வெள்ளி, ஜூலை 17, 2015

அன்பிற்கினியவள் -குறும் தொடர் மூன்று


அன்பிற்கினியவள்

ஐந்து

கீதா மதிய நேரத்தில் கட்டிலிக் சாயந்திருந்த சமயம் அவளது அலைபேசி  ‘போனை எடுடா! எடுக்க மாட்டியா? போனை எடுடா!” என்று கத்தியது. இன்னமும் இரண்டு நிமிடம் என்றிருந்தால் கீதா தூங்கியிருப்பாள். டேபிள் மீது கிடந்த போனை எடுத்து யாரெனப் பார்த்தாள்.

சின்னுதான். இன்றைய கோட்டாவுக்காக அழைத்திருக்கிறான். இவளுக்குள்ளேயே இதெல்லாம் நல்லதுக்குத் தானா? என்ற கேள்வி இருந்ததுசின்னு அழகாக ஒரு குடும்பம் அமைத்துக் கொண்டான். வீணாய் அவனைக் குழப்பிக் கொண்டு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோமென்றே இருந்தது இவளுக்கு.

இது தினமும் இவள் அவன் அழைப்பு வருகையில் எல்லாம் யோசிப்பது தான். ஆனாலும் சின்னுவை ஏமாற்றிவிட்ட துக்கம் வேறு இன்னமும் மனதில் அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது. என்ன இருந்தாலும் இவளை திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டவன் தான். சின்னு நல்லவன் தான்.

அவனைக் கட்டிக்கொள்ள வேண்டுமென்ற ஆசையெல்லாம் அவனுக்கு திருமணமான பிறகுதான் இவளுக்குள் வந்திருந்தது. கையில் தனக்கென வைத்திருந்த பொருளை இன்னொருவர் எடுத்துக் கொண்டு போய் விட்டது போல. அவள் இரண்டாவது முறை அழைப்பு வந்த போது தான் எடுத்தாள்.

-ம், சொல்லு சின்னு!

-தூங்கிட்டு இருந்தியா கீதா? என்ன பண்றது இன்னிக்கி வேலை பெண்டை கழட்டீட்டுது ஒரு வண்டி! இன்னம் சாப்பிடக் கூட நான் போகலை வீட்டுக்கு! நீ சாப்டுட்டியா?

-ம், ஆச்சு!

-ஏன் டல்லா பேசுறே? ஒடம்புக்கு சரியில்லியா? டாக்டராச்சும் அந்த ஊர்ல இருக்காங்களா? இல்ல டவுனுக்குத்தான் வரணுமா?

-இங்க ஒரு மாட்டு டாக்டர் வீடு இருக்குது. காய்ச்சல் சளின்னா அவரே மாத்திரை குடுப்பாரு! வீட்டுல உன் பொண்டாட்டி சூடா சாப்பாடு செஞ்சு வச்சிட்டு காத்திட்டு இருப்பாள்ல! மணி பாரு ரெண்டுக்கும் மேல ஆச்சு!

-அது ஆயிட்டுப் போவுது. ஆமா நான் சொன்னதுக்கு என்ன யோசனை பண்ணி வச்சிருக்கே கீதா?

-என்ன சொன்னே? என்ன யோசனை பண்ணி வச்சிருக்கணும் நான்?

-லூசு! நீ தான் அந்த ஊர்ல அவரு கூட வாழ பிடிக்கலைனு சொன்னதை மறந்துட்டு பேசுறியா?

-! அதைச் சொல்றியா! பாக்கலாம் சின்னு.

-என்ன கீதா பாக்கலாம்னு சொல்றே! நான் இருக்கேன் உனக்கு கீதா. நீ அங்க சங்கடப்பட்டுட்டு இருக்கப்ப என்னால ஒரு வாய் சோறு கூட நிம்மதியா இங்க சாப்பிட முடியல தெரியுமா! கீதா... அழறியா?

-நான் எதுக்கு அழறேன்.. சொல்லு! அப்ப நீ சோறு திங்கறதில்லையா? வத்திப் போயி கிடக்கியா? பாத்து.. பொண்டாட்டி எதும் சொல்லிடப்போறா!

-நீ ஏன் அவளை எப்பவும் எனக்கு சொல்லிட்டு ஞாபகப்படுத்திட்டே இருக்கே? அவ என் பொண்டாட்டி தான். நான் எப்பாச்சிம் இல்லன்னு உன் கிட பேசினேனா? நீயும் என் பொண்டாட்டி தான். என் கழுத்துல வள்ளி தெய்வானையோட முருகன் இருக்குற மாதிரி தான் டாலர் போட்டிருக்கேன் தெரியுமா!

-நான் உன் பொண்டாட்டியா? எப்ப என்னை கட்டிக்கிட்டே?

-எப்ப என்கிட்ட நீ பழகினியோ அப்ப இருந்து நீதான் என் பொண்டாட்டி!

-அப்புறம் ஏன் சீதாவை கட்டிக்கிட்டே?

-நீ தானே கட்டிக்கச் சொன்னே! இது நல்ல நாயம் உன்னோட.

-நான் சொன்னா நீ கட்டிக்குவியா? அப்ப என் மேல ஆசை இல்லன்னு தான அர்த்தம்! சார்... சார்.. லைன்ல இருக்கீங்களா?

-இல்ல நீ கீதா இல்ல! வேற யாரோ பொண்னு போல, கீதா வந்ததும் கூப்பிடச் சொல்லுங்க மேடம்! நான் வச்சிடறேன்!

-சின்னு உதை வாங்கப் போறே நீ!

-இல்ல என் ஆசையை நீ புரிஞ்சிக்கவே இல்ல கீதா, கேட்டா உன்னை விட ரெண்டு வயசு சின்னவன் நீன்னு என் வாயை அடைச்சே! சரி இப்ப நீயாச்சும் சுகமா இருக்கியான்னு பார்த்தா வீட்டுக்காரர் கட்டில்ல கூட படுக்கிறதில்லைங்கறெ! பின்ன அந்த பட்டிக்காட்டுல எதுக்காக உக்காந்துட்டு இருக்கே? அந்தக் குழந்தைகளை காப்பாத்தி வளர்த்தி  யாருக்காச்சும் கட்டிக் குடுத்துட்டு தான் வரப்போறியா டவுனுக்கு?

கீதா சிரிக்க ஆரம்பித்தாள்.

-சிரிக்காதே கீதா, நானே நொந்து கிடக்கேன். நீ சீக்கிரம் கிளம்பி வரப்பாரு!

-சிரிக்காம என்ன பண்ணச் சொல்றே என்னை? அன்னிக்கும் அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டே, இப்போ அவசரமா என்னை டவுனுக்கு வான்னு கூப்பிடறே! என்னை  உன் வீட்டுல கொண்டு போய் உன் சம்சாரத்து கிட்ட  மொதப் பொண்டாட்டின்னு காட்டுவியா? செருப்படி வாங்கப்போறே உன் சீதா கிட்ட!

-வீட்டுக்கு நான் ஏன் கூட்டிட்டு போறேன்? தனியா உனக்கு வீடு பார்த்து அதுல அமர்த்தப்போறேன் கீதா!

-அப்ப என்னை வச்சிக்கப் போறேன்னு சொல்லு.

-ஏன் இப்படி பேசுறே கீதா? உலகத்துல எல்லாரும் செய்யாததையா நான் செய்யுறேன்? சரி அவரு கட்டின தாலியை  கழட்டிட்டு நான் கோவில்ல வேற கட்டுறேன்.

-நான் எத்தனை தடவை தான் தாலி கட்டிக்கிறது?

-! அதும் முடியாதா உன்னால. சரி விடு கீதா. நான் தான் மெனக்கெட்டு உன்னை ரொம்ப தொந்தரவு பண்ணுறதா நினைச்சுட்டு பிடிகுடுக்காம பேசுறே! ஆனா உன்னை சத்தியமா என்னால புரிஞ்சுக்கவே முடியலை கீதா. எப்போ என்ன மாதிரி பேசுவேன்னு புரிபடவே மாட்டீங்குது எனக்கு.

-அது தான் எனக்கே புரியலையே! நீ எப்படி கண்டுபிடிக்க முடியும். சரி உனக்குப் பசிக்கும் போயி சாப்டுட்டு வந்து நிதானமா பேசு சின்னு!

-எனக்கு பசியே போயிடுச்சு

-நீ சாப்படலின்னா எனக்கென்ன வந்துச்சு? நான் நல்லா மூக்கு முட்ட சாப்டுட்டேன். உன்னை ஏன் சாப்பிடலைன்னு உன் பொண்டாட்டி தான கேக்கணும்!

-நல்லா சாப்டுட்டு ஒரு சுத்து பெருத்துப் போயிட்டியா கீதா? பார்த்து ஆறு மாசத்துக்கும் மேல ஆச்சு உன்னை! திடீருன்னு உங்க வீட்டு முன்னால வந்து நிக்கிறேன் பாரு ஒரு நாளைக்கி.

-வந்து பார்த்துட்டு போ! ஆனா வீட்டுக்குள்ள எல்லாம் உன்னை கூப்பிட மாட்டேன். அப்பிடி கிப்படி கனவு கண்டுட்டு வந்துடாதே இங்கே!

-நான் உன்னை பாக்க வரலை கீதா. உன் வீட்டுக்காரர் எப்படி அழகானவரா? கேரக்டர் எப்படின்னு கண்டு புடிக்க வர்றேன். அப்ப அவரு கேட்டா என்னோட காதலியை தான் நீங்க கட்டியிருக்கீங்க சார்னு சொல்லுவேன்.

-அப்ப நானும் அவர் கிட்ட சொல்லுவேன்ல.. இவன் எங்க ஊர்ல தெருப்பிச்சைக்காரன்னு!

சின்னு இந்த வார்த்தையை கேட்டதும் போனைக் கட் செய்து விட்டான். அவனுக்கு உடம்பே ஆடியது. என்ன மாதிரி பேசுகிறாள் ராட்சசி! ஒருவன் கொஞ்சம் வழிகிறான் பெண்ணிடம் என்றதும் ரொம்பத்தான் நக்கல் செய்கிறார்களே! அதற்கும் ஒரு அளவு வேண்டாமா? அப்புறம் ஏதாவது ஏமார்ந்து விட்டு சாபம் வேறு விடுகிறார்கள்!

உண்மையாகவே சின்னு கீதாவை விரும்பத்தான் செய்தான். ஆனால் கீதாவுக்கு அவன் காதல் மேல் நம்பிக்கையே வரவில்லை. கீதா நம்புவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்கும் தெரியவில்லை. இப்போது கூட அவளின் சிரமம் பற்றி இவனுக்கு என்ன தெரியும்? எல்லாமே அவளாக போனில் விளாவாரியாக சொல்லியது தானே! அவள் கணவர் சொட்டைத் தலையாம். அவருக்கு சொட்டை இருந்தால் இவளுக்கு பைத்தியம் தானே! பைத்தியங்கள் தான் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாறிப் போட்டுக் கொண்டு சிரிக்கும்கள். சின்னுவின் மனக்கண் முன் அப்படித்தான் கீதா மண்ணை வாறிப் போட்டுக் கொண்டு சிரித்தாள்.

அவள் என்ன தான் பிச்சைக்காரன் என்று சொன்ன போதும் அவனுக்குள் அப்போதைக்கு மட்டும் கோபம் இருந்தது. கொஞ்சம் நேரம் கழிந்ததும் அது அவள் சரியான மனநிலையில் இல்லாத காரணத்தால் தான் பேசியிருப்பாள் என்று தன்னை தானே தேற்றிக் கொண்டான். இருந்தும் அவன் மனதில் இவளை ஜெயிக்கா விட்டால் எதற்காக இந்த பூமியில் மனிதனாகப் பிறந்து சின்னு என்ற பெயரோடு சுற்ற வேண்டும் என்றிருந்தது. ஆம் கீதாவை ஜெயித்தாக வேண்டும். அதற்கு சீக்கிரம் வழி வகைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்அவள் எது சொன்னாலும் மண்ணைப் போல இருக்க வேண்டும்

கீதா சின்னுவிற்காக விடப்பட்ட சவால். அவனுக்கு மதிய உணவு நிஜமாகவே இறங்கவில்லை.  கீதாவோடு என்று பழக ஆரம்பித்தானோ அன்றிலிருந்தே சோறு சரியாக இறங்குவதில்லை தான். கீதா அவனுக்கான சவால். இதுவரை கீதாவே ஆட்டத்தில் முன்னிலை வகித்து ஆடுகிறாள். என்று இவன் ஜெயிக்கிறானோ அன்று இந்த ஆட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டியது தான். அந்த வெற்றியோ பெரும் சந்தேகமாகவே இவன் மனதில் இருந்தது. ஆனாலும் இதற்காகவெல்லாம் சோர்ந்து போக முடியாது அவனால். ஆட்டம் அவன் கைக்கு வந்தாக வேண்டும்.

ஆறு

ஒரு வாரம் ஆகிப்போயிற்று சின்னு இவளை போனில் அழைத்து. சின்னு இப்படி ஒருமுறை கூட நடந்ததில்லை என்று கீதாவுக்குத் தெரியும். என்ன பேசினாலும் அப்போதைக்கு கோபப்படுபவன் இந்த முறை உண்மையிலேயே இவளோடு பேசுவதை நிப்பாட்டி விட்டானா? கீதாவுக்கு அவன் கோபம் புதியதாகவும், ஆச்சரியமாகவும் தனக்காக உருகிக் கொண்டிருந்த ஒரு உயிரும் தன்னை உதாசீனப்படுத்தி விட்டது தெரிந்ததும் தான் உஷாரானாள். இது என்ன வாழ்க்கை?

யாராலுமே விரும்பப்படாத ஒரு பிறப்பு அவசியம் தானா பெண்ணுக்கு? இன்று கூப்பிடுவான் நாளை கூப்பிடுவான் என்று இவள் எதிர்பார்த்தது எல்லாம் பொய்யானது. அவனுக்கும் ரோஷம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது வெட்டி ரோஷமாகவும் தெரியவில்லை. யாரோடும் பேசாத இந்தப் போன் இருந்தென்ன பிரயோசனம்? போன் என்பது குசுகுசுப்பாய் பேசிக்கொள்ள மட்டும் தானே! போன் அவன் பேசுவதற்கு மட்டும் தான் இருந்தது. கணவர் எப்போதாவது ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் அது பயன்பட்டது.

ஊரில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இவளிடம் போன் இருப்பது தெரியும். அவர்கள் மாதத்தில் ஒருமுறை இவளை அழைத்து செளக்கியம் விசாரிப்பதோடு சரி. சின்னுவின் அழைப்பில்லாமல் நாட்கள் நகர நகரத்தான் மண்டை காய்ந்தது கீதாவுக்கு. அவனை கூப்பிட மட்டும் அவளுக்கு தோன்றவில்லை. அவன் கூப்பிடவே மாட்டான் என்பது கூட அவளுக்குள் அச்சமாக இருந்தது. அவன் கூப்பிடாவிட்டால் இவளுக்கு இதே வாழ்க்கை தான். இதே கிராமம் தான்.

வெட்கத்தை விட்டு சுந்தரத்திடம், புதிய வாழ்க்கையை நாம் வரும் தை மாதத்திலிருந்து ஒரே கட்டிலில் துவங்குவோம், என்று சொல்லிக் கொண்டு நிற்க முடியாது. அது உலகமகாக் கேவலம். இப்படியொரு கிராமத்தில் இத்தினிக்கூண்டு இலவச டிவியை வெறித்துப் பார்த்துக் கொண்டு எந்த நேரமும் அமர்ந்திருக்க முடியாது இவளால் இனி.

பக்கத்து வீட்டார்கள் எல்லோரும் காட்டு வேலைக்கு போய் விடுகிறார்கள். பகலில் ஊரே காலியாய்க் கிடக்கிறது. கிழவி செத்தால் கூட மாலையில் வரும் கணவனுக்குத் தான் தெரிவிக்க வேண்டும். ஊரின் கடைசி வீடு என்பதால் ஊர்க்காரர்களே இவள் குடும்பத்தை தள்ளி வைத்தது போல இருந்தது. குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் தான் வீடு வீடாய் சில சமயம் ஞாபகத்திற்கு வருகிறது. போக அவைகளின் மீது பாசம் வேறு இப்போது இவளுக்கு வந்து விட்டது. இதெல்லாம் ஆபத்திற்கான அறிகுறிதான்.

நாளை கணவனிடமே சொல்லிக் கொண்டு நகர வாழ்க்கைக்கு போகிறேன் என்று கிளம்பினால் சினிமாவில் வருவது போல இவைகள் இரண்டும் ‘எங்களை விட்டுப் போகாதீங்கக்கா! எங்களுக்கு உங்களை விட்டா யாருங்க அக்கா இருக்காங்க!?” என்று வசனம் பேசுகையில் எல்லாமும் சிரமமாகி விடும். குழந்தைகளின் பாவம் சும்மா விடாதாமே! இந்தத் துக்கத்தை தேடிக்கொள்ளவா இந்தக் கிராமத்துக்கு வந்தது?

இந்த வொர்க்‌ஷாப்காரன் தினமும் போல பேசிக் கொண்டிருந்தால் கூட இவளின் வயிற்றெரிச்சலை எல்லாம் அவன் தலையில் கொட்டி விட்டு நிம்மதியாய் கிடக்கலாம் என்றால் அவனும் ஓவர் பிகுவும் சீனும் போட்டுக் கொண்டு இரும்பு தட்டிக் கொண்டு அமர்ந்து விட்டான். அல்லது வண்டியில் போய் எங்கேயேனும் நொறுங்கி மருத்துவமனையில் கிடக்கலாம். மருத்துவர்கள் அவனை பேசக்கூடாதென அலைப்பேசியை பிடுங்கி அவன் மனைவி சீதா கையில் கொடுத்திருக்கலாம். அல்லது அவன் வாய் நொறுங்கியதில் கிழிந்திருக்கலாம்!

எல்லாமும் கூடி அவளுக்கு குழப்பமாய் இருந்தது. எப்படியேனும் இங்கிருந்து பொட்டி தூக்கி போய்விட வேண்டுமென்று இருந்தது. நேராக அம்மா அப்பாவிடம் போய் நிற்பது பாவம். அவர்கள் ஏற்கனவே நோயாளிகள் வேறு. பிள்ளை வாழாமல் வந்து விட்டாள் என்று தெரிந்தால் ஏகத்துக்கும் கவலைப்படுவார்கள். பின் ஒன்றே ஒன்று எனப் பெற்றெடுத்து வளர்த்தி அதுவும் வாழாமல் வந்து வாசலில் நின்று விட்டதென்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும்?

வாழாமல் வந்து விடுவதற்கு அவள் காரணமல்லவே. அவளுக்கு பிடிக்காத வாழ்க்கையை அவள் எப்படி வாழ முடியும்? கணவரேனும் தினமும் தேடி வந்து, கீதா! கீதா! என்று உருகியிருந்தார் என்றால் இந்த நேரம் வயிற்றில் வாங்கி நின்றிருந்திருப்பாள் அந்த வீட்டில். அவரோ இவள் தொட்டால் பணம் வேண்டும் என்று சொன்னதும் பைசா கையில் இல்லாதவர் போல விட்டு விட்டார். அவளுக்கு கணவரை நினைத்தாலும் பாவமாய் இருந்தது. அவர் வயதிற்கு ஒரு பெண்ணிடம் எத்தனை முறை தான் வழிந்து கொண்டு வந்து நிற்பார். போக அவர் ஏற்கனவே வாழ்ந்து முடித்தவர் தானே!

உண்மையிலேயே அவர் நல்ல மனிதராகக் கூட இருக்கலாம். அவரை பற்றி சுத்தமாகவே அவளுக்கு இதுவரை தெரியாது. அவரின் பழக்க வழக்கங்கள் என்ன? ஊராரிடம் அவர் பழக்கங்கள் எப்படி? சின்ன வயதில் ஊருக்குள் அவர் எப்படி? திருமணமான பிறகு எப்படி? ஒன்றும் தெரியாது. அதைப்பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஊருக்குள் இவள் சென்று ஒவ்வொரு வீட்டு படியேறியும் குசு குசுப்பாகவேணும் பேசி வர வேண்டும்.

இனிப்போய் ஊருக்குள் நின்றாள் என்றாள் யாரும் மதிக்கப் போவதில்லை. சுந்தரம் வீடு வந்ததும் குழந்தைகளிடம் ஓரிரு வார்த்தைகள் படிப்பு பற்றி கேட்டு விட்டு அவராக சாப்பாடு போட்டு சாப்பிட்டானதும் தூங்கப் போய் விடுகிறார். வேறொருவராய் இருந்திருந்தால் கொத்தாக முடியைப் பற்றி இழுத்து நாலு சாத்து சாத்தி அவர் வழிக்கே கொண்டு வந்திருக்க மாட்டாரா?

முதல் மனைவியை போதை ஏற்றிக் கொண்டதும் அடித்த மனுசன் தான் என்று குழந்தைகளே கூறின. ஆனால் பாட்டிலை அவர் கையால் தொடுவதேயில்லை. பொறுத்துப் பார்த்து மீண்டும் குடிகாரராக இவர் மாறி விடலாம் என்று நினைத்தாள். அப்படி குடிகாரராக இருந்தால் இவளுக்கு இன்னும் வசதியாய் போயிற்று அவரை தரம் தாழ்த்திப் பேச!

தனக்கிருக்கும் கோபத்தை இப்போது யார் மீது காட்டுவது? என்பதே அவளது தலையாய பிரச்சனையாய் இருந்தது. வீட்டுக்கு வாரம் ஒருமுறை வந்து போகும் துணி எடுப்பவன் மீது காட்டினால் அவன் கடைசி வீட்டை ஒதுக்கி விடுவான். ஊருக்குள் கடைசி வீட்டம்மா ஒரு ராட்சசி, என்று பரப்புவான். போக துணிகள் அனைத்தையும் தனியாக இவள் ஒருத்தியே துவைத்து மெனக்கெட நேரிடும்.

பள்ளி விட்டு வரும் குழந்தைகள் இரண்டையும் நிற்க வைத்து பாடத்தில் கேள்வி கேட்டு அவைகள் சொல்லாமல் விழிக்கையில் பிரம்பு எடுத்து சலிக்க அடிக்கலாம். நாளையும் பின்னியும் அவைகளும் ராட்சசியிடம் வராதுகள். ஏக குழப்பத்திற்கும் காரணம் வொர்க்‌ஷாப்காரன் தான் என்ற முடிவுக்கு வந்தாள் கீதா.

அவன் கூப்பிடாவிட்டால் என்ன? அவனை கூப்பிடத்தான் வேண்டும்! அவனோடு ஏதாவது பேச வேண்டும். அவன் கூப்பிட்டால் நகருக்கு பொட்டியோடு வந்து இறங்குவதாக கூறி விட வேண்டும். ஏற்கனவே பாதி வாழ்க்கை வெட்டியாய் போய் விட்டது. மிச்சம் எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது பற்றி எதுவும் தெரியாது. அவளாக குழப்பமான மனநிலையில் சின்னுவை அழைத்தாள். பின் கட் செய்து கொண்டாள். அழைப்பான் என்று காத்திருந்தாள். அவன் திருப்பி அழைக்கவே இல்லை. இது பயங்கர கடுப்பாய் இருந்தது அவளுக்கு.

மீண்டும் அழைத்தாள் அவனை. இந்த முறை கட் செய்யாமல் முழு ரிங்கையும் விட்டாள். கடைசி நிமிடத்தில் அவன் எடுத்தான். ஹலோ யாருங்க? என்றான். இப்படிக் கேட்டதற்கு முன்பாக இருந்திருந்தால் கோபம் மிகுதியில் வைத்திருப்பாள் கீதா. ஆனால் இவளின் நிலையே இன்னமும் சிறிது நேரத்தில் தன் தலைமுடியைக்கூட பிய்த்து வீசி விடும் நிலையில் இருந்ததால், “என் நெம்பரை டிலைட் பண்ணிட்டியாடா நாயே!” என்று வெறியாய்க் கத்தினாள்.

“அப்படி உனக்கு வேண்டாதவளாப் போயிட்டேனாடா பன்னி” என்றாள்.

-கீதாவா? ஒரே வெய்யல் கீதா, வண்டி ஒன்னை வாட்டர் சர்வீசுக்கு கொண்டு போயிட்டு இருந்தேன். அதான் யாரு கூப்பிடறாங்கன்னு கூடப் பாக்கலை! நான் வண்டியை விட்டுட்டு கூப்பிடறேன்!

-சித்த நேரம் கழிச்சு கூப்பிட்டீன்னா என் பொணத்துக்கிட்ட தான்டா பேசணும்! சொல்லி விட்டு கட் செய்து படுக்கையில் படுத்துக் கொண்டாள். பேசியதற்கே அவளுக்கு மூச்சு வாங்கியது.

போன் வரும் என்று நினைத்து சுவிட்ச் ஆப் செய்து நிம்மதியாய் படுத்துக் கொண்டாள் கீதா. அப்புறம் தான் நிஜமாகவே தான் ஒரு பைத்தியம் தான் என்று அவளுக்கு தோன்றியது. அப்படி வெறியாய் அவனை அழைத்து கத்தி விட்ட்தில் சாதித்த்து என்ன? என்று பார்த்தால் ஒன்றும் இருக்கவில்லை. இவள் நினைப்பது போல அவன் திருப்பி கூப்பிடாமல் அவன் வேலையை பார்க்கப் போயிருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயமிருக்கிறது? அவனை பைத்தியகாரனாக தன்னைப் போலவே மாற்றி நிம்மதியடையத்தான் சுவிட்ச் ஆப் செய்ததாக நினைத்துக் கொண்டாள். ஒன்றைக் கணக்கு போட்டு ஒன்றைச் செய்தால் சரியாக அது நடந்தேறி விடுமா என்ன?

சிறிது நேர குழப்பத்திற்குப் பிறகு போனை ஆன் செய்தாள் கீதா. போனை வெறித்துப் பார்த்துக் கொண்டே கையில் வைத்து படுத்திருந்தாள் படுக்கையில். திரும்பி சுவற்றில் இருக்கும் கடிகாரத்தையும் பார்த்தாள். பத்து நிமிடமாகியும் அவன் கூப்பிடவில்லை. திரும்பவும் அவனை கூப்பிட்டால் அது உலகக் கேவலம் என்று நினைத்தாள். சுவிட்ச் ஆப் செய்த தருணத்தில் கூப்பிட்டு மண்டை காய்ந்திருப்பான் சின்னு, என்று நினைத்து சந்தோசமடைந்தாள்.

மேலும் பத்து நிமிடம் கழித்து தான் சின்னு கூப்பிட்டான். முதல் ரிங்கிலேயே அழுத்தி காதுக்கு கொடுத்தாள் கீதா.

-எந்த ஆஸ்பத்திரியில இருந்து பேசினே கீதா? அவன் அப்படிக் கேட்டதுமே மறுபடியும் அவளுக்குள் கோபம் பீறிட்டு வந்தது.

-ஏன் வந்து கொன்னு போட்டு போவறதுக்கா?

-அது கூட நல்லது தான் கீதா. உன்னையே நினைச்சி நான் இங்க நாசமாகறதுக்கு நீ ஒரேயடியா செத்துட்டா நல்லது தான். ரெண்டு நாளைக்கி எனக்கு துக்கம் தொண்டையை அடச்சிக்கும். நாலாம் நாளு ரிலீப் ஆயிடும்! கடையை தொறந்திருவேன் நாலாம் நாளு.

-நான் உன்னைய அப்படிச் சொன்னா உனக்கு எப்படி இருக்கும்?

-அதான் தெருப்பிச்சைக்காரன்னு சொல்லிட்டியே கீதா. அப்பவே நான் செத்துட்ட மாதிரி தான் இருந்துச்சு.

-ஓ! அதான் என் கூட கோவிச்சுட்டு ஒருவாரம் பேசாம இருந்தியா?

-உன் மேல எனக்கென்ன கோவம் கீதா. நீயே பாவம் எங்கியோ ஒரு கிராமத்துல உக்காந்துட்டு சிரமப்பட்டுட்டு இருக்கே! உன் மேல கோவப்பட்டு நான் என்ன பெருசா கிழிச்சுட முடியும்? கோவம் பூராவும் என் மேல தான் கீதா. என்னால தான உன்னை மறக்க முடியாம நீ கல்யாணம் ஆகியிருந்தும் கூப்புட்டு தொந்தரவு பண்ணிட்டு இருந்தேன். இருந்தாலும் நீ சொல்லத்தான் செஞ்சே கீதா.. என் பொண்டாட்டிய பேசுறப்ப எல்லாம் எனக்கு ஞாபகப் படுத்திட்டே இருந்தே! நான் ஒரு மரமண்டை! அது எனக்கு புரியல!

-பேசி முடிச்சாச்சா? அவ்ளோதானா?

-ஏன் இன்னிக்கி எதாச்சிம் புதுசா கண்டு பிடிச்சு என்னை எதாச்சும் சொல்லப் போறியா? கீதா.. வாழ்க்கைன்னா என்னன்னே உனக்கு தெரியல. இப்படியே பொத்திப் பொத்தி வாழ்ந்து நீ தான் வேதனைப் பட்டுட்டு இருக்கே! இங்க யாரும் உன்னை மாதிரி துக்கத்தோட இல்ல! அவங்கவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குது. அதுல கஷ்ட நஷ்டம் எல்லாமும் இருக்குது! ஒன்னா நல்லா சந்தோசமா வாழப்பாரு! நான் எதாச்சும் சொன்னா எனக்கு வேற ரெண்டு வயசு கம்மின்னு டயலாக் உடுவே! அதைப் பேசிப் பேசித்தானே உன்னோட வாழ்க்கைய இப்ப கெடுத்துட்டு உக்காந்திருக்கே! நல்லா யோசனை பண்ணீட்டு நல்லவிதமா பேசு கீதா! அதை விட்டுட்டு எவன் கிடைப்பான் அவனை தெருப்பிச்சைக்காரன்னு சொல்லி கேவலப்படுத்தலாம்னு யோசனை பண்ணிட்டு இருக்காதே! யாரு பிச்சைக்காரத்தனமா வாழ்ந்துட்டு இருக்காங்கன்னு உனக்கே தெரியும் கீதா!

கீதாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வேகத்தில் எது சொன்னாலும் இனி தப்பாகி விடும். யோசனை பண்ணிக்கொண்டு பேச இதில் எதுவுமில்லை தான். எதையும் நேராக பேசாமல் மறைத்து வைத்துக் கொண்டு பேசிப் பேசி சாதித்த்து எதுவும் இல்லை. சம்பாரித்தது வேதனைகளை மட்டும் தான். அதைத்தான் அவள் கணவரும் அன்று சொன்னார் இரவில். பிடிக்கலைன்னா முன்னமே சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாமே! என்று.

-என்னால இங்க இந்த ஊர்ல இருக்க முடியல சின்னு! வந்து என்னை கூட்டிட்டு போயிடறியா?

-இரு கிள்ளிப் பாத்துக்கறேன். நிஜமா கீதா? திடீர்னு அசத்துறியே! ஏன் உன் வீட்டுக்காரர் கூட சண்டை கட்டீட்டியா?

-என்னை வந்து கூட்டீட்டு போக முடியுமா முடியாதா?

-வர்றேன் கீதா. எப்போ வரணும்?

-இன்னிக்கி நைட்டு.

-அது முடியாது கீதா. உங்க ஊருக்கு நான் முன்ன பின்ன வந்ததேயில்ல. அது கிராமம் வேற. ஆளுக எல்லாம் ஒருமாதிரி இருப்பாங்க! ஊருக்குள்ள பைக்குல சாமத்துல வந்தா நாயிக கொலைக்கும். யாராச்சிம் கிட்ட சிக்கீட்டன்னா உன் பேரைச் சொல்லவும் முடியாது. திருட வந்தவன்னு நினைச்சு மரத்துல கட்டி வச்சு தோலை உறிச்சுடுவாங்க!

-பேடி! பயந்தாம் பேடி!

-இருந்துட்டுப் போறேன்! நாளைக்கி காலையில கிளம்பி மதியம் போல வர்றேன் கீதா. உன் வீட்டுக்காரர் வீட்டுல இருந்தா ரும்ல விட்டு கதவை வெளிய சாத்திடு. என்னால அவரு கூடவெல்லாம் செரிக்கி செரி சண்டையெல்லாம் கட்ட முடியாது.

-சரி அப்பிடியே நாளைக்கு பகல்லயே வா!

-வந்ததும் வழக்கம் போல உன் புத்தி சிறப்பா வேற மாதிரி வேலை செஞ்சுடப் போவுது கீதா!

-அதெல்லாம் அப்படி வேலை செய்யாது வா! என்ற கீத போனை கட் செய்து விட்டு தன் யோசனை சரிதானா? என்று கேட்டுக் கொண்டாள். அப்போதைக்கு சரிதான் என்று அவள் மனது அவளுக்குச் சொன்னது. மீண்டும் தொடரும்

Post Comment

1 கருத்து:

சேக்காளி சொன்னது…

குறும் தொடர் நான்கை காணவில்லையே?