செவ்வாய், நவம்பர் 27, 2018

லங்கூர் - ஒரு பார்வை
லங்கூர் - லஷ்மி சிவக்குமார்.

லங்கூர் தொகுப்பு கைக்குக் கிட்டி கிட்டத்தட்ட வருடத்தை நெருங்கும் சமயம் வாசிக்க கிடப்பில் கிடந்த பல புத்தகங்களுள் இதுவும் ஒன்று. சிவக்குமாரிடம் அடிக்கடி பேசிக்கொண்டிருந்த சந்தர்ப்பங்கள் காணாமலாகி என் ஞாபகச் சரட்டைப் பிடித்திழுத்து பேசுகையில் தஞ்சை மழை நிலவரம் பற்றித்தான் விசாரிக்க இயன்றது. வாசிப்பு எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது? என்று என்னிடம் விசாரித்தார். வாசிப்பா? அது கிடக்குதுங்க பத்து முப்பது புத்தகங்கள் போல! என்றேன். முதலாக லங்கூரை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அருகிலிருந்த நண்பரும் என் அடுக்கில் தேடி லங்கூரை எடுத்து விட்டார். கைக்கு கிட்டியாயிற்று! (வந்த நண்பர்கள் எடுத்துப் போகாமலிருந்தது ஆச்சரியம்)

தொகுப்பின் தலைப்புக் கதை முதலாகவே இருக்கிறது. குழந்தைகள் என்றாலே பிடிவாதம் தான் முதலில் தெரியவரும். பிடிவாதமில்லாத குழந்தைகளை காண்பதறிது. நன்நிலா காதலித்து மணம் செய்து கொண்டவர்களின் பாசக்காரப் பெண். பள்ளியின் கற்பித்தலில் அம்மாவை மம்மி என்றும் அப்பாவை டாடி என்றும் அழைத்து அப்பாவிடம் அடிக்கடி அப்பாவென்றும் அம்மாவென்றும் அழைக்கச் சொல்லி அன்பு மிரட்டலை வாங்கிக் கொள்ளும் பெண் நன்நிலா. ஒரு பயணத்தில் சாலையில் அடிபட்டு மயக்க நிலையில் கிடக்கும் லங்கூர் குரங்கை பிடிவாதத்தினால் வீடு கொண்டு வந்து விடுகிறாள் நன்நிலா. வாசிக்கும் நமக்கெல்லாம் இப்படியுமா இந்தச் சுட்டிப் பெண் பிடிவாதம் பிடிப்பாள்? என்ற கோபத்தை உருவாக்குகிறது. ரெண்டு சாத்து சாத்தலாம்! என்று கூட! அதுவே இந்தக் கதையின் வெற்றியாகக் கூட இருக்கலாம். இறுதியில் நன்நிலாவே லங்கூர் குட்டியின் தனிமையை உணர்ந்து அதைக் காட்டில் விட்டுவிடலாம் என்கிறாள். முதல் கதையை வாசித்து முடித்ததும் சிறார்களுக்கான புத்தகத்தை வாசிக்கத் துவங்கி விட்டோமோ என்றிருந்தது.  தொகுப்பில் செருப்பு என்கிற கதையும் சிறார்களின் உலகத்தையே விவரிக்கிறது. நண்பர்கள் சேமிப்பில் வாங்கிக் கொடுத்த செருப்போடு பள்ளிக்குச் செல்லும் சிறுவனின் கதையில் முடிவுது தான் இடிக்கிறது. வலிந்து திணிக்கப்பட்ட முடிவாகவும் இருந்தது. இதோடு சேர்த்தியாக வெண்பாவும் யானையும் கதையும் சிறார் உலகத்தைச் சொல்கிறது. ஆனால் இந்தக் கதை வாசகர்களுக்கு சோகத்தை நகர்த்திச் செல்கிறது.

நீர்ம நிலையிலிருப்பவன் சிறுகதை ஒரு குடிவெறியனைப் பற்றி தத்ரூபமாகச் சொல்கிறது. குடிக்கு ஏன் அடிமையானோம் என்கிற கேள்விகளேதும் அவனிடம் இருப்பதில்லை. முடிவிலும் கூட அவன் குடிக்காகவே  சம்பாதித்துக் கொள்ளும் யோசனையில் இருப்பதாகவும் கதை முடிவடைகிறது. நல்ல நியாயமான குடிகாரன் என்று நாமும் நினைத்துக் கொள்ளலாம். மற்றபடி இக்கதையில் மறைந்திருப்பது “குடி குடியைக் கெடுக்கும்” என்கிற வாசகம் தான். நல்லவேளையாக கதை நகர்த்துபவன் இறுதியில் திருந்தி விட்டதாக ஆசிரியர் நம்மிடம் சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை. இதே போன்ற வியாதியைத்தான் சொல்ல வருகிறது நோமோ என்கிற கதையும். அலைபேசிகள் தினமும் விதம் விதமாக வந்து கொண்டேயிருக்கின்றன. கைக்கு மாமா வாங்கித் தந்த அலைபேசியோடு எந்த நேரமும் உறவு கொண்ட ஒருவனின் கதையிது. குறிப்பாக இளைஞர்களின் உலகு அலைபேசி என்றாகிவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். திருப்பூரில் விடிய விடிய கட்டிங் வெட்டியும், அயர்னிங் செய்தும் சம்பாதிக்கும் இளைஞர்களின் பணமெல்லாம் அலைப்பேசிக் கடைக்கார்களுக்கே செல்வதாய் கடை வைத்திருப்பவரே சொல்கிறார். ஆறு மாதகாலம் தான் புதிய அலைப்பேசி அவர்கள் கையில் இருப்பதாகவும்.. அடுத்த மாடல் கடைக்கு வந்ததும் அதற்குத் தாவி விடுகிறார்கள் என்றும் கூறினார். நீங்கள் தடுக்கி விழுந்தால் திருப்பூரில் ஒரு அலைப்பேசிக் கடையின் வாசலில் தான் விழ வேண்டுமென நினைக்கிறேன். நோமோ கதையும் மனநல மருத்துவரின் முன் கதைநகர்த்துபவன் அமர்ந்திருப்பதாக முடிகிறது.

ப்ராய்டுடன் ஒரு விவாதம் கதை சிவக்குமாரையே ஞாபகப் படுத்திற்று. ஒரு வித்தைக்காரியின் சாகச மரணம் கதை தலைப்புக்காக எழுதப்பட்டதா? கதையின் முடிவு அப்படி அமைந்ததால் வைக்கப்பட்டதா? என்பதை உயிர் எழுத்து இதழில் வந்திருந்த போதே யோசித்தேன். இன்னமும் எதற்காக அந்த சாகச மரணம் என்பது எனக்கு புரியவில்லைதான். கணவரைப் போன்றே சர்க்கஸ் கூடாரத்தில் தன் மரணம் நிகழ வேண்டுமென ஆசை கொண்டாளா சாகசக்காரி!

மொத்தத்தில் புதிய புதிய களன்களில் பயணிக்கும் சிறுகதைகள் இவைகள்!

யாவரும் பப்ளிசர்ஸ் - விலை - 150.00

000

Post Comment

வெள்ளி, அக்டோபர் 12, 2018

மனைமாட்சி - ஒரு பார்வை


மனைமாட்சி - நாவல். எம்.கோபாலகிருஷ்ணன். தமிழினி வெளியீடு.

மூன்று பாகங்களை உள்ளடக்கிய இந்த நாவல் மூன்று வெவ்வேறு நாவல்களைத் தான் தாங்கி வந்திருக்கிறது. மூன்றிலும் ஒரு புள்ளி சேர்கிறதென்றால் அது குடும்ப உறவின் சிக்கல்கள் தான். ஆணாதிக்க சமூகத்தில் மறைமுகமாக குடும்ப உறவுகளில் பெண்ணாதிக்கமும் இருக்கிறது என்பதை ஆண்கள் வெளியில் சொல்வதில்லை. அருகருகே இருக்கும் வீட்டார்கள் ஓரளவு அறிந்திருப்பார்கள் என்றாலும் அவர்களாலும் எதுவும் செய்ய இயலுவதில்லை. பெண்ணானவள் சமயத்திற்கு தகுந்தபடி பச்சோந்தி போல் நிறம் மாறுவாள் என்பதை பொட்டில் அடித்தாற் போல பேசும் புத்தகம் இது.

