ஞாயிறு, மார்ச் 31, 2019

அத்யாயம் இறுதி பகுதி!


எம்மனுயீல் கஸகேவிச்
விடிவெள்ளி
குறு நாவல்
தலைசிறந்த எஸ் எஸ் படைகளில், புகழ் பெற்று விளங்கிய பிரிவுகளில் ஒன்று ஐந்தாவது வைகிங்எஸ் எஸ் டாங்கி டிவிஷன் என்பது.

            இப்பிரிவுப்படை குருப்பென்ப்யூரெர் (எஸ்  எஸ் லெப்டினன்ட் ஜெனரல்) ஹெர்பெர்ட் ஹில்லே என்பவன் தலைமையிலிருந்தது. ஒன்பதாவது வெஸ்ட்லண்ட்மோட்டார் ரெஜிமென்டும், பத்தாவது டோய்ச்லண்ட்மோட்டார் ரெஜிமெண்டும், ஐந்தாவது டாங்கி ரெஜிமெண்டும், ஐந்தாவது மோட்டார்ப் பீரங்கித் தொகுதியும், ஐந்தாவது பெரும் பீரங்கி ரெஜிமெண்டும் இதில் அடங்கியிருந்தன. சுற்றியுள்ள காடுகளில் மிகச் சிறந்த போர்ச்சாதனங்களுடன் இப்படைகள் இரகசியமாய்த் திரட்டப்பட்டு வந்தன. கோவெல் நகரை முற்றுகையிட்டிருக்கும் ருஷ்யப் படையைத் திடீரென்று தாக்கி, அதைச் சிறு துண்டகளாகச் சிதறடித்து அழித்துவிட்டு, ஸ்டகோட், ஸ்டீர் என்ற புகழ்பெற்ற இரு நதிகளுக்கு அவர்களைத் துரத்தியடிப்பது என்பது தான் ஜெர்மானியரின் நோக்கம்.

            பலத்த புதிய படைகளைக் கொண்ட இப்பிரிவில் பதினையாயிரம் துருப்புகளும் ஹிட்லர் அரசாங்கத்தின் மந்திரி ஷ்பேர் என்பவனால் டாங்கிகளின் அரசன்என்று புகழப்பட்ட புது வகையான டைகர்டாங்கிகள் அறுபதும் இருந்தன. இந்த டிவிஷனின் தலைவர்களில் அடிக்கடி ஹிட்லரின் கவனத்திற்குப் பாத்திரமானவனான ஷ்டண்டர்டென்ப்யூரெர் ம்யுல் லென்காம்ப், முன்பு ஹிட்லரின் தனிப்பட்ட அட்ஜூடண்டாயிருந்த ஷ்டண்டர்டென்ப்யூரெர் கர்கைஸ் ஆகியோரும், மற்றும் ஹிம்லரின் கை தேர்ந்த சீடர்களும், நாஜிக் கட்சி, ராணுவம் இவற்றின் மேலதிகாரிகள் கூட்டத்தில் உயர் பதவி வகிப்பவர்களுமான பலரும் இருந்தார்கள். எல்லாருமே நெஞ்சீரமின்றிச் சதி செய்து முன்னேறியவர்கள்.

            இந்த வைகிங்டிவிஷனைத் தொடர்ந்து இதைப் போல் அத்தனை விளம்பரமில்லாத, எனினும் பொறுக்கியெடுக்கப்பட்ட ஒரு பிரிவுப் படை லெப்டினன்ட் ஜெனரல் நிக்கெலின் தலைமையிழந்த முன்னூற்று நாற்பத்திரண்டாவது கிரனேடியர் டிவிஷன் பிரான்ஸிலிருந்து வருவதாக இருந்தது. எஸ் எஸ் படைகளின் வெற்றியை அதனைத் தொடர்ந்து நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பது இவர்களுக்குக் கட்டளை.

            இவ்வேற்பாடுகள் முழுவதும் ஒரே மூடுமந்திரமாக நடைபெற்று வந்தன.

            இப்பிரிவுப் படைத்தலைவனாகிய ஹில்லே என்பவனிடம் அவனுடைய ஆதரவாளனாகிய வான்டெம் பாக் என்ற எஸ் எஸ் படைத்தலைவன், பெர்லினுக்கு அருகே ப்வாவுயென் இன்ஸ்ல் என்னும் தீவிலிருந்த தனது மாளிகையில் பின்வருமாறு பேசினான் : “ருஷ்யர்கள் தடதடவென்று முன்னேறி கவர்னர் ஜெனரலின் மாகாணத்திற்கு வெகு அருகில் நெருங்கி விட்டனர். இந்த முன்னேற்றத்தின் முடிவு என்ன ஆகும் என்பதை, பார்டை கெனான்ஸ்ஸே (கட்சித்தோழன்) ஹில்லே, நீங்கள் நன்கறிவீர்கள். இது ஐரோப்பாவில் எங்கும் ஜெர்மானியருக்கு எதிராக உள்ள சக்திகளைத் தூண்டிவிடும்; பிரிட்டிஷ்காரர்களையும் அமெரிக்கர்களையும் கூட செயலில் இறங்கும்படி கட்டாயப்படுத்தலாம். உங்களுடைய நடவடிக்கையை ப்யூரெர் மிகவும் முக்கியமானதென்று கருதுகிறார். இப்படை மாற்றம் மிகவும் இரகசியமாக நடைபெற வேண்டுமென்று தலைமைக் காரியாலயம் விரும்புகிறது. எல்லாவிதமான முன்னெச்சரிக்கைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.”

            கொவெலுக்கு மேற்கேயுள்ள காட்டில் தனது டிவிஷன் முழுவதையும் திரட்டி வைத்துவிட்டு, இப்பொழுது, தனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் வெற்றி நிச்சயம் என்ற முழு நம்பிக்கையுடன், மேற்கொண்டு வரும் உத்தரவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் ஹில்லே. 1940 அல்லது 1943இல் இருந்ததைப் போல் கூடத் தனது படை இப்பொழுது இல்லை என்பது அவனுக்குத் தெரிந்த விஷயம் தான். முதலாவது, இனத் தூய்மைக் கொள்கையைக் கைவிடுவது அவசியமாயிற்று. நெதர்லாந்து தேசத்தவர்கள், ஹங்கேரியர்கள், க்ரோவட்கள், போல்களுங்கூட அவனது டிவிஷனில் இப்போது சேவை செய்து வந்தார்கள். இது அவனுக்கு வருத்தமாகத் தான் இருந்தது. இவர்கள் அந்நியர்களாயிருப்பினும் புதிய அமைப்பிற்குப்பூர்ண ஆதரவாளர்கள் தான் என்பது உண்மையே. எனினும் இவர்கள் வேற்று இனத்தைச் சேர்ந்தவர்கள் தானே, ஜெர்மன் ரைக்கின் நலன்களில் அவர்களுக்கு என்ன அக்கறையிருக்க முடியும்? “சிறந்த உடல் அமைப்பு வேண்டும்என்ற கோட்பாட்டையும் கூடத் தளர்த்த வேண்டிய அவசியம் நேர்ந்து விட்டது. ஜெர்மனி முழுவதிலுமிருந்து பொறுக்கியெடுக்கப்பட்ட ஆறடி உயரமுள்ள வீரர்களைக் கொண்ட கறுப்புப் படை அல்ல இது. இப்பொழுதுள்ள வீரர்களிற் சிலர், குருப்பென்ப்யூரெர் ஹில்லேயுக்குப் பார்க்கவும் பிடிக்காத அவ்வளவு மோசமான உடல் அமைப்பு உள்ளவர்கள்.

            டோய்ச்லண்ட்மோட்டார் ரெஜிமென்டைச் சோதனையிடும் பொழுது, ஒற்றைக்கண்ணர்களையும், நொண்டிகளையும், ஒரு கூனனையுங்கூட ஹில்லே கண்டு அருவருப்படைந்தான். படைப்பிரிவில் உள்ளவர்கள் பாதிக்கு மேல் சோனிகளும் குள்ளர்களுமாயிருந்தார்கள். ஹாலந்தையும் பிரான்ஸையும் வெட்டியும் சுட்டும் பாழாக்கிக் கொண்டு முன்னேறி, இரத்த வெறியும் மனம் போல அடித்த கொள்ளையால் ஏற்பட்ட பேராசையும் பிடர் பிடித்து உந்த காக்கஸஸ் மலைத் தொடர் வரை போய் முட்டிய ஹிட்லரின் லான்ட்ஸ்க்னெஹ்ட் படையல்ல இது.

            பண்டைக் காலம் போல் தோன்றிய அந்நாட்களை இப்பொழுது நினைத்துப் பார்ப்பதே ஹெர்பர்ட் ஹில்லேயுக்கு மிகவும் இன்பமாக நேர்ந்தது. எல்லாவற்றையும் விட காக்கஸ்தான் அவனுக்கு மிகவும் பிரியம். வளங்கொழிக்கும் அந்தத் தென் பிரதேசத்தின் தெய்விக எழில் சுவிட்ஸர்லாந்தின் அழகைவிட எவ்வளவோ சிறந்து விளங்கியது. இச்செழிப்பான மலைப் பிரதேசங்களுக்கு கவர்னராகவோ, ஷ்டாதால்டெராகவோ ஓர் அமைதியான பதவியில் அமர்ந்து விடலாம் என்று கூட ஹெர் குருப்பென்ப்யூரெர் ஓரொரு சமயம் கனவு கண்டது உண்டு. அத்தகைய வருமான மிகுந்த பதவி கிடைப்பதர்காக ப்யூரெரின் தலைமைச் செயலகத்திலிருந்த ஆதரவாளர்கள் மூலம் குறிப்புகள் வாயிலாக முயன்றதும் உண்டு. ஆனால் துரதிர்ஷ்டவசமாய் உலகமனைத்திற்கும் தெரிந்துள்ள பல அசந்தர்ப்பங்களால் அக்கனவுகளையெல்லாம் கைவிட வேண்டியதாயிற்று.

            அன்றைய இளவேனிற் காலையிலிருந்து ஒரு விதமான மனக் கஷ்டத்தை அவன் உணரலானான். அது ஒரு புதிராகவும் இருந்தது. முதலாவதாக ருஷ்யர்களின் விமானங்கள் வந்து சென்றன. அவை குண்டு வீசவில்லையென்றாலும் காடுகளை வேவுபார்த்து விட்டனவே. பல தடவைகள் ரயில்வே பாதையை ஒட்டியே பறந்தனவே. அங்கு முக்கிய தளவாடங்கள் இறக்கப்பட்டு வந்த ரயில் நிலையத்திற்கு மேலே நெடு நேரம் வட்டமிட்டனவே. துருப்புகளெல்லாம் நன்றாக மறையுருவில் இருந்தன என்றாலும் ருஷ்யர்கள் இவ்விடத்தைப் பற்றி ஏன் அவ்வளவு கவனம் எடுத்துக் கொண்டனர் என்பது அவனுக்குக் கவலையைத் தந்தது.

            வெகு நாள் அநுபவம் வாய்ந்த, போராற்றலுடைய ஹெளப்ட்ஷார்ப்யூரெர், மெக்லென்பர்க் நகரவாசியான பென்னெக்கே என்பவன், ‘வெஸ்ட்லண்ட்மோட்டார்ப் படையைச் சேர்ந்தவன், இரவில் ஏரிகளின் அருகாமையில் மறைந்து போனான் என்ற விஷயமும் அவனுக்கு எட்டிவிட்டது. உடனே அவனது மனக்கலக்கம் அதிகமாயிற்று. வெகு நேரம் தேடியதற்குப் பிறகு தலைமைச் செயலகத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில், சிறிய ஏரிகளில் ஒன்றில் மறைந்து போனவனுடைய உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ஹெர் ஹெளப்ட்ஷார்ப்யூரெரின் இதயத்தில் ஒரு கத்திக் குத்தும், தலையில் பலத்த அடியால் ஏற்பட்ட காயமுமிருந்தன.

            எனவே தனது செயலகமிருந்த கிராமத்தின் மீது இதன் பிறகு நேர்ந்த விமானத் தாக்குதலுக்கும் பென்னெக்கேயின் மரணத்திற்கும் சம்பந்தமுண்டு என்று குருப்பென்ப்யூரெர் நினைத்ததில் ஆச்சரியமில்லை. ஆகவே அவசரமாகத் தனது செயலகத்தைக் காட்டிற்குள் மாற்றும்படியும், அதைச் சுற்றி மூன்று வரிசைகள் முட்கம்பி வேலி போடும்படியும் அவன் உத்தரவு கொடுத்தான்.

            அன்று மாலை அப்படையின் ரண வைத்தியனான லின்டிமேன், இறந்து போன பென்னெக்கேயின் மேல் நடத்திய சோதனையின் முடிவுகளைத் தெரிந்து கொண்டிருக்கும் பொழுது, ‘வெஸ்ட்லண்ட்மோட்டார் ரெஜிமென்டிலிருந்து மேலும் ஒரு தகவல் தந்தது. ஹெளப்ட்ஷார்ப்யூரெர் வில்லிபால்ட் ஏர்ன்ஸ்ட் பென்னெக்கே மேற்கூறிய வருந்தத்தக்க விபத்திற்கு ஆளான இடத்திற்கு அருகே வீரர்கள் காட்டைத் துருவி ஆராய்ந்து கொண்டு வருகையில் அடர்த்தியான கொட்டை மரத் தோப்பில் மற்றொரு உடலைக் கண்டார்கள். 131வது காலாள் டிவிஷனைச் சேர்ந்த கார்போரல் கார்ல் ஹில்லே என்பவனது சவம் அது. (ஹெர் குருப்பென்ப்யூரெர் ஹில்லேயுக்குத் தன் பெயரைப் போல் அதுவுமிருந்தது பிடிக்கவில்லை.)

            சிறிது நேரத்திற்குப் பிறகு டோய்ச்லண்ட்மோட்டார் ரெஜிமென்டின் தலைவனான ஷ்டண்டர்டென்ப்யூரெர் ம்யுல்லென் காம்ப் தானே தொலைபேசியில் பேசினான். பச்சை உடைகளை அணிந்துள்ள இனந்தெரியாத சில பேர்களுடன் நடந்த சண்டையில் கெஸ்னெர், மெஸ்னெர் என்ற இரண்டு போர்வீரர்கள் காயமடைந்தனர் என்றும் அவர்களில் கெஸ்னெர் அபாயகராமன நிலையிலிருப்பதாயும் அறிவித்தான். ஷ்டன்டர் டென்ப்யூரெர் மேலும் ஒரு விசித்திரமான செய்தியையும் சொன்னான்; போர் வீரர்களெல்லாரும் ஒரு முகமாக அந்த விநோதப் பேர்வழிகள் மீது வெண்பனி தெளிக்கப்பட்டிருந்ததாகச் சொன்னார்களாம்.

            ஒவ்வொரு சமாசாரத்தையும் எச்சரிக்கையாக விசாரித்தறியும்படியும், துன்பமிழைந்து வரும் அந்த இனந்தெரியாத ஆட்களைத் தேடிப் பிடிக்கும்படியும் குருப்பென்ப்யூரெர் உத்தரவிட்டான்.

            ஒவ்வொரு பட்டாளியனிலிருந்தும் ஒரு கம்பெனியும், டிவிஷன் படையைச் சேர்ந்த சோதனைத் தொகுதி முழுவதும், அக்காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமென்று கட்டளை பிறந்தது.

            அந்தப் பிரதேசத்தில் பச்சைப் பேய்கள்” (Grune Gespenster), ”பச்சைப் பிசாசுகள்” (Grune Teufel) நடமாடுகின்றன என்ற பீதியைக் கொடுக்கும் வதந்திகள் போர்வீரர்களிடையே பரவிக் கொண்டு வருகின்றன என்பதை அறிந்த குருப்பென்ப்யூரெருக்குச் சிறிது அதிருப்தி உண்டாயிற்று என்பதில் ஆச்சர்யமில்லை.

            இயற்கைக்குப் புறம்பான இத்தோற்றங்களில் குருப்பென்ப்யூரெர் ஹில்லேயுக்கு நம்பிக்கையில்லை. வேவு, எதிர்வேவு ஆகியவைகளுக்குத் தலைவனான காப்டன் வேர்னெரைத் தன்னிடம் வரவழைத்தான். போரில் பேய், பிசாசுகள் கிடையாது, ஆனால் பகைவர் தான் எப்போதும் இருந்து வருவர் என்று கூறி, இந்தப் பேய்களைக் கண்டுபிடிக்க வேண்டிய நடவடிக்கையை அவன் நேரில் நடத்தி வரவேண்டுமென்று ஹில்லே கட்டளையிட்டான்.

            அதே இரவில் ரயில் நிலையத்தில் ஒரு டாங்கிப் படை இறங்கிக் கொண்டிருந்த பொழுது, அதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, தானே நேரில் சென்று பார்வையிட்டிருந்த அதே ரயில் நிலையத்தில், ஷ்டுர்ம்பான்ப்யூரெர் (எஸ் எஸ் மேஜர்) டில்லே கொல்லப்பட்டுக் கிடந்தான் (தன் பெயரின் எதுகை போன்ற இந்த ஒலி ஹில்லேவுக்கு மீண்டும் வேதனையளித்தது); அப்பிரிவுப்படையின் முக்கிய அதிகாரிகளில் ஒருவனான ஒபெர்ஷ்டுர்ம்ப்யூரெர் (எஸ் எஸ் ஸீனியர் லெப்டினன்ட்) ஆர்தர் வெண்டலை யாரோ தூக்கிச் சென்று விட்டார்கள். ஹெர் டில்லேயின் மார்பில் பாய்ந்த கத்தி, முதுகுப்புறம் துருத்திக் கொண்டிருந்தது; அவ்வளவு பலமான குத்து. இவைகளெல்லாம் ஏராளமான அதிகாரிகளும் போர்வீரர்களும் இடைவிடாமல் நடமாடிக் கொண்டிருந்த ரயில் நிலையத்தில் நடந்திருந்தன.

            குருப்பென்ப்யூரெர் அங்கு காவலில் இருந்த போர்வீரர்களுக்கும் அவர்களது அதிகாரிக்கும் பதினைந்து நாள் சிறைத் தண்டனை அளித்தான். காப்டன் வேர்னெரை வரவழைத்து, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் போதிய முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை யென்று கடுமையாய்க் கண்டித்தான்.

            தண்டவாளங்கள் கடகடத்துப் போயிருந்தனாலோ என்னவோ, போர் தளவாடங்களை ஏற்றி வந்த ரயில் தொடர் ஒன்று நொறுங்கியதும், ‘டோய்ச்லண்ட்படையைச் சேர்ந்த மூன்று போர்வீரர்கள் கெட்ட உணவால் விஷங்கண்டு இறந்ததும், அதே படையைச் சேர்ந்த இரு போர்வீரர்கள் ஓடிவிட்டதும் இவைகளெல்லாமே அந்தப் பச்சைப் பேய்களின் செயல்கள் என்று தான் சொல்லப்பட்டன. உண்மை எது, கட்டுக்கதை எது என்று பிரித்தறிவதே கடினமாகப் போய்விட்டது.

            இதனால் விளையக் கூடிய பலாபலன்களைக் குறித்து கலவரமடைந்தான், குருப்பென்ப்யூரெர் மேல் தலைமைச் செயலகத்திற்கும், மத்தியப்படை வரிசைகளுக்குத் தலைமை வகிக்கும் பீல்டு மார்ஷல் புஷ் என்பவனுக்கும் தகவல் கொடுக்கும்படி உத்தரவளித்தான். வேவுகார அழிவுப் படை யொன்றை ருஷ்யர்கள் ஜெர்மானியரின் பின்னணிப் பகுதிக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் அது 131வது காலாள் டிவிஷனது கவனக் குறைவால் வைகிங்படையின் நடுவே புகுந்து விட்டதாகவும் படையணி மாற்ற ஏற்பாடுகளைப் பற்றி ஒருவேளை ஏதாகிலும் அவர்கள் கண்டுபிடித்திருக்கலாம் என்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

            சிறிது யோசனை செய்து விட்டு பெர்லினில் உள்ள ஒபெர்குருப்பென்ப்யூரெர் வான் டெர்பாக் என்பவனுக்குச் சொந்த முறையில் ஒரு கடிதமும் எழுதினான் ஹெர் குருப்பென்ப்யூரெர். தன்னுடைய ஆதரவாளனுக்கு உச்சி குளிர வேண்டும், ஒருவேளை இந்தத் திடீர் தாக்குதலில் தோல்வியேற்பட்டால் அவனுடைய ஆதரவு தனக்குக் கிடைப்பது உறுதிப்பட வேண்டும் என்பதற்காகவே அக்கடிதம் வரைந்தான். பெர்லின் ரிஸெர்வ் ஈயோட்டிக் கொண்டிருந்த அநேக ஜெனரல்கள் ஹெர் ஹில்லேயின் இடத்தைக் கைப்பற்றிக் கொள்ளத் தயாராய் இருப்பது அவனுக்குத் தெரியாதா என்ன?

            அடுத்த நாள் மாலை தனது சாப்பாட்டை முடித்துவிட்டு குருப்பென்ப்யூரெர் கண்ணயர்ந்திருந்த சமயம் டெலிபோன் மணி விடாமல் கணகணக்கவே விழித்தெழுந்தான்.

            அப்பொழுது தான், தனது போர்வீரர்களுக்கும் பச்சைப் பேய்களுக்கும் ஒரு கைகலப்பு ஏற்பட்டிருந்தது என்ற விவரத்தைக் காப்டன் வேர்னெர் தெரிவித்தான். உன்டெர்ஷ்டுர்ம்ப்யூரெர் (எஸ் எஸ் லெப்டினன்ட்) அல்டென்பெர்க் என்பவன் மேற்பார்வையிலுள்ள அப்போர்வீரர்கள் காட்டின் ஓரத்திலிருந்த ஒரு பாழான குடிசைக்கு வந்து சேர்ந்தனர். பல போர் வீரர்கள் குடிசைக்குள் போய்ப் பார்த்து அங்கு ஒருவருமில்லை என்று சொல்லி விட்டனர். ஆனால் உன்டெர்ஷ்டுர்ம்ப்யூரெரின் கவனத்தினால், அப்பச்சைப் பேய்கள் குடிசையின் பரணில் ஒளிந்து கொண்டிருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. துரதிஷ்டவசமாய் அவர்கள் எறிகுண்டுகளை வீசி உன்டெர்ஷ்டுர்ம்ப்யூரெரையும் அவனுடைய ஆட்களில் ஏழு பேர்களையும் கொன்றுவிட்டு, தப்பித்து ஓடிவிட்டனர். ஆனால், முதலாவது, இப்பகுதி முழுதிலும் உள்ள படைகளுக்கு அபாயக்குறிப்பு சென்று விட்டது. இந்தப் பச்சைப் பேய்களை வேட்டையாடுவதற்கு ஏற்பாடுகள் முடிந்து விட்டன. அவர்கள் நிச்சயமாய் அகப்பட்டுவிடுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள். இரண்டாவது, இந்தக் கயவர்களில் ஒருவன் போர்வீரர்கள் கையில் அகப்பட்டிருக்கிறான். துரதிர்ஷ்டவசமாய் அவன் உயிரோடு இல்லை. இதுதான் காப்டன் வேர்னெர் தெரிவித்த விவரம்.

            சிறிது சிந்தித்து விட்டு, தனது காரைக் கொண்டு வரும்படி கூறினான் ஹில்லே. துணைக்கு ஒரு டாங்கியுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குப் புறப்பட்டான்.

            காட்டின் ஓரத்தில், புகைந்து கொண்டிருந்த குடிசையின் அருகே காப்டன் வேர்னெரும் சோதனைக் கூட்டத்தைச் சேர்ந்த எஸ் எஸ் போர் வீரர்களும் குருப்பென்ப்யூரெரைச் சந்திப்பதற்கு முன் வந்தனர்.

            ஹில்லே அவர்களுடைய வணக்கத்திற்குப் பதில் கூறாமலே, இறந்து கிடந்த பகைவீரனை நோக்கி நடந்தான். இருபத்து மூன்று வயதிற்கு அதிகம் போகாத, சணல் போன்ற நீண்ட முடியையுடைய ருஷ்ய இளைஞன் அவன். அவனது குத்திட்ட கண்கள் அமைதியாக ஹெர்குருப்பென்ப்யூரெரைப் பார்த்துக் கொண்டிருந்தன. பச்சை மேலாடையின் கீழ் (அது சோவியத் வேவுப்படையின் கோடைகால ராணுவ உடைஎன்பதைக் கவனித்துக் கொண்டான் குருப்பென்ப்யூரெர்) ஜூனியர் சார்ஜென்டின் பட்டைகளையுடைய மங்கிப் போயிருந்த சோவியத் ராணுவச் சட்டையை அவன் அணிந்திருந்தான்.

            சிறிது தூரத்திற்கப்பால் எட்டு எஸ் எஸ் போர்வீரரகள் ஒருவர் பக்கம் ஒருவராக மார்பின் மீது சேர்த்து வைக்கப்பட்ட கைகளுடன் கிடந்தனர். இந்த எட்டுப் போர்வீரர்களில் ஐந்து பேர் குட்டையாகவும் பலவீனமாயும் இருந்தனர் என்பதைக் குறித்து ஹெர் குருப்பென்ப்யூரெர் முகத்தைச் சுளித்துக் கொண்டான். இந்தச் சோனிகள் எஸ் எஸ் கரும் படைவீரர்களாம், அழகுதான்!
           
      ஜெர்மன் ராணுவத்திலுள்ள பல பெரிய அதிகாரிகளிடையே தான் இவ்வளவு கலக்கத்தை உண்டாக்கியிருப்பதாக டிராவ்கினுக்கு ஒரு சிறிதும் தெரியாது. அவனுடைய வீரர்கள், அதே முக்கோண வடிவில் திரும்பிச் சென்று கொண்டிருந்த பொழுது, ஆங்காங்கே எஸ் எஸ் போர் வீரர்களின் கூட்டங்கள் எதையோ தேடிக் கொண்டிருப்பதையும் ஒருவருக்கொருவர் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதையும் அவர்கள் கவனித்தார்கள் என்பது உண்மையே. ஆனால் அதை ஒரு போர்த்தந்திரப் பயிற்சியாக எண்ணினார்களே தவிர, தங்களைக் குறித்தே இந்த ஓட்டமும் பிடியும் என்று நினைக்கவில்லை.

            நான்காம் நாள் மாலையில் ஜெர்மானியரின் பின்னணிப் பகுதியிலுள்ள ஒரு பாழாய்ப்போன குடிசையின் பக்கம் வந்து கொண்டிருந்தனர். தன்னுடைய வீரர்களுக்கு ஒரு மணி நேரமாவது ஓய்வு கொடுக்க வேண்டுமென்று டிராவ்கின் தீர்மானித்தான். அதே சமயம் பூமியுடன் தொடர்பு கொள்ளவும் விரும்பினான். திடீரென்று, தாக்கப்படாமலிருக்கவும், சுற்றுப்புறத்தை நன்றாகப் பார்த்தறியவும் அவர்கள் பழுதடைந்த ஓர் ஏணியின் வழியாகக் குடிசையின் பரணுக்கு ஏறிச்சென்றனர். அனிக்கானவின் கனம் தாங்காமல் ஏணி அநேகமாய் ஒடிந்து விழப் பார்த்தது.

            டிராவ்கின் பூமியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அடையாளங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தான். கூரையில் அவர்கள் செய்த ஒரு தொளையின் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த காவலளான பிராஜ்னிகவ் திடீரென்று ஒரு கூச்சலிட்டான். டிராவ்கினும் அவன் அருகே சென்று தொளை வழியாகப் பார்த்தான். சுமார் இருபது எஸ் எஸ் போர் வீரர்கள் பரவலான அமைப்பில் குடிசையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

            நன்றாய்த் தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய வீரர்களை லெப்டினன்ட் எழுப்பினான். காட்டிற்குள் தப்பி ஓடுவதற்கு நேரமில்லை என்பது நன்கு தெரிந்தது. எஸ் எஸ் போர் வீரர்கள் நெருங்கி விட்டனர். சீக்கிரத்தில் அவர்களில் நான்கு பேர்கள் குடிசைக்குள் நுழைந்து, சாணிக் குவியலைக் குத்திப் பார்த்து விட்டு வெளியே சென்றனர்; ஆனால் உடனே திரும்பி வந்தனர். அவர்களில் ஒருவன் வாய்க்குள் முனகிக் கொண்டும் திட்டிக்கொண்டும் பழுதடைந்த ஏணி வழியே ஏறி வந்தான்.

            டிராவ்கின் கைக்கொரு ரிவால்வராக பிடித்துக் கொண்டு, நன்றாய் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான். கூரையிலிருந்த அநேக இடுக்குகளாலும் ஓட்டைகளாலும் பரணில் வெளிச்சமாயிருந்தது. இதற்கு முன்பெல்லாம் பார்த்திருந்ததை விட இப்பொழுது மிகவும் கூர்மையாகத் தன் வீரர்களை ஒரு முறை கவனித்தான். நொய்ந்த மேனியும், குழிவிழுந்த கண்களும், மயிரடர்ந்த முகங்களுமாக அவர்கள் தோற்றம் பயங்கரமாயிருந்தது. இறக்கும் வரை சண்டை போடுவதற்குத் தயாராய் நின்றார்கள். லொடலொடத்த ஏணி கிரீச்சிட்டது. ஜெர்மானியன் மெதுவாய்த் திட்டிக்கொண்டான்.

            பலத்த பயங்கரமான வெடி முழக்கம் கேட்டது. தொழுவின் பக்கம் வட்டமாக நின்று கொண்டிருந்த எஸ் எஸ் போர்வீரர்களின் மேல், கூரையிலிருந்து ஒரு துவாரத்தின் வழியாக, டாங்கிகளை அழிக்க உபயோகிக்கப்படும் எறிகுண்டு ஒன்றை அனிக்கானவ் ஓங்கி யெறிந்து விட்டான். அதே சமயம் பிராஜ்னிகவ் தன்னுடைய துணை எந்திரத் துப்பாக்கியின் குந்தாவால், ஏணியின் மேல் ஏறி வந்த எஸ் எஸ் போர்வீரரின் மண்டையை மடாரென்று உடைத்துவிட்டுக் கீழே குதித்தான். அவனுக்குப் பின் மற்ற வேவுவீரர்களும் தூசியும் தும்பையும் நிறைந்த புகைமண்டலத்தின் நடுவே கீழே குதித்தார்கள்.

            அவர்களுக்கு இருந்த நெருக்கடியான நிலையில், அனிக்கானவ் எறிகுண்டை வீசியது மிகச்சிறந்த போர்த்தந்திரம் என்பதை டிராவ்கின் உடனே அறிந்து கொண்டான். இதனால் வாசலில் நின்ற விரோதிகளைக் கலைத்து விட்டு, தாங்கள் ஓடிச் செல்வதற்குரிய வாய்ப்புக் கிடைத்தது. குடிசையில் இருந்த மூன்று எஸ் எஸ் போர்வீரர்களை இலேசாக முடித்துவிட்டனர். ஏனெனில் அங்கிருந்த இருட்டில் அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது வெடியின் அதிர்ச்சியால் அவ்வளவு பிரமை பிடித்துப் போயிருந்தனர்.

            ஒரு நொடிக்குப் பிறகு வேவு வீரர்கள் அடர்த்தியான பிர் மரங்களுக்கிடையே வேகமாய் ஓடினர். அவர்களைப் பின்தொடர்ந்து ஜெர்மன் துப்பாக்கிக் குண்டுகளும் எறிகுண்டுகளும் வெடித்தன; கூச்சல்கள் ஒலித்தன. பிராஜ்னிகவ் தங்களுடன் இல்லை என்பதையும் அனிக்கானவும் செம்யோனவும் காயமடைந்திருந்தனர் என்பதையும் டிராவ்கின் முதலில் கவனிக்கவில்லை. கஷ்டத்துடன் மூச்சு வாங்கிகொண்டு அனிக்கானவ்தான் அவனிடம் பிராஜ்னிகவைப் பற்றிக் கூறினான். குடிசையிலிருந்து வேகமாய் வெளியேறிய பொழுது பிராஜ்னிகவ் வீழ்ந்ததைத்தான் பார்த்ததாக அனிக்கானவ் கூறினான்.

            மேலும் எதிரிகள் விரட்டவே இவர்கள் ஓடிக் கொண்டேயிருந்தனர். குண்டுகள் வெடிக்கும் ஓசையும் கூச்சல்களும் காட்டினூடே எங்கும் எதிரொலித்தன. பிறகு நாய்கள் குரைக்கும் சத்தத்தையும் கேட்டனர். வலது பக்கம் எங்கேயோ மோட்டார் சைக்கிள்களின் படபடப்பு கேட்டது. முதுகில் காயமடைந்த அனிக்கானவ் பெருமூச்சு வாங்கினான். சேம்யோனவின் நொண்டல் வரவர மோசமாய்க் கொண்டே இருந்தது.

            மழை பெய்த காடு மணம் வீசியது. சொட்டச் சொட்ட நனைந்திருந்த இலைகளும் புற்களும் ஏப்ரல் மாதத்திய பனிக்குக் கடைசி முழுக்குப் போட்டு விட்டுப் பச்சென்று தளதளத்தன. இளவேனில் ஆட்சி உண்மையாகவே தொடங்கி விட்டது. மழையால் தூய்மையுற்ற இளந்தென்றல் பசுங்கிளைகளை மெல்லென ஊசலாட்டி வசந்தப்பண் பாடியது.

            பின்தொடர்ந்து வருவோரின் சந்தடி குறைந்து கொண்டே வந்தது. காயமடைந்தவர்களுக்கு கட்டுகள் போடப்பட்டன. மாமச்கின் தனது பையிலிருந்து கடைசியாகவுள்ள புட்டியை எடுத்துக் குலுக்கினான். அதில் கொஞ்சம் சாராயம் இருந்தது. அனிக்கானவிற்கு அதைக் கொடுத்தான்.

            பிகோவின் முதுகின் மேலிருந்த ரேடியோ செட் பல குண்டுகள் பாய்ந்து சிதைந்து கிடந்ததை அவர்கள் கண்டார்கள். அவனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்கு அது உதவியது. ஆனால் இனி அதைப் பயன்படுத்த முடியாது. ஆகவே பிகோவ் தனது துணை எந்திரத் துப்பாக்கியின் குந்தாவால் அதை உடைத்து, துண்டுகளைப் புதர்களுக்குள் எறிந்து விட்டான்.

            குடிகாரர்கள் போல் தள்ளாடிக் கொண்டு அவர்கள் மெதுவாய் மேலும் நடந்து சென்றனர்.

            டிராவ்கினுடைய பின்னால் வந்து கொண்டிருந்த மாமச்கின் திடீரென்று அவனிடம் சொல்லத் தொடங்கினான்.

            என்னை மன்னியுங்கள், தோழர் லெப்டினன்ட்!”

            இரக்கத்தைக் குறிக்கும் முறையில் மார்பில் அடித்துக்கொண்டும், ஒருவேளை அழுதுகொண்டும் இருக்கலாம் இருட்டாக இருந்ததால் நிச்சயமாய்ச் சொல்ல முடியவில்லை அவன் கம்மிய குரலில் பேசினான்:

            என்னுடைய குற்றம் தான். எல்லாம் என்னுடைய குற்றம் தான். எங்களது எம்படவர்களுக்குச் சில அடையாளங்கள் உண்டு. அநேகமாய் அவர்கள் சொல்வது சரியாகவே இருக்கும். நான் அக்குதிரைகளைக் கிராமத்தாருக்குத் திருப்பிக் கொடுக்கவில்லை. அவைகளை உணவுப் பண்டங்களுக்காக வாடகைக்கு விட்டேன்.”

            டிராவ்கின் பேசவில்லை.

            என்னை மன்னியுங்கள், தோழர் லெப்டினன்ட். நான் உயிரோடு திரும்பினால்…”

            நீ உயிரோடு திரும்பினால், ஒரு தண்டனைப் பட்டாளியனுக்குப் போவாய்என்றான் டிராவ்கின்.

            கட்டாயமாகப் போவேன்! மகிழ்ச்சியுடன் போவேன்! நீங்கள் இவ்வாறு சொல்வீர்கள் என்று எனக்குத் தெரியும்! இப்படியே சொல்வீர்கள் என்றுதான் நானும் எண்ணியிருந்தேன்!” என்று ஒரு வகைக் குதூகலத்துடன் மாமச்கின் கூறினான். தன்னை மறந்த ஓர் அன்பினாலும் நன்கு புரியாத ஒரு நன்றியறிவினாலும் ஏற்பட்ட விதிர் விதிர்ப்புடன் அவன் டிராவ்கினது கைகளைப் பற்றிக் குலுக்கினான்.

            எதிரிகள் பக்கத்தில் வந்த சத்தம் திடீரெனக் கேட்டது. ஆகவே தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டார்கள். இரண்டு கவச மோட்டார்கள் இரைச்சலுடன் கடந்து சென்றன. மறுபடியும் அமைதி நிலவியது. வேவு வீரர்கள் மேலும் நடந்தனர். முதலில் தோன்றியது அனிக்கானவின் பெரிய உருவம். கிளைகளைத் தனது வலிய தோள்களால் விலக்கிகொண்டு அவன் மெதுவாக முன்சென்றான். மயக்கம் அவனை இருளில் ஆழ்த்துவதற்குப் பார்த்தது. ஆனால் தனது மனவுறுதியால் அதனை எதிர்த்துத் துரத்தினான்.

            தனது நீண்ட அநுபவத்தின் பயனாக இப்போது தங்களைச் சுற்றியிருந்த அமைதி உண்மையானதல்ல என்பதை அனிக்கானவ் ஒருவனே யூகித்திருக்க முடியும். ‘வைகிங்எஸ் எஸ் டிவிஷனின் வேவுக் கூட்டத்தார் அனைவரும், முன்னணிப் பகுதிகளை வேகமாய் அணுகிக் கொண்டிருந்த 342வது கிரனேடியர் டிவிஷனின் முன்னேறிச் சென்றுள்ள கம்பெனிகளும், 131வது காலாள் டிவிஷன் பின்னணிப் பகுதிகளும் தங்களை வேட்டையாடுவதற்குச் சுற்றி அலைந்தன என்பதை அவன் சிறிதும் அறியான். டெலிபோன் மணிகள் ஓயாமல் அடித்துக் கொண்டிருந்தன வென்றும், களத்திலிருந்த ரேடியோக்கள் தனக்குப் புரியாத குறிப்பு மொழியில் ரகசியச் செய்திகளை இடைவிடாமல் அறிவித்துக் கொண்டிருந்தனவென்றும் அவனுக்குத் தெரியாது. ஆனால் தங்களை விரட்டிக் கொண்டு வருகிறவர்களின் பிடி தங்களைச் சுற்றி மேன்மேலும் இறுகிக் கொண்டு வருகிறது என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.

            உடலில் பலம் குறைந்துகொண்டே வந்தது என்றாலும் அவர்கள் மேன் மேலும் நடந்தனர். தாங்கள் தப்பித்துப் போய்விட முடியுமா முடியாதா என்பதை அவர்கள் நிச்சயிக்க இயலவில்லை. ஆனால் அது இனிமேல் அவ்வளவு முக்கியமானதல்ல. ‘வைகிங்என்ற பெயரையுடைய அச்சத்தைத் தரும் மிகச் சிறந்த படை, அக்காடுகளில் ரகசியமாய்த் திரண்டு, சோவியத் படைகளைத் திடீரென்று தாக்குவதற்குப் போட்டிருந்த திட்டம் மண்ணைக் கவ்விவிட்டது. அந்த லாரிகளும், டாங்கிகளும், ஆளேற்றிச் செல்லும் கவச மோட்டார்களும், பயங்கரத் தோற்றத்தையுடைய வில்கண்ணாடியணிந்த எஸ் எஸ் அதிகாரி, உயிரோடுள்ள பன்றியை வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்ற அந்த ஜெர்மானியர்கள், நன்றாய்த் தின்று குடித்துக்கொண்டும் கூவிக் கொண்டும் காடுகளையெல்லாம் அசுத்தப் படுத்திக் கொண்டுமிருந்த ஜெர்மானியர்கள் அனைவரும், இந்த ஹில்லேக்கள், ம்யுல்லென்காம்ப்கள், கர்கைஸ்கள், இந்த வாழ்க்கை வேட்டைக்காரர்கள், இந்தத் தண்டப்படையினர், இந்தக் கொலைகாரச் சதிகாரர்கள் இவர்கள் எல்லாரும் அந்தக் காட்டிலுள்ள சாலைகளின் வழியாக நேரே தங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அதற்குள்ளாகவே இந்தப் பதினைந்தாயிரம் பேர்களின் உயிரைக் கவருவதற்குத் தயாராக இருந்தது கூற்றுவனின் பழி வாங்கும் கை.


அத்தியாயம் பதினொன்று

            விடி வெள்ளியுடன் வானொலி மூலமாகத் தொடர்பு வைத்திருந்த ஆப்பரேட்டர்கள் தனியாய் ஒரு நிலவறையிலிருந்தனர். ஜுனியர் லெப்டினன்ட் மெஷ்சேர்ஸ்கிய் இரவும் பகலும் அங்கேயே தானிருந்தான். அவன் அநேகமாகத் தூங்கவேயில்லை; கைகளைத் தலைக்குயரம் வைத்துக் கொண்டு சிற்சில சமயங்களில் கண்ணை மூடிக்கொண்டு நிம்மதியுற்றுத் தூங்கி வழிவான். அப்பொழுது கூட வானொலியின் குமுறல்களைக் கேட்பதாக நினைத்துக் கொள்வான். தனது நீண்ட இமைகளைக் கொட்டிக் கொண்டு, டெலிபோன் ஆப்பரேட்டரிடம், “இப்போது யார் பேசுவது, அவர்கள்தானா?” என்று கேட்பான்.

            மூன்று முறைகளில் ஆப்பரேட்டர்கள் வேலை செய்தார்கள். தனது வேலை நேரம் முடிந்த பின்பும் காத்யா போக மாட்டாள். மெஷ்சேர்ஸ்கியின் பக்கம் ஒடுக்கமான படுக்கையில் உட்கார்ந்து, பழுப்பேறிய கைகளில் தலையைச் சாய்த்துக்கொண்டு காத்திருப்பாள். வேலையிலிருப்பவனைச் சில வேளைகளில், ‘விடி வெள்ளியின் அலை நீளத்தை அவன் விட்டுவிட்டான் என்று சொல்லிச் சினந்து கொள்வாள்; அவன் கையிலிருந்து குழாயைப் பிடுங்கி, தனிந்த கெஞ்சுங் குரலில் அந்த நிலவறையிலிருந்து கூப்பிடுவாள்:

            விடி வெள்ளி, விடி வெள்ளி, விடி வெள்ளி…” அருகில் உள்ள அலை நீளத்தில் யாரோ ஜெர்மன் பாஷையில் ஏதோ முனகிக் கொண்டிருந்தான். சிறிது அப்பால் மாஸ்கோ பேசியது, பாடியது, பிடில் சங்கீதம் இசைத்தது எப்பொழுதும் விழித்துக் கொண்டிருந்த, மாபெரும் வன்மையுடைய, அழிக்க முடியாத மாஸ்கோ.

            நாளில் பல தடவைகள் டிவிஷன் தலைவர் நிலவறைக்கு வந்தார். வேவு வீரர்கள் அங்கிருந்து தங்களிருப்பிடத்திற்கு அவசரமாய் வந்து போனார்கள். லெப்டினன்ட் புகோர்கோவ் ஒவ்வொரு நாளும் அங்கு வந்தான்; சில சமயங்களில் சார்ஜென்ட் மேஜர் மெட்ஜிடோவுடனும் வருவான். சுமார் ஒரு மணி நேரத்திற்கு அங்கேயே சுவரில் சாய்ந்து ஆப்பரேட்டர் வேலை செய்வதைப் பேசாது பார்த்துக் கொண்டிருப்பான்.

            அடிக்கடி மேஜர் லிகச்சோவ் ஆப்பரேட்டரிடமிருந்து, தானே செவிக் குழாயை எடுத்துக் கொண்டான். சில வேளைகளில் காப்டன் பராஷ்கின் உள்ளே வந்து ஓரிரு நிமிடங்கள் வரை சிறிய சன்னலின் பக்கம் நின்று கொள்வான். தன்னுடைய புகழ் பெற்ற குறிப்புப் புத்தகத்திலிருந்து ஏதோ மெட்டை முனகிக் கொண்டும், விரல்களால் அதற்குத் தகுந்தாற்போல் தாளமடித்துக் கொண்டும் இருப்பான். ஓரொரு சமயம் இணைபிரியா இரட்டையர்களான காப்டன் முஷ்டக்கோவும் காப்டன் குரேவிச்சும் முன்னணிப் பகுதியிலிருந்து அங்கு வந்து பார்த்து விட்டுச் செல்வார்கள்.           

            சாந்தமான, ஆடம்பரமற்ற  விசாரணை அதிகாரி காப்டன் எஸ்கின் தனது புள்ளி முகம், துருத்திய நெற்றி, உற்று நோக்கும் கண்கள் ஆகிய அனைத்தும் விளங்க நிலவறைக்குள் ஒரு நாள் நுழைந்தான்.

            நீங்கள் தான் வேவுவீரர்களின் தலைவரா?” என்று மெஷ்சேர்ஸ்கியைக் கேட்டான்.

            தற்காலியமாய்ப் பதிலியாக இருந்து வருகிறேன்.”

            குடியானவர்களிடமிருந்து சட்ட விரோதமாகக் குதிரைகளை எடுத்துச் சென்றுள்ள ஒரு சில வேவுவீரர்களைப் பற்றி விசாரணை நடத்த வேண்டுமென்று எஸ்கின் கூறினான். அது தவறான காரியம், மிகவும் மோசமானது, நாட்டு மக்களிடையே செஞ்சேனைக்கு இருந்துவரும் மதிப்பை வெகுதூரம் பாதிக்கக்கூடியது என்பவைகளை எல்லாம் மெஷ்சேர்ஸ்கியிடம் எடுத்துரைத்தான்.

            மெஷ்சேர்ஸ்கியைப் பேசவிடாமலே காப்டன் எஸ்கின் மேலும் தொடர்ந்து சொன்னான்:

            ஆகையால் சம்பந்தப்பட்ட வேவுவீரர்களை இப்பொழுது சில கேள்விகள் கேட்க வேண்டியதிருக்கிறது. சட்ட விரோதமான அச்சம்பவம் நிகழ்ந்த போது இருந்தவர்கள், முக்கியமாய் லெப்டினன்ட் டிராவ்கின், சார்ஜென்ட் மாமச்கின் இருவர்கள். அவர்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்.”

            சிறிது பொறுமையிழந்து மெஷ்சேர்ஸ்கிய், “அவர்கள் இப்பொழுது இங்கேயில்லைஎன்று கூறினான்.

            அவர்களில் ஒருவருமில்லையா?”

            இல்லை.”

            விசாரணை அதிகாரி ஒரு நிமிடம் யோசித்தான்.

            ஆனால் நான் அவர்களிடம் பேசியாக வேண்டுமே. அவர்கள் விரைவில் திரும்பி வருவார்களா?”

            எனக்குத் தெரியாதுஎன்று மெஷ்சேர்ஸ்கிய் மெதுவாய்ப் பதிலளித்தான்.

            திடீரென்று காத்யா பேசினாள்.
            தோழர் காப்டன், இப்பொழுது அவர்கள் இருக்கும் இடத்திற்கு நீங்கள் போவது நல்லது. அங்கேயே அவர்களைக் கேட்டுவிடலாம்.”

            எங்கே இருக்கிறார்கள்?” என்று காப்டன் எஸ்கின் கேட்டான்.

            ஜெர்மன் படையின் பின்னணிப் பகுதியில்.”

            அமைதியான, அன்பற்ற ஒரு பார்வையுடன் விசாரணை அதிகாரி காத்யாவை உறுத்து நோக்கினான்.

            அவளும் சினந்தோன்றும் வெற்றிப் புன்னகையுடன் எதிர் நோக்கு நோக்கினாள்.

            மெஷ்சேர்ஸ்கியும் கூட புன்னகை புரிந்தான். ஆனால் விசாரணையை முடிக்க ஜெர்மானியரின் பின்னணிப் பகுதிக்குப் போகும்படி இம்மனிதனுடைய மேலதிகாரி உத்தரவிட்டதால், எஸ்கினும் போகத் தான் செய்வான் என்பதை திடீரென்று மெஷ்சேர்ஸ்கிய் உணர்ந்துகொண்டான்.

            மூன்றாம் நாள் விடி வெள்ளிபேசியது டிராவ்கினும் அவன் தோழர்களும் முன்னணியைத் தாண்டிச் சென்ற பிறகு இரண்டாம் தடவையாக. இரகசியக் குறிப்புகளையெல்லாம் விட்டுவிட்டு, டிராவ்கின் அழுத்தமாகத் திரும்பத் திரும்பக் கூறினான்:

            ஐந்தாவது வைகிங்எஸ் எஸ் டாங்கி டிவிஷன் இங்கு திரண்டு கொண்டிருக்கிறது. ஐந்தாவது வைகிங்எஸ் எஸ் டாங்கி டிவிஷன் இங்கே திரண்டு கொண்டிருக்கிறது என்பதை ஒன்பதாவது வெஸ்ட்லண்ட்மோட்டார் ரெஜிமென்டிலிருந்த ஒரு கைதி சொன்னான்.”

            வெஸ்ட்லண்ட்மோட்டார் ரெஜிமெண்டின் அமைப்பையும் டிவிஷன் செயலகம் உள்ள இடத்தையும் டிராவ்கின் தெரிவித்தான். பிறகு, இரவில்தான் படைகளையும் தளவாடங்களையும் இறக்குகிறார்கள் என்பதை வலியுறுத்தினான். அவன் மேன்மேலும் திரும்பத்திரும்பச் சொன்னதாவது:

            ஐந்தாவது வைகிங்எஸ் எஸ் டாங்கி டிவிஷன் இங்கே திரண்டு கொண்டிருக்கிறது. இரகசியமாய்த் திரண்டு கொண்டிருக்கிறது….”

            டிராவ்கினுடைய தகவல் டிவிஷனில் பெருத்த பரபரப்பை உண்டாக்கியது. கர்னல் ஸெர்பிசேன்கோ படைத் தலைவருக்கும் கர்னல் செம்யோர்கினுக்கும் தாமே டெலிபோனில் இச்செய்தியைத் தெரிவித்தார். படைச் செயலகமும் உடனே அது பற்றிக் கவனிக்கத் தொடங்கியது.

            லெப்டினன்ட் கர்னல் கலீயெவ் தூக்கம் என்பதையே மறந்துவிட்டார். தம்முடைய சேனையிலிருந்தும் பக்கத்துப் படைப்பிரிவுகளிலிருந்தும் வரும் கேள்விகளுக்கு விடாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். குளிரே அவருக்குத் தெரியவில்லை. தமது ஆட்டுத் தோல் மேலாடையத் தூர எறிந்து விட்டார். உல்லாசமாய், இரைந்து கொண்டு கண்டிப்புடன் இருந்து வரலானார். “கலீயெவ் நாஜிகளை மோப்பம் கண்டுவிட்டார்.” என்று வீரர்கள் மறுபடியும் சொல்லத் தொடங்கினார்கள்.

            இதற்கிடையே ஆயிரம் தேசபடங்களில் நீலப் பென்சில்கள் வைகிங்டிவிஷன் திரண்டு கொண்டிருக்கும் இடத்தைக் குறித்தன. படைச் செயலகத்திலிருந்து இந்த அவசரச் செய்தி முனைமுகச் செயலகத்திற்குச் சென்றது. அங்கிருந்து மாஸ்கோவிலுள்ள உயர் தலைமைச் செயலகத்திற்குச் சென்றது.

            டிவிஷன் செயலகத்தில் டிராவ்கின் கொடுத்துள்ள தகவல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. சேனைச் செயலகத்திற்கும் இது கருத்திற்குரிய தகவல்தான் என்றாலும் பொதுநிலையைப் பாதிக்கக் கூடியதல்ல. அப்போது வந்து கொண்டிருந்த புதிய படைகளை, எஸ் எஸ் படைகளின் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகக் கூடிய இடங்களுக்கு அனுப்பி வைக்கும்படி சேனைத் தலைவர் உத்தரவிட்டார்; தமது ரிஸெர்வ் படைப் போர் வீரர்களையுங் கூட அப்பகுதிக்கு அனுப்பி வைத்தார்.

            கோவெல் இரயில் சந்திப்பில் ஜெர்மானியர் காட்டி வரும் கவனத்திற்கு மற்றோர் அத்தாட்சியாக இதைக் கருதினார்கள் முனைமுகச் செயலகத்தில். இந்தப் பகுதிகளை ஆராய்ந்து அறிந்து, குண்டுகள் வீசும்படி விமானப்படைக்கு உத்தரவு சென்றது. அங்கிருந்த சேனைக்குப் பல டாங்கி, பீரங்கித் தொகுதிகள் மேலும் கிடைத்தன.

            இராணுவ உயர் தலைமைக் காரியாலயத்தைப் பொருத்தவரை இந்த வைகிங்டாங்கிப் படையும், இந்தக் காடு முழுவதுங்கூட, முழு நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, சிறு புள்ளிகளைத் தவிர வேறு இல்லை. எனினும் இதில் இருக்கக் கூடிய மர்மத்தை அவர்கள் உடனே அறிந்து கொண்டனர். அதாவது சோவியத் படைகள் போலந்திற்குள் செல்வதைத் தடுப்பதற்கு ஓர் எதிர்த் தாக்குதலை ஜெர்மானியர் திட்டமிட்டுள்ளனர் என்பது. போர் முனையின் இடது பக்கத்தைப் பலப்படுத்துவதற்கு, ஒரு டாங்கிப் படை, குதிரைப் படை, அநேரக் பீரங்கி டிவிஷன்கள் அனுப்புவதற்கு உத்தரவு பிறந்தது.

            ஆகவே டிராவ்கினைச் சுற்றி வட்டங்கள் அகன்று கொண்டே வந்து மாஸ்கோவையும் பெர்லினையும் சென்றடைந்தன.

            டிவிஷனுக்கு உடனடியாக ஒரு டாங்கி ரெஜிமென்டும், ராக்கெட் மார்டர் படையும், பெரிய அளவில் தளவாடங்களும், புதிய மனிதர்களும் வந்து சேர்ந்தனர். வேவுவீரர்களுக்கும் புதிய ஆட்கள் கிடைத்தனர்.

            மெஷ்சேர்ஸ்கிய் தனது வீரர்களுக்குக் கடுமையான பயிற்சி கொடுத்து வந்தான். எதிரிகளின் பாதுகாப்பு இடங்களை வேவு பார்த்துச் சோதிப்பதில் நாள்தோறும் பாதி நேரம் செலவிட்டான். புகோர்கோவும் அவனது ஸேப்பர்களும் இடைப் பகுதியில் சுரங்கவெடிகளை அமைத்தனர். காலையிலிருந்து இரவு வரை ரேடியோ செட்களை, டெலிபோன் சாதனங்களை, தந்திக் கம்பிகளைப் பெற்றுக் கொண்டிருந்தார் மேஜர் லிகச்சோவ். கர்னல் ஸெர்பிசேன்கோ தமது பார்வை இடத்திற்குச் சென்று அங்கிருந்தே மேல் நடவடிக்கைகள் பற்றி ஒவ்வொரு தொகுதிக்கும் உத்தரவுகளை அனுப்பினார். பெரிய சண்டைகள் தொடங்குவதற்கு முன்னால் வழக்கம் போல் அவர் மிக இளமையோடும் கடுகடுப்போடும் இருந்தார். அப்போது தான் வந்திருந்த புதிய வரைப்படங்களைப் பார்த்துக் கொண்டே, மணிக் கணக்கில் அவர் உட்கார்ந்து இருந்தார். அவைகளில் நேராக விஸ்லா வரையில் போலந்து முழுதும் சேர்க்கப்பட்டிருந்தது. தொலைவிலுள்ள அந்தப் பிரதேசங்களுக்கு அவர் முன்பு போயிருந்தார் – 1920இல் புத்யோன்னியின் முதலாவது குதிரைப் படையோடு.

            காத்யா மட்டுமே தனிமையான நிலவறையில் தங்கியிருந்தாள்.

            ரேடியோவில் அவளது கடைசி வார்த்தைகளுக்குப் பதிலாக டிராவ்கின், “நான் புரிந்து கொண்டேன்என்ற சொற்களைச் சொன்னது சாதாரணமான முறையில் தானா, அதாவது அவள் சொல்லியதைச் சரியாகக் கேட்டுக் கொண்டான் என்பதாகவா, அவனது சொற்களில் இரகசியமான வேறொரு குறிப்புப் பொருள் இருந்ததா? மற்றெல்லாவற்றையும் விட இந்த எண்ணம்தான் அவள் மனத்தில் குடிகொண்டிருந்தது. தன் உயிருக்கு அபாயம் நிகழும் சூழ்நிலையில் அகப்பட்டிருந்ததினால் தான், அவ்விதச் சாதாரண உணர்ச்சிகள் அவனுள் எழ முடிந்தது போலும். தான் ரேடியோவில் கேட்ட கடைசி வார்த்தைகள் அவ்விதமான மாறுதலின் பயனாக இருக்கலாம் என்று அவள் நினைத்தாள். தனது எண்ணங்களைக் குறித்து காத்யா தனக்குள் சிரித்துக் கொண்டாள். ராணுவ உதவி டாக்டர் உலீபிஷெவாவிடமிருந்து ஒரு கண்ணாடி வாங்கி வந்து, அதில் அடிக்கடி முகத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஒரு பெரிய வீரனுக்கு ஏற்ற மனைவியாக இருக்க வேண்டியது எப்படி என்று கற்பித்துக்கொண்டு, தனது முகத்தைப் பொருத்தமாக வைத்துக் கொள்ள முயன்றாள். பிறகு கண்ணாடியை எறிந்து விட்டுத் தனது மனோ நிலைக்கிணங்க, மகிழ்ச்சியோடும் வருத்தத்தோடும் விடிவெள்ளி, விடி வெள்ளி, விடி வெள்ளிஎன்று திரும்பத் திரும்பக் கூப்பிடுவாள்.

            மறக்க முடியாத அந்த உரையாடலுக்கு இரண்டு நாட்கள் கழித்து, ‘விடி வெள்ளிமறுபடியும் பேசியது.

            பூமி, பூமி, இது விடி வெள்ளி பேசுவது. நான் சொல்வது கேட்கிறதா? விடி வெள்ளி பேசுவது.”

            விடி வெள்ளி! விடி வெள்ளி!” என்று உணர்ச்சியுடன் கூப்பிட்டாள் காத்யா. ”இது பூமி. நீ சொல்வது கேட்கிறது. கேட்கிறது.”

            அவள் தனது கையை நீட்டிக் கதவைத் திறந்து போட்டாள். மற்றவர்களும் தன் ஆனந்தத்தில் பங்கு கொள்ளட்டும் என்பதற்காக ஆனால் அங்கு ஒருவருமில்லை. பென்சிலை யெடுத்து எழுதுவதற்குத் தயாரானாள். ஆனால் விடி வெள்ளிஒரு வார்த்தையின் நடுவே நின்று விட்டது; பிறகு பேசவேயில்லை. இரவெல்லாம் காத்யா கவனித்தாள். ஆனால் விடி வெள்ளிபேசவில்லை.

            மறுநாளும் விடி வெள்ளியின் பேச்சு கேட்கவில்லை. அதற்குப் பிறகும் கேட்கவில்லை. சமயங்களில் மெஷ்சேர்ஸ்கிய் நிலவறைக்கு வருவான். அல்லது புகோர்கோவ், மேஜர் லிகச்சோவ், வேலையை விட்டுத் தள்ளப்பட்ட பராஷ்கினுக்குப் பதில் வேவுப் பகுதியின் புதிய அதிகாரியாக வந்துள்ள காப்டன் யார்கேவிச் ஆகியோர் வருவார்கள். ஆனால் விடி வெள்ளிபேசவேயில்லை.

            நாளெல்லாம், பாதி அயர்ந்துகொண்டு காத்யா டெலிபோனை மாட்டிய வண்ணம் இருந்தாள். விசித்திரமான கனவுகளும் தோற்றங்களும் அவளுக்கு ஏற்பட்டன. டிராவ்கின் தனது பசுமை நிற உருமாற்றுடையில் வெளுத்துப் போய் நின்றதைக் கண்டாள். ஒரு போலிச் சிரிப்புடன் மங்கிய உருவில் மாமச்கின் நிற்பதாகக் கண்டாள். அவளுடைய சகோதரன் லியோனிடும், என்ன காரணத்தினாலோ, பசுமை நிற உருமாற்றுடையுடன் காணப்பட்டான். அகல விழித்துக் கொண்டு டிராவ்கினுடைய அழைப்பைக் கவனிக்காது விட்டு விட்டோமே என்று ஒரு நடுக்கத்துடன் மறுபடியும் டெலிபோனை எடுத்து, “விடி வெள்ளி, விடி வெள்ளி, விடி வெள்ளிஎன்று கூப்பிடுவாள்.

            தொலைவிலிருந்து பீரங்கிகளின் முழக்கம் கேட்டது தொடங்கவிருக்கும் சண்டையின் அடையாளம் அது. அந்த நெருக்கடியான நாட்களில் மேஜர் லிகச்சோவிற்குச் செய்திப் பிரிவில் வேலை செய்ய அதிகமான பேர்கள் தேவையாக இருந்தது. ஆனாலும் காத்யாவை மட்டும் அவள் இருந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு அவனுக்கு மனம் வரவில்லை. அந்தத் தனிமையான நிலவறையில், அநேகமாய் எவருக்கும் தெரியாமலே, அவள் தங்கி வந்தாள்.

            ஒரு நாள் மாலையில் நேரம் கழித்து புகோர்கோவ் உள்ளே நுழைந்தான். அப்பொழுது தான் டிராவ்கினுக்கு தாயாரிடமிருந்து வந்திருந்த ஒரு கடிதத்தைக் கொண்டு வந்தான். பெளதிகஇயல் பற்றிய அவனுடைய சிவப்பு குறிப்பேட்டைத் தேடி எடுத்து வைத்திருப்பதாக எழுதியிருந்தாள். பெளதிக இயல் அவனுக்கு எப்பொழுதும் மிகப் பிடித்தமான பாடம். ஆதலால் அந்தக் குறிப்பேட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் கூறியிருந்தாள். அவன் பல்கலைக்கழகத்திற்குப் போகும் போது அது உபயோகமாயிருக்கும். உண்மையில் அது மிகவும் சிறந்த குறிப்பேடு மட்டுமல்ல; ஒரு பாடப் புத்தகமாய்க் கூட அதைப் பிரசுரிக்கலாம். வெப்பத்தைப் பற்றியும் மின்சக்தியைப் பற்றியுமுள்ள பகுதிகள் வெகு திருத்தமாயும் அழகாயுமிருந்தன. விஞ்ஞானத்தில் அவனுக்கு இயல்பாகத் திறமை இருந்தது. அதைக் குறித்து அவள் மகிழ்ச்சியுற்றாள். பன்னிரண்டு வயதாக இருக்கும் பொழுது அவன் செய்த அழகிய நீர் இறைக்கும் எந்திரம் அவனுக்கு நினைவிருக்குமோ, என்னவோ? அதைப் பற்றிய படக்குறிப்புகள் தென்பட்டன. அவை அவளுக்கும் அத்தை கிளாவாவிற்கும் மிகுந்த சிரிப்பை யளித்துள்ளன.

            புகோர்கோவ் கடிதத்தை உரக்க வாசித்தான். பிறகு ரேடியோவின் மேல் சரிந்து கொண்டு கம்மிய குரலில் கூறினான்:          

            போர் மட்டும் முடிந்து விட்டால்இல்லை நான் களைத்துப் போகவில்லை. நான் களைத்துப் போனேன் என்று சொல்லவில்லை. மக்கள் ஒருவரை யொருவர் கொன்று குவிப்பதை நிறுத்துவதற்குள்ள காலம் வந்துவிட்டது.”

            திடீரென்று பயத்தோடு, தனது காவலும் கவனமும் ஒருவேளை பயனற்றதாய்ப் போய்விட்டன போலும், முடிவின்றி விடி வெள்ளியைக் கூப்பிடுவதில் பயனில்லை போலும் என காத்யா உணர்ந்து கொண்டாள். ‘விடி வெள்ளிஓய்ந்து விட்டது; அதன் ஒளி மறைந்து விட்டது.

            ஆனால் அவள் அவ்விடத்தை விட்டு எவ்வாறு செல்வது? மறுபடியும் அவன் பேசினால் அல்லது காட்டினுள் எங்கேயாவது ஒளித்து கொண்டிருந்தால்?

            இனும் நம்பிக்கை இழக்காமல், இன்னும் விடாப் பிடியாக அவள் காத்திருந்தாள். இப்பொழுது அவள் மட்டும் தான். தாக்குதல் தொடங்கும் வரை, அவள் ரேடியோவில் கவனித்துக் கொண்டிருப்பதை யாரும் தடை செய்வதற்குத் துணியவில்லை.


முடிவுரை

            1944ஆம் ஆண்டுக் கோடையில் சோவியத் படைகள் போலந்து பிரதேசங்களைக் கடந்து, பலங்குன்றிய ஜெர்மானியரின் எதிர்ப்பை முறித்துக் கொண்டு, வேகமாய் முன்னேறிச் சென்றன.

            மேஜர் ஜெனரல் ஸெர்பிசேன்கோவின் ஜீப் வேவுவீரர்களின் கூட்டம் ஒன்றைத் தாண்டிச் சென்றது. ஒருவர் பின் ஒருவராக சாலையின் பக்கம் தங்களது பசுமை நிற உருமாற்றுடைகளில் சுறுசுறுப்பாகவும் கவனத்தோடும் சென்றார்கள். அமைதி நிலவும் காடுகள், வயல்களுடன் ஒன்றி விடவும், அந்தி வெளிச்சத்தின் மங்கிய நிழல்கள், நிலத்தில் காணும் மேடு பள்ளங்கள் இவைகளுடன் ஒன்றித்து மறைந்து விடவும் அவர்கள் எந்த நிமிடத்திலும் தயாராக இருந்தார்கள்.

            அக்கூட்டத்தின் தலைமையில் லெப்டினன்ட் மெஷ்சேர்ஸ்கிய் இருப்பதை ஜெனரல் கண்டு கொண்டார். காரை நிறுத்தி, வேவுகாரர்களைக் கண்டவுடன் ஏற்படும் வழக்கமான முகமலர்ச்சியுடன் அவர்களிடம் கூறினார்.

            நல்லது, என்ன சேதி, எனது அருமை வீரர்களே? தொடுவானில் தெரிகிறது வார்ஸா. அதிலிருந்து பெர்லின் ஐந்நூறு கிலோமீட்டர் தான். பிரமாதமில்லை; பிள்ளை விளையாட்டு மாதிரி. நாம் விரைவில் அங்கிருப்போம்.”

            வேவுவீரர்களை அவர் கூர்ந்து கவனித்தார். பிறகு ஒரு துக்க நினைவு உண்டாகவும் ஏதோ சொல்ல விரும்பினார். ஆனால் அதை அடக்கிக் கொண்டு கையை அசைத்தார்.

            உங்களுக்கு நல்லதிர்ஷ்டம் உண்டாகட்டும், வீரர்களே!”

            கார் புறப்பட்டது. ஒரு நிமிடம் வேவுகாரர்கள் நின்றனர். பிறகு மறுபடியும் தங்கள் வழியே நடந்தனர்.
000


Post Comment