புதன், ஜூலை 03, 2019

நகரில் தனித்தலையும் ஆடு

நகரில் தனித்தலையும் ஆடு

நகரம் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. மாவட்டத்தை தன் பெயரோடு சேர்த்தி வைத்திருந்த நகரமது. நேரம் நள்ளிரவு தாண்டி விட்டது. மொய் மொய்யென இரவு விளக்கு கம்பங்களின் அருகில் சிறு வண்டுகள் இன்னமும் பறந்தபடியே தானிருந்தன. இரண்டாமாட்டம் சினிமா முடிந்து கிளம்பிய எல்லா வாகனங்களும் தங்கள் கூடடைந்து போன நேரத்தில் தான்  நகரின் வீதியில் அந்த ஆடு தட்டுப்பட்டது.

தன்னைச் சுற்றிலும் இருளைப் போர்வையாய் போர்த்திக் கொண்டு நிதானமாய் நகரின் பிரதான சாலையில் காலடி வைத்த அந்த ஆடு பூட்டிக்கிடக்கும் ரெடிமேட் ஆடையகத்தை அன்னாந்து ஒருமுறை பார்த்து விட்டு சாலையைக் கடந்து சிக்னல் இருக்கும் பக்கமாக சாலையோரமாக சென்றது. திருப்தியான குதூகலம் மிக்க நடையல்ல அது. அந்த ஆடு தனக்குள் நினைத்துக் கொண்டிருக்கலாம், இந்த நகரம் இப்போது தன் கட்டுப்பாட்டில் நிம்மதியாக இருக்கிறதென!

லோடு ஏற்றிய லாரிகள் இரண்டு முனகிக் கொண்டு சாலையில் சென்றன. டீக்கடையொன்றின்  முகப்பில் கிடந்த கட்டிலில் போர்வைக்குள் கிடந்த உருவம் கால்களை எதற்காகவோ அசைக்கையில், சரியாக ஆடு டீக்கடை முகப்பைத் தாண்டுகையில் ஒரு கணம் நிதானித்து பார்த்து விட்டு தன் பாதையில் சென்றது. சிக்னல் விளக்குகள் இரவிலும் தங்கள் பணியைச் செய்து கொண்டுதான் இருந்தன. ஐந்து பாதை சந்திப்பு அது. வேறு நகரங்களுக்குச் செல்லும் வாகனங்கள் அந்த இடத்தில் தான் தங்கள் பாதையை தேர்ந்தெடுத்துச் செல்கின்றன.

சாலையை ஒட்டியிருந்த நீளமான சுவற்றில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் முழுக்கடையடைப்பு நாள் பற்றியான தகவல்களைத் தாங்கிய புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அவைகளின் கஞ்சி வாசம் இன்னமும் ஆறவில்லை. அருகிலேயே வர்ணமயமாய் புதிய ஆடையக திறப்பு சுவரொட்டிகளும், எம்.ஜி.ஆர் முன்னெப்போதோ கத்தி வீசி நடித்த அடிமைப்பெண் சுவரொட்டியும் நடந்து வந்து கொண்டிருந்த ஆட்டினை ஈர்த்தன.

நகரின் சுவர்களில் இப்போதெல்லாம் புதிய படங்களின் சுவரொட்டிகளை எங்குமே காணமுடிவதில்லை. திரைத்துறை ஸ்தம்பித்து நிற்கிறது என்றும், புதிய படங்களின் சூட்டிங்குகள் வழக்கம் போலவே நடந்து கொண்டிருக்கின்றனவென்றும் தகவல்களை தினசரிகள் சொல்லுகின்றன. நகரில் சில திரையரங்குகள் தங்கள் காட்சிகளை நிறுத்திக் கொண்டன என்றும் தகவல்கள் ஒருமாத காலமாக வந்து கொண்டிருக்கின்றன. மக்கள் அதைப்பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு நேரமில்லாமல் டீயை அவசரமாய்க் குடித்து விட்டு சாலையோர பேக்கரிகளிலிருந்து பிழைக்க ஓடிக் கொண்டிருந்தார்கள்.

திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு என்றும், கோபியில் வாகன விபத்தில் மூன்று பேர் பலி என்றும், காதலனுடன் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி தஞ்சம் என்றும் வழக்கமான செய்திகளையே அவர்கள் வாசித்துக் கொண்டிருக்க, கமல்ஹாசனின் மையம் பற்றியும், அவரே அடுத்த முதல்வர் என்று அவரே கூறிக் கொள்வதாயும், ரஜினிகாந்த் ஒரு சந்தர்ப்பவாத கன்னடக்காரர் என்றும் ஒவ்வொரு நகரங்களிலும் மக்கள் கூடிக் கூடி பேசியபடி கலைந்து கொண்டு தானிருந்தார்கள். புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வராதது பற்றி ஒரு வாரம் மட்டுமே குசுகுசுத்துக் கொண்டவர்கள் அடுத்ததாக பேசுவதற்கு அரசியலை எடுத்துக் கொண்டார்கள்.

எப்போதும் போல தன்னுடைய அடுத்தபடம் வெளியாகிவிடுமென்ற நம்பிக்கையில் அதிரடி செய்திகளை மீடியாவுக்கு வழங்கிய ரஜினிகாந்த் கொட்டகை அதிபர்களின் போராட்டத்தால் தொய்ந்து போய் காணாமலாகி காணாமலாகி அவ்வப்போது மைக்குடன் காட்சியளிப்பதாக நகரின் கழிப்பறைக்குள் பக்கத்து பக்கத்து அறைக்குள் மூலம் என்கிற அவஸ்தையில் சிரமப்பட்ட இருவர்கள் பேசிக் கொண்டதை யூரின் மட்டுமே இரண்டு ரூபாய் கொடுத்துப் போனவன் காதில் கேட்டு, கோபி செல்லும் பேருந்தில் ஏறி பயணிகளுக்கு உரக்கச் சொன்னான்.

தன் ஊருக்கு சொன்ன நேரத்தில் தலைவன் வரலையென்றும், வரவே மாட்டானென்றும் தெரிந்து கொண்ட தொண்டர்கள் குட்டான் கூடி சதியாலோசனை செய்து தலைவன் கும்பிடு போட்டு நிற்கும் மிக உயர்ந்த ப்ளக்ஸ்களை டார் டாராய் கிழித்து நிம்மதிப்பட்டு டாஸ்மார்க் பாரில் சென்று அமர்ந்து கொண்ட தகவல்களை மீடியாக்கள் உரத்துக் கூறிக் கொண்டிருந்தன. காக்கிசட்டை மீது கைவைப்பது கண்டனத்திற்கு உரியதென்று தலைவன் கூற, மைந்தன் ஒத்தையில தான் திரியணுமென சேதிகள் அலைபேசி வாயிலாக சென்று கொண்டேயிருந்தன நகரமெங்கும்!

அடிமைப்பெண் சுவரொட்டியை சுவைத்து மென்று தீர்த்த அந்த ஆடு அடுத்து ஆடையக சுவரொட்டியில் வாய் வைத்து மேலிருந்து கீழாக இழுத்துக் கிழித்து சுவைத்து மென்றது. ஒவ்வொரு இரவிலும் பசிக்காக சுவரொட்டிகளை மட்டுமே உண்டு வாழும் அந்த ஆடு எப்போது இந்த நகருக்குள் நுழைந்தது என்று யாருக்கும் தெரியாது.

நகரின் கறிக்கடை வீதியில் கடை போட்டிருக்கும் சிலருக்கு இந்த ஆட்டின் மீது கண் தான். கிட்டத்தட்ட முப்பது கிலோவுக்கும் பக்கமாக வெட்டிக் கூறு போட்டால் வந்து விடும் ஆடு அது. ஆனால் ஆட்டை அவர்களால் பிடிக்கவே முடியாதது தான் அவர்களுக்கான சோகம். மூன்று பேர் முட்டுச் சந்தில் நின்று மசை நாயை துரத்தியோடிக் கொல்வது போன்றெல்லாம் ஆட்டின் மீது அவர்கள் தங்களின் செயலூக்கத்தை காட்டிவிட முடியாது. அது நாய். இது ஆடு.

மதிப்பிற்குரிய இந்த ஆடு சமூக வலைதளங்களில் கூட நகரில் வலைதளத்தில் சேவையாற்றும் சிலரால் புகைப்படம் பிடிக்கப்பட்டு, ’எங்கள் நகரின் ஆடுஎன்று வசனமெழுதிப் போட்டு ஐநூறு விருப்பக்குறிகள் என்று வாங்கியும், வாவ்! ஆடு சூப்பர் நண்பா! என்கிற தோழமையின் கருத்துக்களையும் பெற்று மகிழ்ந்து சோறு உண்டார்கள். இதுபற்றியெல்லாம் அறியாத ஆடு வயிற்றுத் தேவையை முன்னிட்டே பின் இரவுக் காலத்தில் நகரில் சுற்றியது.

சொல்லடி பட்டாலும் கண்ணடி படல் கூடாது என்பது போல பகல் வேளைகளில் இந்த ஆடு எங்கே செல்கிறதென கறிக்கடைக்காரர்கள் நகரத்தின் இண்டு இடுக்குகளிலெல்லாம் சல்லடை வைத்து அலசியும் தேடிக் கண்டறிய முடியாமல் போகவே சாக்கடைக்குள்லெல்லாம் தேடி ஓய்ந்தார்கள். கடைசியாக அவர்கள் ஆட்டை சந்தித்தது நகரின் புளுகிராஸ் ஆபிஸின் எதிரில் உயர்ந்து நின்றிருந்த வேப்பை மரத்தின் நிழலடியில். ஆட்டிற்கு அவ்ளோ அறிவா? என்று அவர்கள் பேசிக் கொண்டே தங்களின் கறிக்கடைக்கு டிவிஎஸ் ஐம்பதுகளில் பயணித்தார்கள்.

