வெள்ளி, ஜூலை 24, 2015

ரசிகா - தொடர் மூன்று

ரசிகா

வா.மு.கோமு
நான்கு


சித்ரன் ஏக கடுப்பில் நின்றிருந்தான். ஒரு பெண் தன்னை விரும்பட்டும் அல்லது விரும்பாமல் போகட்டும், அது அவள் விருப்பம். கிட்டத்தட்ட ஆறுமாத காலமாகியும் இவனை சாந்தி எப்படி வைத்துப் பார்க்கிறாள்? என்று கூட புரியவில்லை இவனுக்கு. எல்லாம் இந்த ரமேஷ் பயலால் வந்தது. அவனை உதைக்கலாம் தான். அவன் தான், மாமனாரே மாமனாரே! அந்தப் பொண்ணு காலேஜுக்கு வந்து அரை வருஷம் ஆயிடுச்சு. நாம இந்த வருசத்தோட இங்கிருந்து கிளம்பிடுவோம். பிறகும் நாம காலேஜ் வந்து வாசல்ல நின்னு அந்த சாந்திப் பொண்ணை வழி அனுப்பி வச்சுட்டு போயிட்டு இருக்க முடியாது. அதனால சீக்கிரமா அந்தப் பொண்ணு கிட்ட பேசிடு! என்றான்.

அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்கிறதென சித்ரனும் நினைத்தான்.ஆறு மாதம் சீக்கிரமாகத்தான் ஓடிப் போய் விட்டது. கல்லூரிக்குள் காலையில் சாந்தி தன் தோழிகளோடு வருகையில் ரமேஷும், சுப்புவும் தூண்டி விட ஒரு வேகத்தில் அவள் பின்னால் சென்றான். இவன் பின்னால் வருவது தெரிந்ததும் அவள் தோழிகள் கூட சற்று வேகமாக முன்னால் நகர்ந்தார்கள்.

சாந்தி ஒரு நிமிசம்என்று கூப்பிட்டு அவளை நிறுத்தியும் விட்டான்.

என்ன வேணும்? எங்கிட்ட இப்ப சில்லறை இல்லை!” என்று நின்று சொல்லி விட்டு வேகமாய் சென்று விட்டாள். இவனுக்கு ஒரு நிமிடம் அவள் சொல்லிச் சென்றதின் அர்த்தம் புரியவில்லை. அது புரிந்ததும் தான் ஏக கடுப்பில் நண்பர்களிடம் திரும்பி வந்தான். அவன் முகத்தில் தெரிந்த கோபத்தைக் கண்டு நண்பர்களும் அமைதியாகி விட்டார்கள். கொஞ்சம் நேரம் கழித்து முத்து தான் அவனிடம், என்னாச்சு மாமனாரேஅமைதியா இருக்கே?, என்றான். அவள் சொல்லிச் சென்ற விசயத்தை சித்ரன் அவர்களிடம் சொன்னான்.
-அந்தப் பொண்ணை நீ விட்டிடு மாமனாரே!, என்றான் ரமேஷ்.

-எதுக்கு விடணும்? எப்படிடா விட முடியும் என்னால அவளை? அப்பிடியே இங்க வந்து உக்காந்திருக்காடா!, தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டினான்.

-நீ தான் அவளை அங்க தூக்கி வச்சிருக்கே, அவ அப்படியா உன்னை வச்சிருக்கா? அதை யோசிக்க மாட்டியா நீ? ஏன் மாமனாரே இல்ல தெரியாமத்தான் கேக்குறேன் வேற பொண்ணுக உலகத்துல உனக்குன்னு இல்லையா?

-இப்பவே இருக்காடா!

-அட! அது யாரு? சொல்லவே இல்ல..

-இவ கூடவே இவ கிளாஸ்ல படிக்காள்ல ரசிகா!

