திங்கள், ஏப்ரல் 29, 2019

கடலை 14

SC NO : 35

காளியும், மாணிக்கமும் ஊருக்குள் பைக்கில் செல்லுதல்!

காளி ; பங்காளி எந்த ஒரு காரியத்தையும் கிழக்கு முகமா பாத்து நின்னு துவக்குகுறாங்கள்ள..

மாணிக்கம் : அது சூரியனைப் பார்த்து கும்பிடு போட்டுட்டு காரியம் ஆரம்பிக்கறது பங்காளி. நாம என்ன விவசாயமா பண்ணப்போறோம் சூரியனை பார்த்து கும்பிட?

காளி : நாம எதுக்கும் கிழக்கு ஊடு சரளைக்காரய்யன் ஊட்டுல இருந்து ஆரம்பிச்சுடுவமே!

மாணிக்கம் : அவரு பையன் முத்து தான் கோயமுத்தூர்ல லட்சுமி மில்ஸ்ல வேலைல இருக்கானே!

காளி : அவன் டெல்லியில இருந்தாக்கூட நமக்கென்ன? வீட்டுல அவன் சம்சாரம் இருக்கும், அவன் அய்யன் இருக்கும்ல.. நிறுத்துப்பா நிறுத்துப்பா.. வீடு வந்துடுச்சு!

இருவரும் இறங்கி வீட்டுக்கு செல்லுதல்!

கிழவி வீட்டு திண்ணையில் கையில் முறத்தில் அரிசி புடைத்தபடி இருத்தல்.
மாணிக்கம் : என்ன பாட்டி நல்லா இருக்கீங்களா? அய்யனைக் காணமா! தோட்டம் போயிட்டாரா?

கிழவி : யாரது? பூபதி பையனாஎலக்சனப்ப வந்தது!

மாணிக்கம் : ஆமாம் பாட்டி!

கிழவி : தோத்துப்போயிட்டியாமா? நாலு பேருதான் போட்டிருந்தாங்களாமா?

காளி : மானம் போகுது!

மாணிக்கம் : அது கெடக்குது பாட்டி அய்யனெங்க? அவரப்பாக்கத்தான் வந்தேன்!

கிழவி : ஏதாச்சும் சோலியா? கெணத்து மேட்டுல நின்னுட்டு இருக்கும் பாரு!

மாணிக்கம் : பாத்துட்டு வர்றோம் பாட்டி.. (கிணற்றுப்பக்கம் வருதல். ஐய்யன் பல்லுக்குச்சியில் பல் விளக்கிக் கொண்டிருத்தல்.)

மாணிக்கம் : நல்லா இருக்கீங்களாய்யா!

ஐய்யன் : வாப்பா மாணிக்கம்.. வாடா காளியப்பா.. காத்தால வந்திருக்கீங்க?

காளி : இந்த வழியில போனோம்! பார்த்துட்டு போலாம்னு வந்தோமுங்க! பையன் கோயமுத்தூர்ல இருந்து வந்துட்டு போனாப்லையா?

ஐய்யன் : போன மாசம் தான் வந்தான். முந்தி மாதிரி அடிக்கடி வர்றதில்லை!

காளி : அங்கெல்லாம் நல்லாத்தான இருக்காங்க?

ஐய்யன் : அதெல்லாம் நல்லாத்தான் இருக்கான். பரவால்ல! நீங்க என்னடாப்பா பண்ணிட்டு இருக்கீங்க? வேலை கீது செய்யறீங்களா?

மாணிக்கம் : நாங்க எடப் புரோக்கர் வேலை பண்ணீட்டு இருக்குறோமுங்கய்யா! காடு தோட்டமல்லாம் வெலைக்கி வந்தா வாங்கி குடுத்துட்டு இருக்குறோம்!

ஐய்யன் : அதுல உங்களுக்கு என்ன கெடைக்கும்?

மாணிக்கம் : கமிசன் குடுப்பாங்க!

ஐய்யன் : பரவால்லயா! உங்க மாம்ங்காரன் கூட அதத்தான பண்ணீட்டு திரியறான்?

காளி : அவுரு உட்டுட்டாரு!

மாணிக்கம் : மேபக்கம் உங்களுக்கு காடு சும்மா தான போட்டு வச்சிருக்கீங்கய்யா! அதை குடுத்தர்றீங்களான்னு கேட்டு போக வந்தோம்!

ஐய்யன் : பையனை வேற கேக்கோணுமல்லப்பா! நாம முடிவு பண்ணி என்ன பண்றது?

மாணிக்கம் : நெம்பரு இருந்தா குடுங்கய்யா நானே பேசிப்பாக்குறேன்!

ஐய்யன் : நெம்பரு என்ன நெம்பரு? இந்த வாரம் வருவான்.. நானே கேட்டுச் சொல்றேன்! போனதடவ வந்தப்ப கூட நிலத்தை குடுத்துறலாம்னு தான் அவியம்மாட்ட பேசிட்டு இருந்தான்!

மாணிக்கம் : மேபக்கம் உங்குளுக்கு ஒரு அஞ்சேக்கரா இருக்குங்களாய்யா!

ஐய்யன் : அதென்ன எட்டேக்கரா இரவது செண்டோ முப்பது செண்டோ இருக்கும்!

மாணிக்கம் : கேட்டு வெய்யிங்க! அடுத்த வாரம் வர்றோம்! (கிளம்புதல்)

காளி : மொத ஏவாரமே படிஞ்சுருமாட்ட இருக்குது பங்காளி?

