடுவான்அப்படியான ஒரு நாளில் இவன் அந்த டம்ளர்களை கையில் அள்ளி எடுத்து வந்து சாக்குப்பையில் திணித்துக் கொண்டிருந்த போது தான் அந்த தேவதை கூடவே இரண்டு பெண்களுடன் அங்கே வந்தது. அவர்கள் டீ கேட்டுத்தான் வந்தார்கள். அவர்களில் ஒருத்தி சரியான வாயாடியாக இருக்க வேண்டும்.

-இன்னாபா! உன் டீ சூப்பரா கீதுன்னு காலேஜ் பூராவும் ஒரே நாயமா கீது! அப்பிடி இன்னாதான் உன் டீயில கீது? ஊத்திக் குடுப்பா டேஸ்ட்டு பாக்கலாம்! என்று முரட்டுத்தனமான ஆண்குரலில் முயற்சியெடுத்துப் பேசினாள் அவள். இவன் தன் கையில் எச்சி டம்ளரை தொட்டு விட்டதாகவும் அதில் இனி புதிய டம்ளரை தொட்டு எடுத்து பிடித்துக் கொடுக்க முடியாதே என்றும் சொன்னான்.

அன்று அவன் தேவதையே ட்ரம் டீயைப் பிடித்து அவள் தோழிகளுக்கு  கொடுத்து தானும் குடித்து காலி டம்ளர்களை அவனது சைக்கிளில் தொங்கிய சாக்கில் போட்டாள்அவளாக தன் தோழிகளுக்கு டீப் பிடித்து கொடுத்தது அவனுக்கு பிடித்திருந்தது. போக கடைசியா, நிஜமாவே உங்க டீ நல்லா இருக்கு! என்ற சர்ட்டிபிகேட்டையும் கொடுத்துச் சென்றாள் அவன் தேவதை.
அன்றிலிருந்து வாரத்தில் எப்படியும் இரண்டு நாட்களேனும் அவர்கள் வந்தார்கள் இவனிடம் டீ குடித்துச் செல்ல. கலா, விமலா என்று தங்களை அடையாளப்படுத்தும்படி அவர்களில் பலர் பேசிக்கொண்டாலும் இன்னமும் அவனது தேவதையின் பெயர் எதுவென்று அவனுக்கு கவனிக்க முடியவில்லை.

அப்படி அவள் பெயர் தெரிந்தால் அதையும் இவன் பெயரையும் இணைத்து கவிதை எழுதிப் பார்க்கலாம். நன்றாக இருக்கிறது என்று சுதாகரன் சொன்னான் என்றால் அதை ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பி வைக்கலாம். அது பிரசுரமாகி விட்டால் அவன் கவிஞனாகி விடுவான். உங்க கவிதை மிகச் சிறப்பா இருந்ததுங்க! என்று தேவதையே அவனை பாராட்டலாம். அது உங்களை நெனச்சி நானு ராவுல குப்புறப்படுத்து எழுதினது தானுங்க! என்று அசடு வழிந்தபடி அவளிடம் கூறலாம். செம! செம! என்று அவள் இவனைப் பாரட்டி கன்னத்தில் ஒரு இச்சு கூட கொடுத்து விட்டுச் செல்லலாம்! நினைப்பு பொழப்பை கெடுத்து விடும் என்பார்கள்!

-டீ கொடுக்கிறவனை நான் விரும்புறேன்டி கலா! அழகா இருக்கான். கையில தொழில் வச்சிருக்கான். எப்படியும் மூனுவேளை சாப்பாடு கெட்டி! சிவப்பா இருக்கான். வீட்டுல கோவிச்சுட்டு வந்து இங்க பொழப்பை பாக்கிறானோ!

-ஏய் விமலா! அவன் என்னோட ஆளுடி! நீ கல்லை வீசி மாங்காயை தட்டிட்டு போயிருவே போல இருக்கே? கொன்னுடுவேன் ஜாக்கிரதை.

