முன்பாக ரமேஷ் பிரேதனின்
புத்தகம் ‘அவன்
என்ற சொல்’ தஞ்சை
பதிப்பகம் ஒன்றின் வாயிலாக வந்து கவனமில்லாமல் போனது வாசிப்பாளர்களுக்கு நினைவில் இருக்கலாம். தமிழில் வெளிவந்த முக்கியமான
நாவல்களில் அதுவும் ஒன்று. இரண்டு எழுத்தர்கள் முன்பாக ஜோடி போட்டுக் கொண்டு எழுதுகையிலிருந்து
அவர்களின் தீவிர வாசகன் நான். தமிழில் நான் ஏதேனும் ஆச்சரியங்களையும், கொஞ்சமாய் கற்றுக் கொள்ளல்களையும்
இவர்கள் எழுத்தின் வாயிலாக உணர்ந்திருந்தேன்.
ஒரு ரஜினி படம் எப்படி
ரஜினி ரசிகனுக்கு திருப்தியளிக்குமோ அப்படித் தான் என்றே வைத்துக் கொள்ளலாம். இன்றும் என் ஆச்சரியங்களில்
ஒன்று ’முன்பொரு
காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன’ சிறுகதைக் கொத்து. அடுத்து ’சொல் என்றொரு சொல்’ நாவல். பின்பாக மயானம், கபாலம் என்று பைத்திய எழுத்தில் வந்த சில கவிதைகள்.
அவன் என்ற சொல் நேர்கோட்டில்
சொல்லப்பட்ட கதை என்றால் ஐந்தவித்தானும் வழுக்கிச் செல்லும் நடையில் நேர்கோட்டில் பிரயாணம்
செய்யும் நாவல். தமிழில்
ஏராளமான எழுத்தாளர்கள் தோன்றி அவரவர் தளங்களில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில்
ரமேஷும் தன் இருப்பை இங்கே நிலையுறுத்திக் கொள்ள சற்று சரளமான நடையில் வாசகனுக்கு மாதவனின்
வாழ்க்கைக் கதையைச் சொல்லிச் செல்கிறார்.
மாதவனின் தந்தையார்
ஒரு நாவிதர். உயர்
ஜாதி மனைவி
அவர் கண் பார்க்க அடுத்தவரிடம் சோரம் போகிறவர். திருமண நாளிலேயே வயிற்றில் வாங்கிக் கொண்டு இவரைக்
கட்டிக் கொண்ட மனைவி. முதல் பிள்ளையான மாதவனின் அக்கா மழை நாள் ஒன்றில் செத்துவிடும்
சாவிலிருந்து துவங்குகிறது நாவல். மாதவனின் பார்வையில் விரியும் நாவல் நாம் ஏற்கனவே அறிந்துணர்ந்த
வாழ்க்கைத் தகவல்களை
மட்டுமே சொல்லிச் செல்கிறது. மொழி நடை மட்டுமே ஒரு நாவலை எப்படி காப்பாற்றும் என்பது இன்னமும்
புரியாத புதிராகவே இருக்கிறது எனக்கு.
ஒரு குறியீடாக நாவலில்
வந்து சோத்துக்குப் பறந்து கொண்டிருந்த தூங்கும் பூனையின் தலையில் மாதவனின்
தாய் குழவிக் கல்லைப் போட்டுக் கொல்வதை இந்தத்தமிழ் உலகம் அச்சச்சோவென
வாயில் கைவைத்து வருத்தப்படும் காட்சி கண்முன் விரிகிறது. அதுவும் அவளது தீட்டுத்துணியை
ஒரு நாயைப்போல அது கவ்வி தெருத்தெருவாய் இழுத்து ஓடுவதும், மாதவனின் தாய் அதைத்
துரத்திச் சலிப்பதும் கண்முன் காட்சியாய் விரியும் எழுத்து.
‘அம்மா
சர்க்கஸில் சேர்ந்து விட்டாள். மிருகங்களுக்கு குண்டி கழுவும் வேலை. காலையில் கூண்டுகளுக்குள்
புகுந்து மலம் அள்ளுகிறாள். யானை அவளை மிதித்துக் கொன்ற செய்தி எனக்குக் கிடைத்தால்
மகிழ்வேன்’ என்று
மாதவனிடம் தந்தை சொல்கையில் அவன் தன் தாயைப் பற்றிய நினைப்பை மறந்திருந்தான்.
அக்காவின் சாவுக்கு
ரிக்ஷாக்காரன் தான் காரணம் என்பதை மாதவன் தன் அம்மாவிடம் சொல்கிறான். அம்மா ரிக்ஷாக்காரனின்
குறியை அறுக்கிறாள். மாதவன்
வெட்டுப்பட்டுக் கிடக்கும் குறியை பாலித்தீன் பையில் போட்டு பாதுகாக்கிறான் என்று ஆரம்பத்தில்
சரளமாய் வரும் அதிர்ச்சிகளை எல்லாம் தமிழுலகு எப்போதோ இதை விட பயங்கரங்களை இவர்கள்
எழுத்திலிருந்தே வாங்கிச் சீரணித்துக் கொண்டது மறந்திருக்கலாமோ ரமேஷிற்கு! காத்திரங்களையும் வீரியங்களையும்
இழந்த எழுத்து நல்ல சொல்முறைக்கு மட்டும் மாறித் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நாவல் எளிய வாசகனுக்குமானதாக!
கடலினுள் அம்மா இறங்கி
ஆழத்தினுள் மூழ்கி விட்டதாக தகவல் வருகிறது மாதவனுக்கு. கடலில் மூழ்கினோரெல்லாம்
இறப்பதில்லை என்பதையும் மாதவன் சேர்த்து உணர்கிறான். மாதவன் பின்பாக வீடு கட்ட அக்கா இறந்த பூவரச மரத்தடியில்
குழி தோண்டுகிறார்கள். நான்கடி ஆழத்தில் மூடியிட்ட தாழி ஒன்று கிடைக்கிறது. அதனுள் தொப்புள்கொடி
இல்லாத பெண்குழவியை வெளியில் எடுக்கிறார்கள். தன் அக்காவே தோன்றியிருப்பதாக மாதவன் அழுகிறான். நவீனத்துவம் மீண்டும்
தலைகாட்ட ஆரம்பிக்கிறது நாவலில் பூமிதா பிறந்த பொழுதிலிருந்து!
இந்த நாவல் சொல்ல வரும்
சேதி என்னவெனில், சில
விசயங்களை வாசகனின் எளிய வாசிப்புக்கு முட்டுக்கட்டையிட்டு அவன் மண்டையைக் கொஞ்சமாய்
யோசிக்க விடுதல் தான். தியானத்தில் காட்டில் இருக்கும் சாமியாரை புற்று வளர்ந்து
மறைத்து விடும். அந்தளவு
ஆழமான தியானத்தில் இருப்பார். சினிமாவில் நாம் பார்த்திருப்போம் பழைய வெள்ளை கருப்பு படங்களில். காட்டினுள் வந்த மகராசன்
தன் கத்தியை புற்றினுள் நுழைத்து முனிவரின் கண்ணை போக்கடித்து விட புற்றில் ரத்தம்
கசியும். அப்புறம்
சாபங்களும் நடந்தேறும். இந்த நாவலில் மாதவன் வீட்டில் தியானத்தில் அமர .. தொடருகிறது!
நாவலின் பகுதி இரண்டு
தத்துவார்த்தமாக நகருகிறது! அதை அவ்வளவு சுலபமாக வாசிக்க இயலாது தான். அது தான் நான் விரும்பியதுமாக
இருக்கலாம்! மனநோயின்
வளர்சிதை மாற்றம் என்று பகுதி இரண்டு சொல்கிறது. அதை மனச்சிதைவோடு வாசிக்க மேலும் இரண்டு நாட்கள் எனக்குத்
தேவை!
ஐந்தவித்தான் (நாவல்) ரமேஷ் பிரேதன்.
விலை -140. டிஸ்கவரி புக் பேலஸ்.
000
1 கருத்து:
நல்லதொரு பகிர்வு.
கருத்துரையிடுக