ஆட்டிற்கோ தன் எதிர்க்கே இருக்கும் குட்டி அலுவலகம் தன்னை சீண்டவே விடாத அலுவலகம் என்பதெல்லாம் தெரியாது. நகரின் மறுகோடியில் எல்லா மரங்களும் அழிந்த பிறகு கண்ணிற்குத் தட்டுப்பட்ட இந்த ஒரே மரத்தடியில் நிழலுக்காக அது வந்து உடலைச் சாய்த்துப் பழகி விட்டது. தன்னை யாரோ ஒருவர் இந்த மரத்தோடு சேர்த்து நீண்ட கயிறு கொண்டு பிணைத்திருக்கிறார்கள் என்று அதுவாகவே நினைத்துக் கொண்டிருக்கலாம்.

புல் தானாகவே வளருகிறது என்று ஒரு தாடிவைத்த அழகான பெரியவர் சொல்லிச் சென்றிருந்தார். இந்த நகரில் புல் தானாகவே அழிந்து விட்டதை அவருக்குச் சொல்லலாமென்றால் அவர் செத்து வருடங்களாகி விட்டது. ஆக புல் என்பது ஒரு அதிசயப் பொருளாக அந்த ஆட்டுக்கு ஆகிவிட்டது. மனிதனுக்கும் அரிசி என்பது அப்படியே ஆகிவிடலாமென பேச்சாய்ப் பேசுகிறார்கள். எப்போதேனும் தலைவர் அழைக்கிறார் என்று லாரியில் முன்னூறு ரூவாய் பணமும் ஒரு கோட்டர் பாட்டிலும் வாங்கிக் கொண்டு ஏறிய குக்கிராமத் தொண்டன் நகர வீதியில் அவன் ஆசைகொண்ட பீட்ஷாவைத் தின்ன கடை தேடி அலைவது போல புல்லைத் தேடி அலைந்தது அந்த ஆடு.

கிராமத்தில் நீரில் ஊற வைத்த ரேசன் அரிசி சாப்பிட்டுப் பழகிய ஆடுகள் கூட எப்போதேனும் மழை பெய்த காலங்களில் புற்களை தின்ன வாய்ப்புக் கிட்டி விடும். கிராமத்து ஆடுகள் காகிதங்களை சாப்பிடுவதில்லை தான். தங்கள் எஜமானர்கள் எதுவுமே தீனிக்கு ஏற்பாடு செய்யாத காலங்களில் அவர்களையே தின்றுவிடும் வெறி கொண்ட ஆடுகள் தான் கிராமத்தின் ஆடுகள். ரேசன் அரிசி சாப்பிட்டு உடல் வளர்த்த ஆடுகள் நகரங்களில் வெட்டப்பட்டு கிலோ ஐநூறு ரூபாய்க்கு கறிவிசுவாசிகளுக்குச் சென்று சேர்கிறது. ‘இது ஆட்டுக்கறியா?’ என்கிற கேள்வி அவர்கள் மனதில் விழுந்து விட, விசுவாசிகள் கடல் மீனென்றும், ஆற்று மீனென்றும் போய் விடுகிறார்கள்.

ஆடு தனக்குப் போதும் என்கிற அளவில் சுவரொட்டிகளை தின்று விட்டு கிளம்பலாம் என்று பார்த்த சமயத்தில் நகரின் காவல்துறை வாகனம் மிக மெதுவாக ஊர்ந்து கொண்டு சிக்னல் அருகில் வந்து ஓய்ந்தது. வாகனத்தின் மேல்புறத்தில் சிவப்பும் நீலமும் கலந்த விளக்கு விட்டு விட்டு எரிந்து கொண்டிருந்தது. இன்ஸ்பெக்டர் பலராமன் கையிலிருந்த கருவி கர்ப்புர் என்றும் சில தமிழ் வார்த்தைகளையும் சொல்லிக் கொண்டிருக்க வாகனத்தை விட்டு இறங்கி தன் பேண்ட்டை பெல்ட்டோடு சேர்த்து மேலேற்றினார். பின்னாலேயே இறங்கிய கான்ஸ்டபிள்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பத்தாம் நெமபர் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு உச்சா போக தோதான இடம் பார்த்தனர்.

கந்தசாமி.. அங்க நின்னுட்டு நம்மை பாக்குறது பொது மக்களோட நாய்களை குதறி எறியுற வினோத விலங்கா?” என்றார் தினத்தந்தி செய்தி போலவே பலராமன். பேண்ட் ஜிப்பை கீழிறக்கிக் கொண்டிருந்த கந்தசாமி அவர் சுட்டிக் காட்டிய வினோத விலங்கை பார்த்து முறுவலித்தார்.

சார் கண்ணாடியை மாட்டிட்டு பாருங்க சார்! அது ஆடு

ஆடா? என்னப்பா இது பெருசா இருக்கே மாடாட்டம்? போய்ப் புடிச்சா பார்ப்பம். ஸ்டேசன்ல எல்லோருக்கும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்என்றார். தமிழை ஓரளவு புரிந்து வைத்திருந்த ஆடு கறிக்கடைக்காரர்கள் பேசுவது போன்ற தோரணையான பார்வையில் இன்ஸ்பெக்டர் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து மெதுவாக சாலையில் இறங்கியது. அதற்குத் தெரியும். இந்த மனிதர்கள் கொஞ்சமும் கருணையற்றவர்கள் என்று.

ஏப்பா கந்தசாமி, ஆடு நைசா கிளம்பப் பாக்குதப்பா.. ஓடிப் பிடிச்சா போஎன்று இன்ஸ்பெக்டர் சொல்லுகையில் கந்தசாமி ஆட்டை நோக்கி சாலையில் ஓட ஆரம்பித்திருந்தான். ஆடு நாலுகால் பாய்ச்சலில் ஏதோவொரு பெருநகரம் நோக்கிச் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்து ஓட்டமெடுத்தது. குரூரபுத்தி கொண்ட கந்தசாமி ஆடு தனக்கு விடும் சவாலாக நினைத்து வக்கிரமான புன்னகையோடு ஆட்டைத் துரத்த ஆரம்பித்தான். வேகவைக்கப்பட்ட ஆட்டின் விரைகளும், கண்ணா முழிகளும் அவன் விரும்பிச் சாப்பிடுபவை. ஈரல் சாப்பிடுவதிலும் கெட்டிக்காரன்.

இத்தனை நாட்களாக இந்த நகரில் ரோந்து சுற்றியும் கண்ணுக்கு அகப்படாத ஆடு இன்று விசேசமாக பட்டிருக்கிறதென்றால் அதன் ஆயுள் முடிவுக்கு வந்துவிட்டதாகத்தானே அர்த்தம்! திருட்டு நாய், திருட்டுக் குரங்கு வரிசையில் இதுவும் திருட்டு ஆடு தான். திருட்டு நடைபெறாமல் தடுப்பதும் திருடியவனிடமிருந்து பிடுங்கிக் கொள்வதும், ஹெல்மட் அணியாமல் குடும்பம் சகிதமாய் செல்லும் எவனையும் துரத்தியேனும் பிடித்து கட்டி வைத்து மிதிப்பதும் காவல்துறையின் கடமை.

ஆடு கந்தசாமிக்கி போக்கு காட்டி வேறுநகரம் நோக்கியெல்லாம் ஓடத் துவங்கிவிடவில்லை. அதற்கு இந்த நகரின் வீதிகள் மட்டுமே அத்துபடி. இந்தச் சந்தில் நுழைந்தால் எங்கு போகலாம், முட்டுச் சந்து எங்கு வரும் என்பதெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நகர ஆடு. கந்தசாமி கேருக் கேருவென ஆட்டைத் துரத்தி வந்தவன் திடீரென மாயமான ஆட்டை நின்று தேடினான். ஆட்டுக்கும் இரவில் ஓடி விளையாடும் ஆட்டம் பிடித்திருக்கும் போல!

கான்ஸ்டபிள் கந்தசாமி பின்தங்கி விட்டான் என்பதையுணர்ந்த ஆடு வேறொரு சந்திலிருந்து எட்டிப் பார்த்து தனக்கென இருக்கும் சின்ன வாலை ஆட்டி அந்த இரவில் முதலாக மேஏஏஎன்று சப்தமிட்டது. கந்தசாமி மீண்டும் கண்பார்வையிலிருந்து தவற விட்டு விட்ட ஆட்டை முழுதாகப் பார்த்தான். இது கசாப்புக்கடைக்கு வந்த பிதிர்கெட்ட ஆடு அல்லவென்பதை உணர்ந்து மீண்டும் ஒரு முயற்சியாக அதை நோக்கி ஓடினான். ஆடு பக்கத்திலிருந்த சந்தில் நுழைந்து தெருநாய் ஒன்றைக் கண்டு நிதானித்தது.

நகரில் சுற்றும் பல தெருநாய்களுக்கு இந்த ஆட்டைத் தெரியும் பல மாதங்களாக. அவைகளில் சில இதை குரைத்தும் மிரட்டியும் பார்த்து ஆட்டின் முன்னங்கால்களால் மிதி வாங்கிக் கொண்டு ஊளையிட்டு ஓடியிருக்கின்றன. அப்படி முன்பே முன்னங்கால் மிதி வாங்கிய நாயாகத்தான் அது இருந்திருக்க வேண்டும். இந்த ஆட்டைக் கண்டதுமே பீதியில் தலைதெறிக்க வந்த வீதியிலேயே திரும்பி ஓடிற்று. அப்படி பீதியில் ஓடும் நாயைக் கண்ட கந்தசாமி ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு சிக்னல் நோக்கிச் செல்லும் சந்தில் நடக்க ஆரம்பித்தான். ஆடு மீண்டும் மேஏஏஎன்று சப்தமிட்டது. கந்தசாமிக்கு அந்த சப்தத்தைக் கேட்க தன் தோல்வி உறுத்தியது. கடைசியாக இன்ஸ்பெக்டரிடம் வந்து சேர்ந்த கந்தசாமி, ‘அது ஆடில்லீங்க சார்.. மானு வகையைச் சேர்ந்தது!’ என்றான்.

ஆட்டிற்கு நாளாக நாளாக நகரில் எதிரிகள் அதிகமாயினர். தியேட்டர் அதிபர்கள் தங்களின் விளம்பர சுவரொட்டிகளை ஆடு தின்றுவிடுகிறதென காவல் நிலையம் சென்று ரிப்போர்ட் மேல் ரிப்போர்ட் கொடுத்தனர். அதிகாரிகள் ஆட்டின் மீது ஒரு ஸ்டெப் போட தாமதிக்கிறார்கள் என்று தாங்களே கூலிப்படையை அமைத்தனர். கூலிப்படை தடிகளோடு ஆட்டைத் தேடி நகர வீதியில் அலைந்தனர். கூடவே கூலி வாங்காமல் கறிக்கடைக்காரர்களும் தடிகளோடு அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் விஜய் துப்பாக்கியோடு நகர வீதியில் இரவானதும் புல்லட்டில் சுற்றினார்.

வலைதளங்களில் சேவையாற்றும் சிலர் தங்கள் பக்கங்களில் புளுகிராஸ்என்ன செய்கிறது? என்றும், ‘ஆடு தப்பிப் பிழைக்குமா சமூக விரோதிகளிடமிருந்து?’ என்றும், ‘வாயில்லா ஜீவனை வதைப்பதே மனிதனுக்கு வேடிக்கையான வாடிக்கையாகப் போய்விட்டதுஎன்றும் விருப்பக்குறிகளின் மீது ஆசை கொண்டு மீண்டும் ஆட்டின் புகைப்படத்தைப் போட்டு ஒரு கொந்தளி கொந்தளித்து விட்டு மனைவி செய்த ரசம் சூப்பர் என்று பக்கத்து இருக்கையாளரிடம் சொல்லி மகிழ்ந்தார்கள். சாய்கோணமாக இருக்கும் பூமியை முட்டி மோதி நிமிர்த்தி விடுவார்கள் இவர்கள் என்று வெறுத்த சில வலைதள நண்பர்கள் ஆடு பற்றி தகவல் போட்ட நண்பர்களை நட்பிலிருந்து அகற்றி விட்டு முனியாண்டி விலாஸ் சென்று சிக்கன்ஃப்ரை சாப்பிட்டார்கள்.

புளுகிராஸ் என்ன செய்கிறது? என்று கேட்ட வலைதள நண்பரிடம் புளூகிராஸ் சார்பாக எந்தத் தகவலும் அவன் பக்கத்தில் பதியப்படாமல் போகவே, உள்ளூர்க்காரி ஒருத்தியின் புகைப்படத்தைப் போட்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழிஎன்று பதிவிட்டான்.

இப்படியாக நகரின் செய்திச் சேனல் ஒன்று பொதுமக்களிடம் ஆடு பற்றியான தகவல்களைக் கோர்த்து ஒருமணி நேரம் ஓட்டி மகிழ்ந்தது. “அது மாரியம்மன் கோவில் ஆடுங்க, அதுக்கு யாரு சிரமத்தைக் கொடுத்தாலும் ஆத்தா கண்ணைப் பிடுங்கிடுவா” “மனுசனக் கடிச்சு, மாட்டக் கடிச்சு கடெசியா ஆட்டையும் கடிக்கப் போறானுங்களா? அரசாங்கம் செரியில்ல! எதிர்கட்சி என்ன பண்டுது?” என்று தூள் கிளப்பினார்கள் பொது மக்கள். ‘நான் ஆட்டைப்பத்தி பத்து நிமிசம் பேசியிருக்கேன் நெலா டிவில.. மூனு மணிக்கி ஒளிபரப்புறாங்க பாரு மாப்ளெ!’ என்று எவனோ மாமன் எவனோ மாப்பிள்ளைக்கி போன் போட்டுக் கொண்டிருந்தான் நகர பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு. நகரின் சேனல் செய்த நல்ல காரியம் ஒன்று இருந்தது.

புளுகிராஸ் அலுவலகம் முன்பாக வேப்பை நிழலில் படுத்துக் கிடந்த ஆட்டுக்கு வெளியூரிலிருந்து வெட்டிக் கொண்டு வந்திருந்த கிலுவைமர இலைகளை புளுகிராஸ் அலுவலக வாட்ச்மேன் கொடுக்க ஆடு அவன் கையிலிருந்து வவக் வவக்கென பிடுங்கித் தின்னும் காட்சி தான். ஆக புளூகிராஸ் அலுவலக வாசலில் வைத்து சம்பவத்தை நடத்த முடியாத கூலிப்படை ஆட்கள் தருணத்தை எதிர்பார்த்து வீதியில் திரிந்தனர். ‘உங்களுக்கு குடுத்த பணம் வேஸ்டு!’ என்று தியேட்டர் அதிபர்கள் அவர்களை அலைபேசியில் கடிந்தார்கள். மீடியாவின் பார்வை ஆட்டின் மீதே இருப்பதால் இந்த சமயத்தில் ஆட்டுக்கு ஒன்றென்றால் அத்தனை பேரும் கம்பி எண்ணப் போக வேண்டியது தான்.. என்றுணர்ந்த கூலிப்படை அன்றிரவே ஊரைக் காலி செய்து வேறு நகரம் போய் விட்டது.

விசயம் இப்படியிருக்க ஆடு நிஜமாகவே நகரிலிருந்து காணாமல் போய் விட்டது. காவல்துறைக்கு அனாசின் மாத்திரை வில்லைகளும், ஜெண்டு பார்ம் டப்பிகளும் அதிகம் தேவைப்பட்டன. தலைநகரில் இருக்கும் மிகப்பெரிய செய்திச் சேனல் ஊழியர்களும் நகர வீதியில் கேமராவோடும் கையில் மைக்கோடும் அலைய ஆரம்பித்தார்கள். சிக்னல் பகுதிகளில் ஆடு காணாமல் போன தினத்திலிருந்து விபத்துகள் நடக்க ஆரம்பித்து விட்டன. சுவரொட்டிகள் அனைத்தும் சுவற்றில் பளிச்சென முழுசாய் இருந்தன.

காணாமல் போன ஆடு எங்கே? தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பார்வையும் இந்த நகரை நோக்கியே இருந்தது. ரஜினிகாந்தும் கமலஹாசனும் இந்த சமயத்தில் அமைதி காத்தார்கள். ’புளுகிராஸ்காரர்களே மட்டன் பிரயாணி போட்டு விட்டார்களா?’ என்று உள்ளூர் தோழிக்கு வாழ்த்துச் சொல்லி பதிவேற்றிய வலைதளப் போராளி கேள்வியைக் கேட்டு விட்டு முட்டை போண்டா சாப்பிட மலையாளத்தான் கடைப்படி ஏறினான். ‘இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்என்றொரு பதிவை உலகை வெறுத்த ஜீவன் ஒருவர் வலைதளத்தில் பதிவேற்றி விட்டு மாட்டுக்கறி சாப்பிட பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

உள்ளூர் நகரவாசிகள் தங்கள் சொந்த வீட்டிலிருந்து ஒரு குழந்தை காணாமல் போனது போல் பசியே இல்லாமலும், சோறு இறங்காமலும் தவித்தார்கள். ஆட்டை கண்டுபிடிக்கச் சொல்லி உண்ணாவிரதப் பந்தல்கள் முளைத்தன நகரின் முக்கியமான சந்திப்புகளில். அங்கு போய் உட்கார்ந்ததும் அவர்களுக்கு பசியெடுக்க ஆரம்பித்து விடவே பந்தலுக்கும் பின்னால் சிக்கன் பிரயாணி வரவழைத்து ஐந்து ஐந்து பேராய் எழுந்து சென்று சாப்பிட்டு வந்தார்கள்.

ஆட்டுப் பிரச்சனை மூன்று நாட்கள் தாண்டி நான்காவது நாளை எட்டியது. இரவு நேர தள்ளுவண்டிக் கடைகளில் ஆட்டுக்கால் சூப் குடிப்போர் யாருமில்லை என தள்ளுவண்டிக்காரன் துக்கப்பட்டான். கறிக்கடைகளில் சிக்கன் கோழிகள் மட்டும் சுத்தமாக பொங்கு பொசுக்கப்பட்டு மஞ்சள் பூசித் தொங்கின. நகரையொட்டியிருந்த குறுநகரங்களில் ஆட்டுக்கறி கிலோ ஐநூறிலிருந்து கிடுகிடுவென பெட்ரோல் விலை உயருவதுபோல எழுநூற்றி ஐம்பதுக்கு தாவியது. சிக்கன் சாப்பிடாத நகரவாசிகளில் சிலர் பேருந்து ஏறிப்போய் முக்கால்கிலோ வாங்கி வந்து சமைத்தார்கள். கொஞ்சமேனும் கொஞ்சமாய் ஆட்டுக்கறி சாப்பிட்ட நகரவாசிகள் வயிற்றில் கசமுச ஏற்பட்டு வாந்தியெடுப்பதற்காக பக்கத்து குறுநகரத்திற்கு ஸ்கூட்டரிலும் ஆட்டோவிலும் பிரயாணம் செய்தார்கள். இப்படியாக இருந்த ஒரு ஞாயிறையும் முழுதாய் தொலைத்தார்கள். இப்படி நடக்க காரணம் காணாமல் போன ஆடு நகருக்கு கொடுத்த சாபமென சம்மணம் போட்டு உட்கார்ந்து பேசினார்கள்.

நான்காவது நாளில் பக்கத்திலிருக்கும் குறுநகரத்தின் காங்கரீட் சாலை போட்ட தெருவொன்றின் வீட்டிலிருந்த திண்ணையில் ஹாயாக படுத்தபடி வாயை அசை போட்டு படுத்தபடி இருக்கும் நகர ஆட்டை வலைதளத்தில் பொதுமக்கள் பார்த்தார்கள். ஆடு கடித்து உண்ண வசதியாக ஒரு பெருங் கொத்து அகத்திக்கீரை கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்த வீடு புளூகிராஸ் அலுவலகத்தின் வாட்ச்மேன் வீடு.

ஒருவாரம் கழிந்திருக்கும், அந்த நகரம் எப்போதும் போல் நள்ளிரவில் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. வெறிச்சோடிக்கிடந்த நகரவீதியில் ஒற்றை மாடு நிதானமாய் நடந்து வந்து கொண்டிருந்தது.
                                                                                                                 -உயிர்மை 2018Post Comment

ஷாராஜ் விமர்சனம்


Shahraj Strokes

மதிப்பிற்குரிய ஆடு : வா.மு.கோமுவின் ‘நகரில் தனித்தலையும் ஆடு’ சிறுகதை பற்றிய எனது வாசிப்பு அனுபவம்
********************
வா.மு.கோமுவின் ‘நகரில் தனித்தலையும் ஆடு’ சிறுகதையை (அவர் அனுப்பிக் கொடுக்க) முந்தா நாள் இரவுதான் வாசிக்க வாய்த்தது. வாசிக்க வாசிக்கவே நான் அடைந்த மகிழ்ச்சி, உற்சாகம், மன நிறைவுக்கு அளவே இல்லை. நேற்று அவருக்கு அலைபேசி அது குறித்து விரிவாகவே சொல்லி, எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டேன். இப்போது உங்களிடமும் சில முக்கிய தகவல்களை உதிரிகளாக பகிர்ந்துகொள்கிறேன்.

குறிப்பாக இந்தச் சிறுகதை என் போன்ற சக கதையாளக் கற்றுக்குட்டிகளுக்கு மிகவும் பயனளிக்கும். கதையோடிகள் குழுவில் கவியோவியத் தமிழனும் கூட ஏதாவது ஒரு கதையை எடுத்துக்கொண்டு அலசல் செய்யலாமே என்று கேட்டிருந்தார். அந்த அளவுக்கு விமர்சன ரீதியாகவோ, ஆய்வு ரீதியாகவோ நான் அணுக முற்படவில்லை. ஆனால் சமகால தமிழ்க் கதை எப்படி இருக்கிறது, இருக்க வேண்டும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணங்களில் ஒன்றாக இக் கதையைச் சொல்லலாம். ஒரு மிகச் சாதாரணமான காட்சியிலிருந்து மிகச் சிறந்த கதையை உருவாக்குவது எப்படி என்கிற ரசவாத வித்தையை இளம் படைப்பாளிகளும், என் போன்ற போதாமைப் படைப்பாளிகளும் இக் கதையிலிருந்து கற்றுக்கொள்ளவும் முடியும்.

உயிர்மை இதழில் கடந்த ஆண்டு வெளியான இக் கதையின் தலைப்பிலேயே இப்போது கோமுவின் சிறுகதைத் தொகுப்பு வாசகசாலை வெளியீடாக வெளிவந்துள்ளது. விலை: ரூ.130/-

தொகுப்பை நான் இன்னும் முழுதாக வாசிக்கவில்லை. எனக்கு இந்த ஒரு கதையே இப்போதைக்கு நிறைவைத் தந்திருப்பதாலும், அது பற்றி அவசியம் எழுத வேண்டும் என்று பட்டதாலும் இப்போது இப் பதிவு.

கதையைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். முதலாவதும் அடிப்படையுமான விஷயம் அதன் கதை. நகரத்தில் ஒரு ஆடு சுவரொட்டிகளைத் தின்று தீர்க்கிறது. இதுதான் ஒன் லைன். இதை வைத்துக்கொண்டு கோமு என்னவெல்லாம் வித்தை காட்டி, இப்படி ஒரு மாஸ்டர் பீஸைத் தந்திருக்கிறார் என்பது பேராச்சரியம். அதுதான் அவரது மாஸ்டர் மைண்ட்!

கோமுவுக்கு இது சாதாரணம். ஆனால், மற்றவர்களுக்கு அசாதாரணம்.

நகரத்தில் மாடு, ஆடுகள் சுவரொட்டி தின்பதைப் பார்த்திராதவர்கள் யாரேனும் உண்டா கதையாளப் பெருங்கூட்டத்தில்? ஆனால் அந்தக் காட்சியை வைத்துக்கொண்டு இது போன்ற அசாதாரணப் படைப்பைத் தர நம்மில் எவ்வளவு பேரால் இயலும்? நம்மில் ஒருவருக்காவது இது போல தோன்றியிருக்குமா?

கதைச் சுருக்கம் இதுதான்: வளர்ப்போர் இல்லாத ஒரு ஆடு நகரத்தில் (ஈரோடு) சுவரொட்டிகள் முழுதையும் தின்று தீர்ப்பதால் அந் நகரத்தில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன, அது திரையரங்குகள், அரசியல் ஆகியவற்றை எப்படி பாதிக்கிறது, பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள், அதற்கு சமூகத்திலும் சமூக ஊடகங்களிலும் எந்த மாதிரியான எதிர்வினைகள் ஏற்படுகின்றன, காவல் துறையினர் என்ன செய்ய முற்படுகிறார்கள், இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் கதை.

கதை நோக்கம், ஆட்டை முன்வைத்து செய்யப்படும் சமூக, அரசியல் இன்னோரன்ன விமர்சனங்களே! இதற்குள் புக இங்கே இடமும் இல்லை. வாசகர்கள் வாசிக்க வாசிக்கவே அதை அறிந்தும் கொள்ளலாம்.

கதையாக்கம் பற்றி சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் சொல்வதெனில் “நவீன செவ்வியல்”! என்னைப் பொறுத்தவரை இது கோமுவின் சிறுகதைகளில் அதி உச்சம்.

கோமுவின் பல கதைகளிலும், கள்ளி போன்ற நாவல்களிலும் தொடக்கப் பகுதி பழைய செவ்வியல் பாணி சித்தரிப்பாக இருப்பதைக் காண்போம். சட்டெனவோ பிறகோ அது மாறி அவரது பொது இயல்புக் கதையெழுத்துத் தன்மைக்கு வந்துவிடும். இக் கதையில் தொடக்கம் முதல் இறுதி வரை செவ்வியல் தன்மை குறைவுபடாமல் தக்க வைக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பம்சம். கோமுவின் வழக்கப்படியே இதுவும் வேகமான கதைதான். ஆனால், ஒவ்வொரு வாக்கியமும், ஒவ்வொரு பத்திகளும் சுவை மிக எழுதப்பட்டிருப்பதாலும், நுட்பங்கள் விரவிக் கிடப்பதாலும் ஒவ்வொரு வாக்கியத்தையும் நிறுத்தி நிதானமாக ரசித்து வாசித்தும், மறு வாசிப்பு செய்து ருசித்தும்தான் வாசித்தேன். இதுவரை கோமுவின் கதையை இந்த மாதிரி வாசிக்க நேர்ந்ததே இல்லை. அந்த அளவுக்கு செறிவும் கவித்துவமும் கொண்ட மொழி நடை, பல வகை ஜாலத் தெறிப்புகள்.

இயல்பான கவித்துவ மொழி இக கதையில் பயிலப்பட்டிருப்பது மிக முக்கிய அம்சம். கொள்ளாதவன் வாயில கொளக்கட்டையத் திணிச்சு கொரவளையத் திருகற புனைவு மொழிவாதிகளுக்கு ஹைலி ரெக்கமண்டட்.

இக கதை உடனடியாக எனக்கு பஷீரின் ‘ஃபாத்தும்மாவின் ஆடு’ குறுநாவலை ஞாபகப்படுத்தியது. அக் கதைக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. ஆனால் பஷீரின் நாவல்களிலேயே எனக்கு மிகப் பிடித்தமானது ‘ஃபாத்தும்மாவின் ஆடுதான். வாழ்வின் சாரம் மிக்க பகுதியை அப்படியே துண்டாக வெட்டி எடுத்து வைத்தது போன்ற கச்சிதமான படைப்பு அது. பஷீர் மனப்பிறழ்வுற்றிருந்த சமயம் அதை எழுதி முடித்தார் என்பது நம்பவியலாத ஆச்சரியம் தரக் கூடியதும் கூட.

ஜெயசூர்யா நடிப்பில் மலையாளத்தில் ஆடு என்ற திரைப்படம் இரண்டு பாகங்கள் வந்திருப்பதை தொ.கா. துணுக்குகளில் அறிந்திருக்கிறேன். எனினும் அவற்றைக் கண்டதில்லை.

ஆடு வளர்ப்பு பற்றிய ஒரு பழைய காஷ்மீரச் சிறுகதையையும் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. ஆனால், அது வழக்கமான ஒரு கதைதான். அதைத் தாண்டிய தள நகர்வு அதில் இல்லை. தனக்கான உணவாக சுவரொட்டிகளைத் தேடி நகரில் தனித்தலையும் இந்த தமிழக ஆடு தனது அலைச்சலினூடே பல்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நம்மை நமக்குள் பல் வேறு தளங்களுக்குள்ளாக தனித்து அலைய விடவும் வைக்கிறது. தமிழகத்தின் திரை – அரசியல் பண்பாடு, சுவரொட்டிக் கலாச்சாரம், ஊடக வியாபாரங்கள், போலிச் சமூக அக்கறைகள் முதலானவை நுட்பமாகவும் கூர்மையாகவும் வெளிப்படையாகவும் சாட்டையடியாகவும் விமர்சிக்கப்படுகின்றன. அந்த ஆட்டை வேட்டையாட யாரெல்லமோ முற்படுகிறார்கள். அவற்றிலிருந்து தப்பித்து இறுதியில் மிக இயல்பாக தக்க பாதுகாப்பை ஆடு அடைகிறது; கதையின் அடுத்த காட்சி தொடங்குகிறது.

ஒரு ஆங்கிலத் திரைப்பத்துக்கான கட்டமைப்பை இக் கதையில் நாம் காணலாம். இதைச் சொல்கையில் கோமுவின் முந்தைய ‘கொலைகார ஸ்கூட்டர்’ உடனடி ஞாபகத்துக்கு வருகிறது..

ஃபாத்தும்மாவின் ஆடு போல இந்த ஆடு கதையிலும் பரந்துபட்ட ஒரு முழுமை இருக்கிறது.

நகரில் தனித்தலைகிற அந்த ஆடு உண்மையில் ஆடுதானா, அல்லது குறியீடா? வளர்ப்போரும் மேய்ப்போரும் இல்லாத, சுவரொட்டிகளைத் தின்று வாழும் அந்த ஆடு யார்? மதிப்பிற்குரிய அந்த ஆடு நாமேதான்!திரை நடிகர்கள் அரசியல்வாதிகளாகி மக்களை ஆளவும் ஆள முற்படவுமாக இருப்பது தமிழக வரலாற்றில் தொன்று தொட்டே நிலவுகிற வழமை. அரசியல்வாதிகளோ மகா நடிகர்களாக இருப்பது உலக வழமை. திரைப்படம், அரசியல் இவ்விரு துறைகளின் ஆதாரங்களில் ஒன்றான சுவரொட்டிகளைத் தின்று வாழ்வது ஒற்றை ஆடோ, நகரத்தில் இருப்பது மட்டுமோ அல்ல. நாட்டு மக்கள் அனைவருமே அந்த ஆடுதான். ‘நானும் கிராமமும்’ (1911) என்ற தலைப்பில் மார்க் சாகல் வரைந்த பிரசித்தி பெற்ற நவீன ஓவியம் எனக்கு நினைவு வருகிறது. கிராமத்தில் ஆடும், ஆட்டுக்குள் ஆடும் இருப்பதைச் சித்தரிப்பதினூடாக ஆட்டுக்குள் கிராமமும் இருப்பதை கோடி காட்டி உணர்த்தும் ஒப்பற்ற ஓவியம் அது. இக் கதையிலும் அப்படித்தான், அந்த ஆட்டுக்குள் நாமெல்லாரும் ஆடுகளாக இருக்கிறோம். நாம் தனித்தலையவில்லை; குழு குழுவாக, கூட்டம் கூட்டமாக, மந்தை மந்தையாக அலைந்துகொண்டிருக்கிறோம், நமக்கான சுவரொட்டிகளை, சின்னங்களை, கொடிகளை, பதாகைகளைத் தேடித் தின்றபடி.

Post Comment

சனி, மே 11, 2019

கடலை -16SC NO : 42

மாணிக்கம் கலையரசி வீட்டுக்கு வருதல்! பைக் ஹாரன் கேட்டு ஜன்னலில் இருந்து பார்த்து கலையரசி மகிழ்ச்சியோடு ஓடி வெளிவருதல்!

கலையரசி : வாங்க மாணிக்கம்! வீட்டை கண்டு பிடிக்கிறதுல எதும் சிரமமில்லையே!

மாணிக்கம் : இருக்கறதுலயே இந்த வீதி மட்டும் பளிச்சுனு பிரகாசமா இருந்துச்சு பகல்லயே! எனக்கு சுலபமா போச்சு கலை! அப்பா இருக்காரா?

கலையரசி : அப்ப அவரை பார்க்கத்தான் வந்தீங்களா? என்னைப் பார்க்க இல்லையா?

மாணிக்கம் : பிள்ளைங்க எல்லாரும் ஒன்னைக்கண்ட மாதிரியேதான் இருக்காங்க!

கலையரசி : எத்தனை பிள்ளைங்களை தெரியும் உங்களுக்கு?

மாணிக்கம் : பின்ன எதோ ஒரு சாக்கு சொல்லிட்டு கண்மணிய பார்க்க வந்திருக்கேன்! ஒரு முத்தமுண்டா? ஒரு லிப் டு லிப் உண்டா?

கலையரசி : வீட்டுக்குள்ள வாய்ப்பு கிடைக்குதான்னு பார்க்கலாம்! (மாணிக்கத்தை முதுகில் கைவைத்து வீட்டுக்குள் தள்ளிக் கொண்டு செல்தல்)

வீட்டினுள் மாலையோடு கலையரசியின் அப்பா போட்டோவில் இருத்தல்!

மாணிக்கம் : அப்பா எங்கே? (கலையரசி காதில் குசுகுசுத்தல்)

கலையரசி : அந்த ரூம்ல!

மாணிக்கம் பூபதி கட்டிலில் படுத்திருக்கும் அறைக்கு வந்து ஒரு சேரை எடுத்துப் போட்டு அவர் அருகில் அமர்தல்!

பூபதி : மாணிக்கா!

மாணிக்கம் : அப்பா என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க? யாருகிட்டவும் சொல்லாம! நான் எங்கெங்க தேடினேன் தெரியுமா!

பூபதி : மனசு சரியில்லப்பா! அதான்.. நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியில!

கலையரசியின் அம்மா வருதல்! கையில் தண்ணீர் செம்பு.
அம்மா : வாங்க தம்பி!

மாணிக்கம் எழுந்து வணங்கி தண்ணீரை வாங்கி பேருக்கு துளி குடித்து விட்டு தண்ணீர் செம்பை கொடுத்தல்!

கலையரசி : அவங்க பேசிட்டு இருக்கட்டும் நீ காபி போடும்மா! (குரல் கொடுத்தல்)

மாணிக்கம் : அப்பா என்னை மன்னிச்சுடுங்கப்பா!

பூபதி : நீ என்னடா தப்பு பண்ணினே நான் மன்னிக்க! நீ என்கிட்ட சபதம் போட்டே! அதுல ஜெயிக்க நீ போன ரூட்டு தான் தப்பா போயிடுச்சுடா!

மாணிக்கம் : அப்பா, ஆயா தான் நீங்க டுவல்த் எக்ஜாம்ல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்து கோப்பையோட நின்னுட்டு இருக்குற போட்டோவை பேப்பர்ல காட்டுச்சு!

பூபதி பெருமூச்சு விட்டு கையை உயர்த்தி இறக்குதல். படுக்கையிலிருந்து எழுந்து அமர்தல்!
கலையரசி இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தல்.

பூபதி : மேகாட்டுல மொத்த இடத்தையும் முடிச்சுட்டியா?

மாணிக்கம் : ஆமாப்பா! எல்லாருக்குமே அட்வான்ஸ் டோக்கன் கொடுத்துட்டேன்!

பூபதி : (பெருமூச்சுடன்) கால காலமா ஊருக்கே சோறு போட்ட மண்ணுடா அது!

மாணிக்கம் : இன்னமும் அது சோறு போடும்ப்பா!

பூபதி : டெல்லிக்காரனுக்கு!

மாணிக்கம் : இல்லப்பா! நம்ம ஊருக்கே! நமக்கே!

பூபதி : என்ன மாணிக்கா சொல்றே? அதான் எல்லா காட்டுக்காரன் கிட்டயும் வியாபாரம் பேசி முடிச்சுட்டியே!

மாணிக்கம் ; எல்லா இடத்தையும் ஒரே டைம்ல வாங்கிக்கறதுன்னு தான் இருக்காங்க! ஒரே வேலையா முடிஞ்சுடும்னு அவங்க கணக்கு! மொத்த செட்டிலும் ஒரே நாள்ல முடிச்சுக்குவாங்க! தம்பியண்ணன் டெல்லில இருக்காரு! அவரு வர இன்னும் ரெண்டு நாள் இருக்குஅதுக்குள்ள நாம எதாவது பண்ணனும்ப்பா!

கலையரசி : நீங்க இதை நிஜமாவே சொல்றீங்களா மாணிக்கம்!

(காட்சிகள் கலையரசி விளக்கம் கொடுக்க, இடையிடையே பூபதி பேச, மாணிக்கமும் கருத்து சொல்ல என்று பேச்சில்லாமல் விரைவாக நகருதல்)

மாணிக்கம் : நீங்க சொல்றபடியே பண்ணிடறேனுங்கப்பா!

பூபதி : சரி அப்ப நீ போயிட்டு வா!

மாணிக்கம் எழுந்து அறையை விட்டு வெளிவருதல்! கலையரசி மாணிக்கம் கைப்பிடித்து பக்கத்து அறைக்குள் இழுத்துச் சென்று முத்தமிடுதல்!

மாணிக்கம் : இது எதுக்கு பிசுக்கு?

கலையரசி : இது மாணிக்கம்ற ரியல் எஸ்டேட் கல்ட்டி காணாமப் போனதுக்கு!

மாணிக்கம் : அப்ப மாணிக்கம்ங்கற விவசாயிக்கி? அதும் பிசுக்கா?

கலையரசி : அது பிசுக்கா இருக்குமா? இப்ப பாருங்க…. (அழுத்தமான முத்தம்)
மாணிக்கம் அறையை விட்டு வெளி வருகையில் உதட்டிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருப்பது!


SC NO : 42 A

மாணிக்கம், காளி, மணி ,சுப்பு, என்று நண்பர்கள் அமர்ந்து விவாதிப்பது!

காளி : நீ சொல்றதெல்லாம் சரி தான் பங்காளி! ஆனா இடத்துக்காரங்க கிட்ட கால்ல விழாத குறையா பேசி, பணத்தாசை காட்டி, சிலபேரை லைட்டா மிரட்டி காரியத்தை முடிச்சுட்டோம்! இனிப்போயி அவங்க கிட்ட கூட்டு விவசாயம் பண்ணலாம்! வெளிநாட்டுக்கு நாம ஏற்றுமதி பண்ணலாம்னு பேசுனம்னு வைய்யி

மணி : ஆனாலும் இதை நாம பண்ணித்தான ஆகணும் காளி! மாணிக்கம் சொல்றதை வச்சு பார்த்தா அவங்குடுக்குற காசு ஒன்னுமேயில்லன்னு தான ஆகுது!

காளி : சரி அவங்க கிட்ட எப்படி போயி உக்காந்து சொல்லி விளக்குறது?

மாணிக்கம் : நம்மை நம்பித்தான மண்ணை விக்க வந்தாங்க! அதெல்லாம் நாம சொல்லுற விதமா சொன்னா அதையும் சரியின்னு கேப்பாங்க பங்காளி!

காளி : ஒவ்வொருத்தனும் காசு வந்ததும் என்னென்ன பண்ணலாம்னு காசை முடிக்கிறதுல கணக்கு போட்டுட்டு வீட்டுல உக்காந்திருக்கான் தெரியுமா! நம்ம ராசு பையன் சுண்டெலியாட்ட இருந்துட்டு என்ன பேச்சு பேசுறான் தெரியுமா காலையில!

மாணிக்கம் : என்னாங்கறான்?

காளி : காடு வித்து அப்பன் கையில காசு வந்துடுச்சுன்னா நேரா போயி ஒரு ஆம்னி வேன் எடுப்பானாம்! புளியம்பட்டில புளியமரத்துக்கு அடியில நிப்பாட்டி வாடகைக்கு ஓட்டுவானாம்! அப்பத்தான் பிறவிப்பயனை அடைவானாம்! எல்லாரும் பணம் பணம்னு தூங்காம கிடக்காங்க பங்காளி!

மாணிக்கம் : சரி அதுக்கும் ஒரு திட்டம் வச்சிருக்கேன்!

காளி : திட்டமா? நீ அவ்ளோ பெரிய்ய மூளைக்காரன் இல்லியே!

மாணிக்கம் திட்டத்தை அவர்களுக்கு சொல்லுதல்!

காளி : இது சரியாச் செஞ்சம்னா எடுபடும்னு நினைக்கேன் பங்காளி! ஆமா யாரு இவ்ளோ டீட்டெய்லா உனக்கு மேப் போட்டு குடுத்தது?

மாணிக்கம் : உன்னோட அண்ணி (வழிதல்)

காளி : கேப் விழுந்தா கெடா வெட்டிடறே!

SC NO : 43
(இரவு நேரம்) மேகாடு

மாணிக்கம் தன் நண்பர்களுடன் மம்பட்டியுடன் காட்டில் குழி பறிப்பது!

மாணிக்கம் : காட்டுல மம்புட்டி கத்தின்னு வெச்சுட்டு வேலை செய்யுறதுன்னா சின்னத்தான வேலை இல்லியாட்ட பங்காளி !

காளி : ஆமா வேர்வை பாரு தண்ணியா ஊத்துது! நேம்பாவே இருந்து பழகிட்டமா.. திடீருன்னு உழைப்பை கொட்டுறதால பாடி கண்ணீர் விடுது!

சுப்பு : பையில இருக்குறதை இந்த குழியிலயே கொட்டிடலாம் காளி! இதோட பத்தாவது குழி வெட்டீட்டு இருக்கோம்!

காளி : ஆமா பங்காளி ! இன்னொரு குழி பட்டாளத்தான் காட்டுல வெட்டுவோம்னு சொன்னின்னா அதே குழியில என் பாடி தான் விழுகும்! ஒவ்வொரு நரம்பும் போதும்டா போதும்டான்னே கத்துது! கோயில வேற காலைல பத்து மணிக்கு தான் திறப்பாங்க!

அப்போது புல்லட் சப்தம் தூரத்தில் கேட்பது!

சுப்பு : பட்டாளத்தான் புல்லட் சப்தம் தான் அது! இவனெங்க வெடிகாலைல பைக்க எடுத்துட்டு போறான்?

மாணிக்கம் : சரி பையை கொண்டா மணி! (பையை வாங்கி குழிக்குள் கொட்டுதல்)

பைக் முக்கு திரும்புகையில் காட்டில் நான்கு பேர் இருப்பதை பட்டாளத்தானும் பின்னால் அமர்ந்து வந்த இன்னொருவனும் பார்த்து விடுவது! சாலையோரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு.. காட்டுக்குள் ஒடி வருதல்!

பட்டாளத்தான் : யார்றா அவனுக? திருட்டுப் பயலுகளாடா?

இன்னொருவர் : உடாதே புடி! ராத்திரில காட்டுக்குள்ள என்னடா பண்றீங்க?

மாணிக்கம் நண்பர்கள் இருட்டினுள் ஓடுவது! அவர்கள் துரத்துவது!

காளி அருகில் ஓடி வரும் மாணிக்கத்திடம் : இவன் நெசமாலுமே பட்டாளத்துல இருந்திருப்பான் பங்காளி ! துப்பாக்கி பிடிச்சுட்டு பாகிஸ்தான்காரனை துறத்துற மாதிரியே ஸ்பீடா வர்றான் பங்காளி! ஓடு! சிக்குனம்னா சட்னி தான்!

மாணிக்கம் : அவனுக எங்க பங்காளி?

காளி : முன்னால புகையப் பாரு! புகைப்பறக்க ஓடுறானுக!

பட்டாளத்தான் ஓட முடியாமல் ஓய்ந்து நிற்பது! பின் திரும்பி காட்டில் மாணிக்கம் நண்பர்கள் நின்றிருந்த இடத்திற்கு வருவது! அங்கு ஏற்கனவே கூட வந்தவர் மூடிய குழிக்கு அருகே கிடக்கும் காசுகளை எடுத்து திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருத்தல்!

பட்டாளத்தான் : என்னது?

அவர் : தங்கக்காசு மச்சான்!

பட்டாளத்தான் : கொண்டா பாக்கலாம்! (வாங்கி பார்த்தல்)

அவர் : வந்தவனுக புதையல் எடுக்க வந்திருப்பனுகளோ!

பட்டாளத்தான் : புதையலா! காசு பளப்பளன்னு புதுசா இருக்கே!

CUT SHOT
(விடிகாலை) ஊர் பரபரப்பாக இருத்தல்.
மேகாட்டுல புதையல் கிடைச்சிருக்காமா! பட்டாளத்தான் ஒரு பையி ரொம்ப தங்கக் காசு எடுத்தாந்தானாமா!

அதனால தான் காட்டை வெலைக்கி கேட்டிருக்காங்க!
எங்க வீட்டுக்கார்ரு தகவல் தெரிஞ்சதீம் காத்தாலயே மம்புட்டியும் கையுமா போயிட்டாரு!
மேகாட்டில் மம்பட்டியுடன் ஆட்கள் அலைதல்!

காட்டிற்கு உள்ளூர் தலைவர் வேலுச்சாமி காரில் வருதல்! கூடவே இருவர்!

காட்டில் குழி பறைத்துக் கொண்டிருக்கும் இருவரிடம்

வேலுச்சாமி : என்னப்பா எதாச்சிம் உங்களுக்கு புதையல் கிடைச்சுதா?

அவர் : யாருங்க தலைவரா! அதான் பறைச்சுட்டு இருக்கமுங்க! அதென்ன பக்கத்து காட்டுல ராமசாமி காசு எடுத்திருக்கான்! பார்த்துட்டு தர்றேன்னதுக்கு ஒரு காசை கையில கூட தரமாட்டீங்கறான்!

வேலுச்சாமி : புதையல்னா அது அரசாங்கத்துக்கு சேரணும் தெரியுமா?

அவர் : எம்பட காட்டுல இருக்குற காசை நான் எதுக்குங்க தலைவரே அரசாங்கத்துக்கு குடுக்கோணும்? இது நல்ல நாயம்!

வேலுச்சாமி : அப்ப போலீசுக்கு தகவல் சொல்லிட வேண்டிது தான்!

அவர் : போயி மளார்னு கூட்டி வாங்க! ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சதுக்கு பெருசா என்னமோ போலீசுங்கறான்அரசாங்கமுங்கறானே! பாத்துப்போடறேன் யாரு எம்பட காட்டுக்குள்ள காலை வச்சுடறாங்கன்னு!

வேலுச்சாமி ராமசாமி காட்டுக்கு வருவது! ராமசாமி காசுகளை எண்ணிக் கொண்டிருப்பது!

வேலுச்சாமி ; ராமசாமி! ஒரு காசை கொண்டா பாக்கலாம்!
ராமசாமி அவரிடம் தருதல்!

வேலுச்சாமி : இதான் புதையல் காசா? என்னப்பா லலிதா ஜூவல்லர்ஸ்னு போட்டிருக்குது?

ராமசாமி : லலிதா ஜூவல்லர்ஸுங்களா வேலுச்சாமி! நானும் என்னமோ இங்கிலிபீச்சுல எழுதியிருக்குதேன்னு பார்த்தேன்!

வேலுச்சாமி : ராமச்சாமி.. புதையல்னா பழங்காசா கிடைக்கணும்! இது யாரோ உங்களை ஏமாத்த பண்ண வேலையாட்ட இருக்கே? ஒரசிப் பாத்தா தெரிஞ்சிடும்!

ராமசாமி : ஒரசிப்பாத்துடாதீங்க! தங்கம் தேஞ்சு போயிடும்! லலிதா ஜூவல்லர்ஸ்னா அது எப்பயிருந்து பாரம்பரியம் மிக்கதுன்னு டிவில சொல்றாங்கள்ளநாம பொறக்காத காலத்துக்கும் மிந்தியிருந்து இருக்குது! இது புதையல் தான்!

அதற்குள் கல்லில் வேலுச்சாமி உரசிப் பார்த்து தகரம் என்று அறிவது!

வேலுச்சாமி : என்னப்பா ஒரே ஒறசுல மேல் பூச்செல்லாம் போயி வெறும் தகரம் தான் தெரியுது!

ராமசாமி : தகரமா? கொண்டாங்க பாக்கலாம்! அட ஆமாம்!

SC NO : 43 A
(இரவு)
மாணிக்கம் கூட்டத்தார் முன் நின்று பேசுவது!

மாணிக்கம் : ஊர்க்காரங்க எல்லோரும் முதல்ல என்னை மன்னிக்கணும்!

கூட்டத்தில் ஒருவர் : நாங்க எதுக்குப்பா உன்னை மன்னிக்கணும்! எல்லாரையும் வரச் சொன்னே! சரி ரிஜிஸ்டர் ஆபீசுக்கு போற தேதியை சொல்வீன்னு வந்து உக்காந்திருக்கோம்!

மற்றவர் : பணத்துக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்குது மாணிக்கம்! சீக்கிரம் குடுத்தீன்னா ஆவும்! எங்க கையெழுத்து போடச் சொல்றியோ அங்க போட்டு குடுத்துடறோம்! எங்களுக்கு பேசுன பணம் வந்தா சேரி!

மாணிக்கம் : நீங்க யாரும் உங்க நிலத்தை விக்க வேண்டாமுங்கறதுக்காகத் தான் உங்களை இங்க வரச்சொன்னது!

ஒருவர் : அப்ப எங்களுக்கு பணம்?

மாணிக்கம் : அதை காடே நமக்கு சம்பாதிச்சு குடுக்கும்!

மற்றவர் : இத்தனை காலமும் சம்பாதிச்சு தரும்னு நம்பித்தான அதுலயே கெடந்தோம்! அது ஆவறதில்லீன்னு நீதான வித்துடச் சொன்னே! இதென்னப்பா தூங்கி எந்திரிச்சா ஒரு நாயம் சொல்ற பழமையா?

மாணிக்கம் : ஆமாங்க! நான் தான் புத்தி கெட்டுப் போயி உங்களை எல்லாம் வித்துடச் சொன்னேன்! அதுக்காக இப்ப உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்!

ஒருவர் : நமக்கென்ன கையில காசு வாயில தோசைங்கற மாதிரியே நடந்துட்டு இருக்கேப்பா! காத்தால தங்கக் காசு கிடைக்குதுன்னு காட்டுல குழி பறிச்சோம்! அது பூச்சு தகரமாப் போச்சு! இதெல்லாம் யாரு பண்ற வேலை?

மற்றவர் : பூபதி ஐயா படிச்சுப் படிச்சு சொன்னாரு நிலத்தை விக்காதீங்கப்பான்னு! அப்ப நம்ம காதுலயே ஏறுல! பையனை நம்பினோம்! இப்ப அவனும் அதே தான் சொல்றான்!

மாணிக்கம் : உங்களுக்கு நிலத்தை வித்தா எவ்ளோ காசு கிடைக்குமோ அதே காசை நாம எல்லோருமா சேர்ந்து புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வெளிநாடுகள்ள பண்ற மாதிரி கூட்டு விவசாயம் பண்ணினோம்னா சம்பாதிச்சுடலாம்! உற்பத்தியாகுற பொருள்களை நாம வெளிநாட்டுக்கு நேரடியா ஏற்றுமதி பண்ணுறோம். நிலத்தையும் நாம விக்க வேண்டியதில்லை!

மற்றவர் : அப்படி நாம என்ன செய்யுறோம் நம்ம நிலத்துல!

மாணிக்கம் : அதை நான் பிறகு சொல்றேன்! நாம அப்படி ஒரு முயற்சி எடுத்துப் பார்க்கலாம்னு தான் உங்க கிட்ட கேட்கிறேன்! (கும்பிடுதல்) எல்லாரும் காட்டை விக்கற தப்பான காரியத்துக்கு எனக்கு ஒத்துழைப்பு குடுத்தீங்க! இன்னிக்கி காட்டை காப்பாத்திக்க எனக்கு ஒத்துழைப்பு குடுங்க! கண்டிப்பா நாம ஜெயிப்போம்!
ஆளாளுக்கு காதில் குசு குசுத்தல்!

தம்பி நல்லது தான் சொல்லுது போல!

ஒருவாட்டி தான் பாப்பமே!

இத்தன காலம் கிடந்தமாமா.. தம்பி என்னமோ கூட்டு விவசாயம்ங்குதே! அதையும் ரெண்டு வருஷம் பாப்பம்!

வெளிநாட்டுக்கு அனுப்புதாமே தம்பி! காசு லம்ப்பா தான் வரும்!

ஒருவர் : சரி தம்பி! நீங்க பண்ணப்போற காரியத்துக்கு எந்த இடைஞ்சலும் இல்ல! நாங்க உனக்கு எல்லாருமே ஒத்துழைப்பு குடுக்குறோம்!

மாணிக்கம் அவர் காலைத் தேடி குனிவது!

ஒருவர் : தம்பி! இதென்ன தம்பிபழக்கம்! நாம் ஜெயிப்போம் தம்பி!

கூட்டத்திலிருந்து பழனிஎல்லாம் போச்சுஎன்று புலம்பிக் கொண்டு செல்வது!

SC NO : 44
பழனி தன் எக்செல் சூப்பரில் தம்பியின் ஆபீஸ் சென்று வண்டியை அவசரமாய் நிறுத்தி விட்டு ஆபீசினுள் ஓடுவது! தம்பி சேரில் அமர்ந்திருப்பது!

தம்பி : அட பழனி ஏன் இப்பிடி அவசரமா வர்றே? இன்னும் என்ன சின்னப்பையனா நீயி ஓடி ஆடறதுக்கு?

பழனி : நீங்க பாட்டுக்கு டெல்லி போறேன்னு போயிட்டீங்க! இங்க ஒரு வாரத்துல கதையே மாறிப்போச்சுங்கண்ணா!

தம்பி : கொஞ்சம் தண்ணிய மொதல்ல குடி! ஏப்பா! (அருகிலிருந்தவனிடம் தண்ணீர் கொண்டு வரச் சொல்தல். பழனி டம்ளர் தண்ணீரை குடித்தல்)

தம்பி : இனிச் சொல்லு!

பழனி : எல்லாருத்த பொழப்பும் நாசமாப் போச்சுங்கண்ணா! எம்மாப்ள மாணிக்கம் வில்லனா இருந்தவன் இப்ப கதாநாயகனா ஆயிட்டான்ணா!

தம்பி : சொல்றதை ஒழுக்கமாச் சொல்லு பழனி! வில்லன் கதாநாயகன்னுட்டு!

பழனி : எல்லாருக்கும் அட்வான்ஸ் குடுத்து வச்சிருந்தம்ல! அவனுக கிட்ட மாப்ளையே போயி காட்டை குடுக்க வேண்டாம், விவசாயமே பண்ணலாம்னு சொன்னங்காட்டி வாங்கின அட்வான்சை எல்லாரும் திருப்பி குடுத்துட்டாங்க! எழுதி குடுத்த பத்திரத்தை வாங்கிட்டு போயிட்டாங்க!

தம்பி : அப்புறம்?

பழனி : அப்புறமென்ன? நாமத்தை நாம போட்டுட்டு போவேண்டீது தான்!

தம்பி : எல்லாமே முடிஞ்சுதா?

பழனி : நம்ம பணத்தை எங்கையில அவன் குடுத்துட்டான்!

தம்பி : இத்தனை நாள் செலவு பண்ண பணம்? அவனுக சாரயம் குடிக்கவும், எலக்சன்ல நின்னதுக்கு குடுத்ததும், ஆபீஸ் போட்டதும்.. என்னை என்ன வட்டையன்னு நெனச்சுட்டானா?

பழனி : அப்படித்தான் ஆயிப்போச்சுங்கண்ணா!

தம்பி : அப்ப நம்மாளுகளுக்கு போனை போட்டு வரச் சொல்லிட வேண்டீது தான்! அவனுக மிதிக்கிற மிதியில ரசம் வந்தரோணும் பாத்துக்க!

பழனி : நீங்க என்ன வேணாலும் பண்ணுங்கண்ணா! கையத் திருகுங்க, காலத் திருகுங்க.. மாப்ளைய உசுரோட உட்டுருங்கோ!

தம்பி : தே! பாசமா மாப்ள மேல!

பழனி : இல்லீன்னா அவங்கப்பன் என்னைய கொன்னு போடுவாப்லைங்க!
தம்பி போனை எடுத்தல்!

தம்பி : நம்ம ஆளுகளை கூப்பிட்டு ஆபீசுக்கு வாங்கடா!

CUT SHOT
உள்ளூர் பெட்டிக்கடை முன்பாக நான்கு பொலிரோ வண்டிகள் வந்து நிற்பது!

தம்பி : போயி அந்தப் பொட்டிக்கடையில அவனெங்க இருக்கான்னு சன்னமா விசாரி!

அவன் கடைக்கு வந்து கடைக்காரனிடம் விசாரித்தல்!

அவன் ; இங்க மாணிக்கமுன்னு ஒருத்தரு இருப்பாப்லைல்ல! அவரை எங்க பாக்க முடியும்?

கடைக்காரன் ; தெங்கியோ மேகாட்டு பக்கம் போறதாத்தான் இப்ப இங்க உக்காந்து பேசிட்டு இருந்தாங்களே!

அவன் : அங்க போறக்கு வழி?

கடைக்காரன் : அப்பிடியே நேரா போவேண்டிது தான்.. ஊரை தாண்டினா அரை கிலோ மீட்டர்! நீங்க யாரு? இத்தனை வண்டில வந்திருக்கீங்க?

அவன் பதில் சொல்லாமல் வண்டிக்கு வருவது!

தம்பி : எங்கியாமா?

அவன் : மேகாடாம்ணா! நேரா உடுங்க! (வண்டிகள் கிளம்புதல்)

மேகாட்டில் மாணிக்கம் நண்பர்களோடு காட்டை நோக்கி கைநீட்டி பேசிக் கொண்டிருப்பது! அப்போது வண்டிகள் அவனருகில் சென்று நிற்பது! தம்பி டீம் அவர்களை ரவுண்டு கட்டுவது!

SC NO : 45
மாணிக்கமும், நண்பர்கள் காளி, மணி, சுப்பு அடியாட்களிடம் அடிபடுவது!

தம்பி : அவனுகளை மரத்துல கட்டுங்கடா!

ஒரே மரத்தில் நான்கு பேரையும் கட்டுதல்!

தம்பி மாணிக்கத்தை பார்த்து : ஏண்டா! பொழைக்கறக்கு உனக்கு ஐடியா குடுத்தா சரிங்கண்ணா சரிங்கண்ணாண்ட்டு கடைசீல எங்க தலையில கல்லை போடறியாடா! எங்களை என்ன கேனப்பயலுகள்னு நெனச்சிட்டியா? (பக்கத்திலிருப்பவனிடம்) தடிய வெச்சுட்டு சும்மா ஏண்டா நிக்கே? போடறா ஆளுக்கொன்னு!

பூபதி தடியை ஓங்கினவனை உதைத்துத் தள்ளி சண்டைக்கு வருதல்! சண்டையிட்டபடி மரத்தின் கட்டை அவிழ்த்தல்! மாணிக்கம் களத்தில் இறங்கி சண்டையிடுதல்!
கடைசியில் கீழே கிடக்கும் தம்பிதண்ணி தண்ணிஎன்று கத்துதல்!

பூபதி தம்பியிடம் : இம்போர்ட் செஞ்சு குடி!

மாணிக்கத்தின் நண்பர்களை அழைத்துக் கொண்டு பூபதி செல்தல்!

SC NO : 46
நவீன விவசாயி கெட்டப்பில் மாணிக்கம் பிறர் இருத்தல்! வட்டி வனிதா அங்கு வருதல்!

வனிதாவை கண்டதும் காளி மாணிக்கத்திடம் : ஐய்யயயோ! பங்காளி திருவள்ளுவர் ஐய்யனோட பேத்தி வருது! வந்தா வேற உன்னை ஐய்யன் பாட்டை பாடச் சொல்லுமே!

மாணிக்கம் : வரட்டும் பங்காளி! சொல்லிட்டா போச்சு!

காளி : எத்தனை நாளா மனப்பாடம் பண்ணே? வாம்மா! வனிதா! பங்காளி இன்னிக்கி கரைட்டா பாடீருவான்! நீ கேட்டுப்பாரேன்!

வனிதா கையை எங்கே பாடுங்கள் என்றவாறு அசைத்தல்!

மாணிக்கம் : ( தொண்டையை செருமிக் கொண்டு)

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

MOTIVATION SONG START

நவீன விவசாயி கெட்டப்பில் மாணிக்கம் 30 ட்ராக்டர்களுடன் விவசாய நிலத்தில் நிற்பது! கூடவே கலையரசியும் இருப்பது! ட்ராக்டரில் ஏற கலியரசிக்கு கை கொடுக்கும் மாணிக்கம்! கலையரசி ட்ராக்டரில் உள்ல டச் ஸ்கிரீனில் நிலங்களின் அளவுகளை பதிவு செய்தல்!

INTER CUT

கலையரசி விவசாயம் சம்பந்தப்பட்ட ஆங்கில புத்தகங்களை மாணிக்கத்திடம் காண்பிப்பது! விளைபொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி INTERNET –ல் கண்பித்து மாணிக்கத்தை ஊக்கப்படுத்துவது! இருவரும் நகரும் காட்சிகளில் இருவரின் கைகள் இணைந்தே இருப்பது! பூபதி சந்தோசமாய் ஆட்களுடன் ட்ராக்டர்களை காட்டி பேசுவது! பாட்டி மரத்தடியில் செல்போன் பார்த்தபடி இருப்பது! ட்ராக்டர்களை போட்டா எடுப்பது! பாட்டி பேண்ட் சர்ட்டில் இருப்பது! கண்ணுக்கு கண்ணாடி!
பாடல் முடிகையில் பசுமை! (மேலும்)

SC NO : 47
மாணிக்கம் தன் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை முன் ஊராருடன் நின்றிருத்தல்! கலெட்டர் கார் தொழிற்சாலைக்குள் வருதல். பூபதி ஐயா சென்று கார் கதவை திறந்து விடுதல்! காளி மாலையணிவித்து அவரை வரவேற்றல்! பூபதியிடம் பேசியபடி கலெக்டர் ரிப்பன் வெட்டுமிடத்திற்கு வருதல்! அங்கு மாணிக்கம், கலையரசி, அவள் அம்மா, மாணிக்கம் அம்மா, தங்கை என்று வணங்கி வரவேற்பது! ரிப்பன் வெட்ட மாணிக்கம் கத்தரியை கலெக்டரிடம் தருதல்! கலெக்டர் புன்னகைத்து வெட்டுதல்!

பின் கலெக்டர் மாணிகத்தை கட்டியணைத்து வாழ்த்து சொல்லி விட்டு விடை பெறுதல்!

CUT SHOT
அனைவரும் மகிழ்ச்சியாக காபி, ஸ்னேக்ஸ் என்று சாப்பிட்டுக் கொண்டிருக்க மீடியா சேனல் மாணிக்கத்தை இண்டர்வியூ செய்ய ஆயத்தமாதல்!

பெண் ; நமது டிவிக்கு திரு. மாணிக்கம் அவர்கள் விவசாயத்துறையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதித்ததைப் பற்றி இப்போது நமக்கு சொல்வார்!

பெண் : வணக்கம் மாணிக்கம் சார்!

மாணிக்கம் ; வணக்கம்!

பெண் ;  பழவகைகளை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உங்க தொழிற்சாலை திறக்கப்பட்ட இன்றே எங்க சேனலுக்கு உங்களோட வெற்றியை கொண்டு போறதை மகிழ்ச்சியா நினைக்கிறோம் சார்!

மாணிக்கம் பந்தா செய்தபடி

பெண் : ஆறுபடையப்பா ரியல் எஸ்டேட் பிஸ்னஸ்ல இருந்த நீங்க விவசாயம் தான் நாட்டுக்கு உயிர் அப்படின்னு திரும்ப ஏதாவது முக்கிய காரணம் இருக்குமே?

காளி : (அதை பார்த்தபடி மணியிடம்) அப்பனுக ப்ளாஸ் லைட்டால தான்!

மணி : அது ப்ளாஸ் லைட்டில்ல.. ப்ளாஸ் பேக்!

காளி : உனக்கு ஆங்கில அறிவு இருக்கு ஒத்துக்கறேன்! கோயில் நடை திறந்து ஒரு மணி நேரமிருக்குமா?

மாணிக்கம் கூற முயலுகையில் பூபதி வணக்கம் வைத்தபடி குறுக்கே வருகிறார்!

பூபதி ; அதெல்லாம் எதுக்கும்மா! அதான் நம்ம தலைவர் அன்னிக்கே சொல்லிட்டாரே!

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி! விவசாயி!

ROLLING TITLE

             -சுபம்-Post Comment