மாணிக்கம் : எனக்கும் அப்பிடித்தான் படுது!

காளி : இவ்ளோ ஈஸியான வேலையா இது? இது முன்னயே தெரியாம போச்சு?

(பைக்கில் கிளம்புதல்)
SC NO : 35 A

இரண்டு மாடுகளை பிடித்தபடி ஒருவரும் கூடவே மம்புட்டி பிடித்தபடி ஒருவரும் சாலையில் வந்து கொண்டிருக்க மாணிக்கம் மரத்தடி பார்த்து வண்டியை நிறுத்தி அவர்கள் நிழலுக்கு வரும் வரை காத்திருப்பது!

காளி : இந்தய்யன் என்ன இன்னுமா உசுரோட இருக்குது?

மாணிக்கம் : எது மம்புட்டி தூக்கீட்டு வருதே பண்ணையக்கார ஐய்யனை சொல்றியா? பாவம் பங்காளி!

காளி ; ஆமாம் பங்காளி! வயசு எப்பிடியும் 70க்கும் மேல இருக்குமாட்ட! இதுமோட வயசுல நாமல்லாம் இருப்பமா? கூட வர்றது அவரு பையன் தான? அவருக்கே அம்பது இருக்குமே!

ஐய்யன் : அட அப்புனுகளா நாங்க வந்ததென்ன சயனமா ஆயிப்போச்சு? நின்னுட்டீங்க?

மாணிக்கம் : இல்லீங்க அப்பாரு! (காளியை பார்த்தவாறு) இந்த வயசிலயும் தோட்டம் போயி வேலை செய்யலின்னா ஐய்யனுக்கு முடியாது பங்காளி! பெரிய பாட்டுக்கார்ரு!

ஐய்யன் : அக்காங்! பெரீய்ய பாட்டுக்காரந்தான் போ! ஊடு அடுத்த மழைக்கி தாங்குமான்னு தெரியில! அதைய வேலை செய்யறக்கு கையில ஒன்னுமில்ல!

மாணிக்கம் : பேங்குல போட்டு வச்சிருப்பிங்கள்ள அப்பாரு, அந்தப்பணத்துக்கு என்ன வேலை! போதாதுக்கு மருமகளும் ஒத்தாசைக்கி வேலை செய்யுறா!

ஐய்யன் பையன் : எல்லாம் வாயிக்கும் வவுத்துக்கும் சரியா இருக்குது தம்பி!

மாணிக்கம் : மேபக்க காட்டுல இப்ப என்ன போட்டிருக்கீங்க?

ஐய்யன் : போன வருஷம் மஞ்சள் போட்டோம்! எல்லாரும் போட்டதால மார்கெட்ல வெலை கமியாப்போச்சு! நட்டத்துக்கு குடுத்தோம்! இந்த வருசம் சூரியகாந்தி பூ வச்சிருக்கோம்! என்னுன்னு இனி ஒரு மாசம் போனா தெரியும்!

காளி : மழை தான் ஏமாத்திட்டே இருக்குதே!

ஐய்யன் : பேஞ்சா ஒரே முட்டா ஊத்தித்தள்ளீடுது! வச்சதெல்லாம் அழுகியே போயிடுது!

மாணிக்கம் ; மேபக்கம் ஒரு அஞ்சேக்கரா நம்முளுது இருக்குமுங்களா?

ஐய்யன் பையன் : ஏழு இருக்குது தம்பி! ரெண்டை கொறச்சுப்போட்டே? உங்க மாமன் கூட வெலைக்கி கேட்டுட்டு நடையா நடந்தாரு! வெலைய அப்புறம் அவ்ளோ கொறச்சு சொன்னா யாரு தான் குடுப்பாங்க?

ஐய்யன் : பாரு! இப்ப காட்டுப்பக்கம் போனா ஊடு திரும்ப இருட்டாயிரும்! ஒரு பொழுது காட்டுல கெடந்துட்டு வந்தாலும் கையிருப்பு இல்லை! இவுனும் படிக்கிற காலத்துல படிப்பு மண்டைல ஏறாம எங்கூட மல்லுகட்டீட்டு கிடக்கான்! காலம் மாறிப்போச்சுப்பா!

காளி : உங்க காலத்துக்கு சரியா இருந்துச்சுங்க ஐய்யா! இப்பத்தான் கம்ப்யூட்டர் அது இதுன்னு ஆயிப்போச்சே!

மாணிக்கம் : பழனி மாமன் கிட்ட எவ்ளோ கேட்டிங்களோ அதை அப்பிடியே நீங்க வாங்கிக்கலாம்! சம்மதம் தானுங்களே அப்பாரு!

ஐய்யன் ; நின்னது நிக்க வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுங்கற மாதிரி பேசுறியே!

மாணிக்கம் ; அதான் மாமன் பேசியிருப்பாருங்களே!

ஐய்யன் : சரி பண்ணிக்கலாமப்பா! எதுக்கும் பொழுதோட ஊடு வா சாமி!

அவர்கள் செல்தல்!

காளி : ஊர்ல விவசாயம் பண்ற ஆளுக பூராவுமே காட்டை வெச்சு சமாளிக்க முடியாதுங்கற அளவுக்கு வெறுத்துப் போயி இருக்காங்க பங்காளி!

மாணிக்கம் : பார்த்தா அப்பிடித்தான் தெரியுது!

காளி ; இப்ப ஊரே பிரகாசமா எனக்கு தெரியுது பங்காளி! உனக்கு அண்ணி வந்தாத் தான் தெரியுமா? எடு வண்டிய!

