ஞாயிறு, ஜூலை 26, 2015

அன்பிற்கினியவள் -நான்கு

ஏழு

சுந்தரம் திருமணம் முடிந்த இந்த ஏழு மாதத்தில் இரண்டு முறைதான் கீதாவின் வீட்டுக்கு வந்திருக்கிறார். முதலாக பெண் பார்க்க என்று ஒருமுறையும் இரண்டாவதாக திருமணம் முடிந்து மறுவீடு என்று சென்று வர ஒருமுறையும் வந்திருக்கிறார்முன்பாக புரோக்கர் அழைத்து வந்ததால் வீடு இருக்கும் வீதியை சரியாக அவர் சரியாக கவனிக்கவில்லை. இரண்டாவதாக வந்த போது காரில் பயணப்பட்டு வந்ததாலும் சரியாக கவனிக்கவில்லை.
சுந்தரம் ஒருவார காலமாக மனைவி கீதாவைக் காணோமென்று குழம்பிக் கொண்டு வீட்டில் கிடந்தார். கீதா ஏதோ மனக்குழப்பத்தில் இருப்பதை திருமணம் முடிந்து வந்து பேசிய முதல் ராத்திரியிலேயே யூகித்துக் கொண்டார். அவளை அதிகம் தொந்தரவு செய்யாமல் விட்டு வைத்ததும் அவளாக சரியாகட்டும் என்று தான். ஆனால் அது இப்படி வந்து முடியுமென்று அவர் நினைக்கவில்லை.
குழந்தைகள் ராணியும் வாணியும் அக்கா எங்கே? எங்கே? என்று கேட்டுச் சலித்துப் போயின. போக அக்காவை அடித்து விரட்டி விட்டதாக இவரையே குற்றம் சாட்டின. இவரால் குழந்தைகளிடம் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. இப்படியான வேலையை அவள் செய்வாள் என்றால் கட்டி வந்த புதிதிலேயே செய்திருக்கலாம். ஏன் தாமதப்படுத்தினாள் என்றும் தெரியவில்லை.
ஊரில் யாருக்கும் விசயம் தெரியவில்லை. அவர் அம்மாவுக்கு மட்டும் விசயம் தெரிந்திருந்தது. அதாவது மகனிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் அவள் வீட்டிலிருந்து கிளம்பிப் போய்விட்டாள் என்பதே அது. அவள் வாய் அதன்பின் கீதாவை, ஓடுகாலி கழுதை! என்றே சொல்லி வந்தது. சுந்தரம் வழக்கம் போல சமையல் அறையில் வெங்காயம் மிளகா என்று நறுக்கி சமையல் செய்ய வேண்டி வந்தது. அது அவருக்கு சிரமமாய் இருந்தது. காலை வேளை என்றால் உள்ளூரில் இட்லிக்கடை ஆயாவிடம் ராணியும் வாணியும் ஓடிப்போய் பொட்டணம் கட்டி வந்து விடுகிறார்கள். இரவு வேளை உணவுக்கு மட்டும் சுந்தரம் சமையல் கட்டில் அலைய வேண்டி இருந்தது.
பொறுத்துப் பார்த்த சுந்தரம் கீதா தன் தாய் வீட்டுக்குத் தான் சென்றிருக்க வேண்டுமென்று நினைத்தார். வழக்கமாக அது தானே நடக்குமென்று அவருக்கு தெரிந்திருந்தது. நிஜமாகவே தன் குழந்தைகள் மீது அவருக்கு கரிசனம் என்ற ஒன்று வந்தது என்றால் அது சமையல் கட்டில் அவர் செலவழித்த நேரத்தில் தான். குழந்தைகளுக்கு விடுமுறை நாள் ஒன்றில் அவர்களிடம் உங்கள் அக்காவை போய் அழைத்து வருகிறேன் என்ற வாக்குறுதி கொடுத்து நகருக்கு கிளம்பி வந்திருந்தார்.
நகரம் அவரது கிராமிய வாழ்க்கைக்கு ஒத்து வராத விசயம் தான். அவருக்கு அது நன்கு தெரியும். அவருக்கு எப்படி நகர வாழ்க்கை பிடிக்கவில்லையோ அது போல கீதாவுக்கு கிராமிய வாழ்க்கை பிடிக்காமல் இருந்திருக்கலாம், என்று தோன்றியது அவருக்கு. கீதாவின் வீட்டை அவர் கண்டு பிடித்து படியேறிச் சென்று வீட்டின் காலிங் பெல்லை அடிக்க அவருக்கு வெகு நேரம் பிடித்தது. அதே வீதியில் பலமுறை நடந்தும் அவருக்கு எந்த உறுதியும் ஏற்படவில்லை. கடைசியில் ஒரு மளிகைக் கடையில் விசாரித்து தான் வந்திருந்தார்.
அவரை வரவேற்று உள்ளே கூட்டிச் சென்றார் கீதாவின் அப்பா!
-வாங்க மாப்பிள்ளை! என்ன திடீருன்னு வந்து சேர்ந்திருக்கீங்க? வாங்க வாங்க! -கூட்டிப்போய் நாற்காலியில் அமர வைத்தார். சமையல் அறையிலிருந்து கீதாவின் அம்மா வந்து வணங்கினார்.
சுந்தரத்திற்கு கீதா வீட்டினுள் தான் இருக்கிறாளா? என்ற சந்தேகம் உடனேயே வந்து விட்டது.
-என்ன திடீருன்னு? வீட்டுல குழந்தைகள், உங்க அம்மா, கீதா எல்லாரும் செளக்கியம் தானே மாப்பிள்ளை? கீதாவை நீங்க வர்றப்ப கூட்டி வந்திருக்கலாம் மாப்பிள்ளை!
-இல்லங்க மாமா, நான் வேறொரு வேலையா டவுனுக்கு வந்தேன். அதான் உங்களை பார்த்துட்டு போலாம்னு அப்படியே ஒரு எட்டு வந்தேன்.
கீதாவை வீட்டில் காணோம் மாமா என்றும் அவள் இங்கே தான் வந்திருக்கிறாளோ என்று பார்த்துப் போக வந்தேன் என்றோ ஒரு வார்த்தையையும் அவர் அவர்களிடம் சொல்லவில்லை. அது அவர்களை மேலும் சிரமத்தில் ஆழ்த்திவிடுமென நினைத்துத் தான் அவர் சொல்லவில்லை. கடைசியாக காபி மட்டும் குடித்து விட்டு அடுத்தமுறை வருகையில் கீதாவை அழைத்து வருவதாக அவர்களிடம் சொல்லி விட்டு எழுந்து கிளம்பினார் சுந்தரம்.
கீதா எங்கு தான் சென்றிருப்பாள்? ஏதேனும் பழைய காதலன் யாரேனும் இருந்தால் அவனுடன் வாழ சென்றிருப்பாளோ? என்றும் வீட்டில் யோசித்துக் கிடந்தார்அவளது அலைபேசியும் சத்தமின்றி செத்துக் கிடந்தது. அப்படி செய்யக்கூடியவள் தானா கீதா? உள்ளூரிலேயே காதல் என்று கட்டிக் கொண்ட பெண்கள் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் அவர்கள் காதலித்தது உள்ளூர் ஆட்களையே! அப்படிக் கூட கீதாவுக்கு காதலன் என்றிருந்திருந்தால் இருபத்தைந்து வயதாகி அவனை திருமணம் செய்யாமலா வீட்டில் இருந்திருப்பாள்? பெண்களின் நடத்தைகள் பற்றியெல்லாம் யோசிப்பதில் அதிக அக்கறை அவருக்கு என்றுமே இருந்ததில்லை. கீதா அவர் மனைவி என்பதால் மட்டுமே அப்படியும் நடந்திருக்கலாம் இப்படியும் நடந்திருக்கலாம் என்றெல்லாம் யோசித்துக் கிடந்தார்.
அவருக்குள் இந்த இரண்டாவது திருமண யோசனையை ஊருக்குள் இருந்து யாரும் வந்து தூண்டி விடவில்லை. இது அவராகவே எடுத்த முடிவு தான். அதுவும் குழந்தைகளுக்காகத் தான். அப்போதே விதவை என்றேனும் யாரும் இருந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கத்தான் யோசித்திருந்தார் சுந்தரம். அப்படியும் இரண்டு பெண்களை புரோக்கர் காட்டத்தான் செய்தார். அவர்களோ முதல் வாழ்க்கையில் இழந்தவைகளை இரண்டாவது வாழ்வில் பெற்றுக் கொள்ள பிடிவாதமாய் இருந்தார்கள். பெண் கிடைக்காமல் இரண்டாவதாகவேனும் மனைவி என்றொருத்தி வந்தால் போதுமென வயதை இழந்து விட்ட பலர் போட்டியிட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு இளம் விதவை காபி கொடுத்தவுடனே தன் மறுப்பை அங்கே தெரிவித்தாள். மாப்பிள்ளைக்கு தலையில முடியைக் காணோம்!
முதல் கணவரோடு வாழ்ந்த அந்த அழகான நாட்களை நினைத்து நினைத்து என் வாழ்நாளைக் கழித்துக் கொள்வேன்! என்று திரைப்படத்தில் நடிகைகள் சொல்வது போல நிஜத்தில் எந்தப் பெண்ணும் இங்கிருக்கவில்லை! என்பதை உணர்ந்த சுந்தரத்திற்கு அது அதிர்ச்சி தான்.
சுந்தரம் ஒவ்வொரு இரவிலும் கீதாவை அலைபேசியில் பிடிக்க முயற்சியெடுத்துக் கொண்டிருந்தார். கீதாவை அவர் விவரம் அறிந்த பெண் என்றே நினைத்திருந்தார். நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு கிராமத்து பெண்களைப்போல கொஞ்சம் மந்தப்புத்தி இருக்காது, என்றே நினைத்திருந்தார். தன்னை விடவும் ஒரு படி கீதா அறிவு விசயத்தில் மேல் தான் என்று அவராகவே முடிவு செய்திருந்தார். கிராமத்தில் பெண்கள் யாரும் நேருக்கு நேர் முகம் பார்த்து ஆண்களிடம் பேசுவதில்லை. இவர் பேசிய பெண்கள் எல்லோருமே அப்படித்தான். ஆனால் கீதா அப்படியல்லவே!
அன்று சுந்தரம் இரவில் கீதாவின் எண்ணுக்கு அழைக்கையில் அது உயிர் பெற்று ரிங்கானது. அவருக்குள் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டதுஇனி அவள் அதை எடுத்துப் பேசுவாளா? என்பது மட்டும் தான். ஆனால் கீதா அதை எடுத்தாள்.
-சொல்லுங்க!
-நீ தான்மா சொல்லணும்! உன்னை எங்கெல்லாம் நான் தேடுறது? உன் வீட்டுல போய் பார்த்தேன்.
-ஐயோ! அங்க போய் என் பொண்டாட்டி ஓடிப்போயிட்டாள்னு சொல்லிட்டீங்களா?
-இல்லம்மா! அவங்க உன்னை ஏன் கூட்டிட்டு வரலைன்னு என்னைக் கேட்டாங்க! அடுத்தமுறை கூட்டிட்டு வர்றேன்னு சொல்லிட்டேன்.
-அப்பாடா! சந்தோசம்.
-ஏன் நீ எங்கிட்ட சொல்லாமக் கூட கிளம்பிப் போனே கீதா? உன் கிட்ட எதோ பிரச்சனை இருக்குது. அது என்னான்னு தான் எனக்கும் தெரியல. எதையும் முகத்துக்கு நேரா பேசக்கூடிய பொண்ணு தான நீ? இதை மட்டும் ஏன் இப்படி செஞ்சே?
-அப்படி நான் என்ன செஞ்சுட்டேன்? ! யாராச்சும் கூட ஓடி வந்துட்டேன்னு நினைச்சுட்டு அங்க உட்கார்ந்துட்டு இருக்கீங்களா?
-ச்சே! என்ன பேச்சும்மா நீ பேசுறே? அப்படியெல்லாம் ஒரு புருஷன் எந்த நாள்லயும் தன்னோட மனைவியைப் பத்தி நினைக்க மாட்டான்.
கீதாவுக்கு இந்த இடத்தில் தான் என்னவோ புரிபட்டது போலவும் இருந்தது.
-அப்ப நீங்க அப்படியெல்லாம் நினைக்கவே இல்லைன்னு சொல்றீங்க, எனக்கு ஏற்கனவே காது குத்திட்டாங்க! பின்ன வீட்டை விட்டு ஓடி வந்த பொண்ணு அவ அம்மா வீட்டுலயும் இல்லையின்னா யோசிக்கத் தோணுமே!
-கீதா நீ இப்ப எங்க தான் இருக்கே? இவ்ளோ பேசுறியே குழந்தைகளைப் பத்தி ஒரு வார்த்தை கேட்டியா? அதுக நான் என்னமோ உன்னை அடிச்சுத் தொறத்தி விட்டுட்டதா இன்னும் நினைச்சுட்டு இருக்குதுக!
-! உங்க குழந்தைகள்னு சொல்லுங்க! அதுகளை பார்த்துக்கத்தானே என்னை கட்டீட்டு போனீங்கஅப்பவே நான் சொன்னது தானே.. ஒரு வேலைக்காரியை வச்சிருந்திருக்கலாம். இப்ப எதுக்கு நான் எங்க இருக்கேன்னு கேட்கறீங்க? வந்து கூட்டிட்டு போகவா?
-சேச்சேஅது உனக்கு எப்படித் தோணுதோ அப்படிப் பண்ணு கீதா. நான் உன் வாசல்ல வந்து நின்னு வா நம்ம வீடுக்கு போலாம்னு உன்னை எப்படி கூப்பிடறது?
-! அப்ப நான் வரச்சொன்னால் கூட வர மாட்டீங்க? அப்படித்தானே!
-ஒன்னு தெரிஞ்சுக்கோ கீதா. இங்கிருந்து கிளம்பிப் போனவளுக்கு கண்டிப்பா வழி தெரியும். நீ என்ன சின்னப் பிள்ளையா? வழிதவறிப் போயிட்டியேன்னு வந்து கூட்டிட்டு வர? ஆனா என்ன காரணத்துக்காக இங்கிருந்து நீ சொல்லாமக்கூட கிளம்பிப் போனீன்னு தான் தெரியல கீதா. உனக்கே தெரியும் நான் கூட உன்னை எந்த தொந்தரவும் பண்ணினதே இல்ல. என்ன காரணத்துக்காக அப்படி இந்த வீட்டுல நீ  இருந்தேன்னு கூட தெரியல. ஆனா நிச்சயமா எதோ காரணம் இருக்கும்.
-நான் காரணத்தை சொன்னா உங்களுக்கு சங்கடமா இருக்கும்.
-ஒரு சங்கடமும் எனக்கு இருக்காது, சொல்லு!
-எனக்கு கல்யாணம் அப்படிங்கறதே பிடிக்கலை. நான் ஆசைப்பட்ட போது  வீட்டுல எனக்கு மாப்பிள்ளை அமையல. நான் ஆசைப்படாதப்ப வீட்டுக்கு பாரமா இருக்காளேன்னு ரெண்டாம் தாரமா அதும் ரெண்டு குழந்தைகளுக்கு அப்பனான உங்களுக்கு கட்டி வச்சுட்ட எங்க அப்பா அம்மாவைத்தான் பிடிக்கலை. அவங்க ஏன் எனக்கு மட்டும் அப்படி ஒரு வாழ்க்கையை தரணும்? ஊர்ல எல்லா அப்பா அம்மாவும் அப்படித்தான் கையில எதுவுமில்லைன்னு செய்யுறாங்களா? உங்களுக்கு அறிவு எங்க போச்சு? நாம செய்யுறது சரிதானா? அப்படின்னு யோசிக்காம தாலி கட்டினீங்களே? நான் எல்லாரையுமே வெறுக்குறேன்! எனக்கு எதுவும் பிடிக்கலை. செத்துடலாம் நான். ஆனா சாக எனக்கு பயமா இருக்குது. நான் ஏன் சாகணும்னும் தெரியல.
-என்னம்மா சாகுறேன்னெல்லாம் பேசிட்டு இருக்கே? உன்னை சாகடிக்கவா உங்க வீட்டுல நினைச்சிருப்பாங்க? நீயாவே எதை எதையோ யோசிச்சு குழம்பிக்காதே கீதா. சிலருக்கு அமையுறது அப்படித்தான். அதுக்காக வாழ்க்கையை அழிச்சுக்க முடியுமா சொல்லு! எனக்கு இப்படி நடக்குதேன்னு நான் செத்துட முடியுமா? நீ எங்க எப்படி இருந்தாலும் எனக்கு சந்தோசம் தான். ஆனா நீயா எல்லாத்துக்கும் தலையை ஆட்டீட்டு கடைசில என்னை மாதிரி ஆளுங்களையும் சங்கடப்பட வைக்கிறது மட்டும் நல்லதா? என்மேல நீ கோபப்படறதுல எந்த நியாயமும் இருக்கிறதா எனக்குத் தெரியல கீதா. நான் உனக்கு எந்த அநியாயத்தையும் மனசால கூட செய்யலை.
-எப்ப எனக்கு உங்க மேலயும் உங்க குழந்தைகள் மேலயும் ஒட்டுதல் வருமோ அப்போ நான் உங்க வீட்டுக்கு வர்றேன்.
-அது எப்ப நடக்கும்? இப்ப என்ன பண்ணிட்டு இருக்கே நீ?
-நான் நிம்மதியா இருக்கேன் இப்போ. ஒரு ஜெராக்ஸ் கடையில வேலைக்கு சேர்ந்துட்டேன். நான் இங்க இருக்குறது எங்க வீட்டுக்கு கூடத் தெரியாது.
-ஏன் அப்படி நீ போய் தனியா வேலைக்கு போயிட்டு சிரமப்பட்டுட்டு இருக்கணும்? சரி அது உன் இஷ்டம். நீ வர்றேன்னு சொல்றியே அது எப்ப நடக்கும்? குழந்தைகள் கொஞ்சம் பெருசாயிடுச்சுன்னா அதுகளே அதுகளோட தேவைகளை பார்த்துக்கும். அப்ப வந்து நின்னீன்னா அதுகளுக்கே உன்னைப் பிடிக்காமப் போயிடும்.
-அதுக என்னோட கொழந்தைகளா இருந்தால் தானே நான் ரொம்ப வருத்தப்படுவேன்.
-சரி, ஆனா ஒரு வருஷம் தான் உனக்கு டைம். அதுக்குள்ள உனக்கு புத்தி வந்துடுச்சுன்னா நம்ம வீட்டுக்கு வா!
-அப்ப எனக்கு புத்தியில்லாம தான் இந்த மாதிரி தனியா வந்ததா நினைக்கறீங்களா?
-அது இருந்திருந்தா இப்படியெல்லாம் நீ பண்ணிட்டு இருக்க மாட்டே! சரி வச்சுடறேன்.
சுந்தரம் தன் கைப்பேசியை அணைத்தார். இது என்றுமே ஒட்டாது என்று தெரிந்தது!

எட்டு

சுந்தரம் போனை வைத்த பிறகு தான் தன் கணவரிடம் சரியாக பேசினோமா? என்ற சிந்தனையே கீதாவுக்குள் வந்தது. அந்த கிராமத்தை விட்டு சின்னுவின் டூ வீலரில் வருகையில் கொஞ்சம் அவளுக்குள் சந்தோசம் இருக்கத்தான் செய்தது. சின்னு அவளுக்காக நகரில் ஒரு அறையை பிடித்து வைத்திருந்தான். அறைக்குள் ஒரு பெண் குடும்பம் நடத்துவதற்கு தேவையான சாமான் செட்டுகள் இருந்தன. எல்லாமே புதியவைகள்.
தான் வசிக்கப்போகும் அறைக்குள் நுழைந்தவள் அது கச்சிதமாய் இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தாள். அதற்காக சின்னுவிற்கு ஒரு முத்தம் தருவதற்கு கூட அவள் தயாரானாள். ஆனால் சின்னுவோ அவசரக் குடுக்கையாக இருந்தான். அறைக்குள் வந்ததுமே அவன் பார்வையில் மாற்றம் தெரிந்தது கண்டு மிரண்டாள். அது அவனது வழக்கமான பார்வையல்ல! அதில் வேறு எதற்கோ ஆசைப்படும் வெறி தெரிந்தது. அதை மாற்றும் முகமாக பேச்சில் இறங்கினாள் கீதா.
-எப்படி சின்னு அதுக்குள்ள இப்படி ஒரு ரூம் பிடிச்சே?
-நீ எப்போ அந்த கிராமத்துல வாழ சங்கடமா இருக்குன்னு சொன்னியோ அப்பவே இந்த ரூமை நான் பிடிச்சுட்டேன் புரோக்கர் மூலமா! பத்துக்கு பத்து ரூம் தான் கிடைச்சுது. நமக்கு நல்ல ராசி அமைஞ்சு சுழி பேசுச்சுன்னா இதை விட பெரிய அறையாப் பார்த்து சிப்ட் ஆகிடலாம். என்ன சொல்றே?
-ஆகிடலாம், ஆகிடலாம். ரூம் பிடிச்சே சரி, ஜாமான் செட்டெல்லாம் ரெடியா இருக்கே?
-அது பாதி அமெளண்ட் கொடுத்து மொத்தமா தூக்கிட்டேன். மாசா மாசம் கட்டணும். குளிக்கறதுக்கு இந்த லைன்ல கடைசில பாத்ரூம் இருக்கு. அஞ்சு ரூமுக்கு குளியல் அறை ரெண்டு தான். மிச்சம் இருக்குற நாலு ரூம்ல கம்பெனிக்கு வேலைக்கு போற பசங்க இருக்காங்க! வீட்டு ஓனர் முதல்ல எனக்கு ரூம் கொடுக்க சம்மதிக்கலை. அப்புறம் என் பொண்டாட்டி தீ அது இதுன்னு சொல்லிப் பிடிச்சேன்.
-தீயா? யாரு நானா?
-ஆமா பின்ன இல்லையா கீதா. அன்னிக்கெல்லாம் விரல் பட்டாக்கூட தீ மாதிரி தானே என்னை முறைப்பே! இப்போ
என்றவன் அவளை எதிர்பாரா நேரத்தில் கட்டிக் கொண்டான். அவன் பிடி இரும்புப் பிடியாக இருந்தது.
-சின்னு விடு என்னை! இப்ப விடப்போறியா இல்லியா? விடுடா!
-இனி எதுக்கு கீதா நான் விடணும்? இத்தனை நாள் விட்டிருந்தது போதாதா எனக்கு? இப்பத்தான் நீ எனக்குன்னு வந்துட்டியே!
-லுசு, இப்ப விடப்போறியா இல்ல கத்தவா?
-கத்துறியா? ஏன் கீதா?
அவன் பிடியில் இப்போது மாறுதல் தெரிந்தது. முன்னை விட அதில் இறுக்கம் கூடிப்போய் இருந்தது. போக அவன் கைவிரல்கள் பின்னால் என்னவோ செய்ய முயற்சிக்கையில் தான் அவனை முடிந்த மட்டிலும் விலக்க போராடினாள் கீதா.
-சத்தியமா கத்துவேன்டா! கூட்டிட்டு வந்து இந்த வேலை பண்ணுறியா? இதுக்காடா நான் பறந்தடிச்சு ஓடி வந்தேன்? என்னை ஏன்டா இம்சிக்கிறே நீயும்?
சின்னு அவளைப் பிடித்திருந்த பிடியை விட்டு விட்டு புதிதாக வாங்கி வைத்திருந்த மடக்கு கட்டிலை எடுத்து விரித்துப்[ போட்டு அதில் படுத்துக் கொண்டான். அவனுக்கு கீதா தள்ளி விட்டது பிடிக்கவில்லை. இத்தனை ஏற்பாடுகள் செய்து அவளை வரவைத்தது ஆனது ஆகட்டும் கீதா அவனுக்கு அடங்க வேண்டும். அடங்கிய பிறகு அவளை கொஞ்சமேனும் இவனை சீரழித்ததற்காக பழி தீர்க்க வேண்டும் என்று தான். அது இவனுக்கு பகல் கனவாகவே போய் விடுமோ என்று தான் கோபமாய் இருந்தது. அவள் அன்று சொன்ன தெருப்பிச்சைக்காரன் என்ற வார்த்தை அவனை குத்திக் கொண்டே இருந்தது.
கீதா எதுவுமே அங்கு நடக்காதது போல அடுத்த நிமிடம் மாறி விட்டிருந்தாள்.
 -படுத்துட்டா எப்படி சின்னு? போயி பால் பாக்கெட் ஒன்னு வாங்கிட்டு வா சீக்கிரம். புதுசா வீட்டுக்கு வந்தா முதலா பால் காச்சணும். தெரியுமில்ல உனக்கு?
-ஏன் நீ போய் வாங்கிட்டு வர மாட்டியா? இதே வீதியில ரெண்டு மளிகை கடை இருக்கு. போயி வாங்கிட்டு வா!, என்றான்.
கீதா அதற்கெல்லாம் சங்கடப்படாமல் கிளம்பினாள். அவள் நினைத்ததை சின்னுவை வைத்து சாதித்துக் கொண்டாள். கிராமத்திலிருந்து நகருக்கு வந்து விட வேண்டும். அது தான் அவள் நினைத்தது. கணவனுக்கு சாப்பாடு செய்வதோ, குழந்தைகளை கொஞ்சிக் கொண்டு வீட்டில் அடைபட்டுக் கிடப்பதோ இவைகள் மட்டுமே அவளுக்கு சலிப்பாய் இருந்தது. அதற்காக மாற்று ஏற்பாடு அவளுக்கு வேண்டியிருந்தது. ஒரு பெண்ணாய் ஆயிரம் பதில் சொல்லி இப்படி ஒரு அறையை அவளால் நகரம் வந்து தனியே பிடித்திருக்க முடியாது. சின்னு எல்லாவற்றையும் கச்சிதமாய் நடத்திக் கொடுத்து விட்டான்.
கட்டிலில் கிடந்த சின்னுவிற்கு கீதாவின் போக்கு இங்கு வந்ததும் மாறி விட்டதாய் தான் தெரிந்தது. கீதா மீது இவன் கொண்டிருந்த ஆசையில் ஒரு துளி அளவேணும் அவளிடம் இல்லை என்பது வந்தவுடன் தெரிந்து விட்டது. பின் எதற்காக இவனிடம் வருவதாக கூறி ஏறிக்கொண்டு வந்தாள்? என்னதான் நினைக்கிறாள் என்று இவனால் எதுவும் இப்போதும் கண்டறிய முடியவில்லை. அப்படி எல்லாவற்றையும் மறுப்பவள் இவன் உதவிகளையும் மறுத்து விட வேண்டியது தானே!
உதவிகளை பிறருக்கு யாரேனும் இலவசமாக இந்த உலகில் செய்வதேயில்லை. எதையோ ஒன்றை எதிர்பார்த்தே செய்கிறார்கள். அது கீதாவுக்கு தெரியுமா தெரியாதா? கீதா இவனை என்னவென நினைத்திருக்கிறாள்? இப்படி தனித்து அவள் விருப்பப்படி கூட்டி வந்த பிறகும் கத்துவேன், என்கிறவள் எதோ திட்டத்துடன் இருக்கலாம். அதை அவன் கண்டறியும் வரை அமைதியாக இருந்து தான் ஆக வேண்டும். ஆனால் எதற்காக அமைதியாக சின்னு இருக்க வேண்டும்? அவனுக்கு இப்போதேனும் டீலா? நோ டீலா? தெரிந்தாக வேண்டும்.
அவனுக்கான வாழ்க்கை ஒன்று இருக்கிறது. அவனுக்கு ஒரு டூ வீலர் வொர்க்‌ஷாப் தான் சம்பாதித்துக் கொடுக்கிறது. அவன் முன்னைப்போல சுதந்திரமானவனல்ல! சுதந்திரம் ஏது அவனுக்கு இனி? அவனுக்கு ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதற்கு மஞ்சு என்று பெயர் வைத்திருக்கிறான். ஆசை யாரை விட்டது என்பது போல பொய்யாய் கீதா என்று வைத்திருப்பதாக கீதாவிடமே பொய் சொல்லியிருக்கிறான். எல்லாமும் எதற்காக? கீதா அவனுக்கு முழுமையாக வேண்டும். கீதாவும் அவன் வாழ்வில் வேண்டும். எல்லாமும் அல்ப ஆசை தான்.
கீதாவையும் அவன் மனைவி சீதாவை பத்திரமாய் பார்த்துக் கொள்வது போல பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் ஆசைகள் தான். இவனை தெருப்பிச்சைக்காரன் என்று அவள் சொல்லும் வரை. ஒரு தெருப்பிச்சைக்காரன் என்று இவனை அவள் கணவனிடம் அறிமுகப்படுத்துவாளாமே! திடீரென அவள் மொபைல் போன் டேபிள் மீது இருப்பதைக் கண்டு பாய்ந்து அதை எடுத்தான் சின்னு. அதில் கான்டாக்ட் நெம்பர்களை பார்த்தான். அவற்றில் நானகைந்து நெம்பர்களே இருந்தன. எல்லாமுமே வி, கே, சி என்று ஒற்றை எழுத்துகளாக இருந்தன.
சி என்பது இவன் நெம்பராக இருந்தது. வாடி வா! என்று நினைத்தவன் வி என்பது வீட்டுக்காரர் என்பதை அறிந்து அந்த எண்ணை தன் அலைபேசியில் பதித்துக் கொண்டான். மூளை கொஞ்சூண்டு இப்போது தான் வேலை செய்வதாய் நினைத்து தன்னையே பாராட்டிக் கொண்டான். அவள் பால் பாக்கெட்டோடு வருகையில் மேலே ஆஸ்பெட்டாஸ் கூரையை வெறித்துப் பார்த்த வண்ணம் படுத்திருந்தான்.
கீதா சுவற்றோரத்திலிருந்த ஐந்து லிட்டர் கேனிலிருந்து மண்ணெண்ணெயை புனலால் ஸ்டவ்வுக்கு ஊற்றி அதைப் பற்ற வைத்தாள். குண்டானை எடுத்து வைத்து பால் பாக்கெட்டை கிழித்து ஊற்றினாள்.
-முன்னாடி தண்னி பைப் இருக்கு சின்னு, அதுல தண்ணி எப்போ வரும்?
-நான் இங்க ரூம் பார்க்க வந்தவன் கீதா. அப்புறம் நேத்து நீ பேசின பிறகு ஜாமான்களை ஆட்டோ பிடிச்சு கொண்டு வந்து இறக்கி வச்சுட்டு போயிட்டேன். டைம் எல்லாம் தெரியல. வேணும்னா வீட்டு ஓனர் பின் பக்கம் தான் இருக்காரு. அவர் கிட்ட இன்னிக்கி ரெண்டு குடம் வாங்கிக்க!
கொதித்து வந்ததும் பாலை இறக்கி சக்கரை கலந்தாள். இரண்டு டம்ளர்களை எடுத்து ஊற்றினாள். இவளாக ஒரு டம்ளர் பாலை ஆற்றி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து குடிக்க ஆரம்பித்தாள்.
-சின்னு உனக்கு வேணும்னா சக்கரை என்ன அளவு வேணுமோ போட்டு கலக்கி ஆத்திக் குடி!, என்றாள்.
-நீயே துளி சக்கரை போட்டு குடு கீதா!
-ம்! நான் என்ன உன் பொண்டாட்டியா உனக்கு சக்கரை கலந்து ஆதிக் கொண்டு வந்து நீட்ட?
-நாளைக்கி முகூர்த்த நாள் தான் கீதா. உனக்கு கோவில்ல வச்சு தாலி கட்டிடறேன். ரொம்ப என்னை பேசிட்டே இருக்காதே! நீ கூப்பிட்ட மறு நிமிசம் வந்து உன்னை கூட்டிட்டு வந்திருக்கேன். உன்னை ஏமாத்திட்டு ஓடீருவேன்னு தப்பு தப்பா இன்னமும் யோசனை பண்ணிட்டு இருக்காதே!
-எத்தனை பேரு நம்ம கல்யாணத்துக்கு வர்றாங்க சின்னு? எல்லாமே சொல்லி வச்சிட்டியா?
-எல்லாம் இதை ரெடி பண்ணுறப்பவே ரெடி பண்ணிட்டேன்.
-என்னை ஒரு வார்த்தை கேக்கவே இல்ல! நம்பி வந்துட்டா சொல்லுறதை கேட்டுக்குவான்னு நினைப்பா? நீ என்னை என்னிக்கும் ஏமாத்திட்டு ஓடவே முடியாது சின்னு! நீ எதுக்காக என்னை ஏமாத்தப் போறே? ஒரு காரணமும் கிடையாது.
-சரி சரி, நாளைக்கி நம்ம கல்யாணம் இருக்கு, அதுக்கு இப்ப உன்னோட அனுமதி கேட்கிறேன். போதுமா?
-என்னால உடனே உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது சின்னு.
-பின்ன எப்ப கல்யாணம் பண்ணிக்குவே?
-இப்ப நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணத்துக்கு என்ன அவசரம் வந்துச்சு? ஏற்கனவே கல்யானம் ஆனவங்க தானே நாம!
-நாம எப்ப கல்யாணம் பண்ணிட்டோம்?
-லூசு! நாம பண்ணிக்கலை. நம்மளுக்குனு ஒரு கல்யாணம் நடந்து முடிஞ்சிருச்சுல்ல! அதைச் சொன்னேன். பாரு என் கழுத்துல எங்க வீட்டுக்காரர் கட்டிய தாலி இருக்கு. அதுமாதிரி நீயும் சீதாவுக்கு கட்டியிருப்பீல்ல!
-நீ என்ன சொல்ல வர்றே கீதா?
-பால் ஆறிடும் சின்னு, எந்திரிச்சு வந்து சக்கரை கலந்து குடி!
-அது ஆறட்டும் விடு. அப்ப நான் கல்யாண ஏற்பாடு பண்ண வேண்டாமா?
-அதத்தான் சொல்றேன் நான் இப்போ வேண்டாமுன்னு. கொஞ்சம் நாள் போகட்டும். எனக்கு தோணுறப்ப நாம கல்யாணம் பண்ணிக்கலாம். உன் சம்சாரத்தோட சாபத்தையும் நான் வாங்கிக்கிறேன்.
-அப்ப நீ சம்மதிக்கப் போறதிலேன்னு தெரியுது.
-உனக்கு கொஞ்சம் மூளை முன்னத்த விட வேலை செய்யுது சின்னு. கரைட்டா பாய்ண்ட்ட புடிச்சிட்டே! என்னால இன்னொரு குடும்பம் கெடுறதை ஒத்துக்க முடியல சின்னு. உன் சம்சாரத்தை நினைச்சுப்பாரு. பாவம் தானே! பாவமா பாவமில்லியா?
-அதை விடு கீதா. இப்பவே மணி ரெண்டு ஆகப்போகுது. கடையில பையன் ஒருத்தன் காலையில இருந்து சமாளிச்சுட்டு இருப்பான். போயி என்னன்னு பார்த்துட்டு நைட்டு வந்துட்டு போறேன். அப்ப பேசிக்கலாம், என்றவன் உடனே எழுந்து கிளம்பினான்.
கீதா பாலை குடித்து விட்டு போ, என்று கூட அவனுக்குச் சொல்லவில்லை.
அப்போது சென்ற சின்னு அதன் பின் இரண்டு நாட்கள் அவள் இருக்கும் அறைப்பக்கமே வரவில்லை. இவளாக அவனுக்கு போனில் அழைத்துப் பேசினாலும் இரவில் வந்து பார்த்து விட்டுச் செல்வதாக சொன்னவன் இரவிலும் வரவில்லை. அவன் எண்ணமெல்லாம் இப்போது வெட்டிச் செலவு கீதாவுக்கு செய்ததாக மாறி விட்டது.
போக இவன் மனைவி சீதா முன்பு வேலைக்கு என்று சென்று கொண்டிருந்த ஜெராக்ஸ் கடை முதலாளி வேறு வேலைக்கு ஒரு ஆள் பிடித்துக் கொடேன் சின்னு, என்று பார்க்கும் போதெல்லாம் நச்சரித்துக் கொண்டே இருக்கிறார். இவனுக்கு அந்த புதிய திட்டம் அப்போது தான் தோன்றியது.
கீதாவை மறுபடியும் ஒருமுறை சந்தித்து நிதானமாய் பேசி வழிக்கு வருகிறாளா என்று பார்க்க வேண்டும். அப்படி வழிக்கு வரமாட்டாள் என்கிற போது ஜெராக்ஸ் கடையை கைகாட்டி விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டியது தான். கிட்டா கனிக்கு கொட்டாவி விட்டபடி பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்க அவனால் இனி முடியாது. பழகிய தோசம் ஒன்றிற்கு அவளை அவள் கிராமத்திலிருந்து ஓட்டி வந்து நகரில் அமர்த்தியாகி விட்டது. அத்தோடு எல்லாமும் முடிந்தது.
நாளை வீட்டுக்கு ஏதேனும் ஒரு வகையில் தகவல் சென்று விட்டால் அது மாபெறும் ஆபத்துகளை ஏற்படுத்தி விடும். ஒன்றுமே நடவாமல் இழிசொல்லை பெற்றுக் கொள்ள அவன் தயாரில்லை. அடுத்தவன் மனைவியை காப்பாற்றி கொண்டு வந்து அமர வைத்து காப்பாற்றுகிறான் சின்னு என்கிற வொர்க்‌ஷாப்காரன். அவன் மனது யாருக்கு வரும்? என்று பாராட்டுமா?
கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு போல ஒருத்தி வேண்டும் என்று தான் வைத்திருக்கிறான் தனியே ஒரு வீட்டில் என்று தான் பேசும். யாரும் அவளை நான் தொட்டதேயில்லை சாமிகளா! என்று சொன்னால் நம்பவா போகிறார்கள்? சொன்னாலும் சிரிக்க மாட்டார்களா? சிரித்து விட்டு இப்படி ஒரு ஏமாளிப் பொறப்பாடா உன்னுது? என்று மீண்டும் சிரிப்பார்கள் தானே.
அப்படித்தான் இறுதி முடிவோடு அவன் அன்று இரவில் எட்டு மணியைப் போல கொஞ்சம் முன்பாகவே வொர்க்‌ஷாப்பை பூட்டி விட்டு கிளம்பிச் சென்றான். இவன் சென்ற போது பக்கத்து அறையில் கம்பெனி பையன்கள் எல்லோரும் இவனை, இவன் தான் அந்த கொடுத்து வைத்த மகராசன்! என்பது மாதிரியே பார்த்தார்கள். இவன் சென்று கீதாவின் அறைக்கதவைத் தட்டினான்.
அவள் உள்ளிருந்து யாரு? என்ற கேள்வியை வைத்தாள். நான் தான் சின்னு! என்று இவனுக்கு அந்தப் பக்கத்து அறை பையன்கள் பார்க்க சொல்வதில் கூச்சமாய் இருந்தது. கதவு உடனே நீக்கப்பட்டதும் உள்ளே சென்ற மறு நிமிஷம் கதவைத் தாளிட்டான் சின்னு. அதை எதுக்கு இப்ப தாள் போடறே சின்னு? என்றாள் கீதா. இவன் அவளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் போய் கட்டிலில் அமர்ந்தான். அவளும் எதுவும் பின்பாக பேசாமல் சுவற்றில் போய் சாய்ந்து அமர்ந்தாள்.
-ஏன் சின்னு வர்றேன் வர்றேன்னு சொல்லிட்டு ரெண்டு நாளா இந்தப் பக்கமே வராம இன்னிக்கி வந்திருக்கே? அட ஒருத்திய கொண்டு வந்து உக்காத்தி வச்சமே அவ இருக்காளா இல்ல என்ன பண்றாள்னு பாக்க வரக் கூட நேரமில்லையோ?
-அப்பிடியே ஆசையா என் காதலி கூப்பிட்டு நான் வராம தெருவுல போயிட்டேன் பாரு!
என்னதான் நிதானமாக பேசி விட்டு பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என்றாலும் இந்த வாய் சும்மா இருக்க மாட்டேன் என்கிறதே! என்று அவனே எரிச்சலடைந்தான்.
-வீட்டுல எதாச்சிம் பிரச்சனையா சின்னு? ஏன் இப்படி கோபமா இருக்கே?
-வீடுன்னு இருந்தா ஒன்னு ரெண்டு பிரச்சனை இருக்கத்தான் செய்யும் கீதா. எல்லாத்தையும் சமாளிக்கிறவன் தான் கணவனா இருக்க முடியும். இல்லைன்னா காறித்துப்பீட்டு போயிட்டே இருப்பாங்க தெரியுமா!
-என்னை மாதிரின்னு சொல்றே! நான் என் புருசனை உதறி வீசிட்டு உன்னோட பைக்கு ஏறி வந்துட்டேன்னு சொல்றே.. அப்படித்தானே!
-கீதா வேண்டாம் கீதா, உன்னோட குதர்க்கமான பேச்சை கேட்டு மண்டையப் பிச்சிக்கக்கூடாதுன்னு தான் நான் இங்கே ரெண்டு நாளா வர பயந்துட்டு போயிட்டேன். சொல்லு உன்னை இங்க கொண்டாந்து வச்சுட்டு என்னால எப்படி அப்படி வீட்டுக்கு போயி சுகமா கட்டில்ல படுத்து தூங்க முடியும்?
-சரிதான். நீ நெசமாலுமே தூங்கலைன்னு உன் மூஞ்சியே சொல்லுது. சரி இன்னிக்கி மட்டும் ஏன் வந்தே சின்னு?
-உன்னோட தங்கிக்கலாம்னு தான்.
-தங்கிக்கோ, நீ புடிச்ச வீடு, நீ வாங்கிப் போட்ட கட்டில். எல்லாமே உன்னுது தான். நான் எப்படி வேண்டாம்னு சொல்ல முடியும்? நான் வேணா அப்படி கதவை நீக்கி வாசல்ல படுத்துக்கறேன்.
-அதான் ஏன்? வீட்டுக்குள்ள படுத்தா கடிச்சித் தின்னுடுவனா நானு?
-ஒருவேளை கடிச்சு வச்சிட்டீன்னா? ஏன்னா நான் வேற உன்னையே நம்பி வந்தவன்னு நீ நெனச்சிட்டு வேற இருக்கே!
-பின்ன என்ன நினைப்புல எங்கூட வந்தே கீதா? அப்ப எனக்குன்னு எந்த ஆசையும் இருக்கக் கூடாதுங்கறியா? நான் அப்படி உன் மேல ஆசைப்பட்டா தப்பா? அப்படின்னா எதுனால தப்பு? அதுக்கு நான் அருகதை இல்லாதவனா?
-டேய் லூசு, உனக்கு பைத்தியம் புடிச்சிட்டுதுன்னு நினைக்கிறேன்டா! நீ கிளம்பு உன் வீட்டுக்கு. கோட்டர் குடிச்சுட்டு வந்திருக்கியா? இப்படின்னு தெரிஞ்சிருந்தா உன்னை கூப்புட்டே இருக்க மாட்டேன்டா! ஏன்டா, நீ பழகுனது கேவலம் என்னை கட்டில்ல தள்ளவாடா? நான் கூட எனக்குன்னு உதவி செய்ய சின்னு இருக்கான் டவுன்லன்னு நெனச்சு வந்தேன்டா! நீ என்னடான்னா கூட பழகுன பாவத்துக்கு என்னை எப்படி வேணாலும் நினைச்சுட்டியா?
-அதான் கட்டிக்கிறேன்னும் சொல்றேனே கீதா. அதும் முடியாதுன்னா நான் என்னதான் பண்ணுறது?
-நீ தாலி கட்டுறேன்னு சொல்றதும் பறவா பறக்குறதும் என்னை என்னமோ பண்ணிட ஆசைப்பட்டுத் தானே? அதுக்கும் மேல நீ டாட்டா காட்டீட்டு போவ மாட்டீன்னு என்னடா நிச்சயம் இருக்குது?
-கீதா வேண்டாம்.
-என்ன வேண்டாம்? அப்படியெல்லாம் யோசிக்காதே, நான் தங்கம், ஈயம், பித்தளை அப்படின்னு சொல்லப் போறியா?
-அப்ப நீ என் மேல ஆசைப்படவே இல்லியா கீதா?
-ஆசைப்பட்டு நான் என்ன பண்ண முடியும்? உன் குடும்பத்தை கூறு போட முடியும்! அதும் என் பின்னால நீ வந்தா மட்டும் தான். நிச்சயமா உன்னை உன் சீதாவோட வாழவே விட மாட்டேன். எனக்கு நீ எப்பவும் வேணும்னு புடிவாதம் புடிப்பேன். ஒன்னு சொல்றேன் செய்யுறியா?
-சொல்லு உனக்காக அதையும் பண்ணிடறேன்.
-உன் பொண்டாட்டி கிட்ட என்னை கூட்டிட்டு போ! நான் அவ கிட்ட பேசிக்கறேன்.
அவன் ஒன்று நினைத்து அங்கே வர அங்கோ வேறு என்னவோ நடந்து கொண்டிருந்தது. கீதாவோடு பழகிய ஆரம்ப காலம் தொட்டே அவன் எதிர்பாராத விசயங்களைத் தான் அவள் உருவாக்கிக் கொண்டிருக்கிறாள். அவள் எப்போதும் ஓயவே போவதில்லை. நாளை இவளே சம்மதம் சொல்லி கட்டிக் கொண்டாலும் அந்த வாழ்க்கை நரகமாகத்தான் இருக்கும் என்பது கடைசியாக இப்போது தான் தெரிந்தது அவனுக்கு. இதை புரிந்து கொள்ள அவளை ஒரு கிராமத்திலிருந்து அவள் குடும்பத்தை கெடுத்து அழைத்து வந்திருக்கிறான் சின்னு.
-ஏன்டா ஒன்னும் பேச மாட்டீங்கறே? அது முடியாதா உன்னால?
-தெரிஞ்சோ தெரியாமலோ நான் உன் குடும்ப வாழ்க்கையையும் தொலைச்சிட்டேன். ரொம்ப ஆசைப்பட்டு நீ எனக்குத்தான்னு நம்பிக்கையா உன்னை உன் கிராமத்துல இருந்து கூட்டி வந்தேன் கீதா. நீ என்னிக்குமே எனக்கு இல்லைங்கறது எப்பவோ புடிச்சு நீ சொல்லிட்டே தான் இருந்தே. ஆனா என்னிக்கி இருந்தாலும் ஒரு நாள் நீ எனக்கு சம்மதிப்பேன்னு நினைச்சு நினைச்சு இது வரைக்கும் வந்து நின்னுடுச்சு. நல்லவேளை இப்பவாச்சும் எனக்கு புரிஞ்சிடுச்சு!
-ஹப்பாடா!
-ஆனா..
-ஆனா என்னடா? சொல்லிடு அதையும். எதாச்சிம் சாபம் உடறதுன்னாலும் உட்டுரு எனக்கு.
-சேச்சே! நானே விரும்புன உனக்குப் போய் சாபம் அது இதுன்னெல்லாம் என்னால எப்படி கீதா விட முடியும்? சரி நான் ஆரம்பத்துல இருந்தே உன்னை விரும்பி உன் பின்னால சுத்துனப்ப எல்லாம் என்னோட காதல் உனக்கு தெரியவே இல்லியா?
-ஐயோ மறுபடியும் மொதல்ல இருந்தா சாமீ!
சின்னு அவளுக்கு தன் பாக்கெட்டிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டு எடுத்துக் கொடுத்தான். அது அவள் செல்ல வேண்டிய ஜெராக்ஸ் கடை அட்டை. அவள் வாங்கி அதை வைத்துக் கொண்டாள்.
-அப்ப நான் கிளம்புறேன் கீதா.
அவன் அவளிடம் சொல்லிக் கொண்டு வெளிவந்தான்.
000

Post Comment

கருத்துகள் இல்லை: