சனி, பிப்ரவரி 27, 2016

கூழாங்கற்கள் -சிறுகதை தொகுப்பு பற்றி.முற்றிலும் புதிய களன்களில் சிறுகதைகளை வாசித்தது மொழிபெயர்ப்புகள் வாயிலாகத்தான். கொஞ்சமாய் பெயர்ப்பு சரியில்லையெனில் அப்படியும் சிரமப்பட்டேனும் வாசித்து முடித்து விடுவேன். புலம்பெயர் ஆக்களின் புத்தகங்கள் கொஞ்சம் சோகம் நிரம்பிய வாழ்க்கைப் பதிவுகளாகவே வாசிக்க முடிந்தது. போக புலம்பெயர் ஆக்களின் புத்தகங்களை ஆறாவடு வாசித்த பிறகு நிப்பாட்டிக் கொண்டேன். கடலில் கள்ளத்தோணியில் செல்கையில் வாந்தியெடுத்தார்கள் அவர்கள் நாட்டை விட்டு வெளிக்கிடும்போது. சும்மாவே எனக்கு வாந்தி வந்துவிடும் போல தான் இருந்தது. முன்பாக (6 வருடம்) தமிழில் முதல் அரவாணியின் எழுத்து, வாழ்க்கை, நாவல் என்று வரிசையாக வரத்துவங்கிய சமயம் ஒரே புத்தகம் மட்டுமே வாங்கி வாசித்து நிப்பாட்டிக் கொண்டேன். (ஒன்றையே திரும்பச் சொல்லல்!)

கனவுப்பிரியனின் முதல் சிறுகதைத் தொகுப்பு எனக்கு மதியம் இரண்டு மணிக்குத்தான் கைக்கு கிட்டியது. கி.ரா-வின் சின்னக் குறிப்பு பின் அட்டையில் இருக்க கிராமியத்தகவல் களஞ்சியமாக இருக்கப்போகிறதென்ற ஆர்வத்தில் முதல் கதையில் நுழைந்தேன். (முன்னுரைகள் என்ற பெரும் கூட்டத்தை தாண்டி விட்டேன் வாசிக்காமலே) இந்த மடம் இல்லைன்னா சந்த மடம்- இந்தக்கதையை வாசிக்கத்துவங்குகையில்கதை சொல்லிஇதழில் படித்த ஞாபகம் வந்தது! ஆஹா! எல்லாமும் அப்படித்தான் இருக்குமென்ற குஷியில் பார்த்தால். முற்றிலும் எனக்கு அறிமுகமில்லாத ஊரில் நடக்கும் விஷயங்கள். போக அங்கங்கே உள்ளூர் விஷயங்களின் ஞாபகச் சிதறல்கள். எவற்றிலும் சோகத்தை காணோம்! எல்லாமே ஏக்கங்கள்!(களிமண் வீடு)  நினைவுகளின் பதிவுகள்.

பெட்ரோமாஸ் லைட் வேணுமென்று ஒரு கும்பல் இங்கே அலைந்தது. முன்பாக மொண்ணைப் பாம்பு தேவை என்று அலைந்ததைப் போல! எதற்காக அந்த பெட்ரோமாக்ஸ் அவர்களுக்குத் தேவையென அப்போது விசாரித்துக் கொள்ளவில்லை. காரணம் தெரிகையில் ஆச்சரியம் தான்!

பனங்கொட்டை சாமியார் ஒரு நம்பிக்கை விதை ஊன்றிய கதை. அதே போல் இனியொரு விதி செய்வோம். கூழாங்கற்கள் கதை அப்படியே சுஜாதாவை வாசித்து முடித்த திருப்தியை கொடுத்தது உண்மை தான். வடிவு கதையின் முடிவு... ல் ஆடு எதிர் வீட்டு சிறுமி கொடுத்த முருங்கை இலையை ஏற இறங்க பார்த்து விட்டு திங்காமல் முகத்தை திருப்பிக் கொள்வது என்று படித்த பிறகு பின்னால் வரும் கதைகளை ஒரே மூச்சில் படிக்கும் ஆர்வத்தை கொடுத்தது. அவரு அனில் கும்ளே மாதிரி கதையை பின்பாக முகப்பில் எழுதிய அனைவரும் பாராட்டி இருந்தார்கள் எனக் கவனித்தேன். உண்மையில் தொகுதியில் வாசக மனங்களின் அருகே நின்று பேசிய கதை அதுதான். நான் வயிறு வலிக்க சிரித்தேன்!

அனுபவங்களுக்கு பஞ்சமில்லாத வாழ்வு ஆசிரியருக்கு கிட்டியுள்ளது. சொந்த ஊரிலேயே கிடந்திருந்தால் இந்த மடம் இல்லன்னா சந்த மடம் மாதிரியான கதைகளைத் தான் எழுதிக் கொண்டிருந்திருப்பார்! அவற்றை வாசித்து விட்டு பாராட்ட தமிழில் கொஞ்சம் வாசகர்கள் இருக்கிறார்கள்! ஆசிரியர் முகநூலில் எழுத வந்தாலும் அவரை செப்பனிட பல நல்ல உள்ளம் பெற்ற படைப்பாளிகளின் ஆதரவையும் பெற்றிருக்கிறார். அதுவே சந்தோசம்! நிறைய இத்தொகுப்பு பற்றி சொல்லலாம் என்றாலும் இதுவும் முகநூல் பார்வைதான்!


கூழாங்கற்கள் - ஓவியா பதிப்பகம். விலை - 200. அலைபேச : 76675 57114, 96296 52652.

000

Post Comment

வெள்ளி, பிப்ரவரி 26, 2016

தாக நதி- நாவல் ஒரு பார்வைவிவாகரத்துக்கள் மேலை நாடுகளில் அற்பக் காரணங்களுக்காகவேணும் நடந்து முடிந்து விடுவதை நாம் அறிந்திருக்கிறோம். தூங்குகையில் கணவன் குறட்டை போடுவது சகிக்க முடியவில்லை என்று மனைவியானவர் விவாகரத்து பெற்று கிளம்பி விடுகிறார். ரத்தினமூர்த்தியின் இரண்டாவது நாவல்தாகநதிகணவன் மனைவிக்கிடையேயான பாகுபாடுகளையும் யாரேனும் ஒருவர் அனுசரித்து சென்று கொண்டிருப்பதையும் பற்றி இறுதி வரை பேசுகிறது.

வழக்கமாக மனைவியாக வாழ வந்த பெண் தான் கணவனை அனுசரித்து செல்வதை கண்கூடாக நாம் கண்டிருக்கிறோம். அவைகளே கதைகளாகவும் புத்தகங்களில் நிறைய வாசித்திருக்கிறோம். பெண் விடுதலை பேசும் நாவல்கள் பல வேண்டுமென்றே திணிக்கப்பட்ட வசனங்களையும், கோப தாபங்களையும் காட்டுவதான புத்தகங்களையும் நிறைய வாசித்து சோர்ந்துமிருக்கிறோம்.

தாகநதியின் நாயகன் வசந்தன் விவசாயத்தின் மீது ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவன். அவனுக்கு மனைவியாக வந்த வெண்ணிலாவுக்கு திருமணத்திற்கும் முன்பாக கோட்டு சாட்டையணிந்த, பெறும் பொறுப்பில் இருக்கும் கனவான் ஒருவர் தனக்கு கணவராக வந்தால் வாழ்க்கை இன்புற்றிருக்குமென ஆசை கொண்டவள். இங்கு எல்லோருக்குமே அப்படித்தான் ஆசை இருக்கிறது. சொந்த பந்தங்களின் எடுத்துரைத்தலுக்கு பின்பாக வசந்தனுக்கு மனைவியாகிறாள்.

திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியில் அமரும் வெண்ணிலா தனக்குரிய முழு சுதந்திரத்தை பெற்று விட்டதாக உணர்ந்து கம்பெனியில் முழுமூச்சாக உழைப்பை சிந்துகிறாள். கம்பெனியில் அவளுக்கு தோழியாக ரம்யா பழகுகிறாள். ரம்யா காதலித்து மணம் முடித்தவள். அவளது கணவன் ஒரு குடிகாரன். அதுபற்றியெல்லாம் மற்ற பெண்களைப் போல அவள் கம்பெணியில் புலம்புவதில்லை. மேனேஜராக அற்புதராஜ் என்பவன் தலைமுடியை நீவிக் கொண்டு மடிப்பு கலையாத உடையணிந்து இவர்களிடம் பழகுகிறான்.

இப்படி சொல்லிக் கொண்டே சென்றால் முழுக்கதையையும் இங்கே நான் சொல்லி விடுவேன் போலுள்ளது. திருப்பூர் இன்று ஒரு குட்டி ஜப்பான். விரைவான வாழ்க்கை வாழப் பழகிய மனிதர்கள் தான் இங்கு உள்ளனர். சோம்பேறிகளுக்கு இந்த ஊரில் இடமில்லை. திருப்பூரில் புழக்காட்டத்தில் இருக்கும் பணம் இதே ஊருக்குள் தான் புழங்கிக் கொண்டேயிருக்கும்அதிவேக வளர்ச்சியில் இருக்கும் நகரம் தினமும் அதிவேக பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது. பெண்கள் இங்கு வெகு சுலபமாக ஏமாற்றமடைவதை போல ஆண்களும் அவர்களுக்கு நிகராக ஏமாற்றமடைந்து கொண்டே தான் வாழ்க்கையை ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவன் தன் மனைவியை நகரத்தில் பறிகொடுக்கும் சமயத்தில் ஒருத்தி தன் கணவனை பறிகொடுத்து பரிதவிக்கிறாள். ஒரு கம்பெனியை நட்டத்தில் இழுத்துச் சாத்திக் கொண்டு ஊரை விட்டு ஒரு முதலாளி கிளம்பும் சமயத்தில் இன்னொரு முதலாளி புதிதாக கம்பெனி ஆரம்பிக்கிறார்.

வாழ்க்கையை சகித்துக் கொள்ள முடியாத வெளியூர் ஆட்கள் ஒன்று மருந்து குடித்துச் சாகிறார்கள் அல்லது குடித்து அழிகிறார்கள். கொஞ்சமாய் கிராமிய வாசனை வீசுமிடத்திலிருந்து பணிக்கு வரும் பெண்கள் கூட நகர வாழ்க்கை ஆடவர் மீது மையல் கொள்கிறார்கள். அவர்களின் ஏமாற்றுத்தனங்களுக்கு சீக்கிரமாய் பலியாகிறார்கள். இந்த நாவலில் வரும் வெண்ணிலா அற்புதராஜின் சோக நடிப்பால் பணத்தையும், மோதிரத்தையும் இழக்கிறாள். (நாவலாசிரியர் மோதிரத்தை அவள் இழக்கவில்லை என்பதற்காக ஒட்டாத ஒரு விசயத்தை கடைசியில் வைத்திருக்கிறார். அது படிப்போருக்கு ஹப்பாடா! என்ற நிம்மதியை தருமாவெனத் தெரியவில்லை)

வாழ்வை சரியாக வாழாமலே இப்படி ஓட்டமாய் ஓடும் வாழ்க்கையில் நுழைந்து கொண்ட வெண்ணிலா பதவி உயர்வுகள் பெற்று முதலாளியின் பாராட்டுகளையும் பெறுகிறாள். சரி இவர்களின் வாழ்க்கையை சரிசெய்வது தான் யார்? அவர்களுக்கு என்ன தேவை இருக்கிறது இவர்களின் வாழ்க்கையை சரி செய்ய?

உறவுகளின் தேவையை நாகரிக வாழ்வு இழந்து கொண்டிருக்கும் காலத்தில் வந்த மிகச் சிறந்த சிருஷ்டியாக இந்த நாவலை பார்க்கலாம் நாம். கிராமங்கள் பல நகர்மயம் ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் அது தன் நிலத்தையும் நீரையும் இழப்பதை போல உறவுகளையும் இழந்து கொண்டிருப்பது வேதனை தான். கோர்ட்டில் நின்றிருக்க வேண்டிய பிரச்சனையை ஒரு சாதாரண உறவு சரிப்படுத்துகிறது! அது நாவலில் அழுத்தமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

ரத்தினமூர்த்திக்கு எனது வாழ்த்துக்கள்! இவரது முந்தைய நாவலான, ஆவாரங்காடு அப்படமான கிராமிய வாழ்க்கையை, அதன் மனிதர்களை நம் கண்முன் காட்டியது என்றால் இந்த நாவல் திருப்பூர் நகர வாழ்க்கையினை ஓரளவு சொல்வதில் வெற்றியடைகிறது. காலம் படைப்பாளிகளை கண்டுணர வேண்டும் சில சொற்சிக்கனங்கள் இருந்தாலும்!

தாகநதி -நாவல், ரத்தினமூர்த்தி. விலை -200. அலைபேச : 99444 22111, 93442 01063.

000

Post Comment

வெள்ளி, பிப்ரவரி 19, 2016

ஜெயமோகனின் பனிமனிதன்

இயல்பாகவே எனக்கு இந்த மகத்தான, சிறப்பான, முதன்மையான என்கிற வார்த்தைகள் பிடிக்காது. ஏதாவது ஒரு புதிய நகரில், ‘அங்க போயி சாப்பாடு சாப்பிடுங்க, ரொம்ப நல்லா இருக்கும்’ என்று தாட்டி விடுவார்கள். நம்பிப்போய்  சாப்பிட்டு விட்டு பத்து நிமிடத்தில் நெஞ்சு எரிச்சல் வருதே! என்று தடவுவது நடந்து விடும். அதற்கு அப்போதைக்கான தீர்வு டைஜினாக இருக்கலாம். எப்போதைக்குமான தீர்வாக டைஜின் இருக்காது.

நான் இந்த பனிமனிதனை தினமணிக்கதிரில் தொடராக வந்த போது, இயல்பில் சிறுவர் கதைகள் என்றால் ஆர்வமாய் வாசிக்கும் எனக்கு ஒன்றிரண்டு தினமணிக்கதிர் கிட்டியதால் வாசித்துப் பார்த்தேன். அதுவும் ஜெயமோகன் என்கிற பெயருக்காக! முன்பாக ரப்பரும், கணையாழியில் வெளிவந்த பார்த்தீனியம் குறுநாவலும் அவர் மீது ஒரு கவனிப்பை உருவாக்கியிருந்த சமயம். அப்புறம் அவை வரிசையாகவும் சிக்கவில்லை. ரெம்ப காலம் கழித்து புத்தகமாக வந்த போது கூட கைக்கு சிக்கவில்லை. வார்த்தை இதழ் வெளியிட்ட புத்தகமும் கைக்கு சிக்கவில்லை. இந்தமுறை கண்காட்சியில் பார்வைக்கு சிக்கியதும் தூக்கியது தான். நேற்றிரவு வாசித்து முடித்து விட்டு சாய்கையில் மணி பதினொன்றாகி விட்டது.  இப்போது தான் மகத்தான என்கிற வார்த்தையை பார்க்கிறேன்.

சிறுவர்களுக்கான கதையாக அதன் பாதையில் சின்னச் சின்ன தகவல் குறிப்புகளுடன் சொல்லப்பட்ட கதை பின்பாக பெரிய குழந்தைகளுக்காகவும் பயணப்படுகிறது. இந்த வகையான நாவல்களை எழுதுகையில் கையில் எகப்பட்ட தகவல் குறிப்புகளை வைத்துத்தான் எழுதவேண்டுமோ? என்கிற பயம் என்னிடம் முன்பிருந்தே இருக்கிறது. எனெனில் நாவல் முழுக்க ஏகப்பட்ட அறிவியல் மற்றும் தத்துவத் தகவல்கள். போக புத்தமத நம்பிக்கைகள் என்று நிரம்பி வழிகிறது.

பனி மலைகள் சூழ்ந்த பகுதியில் மூவர் நடந்து பயணிக்கையில் அவர்கள் உடல் அனுபவிக்கும் குளிரை வாச்கனும் அனுபவிக்க வேண்டும். நிச்சயம் படிக்கையில் எனக்கும் குளிரெடுத்து விட்டது.

அவதார் படத்தில் தான் விதவிதமான வடிவங்களில் பரிணாம வளர்ச்சி பெறாத விலங்குகள் காட்டப்பட்டிருந்தன. நாவலின் கடைசிப் பகுதிகள் வாசிக்கையில் அவதாரே இந்த நாவலை வாசித்து தான் திரித்து பண்ணினார்களோ? என்றே தோன்றியது. போக ஜுராசிக் பார்க்குக்குள் சென்ற மாதிரியும். ஜெயமோகனிடம் கையிலிருப்பது இயல்பான தெளிந்த நீரோட்டமான நடை.  கொஞ்சம் அங்கங்கே மனித இனம் அழிவை நெருங்கும் சமயம் நெருங்கி வருகிறதென்ற பயமும் கூடவே சேர்ந்து கொள்வது தவிர்க்கவே முடியவில்லை.

தனிப்பட்ட முறையில் மனிதர்களுக்கு கருணை உண்டு. ஆனால், மனித இனத்துக்கு கருணையே இல்லை. ஏனெனில் மனிதனின் வாழ்க்கை முறை அப்படிப்பட்டது. இயற்கையை அழித்துத்தான் அவனால் வாழ முடியும். அவன் அப்படியே பழகி விட்டான்.

பனிமனிதன் - ஜெயமோகன். விலை -200. நற்றிணை பதிப்பகம்.

000

Post Comment

ராஜேந்திரசோழன் கதைகள் -ஒரு பார்வை

சிறுகதைகள் எழுதத் துவங்கி விட்டவர்கள் கூட வாசித்தாக வேண்டிய படைப்பாளி அஸ்வகோஷ். எந்த விதமான இட்டுக்கட்டுதல்களும், பயங்காட்டும் வேலைகளும் இவரது சிறுகதைகளில் கிடையாது. நேரடியான மண்ணின் எழுத்து. எல்லாமே வாழ்க்கையிலிருந்து உருவி வெளியில் எடுக்கப்பட்டவைகள். போக கிராமிய வாழ்வு அப்படியே அசலாக எழுத்தில் பதிந்திருக்கும். பேச்சு வழக்குகள் கூட அப்படியே! இயல்பாக அமைந்து கொண்டிருந்த கதைகளில் இதழ்கள் கேட்கின்றனவே என்பதற்காக வலிந்து (அது தெரியாத மாதிரி) சில கொள்கைகளை, எதிர்ப்புகளை சிறுகதைகளுக்குள் நுழைத்திருக்கிறார்.

70 களில் சுரண்டல்கள், முதலாளித்துவம், பூர்ஷ்வா, சிவப்பு என்று இருக்கையில் நல்லவேளை நான் குயந்தையாக கிடந்தேன். பின்பாக 80களின் இறுதியில் தான் வாசிப்பு பக்கம் நகர்ந்தேன். முதலாக இவரது எட்டு கதைகள், பறிமுதல், தற்செயல் என்கிற தொகுப்புகளை அச்சமயம் ஒன்றாக வாசித்தேன். (என் அப்பாவுக்கு ஒரு பயக்க வயக்கம் இருந்திருக்கிறது.. அசோகமித்தரனை கொடுத்தால் ஒரே முட்டாக அவர் புத்தகங்கள் மட்டும் தான். நல்லவேளை ஜெயக்காந்தனை அவர் வாங்கி வீட்டில் அடுக்கவே இல்லை! !) பிறகு நடுகல் 91-ல் திருப்பூரில் ஆரம்பித்த சமயம் நண்பர்கள் மத்தியில் புற்றில் உறையும் பாம்புகள், தனபாக்கியத்தோட ரவ நேரம் சிறுகதைகள் பல காலம் சிலாகிக்கப்பட்டது.

போக இந்த தொகுப்புகள் எல்லாவற்றையும் என் நண்பர்கள் வாசிக்க எடுத்துப் போய் போயே விட்டது. பல புதிய ஆச்சரியம் கொள்ளும் வகையான கதைகளை இந்த புதிய ஒட்டுமொத்த தொகுதி வாயிலாக வாசித்து முடித்தேன். தோழர் என்று ஆரம்பிக்கும் கதைகள் சில பின்பகுதியில் இருக்கின்றன. அவைகள் எனக்கு அலர்ஜிமுன்பாக எழுதும் காலத்தில் வாழ்க்கையை பல சிறுகதைகளில் நானும் எழுதினேன் என்றால் இவரை வாசித்ததால் தான்.

இவரது திருவாளர் பரதேசியார் பண்டித புராணம் என்கிற நாவல் அது வெளிவந்த சமயம் வாங்கி .. யாருக்கேனும் ஓசி கொடுத்தால் ஒருவேளை திட்டுவார்களோ என்று பொட்டிக்குள் இன்னமும் மறைந்தே கிடப்பது உறுத்தல் தான். ஆக நல்ல சிறுகதையாசிரியர் நாவல் எழுதினால் தோற்று விடுவார். நல்ல நாவலாசிரியர் சிறுகதை எழுதினால் தோற்று விடுவாரென முன்பாக பலர் சொல்லுவார்கள். அது இப்படித்தான் வந்திருக்குமோ?

(நல்ல கதை வாசிப்பாளர்களிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும்.. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். ஒரு கிராமத்தில் பொங்கல் சமயம் அங்கேயே களி மண்ணெடுத்து அச்சு போட்டு பொங்கல் பானைகள் செய்து விற்பனை செய்ய ஒரு குடும்பம் ஊரின் ஒதுக்குபுறத்தில் வந்து தங்கி பானைகள் செய்கிறது. வருடம் தவறாமல் வரும் குடும்பம் தான் அது. அந்த வருடம் ஊரார் அவர்களிடம் பானைகள் வாங்க வருகையில்.. அடுக்கி அழகாய் வைக்கப்பட்டிருக்கும் பானைகளை செய்த குடும்பமே எட்டி உதைத்து உடைத்து விட்டு செல்லும். - இது ராஜேந்திரசோழன் தான் எழுதினார் என்று இது நாள் வரை நம்பிக்கொண்டிருந்தேன்.. யாராய் இருக்கும்?)


ராஜேந்திரசோழன் கதைகள் -தமிழினி- விலை 790.

Post Comment

புதன், பிப்ரவரி 17, 2016

முகநூல் பதிவுகள் -2


சும்மாநாச்சிக்கிம் என்னியவே வெச்ச கண்ணு மாறாம அப்பிடி பாக்காதீங்க! நானு ஊட்டுக்கு ஓடிருவேன்!

000

நீங்கொ சொல்லுங் மாமா! இந்த பன்னாடையக் கட்டுன காலத்துல இருந்து ஒரே பேரெழவா இருக்கு! இவுனுதும் இவனோடதும் கெடக்கட்டும்னு காத்தாலிக்கி கெளம்பி சிபோர் பஸ்ஸுல வந்துடறேன்! .. மாமா படக்குனு இது வழியா ஒன்னு குடேன்!

000

ஆளையும் பாரு அவனையும் பாரு! இவன் காத்தால புட்டுரு பைக்க எடுத்துட்டு செட்டிபாளையத்துக்கு வருவானாம்! இவனை ஊட்டுல ஏமாத்திட்டு ஓடி, ... வருவானான்னு பாத்து ரவ் பண்டணுமாம்! அழகா இருக்கீனு சொன்னா நாங்க சொக்கிடுவமாம்! நீ அழகாத்தாண்டா இருக்கே! மூஞ்சியப் பேத்துருவேன் பாத்துக்க! தொ.... கொடுக்கா!

000

-தேம்புள்ளே! உன்னையத்தா கட்டிக் கொடுத்து கொளப்பளூர் தாட்டி உட்டுட்டோமுல்லொ! வந்தா ஊட்டுக்காரனோட சோடி போட்டுட்டு வரோணுமுல்லொ? இப்புடி பையத் தூக்கீட்டு ஒத்தையா வர்றியே என்ன சமாச்சாரம்?
-அங்க தெனமும் தண்ணி வாக்கச் சொல்றாங்க! சுத்தபத்தமா இருக்கணுமாம்! ஆவாதுன்னு போட்டு கெளம்பிட்டேன்!
-இதென்ன அலும்பா இருக்குது? ஆடிக்கொருக்கா அம்மாவாசைக்கொருக்கா தண்ணி வாத்தா பத்தாதாமா? நம்மூருக்கு அது ஆவாதே! ஊருப்பேரே கெட்டுப் போயிடும்!
-அதாண்ணே ஊரு பேரை காப்பாத்த கெளம்பி வந்திட்டேன்! போங்கடானுட்டு!

000

ஆமாக்கோவ்! பள்ளிக்கோடம் இன்னிக்கி ரீவு! எங்கம்மாவு இன்னிக்கி காட்டு வேலைக்கி போமாண்டன்னு ஊட்டுல குக்கீட்டு வெங்காயம் மொளவா தொழிச்சுட்டு இருக்குது! வடை சுட்டுத்தருதாமா! நான் ஊட்டெ உட்டு போறேன்!

000

Post Comment

முகநூல் பதிவுகள்


-கோமு! உங்கிட்ட துப்பறியும் பொஸ்தவம் இருக்கா? அன்னிக்கி ஊட்டுல லைப்ரேரிமாரி அடுக்கி வெச்சிருந்தியே?

-அதிசீமா இருக்கு உங்குளுக்கு எதுக்கு பொஸ்தகம்? 


-உம்பொட பொஸ்தகமெல்லாம் வேண்டாண்ட பையா. எனக்கு ராஜேஷ்குமார், தமிழ்வாணன் எழுதினதா வேணும். எம்பட செருப்பை மூனு நாளா காணம்டா பையா! பொஸ்தகம் படிச்சு அதுல துப்பறிஞ்சு கண்டு புடிக்கிற மாதிரி நான் எம்பட செருப்பை கண்டு புடிக்கோணும்!

000

ஏஞ் சாமிகளா? இந்த விசுக்கா மூனாவதுன்னு ஒன்னு கெளம்பிடுச்சாமா? நிவிஸ்ல சொன்னாங்க! எம்பட ரவ்வர் ..அதாஞ்சாமி.. அந்த நம்பியார் எப்ப பாத்தாலும் எம்பட ஆளோட சண்டைக்கே நிப்பாரே.. எம்பட ஆளு எதுல நிக்காரு? போச்சாது போங்க! இந்தவாட்டியாவுது.. தூக்கிட்டு போயி நீங்க குத்தச் சொன்ன சின்னத்துல குத்த வுடாம.. என்னைய தனியா வுட்டு குத்த வெய்யிங்க சாமிகளா! மவராசனா பொழையுங்க!

000

இப்பிடிக்கூட என்னை ஏமாத்துவீங்களா? அடப் பன்னிகளா!


000

இப்ப சடுதிக்கிக்கி.. ரெண்டு நா மிந்தி.. ரவ்வர்ஸ் டேவாமே! ரவ் எனக்கும் வந்திதுடிச்சி! எங்காளு எடுத்த கவுருச்சி போட்டா தாம்ல!

000

மாமோவ்! சூப்பரா எடுக்கோணும் போட்டா! இல்லீன்னு வெச்சுக்கோ.. உங்கொத்தை உனக்கு என்னை கட்டிக் குடுக்க மாட்டா!

000


எம்பட மருமவன் நாளைக்கி வர்றாப்பிலில்லீங்கொ! கோழி அடிச்சி சாறு காச்சோணும்! ஒருத்தி என்னுங்கொ பண்டுவேன் நானு? அதான் காத்தாலிக்கி அவிகளுக்கு புட்டுமா செஞ்சு போடலாம்னு ஆட்டீட்டு இருக்கேனுங்கொ!
000

Post Comment

வியாழன், பிப்ரவரி 04, 2016

அஞ்சல் நிலையம் -ஒரு பார்வை

வாசகர்களோடு சற்றேனும் சமரசம் கொண்டிராத எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் சார்லஸ் புக்கோவ்ஸ்கி என்பதை முன்பாக அவரது கவிதைகள் வாயிலாக (சிற்றிதழ்களிலும், இணையத்திலும்) அறிந்திருந்தேன். யார் இந்த புக்கோவ்ஸ்கி? என்று ஆங்கிலத்தில் தட்டி கூகிளில் தேடிப்பார்க்கும் வேலையெல்லாம் என்னிடம் கிடையாது. அவர் ஒரு கவிஞர் என்கிற அளவில் மட்டுமே முன்பாக அறிந்திருந்தேன். அவரது கவிதைகளில் கேலிகளும் கிண்டல்களும் நகையாடல்களும் நிரம்ப இருக்கும். புன்னகைத்துச் செல்லவாவது அவ்வப்போது வாசிப்பேன்.

அதே போன்று ’அஞ்சல் நிலையம்’ நாவலை மொழிபெயர்த்த பாலகுமார் விஜயராமனும் சமரசம், பூசி மெழுகுதல் ஏதுமின்றி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சில எழுத்துக்களை, காப்பாற்றுவதாக எண்ணி தமிழில் பூச்சுப் பூசி  காட்டினால்  நாவலின் தன்மையே கூட மாறிவிடும் அபாயம் நேர்ந்து விடும். (இரண்டு வருடம் முன்பாக ஆங்கிலத்தில் குறைந்த பக்கத்தில் சின்ன நாவலாக இருந்த ஒரு புத்தகம் தமிழில் 400 ரூபாய்க்கு தலையணை சைசில் எப்படி வந்தது? என்று ஆச்சரியமாக இன்னமும் விழித்துக் கொண்டு 100 பக்கங்களை தாண்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.)

கின்னஸ்கி தான் வாழும் வாழ்க்கை முறைகளை அவரே சொல்வது போல நாவல் ஆரம்பமாகிறது. அஞ்சலக தபால்களை தற்காலிகப்பணியாக பட்டுவாடா செய்யத்துவங்கும்  கின்னஸ்கி முதல் அத்தியாயத்திலேயே பருத்த பெண்ணின் உடலை வர்ணித்து, மூன்று நான்கு நாட்கள் இரவுகளில் படுக்கையில் சந்தித்து... பின்பாக மற்ற பெண்களைப் போலவே அவள் மீதான நாட்டம் குறைந்து, அவளிடம் செல்லவில்லை என்று துவங்குகிறார்.

என்னாடா இது?! ஆரம்பமே அபாரமா இருக்கே? என்றும், கீழே வேற வைக்க முடியாது போலிருக்கே! என்றும் முடிக்க வேண்டியாகி விட்டது. நாவல் அவ்வளவு வேகம். போக இடங்களும் பெயர்களும் தான் அமெரிக்க கதை ஞாபகத்தை தந்ததே தவிர விசயமெல்லாம் உலகத்திற்கேயுண்டான  ’அந்த பதினொரு நிமிட ’ வேலைப்பாடுகள் தான்.  தமிழில் வந்த நேரடியான நாவலைப் படிப்பது போன்றே இருந்ததை மறுப்பதற்கில்லை.

’மேடம், இவை தான் உங்களுக்கு வந்திருப்பவை’

‘சீட்டுகள், சீட்டுகள், சீட்டுகள்! இந்த சீட்டுகளைத்தான் உன்னால் கொண்டு வர முடிந்ததா?’

அவர்கள் தொலைபேசி, கெஸ், ஆடம்பர விளக்குகள் என்று அனைத்தையும் கடனுக்கு வாங்கி அனுபவிப்பது என் குற்றமா என்ன? பிறகு தவணைக்கான சீட்டு வரும் போது, ஏதோ நான் தான் அவர்களை தொலைபேசியும், 350 டாலர் தொலைக்காட்சியும் வாங்கி உபயோகிக்கச் சொன்னது போல, என் மீது எரிந்து விழுந்தால் என்ன செய்ய?

 தற்காலிக பணியிலிருக்கும் அஞ்சல் பட்டுவாடா பணியாளரான கின்னஸ்கி அந்தப் பணியின் போது படும் சிரமங்களாக, மழை, நாய்கள், பெண்கள் என்று பலவற்றை சொல்கிறார்.

‘சனியனே, நான் சம்பாதிக்கும் போது நீ வீட்டில் படுத்துக் கிடக்கவில்லையா?’

‘அது வேறு. நீ ஆண்மகன், நான் பெண்.’

‘ஓ, அது தெரியாமல் போய் விட்டது வேசிகளே, நீங்கள் தானே எப்போதும் சம உரிமை கேட்டு கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பீர்கள்?’  (போகிற போக்கில் அடித்து விடுவது என்று இந்த நாவலில் பல! குறிப்பாக கறுப்பர் இனம், தூதன், சிலுவை, நாய்க்குட்டிக்கு பிக்காஸோ என்று பெயரிடுவது  என்று)

‘நான் நல்லவனாகத்தான் இருக்கிறேன். இந்த கருமம் பிடித்த அஞ்சல் அலுவலகம் தான்...’ - எல்லோருக்கும் செய்கின்ற தொழில் மீதான சலிப்பும் வெறுப்பும் ஏனோ கொஞ்சம் காலம் கடந்து தோன்றத்தான் செய்யும். அது வார்த்தைகளில் எங்கேனும் நண்பர்கள் மத்தியிலோ, வேறெங்கோ வெளிப்பட்டுக் கொண்டே தான் இருக்கும். கின்னஸ்கியும் அதிலிருந்து தப்பிக்கவில்லை.

நான் சில்லறைத் திருடனெல்லாம் இல்லை. ஒன்று உலகமே வேண்டும் அல்லது ஒன்றுமே வேண்டாம். அவ்வளவுதான். இந்த வார்த்தைகளை சார்லஸ் புக்கோவ்ஸ்கியே சொன்னதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

(குறிப்பு : அரசுத்துறையின் சட்டதிட்டங்களுக்குள் வளைந்து கொடுக்க முடியாத, இயல்பு வாழ்க்கைக்குள் சிக்கிக் கொள்ள விரும்பாத, சூதாட்டம், பெண்பித்து, குடி ஆகியனவற்றை கொண்டாடும் ஓர் எதிர்நாயகனின் வாழ்க்கை இந்த நாவல்- பாலகுமார் விஜயராமன்)

-எதிர் வெளியீடு - விலை - 200. புத்தகம் வேண்டுவோர் : 9942511302.

000

Post Comment

புதன், பிப்ரவரி 03, 2016

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் -ஒரு பார்வை

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜப்பானிய எழுத்தாளர் யுகியோ மிஷிமாவின் நாவல் அவரது சுயசரிதையாகவும் கொள்ளலாமென பின் அட்டைக் குறிப்பு சொல்கிறது. அட்டைக் குறிப்பு, முன்னுரை, என்பனவற்றை நாவல் வாசித்து முடித்த பிறகு என்ன? ஏது? எனப்பார்க்கும் வழக்கம் சமீப காலங்களில் என்னைத் தொற்றிக்கொண்டு விட்டது. மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மீது எனக்கு எப்போதிருந்து  பித்துப் பிடித்திருக்குமென சரியாய் யூகித்து சொல்லமுடியவில்லை.

ஆனால் நாவலின் முதல் அத்தியாயத்திலேயே டோக்கியோவில் வாடகை வீட்டில் தன் பிறப்பின் போதே பார்த்த சம்பவங்கள் நினைவில் இருப்பதாக நாவலில் சிறுவன் பெரியவர்களிடம் உரையாடுகிறான். முதன்முதலாக நீராடிய நீர்த்தொட்டியின் ஞாபகம் கூட இருப்பதாய்.

ஜனவரி 4, 1925 காலையில் என் அம்மா பிரசவ வலியால் தாக்கப்பட்டாள். அன்று மாலை ஒன்பது மணிக்கு ஐந்து பவுண்டுகள் மற்றும் ஆறு அவுன்ஸ்கள் எடையிருந்த சிறிய குழந்தையை அவள் ஈன்றெடுத்தாள்.

தன்னைப்பற்றி பேசிக் கொண்டே, சில தத்துவ விசாரங்களுக்குள்ளும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் சில நாவல்களை முன்பாக வாசித்திருக்கிறேன். இந்த நாவல் முழுக்க முழுக்க தன்னைப் பற்றியே கூறிக்கொண்டிருக்கும், யோசித்துக் கொண்டிருக்கும் நபர், தன்விளக்கங்களை சொல்லிக் கொண்டே செல்லும் புத்தகம். ஒருவர் தன் குழந்தைப்பருவ ஞபகங்களை இந்த அளவுக்கு ஞாபகத்தில் வைத்திருக்க இயலுமா? என்ற கேள்வியும் என்னிடம் இருக்கிறது. அம்மாவின் பீரோவிலிருந்து துணியை உருவி இழுத்து, கண்ணாடி முன்பாக நின்று தென்கட்சுவாக தன்னை மாற்றிக் கொண்டு விட்டதாக நினைப்பது, போக அடுத்ததாக கிளியோபட்ரா வசீகரிப்பது.

மற்றொருபுறம், நானே போர்க்களத்தில் மடிந்து போகும் அல்லது கொல்லப்படும் சூழல்களை கற்பனை செய்வதில் மகிழ்ச்சி கொண்டிருந்தேன். போர்ச்சூழலில் இருக்கும் தேசத்தில் குழந்தைகளின் விளையாட்டுகள் கூட மறைந்திருந்து துப்பாக்கிகளை  வாய் ஒலிகளோடு இயக்குவதாயும், சுடப்பட்டவர் வீழ்ந்து மடிவதாயுமே இருக்கின்றன. தொடர்ந்து பள்ளி வாழ்க்கையும் நண்பர்களைப் பற்றியும் விவரித்துச் செல்கிறது நாவல்.

‘உனக்கு 20 வயதாகுமுன்பே நீ செத்துப்போவாய்’ என்னுடைய பலவீனமான தேகத்தைக் காட்டி நண்பனொருவன் என்னிடம் விளையாட்டாகச் சொன்னான். ‘சொல்வதற்கு எத்தனை பயங்கரமான விசயம்!’ கசப்பான புன்னகைக்குள் எனது முகத்தை துளைத்து நிறுத்தி, நான் பதிலளித்தேன். ஆனால் உண்மையில் அவனுடைய ஊகத்தின் மீது வினோதமாக நான் இனிமையான மற்றும் கற்பனையான ஈர்ப்பினைக் கொண்டிருந்தேன்.

நாவலின் பின்பகுதி வாலிபக்காலத்தை பேசுகிறது. விபச்சாரியிடம் தோற்றுப்போவது கூறப்படுகிறது. சொனோகோவுடனான ஈர்ப்பு புது விதமாய் . காதலா? என்று சந்தேகிக்கும் வகையில் சொல்லப்படுகிறது. அந்த பகுதிகளில் நான் வேறு விதமான காதலை நுகர்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை வாசிக்கையில் உணர்ந்தேன். விசயங்களில் இருந்து தப்பித்தலும் சிக்குதலும் பைத்திய நிலைதான். சொனோகோ வேறு நபரின் மனைவியான பிறகும் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள் நண்பர்களாக! ஆனால் அது எதெற்கென இருவருக்குமே புரிபடுவதில்லை.

பின்பகுதிகளில் இந்த நாவல் என்னை ஏன் ஈர்த்தது என்பதற்கான காரணங்களை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். மேசையின் மேற்பகுதியில் சிதறிக்கிடந்த ஏதோவொரு மதுபானம் பிரகாசமான, அச்சந்தரும் பிரதிபலிப்புகளை வீசிக் கொண்டிருக்கிறது.

நண்பர் கார்த்திகைப் பாண்டியனின் மொழிபெயர்ப்பு உழைப்பு நாவலின் இரண்டவது அத்தியாயத்திலிருந்து சரளமாய் வேகமெடுத்திருக்கிறது!  புத்தகத்தின் பின் அட்டையில், பிறழ்ந்த காமத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் இளைஞனின் பார்வையினூடாக வாழ்வின் அபத்தத்தையும், மரணத்தின் அற்புதங்களையும் பேசுவதாக சொல்கிறது. வாக்குமூலங்களும் சுயசரிதைகளும் உண்மைகளை சொல்கின்றனவா? என்கிற சந்தேகங்களை  முன்பாக தமிழில் ஏற்படுத்தி விட்டார்கள். ஆனால் இவற்றை சொல்வதற்கும் ஒரு தனித்த தைரியமும் வேண்டும். இதனால் இந்த நாவலின் உண்மைத் தன்மை காப்பாற்றப்பட்டு விட்டது.

எதிர் வெளியீடு- விலை-250. ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்- ஆங்கிலத்தில் -மெடித் வெதர்பை. தமிழில்- கார்த்திகைப் பாண்டியன். - புத்தகம் வேண்டுவோர் தொலைபேச : 9942511302

000

Post Comment

செவ்வாய், பிப்ரவரி 02, 2016

அஸிஸ் பே சம்பவம்- ஒரு பார்வை


அய்ஃப்ர் டுன்ஷ் துருக்கி இலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர் என்று குறிப்பு சொல்கிறது. 2 நாவல்கள், 5 சிறுகதைகள், 2 வாழ்க்கை குறிப்பு, ஓர் ஆய்வு என்று குறைவான படைப்புகள் எழுதியுள்ளவரின் அஸீஸ் பே சம்பவம் ஒரு குறுநாவல் வடிவில் இருக்கிறது.

தான்தோன்றியாக நிலையில்லா வேலைகளை செய்தும், மதுவிடுதிகளுக்கு சென்று வருவதுமாக பெற்றோரின் வெறுப்புக்கு ஆளான அஸீஸ் பே- வின் முழு வாழ்க்கையை வழுக்கிச் செல்லும் தமிழ் மொழிபெயர்ப்பில் (சுகுமாரன்) வாசிக்க அவ்வளவு சுவையாக இருந்தது என்பதை முதலாகவே சொல்லிக் கொள்கிறேன்.

வயது முதிர்ந்த, மனைவியை இழந்த, காய்ச்சலால் கிடந்து மீண்டெழுந்த அஸீஸ் பே தம்புரா வாசித்து பாடல்களை பாடுவதற்காக மது  ஸேகியின் மது விடுதிக்குச் சென்று அவனால் அடிபட்டு துக்ககரமாக தன் இல்லம் திரும்புவதில் ஆரம்பிக்கிறது குறுநாவல். போக அஸிஸ் பே தன் வீட்டிற்குத் திரும்பிய பின் அன்றைய மழை இரவில் அந்த தெருவாசிகள் அவனை இழக்கிறார்கள்.

துக்க சம்பவத்துடன் தொடங்கும் கதை பின்பாக அஸிஸ் பே சிறுவனாக இருந்த காலத்தை சொல்வதில் துவங்குகிறது. தம்புரா கலைஞனாவதற்கு எந்த அம்சத்தையும் கொண்டிராதா சிறுவன் அஸிஸ் பே தாத்தாவின் தம்புராவை எடுத்து அப்பா இல்லாத சமயங்களில் அதன் வில்லை தேய்த்துப் பழகுகிறான். அம்மா அவ்வப்போது அதனால் கடிந்து கொள்கிறார். அப்பாவுக்கு விசயம் தெரியாமல் மறைக்கிறார். அஸீஸ் பேயின் அப்பா கடுகடுப்பை முகத்தில் எந்த நேரமும் தேக்கி வைத்திருப்பவர். அப்பாவுக்கும் மகனுக்கும் சாதகமான சூழல் என்று நாவலில் எந்த இடத்திலும் வரவில்லை. வேலைக்கு சென்று கொண்டிருக்கும் காலங்களில் வழியில் மரியத்தின் கருவிழிகளில் விழுந்து நிலைகுலைகிறான் அஸீஸ்.

அந்த ஆழமான கண்களின் காதலில் அவன் விழாமல் இருந்திருந்தால் வாழ்க்கை வேறு விதமாகக்கூட அமைந்திருக்கும். ஆனால் அந்தக் காதல் பிழையாகிப் போகிறது. அலுவலகத்திற்கு கிளம்பிச் செல்லும் ஒரு நாளில் மரியத்தின் குடும்பம் வீட்டை காலி செய்து வண்டியில் எற்றிக் கொண்டிருக்கிறது பொருட்களை. மறைந்திருந்து கண்களில் நீருடம் அஸீஸ் அந்நிகழ்வை கவனிக்கிறான்.  அது அஸீஸ் பேயின் வாழ்க்கையில் நிகழ்ந்த முதலாவது பேரவலம். மரியம் பெய்ரூட்டிலிருந்து ஈஸ்தான்பூலில் இருக்கும் அஸீஸுக்கு கடிதம் எழுதுகிறாள். பணிநீக்கம் செய்யப்பட்ட அஸீஸை அப்பா வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறார். பெய்ரூட்டுக்கு கப்பலில் வந்து சேர்கிறான் அஸீஸ்.

ஒரு தங்கும் அறையில் இவனை தங்க வைத்து விட்டு ஒன்றிரண்டு முறை வந்து பார்த்துச் செல்லும் மரியம் பின்பாக இவனை ஒதுக்கி விடுகிறாள். அஸீஸ் தம்புராவின் உதவியால் மொழிபுரியா தேசத்தில் மது விடுதியில் குறிப்பிட்ட காலம் வரை வாசித்து விட்டு ஊர் திரும்புகிறான். அது அவன் காதலைத் தேடிச் சென்ற பயணமாகவும், துக்கரமான வாழ்வியலின் பக்கங்களாகவும் நாவலில் சொல்லப்படுகிறது. பின்பாக அம்மாவின் இறப்பு, அப்பாவின் இறப்பெனவும், மனைவியாக வுஸ்லாத்தையும் அடைகிறான். அப்போது நகரில் பிரபலமான தம்புராக் கலைஞனாக அவன் இருக்கிறான்.

காலமாற்றத்தில் எல்லாமும் சோக வடிவெடுக்கிறது. கடைசியாக ஸேகியின் மதுவிடுதியில் இணைகிறான். வாடிக்கையாளர்கள் மதுவிடுதி நோக்கி வருவதற்கு காரணமே உங்கள் இசைதான்! என்று மதுபோதையில் இருக்கும் அஸீஸுக்கு ஸேகி சொல்கிறான். பின்பாக மனைவியை புளூ காய்ச்சலுக்கு சாகக் கொடுத்து தனியனாகிறார் அஸீஸ்.

நாவல் முடிவை நெருங்கும் சமயம், மது விடுதியில் கூட்டம் குறைவதற்கு எந்த நேரமும் சோக கீதங்களை இசைக்கும் அஸீஸ் தான் காரணம் என்பதை உணர்ந்து அவரை வீட்டிலேயே கிடக்கச் சொல்லிவிட முயற்சிக்கிறான் ஸேகி. இறுதியாக அந்த சம்பவம் மது விடுதியில் ஆரம்ப அத்தியாயத்தில் சொல்லப்பட்ட விதமாக நடந்தேறி விடுகிறது.

பெரும்பாலும் வாழ்வின் முறைமைகளை சற்று ஆழமாகச் சொல்வதில் தான் நாவல்கள் வெற்றி பெறுகின்றன.  சொல்லும் முறைமையில் கூடவும் தான். அந்த சொல்லும் முறைமையில் இது முக்கியமான நாவலாகப் படுகிறது.

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம். விலை : 50.00

000

Post Comment

இப்படிக்கு கண்ணம்மா- நாவல் பார்வை

தஞ்சையிலிருந்து ஐடி கம்பெனிக்கு வேலைக்கு வந்து சேரும் சம்பத் என்கிற வாலிபனின் கதையை முழுமையாகச் சொல்லிச் செல்கிறது நாவல். நாவலில் நண்பர்கள் என்று ஒரே அறையில் தங்கியிருக்கும் சந்துரு, திலக், சேகர், பிரபா என்ற நண்பர்களின் வாழ்வியல் சூழல் ஒவ்வொருவரின் பணிகள் என்று விஸ்தாரமாகச் சொல்ல விழைகிறது நாவல்.

ஆனால் சம்பத் என்கிற கதாபாத்திரம் அவர்களை மிஞ்சி நாவலில் அழுத்தம் அதிகம் கொடுக்கப்பட்டு விவரிக்கப்படுகிறது. போக சலிப்பின்றி நாவல் பின்பகுதியில் தான் சரளமாக செல்கிறது. நாவலாசிரியரின் முதல் நாவல் என்பதால் ஆரம்ப தடுமாற்றம் வாசகனை உள்ளிழுத்துக் கொள்வதில் காலதாமதம் ஆகிறது. நாவல் என்றால் அப்படித்தானப்பா! என்று சொல்வோரும் இங்கு பலருண்டு.

சம்பத் ஆரம்ப அத்தியாயங்களிலேயே விபத்தில் அடிபட்டு மருத்துவமனை கொண்டு சேர்க்கப்படுகிறான். விபத்துகள் சாலையில் நடைபெறுவது இயற்கை சீற்றத்திற்கு ஒப்பானது தான். பின்பாக அவன் வாழ்க்கை முழுதாக விவரிக்கப்படுகிறது. ஐடி கம்பெனியில் அமர்ந்து முகநூலில் கவிதை எழுதுகிறான். டிலோனி டிலக்ஸி என்கிற பெயரில் இலங்கை தமிழ்ப்பெண்உங்கள் கவிதை அட்புதம்என்று உள்பொட்டியில் பேச வருகிறது. பின்பாக இருவரும் கவிதை பரிமாறிக் கொள்வதாகவும். டாய் டேய் என பேசிக் கொள்வதுமாக நாவல் சுறுசுறுப்படைகிறதுடிலோனி டிலக்ஸியின் வீட்டுப் பெயர் கண்ணம்மா! மெதுவாக போனில் பேசிக்கொள்ளும் வரை வருகிறார்கள்.

விபத்தில் சம்பத்துக்கு முதுகுத் தண்டு வடத்தில் முறிவு ஏற்பட்டு நடக்க இயலாதவனாகி விடுகிறான். மருத்துவமனையில் சமபந்தமாக விவரணைகள் பல சொல்லப்படுகின்றன. கண்ணம்மா சம்பத்தை தேடி இலங்கையிலிருந்து வந்து சேர்கிறாள். விபத்திற்கு காரணகர்த்தாவானவர் தன் பெண்ணை சம்பத்தின் வீட்டில் அவரது குற்ற உணர்ச்சிக்காக விட்டு விட்டு செல்ல ஆசை கொள்கிறார். ’அதுக்குத்தான் நான் வந்திருக்கிறன். அந்த இடம் எனக்கு எண்டு அவரிடம் சொல்லி விடுங்கள்கண்ணம்மா சொல்லுமிடத்தில் நாவல் நிறைவு பெற்றதாக நான் நினைக்கிறேன். ஆனால் கதை கதையாக மேலும் தொடர்கிறது.

பெரும்பாலும் தமிழில் முந்தைய காலகட்டம் போலில்லாமல் பல வடிவங்களில் நாவல்கள் சொல்லப்படுகின்றன. நாவல் வாசிப்பாளர்களும் எப்போதையும் விட அதிகம் தமிழில் உள்ளார்கள். நாவலாசிரியர்கள் எடுத்துக் கொள்ளும் களங்களும் புதிது புதிதாக இருக்கிறது. மொழிபெயர்ப்புகளையே சமீப காலங்களில் வாசித்துக் கொண்டிருக்கும் எனக்கு இந்த நாவலை வாசித்தது ஒரு புதிய அனுபவம் தான். நாவலில் சில அத்தியாயங்கள் சிறுகதைகளுக்குண்டான நேர்த்தியுடன் சொல்லப்பட்டிருக்கின்றன. நாவலாசிரியர் லஷ்மி சிவக்குமாருக்கு எனது வாழ்த்துக்கள்!


இப்படிக்கு கண்ணம்மா (நாவல்) விலை 200. பிரதிகள் வேண்டுவோர் பேச : 9994384941

000

Post Comment