SC NO : 35 B

மேகாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பொன்னையனை நோக்கி காளி, மாணிக்கம் பேசிக்கொண்டே செல்தல்!

காளி : இந்தய்யனுக்கு தான் கொழந்த குட்டியே இல்லியே எதுக்கு இத்தனை ஆட்டை மேச்சுட்டு இருக்குது?

மாணிக்கம் : அதான் பாரு பங்காளி நம்ம கிட்ட காட்டை வித்துப்போட்டு ஊட்டுல கட்டல்ல கிடக்குறதை உட்டுட்டு வேகாத வெய்யில்ல நிக்கிறாப்ல பாரு!

காளி : அதும்பாரு அதுமோட காட்டுல ஆட்டை மேய்க்காம பட்டாளத்தான் காட்டுல மேய்க்குது பாரு!

பொன்னையன் : யாரப்பா அது? போஸ்ட் மேனா?

காளி : உனக்கு மணியார்டரு வந்திருக்குதா?

பொன்னையன் : மாசப்பணம் ஆயரம் ரூவா வரும்! அதக்கீது கொண்டாறானான்னு பார்த்தேன்.. நீயாடா? காட்டுல என்னடா சோலி உனக்கு?

காளி : இல்ல ஆபீசுல இருந்து அவங்கவங்க ஆட்டையெல்லாம் அவங்கவங்க காட்டுல தான் மேய்க்கறாங்களான்னு பாத்து நோட்டு போட்டு எழுதீட்டு வரச்சொன்னாங்க! அதான் வந்தேன். இது பட்டாளத்தான் காடாச்சே!

பொன்னையன் : கண்ணு தெரிய மாட்டீங்குதுடா எங்க மேயுதுன்னு?

காளி : அது கெடக்குது.. கெழவி எப்பிடி இருக்குது? சோறெல்லாம் ஆக்கி போட்டுறுதா?

பொன்னையன் : அதெல்லாம் ஆக்கீர்றா! ஊட்டோட செரி!

மாணிக்கம் : செரீங்கய்யா பக்கத்துல இருக்குற காட்டையெல்லாம் நாங்க வெலை பேசி வாங்கிட்டு இருக்குறோம். உங்க காட்டையும் குடுத்துர்றீங்களா?

பொன்னையன் : ஆமா! பேசீட்டு தான் இருந்தாங்க! யாராருது வாங்கியிருக்கீங்க?

காளி : இப்ப நீங்க ஆடு மேச்சுட்டு இக்கிற பட்டாளத்தான் காடெல்லாம் வித்தாச்சு எங்களுக்கு! உங்க காடு தான் பாக்கி! என்ன சொல்றீங்க?

பொன்னையன் : இத வித்து என்னடா பணம் வந்துடப்போவுது? இருந்தா ஆடுகளாச்சும் மேயும்!

காளி : என்ன நீ அப்படி சொல்லிட்டே! நீ காலு ஊனி நிக்குற இடமெல்லாம் பொன்னு தெரியுமா!

பொன்னையன் : மண்ணுடா கிறுக்கா!

காளி : அதான் தங்கமாயி கெடக்குதே எல்லாம்!

பொன்னையன் : அப்படியா சொல்றே? புரியிலயே!

காளி : இப்ப நீ கால் வச்சிருக்குற எடத்து அளவு பத்தாயிரம், ஒரு சதுர அடி பத்தாயிரம்! உங்களுது எத்தனை ஏக்கரா தேறும்?

பொன்னையன் : மூனு ஏக்கரா இருக்கும்!

காளி : அப்ப கோடிக்கணக்குல வருமே! உனக்கு எண்ணத்தெரியுமா வாங்குனீன்னா!

பொன்னையன் : கெழவி கொண்டி அவ அண்ணந்தம்பிகளுக்கு குடுத்துடுவாடா! நா மறுக்கா ரோட்டுல நின்னுதான் ஆடு மேய்க்கணும்!

காளி : அதெல்லாம் உன்னோட பேர்ல பேங்க்ல போட்டுர்லாம்! வட்டி மட்டும் லட்சக் கணக்குல வரும்! உன்னோட கைரேகை இல்லாம யாரும் எடுக்க முடியாது!

பொன்னையன் : அப்பிடின்னா கெழவி கிட்ட கேட்டு சொல்றேன்!

காளி : நீ என்னிக்கி கெழவியக் கேக்காம எதையுஞ் செஞ்சிருக்கே? சரி கேட்டு வையி! நாங்க கிளம்புறோம்!SC NO : 36

சிறிய ஆபீஸ்! (காலை நேரம்)

ஆறுபடையப்பா ரியல் எஸ்டேட் போர்டுக்கு மணி சுப்பு மாலையை போட்டபடி இருப்பது! முகப்பு கதவுக்கு ரிப்பன் கட்டிக் கொண்டிருக்கும் காளி. மாணிக்கம் போன் பேசிக் கொண்டிருத்தல். காரில் தம்பியும், மாமன் பழனியும், சிலரும் வந்து இறங்குதல்!

தம்பி காரிலிருந்து இறங்கியபடி : எல்லாம் டாண்னு ரெடி போலிருக்கே தம்பி!

மாணிக்கம் : பத்து மணிக்கி பூஜை போட்டிறனுமுங்கண்ணா! அதான் நல்ல நேரம்!

பழனி : ரிப்பனெல்லாம் கட்டி விட்டிருக்குதே! பொம்பளைய உட்டு வெட்டுனாத்தான் மாப்ள நல்லா இருக்கும்?