இரண்டு பாகங்களில் இரண்டிரண்டு கிளைக் கதைகள். அது நாவலை வளர்த்திச் செல்ல ஆசிரியருக்கு உதவுகிறது. ஆக ஐந்து கதைகள் என்று கூட நாம் பிரித்தறியலாம். முதல் பாகத்தில் வரும் தியாகுவிற்கு இரண்டு பெண் குழந்தைகள். அவனுக்கு மைல்ட் ஸ்ட்ரோக் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். அவனது மனைவி சாந்தி. மருத்துவமனையில் கணவனுக்கான அனைத்து பணிவிடைகளையும் செய்யும் மனைவியாகவும், கணவனது நண்பன் செந்திலிடம் புலம்பும் பெண்ணாகவும் அறிமுகமாகிறாள். அவள் தான் கணவனை தன் முந்தானையில் முடிந்திருக்கிறாள். அவ்வப்போது இரும்புக் கம்பியிலும், அயர்ன் பாக்ஸிலும்  கணவனுக்கு சூடு இழுகிறாள். அவளது தேவைகள் அனைத்தும் ஆடம்பரம் ஒன்றே. கணவனை துன்புறுத்துவதில் உச்ச பட்ச யோசனைகளுக்கெல்லாம் கதை வழியே செல்கிறாள். படிக்கும் நமக்கெல்லாம் மீடியா தியாகுவின் வீட்டு வாசலில் நிற்கையில் அதிர்கிறது. கடைசியாக தியாகு தன் குழந்தைகளுடன் தந்தையாரிடம் அடைக்கலமாகிறான். கமர்சியல் நாவல் போன்று ஒரு நல்ல முடிவை எதிர்பார்த்து நிறைவடைகிறது ஒரு குடும்ப வாழ்க்கை.

இதில் இரண்டாவதாக வைத்தியநாதன் என்கிறவரின் கதையோட்டம். ராஜத்தை வைத்தியநாதன் மனைவியாய் அடைகிறார். ராஜம் வெறும் கையில் பால் பாத்திரத்தை எடுக்கிறாள். காய்கறி நறுக்குகையில் கையில் கத்தி பட்டு ரத்தம் வடிகிறது. வலியில்லை என்று குடும்ப உறுப்பினர்களிடம் சொல்கிறாள். குடும்ப உறுப்பினர்கள் ராஜத்திற்கு இல்லாத வியாதி இருப்பதாய் சொல்லி பிறந்த வீட்டுக்கே அனுப்பி வைக்கின்றனர். வைத்தியநாதன் மங்களாவை கைப்பிடிக்கிறார்.  கணவனின் நினைவாக ராஜம் மெஸ் நடத்திக் கொண்டு அவள் ஊரில் இருப்பதாகவும்.. வைத்தி அவளைக் காணச் செல்வதாகவும்.. கதையோட்டம் மலையாளத் திரைப்படம் போன்று ஊர்ந்து செல்கிறது.

இரண்டாவது பாகம் அசத்தலாக ஆரம்பிக்கிறது. சாப்பாட்டுப் பிரியனான மகாதேவன்  தன் புதுமனைவியை சாலையில் நிற்கவைத்து விட்டுஇதோ வந்து விடுகிறேன்என்று சொல்லி சென்று விடுகிறான். புது மனைவி மதுமதி சலித்துப் போய் கிளம்புகையில் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனைப் பார்க்கிறாள். அத்தோடு பெட்டி கட்டிக் கொண்டு பிறந்தகம் சென்று விடுகிறாள். மகாதேவன் தன் தவறை உணர்ந்திருந்தாலும் பசிக்கு சாப்பிட்டதுக்கெலாம் ஒரு மனைவி கோபித்துக் கொண்டு போய்விடுவாளா? என்றே யோசிக்கிறான். அவனுக்கென்று கோவிலில் பாடும் ஒரு துணை அமைகிறது. இருவரும் டைவர்ஸ் பெற்றுக் கொள்கிறார்கள். மதுமதிக்கும் துணை அமைகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் வரும் கதையோட்டம் எனக்கு தி.ஜானகிராமனையும், பாலகுமாரனையும் சேர வாசித்துக் கொண்டிருக்கும் அனுபவத்தை கொடுத்தது.

மூன்றாவது பாகம் தான் எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனின் தனித்துவமான வீரியமான எழுத்து. அமராவதி ஆற்றில் இரு சிறுசுகளை ஈன்றெடுத்த வினோதினி கணவன் ஆனந்தகுமாரை பலி கொடுத்து விதவையாகிறாள். ஆனந்தகுமாரின் தம்பி சிவக்குமார், அவனது மனைவி கண்ணம்மாவிற்கு குழந்தைகள் இல்லை. சிவக்குமார் அணியின் மீது ஆசை கொள்கிறான். கண்ணம்மா தன் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வந்து வீதியில் மானம் கெட பேசுகிறாள். சொத்துக்களை பிரித்துக் கொள்கிறார்கள். வினோதினி தன்னை முதலாக காதலித்த லோகுவை கைப்பிடிக்க சம்மதிக்கிறாள்.

கிளைக்கதையாக துவங்கி ஓடும் மற்றொரு கதையில் பெங்களூருவில் வாழ்க்கையை துவங்கும் கணவன் கண்ணபிரான் மற்றும் அவனது மனைவி வாணி பற்றியது. ‘அப்பா அம்மா கட்டாயத்துல தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்.. மத்தபடி எனக்கு இதுல இஷ்டமில்லே!’ என்று துவங்கும் வாணி  ஊரில் சசி என்கிற மலையாளத்தானை காதலிக்கும் விசயத்தை கணவனிடம் சொல்கிறாள். இவர்களின் கதையைச் சொல்கையில் எழுத்தாளரின் எழுத்து வேகமாய் பயணிக்கிறது. சொல்ல வருவதை சுத்தமாகவும் சொல்கிறார். சசியுடனும் கவன் கண்ணபிரானிடமும் வாணி படுக்கையை பகிர்ந்து கொள்கிறாள். கடைசியில் பெங்களூரிலிருந்து மூட்டை முடிச்சுகளுடன் சசியுடன் சொந்த ஊரும் செல்கிறாள். ஆனால் சசிக்கு வேறு இடத்தில் மணமாகி விடுகிறது. இந்த நேரத்தில் இருவருமே டைவர்ஸ்க்கு முயற்சித்திருக்க.. வாணி கர்ப்பஸ்திரியாகிறாள். அவளுக்கே குழப்பம். கரு இருவரில் யாருடையது என்று? இறுதியில் கணவனுடனேயே (பச்சோந்தி) வாணி இணைவதாய் நாவல் சுபம் என்று முடிகிறது. நாம் நிம்மதியாய் தியேட்டரை விட்டு வெளியேறுகிறோம்.

ரமணிச்சந்திரன் நாவல்களில் தான் முதலிரவில் கணவனிடம் படுக்க மாட்டாமல் அழும் பெண்களை நாம் முன்பாக வாசித்திருப்போம். போக அந்தப் பெண் தன் காதலனைப் பற்றி கணவனிடம் தெரிவிப்பாள். கணவனும் மனைவியின் அழகைப் பருகிக் கொண்டே அவளுக்கு ஒத்துழைப்பதாய் கதை சென்று கொண்டிருக்கும். ரமணிச்சந்திரன் கதைகளில் நாயகி என்றுமே காதலனிடம் படுக்கையை பகிர்ந்திருக்க மாட்டாள். கடைசியாக பெண்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் விதமாக கணவனின் தோள் மீது மனைவி சாய கதை சுபமாகும். இது எதற்கு என்கிறீர்களா? எல்லாம் போகிற போக்கில் குடும்ப நாவல்னா அப்பிடித்தான்யா!