-ரசிகா? நாங்க தான் எல்லாப் பொண்ணுகளையும் திறந்த வாய் மூடாமப் பாக்குறவங்க! இதுல ரசிகா, மாலினி, சிந்தியான்னு பேரு பிரிச்சு வச்சா பாக்குறோம். சரி ரசிகா.. பாத்துக்கலாம். பேரே அழகா இருக்குல்ல! சொல்லு சொல்லு!

-அவ அப்பாவும் என் அப்பாவும் திக் ப்ரண்ட்ஸ்.

-இப்ப நாம இருக்குற மாதிரி!

-ரசிகா பிறந்தப்பவே  எனக்குன்னு ரெண்டு அப்பாக்களும் பேசி முடிச்சுட்டாங்க!

-அது அந்தப் பொண்ணு ரசிகாவுக்கு தெரியுமா?

-இல்ல அது எனக்கு தெரியாது. அந்தப் பொண்ணுக்கு தெரியாதுன்னு தான் நினைக்கிறேன். எனக்கே வீட்டுல அம்மா பேசிட்டு இருக்கப்ப காது குடுத்து ஒரு நாள் கேட்டது தான்.

-பெரியவங்க நம்மைப் போல சும்மா விளையாட்டுக்கெல்லாம் பேச மாட்டாங்க மாமனாரே!

-அப்படியா சொல்றே? எனக்கு என்னடான்னா இந்த சாந்தியை எப்போ காலேஜ் வாசல்ல பார்த்தேனோ அன்னில இருந்து பைத்தியம் பிடிச்சுடுச்சு சுப்பு. எப்போப்பாரு அவளோட நினைப்பாவே இருக்கு.

-அது அப்படித்தான் மாமனாரே! எங்களுக்கு எல்லாப் பொண்ணுகளும் வேணும்னு நினைக்கிறோம். ஆனா ஒருத்தியத்தான கட்டிக்கணும்னு இந்த அரசாங்கமே சொல்லுது? அநியாயத்தைப் பாரேன். ஒன்னை கட்டினா எங்களுக்கெல்லாம் பத்துமா! அதனால மாமனாரே இந்த காலேஜ்ல இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கப் போறோம். எல்லாரையும் சந்தோசமா பாரு. சாந்திங்கற பொண்ணு இந்த காலேஜ்ல இல்லைன்னு நெனச்சிக்கோ!

-இருக்காளே! இப்பத்தானே சில்லறை இல்லீன்னு சொல்லிட்டு போனாளே!

-அப்ப ஆண் பாவம் பொல்லாததுன்னு அவளுக்கு புரிய வை மாமனாரே நீ! சீக்கிரம் களத்துல இறங்கி ஆட்டத்தை மாத்து! சரி என்ன தான் பண்ணலாம்னு நினைக்கிறே? சொல்லு உனக்கு நாங்க இருக்கோம்.

-இல்லடா, இவளுக்காக இங்க இல்ல.. இவ வீட்டுப் பக்கமும் நான் லீவு நாள்ல கூட சுத்திட்டே இருக்கேன். அவளுக்கு தெரியும்டா நான் அவளை விரும்புறேன்னு. ஆனா புடிக்குது புடிக்கலைன்னு ஒரு வார்த்தை அவ வாயில இருந்து வர மாட்டேங்குது.

-அவ வீடு எப்படி? உன் வீடு போல பங்ளாவா?

-இல்ல வாடகை வீடு மாதிரி தான் இருக்கு.

-ஐயோ மாமனாரே கெடுத்தியே கதையை! இதெல்லாம் நாளைக்கி பெரிய சிக்கல்ல வந்து முடியும். உங்கப்பா யாரு? நாளைக்கி இப்படி சாந்தின்னு ஒரு பொண்ணை விரும்பிட்டேன்பான்னு அவரு முன்னால கொண்டி இவளை நிறுத்தினேன்னு வச்சுக்கோ.. வாடா என் சிங்கக்குட்டின்னு அப்பிடியே கட்டிக்குவாரு! என்ன மாமனாரே காலம் எங்கே போயிட்டு இருக்குது! எல்லோரும் எப்படிடா பணம் சம்பாதிக்கலாம்னு மண்டையை பிச்சுட்டு சுத்திட்டு இருக்காங்க! போயும் போயும் நீ எப்படி டீலாவுல விழுந்து நாசமாகலாம்னு யோசனை பண்ணிட்டு இருக்கே!, என்றான் சுப்பு.

-ஆமா மாமனாரே! இவன் சொல்றது தான் சரியாப் படுது. காதல் இப்போதைக்கி நல்லாத்தான் இருக்கும். ஆனா வாழ்க்கைன்னு வர்றப்ப ரொம்ப பயங்கரமா இருக்கும். தூர இருக்குற வரைக்கும் தான் ஒரு பொருளுக்கு மதிப்பு. அதுவே கைக்கு கிடைச்சுட்டா அட இதுக்குத்தான் அப்படி பறவா பறந்தமான்னு இருக்கும். அப்புறம் அடுத்த பொருளை பார்க்க ஆரம்பிச்சுடுவோம், என்றான் முத்துவும்.

-டேய் என்னடா இப்படி பயங்கரமா பேசுறீங்க ரெண்டு பேரும்?

-ஆமா மாமனாரே! நாங்க படிச்சு முடிச்சு என்ன பண்ணுவோம்னு நினைக்கிறே? உங்கப்பா கம்பெனிகள்ல எதோ ஒன்னுல ஒரு வேலை நீ போட்டுத் தரச் சொன்னா தான் எங்களுக்கு வாழ்க்கை. எங்களுக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்ச பொறவுதான் கல்யாணம் கச்சேரி எல்லாம். ஆனா உனக்கு அப்பிடி இல்ல மாமனாரே! நீதான் எங்களுக்கெல்லாம் புத்தி சொல்லணும். அதை விட்டுட்டு சாந்தி, பிரியா மகேஸுன்னு நாங்க சீரியசா பின்னாடி சுத்திட்டு இருக்க முடியுமா?, என்றான் ரமேஷ்.

-அப்ப இந்த காரணத்தால தான் என்கிட்டே பழகிட்டு இருக்கீங்களாடா?

-இல்ல மாமனாரே! ஒவ்வொருத்தரா உன்கிட்ட பழகின பிறகுதான் நீ இப்படி உங்க அப்பா இப்படின்னு எங்களுக்கு தெரிஞ்சுது. நாங்க ரொம்ப நம்பிக்கையாயிட்டோம். ஆனா ஒரு நாள் கூட மாமனாரே.. நான் இப்படி பெரிய ஆளாக்கும்னு எங்ககிட்ட நீ நடந்துக்கவே இல்ல தெரியுமா! இதுல எதாச்சும் தப்பு இருக்கா மாமனாரே? இத்தனை நாள்ல ஒரு பொண்ணையும் நீ இப்படி விரும்புறேன்னு சொன்னதே இல்ல! நீ விரும்புற பொண்ணு எப்பிடி உன்னை கைக்குள்ள வச்சு தாங்கோணும் தெரியுமா? இப்ப இப்படி சொல்லிட்டா அவள்னு வந்து சொன்னியே.. அப்ப எனக்கு எப்பிடி இருந்துச்சு தெரியுமா? ஓடி அவளோட கழுத்தை நெறிச்சு கொன்னுடணும்னு இருந்துச்சு!, என்றான் முத்து.

-டேய் ரொமப் நெஞ்சை நக்குறீங்கடா! போதும். எனக்கு சாந்தியைத் தான் பிடிக்குது. அதுக்கு ஐடியா இருந்தா சொல்லுங்க! அவ கழுத்தை நெறிக்கிற  வேலை எல்லாம் வேண்டாம்.