மாணிக்கம் : அத்தைய கையோட கூட்டிட்டு வந்திருக்கலாம்ல மாமா!

பழனி : அது கட்டலை கழட்டி நீ போட்டதுல இருந்து கோவிச்சுட்டு பாயிலயே கெடக்கா! எங்கீம் வெளிய வர்றதில்ல மாப்ள!

மாணிக்கம் தம்பி கையில் கத்தரி கொடுத்தல்! மாலை போட்டபடியிருந்த மணியும், சுப்புவும் அதை முடித்து வருதல்! எல்லோரும் கைதட்ட தம்பி ரிப்பன் வெட்டுதல்!

உள்ளே அனைவரும் வருதல்! சாமி படத்தின் முன்பு தேங்காபழம் தட்டு, புஜை ஜாமான்கள் இருத்தல்!

தம்பி பூஜை செய்தல்! அனைவரும் திருநீரு இட்டுக் கொள்தல்!

மாணிக்கம் : ட்ரம்ல டீ இருக்கும் பாரு மணி! எல்லாருக்கும் பிடிச்சுக் குடு!

மணியும் சுப்புவும் டீ கொடுத்தல்!

சேர்களில் அனைவரும் அமருதல்! டேபிளின் பின்னிருந்த சேரில் மாணிக்கம் அமருதல்! காளி செல்போனில் அதை புகைப்படமெடுத்தல்!

தம்பி : அப்புறம் மாணிக்கம் தம்பி கேன்வாசெல்லாம் எப்படி போயிட்டிருக்குது?

மாணிக்கம் ; கிட்டத்தட்ட அம்பது ஏக்கரா நம்ம கைக்கு வந்த மாதிரிதானுங்கண்ணா! ரெண்டு பார்ட்டிக்கி அட்வான்சே நாளைக்கி குடுத்துடலாம்ங்கண்ணா!

தம்பி : அட்வான்ஸ் குடுக்குறப்ப பத்திரமெல்லாம் கிளியரா இருக்குதான்னு பாத்துக்கப்பா!

மாணிக்கம் : கண்டிப்பாங்கண்ணா! எல்லாம் வில்லங்கம் போட்டே பார்த்தாசுங்க!

தம்பி : அப்ப நாளைக்கி குடுத்துடலாம்! ரெண்டும் எத்தனை ஏக்கரா வருது?

மாணிக்கம் : பதினெட்டு வருமுங்கண்ணா!

தம்பி : நல்லது தம்பி! நாளைக்கி குடுத்துடலாம்! காலைல வந்து பணத்தை வாங்கிக்க! குடுக்குற போது 20 ரூவா பேப்பர்ல எழுதி கையெழுத்து வாங்கிட்டு குடுத்துடு!

மாணிக்கம் : சரிங்கண்ணா!

தம்பி : உம் மாப்பிள்ளை எப்பிடி ஸ்பீடு! நீயும் இருந்தியே பழனி! அப்ப கிளம்புறோம் தம்பி! என்னென்ன வசதிகள் ஆபீஸ்ல பண்ணனுமோ பண்ணிக்க!

பழனியும், தம்பியும் ஆட்களும் கிளம்புதல்! ரோலிங் சேரில் மாணிக்கம் ஒரு சுத்து வருதல்!

காளி ; இன்னாவரைக்கும் வேலை நெட்டை எடுத்துப் போட்டுது பங்காளி! கடையில போயி பூஜை ஜாமானம் வாங்கிட்டு வந்தேன்

மணி : மாலை வாங்கிட்டு வந்து போர்டுல கட்டினோம்!

சுப்பு : ரிப்பனு வாங்கிட்டு வந்தனல்ல நானு! டீ ட்ரம் தூக்கியாந்தேன்!

மாணிக்கம் : என்ன தான் சொல்ல வர்றீங்க?

சுப்பு : கோயல் நீக்கியிருப்பாங்க! இங்கியே வாங்கிட்டு வந்துடலாமா? அதான் தம்பியண்ணன் போயிட்டாரே!

மாணிக்கம் : தொழில் செய்யும் இடம் புனிதமானது!

மாணிக்கம் வசதி வாய்ப்பு ஸ்டாப் ப்ளாக்கில் அதிகரிப்பது!

ஆபீசுக்கே வந்து பார்ட்டிகள் கையெழுத்து போட்டு பணம் வாங்கிச் செல்வது!

அனிமேசன்
வயலின் பசுமை ஒவ்வொரு இடமாக குறைதல்! கிட்டத்தட்ட அனைத்து நிலங்களையும் வளைப்பது!

மாணிக்கம் சேரில் கோட் சூட்டில் அமர்வது! வேலைக்கு ஆட்கள் சலாம் போட்டபடி ஃபைல் காட்டி கையெழுத்து வாங்குவது! தம்பி ஒருமுறை ஆபீஸ் வந்து வாழ்த்து சொல்லி செல்தல்!

SC NO : 37
ஊர் பொது இடம். (கோவில் திடல் அல்லது பள்ளி வளாகம்)
ஊர் பொது மக்கள் பலர் கூடியிருப்பது!

ஒருவர் : பூபதி ஐயா எதுக்காக நம்மளையெல்லாம் இங்க வரச் சொன்னாருன்னு விசயம் தெரியுமாப்பா?

மற்றவர் : ஊர்க்கூட்டமிருக்குதுன்னு தகவல் வந்ததால என்ன ஏதுன்னு தெரியாமத்தான் நானும் வந்தேன்!

