சனி, மார்ச் 25, 2017.சீ.சிவக்குமார் நடந்த தடம் அழிந்தது!
வா.மு.கோமு

மரணத்தை நேருக்கு நேர் சந்திக்கும் மகத்தான அனுபவத்தை எதிர்க்கொள்வது தான் இந்த நிச்சயமில்லாத வாழ்க்கையின் உச்சகட்டம். துணிச்சல் உள்ளவர்கள் மரணத்தை அடிக்கடி நேரில் சந்திக்கிறார்கள். ஆபத்துக்கான அனைத்து வழிகளிலும் அவர்கள் பிரயாணம் செய்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைத் தத்துவம் காப்பீட்டு நிறுவனங்களின் கொள்கைகள் அல்ல!

அபாயங்களை நேர் கொள்ளும் கலையை என்றுமே நிகழ்த்திக் கொண்டே இருந்தான் கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார். அபாயத்தை சந்திக்கும் திறனை எந்த நிமிடத்திலும் இழந்துவிடாமல் இருந்தவன். அவனிடம் உள்ளதை எல்லாம் இழப்பதை விட பெரிய இழப்பு கடைசியாய் அவனை அவனே இழந்தது.

ஹலோ, .சீ.சிவக்குமாரா? இன்னும் இதே நெம்பர்ல இருக்குறது அதிசயம் தான்!”

யாரு, கோமுவா? நான் செத்து மூனு வாரம் ஆச்சு.. நெம்பரை மாத்துறதுக்கெல்லாம் எங்க நேரம்?”

என்ன சொல்றீங்க?”

வண்டில போயி பாலத்துக்கிட்ட எப்படி விழுந்தன்னே தெரியல.. விழுந்துட்டேன். இடது கையை தூக்க முடியல. தலையில எங்க அடிபட்டுச்சோ தெரியல ரத்தமா ஒழுகுது சட்டையெல்லாம் நனைஞ்சு போச்சுன்னா பாத்துக்குவே! எந்திரிச்சு பாலத்து மேல உக்காந்துட்டேன். அது வழியா ஒருத்தரு சைக்கிள்ல வந்தாரு! அடடான்னு சைக்கிளை ஸ்டேண்டு போட்டு கூட நிறுத்தாம உட்டுப்போட்டு ஓடியாந்தாரு! என்னாச்சு அப்புனு?ன்னு கேட்டாரு கோமு. ஒரு சிகரெட் இருந்தா குடுங்கன்னேன்! மகராசன் பத்தாம் நெம்பர் பீடிக்கட்டு வச்சிருந்தாரு. அதுல இருந்து ஒன்னை உருவி எடுத்து நீட்டினாரு.”

அதை விடுங்க இப்ப எங்கே இருக்கீங்க?”

வழக்கம் போல மருத்துவமனையில தான்!”

.சீ.சிவக்குமாரை முதலாக என் வீட்டில் வைத்துத்தான் பார்த்தேன். நண்பர் அவரை அழைத்து வந்திருந்தார்அது இருள் சூழும் நேரம். கூட்டி வந்த நண்பருக்கு குடிப்பழக்கம் இல்லை. இரவு நேரத்தில் கருத்த மலைப்பாம்பென படுத்திருந்த சாலையில் அமர்ந்து குடி விளையாட்டைத் துவங்கினோம். அந்த முதல் சந்திப்பில் க.சீ.சிவக்குமாரின் எந்தக் கதைகளையும் நான் வாசித்ததே இல்ல என்பதே அதன் சிறப்பம்சம். ராஜ போதையில், “நான் தெளிவா இருக்கேன் கோமு. இப்ப பாக்குறியா?” என்று சாலையில் குனிந்து தலை வைத்து ஒரு குட்டியாக்கரணம் அடித்தார். மேல் சட்டைப் பாக்கெட்டில் இருந்த சில்லரை நாணயங்கள் அனைத்தும் சல சல சப்தமுடன் சாலையில் சிதறின. அவற்றை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்து தன் மேல் சட்டைப் பாக்கெட்டிலேயே திணித்துக் கொண்டவர் அன்றைய இரவில்இட்லியா?” என்று கேட்டு இரண்டு இட்லிகளை சாப்பிட்டார்.

குடிகாரர்கள் அதிகம் சாப்பிடுவதில் கவனமெடுத்துக் கொள்வதில்லை என்பதை அவரும் நிருபணம் செய்தார்.

ஒவ்வொரு மனிதனும் குழந்தைமையின் உலகத்திலிருந்து ஒருநாள் அல்லது மறுநாள் இழந்து தான் ஆகவேண்டும் என்பது நியதியாக இருக்கலாம். இழந்த பிறகு அதை மீண்டும்  திரும்பப்  பெற வேண்டும். அதற்கான முயற்சிகள் சற்று வேடிக்கை நிகழ்வுகளாகவும் மாறி விடலாம். திரும்பவும் குழந்தைமைக்குச் செல்ல வேண்டும் என்பது தான் அவன் வேதனை. அதை க.சீ.சிவக்குமார் விடுதலையாக எண்ணிக் கொண்டான். அதுவே அவன் பிரச்சனையும் கூட.

நண்பர் ஒருவர் மிக மிக புத்திமதிகளை எடுத்துச் சொல்லிச் சொல்லி, .சீ. சிவக்குமாரும் மண்டையை மண்டையை ஆட்டி அதை உள்வாங்கிக் கொண்டு வெளியூர் செல்லும் பேருந்துகள் நிரம்பிய கோயம்பேடு நிறுத்தத்தில் இறக்கி விட்டு கையில் பெங்களூர் செல்வதற்கான தொகை மற்றும் குழந்தைகளுக்கு வீடு செல்கையில் வாங்கிச் செல்ல தின்பண்டங்களுக்கான தொகை, இவருக்கான சில்லரைச் செலவுகளுக்கான தொகை இவ்வளவையும் கையில் கொடுத்து அனுப்பி விட்டு நிறுத்தத்தில் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு.சீ. எப்போது திருந்துவான்? என்ற எண்ணத்தை ஓட்டிக்கொண்டு நின்றிருக்கையில் கண்ணெதிரே ஆட்டோவின் பின் இருக்கையில் சாய்ந்தமர்ந்தபடி கையில் மிக நீண்ட சிகரெட் புகைய தன் கால்களில் ஒன்றை ஓட்டுனரின் கழுத்துப் பக்கமாக உயர்த்தி நிறுத்திச் செல்லும் க.சீ.சிவக்குமாரை காண்கையில் எப்படி இருந்திருக்கும்?

என்னுடன் பழகிய எந்த எழுத்தாளர்களுமோ அல்லது நண்பர்களுமோ எப்போதும் செய்யவே இயலாதா காரியம் அது. போக நண்பரே க.சீ.சிவக்குமாருக்கு அலைபேசியில் அழைப்பை விடுத்து, “ஏன் இப்படி?” என்று கேட்கையில் க.சீ சிவக்குமார் சொன்ன பதில் தான் இதில் உச்சம். “இல்ல திடீருன்னு ஆட்டோல சாய்ஞ்சாப்ல உக்கோந்துட்டே ஒரு சிகரெட் பிடிச்சுட்டு போனா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன்.”

இயற்கை நம்மை எந்த இடத்தில் இருக்கக் கூடாது என்று நினைக்கிறதோ அந்த இடத்திற்குத் தான் நாம் வழுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறோம்! ஒருவர் உள்ளார்ந்த ஆற்றல் திறமை முழுதும் திருப்திகரமாக வெளிப்படும் அளவிற்கு அவர் வாழ்வதேயில்லை. மற்றவர்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே எப்போதும் முயற்சித்துக் கொண்டே இருப்பதாகிவிட்டது நம் வாழ்க்கை. இதிலிருந்து விடுபடுவதற்கான சின்னச் சின்ன திறவுகோல்கள் க.சீ. சிவக்குமாரிடம் இருந்தன என்றே இப்போது சொல்லத் தோன்றுகிறது.

வெளியூர் சந்திப்பு ஒன்றில் என் தலைமுடியை கிட்டே வரவழைத்து டப்பென எட்டிப் பிடித்து இழுக்க ஆரம்பித்து விட்டான் கா.சீ. சிவக்குமார். நன்றாக இழுத்து முடித்து விட்டு. “உன் தலையில இருக்குறது டோப்பாவோன்னு நினைச்சுட்டேண்டா! ஒரிஜனல் தான்”. இப்படியான விளையாட்டுகளை தொடர்ந்து சந்திக்கும் நண்பர்களிடமெல்லாம் நிகழ்த்திக் கொண்டே இருந்தவன் தான் க.சீ.சிவக்குமார்.

கோமு எனக்கொரு பிரச்சனை! ரெண்டு நாள் கரூர்ல உக்கோந்து நல்லா வீசிட்டோம். இனி கன்னிவாடி நான் போயாகணும். ரேசன்கார்டை எடுத்துட்டு மணியகார்ரை இன்னிக்கி மத்தியானத்துக்குள்ள நான் போய் பார்க்கணும். ஊருக்குள்ள தான் போய் இறங்க முடியாதாட்ட இருக்குது!”

என்னன்னு சொன்னாத்தான என்னால என்ன பண்ண்லாம்னு சொல்ல முடியும்?”

அதான் விசயத்துக்கு வர்றேன். போன வாரம் ஆனந்த விகடன்ல என் கதை படிச்சியா? நீ எங்கே அங்க வாய்ப்பாடில உக்கோந்துட்டு விகடன் படிக்கப் போறே? அதுல உள்ளூர்க்காரனோட பழைய காதல் ஒன்னை எழுதிட்டேன். அந்தப் பய எங்கியோ அதை படிச்சு தொலச்சிட்டாம் போல! வாடா நீ கன்னிவாடிக்கு.. உனக்கு இருக்குதுடான்னு போன்ல கண்டமானிக்கி பேசிட்டான்! இப்ப நான் கன்னிவாடிக்கி வர்ற விசயம் அவனுக்கு தெரியும்! போயி இறங்குனா பிரச்சனை ஆயிடுமோன்னு பயமா இருக்குது!”

அப்ப கன்னிவாடில போயி இறங்குறப்பவே ஃபுல் கண்டிசன்ல பஸ்ல இருந்து இறங்குறாப்ல ஒரு பர்ப்பாமென்ஸ் குடுங்க சிவக்குமார். பயல் கிட்ட வரமாட்டான்!”

இந்த ஐடியா நல்லா இருக்கே! அதையே பண்டுவோம்

இந்தச் சமூகம் க.சீ.சிவக்குமாருக்கு செய்த துரோகம் அவருக்கே உரித்தான ஆற்றலை முழுதாக வெளிப்படுத்த விடாமல் அவரை வேறு திசையில் பயணிக்க மாற்றி விட்டது தான். இந்த உலகமே ஒருவரின் தனிமனிதத் தன்மைக்கு எதிராக குரலையோ கொடியையோ பிடிக்கிறது. யாரையும் இயல்பான நிலையில் வாழ விடாமல் தடுக்க பிரயத்தனம் செய்து கொண்டேயிருக்கிறது. ஒரு பெரிய இயந்திரத்தின் சிறிய பல்ச்சக்கரமாக செயல்பட்டாலே போதும் என்கிறது. வாழ்நாள் முழுதும் இடம் மாற்றி இடம் மாற்றி மகிழ்ச்சியையும், நிறைவையும் தேடி ஓடிக் கொண்டே இருந்தவன் க.சீ.சிவக்குமார்.

ஈரோடு கண்காட்சியில் இருவரும் சந்திக்கையில் வெளி ஒலிப்பானில் குழதைகளுக்கான போட்டியை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அதைக் கூர்ந்து கேட்ட பிறகு, “என்ன கோமு! அரைமணி நேரம் டைம் குடுத்து ஒரு கதை எழுதச் சொன்னா அதுக்கு பத்தாயிரம் பரிசுன்னா மளார்னு உக்கோந்து எழுதிக் கொடுத்துட்டு அந்தப் பரிசை வாங்கிட மாட்டனா நான்? என்ன போட்டி அறிவிக்கிறாங்க? பாரு நீயும் நானும் ஹோட்டல்ல உக்கோந்து அழைச்சுட்டு இருக்குற நண்பரைத் தேடிப்போய் அவரு வாங்கிக் கொடுக்குற சாராயத்தை குடிச்சுட்டு மல்லாக்க கிடக்கப் போறதுக்கு எத்தன அவதி?”

இத்தனை வேடிக்கை நிரம்பிய மனிதராக க.சீ சிவக்குமார் இருந்தாலும் ஒரு சந்திப்பில் அருகில் அமர வைத்து, “நாம இன்னும் நிறைய எழுத வேண்டியது இருக்கு நண்பா! நீ நிறைய எழுதுறே! ஆனா கவனமெடுத்து எதை எழுதனுமோ அதை மட்டும் எழுது!” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

.சீ. சிவக்குமார் பாடல்களின் ரசிகனாக இருந்ததை நண்பர் வெங்குட்டு கன்னிவாடியில் க.சீ யின் பிரேதம் வந்து சேர்ந்து விடுமா? என்று நாங்கள் காத்திருக்கையில் பகிர்ந்து கொண்டார்.

சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்!” யாரு வெங்குட்டு இந்த பாடலை எழுதினது?” என்று முனகிக் கொண்டே விசாரித்த க.சீ.சிவக்குமாருக்கு கங்கை அமரன் என்று இவர் சொன்னதும்.. “மாஸ்டர்டா அவரு!” என்று சொன்ன சிவக்குமார் அன்றைய சந்திப்பு முடியும் வரை அதே பாடலை பாடிக் கொண்டே இருந்தாராம்.

முதலாக வெங்குட்டுவன் க.சீ.சிவக்குமாரை சந்தித்தது பாட்டில்களின் கிணிங் கிணிங் சப்தம் கேட்கும் சாக்னா கடையில். இவர் முகத்தைப் பார்த்ததுமே.. “நீங்க பாடகர் தானே! இரு பாட்டு பாடுங்க!” என்றாராம். சிலருக்குள் தான் அப்படியான திறமை ஒளிந்திருக்கிறது.. முகத்தைப் பார்த்ததும் அவர்களின் தேடல்களைப் படித்தறிய!

அவருக்காக பாடலை இவர் துவங்கும் முன்பாக, ‘ஒரு நிமிஷம்என்று ஒரு விரல் காட்டி க.சீ சிவக்குமார் வெளியே சென்றிருக்கிறார். சரி உச்சா போகத்தான் சென்றிருப்பார் என்று நினைத்து காத்திருந்தவர் இன்னமும் காணோமே! என்று தேடிச் செல்கையில் எதிர்க்கே வந்து விட்டார் க.சீ.சிவக்குமாரும். “ஒன்னுக்கு போறதுன்னா இந்த பீச்சாங்கைப் பக்கமால்ல போயிருக்கோணும் இப்படி மேக்கெ இருந்து வர்றீங்களே?ன்னு கேட்க, “இல்ல சூரியன் மேக்க இப்பத்தான் சாய்ஞ்சுட்டு இருந்தான். அவனைப் பார்க்கத்தான் அவசரமாப் போனேன்! பார்த்துட்டேன். நீங்க வாங்க கச்சேரியை ஆரம்பிச்சுக்கலாம்!”

வெங்குட்டுவன் கன்னிவாடிக்கு அருகாமை ஊர்க்காரர். தன் மிக நீண்ட காதலின் சோகத்தை அவர் க.சீ சிவக்குமாரிடம் விடிய விடிய அதன் வேதனைகளை பகிர்ந்திருந்க்கிறார். என்னைப் போன்ற ஆளிடம் அப்படி பேசியிருந்தால்தூங்கறதுக்கு உடுங்கடா சாமிகளா!’ என்றே கத்தி விடுவேன். ஆனால் க.சீ சிவக்குமார் அப்படியான ஆள் அல்ல. காது கொடுத்தும்கொட்டி சில பல கருத்துகளையும் இடையிடையே சொல்லி பேசுபவருக்கு இணக்கமாக செயல்படுபவர். விடிந்தும் விட்டது. விடிந்தும் வெங்குட்டுவன் தன் காதலை சொல்லிக் கொண்டிருக்கிறார். .சீ. தொடர்ந்துஉம்கொட்டுகிறார். ஆனால் என் மனதில் இருந்த பாரமெல்லாம் போயிடுச்சுங்க கோமு! என்று சொல்லி அழுத வெங்குட்டுவனை கட்டிக் கொள்ள மட்டும் அப்போது என்னால் இயன்றது.

வாழ்க்கையில முன்னேறுவதற்கு கை தூக்கி விட யாராச்சும் வேணும். வாழ்க்கையில பிழைச்சிருக்க காது கொடுப்பதற்கும் ஒருத்தரு வேணும். அது என்னோட க.சீ. அண்ணன் தான். இதனால தான் அண்ணன் எங்க போயி இறங்கினாலும் கையில மதுப்பாட்டிலோடவும் மனமெல்லாம் கொட்டித் தீர்க்கனும்னு பாரங்களோடவும் என்னை மாதிரி வெங்குட்டுவன்கள் ஒவ்வொரு ஊர்லயும் க.சீ. அண்ணனுக்காக நின்னுட்டு இருந்தாங்க கோமு!

பனையோலைச் சாலையினுள் வசிக்கும் ஒரு குடும்பத்தை இருவரும் சந்திக்கச் சென்றார்கள். வெங்குட்டுவனுக்கு அந்த வீட்டு தலைவரால் ஒரு காரியம் நிகழ வேண்டி இருந்தது. வாசலில் ஏழு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருத்தி தான் வளர்த்தும் கலர் கோழிக் குஞ்சுகளை மகிழ்வுடன் துரத்தியவண்ணம் இருப்பதைக் கண்ட க.சீ.சிவக்குமாரும் திடீரென குழந்தை வடிவெடுத்து பச்சை,மஞ்சள்,நீல வர்ணங்களில் ஓடும் கோழிக்குஞ்சுகளை சிறுமியுடன் இணைந்து சேகரிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஏனுங் கா.சீயண்ணா, இவரு தம்புள்ளைக்கி இப்ப வரைக்கும் எத்தன சேர்த்தி வச்சிருப்பாருன்னு நினைக்கிறீங்க சொல்லுங்க!”

என்ன ஒரு முப்பதாயிரம் வச்சிருப்பாரா?”

மிகச் சரியாய் அவர் சிறுமிக்கான சேகரிப்பில் முப்பதாயிரம் மட்டுமே சேர்த்திருப்பதாக சொன்னாராம்.

திருச்சிக்கு பஸ் ஏறி வாங்கடான்னு பயலுகளை கூப்பிட்டா திருச்சிராப்பள்ளின்னு ரோட்டு மேலயே போற பேருந்துகளை தவற விட்டுட்டு திருச்சி பஸ்ஸுக்காக காத்துட்டு இருக்குற அறிவாளிங்க நிரம்பிய ஊர் என் ஊர்! என்று வேடிக்கை பேசும் க.சீ. சிவக்குமார் தமிழில் 66 கதைகள் தான் திரும்பத் திரும்ப எழுதப்படுது! என்று சொல்லி வந்தார். அந்த 66 கணக்கு எனக்கு இன்னமும் விளங்கவில்லை! இருந்தும் இட்லிக்கு வைக்கப்பட்ட தேங்காய்ச் சட்னியில் சக்கரையைக் கொட்டி உண்ட புதிய உணவுமுறை கூட எனக்கு இன்னமும் பழக்கமாகவில்லை தான்.

கன்னிவாடியில் க.சீ.சிவக்குமார் நடந்த தடங்கள் அழிந்தது!

வாழ்வு என்பது ஒரு பெரிய இன்பம் தான். மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுவது பேரின்பம் தான். .சீ அதை மட்டுமே மறந்து விட்டான். .சீ வாழ்ந்து விட்டான். அவன் அன்பை பிறருக்கு செலுத்தியிருக்கிறான். அவன் என்ன செய்ய வேண்டுமென நினைத்தானோ அதை செய்து முடித்து விட்டான். என்ன சொல்ல வேண்டுமென நினைத்தானோ அதையும் சொல்லி முடித்து விட்டான். வாழ்க்கையை ஒரு வியாபாரியைப் போல அவன் வாழவில்லை. ஒரு சூதாடியைப் போல.. அடுத்த விநாடிக்கு என்று எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாத பேரானந்த வாழ்க்கை வாழ்ந்தான். இதுவெல்லாம் ஒரு பேறு.

வாழ்க்கைக்கான பெரும் கதவு இதோ இங்கு திறக்கிறது. இது ஒரு முக்கியமான காலகட்டம். ஜன்னமும் மரணமும் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் வேளை இதுதான். வாழ்வும் சாவும் நம் முன் நிற்க நாம் சாவைத் தேர்ந்தெடுக்கிறோம்! மரணத்தை தேர்ந்தெடுத்து நாம் சோகத்தில் வாடிக் கொண்டிருக்கும் போழ்தில் வாழ்க்கை சத்தமில்லாமல் நம்மைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது!

நாம் பேசும் மொழியை நாமே கவனித்துப் பார்த்தோமேயானால், “இருக்கணும்” “செய்யணும்” “லட்சியமே அதான்என்று இல்லாத ஒன்றைச் சுற்றியே வார்த்தைகள் உள்ளன. ஆனால் யோசிக்கையில் இப்போது இருப்பது மட்டுமே நிஜம். நிஜத்திற்குஇப்படி இருக்கோணும்.. இப்படி செஞ்சே ஆவணும்என்ற விதிகள் பொருந்தாது.

அபாயங்களை சந்திக்குக் திறனை நாம் எப்போதும் இழந்துவிடலாகாது. நம்மிடம் உள்ளதை எல்லாம் இழப்பதை விட பெரிய இழப்பு அது. நம் வாழ்க்கையை உண்மையாக வாழ அபாயங்களை விட்டால வேறி வழியெதும் இல்லை.

.சீ.சிவக்குமார் வாழ்ந்த வாழ்க்கையை யாரேனும் ஒழுங்கீனம் என்று வர்ணித்தால் அவர் பெயரை நட்பிலிருந்து அகற்றுவேன்!

- நன்றி “ உயிர்மை மார்ச் 2017


Post Comment