வேளாண்மை என்பது தொழில் அல்ல.. வாழ்க்கை முறை
வாழ்க்கையில் அர்த்தமே இல்லை. எந்த முக்கியத்துவமும் இல்லை. கோழைத்தனம் தான் மனிதனை
வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டு
வரும் தைரியம் இல்லாமல் போய்விட்டது. கோழையாக இருக்காதே.
தற்கொலை தான் நீ கோழையல்ல என்பதை நிரூபிக்கும்.
-ஸெனோ, கிரேக்க தத்துவ
ஞானி.
சமயவேலின் புனைவும் நினைவும் தொகுப்பானது அவரது
சிறுவயது மற்றும் இளவயது ஞாபகங்களை நினைவோடை தகவல்களாக நமக்குச் சொல்லிச் செல்கிறது. முன்பாக நினைவில் நிற்கும் ஊரைப் பற்றியும், தாம் சந்தித்த
மனிதர்களைப் பற்றியும் புனைவாக்கம் செய்பவர்கள் சற்று மிகையாகவே சேர்த்து (இட்டுக் கட்டி) இப்படியான மனுசன் கூட நான் பழகி இருந்திருக்கேனாக்கும்!
என்று சொல்லும் பெருமை அவர்களது புத்தகங்களில் தெளிவாகவே தெரியும்.
போக அப்படிப் பழகிய மனுசன் கடேசி காலத்துல சோத்துக்கில்லாம, கண்ணுந் தெரியாம டிச்சுக் குழியில விழுந்து செத்தாம் பாருங்க.. அன்னிக்கி தாம் மனுச வாழ்க்கையை நெனச்சு நான் ஆறு மணி நேரம் அழுதேன் என்று
முத்தாய்ப்பாய் முடிப்பார்கள். வாசகர்களும் கண்ணீர் சிந்தி அழும்
நிலைக்கு தள்ளும்படி அவரது எழுத்து முறை இருக்கும். ஆனால் சமயவேல்
உள்ளதை உள்ளபடி பொட்டில் அடித்தாற்போல் சொல்லி முடிக்கிறார் ஒவ்வொரு தகவல்களையும்.
உருமித் திரியும் தற்கொலைகள் என்றொரு தனிப்பகுதியில்
ஒன்னம்மா அரளி குடித்தும், படித்த நகரில் வளர்ந்த விஜயாக்கா
வின் இறப்பும், அமராவதி அண்ணி பூச்சி மருந்து குடித்தும்,
மஞ்சுளா அக்காவின் மரணமும் ஒரே பகுதியில் சொல்லப்படுகிறது. ஒவ்வொருவருக்குமான வாழ்க்கை தனித்தனியாக இருக்கிறது. தனியாகவும் சமயவேலால் சொல்லவும் முடியும் தான். இருந்து
தற்கொலைகள் என்கிற தலைப்பின் கீழாக தான் ஊரில் சிறுவயதில் கண்டனவற்றை சுருக்கமாக முடித்துக்
கொள்கிறார். சுதந்திர இந்தியாவில் முதல் 25 ஆண்டுகளில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களப் பெண்கள் முன்னெடுத்துச் சென்றதைப்
பொறுக்க முடியாமல் ஆண்-மைய சமூகம் பெரும் உணர்வு ரீதியான நெருக்கடியையும்
அழுத்தங்களையும் கொடுத்தது தான் காரணம் என்கிறார். போக,
எல்லா தற்கொலைகளுக்கும் நிலவுடைமை கலாச்சாரத்தின் இறுக்கமான பாலுறவுக்
கட்டுப்பாடுகளும் அவை சார்ந்த தவறான நம்பிக்கைகளுமே காரணம் என்கிறார். ஆண் மைய சமூகத்தில் ஆண்களின் பாலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளுக்கு பெண்களையே
பலி கொடுத்திருப்பதாகவும் உறுதி கூறும் போது இன்றும் மருத்துவரிடம் போய் இப்படியான
பிரச்சனைகளை குணப்படுத்தும் வழக்கமே நம்மிடம் இல்லையெனவும் சொல்கிறார்.
பூமியை நம்பி வாழ்கிறவர்கள் பூமியைப் போலவே எதையும்
தாங்கிக் கொள்ளும் சக்தி பெற்றவர்களாக இருக்கிறார்கள், என்று சொல்ல ஆரம்பித்து மழையில்லா வருடங்களை எவ்வளவு துன்பத்தில் ஊர்மக்கள்
கடந்தார்கள் என்பதை ‘காலத்தை துரத்திய மனிதர்கள்’ என்கிற பகுதியில் சொல்லப்படுகிறது.கிராமப் பொருளாதாரம்
எனபது ஒரு பெரும் பொய் என்பதை பஞ்சம் பாடம் நடத்தியிருக்கிறது அங்கே. மக்கள் எறும்புப் புற்றுகளை தோண்டி அவைகள் சேகரித்து வைத்திருக்கும் தானியங்களை
கொள்ளையடிக்கிறார்கள். எலிகளின் நகரில் ஒரு மூட்டை தானியம் கிடைத்ததாக
மக்கள் பேசியதையும் பதிவு செய்கிறார். கழுதைக்கு கல்யாணம் செய்வித்தல்,
பிள்ளையாரை 3 நாட்கள் தண்ணீரில் மூங்க வைத்தல்,
கரைப்பத்திரகாளிக்கு முளைப்பாரியிட்டு விழா எடுப்பது போன்ற கூத்துகளும்
ஊரில் நடைபெற, கடவுள் முதலான பல பொய் நம்பிக்கைகள் மழையின்றி
உதிரத் தொடங்கினவென்றும் பதிகிறார்.
வடக்கத்தி அம்மனுக்கு கஞ்சி ஊற்றும் விழா சிறுவயது
விழக்கால கொண்டாட்டமாக மாறுகிறது. வடக்கத்தி அம்மன் யார்?
என்கிற தகவலும் சுருக்கமாய்ச் சொல்லப்படுகிறது. அதே பகுதியில் சோலையம்மாளுக்கு கஞ்சி ஊற்றும் விழாவும் சோலையம்மாவின் சோக வாழ்க்கையைச்
சொல்லி இணைந்து கொள்கிறது. பாவைக் கூத்து இரவுகள் பற்றியான தகவல்களை
சொல்லும் பகுதி. பாவைக் கூத்தில் ராமாயணம் தோல் பொம்மைகளால் ஒவ்வொரு
இரவிலும் நிகழ்த்தப்படுகிறது. முடிவுறும் நாளில் மழை பெய்யுமென்பது
ஐதிகமென சொல்கிறார். நேற்று இங்கொரு சம்பவம் சொன்னார்கள்.
சென்னிமலை தைப்பூசம் முடிந்த பிறகு சாரல் மழையேனும் கண்டிப்பாக பெய்யுமென.
சாலையில் தேர் சென்ற தடத்தை சாரல் மழை அழிக்குமாம்! வருடா வருடம் இப்படி நடக்கிறது என்கிறார்கள். அதையெல்லாம்
யார் இத்தனை காலம் கவனித்தார்கள். ஆனால் பனியும் குளிரும் விலகி
கருக்கல் இருக்கிறது வானில் இதை எழுதிக் கொண்டிருக்கையில். மழையே
தூராவிட்டாலும் நம்பலாம் போல.
வேலுத்தாத்தாவின் மரணம் நிகழ்ந்த பிறகு வாசல் வழியே அவர் பிணத்தை
எடுத்து வராமல் வீட்டின் மேற்குச் சுவரில் துவாரமிட்டு வெளியே கொண்டு வருகிறார்கள். அவிட்டம் அடைப்பில் அவர் இறந்ததால் அவ்வாறு செய்தார்களாம். புதிய புதிய தகவல்களுடன் நினைவோடை விரிகிறது.
பகுதி இரண்டில் ஊர் மனிதர்களைப் பற்றி சுருக்கமாகச்
சொல்கிறார். பறவை மனிதனான காடை சண்முகம் காடுகளில் தான்
எந்த நேரமும் திரிகிறார். அவர் வேட்டைக்காரரோ என்றால் இல்லை.
அவர் ஒரு பறவை விசுவாசி. அவர் வீட்டின் பின்கட்டில்
வகை வகையான பறவைகள்! பறவைகளின் கீச்சுக் குரல் கேட்டுத்தான் உறங்குகிறார்.
குஞ்சுகள் பொறித்ததும் காட்டிலேயே அவற்றை கொண்டு சென்று விட்டும் விடுகிறார்.
குருசாமி வெளவால் வேட்டை பற்றி
விளக்குகிறார். குழந்தை செட்டியார், தபால்கார
பிச்சை, கோழி திருடும் ஆறுமுகம், லாந்தர்
இருளாண்டி என வித விதமான மனிதர்கள். மொத்தத்தில் கரிசல் கிராமத்தின்
மண்ணைப் பற்றியும், மக்களைப் பற்றியும் நாம் வாசிக்க உகந்த சுவாரஸ்யங்கள் நிறைந்த தொகுப்பு இது.
-ராசமைந்தன்
புனைவும் நினைவும் - சமயவேல். மணல் வீடு - விலை
-100.