ஒருவர் : கருப்பராயன்கோவில் கோவில் விசேசம் ரெண்டுவருசமா விசேசம் பண்ண முடியாம கெடக்குதுல்ல! அதை இந்த வருசம் சாட்டி பூஜை போட்டுடலாம்னு சொல்லுவாரோ என்னமோ!

மற்றவர் : இருந்தாலும் இருக்கும்! பஞ்சாயத்து பிரசிடெண்ட் வேலுச்சாமி அண்ணன் முன்னப்புடிச்சே வந்து உக்காந்திருக்கே!

இடையில் ஒருவர் : வீட்டு வரி, தண்ணி வரி கட்டாம கெடக்குது ஒரு வாரத்துல கட்டியாகணுமுன்னு சொல்லுவாரு பாரு!

மற்றவர் : பஞ்சாயத்துக்கு பணம் வந்திருக்குமப்பா! டேங்க் எங்க கட்டலாம்னு நம்மை கேட்டு கட்டுவாங்க!

அப்போது பூபதி கலையரசியுடன் எல்லோருக்கும் வணக்கம் வைத்தபடி வருதல்!

கோவில் திண்ணை அல்லது மூன்று சேர்கள் இருப்பது! அதில் அமர்வது. கூட்டம் அமைதியாக அமர்ந்து பூபதி ஐய்யாவை கவனிப்பது! கூட்டத்திம் மணியும், சுப்புவும் இருத்தல்!

ஒருவர் : விவசாயம் கத்துக்க வந்த பிள்ளையாட்ட இருக்குது! மாட்டீட்டம்டா! எனக்கு மேட்டர் என்னன்னு தெரிஞ்சு போச்சு!

மற்றவர் : நம்மளை மறுக்காவும் காட்டுல களை வெட்டி பிழைக்கச் சொல்லுவார்னு தான!

ஒருவர் : ஆமா! நாமளும் ஜீப் வாங்கி டுர்ர்ருனு அதுல போனா பூபதி ஐயா ஸ்கார்ப்பியோல போனாத்தான மதிப்பு!

பூபதி எழுந்து : எல்லாரையும் நான் எதுக்குடா இங்க வரச் சொன்னன்னு யோசனை பண்ணிட்டே இருந்திருப்பீங்க! அப்படித்தான மாரிச்சாமியண்ணா? (கூட்டத்திலிருப்பவரை பார்த்து)

மாரிச்சாமி : ஐயா சொல்லி வராம இருப்பமுங்களா?

பூபதி : அது ஒன்னுமில்லங்கண்ணா! இப்ப எங்காளு மாணிக்கன் ஊருக்குள்ள எல்லாரு கிட்டவும் பணத்தாசை காட்டி நம்ம நிலங்களையெல்லாம் வாங்கிட்டு இருக்கான்!

மாரிச்சாமி : மளிகை கடை வெச்சவன் மளிகை ஜாமான் ஏவாரத்தை பார்ப்பான், தறிப்பட்டறை போட்டவன் இன்னம் நாலு தறிப்போட்டு முன்னேறப் பாப்பான்! அதுமாதிரி நிலம் வாங்க தொழில்ல இறங்குனவன் அவன் காரியத்துல இருக்கானுங்க ஐயா!

பூபதி : சரியாச் சொன்னீங்கண்ணா! அதே மாதிரி காட்டுல விவசாயம் பண்ணுறவன் அவன் தொழிலை எப்பிடி விருத்தி பண்றதுன்னு அதுல தான குறியா இருக்கோணும்? அதை விட்டுட்டு பக்கத்து காட்டுக்காரன் நிலத்தை வித்துட்டு காரு வாங்கி அதுல போறானேன்னு பொறாமைப் பட்டு நாமளும் அதையே பண்ணனும்னு நெனச்சா எப்படி?

ஒருவர் : எதோ சாவுறதுக்குள்ள ஆசைப்பட்டதை

பூபதி : நிறுத்து நிறுத்து.. இப்படி ஆசைப்பட்டதுன்னு சொல்லி நமக்கு இத்தனை காலம் கஞ்சி ஊத்துன தாயை விக்கறதுக்கு மனசு எப்படி உங்களுக்கு வந்துச்சு? சரி இப்ப வித்துட்டு கார்ல போவீங்க.. நாளைக்கி உன் பேரன் பேத்திகளுக்கு என்ன வச்சுட்டு போவீங்க? உங்க பாட்டன் வெச்சிருந்த நிலத்தை தான் உனக்கு பொழச்சிக்க விட்டுட்டு போயிருக்காரு! அதுல விவசாயம் பண்ணித்தான் உன் கொழந்தைகளை நீ காப்பாத்துனே!

விவசாயம் பண்ண நீ மொடைப்படறீன்னு தான் அரசங்கம் உனக்கு இலவச மின்சாரம் குடுக்குது! மழையாலோ, காத்தாலோ உனக்கு நட்டம் வந்துச்சுன்னாஐயோ! எம்படது எல்லாம் போச்சே! எதாச்சிம் நஷ்ட்ட ஈடு குடுங்கன்னு கேட்டு அழுது வாங்கிக்கறது!

ஒருவர் : வர்ற தொகை எதுக்கு பத்தும்? அதுக்கு ஆயிரத்தெட்டு கையெழுத்து வாங்கி அனுப்பணும். அது வர்றப்ப அடுத்த அறுவடையே வந்துடும்.

பூபதி : எப்படியோ வந்து சேர்றப்ப வேண்டாமுன்னா போயிடறோம்? வரிசை போட்டு நின்னு வாக்கிக்கறம்ல? வறட்சி நிவாரண நிதின்னு குடுத்தப்ப என்ன பண்ணீங்க? ஏக்கராக்கு இவ்வளவுன்னு அரசாங்கம் குடுத்தப்ப வாங்கினீங்கள்ள! நிலம் இருந்தங்காட்டி தான வரிசை போட்டீங்க! நானும் தானப்பா வரிசைல நின்னு வாங்கினேன்.

என்னைக்கி கள்ளுக்கடைய நிறுத்துனாங்களோ அன்னில இருந்து பனைமரத்தை எல்லாம் அழிச்சாச்சு! சாலைய அகலப்படுத்துறோம்னு ரோட்டோரத்துல இருந்த புளியமரங்களை அழிச்சாச்சு! பத்து வருசத்துக்கு முன்ன காடு விக்கிறதுன்னா கஷ்டத்துல இருக்கிறவன் தன்னோட காட்டை பக்கத்து காட்டு பங்காளிக்கு தான் குடுப்பான்! இன்னிக்கி உங்க காட்டை வாங்குறவன் டெல்லில உக்காந்துட்டு இருக்கான்.

CUT SHOT

(கூட்டத்திலிருந்து மணி எழுந்து சென்று மாணிக்கத்திற்கு போன் செய்வது)
மாணிக்கம் : என்னடா மணி?

மணி : உங்கப்பன் நம்ம பொழப்புல மண்ணை அள்ளி வீசிட்டு இருக்காருடா! ஊர்க்கூட்டம் போட்டு விவசாயத்தோட பெருமைகளை விளக்கி சொல்லிட்டு இருக்காருடா!

மாணிக்கம் : எப்ப இப்பவா? எல்லாருமே இருக்காங்களா?

மணி : ஆமா! ஊரே கூடி கேட்டுட்டு இருக்குது! பயங்கரமா பேசுறாரு! எல்லாரோட புத்தியையும் கெடுத்து காத்தால மம்புட்டி தூக்க வச்சிடுவாரு!

மாணிக்கம் : நான் சொல்றதை கூட்டத்துல அப்பிடியே நாலு பேர் காதுல சொல்லிடு! இப்பவே போய் உட்கார்ந்து அடிச்சு உடு!அப்புறம் எனக்கு இடம் காலியானதும் போன் பண்ணு!

மணி : மாணிக்கா! உனக்கு கடவுளு மூளைய எல்லா இடத்துலயும் வச்சிட்டாருடா!

(மணி வந்து அமர்ந்ததும் பக்கத்தில் அமர்ந்திருந்த பெருசிடம் காதில் பேசுதல்)
பூபதி : இட விற்பனைங்கறது நம்ம ஊர்ல மட்டும் நடக்கலை! இன்னிக்கி தமிழ்நாடு பூராவுமே நடந்துட்டே இருக்குது! எல்லாரும் வித்துட்டா விவசாயத்தால நமக்கு கிடைச்ச பொருள்களுக்கு நாம எங்க போறது? இப்ப காட்டை வித்துட்டா பணம் கிடைக்கும்! பணத்தை பேங்க்ல வட்டிக்கி போடலாம்! அங்க ஏன் சும்மா கிடக்குதுன்னு தான் ஈமு கோழி வளர்ப்புல காட்டை வித்தவங்க இறக்குனாங்க! அப்புறம் எல்லாரும் கலெக்டர் ஆபீசுல போயி நின்னாங்க! கலெக்டர் பாவப்பட்ட மனுசங்களுக்கு என்ன பண்ண முடியும்? சொறிப்புடிச்சவன் கையி சும்மா இருக்குமா?

(கூட்டத்தில் காதுக்குள் குசுகுசுத்து தகவல் கசிய ஆரம்பிக்கிறது.. ஏக்கராக்கு ஆயிரம் ரூவா எச்சு பண்ணிட்டாங்களாம்! எம்பட்து எட்டேக்கரா! எட்டாயிரம் எச்சா வரும். மாணிக்கம் தம்பி பழனான் வீட்டு திண்ணையில டோக்கன் குடுத்துட்டு இருக்காம்!. கூட்டம் மெல்லமாக ஒவ்வொருவராய் கலைதல். ”நாம கார்ல போனா அவருக்கு புடிக்காது நட போலாம்”!)

பூபதி : நூறு ரூபா வச்சிருக்கறவன் இன்னிக்கி ஐம்பதை செலவு பண்ணிடலாம்னு பண்ணுவான்! நாளைக்கி பத்து ரூவா இருக்கட்டும்னு நாற்பதை செலவு பண்ணுவான். கடைசில ஒன்னுமிருக்காது!

கலையரசி : அங்கிள் எல்லாரும் போயிட்டாங்க!

பூபதி : ரெண்டு பேரு கேட்டுட்டு இருக்காங்கள்ள! நாட்டுல நல்ல பழமை பேசுனா இப்பிடித்தான் நடக்குமா? ஏப்பா நீங்க ரெண்டு பேரு மட்டும் இருக்கீங்களே. விவசாயத்து மேல அவ்ளோ அக்கறையா?

அமர்ந்திருப்பவர் : இவன் செவுடுங்க! ஒன்னும் கேக்காது! நான் இலவச வேட்டி சட்டை கீது குடுப்பீங்க கடைசீலன்னு உக்காந்துட்டு இருக்கனுங்க! தருவீங்கள்ள?

பூபதியும், கலையரசியும் தலையில் கைவைத்தல்! பிரசிடெண்ட் வேலுச்சாமி திடீரென மறைந்து விடுவது!

SC NO : 38
பூபதி வீட்டு காய்கறித் தோட்டம்.

பூபதி செடியிலிருந்து காய்கள் பறித்து கூடையில் போட்டபடி இருப்பது! அருகில் மாணிக்கம் நின்றிருப்பது!

மாணிக்கம் : அப்பா! முடிவா என்ன தான் சொல்றீங்கப்பா?

பூபதி : ஊரே சுடுகாடு ஆயிடும்னு அப்பன் கவலைப்படறது உனக்கு தெரியவே இல்லியாடா? உனக்கு நான் என்ன குறை இது வரைக்கும் வச்சிட்டேன்! சின்ன வயசுல இருந்து நீ கேட்டதெல்லாம் இதுவரைக்கும் கிடைச்சுட்டு தானே இருக்குது!

மாணிக்கம் : அதனால தானப்பா இதையும் கேக்குறேன்!

பூபதி : டேய்! நீ என்னோட உயிரைக் கேளு! இப்பவே இந்தா எடுத்துக்கோடான்னு தந்துடறேன்! மண்ணு நம்மளை வாழ வெச்ச சாமிடா! நீ அதை கேட்டுட்டு நிக்கறே! சாமிய விக்கலாமாடா? விவசாயம் அழிஞ்சு போனா தலைமுறையே அழிஞ்சுடும்டா!

மாணிக்கம் : என்னப்பா ஒன்னையே திரும்பத் திரும்ப சொல்றீங்க!

பூபதி : நீ ஒன்னையே திரும்பத் திரும்ப கேட்டுட்டே நிக்கறதால தான் சொல்றேன்டா! விவசாயத்துல புதுசா டெக்னாலஜிய கொண்டு வருவீன்னு தான் ஆசைப்பட்டு நான் உன்னை அக்ரி காலேஜ்ல சேர்த்தேன்டா! கலையரசிக்கு என்ன நிலமிருக்கா? அது அப்பனில்லா பொண்ணு! அதுக்கு எப்படி அக்ரி காலேஜ்ல சேரணும்னு தோணுச்சு? நிலம் இல்லாத அந்தப் பொண்ணே விவசாயத்து மேல அக்கறையா இருக்கப்ப நிலம் இருக்குற நீ அதை அழிக்க என்கிட்ட கேட்டுட்டு நிக்கே!

மாணிக்கம் : இல்லப்பா! உங்களை மாதிரியான கிராமத்தான்களுக்கு தான் விவசாயம் சரி! அவங்க இங்க காட்டுல கிடந்தாலும் மகனுகளை வெளிநாட்டுக்கு நாலு காசு சம்பாதிக்க அனுப்பி வச்சிட்டாங்க! அவங்களும் அதை சந்தோசமா ஏத்துக்கிட்டு வருசம் ஒருக்காவோ ரெண்டு வருசத்துக்கு ஒருக்காவோ வந்து எட்டிப் பார்த்துட்டு போயிடறாங்க! எல்லா அப்பாக்களுக்கும் ஒரே நினைப்பு காட்டுல சிரமப்படறது தன்னோட போகட்டும்னுதான்!

பூபதி கூடைக்குள் காய்களை போடுதல்!

மாணிக்கம் : அப்பா! விவசாயத்துல சாதிக்க ஒன்னுமில்ல! எதுக்கெடுத்தாலும் மழை வரலை வறட்சி நிவாரணநிதி வேணும், அது வேணும் இதுவேணுமுன்னு அரசாங்கத்தை எதிர்பார்த்துட்டு இருக்கறதேதான் நடக்குதுப்பா! என்னப்பா ஒன்னும் பேச மாட்டீங்கறீங்க!

பூபதி : அதான் பேசிட்டு இருக்கியே! பேசி முடி!

மாணிக்கம் : ஏப்பா சும்மா நான் பேசிட்டு இருக்கேன்னு நினைக்கறீங்களாப்பா! இப்ப மேகாட்டுல நம்ம இடத்தை தவிர்த்து எல்லாருடைய இடத்தையும் கேன்வாஸ் பண்ணி அட்வான்ஸ் டோக்கனையும் குடுத்தாச்சுப்பா! நம்ம இடம் இருவத்தி அஞ்சு ஏக்கரா அங்க இருக்கு! அதை நாம குடுத்துட்டம்னா இந்த ப்ரோஜக்ட் ரவுண்டா முடிஞ்சுடும்ப்பா!

பூபதி : அதுக்கு?

மாணிக்கம் ; இவ்ளோதூரம் இறங்கி நான் முடிச்சிருக்கேன்பா! நான் ஜெயிச்சாகணும்! அதுக்கு நீங்க தான் இப்ப முடியாதுன்னு சொல்லிடுவீங்கன்னு பயமா இருக்குப்பா! இதுக்காக நம்ம உறவே இல்லாமப் போயிடும்ப்பா!

பூபதி அதிர்ச்சியாகி எழுந்து : போயிடுமா?

மாணிக்கம் ; ஆமாப்பா! அதுக்கு மேல சாகுறதை தவுத்து எனக்கும் வழியில்ல!

மாணிக்கம் இடத்தை விட்டு நகருதல்! பூபதி தடுமாறி நிலத்தில் அமருதல்!

SC NO : 39
பூபதி வீடு (காலை நேரம்)
மாணிக்கம் தனதறையில் படுக்கையில் இருப்பது! தங்கை வந்து மாணிக்கத்தை  தட்டி எழுப்புவது!

அம்சவேணி : இன்னும் என்னண்ணா தூக்கம்? மணி எட்டாகப் போகுது எந்திரி! நான் ஸ்கூலுக்கு கூட கிளம்பிட்டேன்!