-யெஸ் சார்! என்று அட்டென்சன் பொசிசனில் சுப்பு நின்றான். அவர்கள் சிரித்தபடி வகுப்பறைக்கு கிளம்பினார்கள். இருந்தும் சித்ரன் மனதில் சாந்தி என்ன கேவலப்படுத்தினாலும் இருப்பாள் போன்றே இருந்தது அவன் நண்பர்களுக்கு!

ஐந்து

அன்று முன்று மணியை போல கல்லூரி வாசலுக்கு ஏலக்காய் டீ குடிக்க வந்தவர்கள் அனைவருமே விக்னேஷின் சைக்கிளை அங்கு வாயிலில் காணாமல் திகைத்தார்கள்.

-எங்கே இந்தப் பயலை இன்னும் காணமே?

-காணோமே காணோமே! அவர்களுக்கு விசயம் தெரியாமல் ஒரு நாள் மாலையில் டீ குடிக்கா விட்டால் தான் என்ன? என்று வகுப்பறைக்கே திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது தான் ரசிகாவும் தன் தோழிகளுடன் அங்கு வந்து ஆளைக் காணாமல்  தோழிகளிடம் புலம்பினாள். சனி ஞாயிறு வேறு இரண்டு நாள் கல்லூரி விடுமுறை. ஏதோ இன்றேனும் அவனை தின்று விடுவது போல பார்த்து வயிற்றை நிரப்பிச் செல்ல வந்தவளுக்கு ஏமாற்றம் தான்.

அப்போது வேறு ஒரு குரூப் விக்னேஷைப் பற்றி பேசிக் கொண்டு செல்வதைக் கேட்டதும் தன் தோழியை விசாரிக்க அனுப்பினாள்.

அப்போது தான்  ரசிகாவை சித்ரன் தன் நண்பர்களுக்கு காட்டினான். அவர்களோ பாட்ஷா படத்தில் ரஜினியின் நண்பர்கள் ரஜினியின் கையைப் பிடித்து முத்தமிட்டு செலவது போல சித்ரனின் கையைப் பிடித்து முத்தமிட்டு அவன் பின்புறமாக வரிசையில் சென்று நின்றார்கள்.

-ஏண்டா இப்படி பின்னுறீங்க? என்றான் சிதரன்.

-தேவதையையே அண்ணின்னு  காட்டிட்டே மாமனாரே! நாங்க இதுக்கு முன்ன இந்த காலேஜ்ல அண்ணியை பார்த்ததே இல்ல! பார்த்திருந்தாலும் எங்க கண்ணுக்கு தெரியவே இல்ல!

-அவ கார்ல தான் வருவாடா, அதனால பார்த்திருக்க மாட்டீங்க!

-சரி இப்ப அண்ணி நெலத்துல நடக்காங்களே! நாங்க வேணா பல்லக்கு கொண்டு வரவா? என்றான் சுப்பு.

-டேய் கம்முன்னு இருங்கடா, அவ என்னை பாக்குறா. எனக்கு அப்படி அவளை கட்டிக்கணும்னு ஆசை எதும் இதுவரைக்கும் இல்ல. தூண்டி விட்டுடாதீங்க! என் மனசுல சாந்தி தான்.

-சும்மா பீலா விடாதே மாமனாரே! உங்க டாடியை நாங்க சந்திச்சு உடனே மண்டபத்தை பிக்ஸ் பண்ணச் சொல்லப் போறோம்!

-பேசாம உங்க டாடிக்கே நாங்களும் பிள்ளைங்களா பொறந்திருக்கணும் மாமனாரே! அப்பத்தான் எங்களுக்கும் அவரோட நண்பர்கள் கிட்ட பேசி சின்ன வயசுலயே பொண்ணுகளை எங்களுக்கும் ஏற்பாடு பண்ணியிருப்பாரு! ம்! நடங்க நடங்க!, அவர்கள் கிளம்பினார்கள்.

-என்னவாம்டி விக்னேஷுக்கு?, ரசிகா விசாரிக்கச் சென்ற மாலினி வந்ததும் கேட்டாள்.