-விலை 580

Post Comment

புதன், ஆகஸ்ட் 22, 2018

ஐம்பேரியற்கை - நாவல்


ஐம்பேரியற்கை
மாற்கு

தமிழில் விதம் விதமான கதைக்களன்களில் நாவல்கள் எழுதப்படுகின்றன. நாவலாசிரியரின் கற்பனை வளம் எந்தத் தூரத்தில் இருக்கிறது என்பதையெல்லாம் தமிழ் வாசகர்கள் படித்துணர்ந்து விட்டார்கள். சமீப காலங்களில், தாடி வைத்த பச்சைத் துண்டுக்காரர் முன்பு சொன்னநிலத்தை உழும் டிராக்டர் சாணி போடுமா?” “நிலத்திற்கு ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் சாணத்தை உபயோகியுங்கள்என்றெல்லாம் பேசப் போக மக்கள் அதைப் பிடித்துக் கொண்டார்கள். பிடித்தும் பிரயோசனம் இங்கெதுமிவில்லை. ஆசைப்படும் போது மழை இல்லை என்கிற நொட்டைக் காரணம் சொல்லி அல்லது பக்கத்து வீட்டுக்காரன் நிலத்தை விற்று பணத்தை டெபாசிட் செய்து விட்டு ஏசி காரில் போகிறான் என்று தானும் விற்று அழித்த நிலத்தை இப்போது திரும்பிப் பார்க்கிறான். அங்கே மிகப் பெரிய ஆலை ஒன்று உருவாகி தன் கூம்புக் குழாய்கள் வழியே ஊர் முச்சூடும் புகையை விதைத்துக் கொண்டிருப்பதை கண்ணால் பார்த்து வருத்தப்பட்டு காரில் ஏசியை அதிகப்படுத்தி விட்டு கிளம்புகிறான்.

இந்த நாவல் சொல்ல வருவது அனைத்தும் நாம் கண்கூடாக அனுபவித்துக் கொண்டிருப்பது தான். மருந்து மாத்திரைகளை விற்பனை செய்ய மருந்துக் கம்பெனிகள் தாராளமாக மக்களைக் காக்க மருந்துகளை தயாரிக்கின்றன. மக்களை அவசரத்திற்கு வரவழைக்கும் மருத்துவமனைகள் மனிதனின் மொத்த உடலையும் புறட்டி எடுத்து பலவித நோய்கள் நோயாளிக்கு இருக்கிறதாக உறவினர்களிடம் சொல்கின்றன. உறவினர்கள் பதறுகிறார்கள். ஒரு உடலை வைத்து வைத்தியர்கள் பல மருந்து மாத்திரைகளை விற்பனை செய்ய துவங்கி விடுகிறார்கள். நோயாளி வெற்றுக் காய்ச்சலுக்கு சென்றிருந்தாலும் அவனே அறியாத பல வியாதிகள் தன் உடலில் ஒட்டியிருப்பதை கண்டுணர்ந்து சாப்பிடுவதற்கு முன், சாப்பிட்ட பின் என மாத்திரை வில்லைகளை விழுங்குகிறான். அவனுக்கு தன் சாவை தள்ளிப் போடும் ஆசை மனதில் நுழைந்து விட்டது தான் காரணம். எல்லோரும் இங்கே வாழவே ஆசை கொள்கிறார்கள். அது ஸ்டாலினோ, ஓ பி எஸ் சோ, இ பி எஸ் சோ, ராமசாமியோ, சசிகலாவோ, மணிமேகலையோ! மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டே வந்தால் முதலாக கிட்னி பழுதாகும் என்பதை மாத்திரை சாப்பிடுவோரும் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதே இங்கே கொடுமை.

மனித வாழ்வில் முன்னெப்போதுமே இருந்திராத சக்கரை, ரத்த அழுத்தம் இவைகளுக்கு மருந்துகள் தயாரிக்கும் மருந்துக் கம்பெனிகள் ஏராளம். என் தாத்தனிற்கு கம்மம் புழுதண்ணி, ஒரு பச்சை மிளகாய், ஒரு குண்டா களி உருண்டை புளிச்ச தண்ணி ஒரு பச்சை மிளகாய் இது தான் மூன்றுவேளை உணவு. இது தான் இயற்கை உணவு என்று சிலர் சொல்லப் போக மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உடனே அதை நோக்கிப் படையெடுக்கிறார்கள். நாய்ப் பீயை கரைத்துக் குடித்தால் உடலில் ரத்த அழுத்தம் குறைகிறது என்றொரு ஸ்டேட்மெண்ட்டை நான் சொன்னால் உடனே அதை குடிக்க மக்கள் தயாராவார்கள். வா.மு.கோமுவே சொல்லிட்டான். அவன் கிராமத்தான். அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று!

மக்களுக்கு யாரேனும் எதையேனும் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் அவர்களாக எதையும் செய்ய மாட்டார்கள். இந்த நாவலின் கதாநாயகன் அந்தஸ்த்தில் இருக்கும் கலெக்டர் ஒரு இயற்கை வாழ் கிராமத்திற்கு செல்கிறார். அந்த வாழ்க்கை முறையை அங்கே அந்த மக்களின் விளக்கங்களோடு கேட்டறிந்து தன் பதவியை ராஜினாமா செய்கிறார். எங்கேயும் எப்போது நடக்க இயலாத ஒழுங்கான வடிவமைப்பிற்குள் அமைந்த புதினம் இது! இந்த நாவல் இயற்கையை வேறொரு பார்வையில் பேசுகிறது. எல்லோரும் ஆசைப்பட வேண்டுமெனச் சொல்கிறது. ஆட்சியாளர்களின் இலவச கொடுப்பினைகளை இந்த கிராமம் நிராகரிக்கிறது. தேர்தல் சமயத்தில் டிவி பொட்டி கொடுத்தால் வேண்டாமென்கிறது. நீ யார் எனக்கு பிச்சை போட? என்று எதிர் கேள்வி கேட்கிறது இந்த கதை நிகழும் கிராமம்.

கதை நிகழும் கிராமத்தில் சிமெண்ட் கலவைகளில் உண்டான அரசாங்க இலவச வீடுகள் இல்லை. அரசாங்கம் சாலை போட்டுத் தர வந்தாலும் நிராகரிக்கிறார்கள். அவர்கள் செருப்பணிந்து நடப்பதில்லை. (இதெல்லாம் ஹீலர் பாஸ் பிரச்சனையோ?) அரசாங்கம் அங்கே சாலை போட முயற்சிப்பதே அருகிலிருக்கும் உயர்ந்த மலை. அதில் உயர்ந்து வளர்ந்திருக்கும் மரங்கள். அவைகளை தூக்கிப் போக நான்கு, எட்டு சக்கர வாகனங்கள் செல்ல வழி தேவை! அதை அந்த கிராம மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். குழந்தைகளின் கல்வி இயற்கை சார்ந்தே இருக்கிறது கிராமத்தில். அவர்களுக்கு நசுக்கி முகர்ந்து பார்த்து தலை இலையின் பெயரைச் சொல்ல கற்பிக்க ஒரு நபர் கிராமத்தில். சிறியா நங்கை! வாடை தெரிகிறது! ஆசிரியர் சாப்பிட்டு பார்த்து சுவை என்றொரு பகுதியையும் சேர்த்திருக்கலாம்!

இந்தப் புத்தகம் அரசாங்க நடவடிக்கைகளை நிச்சயமாக் ஒவ்வொரு இடத்திலும் சாடுகிறது! முன்பாக இயற்கை சார்ந்து நான் முழுதாக வாசித்த நாவல் எழுத்தாளருக்கு பைசாக்கு பிரயோசன் பெறவில்லை (காசு, பணம்) என்றாலும் பதிப்பாளருக்கு காசு பார்க்கச் செய்த காடோடி நாவல். அது இயற்கை அழிவை முகத்தில் குத்தினாற் போல சொல்லிய புத்தகம். இந்தப் புத்தகம் ஒரு கற்பனை கிராமம். ஈரத்துணியில் விதைகளை கட்டி வைத்து முளை விட்ட பிறகு உண்கிறார்கள்! அவர்களே அரசாங்க உதவிகளை வேண்டாமென மறுக்கிறார்கள். படிப்போருக்கு ஆசை எழும். இப்படி ஒரு கிராமத்தில் வாழலம், வாழ்ந்து பார்க்கலாம் என்று. ஆசிரியரின் வெறி அது தான். ஆனால் அதற்கு இங்கே வாய்ப்பேயில்லை என்பது ஜீரணம் செய்ய வேண்டிய உண்மை.

