வெள்ளி, மே 05, 2017

க.சீ.சிவகுமார் “தானாவதி” பற்றி...
கோடிட்ட இடங்களை நிரப்ப முடியாமை
(தானாவதி நாவலை முன்வைத்து) க.சீ.சிவகுமார்.


சுவாரசியமாக எழுதுவோர் பலர் உளர். வா.மு.கோவின் எழுத்துகள் பிறவற்றிலிருந்து வித்யாசமானது. மனிதர்களைக் கட்டிப் போடுவதில்  வம்புப் பேச்சுஎவ்வளவு  இடம் வகிக்கிறதோ? அவ்வளவு தகைமையும் சுவையும் உடையது கோமுவின் எழுத்து. இதை அவரது ஊருடன் அவரைப் பொருத்தி வாய்ப்பாடின்னு சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள் என அடிக்கடி  நினைத்துக்கொள்வேன்.


அவர் நாவல் என ஆரம்பிக்கும் போது மிக சாவகாசமான தொனி இருக்கும். இந்த நாவலில் கூட அப்படித்தான். கோழிப்பாளையத்தைப் பற்றி அவர் விளம்பும்போது எண்ணூறு பக்கமாவது இழுத்துச் செல்லும் என தோன்றுகிறது. ஆனால் எடையும் பக்க எண்ணிக்கையும் நம் கைக்கு அடக்கமாகக் கையிலேயே இருப்பதால் அது அத்தனை அல்ல என்பது புலனுறுதியாகிறது. எழுத ஆரம்பித்து, ‘ஒற்றை விஷயத்தைப் பேசப்போகிறேன்என அவர் திட்டமிட்டவுடன்  அது சார்ந்ததாக விஷயங்களும் சங்கதிகளும் ஒன்றின் மீதே குவிகின்றன. மெழுகுவர்த்தித் திரியில் ஒரு பிரி மட்டும் எரிந்து கொண்டே கீழ் சென்று வெளிச்சத்தை வாரியிறைத்தால் எப்படியிருக்குமோ அப்படி வெளிச்சம்.


வேலையில்லாத் திண்டாட்டம் மாதிரி இது மணப் பெண் கிடைக்காத திண்டாட்டம்’. கொங்கு வட்டாரப் பகுதியில் இது அனேகமாக கவுண்டர் வீட்டுப் பையன்களுக்கே அதிகம் என நினைக்கிறேன். இரண்டு கழுதை வயதான அந்தப் பையன்களை பையன்கள் என ஏன் எழுதவேண்டும். ஆட்கள்தான்.


கைலி தவிர வேறெங்கும் ஸ்கலிதப் போக்கை அவர்கள் கொண்டிருக்கிறபடியால், ‘கன்னிகழியாத படியால் காருண்யம் கருதி அவர்களை பையன்கள் என அழைக்கவேண்டியிருக்கிறது. அவ்விதம், இனியாவது அவர்களுக்குக் கல்யாணம் குதிர்ந்துவிடாதா என எதிர்பார்ப்பின் கவர்ச்சியை அது கூட்டுகிறது. அதுவே அறம். நியாயமற்றது என நினைக்கும் பல காரியங்களைச் செய்கிறவர்களுக்கெல்லாம் பெண் கிடைக்கும்போது நல்ல பையன்களுக்கு - அதுவும் உலகுக்கு உணவிடும் விவசாயத் தொழில் புரியும் பையன்களுக்குப் பெண் கிடைப்பதில்லை என்பது மற்றுமுள்ளோரைக் கொஞ்சமாவது குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவதுதான்.


இந்தப் பேரிடரை கோமு மட்டுமல்லாது வேறு சிலரும் அவரவர் பாங்கில் எழுதியிருக்கிறார்கள். செல்லமுத்து குப்புசாமியும் என்.ஸ்ரீராமும் மட்டும்தான் இன்னும் எழுதவில்லை.


சேவல் பண்ணைஎன பாலகுமாரன் எழுதிவிட்டதால் பெயரிலாவது பெட்டைஇருந்துவிட்டுப் போகட்டும் என நினைத்தோ என்னவோ கோமு கோழிப்பாளையத்தில் கதையை ஆரம்பிக்கிறார். சுவைக்குக் குறைவில்லை என்றாலும் ஒவ்வொரு பையன்களும் தோல்வி வாங்கும் குறிப்புகளை இணைத்த சிறுகதைக் கண்ணி என்பது போலவே இது இருக்கிறது.


இளைஞர்களின் பலவீனமும் வாழ்வின் நவீனமும் ஒன்றாகக் கலப்பதில் சுவாரசியம் மிகுகிறது. பையன்கள் வாழ்க்கை மீது தானாவதிக் காரர்கள், திருமணத் தகவல் மையத்துக் காரர்களெல்லாம் உரிமை வெள்ளாமையின் மீது கிடந்து உழப்புவது போல உழப்புவது சம்பவங்களுக்கு ருசி சேர்க்கிறது.


கதை நடக்கும் திருப்பூர் பகுதியைச் சுற்றி இப்போது தேனியிலிருந்தும் பிகாரிலிருந்தும் ஆட்களும் வந்து, பேருந்து நிலையங்களில் திருநங்கைகளும் திரிவதால் விதவிதமான சம்பவ உற்பத்திக்குக் குறைச்சலே இல்லை.
சுய ரத்த வாதத்தை விட்டுவிட்டு பையன்கள் வடக்கு, தெற்கு மாவட்டங்களானாலும் சரி வயநாடாக இருந்தாலும் சரி நாங்கள் பெண் எடுக்கத் தயார் என்னும் மனநிலைக்கு மாறிவருகிறார்கள். எடுத்துக்காட்டுகள் பிரதியிலும் ஊர்த்தெருவிலும் உள்ளனர்.


நாவலில் வேலுச்சாமி, சின்னச்சாமி, சுப்பிரணி, பழனிச்சாமி என ஒரு பையனுக்குமே கல்யாணமே நடப்பதில்லை ஆகையால் ஒரு மோன மயக்கத்தில் இந்த ஊரில் ஒரு பயலுக்குமே கல்யாணம் நடப்பதில்லையோ, அப்புறம் எப்படிக் குழந்தைகள் தெருவில் நடக்கிறார்கள் என ஐயப்பாடு கிளம்பிவிடுகிறது. போயும் வந்தும் மளிகைக் கடை மணிக்கு மட்டும் கல்யாணம் நடப்பதாக ஒரு ஞாபகம். ஆனால் திருமணம் என்பது தன் விருப்பமும் பற்றுறுதியும் சார்ந்தது வேலுச்சாமியின் அப்பா மூர்த்தியப்பன் நிரூபிக்கிறார்.


மகனுக்குக் கல்யாணம் பண்ணவேண்டிய நிலையிலான வயதில், மனைவியை இழந்து மூன்றாண்டுகள் ஆன நிலையில் தனக்கான இரை ஒன்றைக் கொத்திக்கொண்டுவந்து அதற்கே இரையாகிவிடுகிறார் மூர்த்தியண்ணன். மகனும் அதற்கு இலக்காகிவிடுகிறான் என்பதுதான் மெத்தக் கொடுமை. சொத்தும், சொத்துரிமையும் அதன்பாலான நயவஞ்சகமும் (நய வஞ்சகம் என்ன ஸ்ட்ரெயிட் வஞ்சகம்தான்) என்னவெல்லாம் செய்யும் என கோமு சித்திரித்துக் காட்டியுள்ள காட்சிகள் மனதைக் கனக்க வைப்பவை.


கொங்கு மண்ணில் பெரும்பான்மையாகவும், நூற்றாண்டுகளாகவும் நடந்துவந்தவை இது போன்ற காட்சிகள் என்பதன் சோத்துப் பதம் இது. கிழவனுக்கு இடிகஞ்சியும் கிழவன் மகனுக்கு பட்டினியும், பாலியல் குற்றச்சாட்டும் பரிசாகக் கிடைக்கின்றன என்பதுதான் கொடுமை.


இதுதவிர செழுமையான பதிவுகள் எனப் பார்த்தால் சுப்பிரமணியின் பஸ்பயணம், அறுதாலியைக் கட்டிக் கொள்வது பற்றி அவன் கற்பனை செய்யும் சித்திரங்கள் என நிறைய இருக்கின்றன. அந்தப் பிராயம் கொள்ளுகிற பேதலிப்புகள். மனதின் மெல்லிய பிறழ்வுகள் அழகாகக் காட்சியாகின்றன.


சுப்பிரமணி பெண் தேடலின் கைப்பின் காரணமாக ஜோசியனாகவே மாறிவிடுவதுதான் அசாத்தியமான பிறழ்வு. தங்களுடனே சுற்றியவன் ஆறாவது அறிவுக்கும் மேலான ஒன்றை அடைந்து சக நண்பர்களுடன் இடைப்புகும் போது நண்பர்களுக்குத் திகைப்பும் ஆச்சரியமும் உண்டாகி ஆச்சரியமே சில உபவிளைவுகளையும் தோற்றுவிக்கின்றன். இதை நம்புப் படியாக எழுதி விளக்குவது கோமுவின் மன வார்ப்பினால் சாத்தியப்பட்டிருக்கிறது.


பழனிச்சாமி இன்னும் பாவம். அவன் நினைத்திருந்தால் முத்தழகியைக் கட்டியிருக்க முடியும். சுலப சாத்தியமே சிரம சாத்தியமாக மாயும் கிரகராசி அவனுடையது.


கமிஷன் மண்டிக்காரி சிந்தாமணியம்மாவைவிட பவிஷால் மேம்பட்டவன் என்கிற மனோபாவம் (இது மாயை என்பது பின்னாளில் விளங்குகிறது. விளங்குகிறபோது கவனங்கொண்ட பொருள் கைவிட்டுப் போகிறது.) அவன் முத்தழகியை முயற்சிக்காமல் இருக்கக் கட்டுப்படுகிறது.


கவுண்டன் என்று சொன்னால் கலப்பையைத் திப்புன்னு போடுவதுஎன்னும் சொலவடைக்கு சொரூபம் செய்து வைத்தாற்போல பழனிச்சாமி கதையில் வலம் வருகிறான். எக்செல் மொபெட்டில் காய்கள் சுமக்கிறான். முத்தழகியை மனதில் சுமக்கிறான். அப்பொறம் ரொம்போ நல்லவனாகவிலகிக்கொள்ள நேர்கிறது.


படைப்பில் பெண்கள் தங்களுக்கான இருப்பை தக்கவைத்துக்கொள்வதும் ,தேவைப்பட்டால் கொண்டவனைச் சிக்கவைப்பவர்களுமாக வருகிறார்கள். அடாவடிக் கூறுகளுடன் மரகதம் போன்றவர்கள் வந்தாலும் பெண்கள் மீது பெரும் காழ்ப்புத் தோன்றாமலிருப்பதற்கு நான் மணமானவன் என்பது காரணமாயிருக்கலாம். மணம் என்னும் சொல் வாழ்வின் வாசம் என்று அர்த்தப் படுகிறதோ என எழுதிவிட்டு யோசிக்கிறேன்.


நகைச்சுவையாக மணம்; திருமணம் பற்றி ஏராளம் கதைகள், சொற் சித்திரங்கள் உண்டு. ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளவேண்டும். ஏனென்றால், வாழ்க்கை இன்பங்களால் மட்டுமே ஆனதுஎன்னும் முடிவுக்கு அவன் வந்துவிடக் கூடாது.என்கிறார் ஆஸ்கார் வைல்ட்.

ஆனால் திருமணம் புரிந்தோர் புரியாதோர் இருதரப்பிடமும் பேசும்போது வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான், சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்என்கிற கதைதான். வள்ளுவர் வேறு குழலினிது யாழினிதுபாடலிலும் சிறு கை அளாவிய கூழிலும்இல்லற மேன்மை குறித்துக் கனவுகளை விதைக்கிறார்.


ஆயின், இந்தப் பிரதியில் வரும் இளைஞர்களை என்னதான் செய்வது. விழுமியம் என ஒன்று இருக்கவே இருக்கிறது. நண்பர்கள் இவ்வளவு நெருக்கமாக இருந்தபோதும் யாரும் ஒருவருக்கொருவர் ஓரினப் புணர்ச்சியாளராக விழையவில்லை என்பது ஆச்சரியம்தான். குடித்துவிட்டுத் தலைமேடு கால்மேடாகக் கிடக்கும் நிலையில் கூட அப்படியான அபத்தம், விபத்து அல்லது சதைவேட்கைக்கான காரியத்துக்கு அவர்கள் போகவில்லை.


பிரதி காட்சிப் படும் பகுதிக்கு வெளியே அவர்களில் சிலருக்கு சரீர ஒத்தாசை கிடைத்திருக்கக் கூடும். அதை கோமு காட்சிப் படுத்தவில்லை.  ஒருவேளை விரகம் எனும் உயிரை வாட்டும் நரகத்தை இரவுகளில் தாங்கிக்கொண்டு, குறியைக் கொண்டு ஒன்னுக்கடிப்பது தவிர நமக்கு லபித்தது ஒன்றுமில்லை என்பது போலத்தான் பிரதியில் வாழ்கிறார்கள்.


வேலுச்சாமி செத்துப்போனபோது, “இந்தக் கருமாந்தரம் புடிச்சவன் ஏன் இப்படிப் பண்ணினான்என்று சடைந்து கொள்ளும் நண்பன் அடுத்தகாரியமாக, “நல்லவேளை என்னுடைய தோட்டத்துல வந்து இப்படிப் பண்ணி வைக்காம விட்டானேஎன்று சொல்கிறபோது வாழ்வின் பதைப்பு அத்தனை தத்ரூபமாக இருக்கிறது.


சிரித்துக் கொண்டே இருக்கும்போது பல்வலியை திடீரென உற்பத்தி செய்கிற ,மாதிரி சிலசமயம் கோமுவின் இடையீடுகள் அமைந்துவிடுகின்றன.


முதிர் கன்னன்களின் (கண்ணன் அல்ல. ஆயர்பாடிப் புருஷோத்தமனோடு இந்த வார்த்தையைச் சேர்த்தவேண்டாம்) சூழலியல் நேர்வுகளில் சாத்தியங்களின் ஆவணமாக இது திகழ்கிறது. இன்னும் விடுபடல்கள் இருக்கலாம். தட்டிப் போவதில்ஒவ்வொருவருவருக்கும் ஒரு தனிக் கதை இருக்கும். இது வாழ்வின் கடன் போல. கடன் வாங்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருப்பது போலத்தான் இதுவும்.


இதில் இரண்டு நூறுநாள் வேலைத் திட்டங்கள் வருகின்றன. ஒன்று அரசு அறிவித்தது. புளியமரத்தடிக்கு வந்து அட்டண்டென்ஸையும் மண்வெட்டி, காரைச் சட்டியையும் போட்டுவிட்டு கல்யாணங்காட்சிக்குப் போய்விட்டு சாயந்திரம் வீடு திரும்புகிற 100 நாள் வேலைத் திட்டம். இந்தத் திட்டம் மேட்னிக்குப் போவது அளவுக்கு முன்னேறிவிட்டதா எனத் தெரியவில்லை.


நம்மை விட கூலிக்காரம் பொழைப்பு பரவாயில்லைஎன்று பணப்பற்றாக்குறை காலத்தில் மட்டும் சொல்லிவந்தாலும் உள்ளுக்குள் மிராசுத் தோரணை காட்டி வந்த விவசாயிகளை மனப்பூர்வமாகவே எண்ண வைத்துச் செருக்கொழித்தது இந்த வேலைத் திட்டம். இப்போது 100 நாள் வேலைக்குப் போகும் அருக்காணிகள் கூட விவசாயம் செய்றேன், தறி ஓட்றேன் எனச் சொல்லும் பையன்களைக் கட்டிக் கொள்வதில்லை.


சகஜீவியாக ஒரு உயிரைச் சேர்த்துத் தராத ஒரு ஜீவனத்தை ஏன் செய்யவேண்டும் என ஆதாரக் கேள்வியைக் கொள்ளவைக்கிற நிலை இது. பனைத் தொழில் நுட்பம் அழிந்தது போலவே வேளாண் தொழில் நுட்பத்தையும் இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் குடமுடைத்து மண் மூடும் ஏற்பாடு.


இன்னும் ஒரு 100நாள் வேலைத் திட்டம் நாவலில் வருகிறது. பஞ்சத்தில் இருப்பவனைக் கொக்கி போட்டுக் கட்டிக்கொண்டு சிலநாள் அவனோடு வாழ்ந்துவிட்டு, பணத்துடன் அவனைக் கைகழுவிவிட்டுச் செல்லும் ஒரு வாழ்க்கை முறை.  அப்படி இதில் ஒருவன் அகப்பட்டுக் கொள்கிறான்.


பக்கத்து நகர் லாட்ஜில் தனது கைக்குழந்தையை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு பக்கத்துக் கிராமத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு (தோட்டங்காட்டையெல்லாம் நேரில் பார்க்கணுமாம்!) வருகிற பெண்களையெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். இந்தக் கண்மணிகள் அழகாக வேறு இருந்து தொலைக்கிறார்கள்.


கட்டியவனாகப்பட்டவன் உடன் பட்டு பைசலுக்கு வந்து காசு கொடுத்தால் ஆச்சு. இலாவிட்டால் உயிராபத்து. ரசம் வைப்பது போன்றே விஷம் வைப்பதையும் ஒரு கலையாகக் கற்றவர்கள் அந்தப் பெண்கள்.


அவர்களோடும் வாழ வேண்டியிருக்கிறது. அல்லது அவர்களுக்குத் தப்பித்து.
எல்லை கடப்பதையும் ஜாதி மீறுவதையும், தேவைப்பட்டால் ஜாதி மாறுவதையும் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு காலம் வேகமாகக் கற்றுத் தரலாம்.


தானாவதியில் போன் உரையாடல்கள் கணிசமான பங்கை எடுக்கின்றன. ஆனால் சக மனிதனிடம் அல்லது எதிர்த்தரப்பு எதிராளியிடம் மக்கள் கொள்ளுகிற நைச்சியம், காட்டம், குத்தல், பாசம், பணிவு அவ்வளவற்றையும் அத்தனை சூசகமாக அந்த உரையாடல்களே பதிவு செய்துவிடுகின்றன.


வா.மு.கோமுவின் இந்தத் தானாவதியில் - எழுத எடுத்துக்கொண்ட நாட்களின் அளவு பற்றி, அவரே பல இடங்களில் சொல்லியும் விடுகிறார் - வடிவ அமைதி குறைவு. வாழ்க்கையில இல்லாத அமைதி வடிவத்திலிருந்து கிழுட்டுதாக்கு?’ என வட்டாரக் கொச்சையில் வினவும் குரல்களை மனச் செவியில் கேட்கிறேன். இப்போது மாற்றிச் சொல்லிவிட வேண்டியதுதான். தானவதிகள் சாதுர்யத்தைக் கற்றுத் தந்திருக்கிறார்கள். நான் வடிவ அமைதியைப் பற்றிப் பேசவே இல்லீங்க. வாழ்க்கை அவதியைப் பற்றித்தான் பேசினேன்.-டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு

000

Post Comment