-அது வந்து..

-என்னடி அது வந்து? சீக்கிரம் சொல்லு மாலினி.

-நீ ஏன் இப்படி ரொம்ப இதா கேக்குறே?

-எதா கேக்குறேன்? விசாரிச்சுட்டு வந்தியே.. என்னான்னு கேக்குறேன்.

-காலையில் ஐடிஐ கிட்ட ஒரு ஏக்ஸிடெண்ட்டாம். இவ பஸ்ஸுல இருந்து பாத்திருக்கா.. டீ ட்ரம்மோட ஒரு சைக்கிள் கிடந்துச்சாம்.

இதைக் கேட்டதும் ரசிகாவின் மனதில் பயம் எழும்பி விட்டது. தோழிகளுக்கெல்லாம் விக்னேஷ் என்றால் இவளுக்கு விருப்பம் என்று தெரியும். அதிகமாகவும் அவர்களிடம் இவள் காட்டிக் கொள்ளவும் இல்லை என்றாலும் அவர்களால் கண்டறிய முடியாதா என்ன? இவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கவும் தான் மாலதி சங்கடப்பட்டாள்.

-இதுக்குத்தான் சொல்லவே சங்கடப்பட்டேன்.

-சரி பக்கத்துல என்ன ஹாஸ்பிடல் இருக்கு?

-ராம்கோபால் இருக்கு.

-சரி நாம அங்க இப்பவே போகலாம், என்று கிளம்பினவள் பின்னால் தோழிகளும் சென்றார்கள். கொஞ்சம் நேரத்தில் ரசிகாவின் கார் கல்லூரியை விட்டு வெளியேறியது. அதில் அவள் தோழிகள் இருந்தார்கள்.

-நாம அங்க போய் என்ன பண்ணப் போறோம்? சித்ரா தான் காருக்குள் சும்மா இராமல் கேட்டாள். அவளுக்கு காருக்குள் யாருமே பதில் சொல்லவில்லை. எல்லோரும் உம்மென்று இருந்தார்கள். ராம் கோபால் மருத்துவமனைக்குள் கார் பார்க்கிங்கில் காரை செறுவி நிறுத்தினாள் ரசிகா. ரிசப்சனில் காலையில் நடந்த ஏக்ஸிடெண்ட் தகவலை சொன்னதுமே ரிசப்சனில் இருந்த பெண் அறை எண்ணைச் சொன்னது. ரசிகா படிகளில் ஏறத் துவங்கியதும் பொம்மைகள் போல தோழிகளும் சென்றார்கள். அவர்களுக்கு ரசிகாவின் இந்தப் போக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. இவள் இருக்கும் ரேஞ்சுக்கு இப்படி ஒரு டீ விற்பவனைக் காண மருத்துவமனை வருவதெல்லாம் வேறு மாதிரி இருந்தது. ஆனால் ரசிகாவுக்கு அவர்கள் எதுவும் இதுவரை சொல்லவில்லை.

அறை எண் 207-ன் முன்பாக அவர்கள் நின்றார்கள். அறைக்கதவு சாத்தப்பட்டிருந்தது. கதவை ரசிகா தட்டினாள். ‘உள்ள வாங்கஎன்ற ஆண் குரல் கேட்கவும் ரசிகா கதவைத் திறந்து உள்ளே சென்றாள். அவள் தோழிகள் வெளியே நின்று கொண்டார்கள். அழுது ஆர்பாட்டம் செய்து விடுவாளோ! என்று வேறு மிரண்டிருந்தார்கள் அவர்கள். அவர்கள் அனைவருக்குமே இப்படியான மருத்துவமனை சூழலே புதிது. ஆனால் ரசிகாவோ இவர்களைப்போல எல்லாம் எண்ணாமல் வந்திருக்கிறாள். அப்படியென்றால்? என்ற கேள்வியிலேயே இருந்தார்கள்.