-ஏன்டி அடிச்சுக்கறீங்க? ஏற்கனவே அவன் எனக்கு மெசேஜ் பண்ணிட்டான். ப்ரியா ஐ லவ் யூடி செல்லம்னு! அடுத்த மாசம் மருதமலையில வச்சு சிம்பிளா தாலி கட்டுறேன்னு சொல்லிட்டான்! என்று அவர்களிடையே பீதியை கிளப்பினாள் ப்ரியா.

-உன்னை டைவர்ஸ் பண்ணிட்டு என்னை கட்டிப்பான் ஒரே மாசத்துல, சேலஞ் பண்ணிக்கலாமா? என்றாள் விமலா.

-ஏப்பா டீக் குடுக்குற தம்பி, இந்த ப்ரியா பொண்ணை நீ கட்டிக்காதே! இது ஒரு தீனிக்கொடுக்கு! எந்த நேரமும் வாயி அசை போட்டுட்டே இருக்கோணும் இதுக்கு.

-நீங்க சொன்னா கேட்டுக்கறேனுங்க்கா! என்றான் விக்னேஷ்.

-அக்காவா? அப்ப நீ என்னை கட்டிக்க மாட்டியா?

-நீங்க தானுங்க்கா தம்பி தம்பின்னு பாசமா கூப்புட்டு சொன்னீங்க!

ஹோ ஹோய்! ஹோ ஹோய்! என்று அவர்கள் கூச்சல் எழுப்பினார்கள்.

-ஏனுங் டீக்கார்ரே! இங்க சித்தெ என்னையப் பாருங்கொ! நானு அழகாத்தானே இருக்கெனுங்கொ? அடச் சொல்லுங்கொ சட்டுனு! சட்டுனு சொன்னீங்கன்னா பட்டுனு நானும் எம்பட காதலை சொல்லிப்போடுவேணுங்கள்ளோ!

-நீங்க அழகாத்தான் இருக்கீங்க மேடம்! டீக்கு காசு கொடுத்தீங்கன்னா நானு போயிட்டே இருப்பேனுங்க மேடம்என்றதும் முகத்தை சுழித்துக் கொண்டு அவள் அவனிடம் காசு கொடுத்தாள்.

-நீங்க பாருங்கொ ஒருநாளைக்கி இல்லாட்டி ஒருநாளு சிக்குவார்ல சிக்கி சீக்கி போட்டுட்டு இருக்கப்போறீங்கொ! அன்னிக்கி எங்கிட்ட வந்து கண்ணைக் கசக்கீட்டு நிப்பீங்கொ!

-அப்படியே ஆகக்கடவது கலா!, என்றாள் விமலா. அவர்கள் இடத்தைக் காலி செய்து கிளம்பினார்கள். விக்னேஷ் நிதானமாக அவன் தேவதை ஒருவேளை தாமதமாய் வருவாளோ? என்று காத்திருந்து கிளம்ப வழியில்லாமல் மழைத்துளி பெரிது பெரிதாக மண்ணில் விழ ஆம்பித்தது. சைக்கிளை ஓரம் கட்ட கூட வழியின்றி இருந்தது. பேருந்து நிறுத்த நிழற்குடை ஏற்கனவே நிரம்பிப்போயிருந்தது. மழையில் நனைந்து கொண்டே விக்னேஷ் சைக்கிளை மிதிக்கத் துவங்கினான்.

கவுண்டர்மில் ஸ்டாப்பிங் வந்ததும் மேட்டுப்பாளையம் சாலையில் ஓரமாய் சைக்கிளை மிதித்தான். அவனது வலது புறம் சாலைக்கு மறு புறத்தே கொரியர்காரர் அவனை சைகையால் அழைத்தார். விக்னேஷ் அவரை பார்த்து விட்டு இனி அந்தப்புறம் செல்லாமல் போகமுடியாதென வரும் வாகனங்களை கவனித்து சாலையைக் கடந்தான்.

-மழையில நனைஞ்சுட்டே போறியேப்பா! சித்த எங்காச்சிம் ஸ்டாப்பிங் கொடையில நின்னுட்டாவது வரலாம்ல!

-எங்கீங்க அதுக்கு நேரம். மழை சடச்சடன்னு பிடிச்சதும் நனைஞ்சிட்டேன். முழுக்க நனைஞ்சாச்சு.. இனி முக்காடு போடுறதான்னு அப்படியே வந்துட்டேன்.

அவருக்கு டீயைப் பிடித்துக் கொடுத்து தானும் ஒரு கப் டீயை குடித்தான். அவரிடம் சில்லறை வாங்கிக் கொண்டு கிளம்பினான் வலது புற ஓரத்திலேயே! அப்போது சிவப்பு நிற மாருதி ஒன்று இவன் மீது தன்னீரை வாறி அடித்தபடி கடந்து சென்றது. எப்படி பார்த்தாலும் இவன் இன்னமும் சாலையில் ஒதுங்கித்தான் வந்திருக்க வேண்டும்.

சாலையை கடந்து விட வசதியாய் சமயம் பார்த்து கொஞ்சம் சாலையை ஒட்டியே வந்தான். இவன் மீது தண்ணீரை வாறி அடித்துச் சென்ற அந்த மாருதி சாலையை விட்டு ஓரமிறங்கி பின்னால் ரிவர்ஸில் வந்து இவனிடம் நின்றது. இவனோ சாலையைக் கடக்க முயற்சி எடுத்துக் கொண்டிருந்தான். வாகனங்கள் இந்த கொட்டும் மழையிலும் வேகமாய் சென்று கொண்டே இருந்தன.

மாருதியின் பின்கதவு திறந்து கையில் குடையுடன் அவன் தேவதை தான் இறங்கினாள். ஐயோ! இவன் தெப்பலாய் நனைந்திருக்கும் தன்னையே ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான். இவள் எதற்காக குடையோடு இறங்குகிறாள்? இன்று காலேஜுக்கு வரவில்லை போலிருக்கிறது தேவதை. போக பச்சை நிற சேலையில் கண்ணைப் பறிக்கும் விதமாய் இருந்தாள். இன்று தூக்கம் போனது போனது தான். டீ வேண்டுமென கேட்பாளோ?

-இதைப் பிடிங்க சீக்கிரம்! எங்க கார் தான் உங்க மேல தண்ணியை வாறி அடிச்சுடுச்சு! அதுக்காக மன்னிச்சுக்குங்க! பிடிங்க சீக்கிரம்!, என்று குடையை நீட்டினாள். குடையை நீட்டியவள் நனைகிறாளே என்று உடனே என்ன ஏது?  என்று கேட்காமலே வாங்கிக் கொண்டான். அவ்வளவுதான். இவன் வாங்கிக் கொண்டதும் அவள் குடு குடுவென ஓடிச் சென்று மாருதியில் மறைந்து போனாள். கார் உடனேயே கிளம்பி விட்டது.

என்ன நடந்தது இங்கே? கண் மூடி விழிப்பதற்குள் தேவதை வந்தாள், சாரி சொன்னாள், குடை ஒன்றைக் கொடுத்தாள், அதையும் ஏன் என்று கேட்காமல் வாங்கிக் கொண்டான். அப்படி அவளுக்கு நான் என்ன முக்கியமானவனா? ஏதோ சாலையில் டீ விற்றுக் கொண்டு செல்லும் சாதாரணமானவன் விக்னேஷ். அவனுக்காக அவன் மீது தண்ணீரை வாறி இறைத்ததற்காக ஒருத்தி காரில் இருந்து இறங்கி சாரி கேட்டு குடை கொடுத்துச் செல்கிறாள். அவன் தன்னை கிள்ளி நிஜமா? என்று செக்கப் செய்து கொண்டான். நிஜம் தான்.

ஒருவேளை தேவதையை நினைத்து தலையணையை இவன் கட்டிக் கொண்டு தூங்குவது போல அவளும் இவனை நினைத்து தலையணையை கட்டிக் கொண்டு ஒவ்வொரு இரவிலும் தூங்குகிறாளோ? வாய்ப்பிருக்கலாம் அல்லவா! பின் எதற்கு குடை கைக்கு வந்திருக்கிறது?

சுதாகரனிடம் இந்த விசயத்தை சொன்னதும் அவன் பெருத்த மகிழ்ச்சி அடைந்தான். அவர்கள் தங்கியிருக்கும் இந்த அறை மிக்க ராசியான அறை என்றான். இருவரையும் வாழ்க்கையில் உயர்த்திப் பார்க்காமல் அந்த அறை ஓயவே போவதில்லையாம். காலி செய்து அவரவர் வாழ்க்கையை பார்க்கச் சென்றாலும் இந்த அறையை யாருக்கும் வாடகைக்கு தர சம்மதிக்கவே கூடாதாம். வீட்டு ஓனருக்கு மாதா மாதம் பேங்க் அக்கெளண்டில் பணத்தை போட்டு விட வேண்டுமாம். மாதம் ஒருமுறை அவரவர் மனைவியோடு இங்கே கோவிலுக்கு வருவது போல வந்து அறையை நீக்கி கும்பிட்டு விட்டு செல்ல வேண்டுமாம்.

என்ன சொல்லியும் அவன் பேச்சை இவனால் நிறுத்தவே முடியவில்லை. கையில் வைத்திருந்த குடை வேறு  பயங்கர செண்ட் மணத்தை அறைக்குள் வீசிக் கொண்டிருந்தது. குடைக்கெல்லாமா செண்ட் அடித்து பெண்கள் வைத்துக் கொள்கிறார்கள்? இல்லை அவர்கள் கையில் இருப்பதால் வாசனை இதற்கும் வந்து ஒட்டிக் கொண்டதா?

-அடே சுதாகரா! உன்னோட கற்பனையை நிறுத்து உடனேமொதல்ல நாம் யாரு? நம்ம வேலை என்ன? இதை யோசிடா! அப்புறம் நமக்கு இந்த கத்திரிக்கா வெண்டக்கா காதல் எல்லாம் ஒத்து வருமா? அதை யோசிக்கணும். கப்பலோட்டக் கூட ஆசைப்படலாம். ஆனா நடக்கணுமே! இப்பவே நீ வாழ்க்கையில செட்டில் ஆன மாதிரி கனவு கண்டுட்டு இருக்கே! அது தப்புடா! நமக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்ல. நீயும் நானும் தான். உனக்கு நான் சொந்தம். எனக்கு நீ சொந்தம்.

உன் கல்யாத்துல நான் தான் துணை மாப்புள்ளை. என் கல்யாணத்துல நீதான் துணை மாப்பிள்ளை. அவ்ளோதான். நமக்குன்னு மனைவியா யாருக்கு வர கொடுப்பினை இருக்கோ அவ தான் வருவா! ஆசைப்படறக்கு ஒரு அளவு இருக்கு.

அவ கார்ல போறவ சுதாகரா. அவ ஒரு வருத்தத்துல கூட எனக்கு கொடையை கொடுத்துட்டு போயிருக்கலாம். முன்ன பின்ன தெரியாதவனுக்கு அவ தன்னோட கொடையை கொடுக்கலை. அவ படிக்கிற காலேஜ் வாசல்ல டீ விக்கிறவன் நான். அந்த பழக்கத்துல கொடுத்திருப்பா. நாளைக்கி நான் இதை கொண்டி கொடுக்கணும். என் படிப்பு பத்தாவது. உன் படிப்பு எட்டாவது. அதானால சுதாகரா....

-போடா நீ எப்பவும் மாத்தி மாத்தியே யோசிக்கிறே! நல்லதை மட்டும் யோசி! ஆனா உன்னை மாதிரி புத்தி சொல்றதுக்கும் எனக்கு ஒருத்தன் வேணும் தான்டா! சொன்ன மாதிரி அவங்க பெரிய எடம் தான் . என்ன வேணா நம்மளை பண்ணிடுவாங்ககடைசிக்கி சிரமப்படப்போறது நாம தான்!, என்றான் சுதாகரன்.

000 வளரும்.


Post Comment

கருத்துகள் இல்லை: