புதன், செப்டம்பர் 02, 2015

சுகன் நினைவலைகள்
பூ மரத்திலிருந்து உதிரத்தான் செய்யும்

சுகன் நினைவலைகள்

வாழ்க்கை என்பது அதை நிலை நிறுத்துவதிலும், அதை மிஞ்சுவதிலும் தான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அது செய்வது எல்லாம் அதை பராமரிக்கின்ற ஒன்றாகவே இருந்து விட்டால், அதன்பின்னர் வாழ்க்கை என்பது சாகாமல் இருத்தல் என்பதாக மட்டுமே இருக்கிறது. – சைமன் பி டியூலர்.

இறப்பு எல்லோருக்கும் உறுதி செய்யப்பட்ட ஒன்று! ஆனால் அதற்கு நேரங்காலம் என்று ஒன்று உண்டு. யாருக்கு என்னவோ அது தான் என்பதெல்லாம் சரிதான் என்றாலும் சில சமயமல்ல பலசமயம் இப்படி நடந்தேறி விடுகிறது!
வாழ்க்கை எல்லோரையும் அவரவர் தகுதிற்கேற்ப கனவு காணச் சொல்கிறது. மனிதனுக்கு மட்டுமே லட்சியங்கள் இருக்கின்றன. லட்சியங்களை  நோக்கி அவன் மிக மெதுவாகத்தான் முன்னேறிக் கொண்டிருக்கிறான். சுகன் இதழின் முக்கிய வார்த்தையே அது தான். வாழ்க்கை லட்சங்களுக்காக அல்ல லட்சியங்களுக்காக! ஆனால் லட்சங்கள் இருந்தால் தான் வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதில் ஏமார்ந்திருக்கிறார்.

எனது தந்தையாரும் ஆசிரியர் தான். அவருக்கும் சிற்றிதழ்கள் மீதான பற்றுதல் அளவு கடந்து தான் இருந்தது. எழுபதுகளிலும். எண்பதுகளிலும் வந்து கொண்டிருந்த அனைத்து சிற்றிதழ்களுக்கும் சந்தா கட்டியிருந்தார். வாசிப்பு அவருக்கு லட்சியமாக இருந்தது. அவர் ஒரு கவிஞரும் கூட! பணியிலிருந்து விலகிய பிற்பாடு எழுத்தில் கவனம் செலுத்தும் எண்ணமெல்லாம் இருந்தது. ஆனால் உடலை கவனிக்க மறந்ததால் பணியிலிருக்கும் போதே கிளம்பிவிட்டார். சுகனும் பணியிலிருக்கும் போதே கிளம்பி விட்டார். அவரவர் லட்சியங்களை யார் தலையிலும் கட்டாமல் எவ்வளவோ பேர் இறந்திருக்கிறார்கள். இறப்பிலிருந்து தப்பித்து வேறு வழியில் சென்றுவிட எந்தத் திறவுகோலும் யாரிடமும் இல்லை.

ஒன்று புரிகிறது! முதலில் உடல் மீதான கவனம். பிறகுதான் லட்சியங்கள். தாக்குதலுக்கு தயாராக இருப்பதே பாதுகாப்பிற்கான வழி என்று மச்சியவெல்லி சொல்லியிருக்கிறார். அது உண்மை தானே. ஆக கடைசியாக இலக்கு, லட்சியம் இவைகளை எல்லாம் நாம் மறந்து விடத்தான் வேண்டும் போல. அவைகள் தான் நம்மை எப்போதும் பயத்துடனேயே வைத்திருக்கின்றன.

சுகன் தன் சிற்றிதழை மாத இதழாக 333 எண்ணிக்கை வரை கொண்டு வந்தார். அவரது முழு வாழ்வும் அந்த இதழை கொண்டு வருவது மட்டுமேயாக இருந்திருக்கிறது. நினைத்துப் பாருங்கள்.. நாம் எந்த மாதிரியான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இப்போது! இப்படியெல்லாம் ஒரு தனிமனிதனால் இனிமேற்கொண்டு சாத்தியம் தானா? ஒரு சிற்றிதழ் அதன் ஆசிரியனுக்கு சோறு போட்ட சரித்திரம் இருந்ததா?

எனக்கே கூட ஒரு ஆச்சரியம் இருக்கிறது. எந்தச் சிற்றிதழிலாவது ஒரு கதையாசிரியன் தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறானா? இது போக கட்டுரை, கவிதை வேறு! சுகன் என் கதைகளை ட்ரெடில் அச்சுக்காலத்திலிருந்து வெளியிட்டிருக்கிறார். 91-ல் நான் நடுகல் இதழை திருப்பூரில் ஆரம்பித்த சமயம் பரிமாற்றப்பிரதியாக வந்த இதழ் தான் சுகன் இதழ். முதலாக அவர் வெளியிட்ட என் கதை கம்பெனி ஒன்றில் பணியிலிருக்கையில் கை இழந்த நாயகன் தன் தொகைக்காக முதலாளியிடம் நடையாய் நடப்பது. கடைசியாக பணம் கிட்டாமல் மீதமிருக்கும் கையால் ஒரு கல்லை எடுத்து கம்பெனியின் கண்ணாடி ஜன்னலை நோக்கி வீசுவது என்று முடியும். அப்படியான கதைகளையெல்லாம் நான் தொடர்ந்து சுகன் இதழில் நான் எழுதவில்லை.

சுகன் என் கதைகளை தொடர்ந்து வெளியிட்டதற்கு காரணம் என்னவாயிருக்கும் என்று இன்றுவரை தெரியவில்லை. என் கதைகளால் பல சந்தாதாரர்கள் வீடுகளில் சங்கடங்கள் நடந்தன கோமு! என்பார். உங்க கதைகளை போடவேண்டாம்னு சொல்றாங்க கோமு! என்பார். வேறென்ன.. எந்த இடத்திலும் பாலியல் வார்த்தைகள் இராமல் எப்படி ஒரு இலக்கியச் சிற்றிதழ் வரும்? சுகன் வெளியிட்ட உங்க கதைகள் ஒவ்வொன்னையும் ரசிச்சு ரசிச்சு போட்டேங்கய்யா! அவரின் வார்த்தைகள் இப்போதும் என் காதில் ஒலிக்கிறது.

என் முதல் சிறுகதைத் தொகுப்புஅழுவாச்சி வருதுங் சாமிஅவரின் பைந்தமிழ் தடாக வெளியீடாக வந்தது. அவர் கையில் 2000 ரூபாயை கொடுத்து 100 புத்தகங்களை கொண்டு வந்தேன். அப்போது அவர் அம்மா இருந்தார். அடுத்ததாக சுகன் 250 விழாவிற்கு நானும் ஷாராஜும் சென்றோம். அந்த விழாவில் நான் மைக் வளையும் வரை பேசுவேன் என்று நினைத்திருந்தார் போல. நான்கைந்து வார்த்தைகளுடன் இறங்கி விட்டேன். அப்போது மேடைக்கூச்சம் என்னை ஆட்டிப் படைத்தது. மனதில் நினைத்திருந்ததை அவர் வெளியில் சொல்லவே இல்லை.

நட்சத்திரன், புத்தகன், கவிஜீவன் என்று ஒரு பட்டாளமே அங்கே இருந்தது. எல்லோரும் நடுகல் படைப்பாளிகள். அவர்கள் சுகனை குற்றம் சொன்னார்கள். அப்போது அது எனக்குப் புரியவில்லை. ஷாராஜும் நானும் அடிக்கடி பேசுவது ஒன்றே தான். இந்த இதழை ஏன் இன்னமும் மாதமானால் கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்?
யாராவது இதழில் இன்னமும் நல்ல விசயங்களை சேர்க்கலாமே! என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டாராம். போதும் சுகன், என்றாலும் ஏற்றுக் கொள்ள மாட்டாராம். இப்படி கடைசி காலம் வரை நானும், ஷாராஜும் அவருக்கு ஒரு வார்த்தை சொல்லவே இல்லை. சொன்னால் சங்கடப்படுவார் என்பது எங்களுக்கே தெரியும். ஆனால் பத்து வருட காலம் நாங்கள் எங்களுக்குள்ளேயே இதை பேசி வந்தோம். பேசியவர்கள் உள்ளூரிலேயே எதிரியானார்கள்.

சமீபத்தில் சிறகு ரவிச்சந்திரன் ஒரு பதிவு இட்டிருந்தார். மாதம் தவறாமல் சுகனுக்கு கடிதம் எழுதுபவர் அவர். ஒரு மாதம் கொஞ்சம் தாமதமானாலும், கடிதம் வரலீங்களே ஐயா! என்று கேட்பாராம். நானும் இதழ் நடத்திய அனுபவம் உள்ளவன் என்ற போதிலும், வீடு வந்து கிடக்கும் நான்கைந்து வாசகர் கடிதங்கள் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்குமென்றாலும், வாழ்க்கையை தொலைத்துக் கொள்ள ஆசைப்படுபவன் அல்ல.
காசநோயில் நான் ஏழு வருட காலம் கிடந்த போது என் வாசல்படிக்கு வந்த ஒரே இதழ் சுகன் இதழ் தான். அந்த சமயத்தில் நான் எழுதிய படைப்புகள் அனைத்தையும் சுகன் இதழுக்கே கொடுத்தேன். போக முங்காரி என்றொரு சிற்றிதழ் கோவையிலிருந்து வந்தது. அதிலும் தொடர்ந்து எழுதினேன். இன்று வரை சிற்றிதழ்களுக்கு நான் படைப்புகளை கொடுத்தபடி தான் இருக்கிறேன். எனது தந்தையாரின் மறைவு.. நோய் என்று சிரமத்தில் கிடந்த காலத்தில் சுகன் இதழ் ஒரு ஆறுதலாய் இருந்ததை அவரிடம் பிந்தைய காலத்தில் சொன்ன போது.. அவரால் பேச இயலவிலை.

இப்படி தமிழகத்தில் வெளியில் அதிகம் அறியப்படாத ஒரு சிற்றிதழில் படைப்புகள் எழுதி அங்கீகாரத்திற்கு உரியவனாகியிருக்கிறேன் என்றால் சுகன் என் எழுத்துக்கள் மீது கொண்ட பற்றுதல் தான். என் படைப்புகள் தொடர்ந்து புத்தகங்களாக வருகையில் மகிழ்ச்சியடையும் முதல் மனிதனாகவும் அவர் இருந்தார். சுகன் இதழின் முக்கியப் படைப்பாளி வெளியில் கவனப்படுகிறான் என்ற மகிழ்ச்சி அவரிடம் ஏராளமிருந்தது. அதுபோல வருத்தங்களும் நிறைய இருந்தது. வெளியில் கவனம் பெற்ற சுகன் படைப்பாளிகள் அவர் இதழில் படைப்புகள் எழுதியதை எங்கும் பதிவாக்குவதில்லை என்பதே! இனிய உதயம் பேட்டியிலும், கலைஞர் செய்தி பேட்டியிலும் நான் சுகன் இதழின் கண்டெடுப்பு, என்று பேசிய போது அவரால் மகிழ்ச்சிக் கண்ணீர் மட்டுமே விட முடிந்தது. தாண்டி வந்த படிகளை மறப்பவன் அல்ல நான். இதில் எந்தக் கேவலங்களும் இல்லை!

என் நாவலான கூப்பிடுவது எமனாக இருக்கலாம் புத்தகமாக வந்த போது அவருக்கு பிரதி அனுப்பினேன். எனது எழுத்து வலிமையைக் கண்டுணர்ந்து தனது செளந்தர சுகன் இதழில் தொடர்ந்து பலவகையில் இடமளித்து எனது சிறுகதைகள் ஐம்பதை வெளியிட்டு உற்சாகப்படுத்தி படியேற்றி விட்ட சுகன் அவர்களின் அன்பிற்குஆம் அந்தப் புத்தகம் அவருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டதை பிரதி கையில் இருக்கையில் தான் பார்த்தார். மிகப்பெரிய காரியத்தை செஞ்சிருக்கீங்க கோமு.. அம்மா சொல்லிட்டே இருப்பாங்க.. யாரடா உன்னைப்பத்தி வெளிய பேசுறாங்க? நீயா உன்னை வருத்தி புத்தகம் போட்டுட்டே இருக்கே... இப்ப உயிரோட அம்மா இருந்திருந்தா.. இதா பாரும்மா... கோமு எழுதியிருக்காப்டி! காட்டியிருப்பனே கோமு! என்று அலைபேசியில் அவர் பேசுகையில் எனக்கு எங்கிருந்தோ ஒரு வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

வாழ்வில் சிகரெட், பான்பராக், தண்ணி என்று எதுவும் இராமல் இருந்த சுகன் என் பையன் துரையரசுவின் காது குத்து விழாவுக்கு வந்திருக்கையில் மட்டனையும் எடுத்துக் கொள்ளவில்லை. இப்படி எனக்குத் தெரிந்து இரண்டு நண்பர்களே இருக்கிறார்கள். ஒன்று என் தங்கையை கட்டிக் கொடுத்த மாப்பிள்ளைஇன்னொருவரும் மாப்பிள்ளை தான். சக்கரை, அல்சர் என்று இவர்கள் தான் துக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நல்லவர்களை எக்காலத்திலும் திருத்த முடியாது. அவர்களிடம் ஏதேனும் ஒரு குறை இருக்க வேண்டும். அந்தக் குறையை பயன்படுத்தி அவர்களை நேர் செய்து விடலாம்

காசம் வாங்கலையோ காசம் சுகன் இதழில் எந்த ஆண்டு வந்த்து என்று சரியாக நினைவில்லை! இருந்தும் அது பதினைந்து வருடங்களிருக்கலாம். இலக்கிய ஆர்வம் உள்ளவர்களுக்கு புகைப்படக்கலை இயல்பாகவே இருக்கும். ஒரு பொடியானை போட்டோ எடுப்பது என்றால் கூட பூச்செடிகளுக்கு மத்தியில் நிற்கவைத்து தான் எடுக்க முயற்சிப்பார்கள். சுகனுக்கு காசம் வாங்கலையோ காசம் முதலாக குறும்படமாக எடுக்க வேண்டிய ஆசை இருந்தது. அதாவது பெருந்துறை சானிடோரியத்திலேயே நானே நோயாளியாக கிடந்து சூட் பண்ண வேண்டும்!  போக சிற்றிதழ் பற்றியான குறும் படத்தை அவர் முடித்து விட்டார் சில வருடங்களுக்கு முன்பாக. நான் நடுகல் பதிப்பகம் ஆரம்பித்த சேதி கேட்டவுடன் சிற்றிதழ் பற்றியான ஆய்வுக்கட்டுரை ஒன்று தன்னிடமிருப்பதாக சொன்னார். அதை நான் கொண்டு வருவதாக சொல்லியிருந்தேன்.
போக தஞ்சை ப்ரகாஷிடம் என் நடுகல் இதழை கொடுத்து அவருக்கும் எனக்குமான தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அசிங்கங்களை கூச்சமில்லாமல் எழுதும் என் எழுத்து வடிவம் அவரை கவர்ந்திருக்கிறது. கலை வடிவங்களில் பல இருந்தாலும் அசிங்கங்களும் ஒரு கலை வடிவம் தான். அவரது கள்ளம் நாவலை நான் நடுகல் பதிப்பகம் வழியாக கொண்டு வர சின்ன உதவி மட்டுமே செய்தார். பண விசயத்தில் கராறாக இருங்கள் கோமு! என்று அவர் சொன்ன வார்த்தை என் தந்தை குரலிலேயே எனக்கு ஒலித்தது.

தஞ்சை இலக்கிய அரசியல் எனக்கு தெரியாது. போக எந்த இலக்கிய அரசியலிலும் ஆர்வம் காட்டாதவன் நான். கள்ளம் புத்தகத்தை கொங்கு மண்ணிலிருந்து நான் கொண்டு வந்தது விற்பனையை மையப்படுத்தியல்ல! அது சுகனுக்கு மட்டும் தெரியும். கொங்கு ஆளுக்கு ஏன் அது தரப்பட்டது? மேலும் புத்தகங்களைப் பிடுங்கி விடுவானோ? என்று தஞ்சையில் களம் இறங்கினார்கள் பலர். அதாவது தஞ்சை ப்ரகாஷின் புத்தகங்களை நானே வெளியிட்டு புவ்வாவுக்கு ஏற்பாடு செய்து கொள்வேன் என்று! அடக் கொடுமையே!

எனக்கு ப்ரகாஷின் எழுத்துக்கள் மீது எந்த சிறப்புகளையும் சொல்ல வார்த்தைகள் இல்லை! அவர் முதலாக மற்ற அல்லது வளர்ந்து வரும் எழுத்தனை ஆதரிக்கும் குணம் என்னை கவர்ந்தது. அவர் எழுத்து பயங்கரம் என்று தஞ்சையில் அமர்ந்திருக்கும் என் நண்பர்கள் சொல்லட்டும். மகிழ்ச்சி! வாசிப்பு என்பது வாசகன் படிக்கும் மனநிலையைப் பொறுத்த விசயம். அதில் உன்னத இலக்கியம் குப்பை இலக்கியம் என்றெல்லாம் பாகுபாடுகளை நான் ரசிப்பதேயில்லை! நான் யார் என்று அறிந்த முதலும் கடைசியுமான ரசிகன் சுகன் இன்றில்லை!

ஒரு இலக்கியம் யாரையும் திருத்தி விட்டதாக சரித்திரம் இல்லை. மருத்துவ புத்தகங்கள் மட்டுமே நோயிற்கான தீர்வுகளை சொல்லி பிழைக்க வைத்திருக்கிறது. இலக்கியத்தை உயிர் என்று நினைக்கும் ஆட்களில் கடைசி ஆளாக சுகன் இருக்கட்டும். சுகன் ஒரு பிடிவாதக்காரர். அப்படி அவர்களை உருவாக்குவது பள்ளி நிலையங்கள் தான். அவர் கற்றுக் கொடுத்துத்தான் குழந்தைகள் கற்றறிந்தார்கள். அவர் கற்றுத்தந்தால் இலக்கியமும் சரியாக இருக்கும் என்ற எண்ணம் அவர் மனதில் வேரூன்றி இருக்கும். உளவியலில் சிறிதேனும் கால் பதித்திருந்தால் இது விளங்கலாம். வாழ்க்கை சுகன் மாதிரி ஆர்வத்தின் அடிப்படையில் இயங்கும் ஆட்களுக்கான மைதானமல்ல!

எனக்கு இந்த காலகட்டத்தில் நாற்பது பக்க அளவிலான இதழை நடத்துவது பெரிய விசயமில்லை என்று தான் படுகிறது. நான் அவற்றையெல்லாம் செய்கையில் சிரமம் இருந்தது. இப்போது நான் இதழை துவங்கி நடத்தலாம். ஆனால் யாருக்காக? என்ற கேள்வி என்னிடமிருக்கிறது. சொல்லலாம் தீவிர இலக்கிய ஆர்வலர்கள்.. எங்களுக்காக என்று! அவர்கள் அனைவருக்குமான இதழ்கள் இன்று பல உள்ளன. என் இப்போதைய மனநிலையில் தீவிர இலக்கியம், வியாபார எழுத்துக்கான இலக்கியம் எல்லாமே ஒன்று தான். வடிவங்கள் ஒரு துளி அளவு தான் மாறுபடுகின்றன.

கள்ளம் நாவல் வெளியீட்டு விழாவுக்கு சுகனை அழைத்திருந்தேன். மிக மகிழ்ச்சியாக வந்தவர் மிக அற்புதமான உரையை ஈரோட்டில் நிகழ்த்தினார். இன்னமும் அடுத்த ஆகஸ்டு வரவில்லை. சுகன் இல்லை! இதை ஜீரணிக்கவே இயலவில்லை என்னால்.
சதந்திரம் யாரால் பெறப்பட்ட்து? யாரிடமிருந்து? இந்தக் கேள்விக்கே பதில் சொல்ல முடியாத ஆட்கள் இங்கே இருக்கிறார்கள். அப்படி ஓரளவு தெரிந்தவரிடம், யாரால் பெறப்பட்டிருக்க வேண்டும்? என்ற கேள்வியை வைத்தோமென்றால்?

இலக்கிய வரலாற்றில் சுகன் பெயர் நிச்சயம் இருக்கும் என்று நம்பலாம். வரலாற்றில் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தன் வாழ்வை இதழுக்காக உழைத்தே இழந்திருக்கிறார். ஆனால் பதிவு செய்ய ஆட்கள் இல்லை என்பது தான் நிஜம். தஞ்சைப் படைப்பாளிகள் நெஞ்சில் உரமும் மிக்க படைப்பாளிகள் என்பதை மறுக்க இயலாது தான். ஆனால் கிணற்றுத் தவளையாக இருப்பதையே காதலுடன் ஏற்றுக் கொள்கிறார்கள். பறந்து பட்ட அனுபவத்தை நுகர முடியாமல் அவர்கள் வாழ்க்கை சூழல் அழுத்தி விடுகிறது மட்டுமே உண்மை.

நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால் உதிர்ந்த பூக்களும் வந்து ஒவ்வொன்றாய் ஒட்டிக் கொள்ளும் என்பதை எப்படி நம்ப முடியும்? வார்த்தை அழகாக இருக்கிறது என்பதற்காக ரசிக்கத்தான் இயலுமேயொழிய அது என்ன ஜாலமா?
எவ்வளவு செலவு செய்தேனும் ஒரு உயிரை காப்பாற்றித்தான் ஆக வேண்டும். முகநூலில் திரு ஷாஜகான் சுகனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவரது வங்கிக் கணக்கு எண்ணை (இதழுக்கு சந்தா கட்ட அறிவித்த எண்) வெளியிட்டிருந்தார். எனக்கு திடீரென ஒன்னரை மாதம் முன்பாக பார்த்த போது அதிர்ச்சியாகி விட்டது. திடீரென ஏதேனும் வாகன விபத்தாக இருக்கலாமோ என்று கூப்பிட்டுப் பேசக்கூடப் பயந்தேன்.
கவிஞர் ஜெயதேவன் மட்டுமே விசயம் தெரியாதா கோமு? என்று ஒன்னரை மாதமாகவே அவர் படும் துயரங்களை சொன்னார். பின்பாக பேசுகையில், ‘’நீங்க அனுபவிக்காத துன்பத்தையா கோமு நான் அனுபவிச்சுட்டேன்? இதெல்லாம் சும்மாஎன்றார். சுகன் இதழை காலாண்டு இதழாக கொண்டு வர திட்டமிருப்பதாக படுக்கையில் இருக்கையிலும் சொன்னார். அவர் கைவசம் என் வேற்றுகிரகவாசி என்ற சிறுகதையும் இருந்தது.

முகநூலில் அந்த ஸ்டேட்டஸை வெளியிட்ட ஷாஜகானை அவர் அறிந்திருக்கவில்லை. அப்படியான உதவி எதுவும் வேண்டாம் கோமு! என்றார். நான் முடிந்த மட்டிலும் விளக்கினேன். அப்படி இல்லீங்கய்யா.. என்று. கடைசி வரை அவர் அதை ஒப்புக்கொள்ளவே இல்லை. நான் ஷாஜகானிடன் உள்பெட்டியில் சென்று பேசும் நிலை உருவானது.

இப்படியான சிரமங்களை ஷாராஜிடம் நான் பகிர்ந்து கொண்ட போது அவன் அவரிடம் பேசினான். அவரோ அடுத்த இதழுக்கு அட்டைப்படம் வரைஞ்சு கொடுங்க ஷாராஜ்! என்றே பேசினார். கையில் ஊன்றுகோல் ஒன்றை வயதான காலத்தில் தான் தடுக்கி விழுந்து விடக்கூடாது என்று நாம் பிடிப்போம் நடக்க! சுகனுக்கு அவர் இதழே ஊன்றுகோலாக பயன்படும் என்று தான் நான் நினைத்தேன். நினைத்து ஏமார்ந்தேன். அந்த ஊன்றுகோலும் அவரை கைவிட்டு விட்டது. ஒரு பூ உதிர்வது போல ஒரு உயிர் உதிர்ந்தது என்று கவிதை எழுதுவதெல்லாம் ஆகாது தான்.

மனித வாழ்க்கை முதலாக குடும்பச் சூழலை சரிப்படுத்தச் சொல்கிறது அமைப்பிற்குள் வந்து விட்டதும். என்னதான் சரிப்படுத்தி அழகுற அந்த தோட்டத்தை சீர்படுத்தி இருந்தாலும் செலவீனங்கள் என்று திடீரென வருவதும் அது அளவுக்கு மீறி சென்று விடுவதும் சாதாரணப்பட்ட இலக்கிய தாகமுள்ளவர்களுக்கு தாங்காது தான். பக்கத்து வீட்டாரின் உதவி என்பது கிராமங்களில் கூட ஒரு அளவோடு நின்று விடும். நகரங்களில் அந்தப் பேச்சுக்கு கூட இடமில்லை. சுகன் தன் வாழ்வின் மிச்சமாய் சம்பாதித்தது நண்பர்களை மட்டும் தான். நண்பர்களின் உதவி நிச்சயம் அவர் குடும்பத்தினருக்கு உண்டு. அதை நிகழ்த்தினார்கள்.

சுகன் இதழுக்கு நான் சந்தா என்று ஒரு ரூபாய் கூட கொடுத்ததில்லை. இதை நான் அவரிடம் ஒருமுறை சொல்கையில், எவ்வளவோ நல்ல சிறுகதைகளை என் இதழுக்கு கொடுத்தீர்களே! என்பார். அவர் தன் இதழ் பற்றி படைப்பாளர்களிடம் கேட்டு வாங்கிய கருத்துரைகளை வெளியிட வைத்திருந்த ஒரு தொகுதிக்கு என்ன அப்போதைய மனநிலையில் எழுதிக் கொடுத்தேன் என்று தெரியாது. ஆனால் ஒரு வரி இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.

சுகன் இதழில் கவிதை வடிவிலேனும் என் படைப்பை தொடர்ந்து காணவில்லை என்றால் வா.மு.கோமு இறந்து விட்டான் என்று தான் அர்த்தம்! என்று. இப்போது சுகன் இதழ் தான் இல்லை.

அவருக்கு கடைசியாக ஆசை ஒன்றிருந்தது. அது ஒரு நீளமான செவ்வி என்னிடம் பெற்று இதழில் வெளியிடுவது. சென்ற முறை ஷாராஜுக்கு அதை செய்து முடித்தார். தொடர்ந்து என் செவ்வியும் வரவேண்டுமென ஆசைப்பட்டார். வழக்கமான கேள்விகள் அல்ல கோமு. நீங்க விளையாட்டுத்தனமா எல்லாம் பதில் சொல்லக் கூடாது! என்று அலைபேசியில் கூட கறாராக சொன்னார். கேள்விகளை தயார் செய்து மெயிலில் அனுப்புவதாகவும் கடைசி நேரத்தில் கூட சொன்னார். அது நடந்தேறாமல் போனது எனக்குமே இழப்பு தான்.

என் 50-வது சிறுகதை வெளிவருகையில் சுகன் 250-வது இதழை வெளியிட்டார். அப்போது அவரிடம் நான் சொன்னது இது தான். என்னை முழு எழுத்தாளனாக வளர்த்தெடுத்து அனுப்பியது உங்கள் இதழ் தான். உங்கள் இதழில் நான் சுதந்திரமாக எழுதினேன். எத்தனையோ சோதனை வடிவங்கள் செய்து பழக ஒரு களமாக இருந்தது. என்னைப்போன்று இன்னும் இரண்டு எழுத்தாளர்களை உயர்த்தி விடும் பணியைத் தொடருங்கள்! என்றேன். நானே இதழின் பக்கங்களை இனி ஆக்ரமிப்பதற்கு கூச்சமாக இருக்கிறது என்றேன். அவர் ஒரே வார்த்தை கூறினார். அடடா, என்று. தொடர்ந்து நான் வருடம் ஒரு கதையேனும் எழுத வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சிற்றிதழ்கள் உயிரையும் ரத்தத்தையும் பணயம் வைத்து வந்து கொண்டிருந்தன ஒரு காலத்தில்! என்று நாம் கட்டுரை எழுத வேண்டும் என்றால் செளந்தர சுகன் இதழோடு அந்த வரலாறு முடிந்தது என்று எழுத வேண்டும்
.
ஷாராஜ்.. உனக்கொன்று தெரியுமே! சுகனின் கடைசி வாரிசு நாம் சென்றிருந்த போது, வணக்கம்! வாருங்கள் ஐயா! என்றொரு அதிர்ச்சி கொடுத்தான். எனக்கோ குழப்பம் திரும்ப அச்சிறுவனுக்கு வணக்கம் வைக்க வேண்டுமா? கூடாதா? என்று! இன்னமும் நான் அந்த பண்பாட்டுக் குழப்பத்திலிருந்து மீளவேயில்லை. பிள்ளைகள் வளர்ப்பு விசயத்தில் கூட அவர் மிகத் தெளிவாகவே இருந்திருக்கிறார். அவர்களுக்கு வாழக் கற்றுக்கொடுத்தது அவர்களின் சிறுவயதிலேயே! தந்தையின் பணியை தொடர்கிறேன் என்று அவர்களாவது இந்த இலக்கியம் பக்கம் வராமல் இருக்க தஞ்சையிலிருக்கும் கோவில்கள் எல்லாம் துணை புரியட்டும். உணமையான மனிதன் மட்டுமே திறந்த உள்ளத்துடன் இருக்க முடியும். அவனிடம் மறைப்பதற்கு ஒன்று கூட இல்லை. அவனிடம் பாதுகாக்கவும் எதுவும் இருப்பதுமில்லை!

மரமானது மலர்கள் நிறைந்து இருக்கையில் ஒருவித அழகை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அதே மரமானது இலைகள், மலர்களை உதிர்த்து விட்டு நிர்வாணமாக இருக்கும் போதும் ஒரு வித பூரண அழகுடன் தான் நின்றிருக்கிறது. அது முற்றிலும் வேறுபட்ட அழகு தான். அது அப்படி நிர்வாணமாக நின்றிருக்கையில் கூட மலர்களோடு நிற்பதாக காணும் கண்கள் மட்டுமே உங்களுக்கு வேண்டும்!
000

நன்றி – நற்றிணை கலை இலக்கிய காலாண்டிதழ். 2015 ஜூலை.Post Comment

3 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

vetri vaanam சொன்னது…

இனிய வாமுகோமு 2015 நற்றிணை எனக்கு வாசிப்புக்குக் கிடைக்காமல் போனது.

ஆனால் என்ன சொல்வது .....இன்றாவது வாய்ப்புகிடைத்ததே என்பதைத் தவிர.

ஒன்று தெரியுமா.....சுன் இன்றில்லை. அவருடைய இரண்டாம் நினைவேந்தலையும் முடித்துவிட்டோம்.

ஆனாலும் சுகன் இறப்பை இல்லாமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

சுகன் உயிரோடு இருப்பதாவே நம்பிக்கொண்டிருக்கிறது என் அகமனம்.

ஈரோட்டில் சுகனுடன் உங்களைச் சந்தித்தது நிழலாடுகிறது நெஞ்சில்

ஓலைச்சடியில் உங்ள் விரிவான நேர்காணல் கண்டேன்.

---வெற்றிப்பேரொளி

vetri vaanam சொன்னது…

இனிய வாமுகோமு 2015 நற்றிணை எனக்கு வாசிப்புக்குக் கிடைக்காமல் போனது.

ஆனால் என்ன சொல்வது .....இன்றாவது வாய்ப்புகிடைத்ததே என்பதைத் தவிர.

ஒன்று தெரியுமா.....சுன் இன்றில்லை. அவருடைய இரண்டாம் நினைவேந்தலையும் முடித்துவிட்டோம்.

ஆனாலும் சுகன் இறப்பை இல்லாமையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

சுகன் உயிரோடு இருப்பதாவே நம்பிக்கொண்டிருக்கிறது என் அகமனம்.

ஈரோட்டில் சுகனுடன் உங்களைச் சந்தித்தது நிழலாடுகிறது நெஞ்சில்

ஓலைச்சடியில் உங்ள் விரிவான நேர்காணல் கண்டேன்.

---வெற்றிப்பேரொளி