உள்ளே சுதாகரன் தான் அமர்ந்திருந்தான். அவன் அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். ரசிகா விக்னேஷ் படுத்திருந்த படுக்கைக்கு அருகில் சென்று நின்றாள். அவன் தலையில் மட்டும் கட்டு பெரிதாகப் போடப்பட்டிருந்தது. போக கையில் சிராய்ப்பு காயங்களுக்கு களிம்பு தடவியிருந்தார்கள். விக்னேஷ் உறக்கத்தில் இருந்தான். சுதாகரன் அலைபேசியை அணைத்து விட்டு இவளை யாரெனத் தெரியாமல் பார்த்தான்.

-தலையில பெருசா கட்டிருக்கே?, என்று இவனைத் திரும்பிப் பார்த்து கேட்டாள் ரசிகா.

-ஆமாங்க. வலது பக்க சைடுல காயம். தையல் போட்டிருக்காங்க! மத்தபடி ஒன்னுமில்ல.

-பேசுறாப்லையா?

-தூங்க மாத்திரை கொடுத்திருப்பாங்க போல இருக்குங்க.. பேசுறதெல்லாம் பேசுறான். நீங்க? எனக்கு அடையாளம் தெரியலையே!

-நான் ரசிகா, காலேஜ்ல படிக்கிறேன்.

-! சொல்லியிருக்கான் உங்களை தேவதைன்னு!, சொல்லி விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான். ஏன்டா இந்த சமயத்தில் சொல்லித் தொலைத்தோம் என்று கூட இருந்தது அவனுக்கு.

-தேவதையா?, என்றாள் ரசிகா அவனிடம்.

-அப்படித்தான் சொல்வானுங்க எனக்கு.

-நீங்க எங்கே தங்கியிருக்கீங்க? இவரோட அப்பா அம்மாவுக்கு தகவல் சொல்லிட்டீங்களா? என்றாள் ரசிகா.

அப்போது தான் சுதாகரனுக்கே கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்து விட்டது.

-அப்பா அம்மா இருந்தாத் தான நாங்க கூப்புட்டு சொல்வோம்.. யாருமில்லா அனாதைப் பசங்க நாங்க மேடம்!, அவன் சொல்கையிலேயே உதடு பிதுங்கி விட்டது. ரசிகாவுக்கே கூட அழுது விடுவோமோ என்றாகி விட்டது. உதட்டை இறுகக் கடித்துக் கொண்டாள்.

-சரி தெரியாமக் கேட்டுட்டேன் விடுங்க! என்று ரசிகா சொன்னதுமே புறங்கையால் சுதாகரன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

-எத்தனை நாள் இங்கே இருக்கோணுமாம்? கையில அமெளண்ட் வச்சிருக்கீங்களா?

-நாளைக்கி ஒரு நாள் இருந்தால் போதும்னு டாக்டர் சொல்லிட்டாருங்க. பணமெல்லாம் இருக்கு.

-நீங்க இவருக்கு என்ன ஆகணும்? நண்பரா? என்றதும் ஆமென மண்டையை ஆட்டினான் சுதாகரன்.

-என்னான்னு தெரியல.. எனக்கும் இங்க பக்கத்துல இருக்கணும்னு தான் தோணுது. ஆனா அது முடியாது. நீங்க பார்த்துக்குவீங்க தானே!

அவன் கையெடுத்துக் கும்பிட்டான். அவனால் அது தான் செய்ய முடிந்தது.

-சரி நான் நாளைக்கு வர்றேன்.. உங்க பேரு? போன் நெம்பர் குடுங்க! நைட்டு கூப்பிடறேன். என்றவள் அவன் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.

இரவு முழுதுமே அவளால் தன் படுக்கையறையில் தூங்கவே முடியவில்லை. இரவிலேயே எழுந்து மருத்துவமனை சென்று விடலாம் என்றே இருந்தது. விடிய விடிய அவள் அறை விளக்கு எரிந்ததைக் கண்ட அவள் தந்தை சேதுராம் தான் காலையில் அவளிடம் கேட்டார்.

-என்னம்மா விடிய விடிய லைட்டு உன் ரூம்ல எரிஞ்சுட்டே இருந்துச்சே? அப்படி என்ன படிப்பு வேண்டியிருக்கு? தூக்கி வீசிட்டு தூங்குறதை விட்டுட்டு?

-இல்ல டாடி, தூங்குறப்ப லைட்டை ஆப் பண்ண மறந்துட்டேன், என்றாள்.

-அதானே பார்த்தேன்! நம்ம பொண்னாவது விடிய விடிய படிக்கிறதாவதுன்னு!, என்று கிண்டலடித்தார். வேலைக்காரி சமையல் அறையில் இருக்க இவள் பாத்ரூமிற்குள் நுழைந்தாள். சீக்கிரம் கிளம்பி மருத்துவமனை செல்லும் வேகத்தில் இருந்தாள். இப்படி எப்படி அவன் மீது தனக்கு பாசம் வந்தது என்று அவளுக்கே கூடத் தெரியவில்லை. அவன் நினைப்பே அவளுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. ஒருவனை நினைத்துப் பார்த்தால் கூட மனதில் மகிழ்ச்சி தோன்றும் என்பது அவளுக்கே புதிதாய் இருந்தது. வேலைக்காரி சாப்பாட்டு மேஜையில் வைத்திருந்த ஹாட் பாக்ஸில் இருந்த இட்லிகள் இரண்டை போட்டு அவசரமாய் சாப்பிட்டு விட்டு கிளம்பி விட்டாள்.

ராம்கோபால் மருத்துவமனை வந்தவள் விக்னேஷின் அறைக்குள் நுழைந்த போது அறையில் சுதாகரன் இல்லை. விக்னேஷ் மட்டும் பழையபடி தூக்கத்திலேயே இருந்தான். அது அவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. அவன் அருகில் படுக்கையில் அமர்ந்து அவன் முகத்தை  உற்றுப் பார்த்தாள். தன் கையால் அவன் கன்னத்தை தொட்டாள். காய்ச்சல் அடிக்கிறதா? என்று பார்த்தாள். அது இல்லை. ஆனால் விக்னேஷ் தன் கைகளால் கன்னத்தில் இருந்த அவள் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டான். விதிர்வித்தவள் போன்று எழுந்து கொண்டாள் ரசிகா.

-சார் சும்மாதான் தூங்குறாப்ல நடிச்சுட்டு இருந்தீங்களா?, என்றாள்.

விக்னேஷ் கண் விழித்து தன் அருகிலே அமரச் சொன்னான். முடியாது என்று அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டாள் ரசிகா.

-எப்படி ரோட்டுல அப்படி கவனமில்லாம வந்தீங்க?

-நான் சரியாத்தான் வந்தேங்க ரசிகா, அந்த வண்டிக்காரன் தான் திடீனு .. அது எப்படி நடந்துச்சுன்னே இன்னும் எனக்குத் தெரியல. சரி நடக்கணும்னு விதி இருந்தா விடவா போகுது? உங்களுக்கு யாரு தகவல் சொன்னது?, என்று விக்னேஷ் கேட்டதும் அவள் நடந்ததைச் சொன்னாள்.

-தேவதை வந்துட்டு போச்சுன்னு சுதா சொன்னான். நான் கனவா இருக்கும்டான்னு சொல்லிட்டு இருந்தேன். அப்ப நிஜம் தானா அது!

-எங்க உங்க நண்பரை காணோமே! இப்படி தனியா படுக்க வச்சிட்டு போயிட்டாரே?

-நான் தான்ங்க ரசிகா அனுப்பி வச்சேன். சும்மா பெட்ல படுத்துட்டு இருக்கிறவனுக்கு காவல் எதுக்குங்க? இத்தனை நர்சுக இருக்காங்க இங்க கலர் கலரா!

