சனி, நவம்பர் 26, 2016

ஜி.கார்ல் மார்க்ஸின் கதைகள்- ஒரு பார்வை


வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)
ஜி.கார்ல் மார்க்ஸ்

தமிழில் சிறுகதைகளின் வரத்து குறைந்து போய் நீண்டகாலம் ஆகிவிட்டது. பத்திரிக்கைகள் சிறுகதைகளுக்கு என்று பக்கங்களை ஒதுக்குவதற்கு தயங்குகின்றன. இடைநிலை இதழ்கள் கூட பெயர் பெற்ற ஆசிரியர்களின் வறட்டு முயற்சிகளை, அவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள போராடுகிறார்கள் என்று எழுத்தின் வாயிலாக கூட உணர இயலாத ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன.

திடீரென வாசகர்கள் கட்டுரை வாசிப்பாளர்களாக மாறியாக வேண்டிய கட்டாயத்தை இடை நிலை பத்திரிக்கைகள் உருவாக்கி விட்டன. தான் வாசிக்கும் புத்தகத்தில் இன்ன இன்ன இருந்தால் நன்றாக இருக்குமென இந்த மாற்றங்கள் துவங்கிய காலத்தில் வருத்தப்பட்ட வாசகர்களும் எழுத்து பக்கங்களில் எந்த வடிவில் நிரம்பியிருந்தாலும் சரியென வாசிக்கப் பழகிக் கொண்டார்கள். வாசித்தவன் அது பற்றி வெளியே யாரிடமேனும் பேசுவதையும் நிறுத்திக் கொண்டான்.

இது குறையாகப் பார்க்கப்பட வேண்டிய கருத்தும் அல்ல தான். சிறுகதைகளின் தரம் குறைந்து அல்லது நீர்த்துப் போன வடிவில் வரத்துவங்குகையில் பத்திரிக்கைகளும் தங்கள் பாணிகளை மாற்றிக் கொண்டன. ஆனாலும் ஏதோ ஒரு மூலையில் பிடிவாதமுடன் யாரோ ஒரு படைப்பாளி தன் சிறுகதைகளை மிக்க நிதானமாக எழுதிப் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறான். காலம் அவனை எப்படியேனும் வெளியே இழுத்துக் கொண்டு வந்தே விடுகிறது பல காலம் கழிந்தேனும்!

வருவதற்கு முன்பிருந்த வெயில் தொகுதியை கையிலெடுத்து முன்னுரைகளை எல்லாம் வாசிக்காமல் ஆட்டம் என்கிற முதல் கதைக்குள் நுழைந்தேன். காலகாலமாக இழவு காரியம் நடந்த வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே சென்ற கதைகளைப் போன்ற கதை தான் இதுவும். (எடுத்தவுடனே இழவா? என்ற எண்ணமும் இருந்தது) இழவு வீட்டில் ஆட வந்த குறத்தியின் வேதனை மிகுந்த வலிக்கான தீர்வை இறந்து போன வயதானவரின் இரண்டாவது கர்ப்பம் தரித்த மனைவி கூட்டிப் போய் காட்டுவதாய் முடிகிறது. பெரிய ஈர்ப்பை எனக்குள் கொண்டு வரவில்லை இதன் முடிவு என்றாலும் சொல்முறையும் நேர்த்தியும் என்னை அடுத்த கதைக்கு நகர்த்தியது.

இயல்பாகவே ஒன்றுமே சொல்ல வராத.. மண்டையிலேயே ஏறாத புத்தகமாக இருந்தாலும் மண்ணைப் போல வாசித்து முடிப்பவன் தான் நான். வார்த்தைகளின் மீதுஇ படரும் பனி- இரண்டாவது கதை. இதை வாசித்து முடித்ததும் என் பழைய ஆரம்ப கால வாசிப்பு முறைமைக்குள் நுழைந்து மனநிம்மதியடைந்த உணர்வை அடைந்தேன். அப்போது புதிதாக ஒரு காலத்தில் நான்  அசோகமித்ரன், வண்ணதாசன், ராஜேந்திரசோழன் என்று சிறுகதைகளை வாசித்தால் என்னவென்று சொல்ல இயலாத கருமாந்திரம் வந்து என்னை சூழ்ந்து கொண்டு பேயறைந்தவன் போல முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பேன். காரணம் முன்பாக அப்படியான கதைகளை வாசித்த அனுபவம் துளி அளவு கூட இல்லாமல் இருந்தது தான். ஆனாலும் ஒரு காதலி இரவு கவிழும் நேரத்தில் சுற்றும் முற்றும் பார்த்தபடி வந்து என் கையில் கடிதமொன்றை திணித்து விட்டு கன்னத்தில் முத்தமிட்டு விட்டுயாராச்சிம் பாத்துருவாங்க நான் போறேன்என்று சொல்லி ஓடிப்போனது போன்றே இருக்கும்! (இப்படியெலாம் உதாரணமா? அட இருக்கட்டுமப்பா)

இந்தத் தொகுதியில் பத்துக் கதைகள் உள்ளன. கிராமியம் சார்ந்த கதைகள் என்றால் என்னால் இயல்பாக அதனுள் நுழைந்து விட முடிகிறது. கதைகளில் வரும் ஒவ்வொரு வீதிகளையும், காடு வரப்புகளையும் அருகிலேயே சந்தித்தது போன்று. நீண்ட காலமாயிற்று ஒரு தொகுதி முழுக்க மிக சந்தோசமாய் வாசித்து. முன்பு சொன்ன ஆட்களிடம் இருந்த கட்டுப்பாடுகள் எதுவுமின்றி ட்ராகன் டாட்டூ சிறுகதை இயல்பாக . எந்த நாளும் அவர்களால் இப்படியான கதையொன்றை புனைவாகக்கூட எழுத இயலாது தான். மகிழம்பூ சிறுகதை வாசித்துக் கொண்டிருக்கையில் அந்த புதிய திருமணமான பெண் தன் நேசத்திற்குரியவனிடம் சந்திப்பிற்குப் பிறகு விடை பெற்றுச் செல்ல வேண்டுமென யோசித்தே படித்தேன். அதன்படியே இருக்கையில்.. “செமெஎன்று முனகிக் கொண்டதும் நிகழ்ந்து விட்டது. தொகுதியில் உப்புச்சுவை என்கிற கதை தந்தைக்கும்  மகனுக்குமான நட்புறவை எளிமையாக காட்டிச் சென்றது. இந்தக்கதை என் மனதிலிருந்து எப்போதும் நீங்காது தான்.

இறுதியாக சாருநிவேதிதாவின் முகப்புரையை வாசித்தேன். உலகத்தரமான கதைகள் என்றும், ஹாருகி முரகாமி, கார்ஸியா மார்க்கேஸ், ஹூவான்ருல் ஃபோவ் போன்ற எழுத்தாளர்களின் உலகு சார்ந்த கதைகளென்றும் சொல்லியிருக்கிறார். இந்த எழுத்தாளர்களின் ஒன்றிரண்டு கதைகளை தமிழில் வாசித்த அனுபவத்தில் ஆமாம் என்று சொல்லத் தோன்றுகிறது. அட ஆமாம்.. சொன்னால் தான் இப்ப என்ன? மிக்க சந்தோசம் ஜி.கார்ல் மார்க்ஸ். நிறைய என்றில்லா விட்டாலும் அவ்வப்போதேனும் எழுதுங்கள் சமயம் உள்ளபோதெல்லாம்!


வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)

எதிர் வெளியீடு. விலை 100. பேச : 9942511302, 04259-226012.

000

Post Comment

வெள்ளி, நவம்பர் 25, 2016

ஊதா நிற செம்பருத்தி, பொறுப்புமிக்க மனிதர்கள்-பார்வை
ஊதாநிறச் செம்பருத்தி - சிமாமந்தா எங்கோசி அடிச்சி

ஆசிரியரின் மிக நீண்ட சிறுகதைகளை இலக்கிய இதழ்களில் ஆங்காங்கு வாசித்த அனுபவம், மற்றும் பிரேம் (ரமேஷுடன் இணைந்து சுரேஷ் பாலா போல, எழுதிய சில புத்தகங்கள்) செய்த மொழிபெயர்ப்பு என்னை இந்த புத்தகத்தை வாங்கத் தூண்டியதாக கொள்ளலாம். யார் வெளியிட்டார்கள்? என்பதை கவனிக்கும் பொறுமை கூட எனக்கில்லை.

நாவலை வாசிக்கத்துவங்கி கிட்டத்தட்ட 80 பக்கம் வரை வந்த பிறகுதான் எனக்குள் ஒரு சலிப்பும், வேதனையும் நைஜீரியாவிலிருந்து காற்று வழி வந்து ஒட்டிக் கொண்டது! இவ்வளவு சலிப்பான ஒரு மொழிபெயர்ப்பு நாவலை நான் என் வாழ்நாளில் வாசித்ததே இல்லை! ஒருவேளை நான் கிறிஸ்துமஸ் கொண்டாடுபவனாக இருந்திருந்தால் இந்த நாவலைத்தான் சிறப்பு என்றும் கூட கூறிவிடலாம்.

எந்த நேரமும் தேவாலய மணி ஒலித்துக் கொண்டிருக்கும் நாவல் இது. சாப்பாட்டுக்கும் முன்பாக ,பின்பாக, வாசிக்கப் போவற்கும் முன்பாக, என்று எந்த நேரமும் கடவுள் சிந்தனைசிமாமந்தா பெண்ணியத்தின்  ஒரு முக்கிய பகுதியான?? கருப்பின பெண்ணியத்தின் குரலாக ஒலிப்பவர் என்று முன்பாக குறிப்புகள் வாயிலாக அறிந்தது தான்.

படிமம், ஆண் தன்மை, அமைப்பின் ஒரு பகுதி, சிதைவாக்கம்,பெண்ணிய இயங்கியல், மரபு, தொன்மம், தொல் படிமம், நீண்ட காலமாயிற்று இவைகளிடமிருந்து தப்பித்து வந்து! கடைசிச் செய்தி- கருப்பினப் பெண்ணியத்தின் செய்தியாக பதிவுறும் சொற்கள்!

காம்பிளி என்கிற படிக்கப்போகும் பெண்வழியாக அவள் சொல்வது போன்று செல்லும் இந்த நாவலில் தன் அம்மா, அப்பாவிற்கு டீயில் விஷம் தந்து கொன்றதை ஏற்றுக் கொள்கிறாள். வீட்டினுள் அதிகாரம் செலுத்தும் தொன்மம் சார்ந்த கணவர்களை கொன்று விடலாம் என்கிற பாடத்தை அம்மா வாயிலாக காம்பிளி அறிந்து கொள்ளும் குடும்பக்கதை அழகு தான். காம்பிளியும் நாளை அல்லது அவள் போன்ற பெண்கள் இதை தொடர வேண்டுமென்பதே ஆசை என்பதே இந்த மொழிபெயர்ப்புக்கு வகை செய்திருக்கும். யாரும் யாரையும் திருந்திக்கொள்ள அவசியமே இல்லை! கொன்றே வாழலாம், சிறை செல்லலாம்!


ஒரு நாவலை தமிழில் வாசிப்பவர்கள் அனைவரும் பல பல வழிகளை திறந்து வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருக்கிறார்களா? என்று இப்போது பயம் கவ்வுகிறது! கலாச்சாரங்களை அறிந்து கொள்வதற்காக இன்னமும் மொழிபெயர்ப்பு நாவல்களை (ஆங்கில வாசிப்பில்லாதோர்.. எமைப்போன்று) வாசிப்போர் வரிசையில் தான் நான். கலாச்சாரங்கள் நமக்கு நன்மை பயக்கட்டும்!

000


பொறுப்பு மிக்க மனிதர்கள் (நாவல்)
மனு ஜோசப்

கடற்கரையில்  தங்கள் அம்மாக்களைப் போன்ற தோற்றம் வந்து விடக்கூடாதே என்று பயந்து ஓடும் நல்ல ஷூக்கள் அணிந்திருந்த தனித்த இளம்பெண்கள் விரைவாக நடந்து சென்றார்கள்! கதையின் தலித்திய நாயகன் அய்யன் மணியின் கற்பனைகளிலிருந்து நாவல் துவங்குகிறது. எந்த நேரமும் மகன் ஆதியின் கையேட்டில் புகார்களை எழுதித்தரும் கிறிஸ்துவப்பள்ளியாசிரியர்கள்! அவனைப்பற்றிய கவலையில் இருக்கும் அய்யன் மணியின் மனைவி ஓஜா என்று நாவல் ஒரு குடும்ப அமைப்பிற்குள் உடனடியாக வந்து விடுகிறது.

ஆரம்பத்தில் ஆதியை அப்பா அம்மா விளையாடக் கூப்பிடும் சிறுமியை கீழே படுக்க வைத்து மேலே.. பலர் வந்து அவனைப் பிரித்தெடுக்கிறார்கள். இரவில் அய்யன் மணியும், ஓஜாவும் மகன் உறங்கி விட்டானென அப்பா அம்மா விளையாட்டைத் துவங்கும் சமயத்தில் ஆதி இருளில் எழுந்தமர்ந்து, “நேத்து நான் இதை விளையாடிய போது அவங்க விடலைஎன்கிறான்.

ஆதியின் பள்ளியில் சகோதரி சேஸ்டிடி  அய்யன் மணியை, ஏன் நீங்கள்  இயேசுநாதரை ஏற்றுக் கொள்ளக் கூடாது?, என்றும், ஆதியின் மேல் கல்விச் செலவுகளை சலுகைகள் காப்பாற்றுமென்கிறாள். அய்யன் மணி  சகோதரியை ஜமாளித்து வெளியேறும் காட்சியில் புரிந்து விடுகிறது அவனின் தனிப்பட்ட சில சாமார்த்தியங்கள். அது நாவலின் முடிவு வரை தொடர்கிறதுமகனிடம் இல்லாத சாமார்த்தியங்கள் இருப்பதாக உலகை நம்ப வைக்க அவன் நாவலின் முடிவு வரை திட்டங்களை வகுத்துக் கொண்டேயிருக்கிறான்பிராமணர்கள் மீதான தன் கோபத்தை ஒரு தலித்தின் கோபமாக நாவல் முழுக்க பதிவு செய்தபடி வந்து கொண்டே இருக்கிறார் ஆசிரியர்.

தமிழில் க. பூரணச்சந்திரன் மிக லகுவாக மொழிபெயர்த்திருக்கிறார்.

எதிர் வெளியீடு : விலை 250. பேச : 04259-226012.

000

Post Comment

வியாழன், நவம்பர் 24, 2016

செல்லமுத்து குப்புசாமி பார்வையில் தானாவதி

தானாவதி நாவல்
பார்வை- செல்லமுத்து குப்புசாமி

பானை முனைவது ஒருகலை. எழுத்தும் அப்படித்தான்.

குயவன் விதவிதமாக பானைகளை உருவாக்கிப் பார்த்து மகிழ்வது போல எழுத்தாளன் வித்தியாசமாக எழுதிப் பார்க்கிறான்.

எழுத்தாளர் வா.மு.கோமு தனது தானாவதி நாவலின் முன்னுரையில் கூட, “எழுத்து ஒரு கலை. அதை எப்படி வேண்டுமானாலும் எழுதிக்காட்ட எழுத்தாளனால் முடியும். விதம் விதமாக எழுதிப்பார்க்க எழுத்தாளன் ஆசைப்பட்டுக்கொண்டேஇருப்பான். அந்த ஆசை தான் எழுத்தாளனை இயங்கச் செய்கிறது.” என இதனைக் குறிப்பிடுகிறார்.

ஒரு எழுத்தாளராக அவரைப் பொறுத்த வரைக்கும் அப்படியொரு மாறுபட்ட நாவல் முயற்சியே தானவதி என்ற இந்நாவல். இதற்கு முந்தைய அவரது புதினங்களில் எல்லாம் சொல்லவரும் விஷயம் போகிற போக்கில் கதையின் பின்னால் ஒளிந்திருக்கும். மேலோட்டமாகப் பார்த்தால் வேறு விஷயங்களை தூக்கலாகப் பேசுவது போலிருக்கும்.
 
தானவதி என்ற சொல்தற் போது புழக்கத்தில் இருந்து மறைந்து வருகிறது. திருமணபந்தம் நிறைவேறுவதில் தரகர் வேலைபார்ப்பதற்கு தானாவதி என்று பெயர். தகரர், புரோக்கர், திருமண தகவல்மையம், மேட்ரிமொனி என பெயர்கள் மாறிவிட்டாலும் தானாவதிக்கு இருக்கும் சிறப்பே தனி.

கொங்குமண்டலம் சந்திக்கும் பெரிய சவால்களில் ஒன்றை இந்தநாவல் தொட்டுச் செல்கிறது. எழுபதுகளில் அல்லது எண்பதுகளின் முற்பகுதியில் பிறந்த, படித்து வேறு வேலைகளுக்குச் செல்லாமல் விவசாயம் மட்டுமே கதியாகக் கிடக்கும் கொங்கு வேளாள குடியானவ சமுதாய இளைஞர்கள் பலர் திருமணமாகாமல் கிடக்கும் கதையே இதன் கரு.

கொங்கு மண்ணின் ஒவ்வொரு கிராமத்திலும் முப்பது-நாற்பதைக் கடந்து திருமணமாகாத ஆட்களைக் காட்ட இயலும். அல்லது அப்படி ஒருவனை அன்றாட வாழ்க்கையில் நேரடியாக அறிந்தவர்களைக் கடக்க இயலும். வாலிபப்பிராயத்தில் காதல் உணர்வுகள் கொப்பளிக்கக் காத்திருக்கும் ரோமியோ இளைஞர்கள் அல்லர் இவர்கள். கடைசிக்காலத்தில் கஞ்சியூற்ற ஆளிருந்தால் போதுமென்ற யாசிப்பினை நாடும் பரிதாபத்துக்குரியவர்கள். நிலவுடமை சமுதாயம் முந்தையை தலைமுறையில் செய்தபாவங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட பரிகாரங்கள்.

பெண்குழந்தைகளைப் பாரமென்றும், பெண்ணைப் பெற்பது பாவமென்றும் கருதிய ஒரு கால கட்டத்தில் (இப்போதும் இம்மனநிலை மாறவில்லை எனினும் சிசுக்கலைப்பு/ கொலை இல்லை) முதல் குழந்தை ஆணாக இருந்தால் இரண்டாவது குழந்தைக்கு முயன்றதில்லை. முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் இரண்டாவது ஆணுக்காக மெனக்கெட்டதுண்டு. மேலும் ஸ்கேன் செய்து கருவிலிருந்த சிசுசிவின் பாலினத்தை அறியும் வசதியிருந்த காலத்தில் பெண் உயிர்கள் கருவிலேயே களைந்து கலைக்கப்பட்டதும் உண்டு.

அதனால் குறிப்பிட்ட தலைமுறையில் ஆண்களின் எண்ணிக்கை பெண்களின் எண்ணிக்கையை விட பெருமளவில் கூடியது. இன்னொரு பக்கம் ஆண்களுக்கு நிகராக, ஏன் ஆண்களைவிட அதிகமாகவே, பெண்கள் படிக்க ஆரம்பித்து விட்டார்கள். பெண்கள் செலக்ட் செய்து நிராகரிப்பது வாடிக்கையாகிப் போனது.

பெண் கிடைக்காமல் விதவைகள், விவாகரத்தானவர்கள், வேறுஜாதிப் பெண்கள், கேரளாவிற்குச் சென்று அங்கிருந்து பணம் கொடுத்து மணந்து வருதல் என எல்லாவகையிலும் முயன்று பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்த இளங்கிழவர்கள் தள்ளப்படுகிறார்கள். அப்படி ஏழெட்டு அரை வழுக்கையர்களின் கதையே தானாவதி.

வழக்கமாக வா.மு.கோமுவின் கதைகளில் வரும் நகைச்சுவை இங்கும் விரவிக் கிடக்கிறது. ஆனால் அதன்கீழே அடியோடும் வேதனையும், வலியும், இயலாமையும் சொல்லி மாளாது. ஆனால் அந்த வலியும், வேதனையும் வாசகனை வாட்டி வதைக்காத வகையில் எழுத்தின் ஓட்டம் நம்மை லயிக்கச் செய்கிறது.

சமகால கொங்கு மண்ணில் வாழ்க்கையை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்வதில் வா.மு.கோமுவுக்கு பெரும் இடமுண்டு. அவ்வகையில் இதிலும் ஒருசமகாலப் பிரச்சினையை அதன் வேர் வரைக்கும் சென்று ஆட்டிப்பார்க்கிறார் என்றே சொல்லலாம்.

பொதுவாக தனது கதைகளில் ஜாதிப் பெயரை இயல்பாக கிராமங்களில் புழங்கும் வகையில் பதிவு செய்யும் கோமு இதில் அவற்றைத் தவிர்த்திருக்கிறார். மேலும் பொதுவாக அவரது கதைகளில் வரும் செக்ஸ் இதிலே இல்லை. இத்தனை தண்டுவன்கள் தமது பாலியல் இச்சைகளைத் தீர்க்க என்ன செய்தார்கள்/செய்வார்கள் என்ற கேள்வியை நமது யூகத்துக்கே விட்டு விட்டார் போலிருக்கிறது.

தேவைப்பட்டால்மேற்கோள்காட்ட:

 “ஐய்யன் சாணியை கூடையில் எடுத்துக்கொண்டு குப்பை மேட்டுக்கு நடந்து கொண்டிருப்பதைப் பார்க்க இவனுக்கு வருத்தமாய் இருந்தது. ஏற்றுக்கொள்வது என்பதே திணிக்கப்பட்டதாகத்தானே இருக்க வேண்டும்!”

தனிமை சில சமயம் வேறு வேறு எண்ணங்களுக்கு அவனை இழுத்துப் போகிறதுஇந்த வாழ்க்கை ஏதேனும் ஒரு கட்டத்தில் நிறைவுக்கு வந்து விடும் எனபது மறுக்க முடியாத உண்மைதான். முடிவை நோக்கித்தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த முடிவை முன்னதாகவே நிகழ்த்திக் காட்டும் எண்ணம் கூட சின்னச்சாமிக்கு சமீப காலங்களில் வந்து கொண்டே இருக்கிறது. பின்பாக அந்த நாலு பேர் நாலு விதமாக பேசுவது பற்றி அவனுக்கு எதுவும் தெரியப்போவதில்லை.”

இவனுக்கும் கற்பனையான வடிவில் நினைத்துப் பார்த்து கட்டிலில் கிடக்க ஒரு அழகி இருந்தாள். அவளோடு அவன் கனவுலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான். அவள் எப்போதும் இவனுடன் சண்டையிடுவதேயில்லை. ஒரு டூ பாத்ரூமிற்கு கூட அவன் கனவில் அவள் செல்வதேயில்லை. பல நேரங்களில் பிட்ஷாவைப் பிய்த்து கனவில் ஊட்டிய வண்ணமே இருக்கிறாள் அவள்.”


-ஜன்னல் இதழில் செல்லமுத்து குப்புசாமி.
Post Comment

வெள்ளி, செப்டம்பர் 16, 2016

மகாகிரந்தம் -ஒரு பார்வைதமிழில் சாண்டில்யன், கல்கி, விக்கிரமன் என்று பலர் எழுதிய சாகசக் கதைகள் இன்றும் பலராலும் விரும்பி வாசிக்கப்படுவதற்கான காரணங்கள் அவைகள் வாசகனை தன்னகத்தே தக்க வைத்துக் கொள்ளும் கதைக்களத்தையும், சொல்லிச் செல்லும் மொழிப்பாங்கையும் கைவரப் பெற்றதனாலேயே!

ஒருக்களித்ததால் அவள் சுந்தர உடலின் எழிற்பகுதிகள் குனிந்திருந்த அவன் உடல் மீது நன்றாக அழுந்தின. மெல்ல சுயநிலை இழந்தான் அந்தப் புரவி வீரன். அதுவரை பக்கவாட்டில் ஊன்றியிருந்த அவன் வலக்கை அவள் உடலுக்கு குறுக்கே சென்றுஎன்று சாண்டில்யன் காதலர்களின் கேளிக்கைகளை அவ்வளவு அழகாக எழுதிச் செல்வார். இந்த நாவல்களிலெல்லாம் எந்தப் புரவி வீரனும் இறுதியாக தோல்வியைச் சந்திப்பதில்லை. அதுவே வாசகனுக்கும் தேவை.

இவற்றிலிருந்து முற்றிலும் விலகி சுரேந்திரவர்மா ஹிந்தியில் எழுதிய நாடகமானசூரியனின் கடைசி கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம் வரைவி. சரோஜாவின் மொழியாக்கத்தில் வாசித்த அனுபவம் எனக்கு புதுமையாக இருந்தது முன்பு. போக இன்னும் என்னுள் இந்த விதமான கதை சொல்லல் எழுத்தை எழுதிப் பார்க்கும் ஆர்வம் மிக நீண்ட காலமாகவே இருந்து கொண்டு தான் இருக்கிறது. கண்ணியத்தைப் பற்றி நினைத்துப் பார்க்காத கதைக்களம் இந்தப் படைப்பு.

எச்.முஜிப் ரஹ்மான் குறுநாவல் வடிவில்  எழுதியமகாகிரந்தம்”  இன்னும் சற்று விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் தான். என்ன தான் விரிவாக எழுதப்பட்டாலும் சொல்லப்பட வேண்டிய சமாச்சாரங்கள் 52 பக்கங்களுக்குள்ளாகவே சொல்லி முடிக்கப்பட்டிருப்பது சவாலான விசயம் தான். வாசகனை பரசவத்தில் ஆழ்த்தும் வேலையைச் செய்யாமல், திரைப்பட பாணியிலான கதையோட்டத்தை தக்க வைத்து, பல கேள்விகளை  புனைவின் வழியாக வாசகனிடம் எழுப்பிக் கொண்டே செல்கிறது இந்த சிறு நாவல்.

திருவனந்தபுரத்தில் தமது ஆடல்கலையை நிகழ்த்த வந்த நீல லோகிதையை கடத்திக் கொணர்ந்து திவான் அரவிந்தன், தளபதி அஜீத், தளபதி ரகுமான் ஆகியோர் ருசிக்கிறார்கள். திவான் அரவிந்தனின் மனைவி சுவர்ணமினி மகாராஜாவோடு கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறாள். இதை கேள்வியுற்ற அரவிந்தன் மகாராஜாவை பதவியிறக்க நண்பர்களோடு இணைந்து திட்டம் தீட்டுகிறான். இவர்களால் வன்புணர்வுக்கு உள்ளான நீல லோகிதையின் முதல் பழிவாங்கலாக அரவிந்தனை படுக்கையில் கத்திக் குத்தொன்றில் ஆரம்பிக்கிறாள்.

இந்த சுருக்கமான நகர்வுக்குள் இருக்கும் கிளைகள் தான் நாவலின் முக்கிய பகுதிகள். சாதீயத்தை பற்றி வெளிப்படையாக பேசும் நாவலாகவும் இது வந்துள்ளது. நாயர், நாடார், முஸ்லீம், தலித் இனப்பிரிவுகளுக்கு இடையிலான கலாச்சார மீறல்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஏற்றப்படுகிறது. இதனாலேயே இந்த நாவல் தனித்துவத்தையும் காட்டுகிறது நம்மிடையே!

மகாகிரந்தம் (குறுநாவல்) எச்.முஜீப் ரஹ்மான், புது எழுத்து வெளியீடு, பேச : 9842647101. விலை -80.00


000

Post Comment

சனி, செப்டம்பர் 10, 2016

தானாவதி- நண்பரின் பார்வையில்!தானாவதி

நானொரு முழு சோம்பேறி. முழு சோம்பேறி என்பதைவிட வாழைப்பழ சோம்பேறி என்று சொல்லலாம்.

இலக்கியவாதிகள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் சில இலக்கியவியாதிகளின் கிணற்றுத்தவளை பேச்சுகளால் இலக்கியம் வாசிப்பதை நிறுத்தி பல மாதங்களாகிவிட்டாலும் சென்ற மாதம் கோமுவின் புத்தக வெளியீட்டிற்காக ஈரோடு சென்றிருந்த பொழுது வாங்கியது இந்த தானாவதி.
ஒருமாதம் முன்பு வாங்கிய புத்தகத்தை நான்கு நாட்கள் முன் தான் திறந்தேன். நாலு பக்கம் படித்ததுமே மூடிவைத்து விட்டேன் காரணம்..
வேறொன்றுமில்லை முதல் பத்தியைப் படித்துக் கொள்ளவும்

மீண்டும் நேற்று மதியம் புத்தகத்தை திறந்தேன் 
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தானாம் என்பது போலவே கோழிப்பாளையம்னு ஒரு ஊரு, அந்த ஊருல கல்யாண காச்சின்னு நடந்து பதினஞ்சு வருசமாச்சு என்று கதை துவங்கி சுப்பிரமணின்னு ஒருத்தன் இருக்கிறான் அவனுக்கு வயசு 36 ஆச்சு அவன் பொண்ணு தேடிட்டு இருக்கிறான் என்று நீ........ள மறுபடியும் முதல் பத்தி கண்ணில் நிழலாட மெல்ல கோமுவின் விளையாட்டு துவங்கியது
அவனது பைக்கை காணவில்லை என்று மெல்ல துவங்கும் அவருடைய நகைச்சுவை அவன் பார்க்க செல்லும் மெடிக்கல் ஷாப் பெண்ணின் டச்சிங் டச்சிங் கதையால் முடிய

அடுத்ததாக வருகிறான் சின்னசாமி

மதுரையிலிருந்து வரும் பத்து ஜாதகத்தையும் 370 ரூபாய் கொடுத்து வாங்கி அதில் இருவருக்கு போன் செய்து பல்பு வாங்கிக்கொள்ளும் ஒரு அப்பாவி. மீண்டும் மதுரையிலிருந்து வேறோர் திருமண தகவல் மைய அழைப்பு. அந்த பெண்ணிடம் சின்னசாமி பேசும் இடம் தான் ஒரு எழுத்தாளனின் நிஜ சோகம் "பத்து காகிதம் பைத் மூணு முப்பது முன்னூறு! அவனவன் புத்தகம்னு பக்கம் பக்கமா எழுதி இரநூறு ரூவாய்க்கி புத்தகச் சந்தையில வெச்சு வித்துட்டு சிரமப்பட்டுட்டு இருக்கான். இங்கே ஒரு ஜெராக்ஸ் காகிதம் முப்பது ரூவா!" 

அடுத்ததாக வேலுச்சாமி s/o மூர்த்தியப்பன். மகனுக்கு தரகு கொண்டு வரும் தானாவதியை பாதியில் மறித்து தனக்கு பெண் பார்க்கவைத்து மகனின் முன்னால் புதுப்பெண்ணோடு வந்து இறங்கி... 

அங்கே நடக்கும் நிகழ்வுகள் வரிக்கு வரி படிக்கையில் நகைச்சுவை உணர்வு மேலோங்கினாலும் வேலானின் நிலையினை யோசிக்கையில் sweet coated tablet.

பழனிச்சாமி - இவனும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். துணிந்து அவள் அம்மாவிடம் பெண் கேட்கையில் மற்ற இருவரையும் போலவே இவனுக்கும் உச்சந்தலையில் ஆணி இறங்குகிறது.

இந்த நாலு பேரையும் சுற்றி நடக்கும் கதையில், இருக்கும் சோகம் மொத்தமுமே ஹாஸ்ய வரிகளாக்கப்பட்டு தானாவதி என்ற பெயரோடு கையில் இருக்க..

மெல்ல இந்த புத்தகத்திலிருக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் யோசித்து பார்க்கிறேன்.
கோமு நினைத்திருந்தால் இதே கதையை மனதை கனக்க வைக்கும் அழுவாச்சி கதையாய் எழுதியிருக்கலாம். இந்த 184 பக்க புத்தகத்தில் மனதை கனக்க வைக்கும் ஒரே இடம் வேலான் மற்றும் மூர்த்தியின் முடிவுகளும் தான்.

திருமண வாழ்க்கைக்காக ஏங்கித் தவிக்கும் முதிர்கண்ணன்களின் வாழ்வின் வலியை எழுதியதற்கு ஒரு உம்மா..

(பிகு - கோமுவிற்கு)

இந்த புத்தகம் மட்டும் விலை போகவில்லை என்றால் இலக்கியம் எழுதுவதை நிறுத்திவிட்டு கமர்ஷியல் பக்கம் ஒதுங்கிவிடுவேன் என்று எழுதியிருந்தீர்கள். ஒரு தனி மனிதனாக உங்கள் முடிவை மாற்ற சொல்லி கேட்கமாட்டேன். ஆனால் ஒரு நண்பனாக.. "யோவ் அவனவன் மங்கிப்போன கண் பார்வையை வச்சிகிட்டு கண்ணுல தெரியுறதை எல்லாம் குறையா பார்த்து எழுதி இலக்கியம்னு சொல்றான். அதையும் நாப்பது பேர் ஆகா ஓகோன்னு கொண்டாடுறான். ஒழுங்கா எழுதும் இல்லேன்னா உம்மைத் தேடி நான் வரவேண்டி இருக்கும். கட்டிபிடிச்சு கன்னத்துல உம்மா கொடுக்க இல்ல செவுள்லயே நாலு இழுப்பு இழுக்க. ஜாக்ரத"

-வாஸ்தோ.


Post Comment

அழுவாச்சி வருதுங் சாமி- ஒரு பார்வை
அழுவாச்சி வருதுங் சாமி

'அழுவாச்சி வருதுங் சாமி' நான் படிக்கும் வாமு.கோமுவின் முதல் படைப்பு. துக்ககரமான வாழ்வியல் நிகழ்வுகளைக் கூட நகைச்சுவையோடு கையாளும் கோமுவின் எழுத்து நமக்கு வித்தியாசமான வாசிப்பனுபவத்தை தருகிறது. நாம் தினமும் காண்கிற, சந்திக்கிற சராசரி மனிதர்களின் வாழ்வு கோமுவால் இலக்கியமாக்கப்படுகிறது.

இந்த சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளின் தலைப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது. கதை முழுக்க சிரிப்பைத் தூவிவிட்டு அழுவாச்சி வருதுங்சாமி என முதல்கதைக்கு தலைப்பிட்டிலிருப்பதிலிருந்து இது துவங்குகிறது. இந்தக் கதையை உறவுமுறைகள் என்று நாம் வகுத்துவைத்திருப்பவற்றின் மேலிருக்கிற பற்றையும் தாண்டி தனிமனிதனின் நலன்களைத்தான் அவன் அணுகுவான் என்கிற விதத்தில் முடிகிறது. வாமு.கோமுவின் கதைகள் நகைச்சுவையின் ஊடே மறைபொருளாக பேசிச் செல்லும் விஷயங்கள் மிக முக்கியமானவை. வெறும் நகைச்சுவையை எடுத்துக்கொள்பவனுக்கு அதுவே இன்பந்தருமென்றாலும் அதன்வழி சொல்ல வரும் கருத்தியல்தான் இலக்கியத்தின் பலனைத் தருவது. அவற்றைத்தான் முக்கியமாக கோமுவின் கதைகளிலிருந்து நான் எடுத்துக்கொள்கிறேன்.

சாதிய வன்மத்தை தொடர்ந்து தனது கதைகளில் சாடும் கோமு அந்த வன்மம் எவ்வகை நோக்கியெல்லாம் கொண்டுசெல்லுமென கூட்டப்பனை சாவக்கட்டு கதையில் காட்டிச் செல்கிறார். அது தரும் முடிவு அதிர்ச்சியானது. ஆனால் அதற்கெதிராய் ஒன்றும் செய்யவியலா நிலைமையைத்தான் பாதிக்கப்பட்டவனால் செய்ய முடிகிறது. இந்தக் கையறுநிலை நீங்க பண்றது அட்டூழியமுங்க சாமி கதையிலும் எதிரொலிக்கிறது. அந்தக் கதையின் முடிவில் காதலின் புனிதபிம்பத்தை அசைத்துப் பார்க்கிற காரியத்தையும் செவ்வனே செய்கிறார் கோமு. இதன் எதிரொலிப்பாக நீ சொல்றதலுயும் நாயம் இருக்கு என்ற கதையில் காதலின் புனிதபிம்பத்தை வெட்டி வேரோடு சாய்க்கிறார்.

திருவிழாவிற்கு போன மயிலாத்தாள் கதையில் பெண் ஒடுக்கப்படுதலுக்கு எதிராக கோமு பேசுகிறார். இந்தக் கதை எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இதன் முடிவு பெரிய அழுத்தங்கள் எதையும் வாசிப்பவனுக்கு ஏற்படுத்தாமல் போய்விடக்கூடிய வாய்ப்புகளைக் காண முடிகிறது. 

இலக்கியவாதிகள் பற்றிய கதைகளும் இந்தத் தொகுப்பில் இருக்கிறது. தோழர் பெரியசாமி பற்றிய கதைகள் படு பயங்கர சுவாரசியமாய் இருக்கிறது. இலக்கியவாதிகளின் பேச்சொன்றும், செயலொன்றுமாய் இருப்பதை வாமு. கோமு இந்தக் கதைகளில் சுவாரசியமாய்க் காட்டிச் செல்கிறார்.

இடத்திற்கான பட்டா காட்ட சொல்லும் எதிர்வீட்டுப் பெண்ணிடம் தோழர் பாருடி பட்டாவ என லுங்கியைத் தூக்கிக் காட்டும் இடமும், பின்நவீனத்துவம்னா என்னனு கேட்பவரிடம் பின்னாடி பண்றது என தோழர் சொல்லுமிடங்களும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கின்றன. (தோழர் பெரியசாமியை பேட்டி எடுக்கும்போது அவர் டுர்டுரா நாவலை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். அதனால் வாமு தன்னை சுய பகடி செய்து பெரியசாமியைப் படைக்கிறாரோ என்ற சந்தேகமும் உண்டு. அதைக் கோமுகன் அண்ணன்தான் விளக்க வேண்டும்)

துரதிஷ்டக்காரன் என்று தலைப்பிடப்பட்ட கதையில் முடிவுகூட துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. உணர்ந்துகொள்ளப்படாத பாலியல் தேவை ஒரு புறமும், உணர்ந்துகொள்ளப்படாத தியாகங்கள் மறுபுறமுமாக இக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதாமின் இருப்பு கதை நாம் உருவாக்கி வைத்திருக்கும் சட்டங்களையும், நியதிகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது. கட்டாயத்தின் அடிப்படையிலேயே மனிதன் நல்லவனாய் நடிக்கிறான் என சொல்லிச் செல்லும் கதையின் பாத்திரத்திற்கு யெஸ். ராமகிருஷ்ணன் பெயரை சூட்டியிருக்கும் எள்ளல் ஏனென்று நான் அறியாதது.

மயானங்களில் தேடப்படும் உங்கள் பிணங்களின் முடிவு முதலிலேயே ஊகித்துவிடும் படிக்கு இருப்பதால் எனக்கு உவப்பு தரவில்லை. அன்பிற்கினியவள் கதை உறவுமுறைகளை கேலிக்கூத்தாக்கி நம்மை சிரிக்க வைக்கிறது.

மறுவாசிப்பிற்கு உட்படுத்தும்போது இன்னும் நிறைய விஷயங்களை இத்தொகுப்பிலிருந்து கண்டுணர முடியமென்று தோன்றுகிறது. வாமு. கோமுவின் பண்பியல்பிற்கும் அவரது எழுத்துக்கும் நிச்சயமாகத் தொடர்பிருக்குமென்று தோன்றுகிறது. உம்மணாமூஞ்சியாக இருக்கும் மனிதனால் இப்படி எழுத முடியுதாதென்று தோன்றுகிறது. இலக்கியத்தை இவ்வளவு கொண்டாட்டமாக்கும் வாமு.கோமுவின் கதைகளை வெறும் கொண்டாட்டத்திற்காக மட்டும் அணுகாமல் அதிலிருந்து படிப்பினைகள் பெற்றுக் கொள்வதே நமக்கு நல்ல வாழ்வியலைக் காட்டும் என்பதே என் எண்ணம் அதைத்தான் நான் செய்துகொண்டும் இருக்கிறேன்.


(
சமீபத்தில் மணல்வீடு சிற்றிதழ் 25ல் அம்மாவின் வால் என்ற சிறுகதை படித்தேன். வாமு. கோமு எப்படிப்பட்ட படைப்பாளி என்று அறிய அந்த ஒரு கதை போதுமென்று தோன்றுகிறது).

அகில் குமார்Post Comment

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016

புதிய கவிதைகள் சில!

மல்லாக்கப் படுத்து சூரியனைப்
பார்த்து காறித் துப்புவது
போன்றது தான் இந்த வாழ்வு!
000

யாரோ தலை மீது கல்லைப் போட
துரத்தி வந்த வண்ணமே இருப்பது
தான் இந்த வாழ்வு!
000

விந்துத் துளிகளில் உயிர்
அணுக்கள் இல்லாத கடவுளிடம்
கையேந்தி இறைஞ்சி நிற்பது
தான் இந்த வாழ்வு!
000

தன்னை மட்டுமே காப்பாற்றச்
சொல்லி கோவிலை வலம்
வருகையில் தடுக்கி விழுந்து
பல்லை உடைத்துக் கொள்வதே
இந்த வாழ்வு!
000

மஞ்சுக் கோழி ஒரே அடையில்
பதனஞ்சு குஞ்சுகள் பெற்றெடுத்து
அழைத்துப் போவதும் இந்த
வாழ்க்கையோடு சேர்த்தி தான்.

000

ஓடிப்போனவள் திரும்பவும்
ஊருக்குள் வந்து சேர்ந்த பிறகு
பேசுவதற்கு நிறையவே
வார்த்தைகள் இருந்தன!
000

வழிமீது விழி வைத்துக் காத்திருந்தான்
விழி மீது எவரேனும் மிதியாமலிருக்க
வழி மீது கண் வைத்திருந்தான்!
000

இங்கென்ன மடியில முடிஞ்சா வச்சிருக்கேன்?
காசு வேணும் காசு வேணும்னு
பன்னண்டு மணியானா நின்னுக்குறே?
உன்னை பெத்த கடனுக்கு சோறு
மூனுவேளை வட்டல் நம்ப எடுத்துக்
கொட்டத்தான் உங்காத்தாவுக்கு எழுதி வச்சிருக்கு!
நீ குண்டி வெடிச்சு சாவ நான் காசு அவுக்க இல்லெ!
ஆளப்பாரு! கொன்னு போடுவேன் கொன்னே போடுவேன்னு
நாலு சனம் கேக்க கத்திக்கடா! என்னெக்
கொல்லத்தானே உன்னெப் பெத்தேன்!
சாவுறேன் சாவுறேன்னு எனக்கு பூச்சாண்டி
காட்டுறியா? சாவுடா போயி! ஆனா ஊருக்குள்ள
நல்ல குடிதண்ணி கெணத்துல உழுந்து செத்துடாதே!
போ! போயி காட்டுல எங்காச்சிம் மரத்துல
தூக்குப் போட்டுச் சாவு! இல்ல ரயில் ரோட்டுல
வுழுந்து சாவு! நான் எழவை எடுத்துக்கறேன்!
பொழைக்கிற பையன் பொச்சைப் பார்த்தாவே
தெரியுமாம்! இது வெளங்கவா போகுது?

000

இங்கு என்னைச் சுற்றிலும் எல்லாமே
சுகமாகவே இருக்கிறது!
கார்க்காரர்கள் ஹாரன் அடித்து
சைக்கிள்காரர்களை ஒதுங்கச் செய்து
ஓரமாய்ச் செல்கிறார்கள்! –இருசக்கர
வாகனங்கள் மிதமான வேகத்திலேயே
சாலையில் பயணிக்கின்றன!
லூசுக் கிழவி எப்போதும் போல
மேலாடையை தெருவில் இழுத்துக்
கொண்டே சாலையைக் கடக்கிறாள்.
டீக்கடைப்பையன் பத்திரமாய் டீ நிரம்பிய
கண்ணாடி டம்ளர்களை டெய்லர் கடைக்கு
தூக்கிச் செல்கிறான்! – பேருந்து நிறுத்த
நிழற்குடையில் எங்கு செல்வதெனத் தெரியாமல்
பேருந்திற்காய் காத்திருக்கும் பாவனையில்
அமர்ந்திருக்கும் நான் உனக்காக எழுதப் போகும்
கவிதையின் முதல் வரியை இப்படி
ஆரம்பிக்கிறேன்! நீ இப்போது உனக்கான
புதிய காதலனை கண்டறிந்து விட்டாயா
மூஞ்சிப் புத்தக வாயிலாக?

000

இந்தப் பள்ளிக்கு எப்போதும்
விடுமுறை நாட்கள் தான்!
படிப்பிக்க ஆசிரியர்களுமில்லை
கற்றறிய பிள்ளைகளும் இல்லை!
மெட்ரிகுலேசன் பள்ளி செல்லும்
பேருந்திலிருக்கும் குழந்தைகள்
ஊரின் கடைகோட்டில் நின்றிருக்கும்
இந்த நடுநிலைப் பள்ளியை
கடந்து போகையில் சும்மாவுக்கேனும்
கையசைத்துச் செல்கின்றனர்!
ஏதுமறியாத கட்டிடம் புன்னைகைக்க
தெம்பின்றி வெறுமனே நின்றிருக்கிறது!
000

-ஆக பேருந்தில் நீ செல்கையில் எதுவும்
நடைபெறவில்லை என்கிறாய் அப்படித்தானே?
-இல்லை, நான் வீட்டில் என் படுக்கையில்
அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில்
அப்படி நடந்தேறி விட்டது!
-அவன் ஆள் எப்படியிருந்தான் என்று உங்களுக்கு
நினைவிருக்கிறதா? ஆளா? விலங்கா?
-நிச்சயமாக அவன் ஆண் தான்! என் அறையில்
அவன் திருட வந்தவன் தான்.
-அதெப்படி அப்படி நிச்சயமாக சொல்கிறீர்கள் மிஸ்?
-மின்சாரம் நேற்றைய இரவில் திடீரென
அணையாமல் இருந்திருந்தால் நிச்சயம் அவன்
வேறு ஏதேனும் பொருளை என் அறையில்
களவாடிச் சென்றிருந்திருப்பான்.
-ஆக மின்சாரம் போனது தான் உங்கள்
உடல்நல பாதிப்பிற்கு காரணமென்கிறீர்கள்!
-ஆம், அதைத்தான் சொல்கிறேன். மின்சாரம் சென்றபோது
அவன் என்னிடம் வினவினான் பலமுறை!
-என்னவென்று?
-மிஸ் எங்கிருக்கிறீர்கள்? இங்கே இருளாய் இருக்கிறது!
-நீங்கள் என்ன சொன்னீர்கள்?
-நான் படுக்கையில் வெறுமனே படுத்திருந்தேன்!
-பின் எப்படி தவறு நிகழ்ந்தது?
-ஒருவாறாக அவன் என்னை கற்பழிக்கப்போவதாய்
கூறியதும் நான் படுகையில் இருப்பதாய்
உடனே கூறி விட்டேன்! பிறகு தான் அது நடந்தேறி விட்டது!

000

Post Comment