மாணிக்கம் : ஸ்கூலுக்கு போறதுன்னா போயிட்டு வா அம்சு! என்னை ஏன் எழுப்புறே? நான் என்ன ஸ்கூலுக்கா போறேன்?

அம்சவேணி : அம்மா அழுதுட்டே இருக்குதுண்ணா! ஆயாகிட்ட சொன்னா அழுதுட்டு போச்சாறா உடுங்குது!

மாணிக்கம் : நானும் அதைத் தான் சொல்றேன். கண்ணுல இருந்து தண்ணி வந்துட்டா மெட்ராஸ் அவங்களுக்கு வரவே வராது!

அம்சவேணி : டேய் மக்கு அண்ணா! இப்ப எந்திரிக்கிறியா இல்ல தண்ணிய ஒரு கொடம் கொண்டாந்து ஊத்தவா?

மாணிக்கம் : காத்தால மனுசனை நிம்மதியா தூங்க விடாம என்னா அம்சு! (எழுந்து அமருதல்)

அம்மா காபி டம்ளருடன் வருதல்! மாணிக்கம் பாத்ரூம் சென்று முகம் அலம்பி விட்டு வந்து அறை நாற்காலியில் அம்மாவிடமிருந்து காபி டம்ளரை வாங்கிக் கொண்டு அமருதல்!

அம்சவேணி ; நான் ஸ்கூலுக்கு கிளம்புறேன்மா டைம் ஆயிடுச்சு! (அமசவேணி செல்தல்)

அம்மா : நான் எந்திரிச்சதுல இருந்து உங்கப்பாவை காணம்டா!

மாணிக்கம் : தோட்டத்துக்கு போயிருப்பாரும்மா!

அம்மா : என் கிட்ட சொல்லாம போக மாட்டாரு!

மாணிக்கம் : அதான் அழுதுட்டே இருந்தியா? அவரு என்ன சின்னப்பிள்ளையாம்மா? போனவருக்கு வீடு வரத்தெரியும்!

அம்மா : இல்லடா சாமி! நேத்து நைட்டு ஆளு சரியா இல்ல! பீரோவுல இருந்த பழைய மஞ்சப்பையெல்லாம் எடுத்து வெளிய போட்டு காகிதமெல்லாம் எடுத்து வச்சிட்டு இருந்தாரு!

மாணிக்கம் : மஞ்சப்பை வெளிய வந்துடுச்சா? அப்ப சந்தோசமான விசயம் தான்மா!

அம்மா : எதுடா உனக்கு சந்தோசம்? நிலத்தை கேட்டு அப்பாட்ட சண்டை போடறதா?

மாணிக்கம் : சண்டை போடலம்மா நானு! அதுக்கு என்கிட்ட கோவிச்சுட்டு போயிட்டாருங்கறியா? இது நல்ல நாயம் பாத்துக்க! ஊர்ல எல்லாருக்கும் நிலம் இருந்துச்சு! நான் போய் கேட்டேன்! அவங்க தந்தாங்கம்மா! யாரும் வீட்டை உட்டு அதுக்காக ஓடிப்போயிடல! சும்மா பயப்படாம வேலையப் போயிப்பாரும்மா!

ஆயா வருதல் ; சொல்லு அப்பிடி! காத்தால இருந்து முசுக்கு முசுக்குனு மூக்கை சிந்தி செவுத்துல அப்பீட்டு திரியறா! நோக்காட்டுக்காரிக்கு சாக்காட்டுக்கு புருசன்! (அம்மா எழுந்து செல்லுதல்)

ஆயா ; சாமி, இந்த மூஞ்சிப் புத்தவத்துல வந்து…..

மாணிக்கம் : போ ஆயா நீவேற! மூஞ்சிப் புத்தவம் மொகறைப் புத்தவம்னுட்டு!
ஆயா : எங்கியோ போற ஆத்தா எம்மேல வந்து ஏறுதாத்தா! போறஞ்சாமி! (ஆயா செல்தல் போன் நோண்டியபடி)

மாணிக்கம் காலி டம்ளரை டேபிளில் வைக்கையில் டேபிள் வெய்ட் வைக்கப்பட்ட காகித கற்றைகளை பார்த்தல்! என்ன என்று எடுத்து பார்த்தல்! முகம் பிரகாசமாதல்! காகித கற்றையை மறு கையில் அடித்தபடி சந்தோசப்படுதல்

போனை எடுத்து காளிக்கு கூப்பிடுதல்!

காளி : என்ன பங்காளி காத்தாலயே! ஆபீஸ் கிளம்பிட்டியா! இதா நானும் ரெடியாயிடறேன்!

மாணிக்கம் : டே பங்காளி! அப்பா பத்திரத்துல எல்லாம் கையெழுத்து போட்டு என் டேபிள்ள வச்சிருந்தார்டா!

காளி : அப்ப நீ போட்ட போடுல பெரியப்பன் விவசாயத்தை விட்டுட்டாரு?

மாணிக்கம் : இப்ப என்னமோ சொன்னியே என்னது?

காளி : போட்ட போடு!

மாணிக்கம் : இல்ல அப்புறம் சொன்னியே!

காளி : விவசாயம்!

மாணிக்கம் : ஹாங்! அப்பிடின்னா என்ன பங்காளி?

காளி : டேய் சாமி! ப்ளைட்டுல போயிட்டு இருக்கியாடா? சித்த சீக்கிரம் தரையிறங்கு பாக்கலாம்!


-வளரும்

Post Comment