-கலர் கலராவா? ஏது...வாயில போட்டுருவேன்!

-ஏங்க படுத்துட்டு என்ன வேலை? கலர் பார்த்துட்டு இருக்க வேண்டிது தான!

-நீங்க நல்ல பையன்னு நெனச்சி  தான நான் இங்கே வந்தேன்.. ஆனா நீங்களும் கலர் பாக்குற ஆளா? நான் கிளம்புறேன்.

-நீங்க போக மாட்டிங்க, எங்கிட்டயே தான் இருக்கீங்க பாக்கறீங்களா?, என்றவன் பெட்டுக்கு அடியில் கிடக்கும் அவள் குடையைக் காட்டினான் துளி பெட்டைத் தூக்கி.

-ஐயே, அதை எதுக்கு இங்க ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து பெட்ல மறைச்சு வச்சிருக்கீங்க?

-அது தான் நீங்க பக்கத்துலயே இருக்குற மாதிரி இருக்கு!

-பைத்தியம் பைத்தியம்! என்றாள் ரசிகா.

அப்போது வெள்ளை நிற உடையணிந்த மருத்துவமனை தாதி உள்ளே வந்தாள்ஒரு இஞ்செக்சன்  பண்ணனும் வெளிய இருங்க மேடம்! என்று ரசிகாவை வெளியே அனுப்பினாள். ரசிகா வெளியே செல்ல எழுந்த போதே அவளை கடுப்பேற்றும் விதமாக விக்னேஷ் தாதியிடம் பேச்சுக் கொடுத்தான்.

-நீங்க எனக்கு ஊசியை வலிக்காமப் போட்டீங்கன்னா உங்களை கட்டிக்குவேன்!

-இடுப்பைக் காட்டுங்க மொதல்ல! போட்ட பிறகு சொல்லுங்க வலிச்சுதா இல்லியான்னு! என்றாள் தாதியும். ரசிகா பல்லைக் கடித்துக் கொண்டு வெளியே வந்தாள். தாதி பின்பு அறையை விட்டு வெளியே சென்றதும் அறைக்குள் வந்தவள் அவன் அருகில் படுக்கையிலேயே அமர்ந்தாள்.

-அவ வலிக்காமப் போட்டாளா ஊசியை?, என்றாள்.

-பயங்கரமா கடுக்கடுன்னு வலிக்குதுங்க ரசிகா!, என்றான் விக்னேஷ்.

-அப்பித்தான் வலிக்கும்! வலிக்கட்டும், என்றாள் ரசிகா.
 வளரும்.

Post Comment

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

அதென்னமோ தெரியவில்லை காதல் எப்போதுமே இனிமையான கதையாக மாறிவிடுகிறது. வாழ்க்கையில் சிலருக்கும்.

வா.மு.கோமு சொன்னது…

காதலை நாம் காலத்துக்கும் எழுதிக் கொண்டே இருக்கலாம்! வாழ்பவர்களை விட காதலிப்பவர்கள் இங்கு அதிகம். காதலை அழகாக எழுதியவர்கள் தமிழில் ஸ்டெல்லா புரூஸ். அவரது அது ஒரு நிலாக்காலம். அடுத்து பட்டுக்கோட்டை பிரபாகர்.

Unknown சொன்னது…

நிச்சயமாக... இந்த கதையை படித்த பிறகுதான் உங்களிடம் உங்களுடைய சினிமா பிரவேசம் பற்றிய வினா எழுப்பினேன்.

வா.மு.கோமு சொன்னது…

ரசிகா வேறு தலைப்பில் ராணிமுத்து மாத இருமுறை இதழுக்கு அனுப்பியாகி விட்டது. மிக அழகாக வந்தமையாலும் போக சென்ற ஆண்டு இது நீமலரும் நெஞ்சம்டி நாவல் அதில் வந்த பிறகு வேறு வராததால் இந்த முடிவு!