நாவலில் நாயகி என்றறியப்பட்ட பெண் கனவு காணும் ஒரு பகுதியை அவளே சொல்கிறாள். கிராமத்தின் குழந்தைகளை வண்டலூர் ஜூ விற்கு அக்கிராம மக்கள் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்கிறார்கள். அடுத்த நாள் அங்கே செல்ல வேண்டும். இவள் அந்த ஆசையில் தூங்குகிறாள். இவளை முதலாக ஒரு சிங்கம் வந்து பார்த்துச் செல்கிறது. அடுத்து ஒரு புலி, அடுத்து அடுத்தென பல விலங்கினங்கள் பார்த்துச் செல்கின்றன. இவளும்என்னடா இது? நாம் விலங்கினங்களை பார்த்துச் செல்ல வந்தால் அவைகள் நம்மையே தேடி வந்து பார்த்துச் செல்கின்றன?’ என்று பார்க்கையில் இவளே ஒரு கூண்டினுள் இருக்கிறாள். அசாத்தியமான சிந்தனைகளை உள்ளே தக்க வைத்திருக்கும் நாவல் இது. இந்த நாவல் சொல்ல வருவதெல்லாம் மனிதனின் தெரியாத்தனமான, தப்பிதமான ஆசைகளை!

குழந்தைகள் தாங்கள் வளர்க்கும் செடிகளோடு பேசுகிறார்கள். தொட்டால் சிணுங்கி செடியை தடவித் தடவி பேசி வளர்க்கிறாள் ஒரு சிறுமி. ஒரு கட்ட்த்தில் அவள் தொடுகையில் செடி சுருங்கி விடுவதில்லை. செடி என்னை தொந்தரவு பண்ண வேண்டாமென கும்பிடுவதாக அந்தச் சிறுமி உணருகிறாள். தடவித் தடவி பேசிப் பேசி வளர்க்கும் கத்தரிச்செடி அதிக காய்களை தருவதாகவும் நாவலில் வருகிறது. செடிகளில் பூச்சிகளை விரட்ட கற்றாழை, வேம்பு, எருக்கு, ஊமத்தை இவற்றை கிராம மக்கள் பயன்படுத்துகிறார்கள். நாவல் முழுக்கவும் பேசுவதற்கு தயாராய் ஒவ்வொரு கேரக்டரும் வந்து கொண்டே இருக்கிறது. கேள்விகள் பதில்கள் என தொடர்ச்சியாக வருகையில் ஒரு கட்டத்தில் சலிப்பு தோன்றுவது போலிருக்கிறது. (கடைசியில் வரும் இரவு நேரத்தில் பறையடித்து ஆடல் பாடல். இது வலிந்து திணிக்கப்பட்டது போன்றொரு தோற்றம் அல்லது அதீதம்)

உயர்ந்து நிற்கும் பனை மரங்கள், மேய்ச்சல் பொட்டல் நிலங்கள், பனையிலிருந்து கள் இறக்கிக் குடித்தல், மண் பானைகளை பயன்படுத்துதல், என்று இயற்கையை நாடும் இந்த நாவலுக்கு ஐம்பேரியற்கை என்று தலைப்பிட்ட மகுடேசுவரனுக்கும் வாழ்த்துக்கள்!

தமிழினி வெளியீடு, விலை :- 300.


000

Post Comment

புதன், ஜூன் 20, 2018

பாசம் பத்தும் செய்யும்


பாசம் பத்தும் செய்யும்

வா.மு.கோமு

வாழ்க்கை என்றால் ஒன்பது இருக்குமாம். பாலகிருஷ்ணனுக்கு இரண்டு சேர்த்து பதினொன்று போல் தோன்றியது. வீட்டினுள் மின்சாரம் போனதும் மின்விசிறி வினோத சப்தமுடன் நின்றவுடன் இவனுக்கு தூக்கம் போயிற்று. மனைவி ரம்யா சமையல் அறையில் இருந்தாள் போலிருக்கவே படுக்கையிலிருந்து எழுந்தான்.

அருகில் படுத்திருந்த வினோதினிபிறந்த நாளுக்கு ரெட் கலர் சுடி வேணும்ப்பாஎன்று பேசிக் கொண்டே புரண்டு தூங்கினாள். பாலகிருஷ்ணன் பெருமூச்சு விட்டபடி சமையல் அறைக்கு வந்தான்.

மனைவி  ரம்யா நூறுநாள் வேலைத் திட்டத்தில் சேர்ந்து சாலைப் பணிக்காக மம்பட்டி, சட்டியோடு போய் வந்து கொண்டிருந்தாள். இவனோ உள்ளூர் அச்சாபீஸில் மிஷின்மேனாக போய் வந்து கொண்டிருந்தான். இந்த நிலையில் வீதியில் இருக்கும் பிள்ளைகள் பள்ளி வாகனம் ஏறி தங்கள் அம்மாக்களுக்கு டாட்டா காட்டியபடி தெரஸா வித்யாலயாவிற்கு செல்வதைக் கண்டவர்கள் பிரியம் மிகுதியில் விநோதினியையும் சேர்த்து விட்டு விழி பிதுங்கி ஒரு வருடத்தில் நிறுத்திக் கொண்டார்கள்.

விஜயமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் விநோதினி சேர்ந்து இப்போது இரண்டாம் வகுப்பு தேறி விட்டாள். மூன்றாம் வகுப்பு செல்லும் ஆர்வத்தில் புது புத்தக பேக், புது டிரஸ் வேண்டும் என்றாள். எல்லாமும் வாங்கித் தருவதாக இவன் வாக்குறுதி தந்திருந்தான். சென்ற வாரமே கரண்ட்பில், சந்தைச் செலவு, கேஸ் சிலிண்டர் என்று கண்விழி பிதுங்கி விட்டது பாலகிருஷ்ணனுக்கு.

போதாதிற்கு சிறுவலூர் அரசு மருத்துவமனையில் இவன் தங்கை மஞ்சு பெண்குழந்தை பிரசவித்திருக்கிறாளாம். தகவல் நேற்று மாலையே இவனுக்கு வந்து விட்டது. வெறும் கையை வீசிக் கொண்டு போய்மாமா வந்துட்டேன்என்று குட்டிப் பாப்பா முன் நின்றுவிட முடியுமா?

டிவிஎஸ்ஸுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி என்று அரைக்கிலோவாவது வாங்கிப் போக வேண்டும். அப்பா, அம்மா உயிரோடு இருந்தபோது இப்படியான விஷயங்களை அவர்களே பார்த்துக் கொண்டார்கள். நாற்பது வயதில் வாழ்க்கையை வாழப் பழகிக் கொண்டிருந்தான் பாலகிருஷ்ணன்.

நீங்களும் விநோதினியும் போய் பார்த்துட்டு வந்துடுங்க... மஞ்சு வீட்டுக்கு குழந்தையை எடுத்துட்டு வந்த பிறகு திங்களூர் போய் நான் பார்த்துக்கறேன்என்று ரம்யா நேற்றிரவே சொல்லி விட்டாள். வீட்டில் ஒரு வாரத் துணிமணிகள் துவைக்காமல் கிடக்கிறதாம். இதே அவள் வீட்டில் அவள் தங்கைக்கு என்றிருந்தால் நேற்று மாலையே வாரிச் சுருட்டிக் கொண்டு பறந்திருப்பாள். சொல்லிக் காட்டலாம் என்றால் ஒரு வாரத்திற்கு முகத்தை தூக்கி வைத்துக் கொள்வாள் என்று விட்டு விட்டான்.

ரம்யாவின் முடிவுப்படிதான் ஆயிற்று. விநோதினியும் இவனும் தான் டிவிஎஸ்ஸில் கிளம்பியிருந்தார்கள். எங்கே டாடி நாம போறோம்?” என்றவளுக்கு, திங்களூர் மஞ்சு அத்தைக்கு பாப்பா பிறந்திருக்கு விநோதினி, குட்டிப் பாப்பாவை பார்க்கப் போறோம் நாம இப்பஎன்றான்.

அத்தைக்கி குடுக்கத்தான் ஆப்பிள் ஆரஞ்சு எல்லாம் மேக்கூர் பழக்கடையில வாங்குனியாப்பா? நாம திங்கறதுக்கு இல்லியா? குட்டிப் பாப்பாவே பழம் பூராத்தியும் தின்னுடுமா?” என்றாள். இவன் சிரித்தான். ‘திரும்பி நாம வீடு வர்றப்ப வாங்கிக்கலாம்என்றான்.

அதோப்பா, என்னோட ஸ்கூலு.. இல்ல நான் .. முன்னெப் படிச்ச ஸ்கூலுஎன்று விநோதினி தெரஸா வித்யாலயா கட்டிடத்தைப் பார்த்து சப்தமிட்டாள். இவனுக்கு சங்கடமாய்த்தான் இருந்தது. இங்கு படிக்க வைக்க வக்கில்லாமல் போய் விட்டதே என்று!

சிறுவலூர் அரசு மருத்துவமனை, மரங்கள் அடர்ந்து சூழ்ந்திருக்க துப்புறவாய் இருந்தது. காசு பணம் உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் குழந்தை பெறுவது தான் பெருமை போலும். தனியார் மருத்துவமனை கவனிப்புகளில் சற்றும் சோடை போகாதவைகள் தான் அரசு மருத்துவமனைகளும் என்பது ஏழை பாழைகளுக்குத்தான் தெரியும்.

தனி அறையில் பிள்ளை பெற்ற வாட்டத்துடன் களைப்பில் சோர்ந்து படுத்திருந்தாள் இவன் தங்கை மஞ்சு. ஜூஸ் டம்ளரை கையில் வைத்திருந்த அவள் மாமியார் அவளிடம் நீட்டி, ‘குடி மஞ்சுஎன்று சொன்னபடி, சம்பிரதாய வார்த்தையாகவாங்கஎன்று இவனை அழைத்தார்.

மச்சான் எங்கீங்க காணமே?” என்று மஞ்சுவின் கணவரை அவ்விடத்தில் காணாமல் ஒரு வார்த்தை கேட்டு வைத்தான் பாலகிருஷ்ணன். மஞ்சு படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து ஜூஸ் டம்ளரை வாங்கிக் கொண்டாள்.

அவன் இப்பத்தான் எங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வர்றேனுட்டு திங்களூர் கிளம்பிப் போனான்என்றார் மஞ்சுவின் மாமியார்.

மாமன் வர்ற நேரம் பார்த்து தூங்கிப் போயிட்டாள். இன்னா வரைக்கிம் முழிச்சுட்டு பார்த்துட்டே தான் இருந்தாள். பால் குடிச்சுட்டு தூங்குறாள். வினோதினிக்குட்டி ஏன் பேசாம உம்முன்னு பாப்பாவை பார்த்துட்டே நிக்குது? அப்பா மிரட்டிக் கூட்டிட்டு வந்துச்சா?” என்றாள் மஞ்சு.

மஞ்சுவின் மாமியார் சாக்லெட் தட்டம் எடுத்து நீட்டவும் இவன் இரண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டான். விநோதினி நான்கைந்து எடுத்துக் கொண்டாள். “காகிதத்தை கீழே வீசக்கூடாது சாமி. நர்ஸ்சோ, டாக்டரோ பார்த்தாங்கன்னா உனக்கு ஊசி போட்டுடுவாங்க, அதா மூலையில டப்பா இருக்குது பாரு, அதுக்குள்ள போடுஎன்றாள் மஞ்சு. ‘மிட்டாயின்னா சிறுசுங்களுக்கு உசுருஎன்றார் மஞ்சுவின் மாமியார்.

பாலகிருஷ்ணன் கையில் இருந்த பழப்பையை மூலையில் இருந்த ட்ரே மீது வைத்தான். அப்போது பார்த்து நான்கைந்து பெண்கள் அறைக்குள் நுழைந்தனர். “சுகப்பிரசவம் தான். நான் தான் அப்பவே சொன்னேன்ல, அவ்ளோ சீக்கிரம் இந்த ஆஸ்பத்திரியில கத்தி வைக்க மாட்டாங்கன்னுஎன்று வந்த பெண் ஒன்று மஞ்சுவிடம் பேச, இவன் அறையை விட்டு வெளியே வந்தான்.

வெளிவந்தவன் சுவரோரமாய் இருந்த சின்ன ஷெல்ப்பில் கலர் கலராய் இருந்த நோட்டீஸ் தாள்களில் ஒன்றை எடுத்து விரித்தான். காச நோய்க்கான குறிப்புகள் அதில் இருந்தன. இன்னொரு தாளில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறிப்புகள் இருந்தன. மருத்துவமனைச் சூழலே திடீரென இவன் மனதில் பீதியைக் கிளப்புவது போல தோன்றியது.

வாயிலில் கம்பெளண்டர் ஒருவர் நோயாளிகளுக்கு டேபிளில் அமர்ந்தபடி டோக்கன் சீட்டு கொடுத்தபடி இருந்தார். ஒரு அறை முன் நர்ஸ் ஒருவர், ‘சத்தம் போடாமல் வரிசையா நில்லுங்கஎன்று சப்தமிட்டபடி இருக்க, இவன் ஒரு டீ சாப்பிட்டு விட்டு வரலாமென மருத்துவமனை முகப்பு வாயிலைத் தாண்டினான்.

ரம்யா தன் சம்பளப் பணத்தில் ஐநூறு ரூபாயை பாப்பா கையில் வைத்துப் பார்த்து விட்டு வரச் சொல்லி தந்திருந்தாள். இருக்கும் சிரமத்திற்கு அவ்வளவு வைக்க வேண்டுமா? என்று மனதில் தோன்றியது. ‘ட்ரஸ் வேணும்ப்பாவிநோதினியின் குரல் வேறு காதுக்கு அருகில் கேட்டது பாலகிருஷ்ணனுக்கு.

மருத்துவமனை முகப்பில் இருந்த டீக்கடையில் இவன் ஒரு டீக் குடித்து முடித்து விட்டு கிளம்பலாம் என்று வெளிவருகையில் மஞ்சுவின் மாமியார் அந்தப் பெண்களுடன் சிறுவலூர் பஸ் ஸ்டாப் நோக்கி சென்று கொண்டிருந்தார். கூடவே விநோதினியும் சென்றாள். சரி அவர்களை அனுப்பி விட்டு வருவார்கள் என்று நினைத்தவன் சாலையைக் கடந்தான்.

மீண்டும் அறைக்குள் இவன் வந்த போது மஞ்சு கண்மூடி அரைத் தூக்கத்தில் இருந்தாள். மின்விசிறி வேகமாக சுற்றியபடி இருந்தது. தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பாப்பாவின் அருகில் போய் நின்றான். தொட்டிலில் நான்கைந்து ஐநூறு ரூபாய்த் தாள்கள் குழந்தையைச் சுற்றிலும் கிடந்தன. இவன் மேல் பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாய் தாளை எடுத்து குழந்தையின் கைவிரல்களைப் பிரித்து வைத்தான். மாமன் காசு என்று தெரிந்ததோ என்னவோ குழந்தை நாம்பிக் கெட்டியாய் பிடித்துக் கொண்டது ரூபாயை.

மஞ்சுவைத் திரும்பிப் பார்த்தான். அவள் உறக்கத்தில் தான் இருந்தாள். தொட்டிலுக்குள் கைவிட்டவன் குழந்தை அருகே கிடந்த வேறு ஐநூறு ரூபாய்த் தாளை எடுத்து தன் மேல் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். மின்விசிறி வேகமாய் சுழன்றும் அவனுக்கு முகம் வியர்த்து விட்டது.

பாப்பா என்னோட சாடை இல்லையாமா, அவராட்டமே கண்ணு, மூக்கு வாயின்னு சொல்றாங்கண்ணாமஞ்சு இவனிடம் சொல்லவும் சற்று தடுமாறியவன், ‘அப்படித்தான் இருக்கிறாள்என்றான். திடீரெனப் பேசுகிறாளே! திருட்டுத்தனத்தை பார்த்திருப்பாளோ? ச்சே! இருக்காது!

பாப்பா நேற்று நாலு மணிக்கு சாயந்திரம் பிறந்தாள்ணா. அப்பவே ஜோசியரைப் பார்த்து சாதகம் எழுதிட்டாரு. சிம்மராசியாம், அதும் மகம் நட்சத்திரமாம் பாப்பாக்கு.  அண்ணா இங்க வாயேன்என்றவள் தன் படுக்கைக்கு அடியில் கைவிட்டு நூறு, ஐம்பது என்று ரூபாய்த் தாள்களை எடுத்து இவனிடம் நீட்டினாள். ‘பிடி இதைஎன்றாள் மஞ்சு.

இது எதுக்கு? உன்னைப் பார்க்க வந்ததுக்கு நீ எனக்கு கூலி குடுக்குறியா?” என்றான் பாலகிருஷ்ணன்.

நீ எத்தனை சிரமத்துல இருக்கேன்னு எனக்குத் தெரியாதாண்ணா? பார்க்க வர்றவங்க எல்லோரும் பணமாத் திணிக்கறாங்க. என் அத்தை வந்துட்டா உனக்கு தரமுடியாமப் போயிடும். பிடி!” என்றதும், வாங்கி பேண்ட் பாக்கெட்டில் திணித்துக் கொண்டான்.

இன்னும் எத்தனை நாள் ஆஸ்பத்திரியில இருக்கோணுமாமா? ரம்யா வேற நீ வீடு வந்த பிறகு தான் பார்க்க வர்றதா சொல்லிட்டு இருந்தாள்என்றான். ‘இன்னும் ரெண்டு நாள் இருந்தால் போதும்னு டாக்டர் சொல்லிட்டார்ணாஎன்றாள் மஞ்சு.

அடுத்த அரைமணி நேரத்தில் மஞ்சுவிடமும், அவள் அத்தையிடமும் விடைபெற்று விநோதினியுடன் கிளம்பி விட்டான் பாலகிருஷ்ணன் மருத்துவமனையிலிருந்து. திங்களூருக்கு அருகாமையில் டிவிஎஸ்ஸில் வருகையில் சாலையோரமாய் நின்றிருந்த புளியமரத்தினடியில் வண்டியை நிறுத்தினான் பாலகிருஷ்ணன். பாண்ட் பாக்கெட்டில் மஞ்சு கொடுத்திருந்த பணத்தை எடுத்து எண்ணினான். ஆயிரத்தி முன்னூற்றி ஐம்பது ரூபாய் இருந்தது அதில். ‘ட்ர்ஸ் எடுக்கலாமாப்பா?’ என்றாள் பார்த்துக் கொண்டிருந்த விநோதினி. ‘எடுக்கலாம் சாமிஎன்றவனுக்கு மேல் பாக்கெட்டில் இருக்கும் ஐநூறு ரூபாய்த்தாள் கனப்பதாய் தோன்றியது.

என்னதான் சிரமம் என்றாலும் பாப்பாவுக்கு யாரோ வைத்த நோட்டை இவன் எடுத்துக் கொள்வதா? பாப்பாவை வாழ்நாள் முழுக்க பார்க்கும் போதெல்லாம் ஞாபகப் பிசாசு தோன்றித் தோன்றிக் கொல்லுமே!

பாலகிருஷ்ணன் டிவிஎஸ்ஸை மறுபடியும் சிறுவலூர் மருத்துவமனைக்கே செல்ல திருப்பினான்.

                                                                                                             - நன்றி : குமுதம் 13-3-2013


Post Comment

திங்கள், மே 07, 2018பச்சை மனிதன்

வா.மு.கோமு


ஒரு மரத்தைக் கடந்து போகும் போது உனக்குள்ளேயே ஹலோ சொல்லிக் கொள்ளத் தவறாதே. அதைக் கரிசனத்தோடு பார்க்காமல் போகாதே. இதில் செலவு ஏதுமில்லை. நீ மரத்தை சந்தோசப் படுத்தினால் மரம் உன்னை சந்தோசப்படுத்தும். மரத்தை வசப்படுத்துவது அவ்வளவு சுலபலமல்ல. மனிதர்கள் மிக மோசமாகத்தான் மரத்தை நடத்தி வந்திருக்கிறார்கள். அவற்றிற்கு மனிதனைக் கண்டாலே பயமாகப் போய்விட்டது. நீ நெருங்கினால் உலகத்திலேயே அபாயமான ஜந்து இவன் தான் என எண்ணுகிறது. ஒரு மரத்துப் பக்கம் போ. மரத்தோடு பேசு. மரத்தை தொட்டுப் பார். அணைத்துக் கொள். உன்னால் கேடு இல்லை என்பதை மரம் உணர்ந்து கொள்ளட்டும். தோழமை வளரும். நீ அருகே வருகையில் மரத்தின் பட்டையில் பிரமாதமான ஒரு ஜீவசக்தி ஓடுவதை தெரிவாய். நீ அதைத் தொடும்போது ஒரு குழந்தையின் மகிழ்ச்சியை அந்த மரம் உணர்வதைத் தெரிவாய். வெகு சீக்கிரம் நீ வருத்தப்படுகையில் எல்லாம் அந்த மரம் நோக்கி போக ஆரம்பித்து விடுவாய்.
                                                                                                                                                                                 -ஓஷோ (வெற்றியின் அபாயம்)

அந்த கடல் கிராமத்துக் குழந்தைகள் ஒருவர் மீது ஒருவர் மணலை வாரித் தூற்றிக் கொண்டிருந்த போது சூரியன் மேற்கு வானில் மறைந்து கொண்டிருந்தான். கட்டுமரங்களில் மீன் பிடிக்கச் சென்றிருந்த கிராமவாசிகள் சிலரைக் காணவில்லை என கடல் கிராமமே பிதிர் கெட்டு கடலோரத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளில் ஒன்றுதான் முதலில் கரையில் வந்து ஒதுங்கிக் கிடந்த அந்தப் பொருளை முதலில் கண்டது. மணல் தூற்றும் விளையாட்டை நிறுத்தி விட்டு கூட விளையாடிக் கொண்டிருந்த சிறார்களையும் அழைத்துக் கொண்டு அந்தப் பொருளை நோக்கிச் சென்றது. அருகே சென்றபோது தான் அது பொருள் அல்ல என்பதை சிறார்கள் உணர்ந்தார்கள்.

இது ஏதோ பச்சைப் பூச்சியாட்ட இருக்குடிஎன்றது ஒன்று.

இல்ல இது பச்சை விளக்கு மனுசன்.. அங்கங்க பச்சை பச்சையா மினுக்குது பாரு

உசுரு இருக்குதான்னு பாருடா

உசுரு இருக்கும்.. உடம்புக்குள்ள பச்சைத் தண்ணி ஓடுறது தெரியுது பாரு

ஏய், அதோட வாயைப் பாரு, மீன் வாய் மாதிரி மூடி மூடி திறக்குது.. அது கிட்ட பேசிப் பார்ப்பமா?”

ஏய் பச்சை மனுஷா!”

காது செவுடோ என்னுமோ?”

ஏய் காதவே காணோம்டா

அதா தூரத்துல டேவிட் அண்ணனும் கூட ரெண்டு பேரும் போறாங்க பாரு. கூப்பிடு அவிங்களை. அவங்களுக்கு இது யாருன்னும், என்னான்னும் தெரிஞ்சிருக்கும். கடல்ல அவங்க முன்னமே பார்த்திருப்பாங்க இந்த மீனை

அவர்கள் டேவிட் அண்ணனை கூவி அழைத்தார்கள்.

மூவரும் இவர்களைத் திரும்பிப் பார்த்து, என்ன? என சைகையில் கேட்டார்கள். இவர்களும் இங்க வாங்கண்ணா!’ என்று கூவினார்கள்.

இதுங்க அங்க என்னத்தை கண்டுதுக? இந்தக் கூப்பாடு போடுதுங்க?” என்று டேவிட் மற்ற இருவருடன் அந்த இடத்திற்கு வந்து கரையில் கிடந்த உடலைப் பார்த்தார்கள். அவர்களுக்கும் அது என்னவெனத் தெரியவில்லை. அவர்கள் முதலாக சிறார்களை அந்த இடத்தை விட்டு வீட்டுக்குச் செல்லுமாறு அனுப்ப முயற்சித்தார்கள்.

கொழந்தைங்களா, இது கடல் பெசாசு..எந்திரிச்சா சின்னக் குழந்தைங்களை கடிச்சுத் தின்னுடும். ஓடுங்க வீட்டுக்குஎன்றார்கள். அப்படி அண்ணன் சொன்னதும் குழந்தைகள் மிரட்சியில் இடத்தைக் காலி செய்தார்கள் ஒரு சேர.

கிராமத்திற்குள் ஓடி வந்தவர்கள் கடல் வழியாக பச்சை நிறப் பிசாசு நீஞ்சிக் கொண்டு வந்து கரையொதுங்கி இருப்பதாக கூவிக் கூவிச் சொல்லி கிராமத்தின் சந்துகளில் ஓடினார்கள். சிறிது நேரத்தில் அந்த பச்சை நிற உருவத்தைச் சுற்றிலும் கணிசமாய் கூட்டம் கூடி விட்டது.

டேவிட்டுக்கு அந்த உடலைத் தொட்டுப் பார்க்க கூச்சமாய் இருந்தது. அதை நினைக்கையிலேயே உடல் கூசி நடுங்கியது. இருந்தாலும் சிறிது நேரம் உடலைச் சுற்றி வந்து பார்த்துவிட்டு அதன் கை கால்களை தொட்டுப் பார்த்து பிசின் மாதிரி வழுக்குவதாக எல்லோருக்கும் சொன்னான். சுற்றிலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் இருவர் மட்டும் தைரியம் பெற்று அந்த உடலைத் தொட்டுப் பார்த்து டேவிட் கூறியதை ஆமோதித்தார்கள். பச்சை மனிதனின் வாய் கூம்பு வடிவில் இருந்தது. அது சிறுமீன்களைப் போல திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு அனைவருக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டு மணலில் படுத்திருப்பதாய் தோணிற்று அவர்களுக்கு.

இந்தப் பச்சை மனுஷன் வானத்திலிருந்து நட்சத்திரம் வெடித்து அதிலிருந்து கீழே விழுந்தவனாக இருக்கலாமென்றான் ஒருவன். அவனே மீண்டும், ஒருவேளை கடல்கன்னி பெத்துப் போட்ட அரை குறை பிரசவமாகக் கூட இருக்கலாமென்றான். யாராய் இருந்தால் என்ன? கிராமத்திற்கு தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியது தான் என்றொருவன் கூற, ’அது தான் சரி இதோ வந்து விடுகிறோம் அதற்கான ஏற்பாடுகளோடுஎன்று இருவர் கிராமம் நோக்கிச் சென்றனர். அவர்கள் திரும்பி வருகையில் செத்துப் போன பெல்லா கிழவியின் கட்டிலோடு வந்தார்கள்.

பெல்லா கிழவியின் குடிசை கிராமத்தின் முகப்பிலேயே இருந்தது. கிழவிக்கு வாரிசுகள் என்று யாருமில்லை. கிழவியின் வீட்டுக்காரன் யோகேபு பல காலம் முன்பே கடல் நோய் கண்டு செத்துப் போயிருந்தான். குடிசையும் அவள் செத்த பிறகு வெறுமனே கிடந்தது. கிராமத்தார் பச்சை மனிதனை பெல்லா கிழவியின் குடிசையிலேயே தூக்கிப் போய்க் கிடத்தி விடுவதுதான் சரியான முடிவென தீர்மானித்தார்கள். கட்டிலை பச்சை மனிதனின் அருகில் வைத்து, முன்பு அவனைத் தொட்டுப் பார்த்தவர்களே கையில் மணலை தொட்டுக் கொண்டு தூக்கி கட்டிலில் கிடத்தினார்கள். நான்கு பேர் கட்டிலின் நான்கு கால்களையும் பிடித்து தூக்கிக் கொண்டு செல்ல மற்றவர்கள் அவர்கள் பின் சென்றார்கள். அது பச்சை மனிதனின் சவ ஊர்வலம் மாதிரிக் கூட பொறத்தே சென்ற பெண்களுக்குத் தெரிந்தது. இருந்தும் அப்படி அபசகுனமாய் நினைப்பதை ஓரங்கட்டினார்கள். பச்சை மனிதனைத் தவற விட்ட சோகத்தில் அலைகள் இறைச்சலோடு வந்து திரும்பிச் சென்று கொண்டிருந்தன.

பச்சை மனிதனைச் சுமந்தபடி கட்டில் பெல்லா கிழவியின் குடிசைக்குள் சென்று இறங்கியது. கட்டிலின் பின்னே குடிசைக்குள் நுழைந்தவர்கள் எல்லோருமே அதிசயத்தைக் கண்டவர்கள் போல திகைத்திருந்தார்கள். பச்சை மனிதனின் உடலில் இருந்து ஒளிக்கற்றைகள் கிளம்பி குடிசை முழுதும் வியாப்பித்திருந்தது. பச்சை மனிதனின் கூம்பு வாய் மட்டும் திறந்து திறந்து மூடிக் கொண்டிராமல் இருந்திருந்தால் செத்துப் போனவன் என்றே இந்த நேரம் புதைத்திருப்பார்கள். நேரம் ஆக ஆக பச்சை நிற ஒளி கூரையை விட்டு வெளியேயும் புகை மாதிரி வியாப்பித்தது. ‘அணையப் போற விளக்கு எப்பயும் பிரகாசமாய்த் தான் எரியும்என கிழவியின் அண்டை வீட்டுக்காரி சொன்னாள். அவளே, இன்றிரவு பச்சை மனிதன் செத்துப் போய்விடுவான், என்றாள். ‘பச்சை மனிதனுக்கு சாப்பிட கூலோ கஞ்சியோ கொடுங்கள்என்றாள் ஒருத்தி.

டேவிட் பச்சை மனிதனின் வாயைப் பிளந்து பிடித்து ஆற வைத்த கஞ்சியை புணலுக்குள் ஊற்றுவது போல ஊற்றினான். கஞ்சி அவன் வயிற்றுப் பகுதியில் நீர் மாதிரி ஓடி அடிவயிற்றில் நிற்பதைக் கண்ணாடியில் காண்பது போலக் கண்டார்கள். அடிவயிற்றில் தங்கியிருந்த கஞ்சி பின்பாக மேலேறி வருவதையும் கண்டார்கள். குடித்த கஞ்சி முழுவதையுமே கட்டிலைச் சுற்றிலும் பச்சை நிறத்தில் கக்கி வைத்தான். பின் அவன் கருவிழிகள் கூட்டத்தினரை ஒருமுறை பார்த்து விட்டு மூடிக் கொண்டன.

பச்சை மனிதன் களைப்படைந்து போய் தூங்கி விட்டான் என ஒருவன் கூற, கட்டிலில் அவனை அப்படியே விட்டு விட்டு அவர்கள் கிளம்பினார்கள். அன்றைய இரவு அவர்கள் தூங்க வெகு நேரம் ஆயிற்று. தூங்காமல் நடுஜாமம் வரை கிழவியின் வாசலில் படுத்திருந்த அவள் வளர்ப்பு நாயும் கால்களுக்குள் தலையை செருகி கண்களை மூடிக் கொண்டது. பச்சை நிற ஒளி கிராமம் முழுதுமே போர்வை போல் படர்வதைக் காண கிராமத்தில் ஒருவர் கூட விழித்திருக்கவில்லை.

விடிந்ததும் அனைவருமே கிழவியின் குடிசைக்கும் முன்புதான் சென்றார்கள். கட்டிலில் கிடந்த பச்சை மனிதனைக் காணவில்லை என்றதும் அவரவர் முகம் சோம்பிப் போய் அவனுக்காய் வருத்தப்பட்டார்கள். இரவில் நட்சத்திரம் கீழிறங்கி வந்து பச்சை மனிதனை தூக்கிச் சென்றிருக்கலாம் என்றான் ஒருவன். நம்மைத் தேடிவந்த அதிர்ஸ்டம் ஒன்றை இழந்து விட்டதாக அவர்கள் மனதில் நினைத்து வருத்தப்பட்டார்கள். இரவில் கடல்கன்னி தன் குழந்தையை வாரி எடுத்துப் போயிருக்கலாமெனவும் பேசினார்கள். கிழவியின் நாயையும் காணவில்லையே! என்றாள் அண்டை வீட்டுக்காரி. ஆனால் அவர்கள் அனைவருமே பின்னர் கடற்கரை மணலில் சூரிய ஒளி தன் மீது படுமாறு படுத்துக் கிடந்தவனை தொழிலுக்குப் புறப்பட்டுச் செல்கையில் கண்டார்கள். பச்சை மனிதனைச் சுற்றிலும் சிறுமீன்கள் பல துள்ளிக் கொண்டு கிடந்தன. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அவன் மாத்திரை வில்லை விழுங்குவது போல விழுங்கிக் கொண்டு படுத்திருந்தான்.

மீண்டும் அவர்கள் கிழவியின் குடிசையிலிருந்து கட்டிலைத் தூக்கி வந்து அவனை அதில் கிடத்தித் தூக்கிப் போய் குடிசையிலேயே படுக்க வைத்தார்கள். பச்சை மனிதன் மீன்களைத்தான் தன் உணவாக உட்கொள்கிறான் என்றறிந்தவர்கள் அவனைச் சுற்றிலும் மீன்களை விதைத்து விட்டு பெண்களிடம், பச்சை மனிதன் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்றார்கள்.

அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குள் பெண்கள் தங்கள் வேலைகளை முடித்து விட்டு கிழவியின் குடிசை வாசலில் குழுமினார்கள். குழந்தைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில் குடிசையை விட்டு வெளிவந்தான் பச்சை மனிதன். பெண்கள் தங்களின் நாசியில் நறுமணம் ஒன்று நுழைந்து மயக்குவதை உணர்ந்தார்கள். ‘அங்க இங்க வெய்யில்ல போகாம கட்டில்லயே கிடஎன்று கூற வாயெடுத்து பேச முடியாமல் நறுமணத்தின் கட்டுக்குள் செயலிழந்து நின்றார்கள். வெளியேறிய பச்சை மனிதனும் கிழவியின் வீட்டை விட்டு சற்று தொலைவு சென்று வெய்யிலில் காயவைக்கும் ஈரத் துணி போல மொட்டை வெய்யலில் படுத்துக் கொண்டான். அவன் தங்களை விட்டு சற்றுத் தள்ளிப் போனதுமே நறுமணமும் குறைந்து போனதை உணர்ந்தார்கள் பெண்கள்.

பச்சை மனிதன் வெய்யிலில் கிடப்பதை அவர்கள் கண்ணுற்றதும் தத்தம் வேலைகளைப் பார்ப்பதற்காக கிளம்பினார்கள். பச்சை மனிதன் கிராமத்தை விட்டு இனி எங்கும் ஓடிப் போய்விட மாட்டான் என்று நினைத்தே தான் அவரவர் காரியங்களுக்கு கிளம்பினார்கள். குழந்தைகள் வழக்கம்போல கிராமத்தின் சந்து பொந்துகளில் ஓடியபடி கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். வெகுநேரம் விளையாடிச் சலித்துப் போன குழந்தைகள் பச்சை மனிதனை வேடிக்கை பார்க்க ஓடி வந்து குழுமினர். வெய்யிலைப் பார்த்தபடி படுத்திருந்த பச்சை மனிதனின் உடலில் செடிகள் முளைத்திருந்தன.

செடிக முளைச்சிருக்குடி, என்னாமாதிரி வாசமடிக்குது பாரு மல்லீப் பூ வாசம் மாதிரிஎன்றது ஒரு குழந்தை.

பின்வந்த நாட்களில் பச்சை மனிதன் விரைவில் வளர்ந்து பெரிய ஆலமரம் மாதிரி நின்றான். அதன் பின் இரவென்பதே இல்லாமல் போயிற்று கிராமத்தினுள். கிராமம் முழுக்க மரத்திலிருந்து எழுந்து கிளம்பிய மணம் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. தமது மந்தைகளை மேய்க்க புல்வெளிக்கு ஓட்டிச் சென்ற பெண்களின் கூந்தலில் மரத்தின் இலைகள் செருகப்பட்டிருந்தன. குழந்தைகள் மரத்தின் நீளமான விழுதுகளில் தூறி ஆடி மகிழ்ந்தார்கள் எந்த நேரமும். ரூத் தனது ஆடுகளுக்கு அந்த மரத்தின் இலைகளை பறித்துப் போட அதைத்தின்ற ஆடுகள் பின்னர் புற்களை உணவாக்கிக் கொள்ளப் பிரியப்படவேயில்லை. மீன்களை உண்பதற்கும், நண்டுகளை துரத்திக் கொண்டு கடற்கரை மணலில் ஓடிக் கொண்டிருந்தன. நண்டுகள் நான்கு கால்களில் தம்மை உண்ணவரும் விலங்கினத்தைக் கண்டு கடலுக்குள் பயந்தோடின. கடற்கரை மணல் துகள்கள் ஆட்டுக்குட்டிகளின் கால் தடங்களைப் பதுக்கிக் கிடந்தன. அப்போது தான் அங்கு அது நடந்தது.

தூர தேசத்திலிருந்து வந்த கப்பலொன்று தூரத்தே நங்கூரமிட்டு நின்றது. பின் கப்பலிலிருந்து விசைப்படகு இறக்கப்பட்டு கிராமம் நோக்கி வந்தது. கப்பலில் குடிநீர் இல்லாமல் போய் விட்டபடியால் குடிநீர் வேண்டி பெரிய பெரிய கேன்களோடு அவர்கள் கிராமத்தினுள் நுழைந்தார்கள். தண்ணீரோடு சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பியும் போய்விட்டார்கள். திரும்பி கப்பலுக்குச் சென்றவர்கள் வாசனை மிக்க மரமொன்று ஊருக்குள் நிற்பதாக கப்பல் கேப்டனிடம் கூறினார்கள். விசயத்தைக் கேட்ட கேப்டன், ‘பெரும் பெரும் துண்டுகளாக நறுக்கி கப்பலுக்குக் கொண்டு வாருங்கள்என்று உத்திரவிட்டான். அதன்படியே கப்பலில் இருந்த பணியாட்கள் அனைவரும் மேலுமிருந்த விசைப்படகுகளை இறக்கி கிராமத்தினுள் நுழைந்தார்கள். கிராமவாசிகள் மரம் எங்கள் குலதெய்வம்என்றெல்லாம் கூறியும் அவர்கள் செவி மடுக்காமல் ஆளுயர ரம்பங்கள் கொண்டு காரியத்தைத் துவக்கினார்கள்.


எல்லாமும் முடிந்திருந்த ஒரு மாத காலத்திற்குப் பின் கிராமவாசிகள் பச்சை மனிதனையும், மரத்தையும் பற்றி மறந்திருந்த ஒரு மாலையில் கடல் அலைகளில் இருந்து எழுந்த சுள்ளென்ற நெடி கிராமம் முச்சூடும் நிரம்பியது. கிராமத்தில் மாலையில் பெய்திருந்த மழையினால் சொத சொதவென நனைந்திருந்த மண்ணிலிருந்து எழுந்த வாசம் கிராமத்தின் குடிசைகளுக்குள்ளும் நிறைந்திருந்தது. உருண்டை வடிவமான மேகங்கள் மேற்கு நோக்கி பதை பதைப்புடன் ஓடிக் கொண்டிருந்தன. அப்படியான வேளையில் வியாபாரக் கப்பல்காரர்கள் மரத்தின் அடிபாகம் வரை அறுத்துச் சென்றிருந்த இடத்தில் பச்சை மனிதன் மீண்டும் துளிர் விட ஆரம்பித்தான். அன்றைய இரவின் நடு ஜாமத்தில் மீண்டும் பச்சை நிற ஒளியும் சுகந்தமான மணமும் கிராமத்தை ஆட்கொண்டது. காலையில் கிராமவாசிகள் மீண்டும் மரம் நின்றிருந்த அதிசயத்தைக் கண்டார்கள்.

ரூத்தின் ஆடுகள் எப்போதும் போல் கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்தன. ரூத்தும் கடலுக்குப் போகும் கணவனை வழியனுப்பி விட்டு தன் குழந்தையோடு குடிசைக்கு வந்தாள். வெளியே கிடந்த கட்டிலில் குழந்தையைக் கிடத்தி விட்டு குடிசைக்குள் நுழைந்தாள். இசரவேலின் ஐந்து வயது மகன் சாமுவேல் மீண்டும் நின்றிருந்த மரத்தைக் கண்டு ஆனந்தத்தில் மரம் நோக்கி ஓடினான். கீழே தொங்கியபடி இருந்த விழுதொன்றைப் பிடித்து உந்தி உந்தி விளையாடினான். பக்கத்து விழுதொன்று மூர்ச்சையிலிருந்து கிளம்பியது போல வளைந்து பையனைப் பிடித்து சுற்றிக் கொண்டே மேலே உயர்ந்தது. தன் நடுமையத்தில் பையனைப் போட்டு விழுங்கி விட்டு ஏதுமறியாதது போல பழைய நிலைக்கு வந்து தொங்கியது. கட்டிலில் கிடந்த ரூத்தின் குழந்தை தன் குறியை விரல்களில் பிடித்து நசுக்கிக் கொண்டு மரத்தைப் பார்த்து சிரித்தபடி படுத்திருந்தது.

000

Post Comment